ராஜ நடராஜன், கடந்த 7-8 ஆண்டுகளா எனக்கு வலையுலகில் நன்றாகத் தெரிந்தவர். இனிமேல் இவர் கருத்துக்களை நாம் காண இயலாது. முதலில் இவர் மறைந்துவிட்டதாக
துயரச்செய்தி நம்பள்கி தளத்தில் வந்தபோது, இது நிச்சயம் புரளியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பல மாதங்கள் முன்புகூட இக்பால்
செல்வன் பற்றிய செய்திகூட பொய்யானதே. அதேபோல்தான் இதுவும் இருக்கும்
என்றுதான் எல்லோரும்போல் நானும் நினைத்தேன். ஆனால் என் மனவோட்டத்தில் ஜோதி கணேசன் (ஜோதிஜி) அவருடைய
நட்பு வட்டத்தில் உள்ளவரரென்பதால் அவருக்குத்தான் உண்மை தெரியும் என்று அவருடைய பின்னூட்டத்திற்காக
காத்திதிருந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று.
ஜோதி கணேசன், "
வந்த
செய்தி உண்மைதான் என்றும் ராஜ நடராஜன் மறைந்துவிட்டார்!" என்றும் சொல்லி
இந்தப் புரளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஜனவரி மூன்று வரை சாதாரணமாக பதிவுலகில் உலவிக்கொண்டிருந்தவர். எந்தவிதமான உடல் நலக்குறைவு இருப்பதாகவும் தெரியவில்லை. தேள் கடி இதய நோயுக்கு மருந்தாம் என்றெல்லாம் பதிவு எழுதிக்கொண்டு இருந்தார். திடீர்னு "கார்டியாக் அர்ரெஸ்ட்" என்கிறார்கள். மற்றபடி வேறு விபரங்கள் தெரியவில்லை. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது? அவர் மறைந்து விட்டார்.
ஒரு முறை ஒரு கிருஸ்தவ நண்பர் இதுபோல் ஆக்சிடெண்ட்டில் இறந்துவிட்டார். அப்போது இறுதிச் சடங்கு செய்யும்போது பாதிரியார்கள் சொன்னார்கள். அதாவது இந்த இள வயதிலேயே அவர் முதிர்ச்சியடைந்து, முழுத்தகுதியும் பெற்றுவிட்டதால் ஜீசஸ் அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டார் என்று. அதேபோல் நடராஜன் வாழ்வு இந்த இளவயதில் முழுமை பெற்றுவிட்டது போலும். அதனால் அவர் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார்- யாரிடமும் சொல்லாமல்.
ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய ஒரு கவிதை இங்கே!
*********************************
நண்பர்களை அழைக்க முடியவில்லை!
அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!
**********************************************
ராஜ நடராஜன் பற்றி நான் அறிந்த சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.
என்னுடைய அனுமானத்தில் திரு நடராஜன் அரசியல் சம்மந்தமான பதிவுகளில் மட்டும்தான் மிகவும் ஆர்வம் காட்டுபவர். நான் ஆரம்பத்தில் எழுதிய ஒரு சில காதல் கதைகள் படித்துவிட்டு "வருண் எனக்கு உங்க கதை படிச்சா தூக்கம்தான் வருகிறது" என்று சொல்லியிருக்கிறார்னு கூட எனக்கு நேற்று நடந்துபோல் ஞாபகம் இருக்கிறது. காதல்கதைகள், தத்துவக் கட்டுரைகள் எல்லாம் இவரை அரசியல் ஈர்ப்பதுபோல் ஈர்ப்பதில்லை.
பதிவுகள் மட்டுமன்றி, இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் மிகவும் நாகரீகமாக இருக்கும்- அமுதவன் சார் சரியாகச் சொன்னதுபோல் அது பொதுவாக வம்பு கலந்துதான் ஒவ்வொரு பின்னூட்டமும் முடியும். அதாவது முடிவதுபோல் தொடர வேண்டித் தொக்கி நிற்கும்.
பொதுவாக ஒரு சில விவாதங்களில் எனக்கு எரிச்சல் கோபம் வரும்போது பின்னூட்டங்களில் சாதாரணமாக கெட்டவார்த்தை சரளமாக வரும். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, கெட்டவார்த்தை எளிதில் வரும் எனக்கு . ஆனால் இதுவரை ராஜ நடராஜன் கெட்டவார்த்தையை மறந்துகூட பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. அந்த வகையில் எனக்கும் நடராஜனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மேலும் ராஜ நடராஜன் ஒரு பக்கா ஒலகநாயகன் விசிறி. என்னுடைய கணிப்பில் ஜெயகாந்தன் விசிறி என்றும்கூட சேர்த்துச் சொல்லலாம். தன்னை சிவாஜி விசிறி என்று சொல்லிக்கொள்வார் ஆனால் இவர் சிவாஜி நடிப்பை ரசித்து சிலாகித்து எங்கேயும் எழுதியதை நான் இதுவரைப் பார்த்ததில்லை.
