Monday, October 27, 2008

காவேரியும், நானும்..

போன வாரம் என் அலுவலக தோழி ஒருத்தி, "க்ளாசட் முழுக்க துணி வைச்சிருக்கியே, அப்புறம் ஏன் போட்டதையே திரும்ப திரும்ப போடறே?" என்று சொன்னபோது கவனித்தேன், ஏன் போட்டதையே போடுகிறேன்? கவனித்து பார்த்ததில் தெரிந்தது, என்னுடைய க்ளாசட் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. இதனால் அலுவலக உடைகள் எங்கேயோ தொலைந்துப்போக, மேலே இருக்கும் உடைகளையே திரும்பத்திரும்ப அணிந்துக்கொண்டிருக்கிறேன் போல. சென்ற வார இறுதியில் என் க்ளாசட்டுக்கு விடிவு காலம் பிறந்தது, 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்காத உடைகளை "Good will" என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு வந்தேன்.

உடைகள் என்றதுமே எனக்கு காவேரி தான் நினைவுக்கு வருகிறாள். காவேரி என்பது வேறுயாருமில்லை, என் பெற்றோர் வீட்டின் வேலைக்காரப்பெண்! ஒடிசலான உருவம், கருத்த தேகம், தெற்றுப்பல், உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மைக் செட் குரல், வாய் கொள்ளா சிரிப்பு, கண்களில் எப்போதும் தென்படும் ஒரு துறு துறுப்பு, கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகம் - இதுவே நம்ம கதாநாயகி காவேரியின் அடையாளம்.என்னை விட ஒரு 4-5 வயது சிறியவளாக இருப்பாள்.

போன முறை இந்தியாவுக்கு போன போது அவளை முதல் முறை சந்தித்தேன். திரைச்சீலைக்கு பின்னால் முகத்தை மட்டும் நீட்டி என்னைப்பார்த்து சிரித்தாள். யாராவது அவளை அறிமுகப்படுத்தி வைக்கமாட்டார்களா என்ற ஆர்வம் அவள் முகத்தில் இருந்தது. என்னை வெகு நாட்களுக்குப்பிறகு பார்த்த மகிழ்ச்சியில் என் பெற்றோருக்கு காவேரி மறந்துபோனாள். பொறுத்துப்பொறுத்துப்பார்த்த காவேரி பொங்கி எழுதாள். ஒரு ஸ்வீட் பாக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டு என் முன்னால் வந்தாள்.

"யக்கா இந்தா ஷிட்டு"

நான் FOB(fresh of the boat) என்பதால், காவேரி சொன்னதை ஒரு ஆங்கிலக்கெட்ட வார்த்தையோடு குழப்பிக்கொண்டு அதிர்ந்தேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காவேரி,

"அய்யே, ஷிட்டு எடுத்துக்கோயேன்கா"

விபரீதத்தை உணர்த்த அப்பா என்னை காப்பாற்றினார், "ஒன்னும் இல்லை கயல், ஸ்வீட்டை தான் அப்படி சொல்றா. அமரிக்கா அக்கா வருதுனு 2 வாரமா இங்க்லீஷ் பேச ட்ரை பண்றா"

"யெஸ்ஸு" என்றாள் காவேரி பெருமை கொப்பளிக்க!

சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்த போது தன்னை தானே பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டாள், "யக்கா, நான் தான் இந்த வூட்டு வேலக்காரி, எது வோணும்னாலும் என்னை கேளு, செரியா?"

அடுத்த சில நாட்களில் காவேரியைப்பற்றி நான் கவனித்தது, ஒரு நாளுக்கு ஆயிரம் முறையாவது காவேரியின் பெயர் அந்த வீட்டில் உச்சரிக்கப்பட்டது. யார் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்தாள், சில அதிகப்பிரசங்கி உறவினர்களுக்கு கூட!

"யக்கா டிபன் சாப்ட்டியா?"

"இந்தாக்கா சக்கரைப்பொங்கலு, ஒனக்கு புடிக்குமாமே?"

"யக்கா, தலை கசக்கி வுடட்டுமா?"

"யக்கா, காப்பி கொண்டாந்திருக்கேன்"

எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா? சில வருடங்களில் என்னுடைய பார்வை மாறி இருந்தது. ஆனால் இதெல்லாம் ப்ளாகில் எழுத தான் சரிவரும், வீட்டில் இந்த வாதங்கள் எடுபடாது.

"போடி பேசாம, வந்துட்டா" - இது என் அம்மாவின் பதில்.

ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து தமிழக சேனல்களை அசுவாரஸ்யமாக திருப்பிக்கொண்டிருந்த போது காவேரி கண்ணில் தட்டுபட்டாள். சந்தன நிறத்தில், சிகப்பு நிற எம்ப்ராயிட்ரி பூ சிதறல்களோடு ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். இந்த சுடிதார் ரொம்ப ஃபெமிலியரா இருக்கே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா, "கயல் இந்த சுடிதார் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்துவிட்டது! கல்லூரியில் நான் விரும்பி அணிந்த சுடிதார், ஒரு ஆணி மாட்டி கிழிந்துவிட்டதால் அதை பீரோவில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன்! எப்படி சரி பண்ணினாள்? வியப்பாக அருகில் சென்று பார்த்தேன். கிழிந்து போன சுடிதாரை தைத்து, தையலை மறைக்கும் படி மேலே எம்ப்ராயட்ரி பண்ணி இருந்தாள், அதே பேட்டர்ன் சுடிதார் முழுவதும் அங்கங்கே ரிபீட் பண்ணி இருந்தாள். பார்க்க டிசைனர் சுடிதார் மாதிரி இருந்தது.

"கயல், இந்தக்குட்டியே அழகா எம்ப்ராயட்ரி பண்ணுவா, தெரியுமா?"

"அப்படியா காவேரி? இத்தனை அழகா எம்ப்ராயட்ரி பண்ணத்தெரியுமா?" நான் வியந்து போய் கேட்க,

"யெஸ்ஸூ" என்றாள் ஏதோ சினிமா பாட்டை முணுமுணுத்தபடியே.

ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவள் குடும்பத்தைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.அவள் அம்மா பற்றி, தம்பி பற்றி, முறை பையனைப்பற்றி(ரொம்ப வெட்கப்பட்டுக்கொண்டே பதில் சொன்னாள்). அவள் அப்பாவைப்பற்றி தான் நிறைய பேசினாள், என்னை மாதிரியே அவளும் அப்பா செல்லம் போலிருக்கிறது.

"சின்னப்புள்ளேல, வாராவாரம் எங்க நைனா என்னை சந்தைக்கு இட்டும்பூடும். அங்கே சவ்வு முட்டாய், லப்பர் வளீல் எல்லாம் வாங்கித்தரும். எப்படியாச்சும் என்னை டீச்சரு ஆக்கிப்புட பார்த்துச்சு, ஆனா பாவம், அல்பாயுசுல பூட்ச்சி"

"என்ன சொல்ற காவேரி, அப்பா செத்துப்போயிட்டாரா!!??"

"யெஸ்ஸு"

"என்னடி இப்படி சொல்றே?"

"கலக்கல் சரக்க குடிச்சுபுட்டு சாக்கடையில் வுளுந்து கெடந்தா வெற என்ன ஆவும்? கொடலு வெந்து ரெத்த வாந்தியா எடுத்து செத்து பூட்ச்சு"

என்ன சொல்வது என்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, அவளுடைய முகத்தில் படர்ந்த கனத்த சோகம் 1 நிமிடம் வரையில் மட்டுமே நீடித்தது. பிறகு சுதாரித்துக்கொண்டாள்

"யக்கா, உன்னோட வம்பளத்தா வூட்டு வேலை எல்லாம் என்னாறது? போட்டது போட்ட மாதியே கிடக்கு, ஏதாவது வோணும்னா ஒரு கொரலு குடு, ஓடியாந்துட்ரேன்" கண்ணில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்தப்படியே சிட்டாக ஓடி மறைந்தாள்.

எதுவுமே தோன்றாமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். உலகில் சிலருடைய கஷ்டங்களை நினைத்துப்பார்த்தால் நம்முடைய "பிரச்சினையாக" நாம் நினைப்பது எல்லாம் எவ்வளவு சில்லியாக தோன்றுகிறது இல்லையா? காவேரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது, பணமாக மட்டுமில்லை, பணம் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அந்த பெண்ணை சந்தோஷப்பட வைக்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும்.

அடுத்த நாள் ஷாப்பிங்குக்கு அவளை மட்டும் அழைத்துப்போனேன். அவளுக்கு நம்பவே முடியவில்லை, "யக்கா என்னையா இட்டும்போறே? வெயிட் எதுனாச்சும் தூக்கனுமா?" கண்கள் விரித்து அப்பாவியாக கேட்டாள்.

"பேசாம வா காவேரி"

"யெஸ்ஸூ"

கார் ட்ரைவரிடம் அவளுக்கு பிடித்த சினிமா பாட்டு போட சொல்லி வம்பு பண்ணினாள், கூடவே சுதி சேராமல் இவளும் உரக்க பாடினாள். அந்த புகழ் பெற்ற கடையில் பெண்கள் செக்ஷனில் நுழைந்தவுடனே, 2-3 விற்பனை பெண்கள் என்னை சூழ்ந்தார்கள். "மேடம் புது புது ஐட்டம் வந்திருக்கு பாருங்களேன், யூ.எஸ்காரங்க இதை தான் வாங்கிட்டு போறாங்க". இந்த விற்பனை பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எப்படித்தான் தெரிகிறது என்பதே புரியவில்லை!

மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப்போல ஒரு ஓரமாக ஒடுங்கி நின்ற காவேரியின் கையை பிடித்து இழுத்து "எனக்கில்லை, இவ அளவுக்கு பாருங்க" என்றவுடன் விற்பனை பெண்களின் முகம் காற்றுப்போன பலூனாக களை இழந்தது. உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்.

காவேரிக்கு துணி எடுத்துப்போடுவதில் விற்பனை பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. ராக்கில் இருக்கும் ரெடிமேட் சுடிதார்களை நானே தேர்வு செய்து எடுக்க வேண்டி இருந்தது. அதுவரை அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் இருந்த காவேரி சுயநினைவு வந்தவளாக, "யக்கா, யக்கா எனகெதுக்கு துணி எல்லாம்? தீவாளி கூட இல்லையேகா?" என்றாள். உதடு மட்டும் தான் அப்படி சொன்னது, அவள் கண்கள் "ப்ளீஸ், ப்ளீஸ், நிறுத்திவிடாதே" என்று கெஞ்சின. இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும், வறுமையில் இருக்கும் பெண்கள் என்றால் விதம் விதமாக உடை அணிய ஆசை இருக்காதா? பல சமயம் ரொம்ப சுயநலவாதியாக இருந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன்.

பில் போடும் போது, "யக்கா ரொம்ப வெலேக்கா. ஒரு சுடிதாரு வோணும்னா எடுத்துக்கறேன்" இந்த முறை நிஜமாக தான் சொன்னாள். "அடி பைத்தியமே, ப்ளூமிங் டேலில் ஒரு பர்ஸை இதை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் தெரியுமா?" நினைத்துக்கொண்டேன் ஆனால் சொல்லவில்லை. "செரி, பேக்கையாவது குடுக்கா" குற்ற உணர்ச்சியுடன் பேகை வாங்கிக்கொண்டு நடந்தாள். "வேற ஏதாவது வேணுமா காவேரி? காஸ்மெடிக்ஸ், ஜுவல்லரி ஏதாவது? பரவாயில்லை சொல்லு".

"முடிஞ்சா எனக்கு ஒன்ன மாதிரியே ஒரு சில்பர் வாங்கித்தரியாக்கா?" ரொம்ப தயங்கியப்படி தான் சொன்னாள்(ஹை ஹீல்ஸ் ஷூவை தான் இப்படி குறிப்பிடுகிறாள்). வீடு திரும்பும் போது சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் வாங்கிக்கொடுத்த ஒரு சுடிதாரை ஜோதிகா ஒரு படத்தில் போட்டு வருகிறாராம். இந்த ஹீல்ஸ் மாதிரியே சினேகாவிடம் இருக்கிறதாம்.

