Wednesday, November 25, 2015

என்னுடைய 10 ஆசைகள்! அப்புறம் புத்தர் பற்றி

எனக்கு புத்தர் ரொம்பப் பிடித்தவர். என் சொந்தபந்தம், என் க்ளோஸ் ரிலேடிவ்ஸ் எல்லாருமே புத்தரை தன் மனைவியை விட்டுவிட்டு ஓடிப்போயிட்டாரு. இவர் எப்படி உயர்ந்தவர்? என்று விமர்சிப்பார்கள். புத்தரும் தன் மனைவி, தன் குழந்தைகள்தான் முக்கியம்னு வாழ்ந்திருந்தால் அவரை நமக்குத் தெரியாமலே போயிருக்கும். ஆசையைத் துறக்கணும்னு பெண்டாட்டி, பிள்ளைகளை கட்டிக்கொண்டு சொன்னால் எப்படியிருக்கும்? அதுபோல் எத்தனை  கோடி சாதாரண மக்கள் வாழ்ந்து செத்து இருக்காங்க? அவர்களை எல்லாம் நமக்கு ஏன் தெரியாமல் போய்விட்டதுனு யோசிக்கணும். மேலும் நம் ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத் தழுவலில் உள்ளதால் அவர்களுக்கும் புத்தர்னா பிடிக்காது. பலவிதமாக புத்தரை அவமானப் படுத்தியதைப் பார்க்கலாம். புத்தர் எப்படி வாழ்ந்தாரோ? அவர் அருகில் இருந்து வாழ்ந்தவர்கள் அவரைக் குறை சொல்லக் கூட வாய்ப்புண்டு. ஆனால் எனக்கு புத்தரின் சிந்தனைகள் மிகவும் உயர்வாகவே தோன்கிறது. ஆசை என்பது முடிவில்லாத ஒன்று. அது சாகிறவரை இருக்கும். வாழும்போதே அதைத் துறந்தால் அது மிகப்பெரிய சாதனையே என்பது என் உறுதியான எண்ணம்.

வருண்! ஆசைகளைச் சொல்லுடானு சொன்னால் "நிராசை"யை வளர்க்கணும் என்பதுதான் என் ஆசைனு சொல்லிக்கிட்டு இருக்க?

ஆரம்பத்திலேயே ஆசையைப் பத்திப் பேச தகுதியற்றவன் நான் னு விளங்குதா, மைதிலி?

* ஒன்று..பொதுவாக ஒரு சிலர்  தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் தன்னையும் மற்றவர்களுக்கு இணையாக  மதிப்பிட்டுக்கொண்டு மற்றவர்களுக்கும் நெறையா தெரியலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. இவர்களிடம் உறவாடும்போது என்னுடைய "அகந்தை"  அல்லது "ஈகோ" ரொம்பவே சிறிதாகிவிடும். " உங்களுக்குத் தெரிந்துகூட எனக்குத் தெரியாது" "நான் உங்களைவிட ஏழைதாங்க", "உங்களவுக்குக் கூட என் சிந்தனைகள் உயர்வானதல்லங்க", "யோசிச்சுப் பார்த்தால் உங்களைவிட நான் பலமடங்கு அயோக்கியன், " என்பதுபோல் பொய்போல இருக்கும் உண்மைலகளைச் சொல்லி இறங்கிப்போகும் பண்புள்ளவந்தான் நான். அதே சமயத்தில்   ஒரு சில பேர் இருக்கார்கள், தன் தகுதியை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணிக்கொண்டு எப்போவுமே  ஒரு படி மேலேயிருந்து பேசுறது. அப்படி தன்னை ஒருபடி உயர்த்தி வைத்துக்கொண்டு பேசும் ஒரு சிலரிடம் (அவர் எத்தனை பெரிய ஆளாக, வயதில் முதிர்ந்தவராக, மேதையாவே இருந்தாலும் ) என் "ஈகோ" மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுப்பதை நானே கவனிக்கிறேன். நியாயப்படிப் பார்த்தால் எல்லோரிடமும் ஒரேமாதிரித்தான் நான் நடந்து கொள்ள வேண்டும். ஏன் எல்லோரிடமும் ஏன் ஒரே மாதிரி நடக்கமுடியவில்லை? என்று யோசிப்பதுண்டு. எல்லோரிடமும் (அவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக நினைத்தாலும், தாழ்வாக நினைத்தாலும்) நான் ஒரேவாறு நடந்து கொள்வதுதானே நியாயம்? அப்படி நாம் நடந்துகொள்ள முயல் வேண்டும் என்றொரு நிறைவேறாத ஆசை உண்டு எனக்கு. அடேங்கப்பா! முதல் ஆசையேச் சொல்லவே  இந்த இழுவை இழுக்குது

