Wednesday, July 9, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3

வீட்டில் நுழைந்தவுடனே படபடக்கும் இதயத்தோடு அம்மாவை என் கண்கள் தேடியது. தலைவிரி கோலமாக, அலுவலகத்துக்கு அணிந்து சென்ற சேலை கூட மாற்றாமல் ஹாலின் ஒரு மூலையில் முகம் எல்லாம் வீங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அம்மாவின் கை இயந்திரத்தனமாக காஃபிக்கோப்பையை பிடித்திருந்தது.

"அம்மாவுக்கு என்னாச்சு??" என்று கேட்டபடியே வேகமாக அம்மாவை நோக்கி சென்ற என்னை அப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது. இந்த முறை சற்று கடுமையாக. "ரூமுக்கு போ என்று சொன்னேன் இல்லையா? அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, அதான் காஃபி வாங்கித்தந்தேன். கொஞ்ச நேரத்தில் சரியாயிடுவா". கொஞ்சம் தயக்கத்தோடு என் அறைக்கு சென்று புத்தகத்தை பிரித்து வைத்து படிப்பது போல பாவனை பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கவனம் எல்லாம் ஹாலிலேயே இருந்தது. ஆனால் அதற்கு பிறகு டிவி ஓடும் சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை. பக்கத்து அறையில் அண்ணா இருக்கிறானா என்று எட்டிப்பார்த்தேன். "எனக்கும் வீட்டில் நடப்பதற்கும் ஏதும் சம்மந்தமில்லை" என்பது மாதிரி சுவாரஸ்யமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். அண்ணா எப்போதும் இப்படித்தான், வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அதில் இன்வால்வ் ஆகவே மாட்டான். ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், பெண் பிள்ளைகள் தான் அதிகம் உள்வாங்குகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். இரவு அன்று யாரும் சாப்பிடவில்லை.

இரவு நேரம்- பசி மற்றும் குழப்பத்தால் தூங்காமல் சும்மா படுத்துக்கொண்டிருந்தேன். அம்மா என் அறைக்குள் வரும் சத்தம் கேட்டது. "கயல் தூங்கிட்டியாமா?"

"இல்லைமா இன்னும் தூங்கல, என்னாச்சு உனக்கு?"

கேட்டது தான் தாமதம், பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

"நான் மோசம் போயிட்டேண்டி, என் வாழ்க்கையே பாழாப்போச்சு"

அம்மா அப்படி அழுது நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கும் எனக்கும் அந்த காலக்கட்டத்தில் தான் அம்மா-மகள் உறவு நெகிழ்ந்து தோழிகள் போல பேச ஆரம்பித்திருந்தோம். Did mom take our "friendship" too far? நான் பொறுமை இழந்து, "என்னாச்சு சீக்கிரம் சொல்லுமா!"

அம்மாவே தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். "இன்னைக்கு ஆஃபீஸில் ரொம்ப தலைவலி. பர்மிஷன் போட்டுட்டு 3 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தேன். வாசலில் அப்பா பைக் நிக்குது, ஏன் சீக்கிரம் வந்தார்னு நினைச்சிட்டே கதவை திறந்து வீட்டுக்குள் வந்தால், பாத்ரூமில் ஏதோ சிரிப்புச்சத்தம்".

அடுத்த பகுதிகளை மன உறுதி இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். மற்றவர்கள் தயவு செய்து இதோடு நிறுத்திக்கொள்ளவும்.

"சந்தேகப்பட்டு பாத்ரூம் கதவை திறந்துப்பார்த்தால், அப்பாவும் ஒரு பொம்பளையும் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அம்மணமா.." மீண்டும் பெருங்குரலெடுத்து அழுத்தார்.

"நான் பார்த்த அதிர்ச்சில அப்பா அப்படியே நிக்கறார், அந்த பொம்பளை தான் சுதாரிச்சிட்டு அவசர அவசரமா பாவாடையக்கட்டினாள். நீ சொன்னா நம்ப மாட்டே கயல், அந்த பொம்பளை சரியான சேரி பொம்பளை மாதிரி இருக்கா. அவ கருப்புகலரும், பல்லும் சே! அவலட்சணமா இருக்கா. அவளோட போய் எப்படி-டி உங்கப்பா இப்படி எல்லாம்" (மீண்டும் அழுகை). அம்மா நல்ல சிவந்த நிறம் என்பதால் கருப்பானவர்கள் அனைவருமே பொதுவாக அவருடைய அகராதியில் அழகில்லாதவர்கள்.

'உலகம் சுற்றுவது ஒரு நிமிடம் நின்றுவிட்டது' போன்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு அன்று அப்படித்தான் இருந்தது. உடம்பின் இரத்தமெல்லாம் உறைந்தது போல இருந்தது. செக்ஸ் பற்றி எதுவும் தெரியாத அந்த வயதில் என்னுடைய முதல் Rude awakening. அம்மா சொல்லுவதை கேட்கவே விருப்பம் இல்லை. அதற்கு பிறகு மெளனத்தையே பதிலாக அளித்துக்கொண்டிருந்தேன்.

"அந்த பொம்பளை பெரிய ரவுடியா இருக்கா கயல். ஏண்டி இப்படி பண்ணினேனு அவளை உலுக்கினா என்ன சொல்றா தெரியுமா?

"......"

"உன் புருசனை காப்பாத்திக்க வக்கில்ல எங்கிட்ட ஏன் வந்து எகிற்ற?-ன்றா. இதை எல்லாம் பார்த்தும் அந்த மனுஷன் அமைதியா இருக்கார். இவர் பண்ணிய காரியத்துக்கு நான் யார்யார்டலாம் பேச்சு வாங்கவேண்டி இருக்கு பார்த்தியாடி?"

"......"

அம்மா மீண்டும் என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தார், என் யூனிபார்ம் டாப்ஸ் நனையும் வரை. எனக்கு அந்த initial shock-க்கு பிறகு உடனடியாக வந்த உணர்வு, சகிக்க முடியாத அருவருப்பு. வயிற்றை புரட்டுவது போல குமட்டிக்கொண்டு வந்தது. அடுத்ததாக, அப்பா மீது கடுமையான வெறுப்பு! வெறுப்பு! வெறுப்பு!

தவறு செய்ததாக சொல்லப்படும் பெண்ணைப்பற்றி விசாரித்ததில், அவள் அடுத்த தெருவில் தான் இருந்தாள், ஏழை குடும்பத்துப்பெண், ஒரு 20-25 வயதிருக்கும். திருமணத்துக்காக அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருந்தார்கள். அவள் கல்யாணத்துக்கு நகை, பணம் சேர்க்க தான் சில தவறான உறவுகளில் சிக்கிக்கொண்டாள் என்று பின்னாட்களில் கேள்விப்பட்டேன்.

பிறகு என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பெரிய இடைவெளி விழுந்தது. இருவருக்கும் படுக்கை தனித்தனியானது, பேச்சு வார்த்தை சுத்தமாக நின்றுப்போய் ஒரு வரி கேள்வி-பதில்களானது, அதுவும் முழுக்க முழுக்க குழந்தைகள் சம்மந்தமாக மட்டும். இரவானால் அம்மா என் ரூமுக்கு வந்து படுத்துக்கொள்வார். "இனிமேல் உயிரோட இருக்க வரைக்கும் அவரோடு படுக்கமாட்டேன் கயல்".

அந்த காலக்கட்டத்திலெல்லாம் சரியாக இரவு நேரத்தில் கரண்ட் கட்டாகும். அப்பா மொழியில் சொல்லுவதென்றால், "ப்ளடி எலெக்ட்ரிசிட்டி போர்ட் பாஸ்டர்ட்ஸ்"(அவருக்கு இருக்கும் தீவிர ஆங்கில மோகத்தினால் திட்டும் போது கூட ஆங்கிலத்தில் தான் திட்டுவார்). மின்சாரத்தால் இயங்கும் ப்ரிட்ஜ், டிவி, தடதடக்கும் மின்விசிறி எல்லாம் நின்றுவிட்டால் நம்மை சுற்றியுள்ள மற்ற சிறு சிறு ஓசைகளை கவனிக்க ஆரம்பிப்போம் இல்லையா?