இறங்கும் போது நிறைவாக சொன்னாள் "என் சென்மத்தில இத்தனை நல்ல துணிய சேத்து வச்சு பார்த்ததில்லீங்க்கா". உண்மையாக சொல்கிறேன், சிறுவயதில் இருந்து நான் கேட்ட உடைகளை எல்லாம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். பிறகு வேலைக்கு போனவுடன் நானும் (அதான் க்ளாசட் நிறைஞ்சிடுசே!) நிறைய உடைகள் வாங்கி இருக்கிறேன், சலிக்க, சலிக்க. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.

ஊருக்கு போகு முன் ஏர்போட்டுக்கு அந்த சுடிதாரில் ஒன்றையும், ஹைஹீல்ஸ் ஷூவையும் அணிந்து வந்திருந்தாள். கடைசியாக டெர்மினலுக்கு போகுமுன் அனைவரிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பியபோது கவனித்தேன். அவள் கண்ணில் வழமையாக தென்படும் மென்சோகம் காணாமல் போயிருந்தது.

என் தலை மறையும் வரை கத்தினாள், "யக்கா ஒளுங்கா வேளா வேளைக்கு சாப்புடு, செரியா?"

"யெஸ்ஸு"

73 comments:

  1. //நிறைய உடைகள் வாங்கி இருக்கிறேன், சலிக்க, சலிக்க. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.//

    சந்தோசத்திலேயே பிறரை சந்தோசப்படித்தி பார்ப்பதுதான் நிஜமான சந்தோசம்.

    அது சரி... ஷிட்டு என்றால் கெட்ட வார்த்தையா ?

    ReplyDelete
  2. வாங்க கூடுதுறை :)

    நிஜமாவே நீங்க அவ்வளவு அப்பாவியா? :) :)

    ReplyDelete
  3. //உலகில் சிலருடைய கஷ்டங்களை நினைத்துப்பார்த்தால் நம்முடைய "பிரச்சினையாக" நாம் நினைப்பது எல்லாம் எவ்வளவு சில்லியாக தோன்றுகிறது இல்லையா? //

    சரியா சொன்னீர்கள்


    //உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்//

    நன்றாக கவனித்திருக்கிறீர்கள் ,உண்மை உண்மை

    ReplyDelete
  4. வாங்க பாபு, நன்றி :)

    ReplyDelete
  5. //Blogger கயல்விழி said...
    வாங்க கூடுதுறை :)
    நிஜமாவே நீங்க அவ்வளவு அப்பாவியா? :) :)//

    ஓ...போச்சுடா... தெரிஞ்சு போச்சே...

    ReplyDelete
  6. இப்படி சொன்னால் நாங்க நம்பிடுவோமாக்கும்!

    ReplyDelete
  7. //கயல்விழி has left a new comment on the post "காவேரியும், நானும்..":
    இப்படி சொன்னால் நாங்க நம்பிடுவோமாக்கும்! //

    நிஜம்தான் நீங்கவேண்டுமானல் சிங்கை தானைத்தலைவர் சின்ன ரஜினி கிரியை கேட்டுப்பாருங்களேன்....

    ReplyDelete
  8. அதெல்லாம் செல்லாது, உங்க மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது தொகுதி எம்.எல்.ஏவோ சொன்னால் தான் நம்புவேன் JK :))

    ReplyDelete
  9. //கயல்விழி has left a new comment on
    அதெல்லாம் செல்லாது, உங்க மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது தொகுதி எம்.எல்.ஏவோ சொன்னால் தான் நம்புவேன் JK :)) //

    ஓ.... அவங்களையெல்லாம் எனக்கு ரொம்ப..நல்ல தெரியுமே....

    என்ன அவங்களுக்குத்தான் என்னைத்தெரியாது...

    ReplyDelete
  10. உங்களுடைய பதிவுகளில் இது என்னை மிகவும் கவர்ந்து விட்டது... :)
    காவேரியோட லோக்கல் ஸ்லாங்கை ரொம்ப முயற்சி பண்ணி எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்கும்போதே. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  12. உண்மையிலேயே நல்லா இருந்தது கயல்விழி. காவேரி மாதிரி பல பேர் இருக்கிறார்கள். ஆனால் "கயல்விழி" மாதிரி தான் காண்பதரிது..

    //என் தலை மறையும் வரை கத்தினாள், "யக்கா ஒளுங்கா வேளா வேளைக்கு சாப்புடு, செரியா?"

    "யெஸ்ஸு" //

    "நச்...."

    ReplyDelete
  13. என்ன சொல்றதுன்னு தெரியலை.

    நல்ல பதிவு. ரொம்ப யோசிக்க மற்றும் பழைய விஷயங்களை அசை போட வெச்சுட்டீங்க.

    ReplyDelete
  14. நல்ல பதிவு.

    //உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா//

    இழிவாய் நினைப்பதைப் பார்த்திருக்கிறேன். 7 வருடங்களுக்கு முன்னர் நான் வசித்த அபார்ட்மெண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லேட் டீனில் இருந்த அக்காத் தங்கையர் மூவர் பலர் வீட்டிலும் வேலை பார்த்து வந்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் யார் வீட்டுக்கும் வருவர். ஆகையால் மூவரையும் எல்லோருக்கும் பரிச்சயம். உங்களைப் போலவே 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்காத உடைகளை [பெரும்பாலும் புதிதாகவே இருக்கும்] அவர்களுக்குக் கொடுத்து வந்தேன். இவர்களுக்கு ஏன் இத்தனை நல்ல உடைகளைக் கொடுக்கிறாய் என எதிர்ப்பாகவே கேட்ட நண்பிகளைப் பின் மாற்றி அவர்களையும் சந்தோஷமாகக் கொடுக்க வைத்தேன்.

    இன்றும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்றின்றி தேவையுள்ளவர்களுக்கு என்று பார்த்து பிரித்துக் கொடுத்து விடுவது வழக்கம்.