* ரெண்டு.... மனிதந்தான் செயற்கை அறிவியலை கண்டு பிடித்து  இவ்வுலகை நாசமாக்கி விட்டான். நதிகளை, நாசமாக்கி, காற்றை நாசமாக்கி, உலகை நாளுக்கு நாள் நாசமாக்கி வருகின்றான்.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!

மனிதன் "எவால்வ்" ஆகவில்லையென்றால் இவ்வுலகம் எப்படி இருக்கும்? மொதல்ல கடவுளே இருக்க மாட்டார்! :)

சைனா இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் பெரிய நதிகள் பல வேதிப்பொருள்கள் கலக்காமல் சுத்தமாக இருக்கும். உயிரினங்கள்  சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கும். விலங்குகள், பறவைகள் எல்லாம் நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருக்கும். இவ்வுலகம் உருப்படணும்னா மனித இனம் கூண்டோட ஒழியணும்! மனித இனம் விரைவில அழியணும்னு எனக்கு ஒரு ஆசை. மனிதன் செத்துட்டா கடவுளும் செத்துத்தானே ஆகணும்? புரியுதா? கடவுளைக் கொல்ல வருண் சதி செய்றான் னு புரியுதா? :)

* மூனு ..யோசிச்சுப் பார்த்தால் ஒரு நாடுனு எடுத்துக்கொண்டால் அவர்கள் மக்கள்னு வந்துவிட்டால் மக்களுக்கு  நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க. ஆனால் இரண்டு நாடுகளுக்குள் ஒரு சண்டைனு வரும்போது, இவ்வளவு நல்ல எண்ணம் கொண்ட நாடு, தன் சுயநலத்திற்காக இன்னொரு நாட்டுடன் சேர்ந்துகொள்கிறது. கவனித்துப் பார்த்தால் சில நாடுகள் ந்நடந்துகொள்வதுபோல் சிறு பிள்ளைகள்கூட நடந்து கொள்வதில்லை! இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல! இந்தியா எப்படினு ஈழத் தமிழர்களிடம் கேளுங்க! நீங்களே பீத்திக்காதீங்க! அமெரிக்கா எப்படினு மிடில் ஈஸ்ட்ல இல்லை ரஷ்யாக் காரன் இல்லைனா சைனாக் காரன் இல்லைனா நார்த் கொரியனிடம் கேளுங்க! வாழ்க்கை, தத்துவம் எல்லாம் தனிமனிதனுக்குத்தான்! நாடுகளுக்குக் கெடையாது என்றுதான் தோனுது. நாடுகளும் நல்லொரு தனிமனிதன் போல பிறநாடுகளிடம் நடந்து கொள்ளணும்னு ஆசை.

* நாலு..பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை பிரச்சினை.? பாவம் பக்கத்தில் ஆடு திங்கிறவன், மாடு திங்கிறவன், பன்னி திங்கிறவன்னு கண்டவனையும் இவர்கள் கட்டி அழ வேண்டியிருக்கு. இவர்களுக்காக ஒரு தனி நாடு உருவாக்கி இவர்களை எல்லாம் அந்த சொர்க்க பூமிக்கு கூட்டமா அனுப்பணும்னு எனக்கு ஒரு ஆசை. நம்மள மாதிரி பாவிகளுடம் இவர்கள் எதுக்கு இருந்து இன்னல் பட்டுக்கிட்டு இருக்கணுமா?னு  ஒரு நல்லெண்ணம்தான். தப்பா நெனச்சுப்புடாதேள்! என்ன அப்படி ஒரு நாடு அவர்களுக்கென்று வந்துவிட்டால், டாய்லெட் அள்ளுறது, போருக்குப் போவது, ரோடு போடுவது, வீடு கட்டுவது எல்லாமே பார்ப்பனர்களும் செய்யணும். ஊருப்பயலை எல்லாம் செய்ய வைத்துவிட்டு பகவானை வழிபட்டுக்கொண்டு நான் உயர்ந்தவன்னு சொல்லி பொழைப்பை ஓட்ட முடியாது அந்த சொர்க்க பூமியில். இல்லையா?