இவருக்குப் பிடிக்காததுனு சொல்ல வந்தால்.. கலைஞர் கருணாநிதியை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால அதையும் அப்பட்டமாகச் சொல்லமாட்டார். பூடகமாக நாகரீகமாகத்தான் சொல்லுவார்- வம்பு கலந்து. ரஜனிகாந்தை சுத்தமாகப் பிடிக்காது. அதையும் அப்பட்டமாக சொல்ல மாட்டார். அதைவிட வருண் ஆன என்னுடைய பதிவுலக நாகரிகம், நடத்தை இவருக்குச் சுத்தமாக ஆகாது. பலமுறை பலவிதமாக எனக்கு அறிவுரை சொல்லி என்னை திருந்தச் சொல்லி, நாகரீகமான பதிவராக மாற்ற முயன்று கடைசிவரை தோற்றவர்னுகூட சொல்லலாம். அதனால் எனக்கும் இவருக்கும் பொதுவாக கருத்து வேற்பாடுகள் வரும். எப்போதுமே விவாதத்தில் நான் ஒரு அணியில் (தனியாக பல சமயங்களில்) இருப்பேன், இவரு என்னுடைய எதிரணியில் எனக்கு சுத்தமாக ஆகாத பதிவர்களுடந்தான் இருப்பார். பதிவுலகக் களேபகரங்களில் என்னுடைய எதிரணிதான் இவருக்கு நாகரீகமாகவும், நியாயமாகப் பேசுவதாகவும் பெரும்பாலும் அமையும். அது உண்மையாகவும் இருக்கலாம். பதிவுலகில் நானும் அவரும் சேர்ந்து ஒரே பக்கம் இருந்து வாதிட்டதாக எனக்கு இதுவரை ஞாபகம் இல்லை!
இருவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்கிற கண்னோட்டத்தில் பார்க்காமல் இருவரையும் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
எனக்கு ஒண்ணு புரியவில்லை. பதிவுலகில் இவர் பற்றி வந்த துயரச் செய்தி பலருக்கும் சென்றடையவில்லையா? இல்லையென்றால் எல்லோரும் பதிவில் கொடுக்கப்பட்ட மின் அஞ்சல்மூலம் இவருடைய உறவினரிடம் பேசிவிட்டார்களா? துக்கம் விசாரித்துவிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனை பெரிய துயர சம்பவத்தைப் பற்றி பதிவுலகில் பலரும் கண்டுக்காமல் போவதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதால் இந்தப்பதிவை நான் எழுத வேண்டிய கட்டாயம்.
பொதுவாக நம்மில் பலர் மரணம் பற்றிப் பேசப் பிடிக்காதவர்கள்தாம். விதிவிலக்காக என்னை நானே வலியுறுத்தி மரணம் பற்றி நான் சில பதிவு எழுதி இருக்கிறேன். பலமுறை செய்ததுபோல் இம்முறையும் அப்பதிவை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.
*****************************
மரணம் வந்தால் தெரிந்துவிடும்!
மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!
என்பது
ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை
மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும்,
நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.
மரணம்
என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம்
இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.
எனக்கு
மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார்
என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை
நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா?
யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா?
இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு
வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த
வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள
வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு
உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு
ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம்
நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள
கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும்
நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள்.
திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக
மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப்
பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை
உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி
போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல
கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள்
ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம்
விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு
“இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக
அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை
மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக
இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
*
உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக
அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே
அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள்
இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல
தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ
அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள்,
அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான்
இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன்
கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள்
எல்லோருமே நல்லவர்கள்தான்!
*********************************
வேகநரி/quickthefox என்கிற பின்னூட்டப் பதிவர் ஒரு ஆள் இருக்கான். அவன் ராஜ நடராஜன் பற்றி கேள்விப்பட்ட இடத்தில் (நம்பள்கி பதிவில்) இட்ட பின்னூட்டம் ஒன்று இங்கே!