    அதே போல தீபாவளிக்கு என்னிடம் வேலையிலிருப்பவர்கள் குடும்பத்துக்கும் சேர்த்து, விருப்பம் கலர் சாய்ஸ் எல்லாம் கேட்டு எனக்காக ஏறி இறங்குவதை விட அதிக இண்ட்ரெஸ்டுடன் 4 கடை ஏறி இறங்குவேன். அவர்களும் மனிதர்களே.

    ReplyDelete
  15. நெகிழ்வான நிகழ்வு கயல்.. உங்களுக்கு பாராட்டுக்கள்..

    //
    காவேரி என்பது வேறுயாருமில்லை, என் பெற்றோர் வீட்டின் வேலைக்காரப்பெண்!
    //
    பெற்றோர் வீடு என்ற‌ வார்த்தை ச‌ற்று அந்நிய‌மாக‌ தெரிகிற‌தே க‌ய‌ல்.. அது உங்க‌ள் வீடும் இல்லையா?

    //
    என்னுடைய க்ளாசட் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. இதனால் அலுவலக உடைகள் எங்கேயோ தொலைந்துப்போக, மேலே இருக்கும் உடைகளையே திரும்பத்திரும்ப அணிந்துக்கொண்டிருக்கிறேன் போல
    //
    சேம் பிளட்.. ஹி.ஹி..

    ReplyDelete
  16. மனதை தொட்ட வரிகளுடன்,,,.
    அருமை...
    தொடரட்டும் ....

    ReplyDelete
  17. ஏழைகளுக்கு உதவி கிடைக்கும் இன்பத்திற்கு நிகர் உலகில் வேறு கிடையாது !

    ReplyDelete
  18. கயல்,

    அருமை.அருமை.சிறப்பான காரியம். நீங்கள் கொடுத்ததும் சிறப்பு.உங்கள் எழுத்தும் சிறப்பு.

    ReplyDelete
  19. ஒரே பீளிங்க்சா பூட்ச்சி கண்ணு...

    ReplyDelete
  20. நல்ல பதிவு, வேலைக்காரர்களுக்கு பழைய துணியை கூட கொடுக்கமாட்டார்கள்.உங்களுக்கு பாராட்டுக்கள். அப்படியே வருணுக்கும் ஒரு நல்ல சட்டை வாங்கி கொடுங்க.தொவைக்காத ஜீன போட்டுட்டே பல வருடமா ஆபீஸ் போறாராம்

    ReplyDelete
  21. Kayal!
    ReaLLY A WONDERFUL ARTICLE.
    I KNOW U ALWAYS HAVE EMPATHY.
    cONGRADULATIONS.

    (AAMAAM. "PONA THADAVAI VANTHAPO"NU EZUTHIYIRUKKIYE? EPPO?)

    ReplyDelete
  22. //வாங்க கூடுதுறை :)

    நிஜமாவே நீங்க அவ்வளவு அப்பாவியா? :) :)//

    அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
    தமிழ் சினிமா நம் மக்களை அவ்வாறு ஆக்கி வைத்துள்ளது.
    எத்தனை படங்களில் இச்சொல் சகஜமாகக் குற்ற உணர்வின்றி, ஸ்டைலாகக் கையாளப்பட்டிருக்கிறது?

    கூடுதுறை,

    ஷிட் (shit) என்பது மலத்தைக் குறிக்கும் சொல் என்பதை அனைவரும் அறிவர்.
    வெளிநாட்டினர் இச்சொல்லை பொது அரங்கில் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி சொல்ல வேண்டிய
    கோப/ஏமாற்ற/வெறுப்புச் சூழலில், இடக்கரடக்கல் சொல்லாக ஷூட் (shoot) எனப் பொதுவில் கூறுவர்.

    இருந்த போதிலும் அனைவர் முன்னிலையிலும் இச்சொல்லை பயன்படுத்தாமல் இருப்பது நாகரிகம்.

    ReplyDelete
  23. உங்க பதிவுக்கு வரும்போது சில சமயம் என்ன சொல்றதுன்னு தெரியல.இந்த முறையும் அதே.

    இந்த விசயத்துல வருண் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்:)

    ReplyDelete
  24. பதிவு நல்லா இருக்கு,
    நீங்கள் போன தாய் விடு போன தேதி சொன்ன நல்லா இருக்கும்.
    ஏன்னா அந்த பொண்ணு உங்களை விட 4-5 வயசு குறைவு.
    உங்க மேல உள்ள குற்ற கிழே வரிசை படுத்த பட்டு இருக்கிறது.
    1.ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுக்காம சட்டை கொடுத்தது குற்றம்.
    2.குழந்தை தொழிலாளர் வேலைக்கு வைப்பது குற்றம்
    /*
    அப்படியே வருணுக்கும் ஒரு நல்ல சட்டை வாங்கி கொடுங்க.தொவைக்காத ஜீன போட்டுட்டே பல வருடமா ஆபீஸ் போறாராம்
    3.இது குடும்ப வன்முறை சட்டப்படி குற்றம்
    */
    ஆக, உங்களை கைது செய்ய முகாந்தரங்கள் நிறைய இருக்கு. அதனாலே சிக்கிரம் அழைப்பு ஆணை அனுப்பப்படும். உங்கள் கடவு சீட்டும் முடக்கப்படும்

    ReplyDelete
  25. //காவேரியோட லோக்கல் ஸ்லாங்கை ரொம்ப முயற்சி பண்ணி எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!//

    நன்றி தமிழ்ப்பிரியன்.முயற்சி செய்தேன், அவளுடைய ஸ்லாங் இன்னும் ஸ்ட்ராங்கா இருந்தது.