அப்படி மின்சாரம் இல்லாத நிசப்தமான இரவு நேரங்களில் நான் கவனிக்க நேர்ந்த ஓசைகள் நன்றாக நினைவிருக்கிறது. ஜன்னல் காற்றினால் படபடக்கும் ஓசை, பாத்ரூம் குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக பக்கெட்டில் விழும் ஓசை, கொசுக்களின் ரீங்காரம், கூடவே என் அம்மாவின் மெல்லிய விசும்பல்!.

பி.கு: இந்த நிகழ்வின் இண்டென்சிட்டியில் பாதியை தான் என்னால் எழுத்தில் கொண்டுவர முடிந்தது.

-நினைவுகள் தொடரும்.

69 comments:

  1. அந்த நேரத்தில் அம்மா வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால், இதைப்பார்க்காமலே இருந்திருந்தால் நல்லாயிருக்கும்! :-(

    Sometimes being ignorant is better!

    ReplyDelete
  2. At least in this particular case, kayal, it is indeed!

    ReplyDelete
  3. முதல் பதிவையும் இப்பதிவையும் படிக்கும்போது ஏதோ சேராததுபோல இருக்கிறதே. அதாவது முதல் பதிவில் அம்மா அப்பா சாதாரணமாகத்தானே காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு வேளை காலப் போக்கில் நிலைமை சரியானதாக இருந்திருக்குமோ?

    நேரம் இருந்தால் எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய பதிவுகளை பார்த்து கருத்து சொல்லவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. என்ன சொல்லுறது என்னு தெரியல கயல்விழி....

    ReplyDelete
  5. படிக்க அதிர்ச்சியாக இருக்கின்றது .. கேட்பது தவறாகப்பட்டால் விட்டுவிடுங்கள் கயல் .. என்ன நடந்தது என்று முழுமையாய் உங்கள் தந்தை தவிர வேறு யாருக்கும் தெரியாதுதான் இருந்தாலும் ஒரு பெண்ணாக உங்களால் இப்போது அந்த சம்பவத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் ? பகுதி 3 என்பதனால் உங்கள் பார்வை அடுத்து வரும் என்று நினைக்கிறேன் . .

    இந்த இடத்தில் அறியாமை வரம் என்று சொல்ல மனது வரமாட்டேன் என்கின்றது :-(

    ReplyDelete
  6. என்ன சொல்றதுன்னு தெரியல....

    //Sometimes being ignorant is better!//

    but it doesn't work all the time

    ReplyDelete
  7. //முதல் பதிவையும் இப்பதிவையும் படிக்கும்போது ஏதோ சேராததுபோல இருக்கிறதே. அதாவது முதல் பதிவில் அம்மா அப்பா சாதாரணமாகத்தானே காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு வேளை காலப் போக்கில் நிலைமை சரியானதாக இருந்திருக்குமோ?

    நேரம் இருந்தால் எனது ஆண் பெண் கற்பு நிலை பற்றிய பதிவுகளை பார்த்து கருத்து சொல்லவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //
    வணக்கம் டோண்டு சார்

    நீங்கள் குறிப்பிட்ட பதிவை பலமுறை படித்திருக்கிறேன். கற்பு என்று எது வந்தாலும் படிப்பேன், ஏனென்றால் சிறுவயதில் இருந்து ரொம்ப குழப்பிய கான்செப்ட் அது. ஆண்களுடைய "கற்பு" ஸ்டாண்டர்ட் மிக குறைவாக இருப்பதும், பெண்களுக்கு என்று வரும்போது ஸ்டாண்டர்டுகள் மிக அதிகமாக உயர்த்தப்படுவதும் காரணமாக இருக்கலாம்.

    காலப்போக்கில் என் பெற்றோர்களுக்கிடையே இருந்த மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, மற்றவர்கள் மூன் ஆதர்ச தம்பதிகள் போல நடிக்கும் அளவுக்கு.

    மேலும் எந்த மனவருத்தத்திலும், எங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நன்றாக செய்தார்கள், அதில் ஒரு குறையும் இல்லை. எல்லா குடும்பத்திலும் இப்படி "Skeletons inside the closet" இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  8. //கயல் .. என்ன நடந்தது என்று முழுமையாய் உங்கள் தந்தை தவிர வேறு யாருக்கும் தெரியாதுதான் இருந்தாலும் ஒரு பெண்ணாக உங்களால் இப்போது அந்த சம்பவத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் ? பகுதி 3 என்பதனால் உங்கள் பார்வை அடுத்து வரும் என்று நினைக்கிறேன் . .

    இந்த இடத்தில் அறியாமை வரம் என்று சொல்ல மனது வரமாட்டேன் என்கின்றது //

    யாத்ரீகன்,
    அடுத்த பதிவில் முழுக்க முழுக்க இந்த நிகழ்ச்சியைப்பற்றிய என்னுடைய எண்ணங்களையும், பாதிப்புகளையும் பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன் :)

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி கிங் மற்றும் இவன்.

    ReplyDelete
  10. //என்ன சொல்றதுன்னு தெரியல....

    //Sometimes being ignorant is better!//

    but it doesn't work all the time//

    நம்பினால் நம்புங்கள் ஷ்யாம், என் சொந்த அனுபவத்தில் இது போன்ற விஷயங்கள் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருப்பதே நல்லது. இப்போதும் இதைப்பற்றிய என் மெமரியை அழிக்க்க முடிந்தால் உடனே அழித்துவிடுவேன்.

    உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. ஏமாற்றங்கள் தந்த பாதிப்புகள் அகன்று இப்போது அம்மா ஆறுதலடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அவருடைய வாழ்வில் இனி மகிழ்ச்சி பொங்கட்டும்.

    ReplyDelete
  12. //ஏமாற்றங்கள் தந்த பாதிப்புகள் அகன்று இப்போது அம்மா ஆறுதலடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அவருடைய வாழ்வில் இனி மகிழ்ச்சி பொங்கட்டும்.//
    நன்றி வாய்ஸ் ஆன் விங்ஸ்.

    ஏதோ ஒருமாதிரியாக சமாளிக்க்கிறார்கள். ஆனால் முன்பிருந்த அன்பும், நெருக்கமும், சிரிப்புச்சத்தமும் திரும்பவே இல்லை.

    ReplyDelete
  13. //கயல்விழி said...
    என் சொந்த அனுபவத்தில் இது போன்ற விஷயங்கள் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருப்பதே நல்லது//

    நானும் அது தான் சொல்ல வந்தேன் கயல்விழி...இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருந்தாலோ இல்லை அது நமக்கு தெரியாமல் இருந்தாலோ அல்லது அதை மறக்க முடிந்தாலோ நன்றாக இருக்கும்

    ReplyDelete
  14. ஒரு நிமிடம் என்னை அதிர செய்தது உங்கள் பதிவு...

    ReplyDelete
  15. //ஒரு நிமிடம் என்னை அதிர செய்தது உங்கள் பதிவு...

    //

    இது ரொம்ப அதிசயமான நிகழ்ச்சி இல்லை சரவணக்குமார், இந்த சம்மவத்தின் வேறு வெர்ஷன்கள் பல குடும்பங்களிலும் நடப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன், ஒருவேளை இந்த அளவு இண்டென்சிட்டி இல்லாமல் இருக்கலாம்.

    நான் வெளிப்படையாக எழுத துணிந்ததே ஒரு வித தெரப்பிக்காக தான். சில விஷயங்களை பலரிடம் சொல்லமுடியாது, ஆனால்ல் ப்ளாகில் எழுத முடியும்.

