Thursday, May 25, 2017

அ ரு வ ரு ப் பு என்பதுதான் சரி!

தமிழில் அதிகப் பிழையுடன் எழுதும் மிகச்சிலரில் அடியேனும் ஒருவன் (சாரு ஞாபகம் வருது இங்கே!) என்பதை  எந்தவித வெட்கமோ, கூச்சமோ  இல்லாமல் சொல்லுகிறேன். உண்மையை எடுத்துரைக்க என்றுமே பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட எனக்கு அழகான தமிழில் எழுதும் தமிழ் மேதைகள் தமிழ்ப் பிழை செய்வதைப் பார்க்கும்போது  ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சமீபத்தில் வாசித்த பதிவுகளில், தமிழ் நன்றாகத் தெரிந்த இரண்டு பதிவர்கள் இவ்வார்த்தையை அருவெறுப்பு என்று எழுதியிருக்கிறார்கள். முன்பொருமுறை நண்பர் சத்யப்பிரியன் பதிவில் அது "அருவருப்பு"னுதான்னு சொல்றாங்கனு (தமிழ் நன்கறிந்த அவரிடம்) இதைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது இவ்வார்த்தையை பலரும் தவறாகவே எழுதுகிறார்கள் என்று.  இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி எழுதும்போதுகூட "அருவெறுப்பு" தான் சரியோ என்கிற குழப்பம் எனக்கு வருகிறது. அப்படி  வருவதால், இன்று இதை ஒரு பதிவாகவே வெளியிட்டு  ஒரு முடிவுக்கு வந்துவிடுவது என்ற முடிவுடன் இப்பதிவை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன் . நன்றி. வணக்கம்.

13 comments:

  1. அருவருப்பு என்பதுதான் சரியான தமிழ் வார்த்தை. பிடிக்காத ஒரு பொருளைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் வெறுப்பு உணர்ச்சியைக் குறிப்பிடும் வார்த்தை.

    கால ஓட்டத்தில் ஏற்படும் பல மாற்றங்களைப் போலவே மொழியும் திரிவது (மாறுவது) இயற்கையே. அருவருப்பில் வெறுப்பு பொதிந்திருப்பதால் அருவெறுப்பு என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    நன்னூலில் குறிப்பிட்டுள்ளது போல "பழையன கழிதலும் புதியன பகுதலும் வழுவல கால வகையினானே" என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  2. வாங்க, கந்தசாமி சார்!

    உங்கள் உறுதியான கருத்திற்கு நன்றி. தமிழிலேயே பிறந்து, தமிழிலேயே நீந்தும் சில பதிவர்கள் (பெயர் வேண்டாமே!), அருவெறுப்பு என்று எழுதியிருந்ததால், இச்சந்தேகத்திற்கு ஒரு முடிவுகட்டத்தான் இப்பதிவு. உங்கள் பின்னூட்டம் எது சரி என்பதை தெளிவு படுத்துகிறது. மறுபடியும் நன்றி. :)

    ReplyDelete
  3. அருவரு என்றால் மிகுதியாய் வெறு என்னும் பொருள்... அதிலிருந்து தோன்றிய தொழிற்பெயரே அருவருப்பு...

    அருவெறுப்பு, அறுவறுப்பு என்பதும் தவறு...

    ReplyDelete
  4. அருவருப்பு என்பதே சரி.... நீங்கள் சொல்வதைப்போல பலர் அறுவெறுப்பு என்று எழுதுகிறார்கள்... இத்தனைக்கும் அவர்கள் தமிழில் பெரும் எழுத்தாளர்கள்.... வழுவமைதியாக சில வற்றை கண்டுகொள்வதில்லை

    ReplyDelete
  5. ‘அருவருப்பு’ > மிகையான வெறுப்பு [கழகத் தமிழகராதி]

    ‘அருவெறுப்பு’ என்னும் சொல்லே இல்லை.

    நான்கூட எப்போதேனும் ‘அருவெறுப்பு’ என்னும் சொல்லைக் கையாண்டிருப்பேனோ என்னும் சந்தேகம் உள்ளது!

    நண்பர் கந்தசாமி அவர்கள் குறிப்பிடுவது போல, அருவருப்பில் ‘வெறுப்பு’ பொதிந்திருப்பதால் சொல் திரிபடைந்திருக்கலாம்.

    ReplyDelete
  6. அருவருப்புதான் சரி

    ReplyDelete
  7. வாங்க, தனபாலன், பத்ரிநாத், பரமசிவம் சார், ராஜி அவர்களே! எது சரி என்று தெளிவுபடுத்தியதற்கு உங்கள் அனைவரூக்கும் மிக்க நன்றி. :)

    ReplyDelete
  8. வாங்க புதுகை அப்துல்லா!

    எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது உங்களைப் பார்த்து!!!

    முகநூல், ட்விட்டர் உலக்கில் பலரைப்போல் நான் இன்னும் ஐக்கியமாகவில்லை. இங்கேதான் இன்னும் உலாவிக்கொண்டு இருக்கிறேன். பதிவுலகைவிட என் வேலை இன்பகரமாக இருப்பதால் ரொம்ப எழுதுவதில்லை. மற்றபடி நலமே.

    உங்கள் "ஹாய்"க்கு நன்றி. தாங்களும் நலம்தானே? :)

    ReplyDelete
  9. வெறுத்து ஒதுங்கும் நிலையை
    அருவருப்பு என்கிறோம்
    அருவருப்பு என்பதே சரி

    ReplyDelete
  10. அப்படி ஒன்றும் உங்கள் தமிழில் பிழைகள் கண்டதாக நினைவில்லை.
    அருவெறுப்பு வெறுப்பு தொடர்புடையதால் அப்படி மாறி இருக்கலாம்.

    ReplyDelete
  11. வாங்க, காசிராஜலிங்கம்! நன்றி.

    --------------------

    வாங்க முரளி! ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி! :) கவனக்குறைவு, நேரமில்லாமை காரணமாக(வும்) நெறையவே பிழைகள் இருக்கும் முரளி. :)

    ReplyDelete
  12. அருவருப்புதான் சரி. 'அருவரு' என்பது வேர்ச்சொல். 'அருவருத்தல்', 'அருவருப்பு' - இதற்கு 'வெறுப்பு' என்ற அர்த்தம் மாத்திரம் கிடையாது. எனக்கு தமிழ்ல சரியாச் சொல்லத் தெரியலை (சட்டுனு சரியான வார்த்தை வரமாட்டேங்குது). 'அவனை நான் வெறுக்கிறேன்' என்பது வேறு, 'அவனை நினைத்தாலே அருவருப்பா இருக்கு' என்பதன் அர்த்தம் வேறு. அசூயை என்பது இதன் அர்த்தம். 'வெறுப்பு' கோபத்தின் விளைவு. 'அருவருப்பு' என்பது எண்ணத்தின் விளைவு. (ரொம்ப குழப்பறேனா?).

    'அருவெறுப்பு' - தவறுதான். ஏனென்றால், 'அரு' 'வெறுப்பு'டன் சேராது.

    கருவறு - இதன் அர்த்தம் அவனை அழித்துவிடு. 'கருவரு' - கரு வருவது.

    ReplyDelete