    வருகைக்கு நன்றி தோழி :)

    ReplyDelete
  26. நன்றி SK. :)

    வாங்க ராமலக்ஷ்மி மேடம்

    //அவர்களும் மனிதர்களே.//

    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  27. //பெற்றோர் வீடு என்ற‌ வார்த்தை ச‌ற்று அந்நிய‌மாக‌ தெரிகிற‌தே க‌ய‌ல்.. அது உங்க‌ள் வீடும் இல்லையா?
    //

    வாங்க வெண்பூ. அது பெற்றோர் வாங்கிய வீடு என்பதால் அப்படி குறிப்பிட்டேன். நீங்க சொன்ன பிறகு தான் கவனித்தேன்,சொந்தங்களை விட்டு தள்ளி இருப்பதால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு இடைவெளி விழுந்திருப்பது உண்மை தான்.

    ReplyDelete
  28. வாங்க அணிமா, நன்றி.

    வாங்க அருப்புக்கோட்டை பாஸ்கர்.

    ReplyDelete
  29. வாங்க பிராம்ஜி, நன்றி :)

    வாங்க மொக்கைச்சாமி. :)

    ReplyDelete
  30. வாங்க குடுகுடுப்பை. உங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  31. வாங்க ஆனந்த் சித்தர். :)

    ReplyDelete
  32. வாங்க இந்தியன் :)

    //தமிழ் சினிமா நம் மக்களை அவ்வாறு ஆக்கி வைத்துள்ளது.
    //

    F வார்த்தையையும் இப்படி சகஜமாக ஆக்காமல் இருந்தால் நல்லது :)

    ReplyDelete
  33. வாங்க ராஜநடராஜன் :)

    ReplyDelete
  34. //காவேரி மாதிரி பல பேர் இருக்கிறார்கள். ஆனால் "கயல்விழி" மாதிரி தான் காண்பதரிது..
    //

    வாங்க நான் ஆதவன். :)

    ஒரு விஷயம் சொல்லட்டுமா? உலகத்தில் நிறைய கயல்விழிகள் இருக்கிறார்கள், கயல் விழியை பல மடங்கு நல்லவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் ப்ளாக் எழுதுவதில்லை, செய்யும் உதவியை வெளியே சொல்லிக்கொள்வதில்லை.

    காவேரி போன்ற ஏழைப்பெண்களை பார்ப்பவர்கள் கொஞ்சம் உதவி செய்யட்டும் என்ற எண்ணத்தில் தான் இதை பதிவாக எழுதினேன். :)

    ReplyDelete
  35. நசரேயன்,

    காவேரி குழந்தையல்ல, மேஜர். மேலும் அவளுக்கு படிப்பில் எல்லாம் ஆர்வம் இல்லை(அது அவள் அப்பாவின் ஆர்வம்). அவளுக்கு துணி அலங்காரத்தில் விருப்பம் இருப்பதால் பேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்க சொல்லி வருகிறேன், அவளும் சீரியசாக கன்சிடர் பண்ணுகிறார்.

    நாங்க எல்லாம் இல்லை என்றால் அவளுக்கு அவ்வளவாக வீட்டு வேலை கூட இருக்காது.

    ReplyDelete
  36. //ஆனால் இதெல்லாம் ப்ளாகில் எழுத தான் சரிவரும், வீட்டில் இந்த வாதங்கள் எடுபடாது//

    உண்மை

    //இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை//

    அது எதனால் என்றால்..நம்மால் அடுத்தவர்கள் சந்தோசப்படும் போது கிடைக்கும் திருப்திக்கு அளவே இல்லை.

    கயல் நீங்க இவ்வளோ நல்லா எழுதுவீங்கன்னு இப்ப தான் தெரியும். எங்கள் வீட்டிலையும் நிறைய வேலைக்காரர்கள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் என் அம்மா அவர்களை நன்கு கவனித்து கொள்வார்கள், இதனால் ஒவ்வொருவரும் குறைந்தது 8 வருடமாவது இருப்பார்கள். எங்க சொந்தகாரர்கள் கூட என் அம்மாவிடம், உங்க வீட்டுல மட்டும் எப்படி எல்லோரும் பிரச்சனை செய்யாம இருக்காங்கன்னு கேட்பாங்க..அதற்க்கு என் அம்மா வெளியில் கூறவில்லை என்றாலும் நினைத்து கொள்வது, "அவர்களையும் குடும்பத்தில் ஒருவராக நினைப்பது தான்"

    ReplyDelete
  37. கலக்குறிங்க கயல் ...
    உங்க பதிவுகள் எல்லாமே ரொம்ப இயல்பான நடைல படிக்க அருமையா இருக்கு . "காவேரியும் நீங்களும்" ஆச்சர்யமா இருக்குப்பா ! அமெரிக்கா ரிட்டன்ஸ் சில பேர் இந்தியா வந்ததும் சுமக்க முடியாம தலைல கிரீடம் சுமந்துட்டு திரியறதையே பார்த்து பழக்கம் ,இப்படி தன் பெற்றோர்வீட்டு (நிஜமாவே இந்த வார்த்தை பிரயோகம் அருமை கயல் ---பக்கத்துல இருக்கோமோ இல்ல தூரத்துல இருக்கோமோ ஆனா பெண் கல்யாணத்துக்கு பிறகு பிறந்த வீட்டை பெற்றோர் வீடுன்னு மட்டுமே நினைக்கறது அவஷியம் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விஷயம்னே சொல்லலாம் ) வேலைக்காரிக்காக இவ்ளோ செஞ்சது பத்தி படிக்க மனசுக்கு நிறைவா இருக்கு,தொடரட்டும் உங்களது சேவை .

    ReplyDelete
  38. வாங்க கிரி. :)

    //கயல் நீங்க இவ்வளோ நல்லா எழுதுவீங்கன்னு இப்ப தான் தெரியும்.//

    ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  39. வாங்க பரணி

    //பெண் கல்யாணத்துக்கு பிறகு பிறந்த வீட்டை பெற்றோர் வீடுன்னு மட்டுமே நினைக்கறது அவஷியம் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விஷயம்னே சொல்லலாம்
    //

    தப்பா புரிந்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன் LOL

    பெற்றோர் வீடு என்று சொல்லக்காரணம், படிப்பு -வேலை என்று தூரமாகவே இருந்துவிட்டதால், அவர்களுக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. மேலும், அவர்களுக்கும் எனக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு.

