"தேவடியா!"னு காந்திமதியை மனதுக்குள்ளேயே சத்தமாகத் திட்டினார், அவளுடைய அன்புக்கணவர் சுப்பிரமணி. எழுபது வயதைத் தொட்டுவிட்ட தன் "தர்மபத்தினி" காந்திமதியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சுப்பிரமணிக்குத்தான் தெரியும்! "இந்தக்கிழம் சீக்கிரம் செத்துத் தொலையணும்" "இந்த 75 வயதில் இத்தனை வியாதிகளை வச்சுக்கிட்டு ஏன் இன்னும் உயிரோட இருக்குனு தெரியலை" எனறுதான் சொல்கிறாள் என்று அவளுடன் உடலும் உயிராக இத்தனை காலம் வாழ்ந்த சுப்பிரமணிக்குப் புரியாதா என்ன?
35 வருடங்கள் முன்னால சுப்பிரமணி தன் அண்ணன் தம்பிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யும்போது கோடிகோடியாக சம்பாரிச்சு, அண்ணன் தம்பிகளுக்குத் தெரியாமல் லட்சலட்சமாக பொதுப்பணத்தைச் சுரண்டி அள்ளிக்கொடுத்த போதும், குறைந்த பட்சம் 400 பவுன்களுக்கு மேலே விதவிதமான நகைகள் செய்துபோட்டு அழகுபார்த்தபோதும், காந்திமதி என்னவோ அவர்மேலே உயிருக்கு உயிராகத்தான் இருந்தாள். அன்பு, பாசம், வாயிக்கு சுவையா சமச்சுப் போடுவதில் இருந்து நெனச்ச நேரம் முந்தானை விரிப்பதிலேயோ எதிலும் எந்தக்குறையும் அப்போதெல்லாம் வைக்கவில்லைதான்! அன்று சுப்பிரமணி தினமும் பால் கொடுக்கும் பசு மாடு! இல்லை பொன் முட்டையிடும் வாத்து! ஆனால் இன்று? ஆமா காந்திமதியும் குஷ்புக்கு தெரியாத கற்புடன் வாழும் ஒரு பெண்தான்! வாழ்நாளில் காந்திமதி, சுப்பிரமணி தவிர யாரோடையும் படுத்ததில்லைனு சுப்பிரமணிக்கு தெரியுதோ இல்லையோ, கடவுளுக்குத் தெரியும்!
வரப்போற சாவை நெனச்சு பயந்து நடுங்கிக்கொண்டு ஒரு அழுக்கு மெத்தையில் படுத்துக்கிடக்கும் சுப்பிரமணிக்கு வாழனும்னு ஆசை எல்லாம் கெடையாது! ஆனால் பாவம் அவருக்கு சாகவும் ஆசையில்லை! சுப்பிரமணி சம்பாரிச்சு உருவாக்கிய, தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் ஸ்தாபனத்தில் இருந்து 15 வருடங்கள் முன்பே அவருக்கு "வி ஆர்" கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் கல்லாவில் உட்கார்ந்துகொண்டு இன்னைக்கு கோடிகோடியா சம்பாரிக்கும் மகன்கள் ரெண்டு பேரும். அப்பா எப்போ "போய் சேருவாரு"னு அந்த "நன்னாளை" எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பணமா இல்லை? அவர்களிடம் உள்ள பணத்திற்கு சுப்பிரமணியை கவனிக்க ஒரு நர்ஸ், மற்றதுக்கு இன்னும் ரெண்டு அல்லது நாலு வேலையாள்னு, முழுநேர வேலைக்கு வச்சுப் பார்த்தக்கலாம்தான்! ஆனால் "அப்பா இனிமேல் எதுக்கு?" னு லாபக்கணக்குப் போட்டார்கள் அந்த தேவடியாமகன்கள்!
வயதான "குழந்தை" சுப்பிரமணி டெய்லி வேலைக்காரி முனியம்மா போடும் ஊசியில் ஏற்றும் இண்சுலினுடன் மேலும் பி பி கொலெஸ்டெரால், கிட்னி ட்ரபுள்னு எல்லாத்துக்கும் ஒரு 10 மாத்திரைகள் எடுத்துக்கொண்டு நல்லா வாயிக்கு ருசியா சாப்பிடணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டார். அப்படி அவர் ஆசைப்படுவதென்ன அவ்வளவு பெரிய தப்பா? னு அவர் உள் மனதில் தோன்றியதை சத்தமாக வெளியே சொல்லமுடியாத ஒரு கோழை அவரு!
சுப்பிரமணிக்கு இப்போலாம் காந்திமதியின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசிபோடுற "டாக்டர் முனியம்மா" என்னவோ டாக்டர் சொல்லிய, கொடுக்க வேண்டிய அளவுக்கு கம்மியாக கொடுப்பதுபோல தோனுச்சு. அதனால் சரியாக பசிக்கவும் இல்லை போலவும் தோனியது. மேலும் பல நேரங்களில் மாத்திரைகள் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போலவும் தோன்றியது. ஒருவேளை டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷ்னை இந்தத் தேவடியா மாற்றிவிட்டாளோ? "ஓவர் டோஸ்" கொடுத்து என்னை சீக்கிரம் அனுப்பி விட வழிபண்ணுகிறாளோ? என்ற பீதியில் செத்து செத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது ஏற்கனவே செத்துவிட்ட மாஜி தொழிலதிபரான "கோடீஸ்வரர் சுப்பிரமணியின்" பிணம்!
-முற்றும்
இதுவும் ஒரு காலத்தில் எழுதிய மீள்பதிவே!