    உங்கள் வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  16. என்னோட பாலிசி எப்பவுமே என்னத் தெரியுமாங்க கயல்விழி, நான் ஒரு இடத்துக்கோ இல்ல ஒரு செயல செய்யும்போதோ, குறிப்பா எனக்கு நெருக்கமானவர்கள்ங்கர போது, சில சமயம் அவங்களுக்கே எரிச்சல் வர்ற அளவு ஒரு ஆரவாரம் செய்வேன், ஒரு முன்னோட்டம் கொடுத்திடுவேன். இன்னைக்குவரை அதை செய்துகிட்டுதான் இருக்கேன். அதுக்குக் காரணம் நான் கேக்கக் கூடாத, பார்க்கத் தேவையில்லாத, தெரிஞ்சிக்க அவசியமில்லாத விஷயங்களை தவிர்க்கணும்னுதான். ஆனா இது வரைக்கும் நான் அதில் முழுமையா வெற்றி அடைஞ்சதே இல்ல. எப்படி இருந்தாலும் அந்த விஷயங்கள் எனக்குத் தெரிய வந்துதான் இருக்கு. அது அம்மாவா இருக்கட்டும், அப்பாவா இருக்கட்டும், அக்காவா இருக்கட்டும், நெருங்கின தோழியா இருக்கட்டும், நாம ஒருத்தர் மேல ஒரு நல்ல நம்பிக்கை தீவிரமா வெச்சிருக்கும்போது, அவங்க அந்த நம்பிக்கைக்கு எந்த ஞாயமான காரணமும் இல்லாம மாறுபட்டு நடக்கும்போது, நாம எவ்வளவுதான் அதை தெரிஞ்சிக்காம இருக்கும் நிலையில் இருந்தாலும் நமக்கு அது காட்டிக் கொடுக்கப்படுகிறது. அதுதான் இயற்கை நியதி. அதேப் போல நம்மோட நம்பிக்கைகள் பொய்த்துப் போகிற காரணத்தால், ஏண்டா நமக்கு இது தெரிஞ்சுதுன்னு தோணினாலும், அது தவிர்க்க முடியாத விஷயம். நடந்த விஷயம் பார்க்கும்போது, உங்கம்மா ஏன், தான் பண்ணாத தப்புக்கு தன்னோட மகிழ்ச்சிய கொஞ்சமாகவேனும் இழந்தாங்கன்னு தோணினாலும், அவங்க உங்கப்பா மேல வெச்ச நல்ல நம்பிக்கைக்கு இருக்க சக்தி தானா அவங்களுக்கு காட்டி கொடுத்திருச்சி. அன்னைக்கில்லனாலும் அந்த விஷயமோ இல்ல அது சம்பந்தமான விஷயமோ என்னைக்காவது அவங்களுக்கு தெரிய வந்துதான் இருக்கும். அவங்களால ஹேண்டில் பண்ணக் கூடிய சூழ்நிலையில தெரிய வந்ததற்காக மட்டும்தான் நாம இயற்கைக்கு நன்றி சொல்ல முடியும்

    ReplyDelete
  17. நன்றி ராப். தெரியக்கூடாத விஷயங்கள் தெரிவது கொடுமை. அதுவும் மெச்சூரிட்டி இல்லாத வயதில் தெரிவது கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  18. அதேப் போல கற்பு என்கிற கான்செப்ட் ஒவ்வொரு தனிப்பட்டவர்களோட நம்பிக்கை சார்ந்த விஷயங்கரதுதான். எப்படி சிலப் பேர் கடவுள் நம்பிக்கைய அளவோட ஹேண்டில் பண்றாங்களோ, அதேப் போல கற்பு கான்செப்ட அளவோட ஹேண்டில் பண்றவங்களும் இருக்காங்க. கடவுள் என்ற ஒரு சொல்ல வெச்சிகிட்டு பாக்குற கோவில், கேள்விப்படற சாமியார்னு எல்லார்கிட்டயும் போய் விழறவங்க இருப்பதுபோல கற்பு என்ற ஒரு வார்த்தைய வெச்சிகிட்டு சிலப்பேர் கேணத்தனமா உளருவாங்க. இந்த ரெண்டு விஷயத்திலும் படிச்சவன், படிக்காதவன், ஏழை, கிராமத்தான்,பணக்காரன் என்கிற வித்தியாசமே கிடையாது. எத்தனையோ குடும்பத்தில் ஆண்களும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஆனா இங்க கடுப்பு என்னன்னா, நிஜமான அக்கறையோட செஞ்சவன் வெளிய சொல்ல மாட்டாங்கறது ஒருப் புறம் இருந்தாலும், தவறிப் போய் தெரிஞ்சிடுச்சின்னா, இந்த சமூகமும் குடும்ப அமைப்பும் அவங்கள படுத்துற பாடு எக்கச்சக்கம். ஆனா இதையே பெண் செஞ்சா அதை recognise பண்றதுகூட கிடையாது. எரிச்சலான இன்னொரு விஷயம் என்னன்னா பெரும்பான்மையா ஒருத்தர ஒருத்தர் மன்னிச்சி வாழ்ந்தாலும் சமூகம் ஆண் செய்யும் தவறை உரிமைன்னும், பெண் செய்யும் தவறை தவறுன்னும் அடையாளப்படுத்துது.

    இதோட பாதிப்பு எப்படிப் போகுதுன்னா, சிலப் பேர் இயல்பிலயே தவறை சுலபத்தில் மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருக்க மாட்டாங்க. இது சரியா தவறா, நல்லதா கெட்டதாங்கற வாதம் இவ்விடத்தில் வீண். ஏன்னா ஒருத்தரோட அடிப்படை குணத்தை அசாதாரணச் சூழ்நிலைகளில் கட்டுப்படுத்தறது சிரமம். இப்படி இருக்கும்போது ஒரு ஆண் தன் மனைவி தவறு செய்துட்டாங்கர காரணத்திற்காக அவளை விவாகரத்து செய்திட்டு வேறொரு திருமணம் செய்ய முடியுது. அதை அவனோட ஆண்மையின் குறியீடாகவும் அடையாளப்படுத்துகிறார்கள், அதை இந்த சமூகம் நிபந்தனை இல்லாம ஆதரிக்குது, உதவி செய்யுது, அந்தப் பெண்ணோட தவறையும் பிரபலமாக்கி தன்னளவில் எப்படி இழிவு படுத்த முடியுமோ அப்படி செய்கிறது.

    ஆனா கணவன் தவறு செய்த காரணத்தால் similar முடிவ மனைவி எடுத்தா, அவளுக்கு அட்வைஸ் பண்றது, விட்டுக்கொடுத்துப் போகும் தத்துவத்தை பத்தி சொல்லுவது, யாருக்குமே புரியாத எதிர்காலத்தை பற்றி திடீர்னு அக்கரைபடறது, ஆண்களோட மனவியல், உளவியல் பத்தி வகுப்பெடுப்பது, கணவன எப்படி வசியப் படுத்திக்கணும்னு காலம்கடந்த டிப்ஸ் கொடுப்பது, இதெல்லாத்துக்கும் மேலாக தன் நேரத்தை இந்த விதமா ஆலோசனை சொல்ல பயன்படுத்தின ஒரே காரணத்தால அந்தப் பெண் கன்வீன்ஸ் ஆகியே தீரனும்னு எதிர்பார்ப்பது, அது நடக்காமல், அந்தப் பெண் வேறொரு முடிவெடுத்தா அவளை திமிர் பிடிச்சவன்னு சொல்றது, அவ வேறொரு மண வாழ்க்கைய தேர்ந்தெடுத்தா அது தோல்வியடஞ்சிடுதான்னு ஆவலோட கண்காணிக்கறது, இதெல்லாம்தான் கற்புன்கர கான்செப்டோட எரிச்சல் தரும் விளைவுகள்.