    உதாரணமாக இந்த வேலைக்காரி விஷயம். பெற்றோர் வீட்டில் வேலைக்காரி இருப்பார், என் வீடாக இருந்தால் எந்த காலத்திலும் வேலைக்காரி இருக்கமாட்டார். ஒரு மனிதரை இப்படி வேலை வாங்குவதில் எனக்கு சம்மதமில்லை.

    ReplyDelete
  40. ****ராஜ நடராஜன் said...
    உங்க பதிவுக்கு வரும்போது சில சமயம் என்ன சொல்றதுன்னு தெரியல.இந்த முறையும் அதே.

    இந்த விசயத்துல வருண் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்:)

    28 October, 2008 8:24 AM****

    இதல்லாம் நியாயமா?

    இப்படி எங்களுக்கு இடையில் வந்து கும்மி அடிக்கிறீங்களே!

    நான் என்ன தவறு செய்தேன்? :) :)

    ReplyDelete
  41. //உதாரணமாக இந்த வேலைக்காரி விஷயம். பெற்றோர் வீட்டில் வேலைக்காரி இருப்பார், என் வீடாக இருந்தால் எந்த காலத்திலும் வேலைக்காரி இருக்கமாட்டார். ஒரு மனிதரை இப்படி வேலை வாங்குவதில் எனக்கு சம்மதமில்லை.//

    நல்ல எண்ணம், ஆனால் அவர்களின் பிழைக்க வெறு வழி கண்டுபிடிக்கவேண்டுமே.

    ReplyDelete
  42. //நல்ல எண்ணம், ஆனால் அவர்களின் பிழைக்க வெறு வழி கண்டுபிடிக்கவேண்டுமே.//

    That's a good point. வீட்டு வேலை இல்லை என்றால் இவர்கள் எப்படி பிழைப்பது?

    ஆனால் "வேலைக்காரி" போன்ற வார்த்தைகளால் அழைக்காமல், "உதவியாளர்", "Home assistant" போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம். ஒரு அலுவலக உதவியாளரை எப்படி மரியாதையாக நடத்துவோமோ அப்படியே இவர்களையும் நடத்தலாம். குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது நடத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  43. வாவ் .... அந்த கடைசீ வார்த்தையில் இப்பதிவு நல்லதொரு சிறுகதையாய் உருமாற்றம் அடைந்துவிட்ட உணர்வு.

    நடை மெருகேறி வருகிறது கயல்விழி. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  44. வாங்க முத்துக்குமார், நன்றி :)

    ReplyDelete
  45. கதைக்காக இல்லை, அவளுடைய "யெஸ்ஸு" பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது :) :)

    ReplyDelete
  46. பல காவேரிகள் உண்டு என்பது தெரியும். சில கயல்விழிகளும் உண்டு என்பதும் தெரியும். இருவருக்கும் இடையிலான அனுபவங்களை மனித நேயத்துடன் இயல்பாக பாசாங்கு இல்லாமல் பிறர் மனம் நெகிழ எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே என்று தோன்றுகின்றது. உணர்வுகளுக்கும் எழுத்துக்கும் வாழ்த்துக்கள். இது என்றும் நீடிக்க வேண்டும்.

    ReplyDelete
  47. கயல்..அருமையான பதிவு..
    சரளமாக அழகாக எழுதி உள்ளீர்கள்.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  48. நன்றி அனானிமஸ்.

    வழக்கமாக அனானிமஸ் பெயரில் திட்டுவார்கள், நீங்கள் பாராட்டி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி :)

    ReplyDelete
  49. வாங்க டிவி ராதாகிருஷ்ணன், நன்றி :)

    ReplyDelete
  50. முதல் முறை உங்கள் பதிவிற்கு வருகிறேன். ரொம்பவே பாதித்து விட்டது.

    வீடு முழுவதும் கோச் பைகளும், வெர்சாஷே கண்ணாடிகளும், ஷணால், டோல்சே கப்பனா பெர்பூம்களும் நிறைந்து கிடக்கின்றன.

    இதில் ஒன்றின் விலை இந்தியாவில் உள்ள ஒரு ஏழையின் வருட வருமானம் என்று எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது.

    வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  51. முதல் வருகைக்கு நன்றி சத்ய பிரியன் :)

    காவேரி போல குழந்தைக்காலத்தையும்,இளமை காலத்தையும் வறுமையிலேயே கழிக்கும் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம், எவ்வளவு சின்னதாக இருந்தாலும். வேற ஏதுவும் வேண்டாம், சும்மா அவர்கள் துன்பத்தை கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் கூட ரொம்ப மகிழ்ச்சியடைவார்கள்.

    ReplyDelete
  52. ஏழைகளிடம் உண்மையான அன்பையும் நன்றியையும் நிச்சயமாக பார்க்கலாம் கயல்விழி

    ReplyDelete
  53. வருகைக்கு நன்றி இவன் :)

    ReplyDelete
  54. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.

    தன்னைப்போல் பிறரையும் நேசி - என்ற மொழிக்கு இலக்கணமாக உள்ளீர்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. நல்ல வேலை செய்தீர்கள் கயல்.
    மனசுக்கு நிறைவாக இருக்கிறதூ.

    காவேரி எப்படியாவது முன்னுக்க்கு வந்து விடுவாள்.
    உங்களுடன் கணினியில் பேசக் கூடக் கற்றுக்கொள்ளலாமே.
    அவள் தனிமை குறையுமாயிருக்கும்.

    ReplyDelete
  56. என்னங்க இது?
    சாதாரணமா படிக்க ஆரம்பிச்சு
    கண்ணீர் வர வைக்கிற அளவுக்கு
    எழுதிட்டீங்க!

    நீங்க நல்லா இருக்கணும்!!!
    இந்த மனசு போதுங்க!

    காவேரி இப்ப எப்படி இருக்காங்க?


    //உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்.//




    சாட்டையடி வரிகள் !
    மிகச் சரியான உண்மை!
    நாங்கள் பெரிய ஜவுளி நிறுவனங்களில்
    பயிற்சி கொடுக்கச்செல்லும்போது
    சொல்லிக்கொடுக்கும்
    முதல் பாடம் இதுதான்!