* ஐந்து.. என்ன காரணம்னு தெரியவில்லை. எனக்கு எப்போவுமே நேரம் பத்துவதில்லை. வேற மாதிரிச் சொன்னால் காலம்/நேரம் மிகவும் வேகமாக ஓடுகிறது. ஒரு சிலர் சொல்றாங்க.. அப்படியென்றால் நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று அர்த்தம் என்று.  அதுவும் அமெரிக்கா வந்ததிலிருந்து நேரம் படு வேகமாக ஓடுது. அதனாலென்ன?னு கேக்குறீங்களா? 10 வருடம் கடப்பது ஒரு வருடம் கடந்ததுபோல் இருக்கு. அதனாலென்ன? அப்போ நான் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் 10 ஆண்டுகள்தான் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருக்கும் இல்லையா? அத்தனை கொஞ்ச வயதில் சாக ஆசையில்லை! நேரம் மெதுவாகக் கடக்கணும்னு ஆசை!

* ஆறு .. எங்க வீட்டுக்குப் பின்புறம் புறாக்கள் வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுப் போகும். ஒவ்வொரு சமயம் திடீர்ணு "டமார்ணு" ஒரு சத்தம் கேக்கும். என்னனு பார்த்தால் புறா  எல்லாமே ஒட்டுமொத்தமாகப் பறந்து போகும். என்ன காரணம்னு பார்த்தால்  மேலே ஒரு பெரிய பருந்து (ஹாக்) வீட்டைச் சுற்றி வட்டமிட்டு உயரப் பறந்து கொண்டு இருக்கும். அதன் "அட்டாக்"தான் காரணம். நம்ம ஊரில் கோழிக்குஞ்சை பருந்து தூக்கிப் போவதைப் பார்த்து இருப்பீங்க இல்லை? அதேபோல் அது தேடும் இரை என்னனா இந்த அப்பாவிப் புறாக்கள்தான். அதுக்கப்புறம் ஒரு சில நாட்கள் இதுக்கு பயந்து கொண்டு  புறாக்கள் திரும்பியே வராது. ஹாக் பயம்தான் காரணம். வேடிக்கை என்னனா கடவுள்தான் இதுபோல் ஒரு பறவை இன்னொரு பறவையை அடிச்சு சாப்பிடுவதுபோல் படைத்தான்னு சொல்றாங்க. அவனைத்தான் தினமும் வணங்கி வழிபடுகிறாங்க பக்தசிகாமணிகள். இந்தப் பருந்துகளும் புறாக்களுடன் சேர்ந்து ஏதாவது தானிங்களை சாப்பிடணும்னு ஆசை. உண்ஐயைச் சொல்லுங்க! இதுநாள் வரை, புறாக்கள் எல்லாம் நாத்திகர்கள் என்கிற உண்மை தெரியாது இல்லை உங்களுக்கு? :)

* ஏழு..மெட்ரோ ட்ரைன்ல ஏறி ஈஸ்ட் போகணும்னு நிக்கும்போது ஈஸ்ட் பவுண்ட் ட்ரெய்ன் வந்தால் சந்தோஷமாக இருக்கும். போய் வேலைகளை முடித்துவிட்டு திரும்பி கிளம்பிய இடத்துக்கு வரும்போது வெஸ்ட் பவுண்ட் ட்ரெயினுக்காக நிக்கும்போது,  ஈஸ்ட் பவுண்ட் ட்ரெய்ன் வரும். அப்போது அது யாரோ எனக்கு அந்நியம் போலவும், வேண்டாத ஒரு ட்ரையின் போலத் தோணும். இந்த ட்ரைன்தான் சிலமணி நேரங்கள் முன்னால் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. அதுக்குள்ள அது அன்னியமாகத் தோனுது . என்ன ஒரு சுயநலம்னு தோனும். எந்த ட்ரயின் வந்தாலும் அதற்காக காத்து நிக்கும் பயணிகள் சந்தோஷப்படத்தானே செய்றாங்க. அதனால் எந்த ட்ரெயின் வந்தாலும் ஒரே மாதிரி சந்தோஷம் வரணும்னு ஆசை.

