Thursday, January 28, 2016

பத்ம ஸ்ரி ஜெய..செய்திகள் வாசிப்பது வருண்!

பத்மஸ்ரியல்லாத ஜெயமோகன்!

நம்ம ஜெயமோகன் இருபத்தைந்து வருடமாக தமிழில் இலக்கிய சேவை செய்துகொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட அந்த மனுஷனை மதிச்சு ஒரு பாரதீய ஞான பீடம் அல்லது ஒரு சாகித்ய அகாதமி விருதாவது கொடுத்து இருந்தால் தன் தகுதிக்கு ஏற்ற அவ்விருதினை அவர்  நிச்சயமாக முழுமனதோடு  வாங்கியிருப்பார். அதை விட்டுவிட்டு சும்மா தறுவுக்கு இந்தா உனக்கொரு பத்மஸ்ரி னு கொடுத்ததும் கடுப்பாவாரா, மாட்டாரா?

இதெல்லாம் எழுத்தாளர்களை அவமதிப்பதுனு நம்ம மத்திய அரசுக்கு தெரியாததுதான் பரிதாபம்!

 காணவில்லை!

பரபரப்பாக அரசியல் கலந்த இடுகைகள் எழுதும் நண்பர் மதுரைத் தமிழன் அவர்கள் உண்மைகளை இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் தளத்தில் காணவில்லை! அவருடைய நட்பு வட்டம், தோழர், தோழியர் எல்லாம் அவருக்கு "என்னாச்சோ ஏதாச்சோ"னு ஒரே கவலையில் இருக்கிறார்கள். மதுரைத்தமிழன் விரைவில் வந்து சேர்வார் என்று நம்பப்படுகிறது.

ட்விட்டரில் கமல்ஹாசன் என்ட்ரி!

குடியரசு தினத்தன்று, திரு கமலஹாசன் அவர்கள் முதல் ட்வீட் செய்துள்ளார். அவருக்கு ட்விட் உலகில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கமல் ரசிகர், நடிகர் சூர்யா அவரை வர வேற்கிறார்.

  Jan 27
Yet another way to feel even more closer sir!! Very respectful welcome!!@ikamalhaasan

 நீங்களும் அவரைத் தொடர்பவராக ஆகி அவருக்கு "க்ளோஸ்" ஆகலாமே?


ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது!

மத்திய அரசாங்கம், நடிகர்  ரஜினிகாந்த்க்கு பத்ம விபூஷன் விருதை வழங்கியுள்ளார்கள். இதற்கு முன்னால் பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அப்போ யாரு ஆட்சி நடந்ததுனு எனக்குத் தெரியவில்லை இவருக்கு இந்த விருதைப் பெற என்ன தகுதி இருக்கு? னு எல்லாரும் கேக்கிறாங்க. நடிகர்கள் அமிதாப் மற்றும் திலீப் குமாருக்கும் இதே விருது வழங்கியுள்ளார்கள் என்பதை நான் பிறருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

மேலும் நம்ம கமலுக்கு  போனவருடமோ என்னவோ பத்ம பூஷன் வழங்கியபோது அவருக்கு அவ்விருது பெற முழுத்தகுதியிருக்குனு எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இதென்ன ஜுஜுபி  கமலுக்கு நோபல் பரிசு, அதுவும் வேதியிலில் பெறவே தகுதியிருக்கு! னு வேற பலரும் சொல்லிக்கிட்டாங்க. அவருதான் எல்லா சப்ஜெக்ட்லயும் டாக்டர் பட்டம் பெறாமல் பெறத் தகுதி பெற்றவராச்சே?!

இப்போ  முக்கியமாக கமல் ரசிகர்களின் மத்தியில்  ரஜினி பெற்ற இவ்விருது மிகுந்த பரபரப்பையும் எரிச்சலையும் கிளப்பி உள்ளது என்பதை அவர்கள் ட்வீட்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே கபாலி, எந்திரன் 2.0 என்ற படங்களின் தொடர் செய்திகளால் நிம்மதி இழந்து அலையும் இவர்கள் தலையில்  மண்ணள்ளிப்போட்டதுபோல் இப்படி ஒரு செய்தி.

ட்விட்டர்ல இவணுக அழுதழுது கண்ணீர் வடித்து எழவைக்கூட்டி வைக்கிற ஒப்பாரியில்  இன்னொரு வெள்ளம் வந்து சென்னையை அழிச்சாலும் அழிச்சுடும்.