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  57. //Blogger Indian said...
    //வாங்க கூடுதுறை :)நிஜமாவே நீங்க அவ்வளவு அப்பாவியா? :) :)//
    அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
    தமிழ் சினிமா நம் மக்களை அவ்வாறு ஆக்கி வைத்துள்ளது.
    எத்தனை படங்களில் இச்சொல் சகஜமாகக் குற்ற உணர்வின்றி, ஸ்டைலாகக் கையாளப்பட்டிருக்கிறது?

    ஹ.ஹாஆஆஆ... நன்றி Indian.. எனக்கும் ஆளுங்க இருக்காங்கல்லே....

    ReplyDelete
  58. அருமையான இடுகை. ஒரு பணிப்பெண்ணிற்கும் திடீரென்று வரும் முதலாளி அம்மாவிற்கும் இடையே நடந்த வெகுளியான உரையாடல்கள். மிக, மிக சிறப்பு. கடைசி வரிகள் மிகச்சிறந்த எழுத்தாளரின் முத்திரை. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்.

    //FOB(fresh of the boat)//
    அது Fresh Off the Boat இல்லை?

    //தையலை மறைக்கும் படி மேலே எம்ப்ராயட்ரி பண்ணி இருந்தாள், அதே பேட்டர்ன் சுடிதார் முழுவதும் அங்கங்கே ரிபீட் பண்ணி இருந்தாள்.//

    கிழிந்ததை மறைக்க பூவேலைப்பாடு செய்வது இயல்பு. அதையே ஒரு வடிவமைப்பாக அமைத்தது அந்தப் பெண்ணின் அழகியல் சிந்தனை. வியக்க வைக்கிறார் காவேரி.

    //உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா?//

    பணிப்பெண்ணுக்கு என்னத்த பெருசா வாங்கித் தந்துடப் போறாங்கன்ற நடைமுறை உண்மையால் ஏற்பட்ட ஏமாற்றம். மற்ற படி அவங்க மேல குற்றம் சொல்ல முடியாதே!

    ReplyDelete
  59. Interesting article, Kayal. Keep writing !!

    Would like to tell that whenver I go for shopping, I have the habit of buying some thing for my driver, watch man and maid - be it biscuits, fruits or chocolates. No idea how this came in to me, but I see them happy by these small favours.

    ReplyDelete
  60. ரொம்ப நல்ல நடை.யாரோ மேலே சொன்ன மாதிரி , அந்த கடைசி "யெஸ்ஸு" ல ஒரு நல்ல சிறுகதை மாதிரி முடிச்சிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. காவேரியை கதாநாயகியாக வைத்து அழகா எழுதியிருக்க, கயல்! :)

    அவளுடைய "ஸ்லாங்" மற்றும் அவள் உணர்வு(ச்சி)களை நல்லா வெளிப்படுத்தி இருக்கிற. யெஸ்ஸூ! :)

    காவேரியை பார்க்காமலே பார்த்தது போல் இருக்கிறது.

    சந்தோஷம் என்பது எல்லோருக்கும் சமமானதுதானாம். எல்லா மனிதர்களுக்கும்- ஏழை பணக்காரங்க!

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் என்பார்கள்! அதைத்தான் நீ காவேரியிடம் பார்த்து இருக்கிறாயோ என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  62. எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா?

    இங்கே பல பேருக்கு அப்படித்தான். கால் கழுவி விடக்கூட ஆள் வேண்டும். அட போப்பா.

    ஆனா நீ செய்தது நல்ல காரியம். எத்தனை எத்தனை காவேரிகள். (அட நானும் ஒரு காலத்தில் காவேரி வேளை பார்த்திருக்கிறேன். எனது படிப்புக்காக, இப்ப அடிக்கிற இந்த டைப்புக்காக, அதான்ப்பா டைப்ரைட்டிங் கத்துக்க.)

    நல்லா இரு கயல் (எனக்கு ஏனோ இத டைப் செய்றப்ப அழ வருது, உங்களை ஒருமையில் சொல்வதை தப்பாக எடுத்துக்காதீங்க. எனக்கு என்னமோ உங்களை ஒருமையில் சொல்வது பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  63. காவேரி வேளை பார்த்திருக்கிறேன்.

    சாரி வேலை.

    (உனக்கு ஒன்னு தெரியுமா, வீட்டு வேலை செய்றாங்கன்னு சொன்னாலெ வெளியே கேவலமா பாப்பாங்க. முதல்ல இதை எழுதலாமானு யோசிச்சேன். ஆனா கை தானா டப்பிட்டுவிட்டது. )

    ReplyDelete
  64. கயல் ஒரு பெரிய பின்னூட்டம் போட தோண்றுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சரியான கோணமும் புரிதலும் மனசும் இருக்கும் இருவரில் ஒருவர் இன்னொருவருக்கு விரிவா என்னத்த சொல்லிட போறோம் என்று விட்டுவிட்டேன்.

    ஹாட்ஸ் ஆஃப் கயல்.

    மெச்சூரிட்டியும் நல்ல மனசும் உள்ள பெண்களைப் பார்க்கும் போது இப்போதெல்லாம் பெருமை பாசம்லாம் ரொம்ப வருது.

    ஒரு டிபிக்கல் அப்பாவாகிட்டே வரேன்னு நினைக்கிறேன். அதும் ஒரு பொண்ணோட அப்பாவா...

    ஒரே ஒரு வருத்தம், எனக்கு இந்த ரொம்ப சின்ன வயசிலயே இப்படில்லாம் தோணுதேன்னுதான் :P

    ReplyDelete
  65. கயல், நல்ல விஷயம். அருமையா articulate பண்ணியிருக்கீங்க!