    இதெல்லாம் மாறிக்கிட்டே வரும்னு நம்பறேன்

    ReplyDelete
  19. நான் இங்கே திருமணத்திற்கு பிறகு வரும் விஷயங்களைப் பற்றி மட்டுமே சொல்லக் காரணம், கற்புங்கற கான்செப்ட் திருமணத்திற்கோ இல்லை காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமோ சொல்லப்பட வேண்டிய கான்செப்டுங்கறது என் கருத்து. திருமணத்திற்கு முன் நாம் தேவைல்லாத நோய்களை தவிர்ப்பதற்கும், ஆலோசனை தேவை எனும்போது தயக்கமின்றி சந்தேகங்களை போக்குவதற்கும், உடல் சார்ந்த தவறான புரிதல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், வாழ்க்கையில் ஒரு ஸ்திரமான நிலையை அல்லது அதற்கு உதவிப் புரியும் கல்வியை அடைவதற்கும், இந்த ஆர்வம் எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக் கூடாது, இப்படியாக சிலக் காரணங்களினால் நாம் வகுத்து வைத்திருப்பதற்கு, அந்த நெறிக்கு, கற்பு என்பதை விட உடலியல் ஒழுக்கம் என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. இதில் கூறப்பட்டவைகள் எல்லாமே என் சொந்தக் கருத்துக்கள் மட்டும்தான்.

    ReplyDelete
  20. //தெரியக்கூடாத விஷயங்கள் தெரிவது கொடுமை. அதுவும் மெச்சூரிட்டி இல்லாத வயதில் தெரிவது கொடுமையிலும் கொடுமை//
    இதனை நான் முழுமையாக வழிமொழிகிறேன்

    ReplyDelete
  21. அப்பா ஒரு தவறு செய்தார். அதை தாங்கிக்கொள்ள முடியாத அம்மா இன்னொரு பெரும் தவறை செய்து இருக்கிறார். அந்த வயதில் தன் தோழி, மற்றும் அம்மா போன்றவர்களிடம் இதை பேசி ஆறுதல் அடைந்து இருக்க வேண்டும் அம்மா. உன்னிடம் சொல்லி ஆறுதல் தேடி இருக்கிறார்கள். அவர்களாலேயே தாங்க முடியாத ஒன்றை உன்னால் தாங்கமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டு இருக்கிறார்கள். அந்த மனநிலையில் சரி தப்பு எது என்றெல்லாம அவர்களால் தெளிவாக அனலைஸ் செய்ய இயலாது என்பது உண்மை.

    ஒரு சில சம்யங்களில் ஆக்ஸிடெண்ட் நடக்கும்போது, அதை சமாளிக்க நாம் எடுக்கும் முயற்சி அதைவிட மோசமான விளைவுகளை உண்டுபண்ணும். ஏனென்றால் நம்மால் தெளிவாக யோசிக்க முடியாது. :(

    I only wish, your mom learnt it through someone else instead of seeing with her own eyes!

    I wish she told you all about when you reached 20 plus or something!

    Well, நாம் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தாம். தவறு செய்வது இயற்கை. ரப் சொன்னதுபோல் ஒரு சிலர் (நம் அன்புக்குரிய,மதிப்பிற்குரிய, பாசத்திற்குரியவர்கள்) செய்யும் தவறை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம், மனதைரியம் நமக்கு எப்போவுமே வருவதில்லை. இங்கே நாமும் இதுபோல் சில உண்மைகளை ஜீரணிக்க முடியாத வீக்னெஸ் உள்ள சாதாரண மனிதர் என்பதை உணர்கிறோம்! காலம்தான் இதற்கு மருந்து. இதை மனதிற்குள் புதைக்காமல் மற்ரவர்களிடம் ஷேர் பண்ணுவதும் ஒருவகை மருந்துதான்!

    ReplyDelete
  22. //நிஜமான அக்கறையோட செஞ்சவன் வெளிய சொல்ல மாட்டாங்கறது ஒருப் புறம் இருந்தாலும், தவறிப் போய் தெரிஞ்சிடுச்சின்னா, இந்த சமூகமும் குடும்ப அமைப்பும் அவங்கள படுத்துற பாடு எக்கச்சக்கம். ஆனா இதையே பெண் செஞ்சா அதை recognise பண்றதுகூட கிடையாது. எரிச்சலான இன்னொரு விஷயம் என்னன்னா பெரும்பான்மையா ஒருத்தர ஒருத்தர் மன்னிச்சி வாழ்ந்தாலும் சமூகம் ஆண் செய்யும் தவறை உரிமைன்னும், பெண் செய்யும் தவறை தவறுன்னும் அடையாளப்படுத்துது. //

    நீங்க ரொம்ப முக்கியமான விஷயத்தைப்பற்றி இங்கே பேசி இருக்கீங்க, அதாவது கற்பு என்ற அளவுகோல் பெண்களை அளக்கும் போது ஒரு மாதிரியாகவும், ஆண்களை வேறு மாதிரியாகவும் அளக்கிறது.

    ஒரு உதாரணமாக வருணின் அபிமான நடிகை குஷ்புவையே எடுத்துக்கொள்ளலாம்.அவர் ஒரு சர்ச்சைக்குறிய கருத்து சொன்ன போது இணையதளங்களில் அவருடைய கணவரைப்பற்றி ரொம்ப கேவலமாக எழுதினார்கள். "பாவம் சுந்தர்.சி" போன்ற பரிதாபத்தில் ஆரம்பித்து, "மானமில்லாதவன்" போன்ற வசவுகள் வரைக்கும் சுந்தருக்கு விழுந்தது. சுந்தர் செய்த தவறு என்ன? ஒரு நடிகையை திருமணம் செய்ததா?

    எத்தனையோ பெரிய மனிதர்கள் ஊருக்கே தெரிய இரண்டு மனைவிகள் வைத்துக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மனைவிகளைப்பார்த்து நாம் எப்போதாவது பரிதாபப்படுவோமா? அல்லது அப்படிப்பட்ட கணவர்களோடு அட்ஜஸ்ட் பண்ணி வாழ்வதற்காக அவரை திட்டுவோமா?

    ReplyDelete
  23. //சிலப் பேர் கடவுள் நம்பிக்கைய அளவோட ஹேண்டில் பண்றாங்களோ, அதேப் போல கற்பு கான்செப்ட அளவோட ஹேண்டில் பண்றவங்களும் இருக்காங்க. //

    நீங்க சொல்வது போல கற்பு என்பது கடவுள் நம்பிக்கைப்போல தனிநபர் நம்பிக்கை தான். இருந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் யாரும் நம்மை தவறாக நினைப்பதில்லை. ஆனால் கற்பில் நம்பிக்கை இல்லை என்று தைரியமாக யாராவது சொல்லுவார்களா? மாட்டார்கள், அப்படி சொல்லவும் முடியாது.

    ReplyDelete
  24. //ஆனா கணவன் தவறு செய்த காரணத்தால் similar முடிவ மனைவி எடுத்தா, அவளுக்கு அட்வைஸ் பண்றது, விட்டுக்கொடுத்துப் போகும் தத்துவத்தை பத்தி சொல்லுவது, யாருக்குமே புரியாத எதிர்காலத்தை பற்றி திடீர்னு அக்கரைபடறது, ஆண்களோட மனவியல், உளவியல் பத்தி வகுப்பெடுப்பது, கணவன எப்படி வசியப் படுத்திக்கணும்னு காலம்கடந்த டிப்ஸ் கொடுப்பது, இதெல்லாத்துக்கும் மேலாக தன் நேரத்தை இந்த விதமா ஆலோசனை சொல்ல பயன்படுத்தின ஒரே காரணத்தால அந்தப் பெண் கன்வீன்ஸ் ஆகியே தீரனும்னு எதிர்பார்ப்பது, அது நடக்காமல், அந்தப் பெண் வேறொரு முடிவெடுத்தா அவளை திமிர் பிடிச்சவன்னு சொல்றது, அவ வேறொரு மண வாழ்க்கைய தேர்ந்தெடுத்தா அது தோல்வியடஞ்சிடுதான்னு ஆவலோட கண்காணிக்கறது, இதெல்லாம்தான் கற்புன்கர கான்செப்டோட எரிச்சல் தரும் விளைவுகள்.
    //

    பெண்களுடைய மனநிலையை அருமையாக பிரதிபலித்திருக்கிறீர்கள்.இதை தனி பதிவாக உங்கள் ப்ளாகில் கூட போடலாம்(கருத்து நன்றாக இருப்பதால் சொன்னேன், காண்ட்ரோவெர்ஷியல் விஷயங்களை எழுத விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்).