இவ்வளவுக்கும் கமல் டிவீட்ட ஆரம்பிச்சுட்டாரு, ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் பிசினெஸ் ஸ்கூல்ல போயி எல்லாம் ஏதோ பெரிய இன்வைட்டெட் லெக்ச்சர் கொடுக்கப்போறாருனு சொல்றாங்க. நல்லவேளை நான் ஹார்வேட்ல இல்லை, என்னிடம் பிசினெஸ் டிக்ரி யும் இல்லை! அப்பாட  தப்பிச்சேன்!

அப்புறம் அம்மா அப்பா விளையாட்டுனு ஏதோ படம்லாம் எடுக்கப் போறாராம். 20 வருடமாக உறங்கும் மருதநாயகத்தை எடுக்கப் போறேன்னு வேற சொல்லுறாரு. இதுபோல் கமல் தரப்பில் நடக்கும் எத்தனையோ நல்ல நல்ல விசயங்களை எல்லாம் பேசித் தீர்ப்பதை விட்டுப்புட்டு சண்டியர்கரன், பழுவேட்டரையர் னு சில கமல் ரசிகப் பொறுக்கிகள் எந்நேரமும் ட்விட்டரில் "ரஜினி ட்ரால்"தான் பண்ணிக்கிட்டு அலையுதுக!

ப்ளாகரில் உங்களைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை! 

சமீபத்தில் ப்ளாகரில் ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளார்கள், அதாவது ஜி மெயில் அல்லது ப்ளாகர் அக்கவுண்ட் இல்லாதவர்களை உங்களைத் தொடர்பவர்களில் இருந்து கழட்டிவிட்டுவிட்டார்கள். அதனால உங்களை தொடர்பவர்களில் உள்ள எண்ணிக்கை திடீர்னு குறைந்திருக்கும். திடீர்னு நெறையப் பேர் உங்களோட கோவிச்சுட்டுட்டு போயிட்டதா நெனச்சுடாதீங்க. எல்லோருடைய தளத்திலும் தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. :)



Thursday, January 21, 2016

நான் கடவுள் இல்லை! கஞ்சா சாமியார்! ரெண்டாம் பதிப்பு

 வருணுக்கு ஏன் பாலா மேலே இந்த வெறுப்பு? னு நானே போயி எழுதிய பழைய இடுகையைத் தோண்டி எடுத்தேன். அது உங்கள் பார்வைக்கு! பாலா படத்தை (பாடையை?) யெல்லாம் ஒரேயடியா தலைமுழுக முடிவு செய்தது இங்கேதான். படிக்காதவங்க படிச்சு ரசிங்கப்பா!

***********************

“நான் கடவுள்” பார்த்தியா?

"நான் தெரியாமத்தான் கேக்கிறேன், பகுத்தறிவுவாதினு வாய்கிழிய பேசுறவன் எல்லாம் இந்த சம்ஸ்கிரதம் பேசும் கஞ்சா சாமியார் படத்துக்கு ஜால்ரா அடிக்கிறானுகளே? அது ஏன்?"

“அதை விடு! படம் பார்த்தியா?”

“பார்த்தேன். அதிலே ஒண்ணும் பெருசா இல்லை. ஏதோ ஒரு முட்டாப்பயமகன், ஒரு தரித்திரம் சொன்னான்னு அவன் மகன காசில கொண்டுபோய் பிச்சை எடுக்க விட்டுட்டு வந்துட்டானாம். அவன் “அகோரி” (கஞ்சா சாமியார்) யாயிட்டாராம். விட்டுட்டு வந்தவனுக்கு ஒருநாள் ஞானம் வந்து அவன் நல்லா வளர்ந்த பிறகு போய் திரும்ப ஒரே வினாடியில் கண்டுபிடிச்சு அவனை ஆத்துக்கு அழச்சுட்டு வர்றாராம். அப்புறம் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்காங்க! அவர்களை வஞ்சிக்கும் சில மிருகங்களையும், இந்த கஞ்சா சாமியார் காப்பாதுறார். இதான்ப்பா கதை"

“அப்புறம்? கஞ்சா சாமிதான் கடவுளா?”

"ஆமா போதையிலே எல்லோரும் கடவுளாகலாம் இல்லையா?"

"கதையை சொல்லு"

“அவன் ஒரு கஞ்சா அடிக்கிற மிருகமா இருக்கான். அதை வீட்டுக்கு கூட்டிவந்து அந்த மிருகத்திடம் தாய் பாசத்தை அள்ளிக்கொட்டுறாங்க அவன் அம்மா. இதுக்கு மேலே அதுலவுள்ள செண்டிமெண்ட்ஸ் பேச எனக்கு மூடு இல்லை!”

“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”

“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”

“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”

“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”

“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”

"அதான் நல்லாயிருக்கு. இதோ எந்தன் தெய்வம் (பாபு), ஏன் ஏன் (வசந்த மாளிகை) அப்புறம் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (எம் ஜி ஆர் படம்).