*எட்டு.. பெரிய பெரிய தோல்விகள், இழப்புகள், துன்பங்கள் வரும்போது மனிதன் சிந்தனைகள் எல்லாம் உயர்வானதாகிவிடுகிறது. இதுதான்  வாழக்கை என்பான். இவ்வளவுதான் வாழ்க்கை என்பான். பெரிய பெரிய  தத்துவம் பேசுவான். பெரிய குணமெல்லாம் அவனிடம் இருந்து வெளியே வரும். அதே மனிதன் வெற்றி மேல் வெற்றி பெற்று அகந்தையில் இருக்கும்போது பொதுவாக அவனிடம் அகந்தையுடன் கலந்த தாழ்ந்த சிந்தனைகளில் உருவான எண்ணங்கள்தான்  அதே மனிதனிடம் இருந்து வெளி வருது. என்னிடம் உள்ள ஒரு வீக்னெஸ் என்னனா. இப்போ கேர்ரம் ஆடுறேன்னு வச்சுக்கோங்க. என் எதிரில் ஆடுபவர் தோல்வியடைவதுபோல் வந்துவிட்டால், எனக்கு என் வெற்றியை நினைத்து சந்தோஷப்படுவதைவிட அவர் தோக்கிறாரேனு கஷ்டமாக இருக்கும். பொதுவாக நம் நண்பர்கள் அல்லது உறவினர்களுடந்தானே ஆடுவோம்?  என் வெற்றியை நினைத்து சந்தோஷப்பட முடியாத ரெண்டுகெட்டான் நிலை வராமல் இருப்பதுபோல் என் மனநிலை இருக்கணும்னு ஆசை.

* ஒன்பது..நான் பார்த்தவரைக்கும், ஒரு சில அயோக்கியர்களும் பொய், பித்தலாட்டம் எல்லாம் செய்து மாட்டிக்கொள்ளாமல் மிகப் பெரிய வெற்றியடையிறாங்க. அறிவியல் துறையிலும்தான். நல்லவங்க மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள் பொதுவாகத்  தோல்வியைத் தழுவுறாங்க.  Life is not fair most of the time! Life எல்லா நேரங்களிலும் fair ஆக இருந்தால் நல்லாயிருக்குமேனு ஒரு ஆசை.

* பத்து..ஒரு சிலரிடம் ஒத்துப் போகாதுனு உணர்ந்த பிறகும், உடனடியாக என்னால் ஒதுங்க முடிவதில்லை. என்னை சமாதானப் படுத்தி ஒதுங்கிச் செல்லக் கொஞ்ச நாட்கள் ஆகிறது,  நாகரீகமாக சுமூகமாக ஒதுங்கிச்செல்ல! இருந்தபோதிலும் Once I go away from them, I never look back again for sure! அதுபோல் ஒத்து வராது னு உணர்ந்தவுடனேயே ஒதுங்கிப்போக முடியணும்னு ஒரு ஆசை.

அடேங்கப்பா என் "தீசிஸ்" எழுத நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை!! ஒரு வழியா என்னத்தையோ எழுதி முடிச்சாச்சு..

தொடரச் சொல்லி வேற யாரையும் மாட்டிவிட இஷ்டமில்லை! :)

பின் குறிப்பு: இது என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த எண்ணங்கள்/ஆசைகள். தயவு  செய்து  "என்னைத்தான் சொல்றான்" என்கிற குறுகிய வட்டத்தில் இருந்து பார்க்காதீங்க. உலகம் உங்களை என்னைவிட மிகப் பெரியது! :)