    என்னுடைய அம்மாவின் சகோதரிகளும், அம்மாவின் அம்மாவும் கூட அப்பாவை அட்ஜஸ்ட் பண்ணி போகும்படி தான் அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணினார்கள். இதே தவறு ஆள் மாற்றி நடந்திருந்தால், அம்மாவுடைய உறவினர்கள் கூட அவருக்கு சப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்பது கசப்பான உண்மை.

    ReplyDelete
  25. //அப்பா ஒரு தவறு செய்தார். அதை தாங்கிக்கொள்ள முடியாத அம்மா இன்னொரு பெரும் தவறை செய்து இருக்கிறார். அந்த வயதில் தன் தோழி, மற்றும் அம்மா போன்றவர்களிடம் இதை பேசி ஆறுதல் அடைந்து இருக்க வேண்டும் அம்மா. உன்னிடம் சொல்லி ஆறுதல் தேடி இருக்கிறார்கள். அவர்களாலேயே தாங்க முடியாத ஒன்றை உன்னால் தாங்கமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டு இருக்கிறார்கள். அந்த மனநிலையில் சரி தப்பு எது என்றெல்லாம அவர்களால் தெளிவாக அனலைஸ் செய்ய இயலாது என்பது உண்மை.
    //

    இதை அடுத்த பதிவில் குறிப்பிடலாம் என்று நினைத்தேன் வருண்.

    இதில் அம்மாவும் நிறைய தவறு செய்திருக்கிறார்கள். இந்த தொடரில் ஆண்கள்- பெண்கள் இரு தரப்புக்கள் செய்யும் தவறுகளையும் எழுதப்போகிறேன்.

    இது வெறும் பெண்ணியத்தொடர் இல்லை(முதலில் பார்ப்பதற்கு உங்களுக்கு அப்படி தோன்றினாலும்)

    ReplyDelete
  26. என்னை அதிர வைத்த முதல் பதிவு இது கயல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    ReplyDelete
  27. //என்னை அதிர வைத்த முதல் பதிவு இது கயல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    //

    வாங்க வெண்பூ. உங்கள் கருத்துக்கு நன்றி.

    மற்றவர்களும் இதே எக்ஸ்ப்ரெஷனை தான் கருத்தாக தெரிவித்து இருக்கிறார்கள். நான் முன்பே சொன்னது மாதிரி, இதே சம்பவம் பலரது வாழ்க்கையில் வேறு வேறு வெர்ஷன்களில் நடப்பது தான். புதுசு இல்லை.

    ReplyDelete
  28. //இதை தனி பதிவாக உங்கள் ப்ளாகில் கூட போடலாம்(கருத்து நன்றாக இருப்பதால் சொன்னேன், காண்ட்ரோவெர்ஷியல் விஷயங்களை எழுத விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்)//
    இதை நான் எழுதாதற்கு முதல் காரணம் நிஜமாகவே இவ்வளவு நாள் இதனைப் பற்றி எழுதலாம்னு தோணல, இப்போ நீங்க சொல்றபடி செய்யலாம் ஆனா உங்களோட இந்த கான்செப்ட் சம்பந்தமான பதிவுகள் முழுமையா முடிஞ்சப்புறம், செய்யலாம்னு இருக்கேன். ஏன்னா நீங்க இதை ரொம்பத் தெளிவா எடுத்துக்கிட்டு போறீங்க, அதனால் உங்க கருத்துக்களையும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன். இன்னொரு முக்கிய காரணம் எனக்கு உங்கள மாதிரி short and sweet ஆக எழுத வர மாட்டேங்குது. இதைப் போன்ற பிரச்சினைகள எடுத்துக்கொண்டால் ரொம்ப பெரிய பதிவா போட்டுவிடுகிறேன். படிப்பதற்கு நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை. மற்றபடி எனக்கு எல்லா விதமான விஷயங்களையும் எனக்குத் தெரிந்தளவில் தொட்டுச் சென்று, விவாதம் நடத்தி மேலும் தெளிவுப் பெற ரொம்ப இஷ்டம்:):):)

    ReplyDelete
  29. //உங்களோட இந்த கான்செப்ட் சம்பந்தமான பதிவுகள் முழுமையா முடிஞ்சப்புறம், செய்யலாம்னு இருக்கேன். ஏன்னா நீங்க இதை ரொம்பத் தெளிவா எடுத்துக்கிட்டு போறீங்க, அதனால் உங்க கருத்துக்களையும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன். இன்னொரு முக்கிய காரணம் எனக்கு உங்கள மாதிரி short and sweet ஆக எழுத வர மாட்டேங்குது. இதைப் போன்ற பிரச்சினைகள எடுத்துக்கொண்டால் ரொம்ப பெரிய பதிவா போட்டுவிடுகிறேன். படிப்பதற்கு நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை. மற்றபடி எனக்கு எல்லா விதமான விஷயங்களையும் எனக்குத் தெரிந்தளவில் தொட்டுச் சென்று, விவாதம் நடத்தி மேலும் தெளிவுப் பெற ரொம்ப இஷ்டம்:):):)
    //

    நான் முடிக்கும் வரையா? காமப்புரட்சி நடந்தது மாதிரி கற்பு புரட்சி வேண்டாமென்று பார்க்கறீர்களா? :) :)

    சரி, நிச்சயமாக எழுதுங்கள். உங்களிடம் இதைப்பற்றி எழுத நிறைய கருத்துக்கள் இருக்கிறது. உதாரணம், "கற்பு என்பது தனிநபர் நம்பிக்கை" போன்ற உங்கள் கருத்து.

    நான் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாவா? நன்றி ராப். நான் கொஞ்சம் சீரியசா எழுதுபவள் நீங்க அதே விஷயத்தையே லைட்டா எழுதுவீங்க.

    ReplyDelete
  30. வருகைக்கு நன்றி விக்னேஷ்வரன்.

    வருத்தப்படாதீங்க, நான் கவலையா எல்லாம் இல்லை. காலையில் இருந்து நிறைய பதிவர்களின் வலைப்பூவில் ப்ளேடு போட்டுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  31. ஏங்க உங்க பின்னூட்டம் ஒன்னு ஒன்னும் உண்மைத் தமிழன் பதிவு மாதிரி பெருசா இருக்கு... முக்கியமான விளக்கமோ இல்லை விசயமா இருந்தா பதிவா போடுங்க படிக்க சுலபமா இருக்கும்...

    ReplyDelete
  32. ஓகே விக்னேஷ்வரன். இது கொஞ்சம் இண்டன்ஸான சப்ஜெக்ட் என்பதால் இப்படி இருக்கு.