    ReplyDelete
  66. //"யக்கா, உன்னோட வம்பளத்தா வூட்டு வேலை எல்லாம் என்னாறது? போட்டது போட்ட மாதியே கிடக்கு, ஏதாவது வோணும்னா ஒரு கொரலு குடு, ஓடியாந்துட்ரேன்" கண்ணில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்தப்படியே சிட்டாக ஓடி மறைந்தாள். //

    சேவகியாக வந்த உறவு
    = = = = = = = = = = = =

    நானும் மகனும் மட்டும்
    தனித்து வாழ்ந்திருந்த்
    மனச் சோர்வு மிகுந்து கிடந்த
    ஒரு மாலையில்
    சிவப்புத் தாவணியை
    இழுத்துச் செருகியபடி
    சின்னத் துணிப்பையை
    கையில் பிடித்தபடி
    குறுகுறுப் பார்வையோடு
    வீட்டுக்குள் வந்தாய்
    அதுவரை
    திறக்கப்படாமலிருந்த
    வலது மூலைச் சன்னல் வழியாக
    வேப்பம்பூ வாசத்தோடு
    தென்றலும் வந்தது

    குளிர்சாதனப் பெட்டியில்
    காய்கறி அடுக்கு நிறைந்தது
    சமையலறையும்
    உணவு மேசையும் மணத்தது
    வயிறு பசியையும்
    வாய் ருசியையும்
    உணர்ந்தன
    இரவிலிருந்தே
    மனதைக் குடையும்
    மறுநாட் சமையல்
    தவிப்பும் தீர்ந்தது

    எனக்குப் பிடித்த
    நூல் சேலைகள்
    கஞ்சி மொடமொடப்போடு
    கொடியில் காத்திருந்தது
    மகனைக் கொஞ்சவும்
    கதை பேசி
    நடையுலா போகவும்
    கூடக் கொஞ்சம்
    நேரமும் கிடைத்தது

    இப்போதொ
    எல்லோரும் இணைந்திருக்கும்
    இந்த இல்லறத்தை
    இனிமையாக்கியதில்
    உன் பங்கு கொஞ்சம் அதிகம்தான்
    என்ற உண்மையை
    ஒப்புக்கொள்வதில்
    எனக்கொன்றும்
    சங்கடமில்லை

    களைத்த மாலைக்
    காப்பிக்கும்
    கனத்த தலையின் 'பத்து'க்கும்
    அவரவர் ருசியறிந்து
    சமைக்கும் சமையலுக்கும்
    வீட்டின் மூலை முடுக்கெல்லாம்
    ஒளிரும் சுத்தத்திற்கும்
    குழந்தைகளின் ஒட்டுதலுக்கும்
    உன் உள்ளன்பிற்கும்
    என்ன சம்பளம் தந்து
    எப்படி கடனைத் தீர்ப்பது
    தங்கையாய்
    சமயத்தில் அம்மாவாய்
    சொல்லடி பெண்ணே ...

    விசேஷத்திற்கு
    விடுமுறை கேட்டு
    வீட்டுக்குப் போய்விட்டு
    தங்காமல்
    ஓடிவந்த்டுவிட்டாய்
    கேட்டதற்கு
    உன் அப்பா சொல்கிறார்
    'அங்கே
    அக்காவும் அண்ணாவும்
    நானில்லாமல்
    சிரமப்படுவார்கள்'
    என்றாயாம்

    நெகிழ்ந்துதான் போய்க்
    கிடக்கிறோம்

    நானெப்படித் தீர்ப்பேன்
    இந்த நன்றிக்கடனை
    இப்படி எழுதி
    என் உறவுக் கூட்டத்தோடு
    பகிர்ந்துகொள்வதைத் தவிர !

    ---உதயச் செல்வி
    05 09 2003

    ReplyDelete
  67. //எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா?

    இங்கே பல பேருக்கு அப்படித்தான். கால் கழுவி விடக்கூட ஆள் வேண்டும். அட போப்பா.

    ஆனா நீ செய்தது நல்ல காரியம். எத்தனை எத்தனை காவேரிகள். (அட நானும் ஒரு காலத்தில் காவேரி வேளை பார்த்திருக்கிறேன். எனது படிப்புக்காக, இப்ப அடிக்கிற இந்த டைப்புக்காக, அதான்ப்பா டைப்ரைட்டிங் கத்துக்க.)

    நல்லா இரு கயல் (எனக்கு ஏனோ இத டைப் செய்றப்ப அழ வருது, உங்களை ஒருமையில் சொல்வதை தப்பாக எடுத்துக்காதீங்க. எனக்கு என்னமோ உங்களை ஒருமையில் சொல்வது பிடித்திருக்கிறது.

    //

    அமிர்தவர்ஷனி அம்மா, உங்களுடைய பின்னூட்டத்தை இன்று தான் படித்தேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உண்மையாக எந்த வேலை செய்தாலும் அதில் இழிவில்லை. சாப்பிட்ட தட்டை கூட மற்றவர் கழுவி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பார்த்தீர்களா? அது தான் இழிவான செயல்

    நீங்கள் என்னை தாராளமாக ஒருமையில் அழைக்கலாம்.

    ReplyDelete
  68. //ஹாட்ஸ் ஆஃப் கயல்.

    மெச்சூரிட்டியும் நல்ல மனசும் உள்ள பெண்களைப் பார்க்கும் போது இப்போதெல்லாம் பெருமை பாசம்லாம் ரொம்ப வருது.

    ஒரு டிபிக்கல் அப்பாவாகிட்டே வரேன்னு நினைக்கிறேன். அதும் ஒரு பொண்ணோட அப்பாவா...//

    ரொம்ப ரொம்ப நன்றி நிலா அப்பா :)


    //ஒரே ஒரு வருத்தம், எனக்கு இந்த ரொம்ப சின்ன வயசிலயே இப்படில்லாம் தோணுதேன்னுதான் :P//

    அப்படியே வயசை குறைக்கறீங்க பார்த்தீங்களா? :) :)(ச்சும்மா ஜோக்)

    ReplyDelete
  69. நன்றி பாலராஜன் கீதா :)

    ReplyDelete
  70. நன்றி முகவை மைந்தன், கூடுதுறை

    ReplyDelete
  71. நன்றி இனியவள் புனிதா, அர்னால்ட் பாலா மற்றும் ஸ்ரீராம். :)

    ReplyDelete