    ReplyDelete
  33. //நீங்க சொல்வது போல கற்பு என்பது கடவுள் நம்பிக்கைப்போல தனிநபர் நம்பிக்கை தான். இருந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் யாரும் நம்மை தவறாக நினைப்பதில்லை. ஆனால் கற்பில் நம்பிக்கை இல்லை என்று தைரியமாக யாராவது சொல்லுவார்களா? மாட்டார்கள், அப்படி சொல்லவும் முடியாது//
    நான் ஏன் இங்கு கடவுள் நம்பிக்கையோடு இதை ஒப்பிட்டேன்னா, ஒரு நூற்றாண்டுக்கு அல்லது இரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை அதையும் ஒழுக்க நெறிகள்ள ஒன்றாகத்தான் பாவிச்சாங்க. ஆனா இன்னைக்கு அது தனி மனித சுதந்திரம்ங்கரத்துக்கு கீழ வந்துவிட்டது இல்லைங்களா. அதேப் போல இதுவும் அந்த திருமண பந்தத்தில் சம்பந்தப் பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம்னு ஒரு நாள் சமூகம் தானா ஒதுங்க ஆரம்பிக்கும். ஆனா கடவுள் நம்பிக்கை கான்செப்டும் அதன் விளைவுகளும் இரு பாலினரையும் பாதிச்சதால, கொஞ்சம் விரைவா இது சாத்தியப்பட்டுச்சி. கற்பு கான்செப்ட்ல ஒரு பாலினர் ஜாஸ்தி பாதிக்கப்பட்டதால் மாற்றங்கள் கொஞ்சம் மந்தமாக இருக்குன்னு நினைக்கிறேன். ஐரோப்பாவில உள்ள பெண்கள் நம் நாட்டு பெண்கள் சந்திச்ச அத்துனை பிரச்சினைகளையும் சந்திச்சாங்க. ஆனா நிலைமை ஆரோக்கியமா மாறிக்கிட்டுருக்கு. சமீபத்துல ஒரு வினோத வழக்கின் மூலமாதான், ஒரு பெண் திருமணத்தின்போது virgin ஆக இல்லாவிட்டால் அவளை கணவன் தாராளமாக விவாகரத்து செய்யலாம்னு ஒரு சட்டம் இருப்பது பிரெஞ்சு மக்களுக்கு தெரிய வந்தது. இதைப் பல ஆண்டுகாலமா யாரும் பயன்படுத்தாததால் இதை பற்றி இந்த வழக்கு வருவதற்கு முன் பெரும்பான்மையாக யாருக்குமே தெரியவில்லை. இந்த வகை நல்ல மாற்றங்கள் நம் நாட்டிலும் விரைவில் சாத்தியப்படும். இங்கு நான் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை, ஆனால் இதனை(உடலியல் ஒழுக்கத்தை) சட்டம் கொண்டோ அல்லது ஒரு பாலினரை மட்டும் கட்டுப்படுத்தியோ மாற்றம் ஏற்படுத்த இயலாது. மனதளவில் இரு பாலினரையும் தெளிவாக்கிட வேண்டும். இங்கு கூறியுள்ளவை யாவும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டும்தான்

    ReplyDelete
  34. மீண்டும் ரொம்ப நல்ல பாயிண்ட்ஸ் எழுதி இருக்கீங்க ராப். இந்த விஷயத்தில் உங்க நாலெட்ஜ் ரொம்ப டீப்பா இருக்கு.

    ReplyDelete
  35. உண்மையச் சொல்லணும்னா உங்க அம்மாவைவிட உங்களத்தான் இந்த நிகழ்வு ஆளமாய் பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன்..ஏன்னா அப்ப உங்க வயசு அப்படி.


    நீங்க அதவிட்டு வெளில வந்து தெளிவா விவாதிப்பது மற்றவர்களுக்கு நிச்சயம் ஒரு ஆறுதலைத் தரும். :-))

    நீங்க சொன்ன மாதிரி இது எல்லா இடத்துலயும் நடக்கிறதுதான்..
    பல பேர் இத மறச்சு வெச்சடறதுனால வெளில தெரியரதுல்ல..


    Raap மிகத்தெளிவா பேசுறாங்க.. அசந்துட்டனுங்க..

    ReplyDelete
  36. வழிப்போக்கன்,

    சிலபேருடைய குடும்பத்தில் பலதார மணம் போன்றவற்றை கூட குழந்தைகள் சகித்துக்கொள்ளுகிறார்கள். என்ன, என்னைப்போல வெளியே சொல்லிக்கொள்வதில்லை. நான் இதை மறைக்க வேண்டிய விஷயமாக கருதவில்லை.

    ஆமாம், ராப் ரொம்ப தெளிவாக கருத்து எழுதி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  37. //நான் இதை மறைக்க வேண்டிய விஷயமாக கருதவில்லை.
    //

    நீங்க ஒரு விசயத்துல ரொம்ப கேர்புல்லா இருக்கனுங்க, இதப்படிக்கறவங்க யாரும் உங்க பேரன்ட்ஸ் கிட்ட பழகறவங்களா இருந்தா தேவையில்லாத குழப்பம் வருமோனு தோணுது..

    பேரன்ட்ஸ் இத எப்படி எடுத்துகுவாங்கனு சொல்ல முடியாது.
    உங்க அம்மாவே இந்த மாதிரி பப்ளிக்கா விவாதிக்கிறதுல சங்கட படலாம்...

    நீங்க இதெல்லாம் யோசிச்சுயிருப்பீங்கனு நினைக்கிறேன்..

    ReplyDelete
  38. பேரண்ட்ஸ் வரைக்கும் போக சான்ஸ் இல்லை வழிப்போக்கன்(என்னை சும்மா இப்படி பயமுறுத்தக்கூடாது)

    ReplyDelete
  39. அட!!! 360 டிகிரல யோசிச்சு பாத்ததுல இந்த டிகிரி மிஸ் ஆக கூடாதுனு சொன்னனுங்க...

    :-)).

    ReplyDelete
  40. //அட!!! 360 டிகிரல யோசிச்சு பாத்ததுல இந்த டிகிரி மிஸ் ஆக கூடாதுனு சொன்னனுங்க...

    :-)).//

    பார்த்து, ரொம்ப சுத்தினா மயக்கம் வரப்போகுது :) :)

    ReplyDelete
  41. //பார்த்து, ரொம்ப சுத்தினா மயக்கம் வரப்போகுது :) :)//

    ஆமா..கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரிதான் இருக்கு..நாளைக்கு பாக்கலாம்..:-))

    இந்த மாதிரி விசயங்கள நான் இதுவரை யோசிச்சு பாத்ததுகூட கிடையாது. அந்த வகையில பதிவுலகம் ஒரு நல்ல சேனலை ஏற்படுத்தி கொடுத்திருக்னு சொல்லுவேன். More than post it is interaction & sharing which gives more understanding..

    நன்றிங்க.....

    ReplyDelete
  42. முதலில் கதை போலுள்ளதே.

    எழுத்து நடையும் நல்லாயிருக்கே !

    என்று முழு பின்னுட்டத்தை படித்துப் பார்த்தால்
    "மனதை ஏதோ செய்வது போல் ஒரு உணர்வு".
    படிப்பதற்கே இப்படி என்றால் அனுபவித்தரின் மனநிலை...........

    தி.விஜய்

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  43. வழிப்போக்கன்,

    சிலதை எல்லாம் நம்மால் வெளியே சொல்ல முடியாது. ப்ளாகுகள் மூலம் எழுதுவது நல்ல தீர்வு என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  44. வாங்க விஜய். கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. ****இதை அடுத்த பதிவில் குறிப்பிடலாம் என்று நினைத்தேன் வருண்.****

    Sorry Kayal if I messed up your sequence/flow! Though we have talked about it, I just wanted share my opinion/thoughts in public as a third person! :-)

    ReplyDelete
  47. //Sorry Kayal if I messed up your sequence/flow! Though we have talked about it, I just wanted share my opinion/thoughts in public as a third person! :-)//

    No probs. :)

    No, you didn't mess up the flow of it.

    ReplyDelete
  48. :(((

    Pathiva padichu mudicha konja neram ennaala ethulaiyume concentrate panna mudiyala...

    ReplyDelete
  49. Ithellaam vaasikkumpothu... kashtamnaa ennanne theriyaama valanthuttoamnu thonuthu...

    ReplyDelete
  50. //Pathiva padichu mudicha konja neram ennaala ethulaiyume concentrate panna mudiyala...//

    Sorry ஜி :(

    ReplyDelete
  51. ஜி,

    உங்களுக்கும் வேறு மாதிரி ப்ராப்ளம்ஸ் இருந்திருக்கும். பிரச்சினை இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது

    ReplyDelete
  52. //"Skeletons inside the closet" இருக்கும் இல்லையா?//

    ஆமாம்ப்பா.

    எங்களைக் கவனிக்காம எல்லாப் பொறுப்பையும் அம்மா தலையில் சுமத்திட்டு ஓடுன அப்பாவை வேற என்னன்னு சொல்றது?

    கடைசியில் அவர் திரும்ப வந்த்து என்னால்தான்.

    ஆனா..... அவர் முடிவு?

    அற்புதம். இதை நினைக்கும்போதுதான் கடவுள்ன்னு ஒன்னு இல்லையோன்னு மனசு சபிக்கும்

    ReplyDelete
  53. துளசி மேடம்

    வருத்தமாக இருகிறது. உங்கள் வாழ்க்கை நிச்சயம் என்னை விட பல மடங்கு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்திருக்கும். உங்கள் அம்மா மாதிரி சில பெண்மணிகள் சத்தமில்லாமல் நடத்தும் புரட்சி வெளியே தெரிவதில்லை. உண்மையிலேயே தைரியமான பெண்மணி. பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள் :)

    ReplyDelete
  54. கயல்..
    முதலில் இந்தப் பதிவின் ஷாக் வால்யூ என்னை அதிர வைத்தது.
    என்னதான் தவறியிருப்பினும்,நம் நெருங்கிய சொந்தங்கள் என்னும் போது விதயங்களைச் சொல்ல சிறிது தயக்கம் இருக்கும்,அதனை மீறியும் உங்களது வலியை உணர முடிகிறது.

    பல குடும்பங்களில் இந்த வித பிரச்னைகள் வேறுவேறு அளவில் இருக்கும் என்ற உண்மையும் ஏற்க வேண்டியதே.

    பெரும்பாலும் இந்த வித சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மனமுதிர்ச்சியின்மையினால் விளைந்த செயல்களாகவே இருக்கும்.

    உங்களது தாயின் மனநிலை அணுப்பிளவின் ஒத்தநிலையில் இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.ஆனால் ஒரு சாதாரண பெண்ணால்(இயல்பில் பெண்கள் நுண்ணியல்பு மிக்கவர்கள்) இதன் கூறுகளை வெகு முன்னர் கண்டறிந்து இந்த அதிர்ச்சி அளவுக்குப் போகாது தடுத்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.

    காமம் மற்றும் தாம்பத்யம் இரண்டிலும் நுழையும் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் பல உருவகங்களுடனேயே இந்தியச் சூழலில் நுழைகிறார்கள் என்பதும் என் துணிபு.

    காமத்திலும்,தாம்பத்யத்திலும் வெளிப்படையான பார்வைகளும் அவதானிப்புகளும் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் இந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் அதிகம்..

    இன்னொரு பார்வையான் கற்பு நிலை என்பது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் ஆணாதிக்கப் பார்வையுடனேயே அணுகப்பட்டிருக்கிறது என்பதை ஒரு ஆண் என்ற அளவில் வெட்கத்துடனேயே ஒப்புக்கொள்கிறேன்.

    இப்போதிய மாறுபட்ட காலத்தில் யேசுநாதர் காலத்திய கற்பு வரையறைகள்(கற்பு நினைவின் பாற்பட்டது) சாத்தியமில்லை எனினும் நான் இதில் பாரதியின் கட்சி.

    அழகாக அறிவித்தான் பாரதி,'கற்பு நிலையென்றொன்று கொண்டுவந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என !

    நீ பரிசுத்தமான பெண்ணை எதிர்பார்த்தால்,நீ அவளுக்கு பரிசுத்தமான ஆண்மகனாக இரு என்பதே என் நிலை.இதுவே என் மனைவியிடமும் நானளித்த உறுதிமொழி.

    இதில் மாறுபாடுகள் நிகழும் போது(இன்னும்) பெண்கள் ரிசீவிங் எண்ட்'லேயே இருக்கிறார்கள் எனபதற்கு உங்கள் பதிவே சாட்சி.

    இந்த சம்பவத்தில் பால் மாறாட்டம் நடந்திருந்தால் எதிர்விணைகள் எப்படி மாறி இருக்கும் என்பதே என்முதல் எண்ணமாக இருந்தது,பதிவைப் படித்து முடித்தவுடன்.எனினும் அதை சுட்டுவது உங்களைக் காயப்படுத்தலாம் என் எண்ணிக் கொண்டே கமெண்டுகளைப் படிக்கையில் நீங்களே அதை சுட்டியிருக்கிறீர்கள்;ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, hats off என்பதைத் தவிர.

    மற்றபடி உங்கள் தாயின் ரியாக்‌ஷன் அவரின் மீதான் மதிப்பை கூட்டியது என்றே சொல்வேன்;தன்னிலையில் தெளிவான ஒரு பெண் இவ்விதமாகவே ரியாக்ட் செய்வாள் என்பது இயற்கையே.

    அப்பர் சுவாமிகளின் திருமுறைப் பாடல்களிலே,திருப்பாணாள்வார் கதையில் இதைப் போன்ற ஒரு கட்டத்ததில் பாணரின் மனைவி அவரை ‘தீண்டுவீராயில் திருநீலகண்டம்' எனச் சொல்லி அவரைத் ‘தள்ளிவைத்த' கதைதான் நினைவுக்கு வருகிறது.

    வளர்ந்த குழந்தைகள் இருக்கும் நிலையில்,இந்தியச் சூழலில் உங்கள் தாய் எடுத்த முடிவு சுயத்தை நிலைநாட்டியதுடன்,நடைமுறைச் சிக்கல்களையும் தவிர்த்த ஒன்று என்றுதான் சொல்லமுடியும்.

    உங்கள் தாய் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஜால்லியடிகளில் எனக்கு உடன்பாடு இல்லை;அந்த செயல் எவ்வளவு தூரம் நிதர்சனமோ அவ்வளவு தேவை,அதை உங்கள் தாய் அறிந்ததும்.பார்க்காவிட்டால்,தெரியாவிட்டால்,மாட்டிக்கொள்ளாவிட்டால் எந்த தவறும் தவறல்ல என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    I can just say Your father deserves his getting caught !

    இந்த நிகழ்ச்சி அப்படியே பால் வேறுபட்ட நடந்த சூழல்களில் கூட,குழந்தைகளுக்காக இந்த வகையிலேயே(உங்கள் அம்மாவின் முடிவு போல) ரியாக்ட் செய்த ஆண்களும் ஆங்காங்கே கிடைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

    மற்றபடி உங்கள் துணிவுக்கும்,அலசல் மனதுக்கும் மறுபடி ஒரு பாராட்டு.

    ReplyDelete
  55. நன்றி அறிவன் சார்

    //ஆனால் ஒரு சாதாரண பெண்ணால்(இயல்பில் பெண்கள் நுண்ணியல்பு மிக்கவர்கள்) இதன் கூறுகளை வெகு முன்னர் கண்டறிந்து இந்த அதிர்ச்சி அளவுக்குப் போகாது தடுத்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.//

    அம்மா வெளியே வேலைக்கு போவதால் டென்ஷன் அதிகம். வீட்டு வேலை, குழந்தைகள், வேலை எல்லாம் சேர்ந்த டென்ஷனில் சிலவற்றை கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

    ReplyDelete
  56. //நீ பரிசுத்தமான பெண்ணை எதிர்பார்த்தால்,நீ அவளுக்கு பரிசுத்தமான ஆண்மகனாக இரு என்பதே என் நிலை.இதுவே என் மனைவியிடமும் நானளித்த உறுதிமொழி./

    உங்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

    ஆனால் பெரும்பாலும் கற்பு என்பது பெண்களுக்கென்றே ஒதுக்கப்படும் ஒழுக்க நெறியாகிறது, நடைமுறையில்.

    ReplyDelete
  57. //மற்றபடி உங்கள் தாயின் ரியாக்‌ஷன் அவரின் மீதான் மதிப்பை கூட்டியது என்றே சொல்வேன்;தன்னிலையில் தெளிவான ஒரு பெண் இவ்விதமாகவே ரியாக்ட் செய்வாள் என்பது இயற்கையே.//

    இயற்கை சரி தான், ஆனால் ரியாக்ஷன் தவறு. பெண்ணாக அவருடைய ரியாக்ஷன் சரியாக இருக்கலாம், ஆனால் தாயாக அவருடைய ரியாக்ஷன் நிச்சயம் தவறு.

    ReplyDelete
  58. //hats off என்பதைத் தவிர.//

    நன்றி :) இதை பலவிதமாக எல்லாம் கோணத்திலும் யோசித்திருக்கிறேன். அதை எல்லாம் தான் பதிவுகளாக எழுதுகிறேன். கமெண்ட் அனைத்தையும் பொறுமையாக படித்ததுக்கு நன்றி. :)

    ReplyDelete
  59. //hats off என்பதைத் தவிர.//

    நன்றி :) இதை பலவிதமாக எல்லாம் கோணத்திலும் யோசித்திருக்கிறேன். அதை எல்லாம் தான் பதிவுகளாக எழுதுகிறேன். கமெண்ட் அனைத்தையும் பொறுமையாக படித்ததுக்கு நன்றி. :)

    ReplyDelete
  60. //உங்கள் தாய் பார்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஜால்லியடிகளில் எனக்கு உடன்பாடு இல்லை;அந்த செயல் எவ்வளவு தூரம் நிதர்சனமோ அவ்வளவு தேவை,அதை உங்கள் தாய் அறிந்ததும்.பார்க்காவிட்டால்,தெரியாவிட்டால்,மாட்டிக்கொள்ளாவிட்டால் எந்த தவறும் தவறல்ல என்பது எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    I can just say Your father deserves his getting caught !
    //

    இது தெரிந்து நாங்கள் பட்ட துன்பத்துக்கு தெரியாமல் இருப்பதே பெட்டர் என்று நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  61. //ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், பெண் பிள்ளைகள் தான் அதிகம் உள்வாங்குகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். //

    உண்மைதான்.

    ReplyDelete
  62. உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை கயல்விழி!!!!! குறிப்பாக இந்த பதிவு.....
    அப்பப்பா மனம் கனத்துவிட்டது :(((((...
    நீங்கள் அந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்துகொண்டிருகிறீர்கள் என புரிகிறது...கண்டிப்பாக என்னாலும் முடியாதுதான்...ஆனால் உங்கள் சகோதரன் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொண்டார் இப்போது என்ன நினைக்கிறார் என்பது பற்றி நீங்கள் சொல்லவில்லையே....ஏனென்றால்.....
    //அண்ணா இருக்கிறானா என்று எட்டிப்பார்த்தேன். "எனக்கும் வீட்டில் நடப்பதற்கும் ஏதும் சம்மந்தமில்லை" என்பது மாதிரி சுவாரஸ்யமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். அண்ணா எப்போதும் இப்படித்தான், வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அதில் இன்வால்வ் ஆகவே மாட்டான். ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், பெண் பிள்ளைகள் தான் அதிகம் உள்வாங்குகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் //
    இதற்காகத்தான்....
    எப்போதும் மன உறுதியோடு இருங்கள்......தொடர்ந்து எழுதுங்கள்....

    -கமல்காந்த்

    ReplyDelete
  63. //உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை கயல்விழி!!!!! குறிப்பாக இந்த பதிவு.....
    அப்பப்பா மனம் கனத்துவிட்டது :(((((...
    நீங்கள் அந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்துகொண்டிருகிறீர்கள் என புரிகிறது...கண்டிப்பாக என்னாலும் முடியாதுதான்...ஆனால் உங்கள் சகோதரன் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொண்டார் இப்போது என்ன நினைக்கிறார் என்பது பற்றி நீங்கள் சொல்லவில்லையே....ஏனென்றால்.....
    //

    உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி கமல்காந்த். அம்மாவைப்பற்றி முடித்துவிட்டு பிறகு அண்ணா மற்றும் என்னைப்பற்றி எல்லாம் எழுதலாம் என்று நினைத்தேன். :)

    ReplyDelete
  64. //கூடவே என் அம்மாவின் மெல்லிய விசும்பல்!.

    quite intense. some times i hope our ppl can be more western. not being easy on promiscuity, but in dealing with it. I feel we esp, 80s and 90's didnt have enough choice for people to be righteous. this in the context of not having choice on picking partner, not having freedom of expression, esp on taboo subjects - overall messy situation. even in dealing with betrayals, its true the victims take too much on themselves. in my view, may be they keep it as focal point of al their miseries in life and get into self-pity and worsen their own life. being western would mean seeking help from professionals, not those who flame the fire & self-pity; Thought of writing more. got to meet attend some work. may be catch up later. ..Sundar.

    ReplyDelete
  65. வருகைக்கு மிக்க நன்றி சுந்தர்.

    இந்தியாவைப்போன்ற செக்ஷுவலி ரிப்ரெஸ்ட் சமுதாயத்தில் எல்லாமே கடினம் கவுன்சலிங், தெரப்பி செய்துக்கொள்ள கூட தயங்குவார்கள். இது நடந்தது 90களில் ஆனால் இதே 2008டில் நடந்திருந்தாலும் அம்மாவைப்போன்ற பெண்களுக்கு அழுவதைத்தவிர வேறு வழி தெரியாது.

    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தமிழில் எழுத பல வழிகள் இருக்கிறது, ஈகலப்பை டவுன்லோட் செய்துக்கொள்வது எனக்கு வசதியாக இருக்கிறது.

    ReplyDelete
  66. //இதே 2008டில் நடந்திருந்தாலும் அம்மாவைப்போன்ற பெண்களுக்கு அழுவதைத்தவிர வேறு வழி தெரியாது//
    உண்மை தான். பெரும்பாலும் முற்போக்கு சிந்தனை பாதிப்புக்கு பின் தான் விளைகிறது. என்ன பல சமயங்களில் அது ஒரு தலைமுறை தள்ளி போய் விடுகிறது. சரியான கல்வியும்(பள்ளி கல்வி அல்ல), மாறுபட்ட கண்ணோட்டங்களின் பரிச்சயமும், நேரடி பாதிப்பின்றி முற்போக்கு சிந்தனை ஏற்பட முக்கிய காரணிகள் என்று நான் கருதுகிறேன். நல்ல வேலையாக நம் தலைமுறைக்கு இந்த வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் மேற்கத்திய சிந்தனைகளில் உள்ள நல்ல விஷயங்கள் பெரும்பாலும் நம் ஊடகங்களில் வழி வலியுறுத்தப்படும் மேற்கத்திய கண்ணோட்டங்களை பற்றிய judgemental views ஆல் மூழ்கடிக்க படுகின்றன என்பது என் கருத்து. எதையும் மீறி நமக்கு தேவையான மேற்கத்திய கருத்துக்களை நாம் அறிய இந்த வளையும், பதிவுகளும் பெரும்பங்கு வகிக்கும் என நம்புகிறேன். மற்றவை பிறகு. வயிறு பசிக்குது மதியஉணவுக்காக. ....சுந்தர். - பரிசில்காரன் வழிகாட்டில் கூகிள் வழி தமிழ் :)

    ReplyDelete
  67. ராப் எழுத்தின் நீளமான ஆழ்ந்த கருத்துக்கு இந்தப் பின்னூட்டம்.

    ReplyDelete