“இந்தப்படத்தில் என்னதான் மெசேஜ்?”

“ஒரு மண்ணும் இல்லை! இனிமேல் பிச்சைக்காரன் அதிகமாயிடுவானுக. They will be proud of their profession! அப்புறம் கஞ்சா சாமியார்லாம் சும்மா நெஞ்ச தூக்கிகிட்டு திரிவானுக. ஏன்னா அவனுகளுக்கு புது வாழ்வு கொடுக்குது இந்தப் படம்" 


**************************** 
மீள் பதிவுதான்!


இந்த பழைய இடுகையில் பின்னூட்டம் இட்டது முக்கால்வாசிப்பேரு இன்று பதிவுலகில் இறந்தவர்கள்!  நான் பதிவுலகுக்கு அப்போ சுமாரான புதுசுனால தோனுவதை அப்படியே எழுதிப்புடுவேன். இவரு கோவிச்சுக்குவாரே? அவரு என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் ரொம்பக் கவலைப் படுவதில்லை. ஆமா, அப்போவே அப்படித்தான்! :)

ஒருவேளை அப்படியெல்லாம் "அவருக்கும்" "இவருக்கும்" கவலைப்பட்டு என் எண்ணங்களை சுருக்கி/அடக்கி இருந்தால் அப்போவே கடையை அடச்சு இருப்பேன். இன்னும் இத்தளத்திற்கு உயிரோட்டம் இருந்து இருக்காது!

Monday, January 18, 2016

திரு காவீரமைந்தன் மற்றும் அவர் கருத்தடிமைகளுக்கு!

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண்- ப்ளாகர் ஐ டி வைத்துள்ள நான் எந்த ஒரு வோர்ட் பிரஸ் தளங்களிலும் பின்னூட்டமிடுவதில்லை. காரணம்? அத்தளங்களில் மென்மடல் அட்ரெஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். கண்டவர்க்கும் என் மென்மடல் ஐ டி யை நான் கொடுப்பதில்லை. முக்கியமாக துக்ளக் சோ பற்றி எப்போதுமே உயர்த்தி எழுதும் தளத்தில் இதுவரை பின்னூட்டமிட்டதில்லை!  ஏதாவது விமர்சிக்க வேண்டியதிருந்தால் என் தளத்திலேயே அவ்விமர்சனம் பதிவாக வந்து நிற்கும்!

 vimarisanam - kavirimainthan சொல்கிறார்:
நண்பர் “நடுநிலை”, “வருண்”, “ஜின்னா”
– என்று இன்னமும் ஒரு டஜன் பெயர்களில்
இங்கு பின்னூட்டம் போட முயலும் இரண்டு அல்லது
மூன்று குறிப்பிட்ட நண்பர்களுக்கு –
உங்கள் பின்னூட்டங்களை நீக்கி விட்டதாக மீண்டும் மீண்டும்

இங்கு எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது
உங்களுக்கே தெரியும்.
நான் பலமுறை இங்கு எழுதி விட்டேன்.

இடுகைக்கு தொடர்புடையதாகவும்,
நாகரிகமாகவும் எழுதப்படும் எந்த பின்னூட்டத்திற்கும்
இங்கு இடம் உண்டு.
விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற
நோக்கத்துடன் எழுதுபவர்கள் –
மாற்று கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் நிச்சயமாக
வரவேற்கப்படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின்
நீண்ட கால நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மாறாக – என்னையோ,

இங்கு பின்னூட்டமிடும் தங்களுக்கு பிடிக்காத
மற்ற நண்பர்களையோ – தரக்குறைவாக எழுதும் உரிமை
எவருக்கும் கிடையாது. நான் அதை நிச்சயம் அனுமதிக்க
மாட்டேன். விவாதங்களும், பின்னூட்டங்களும் –
இடுகைக்கான பொருளைப்பற்றியே
இருக்க வேண்டுமே தவிர,
பின்னூட்டம் இடும் தனிப்பட்ட நண்பர்களைப் பற்றி அல்ல..
இதில் “வருண்” எழுதியவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை ?

வருண் என்கிற நபர் –

வழக்கமாக இங்கு பின்னூட்டங்கள் எழுதும் நண்பர்

டுடேஅண்ட்மீ அவர்களின் பெயரில் –

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு “போலி id”-யை

உருவாக்கி போலியாக சில பின்னூட்டங்களை

டுடேஅண்ட்மீ என்கிற பெயரில் எழுதியது

பச்சை அயோக்கியத்தனம்.

இந்த மாதிரி நபர்களை
நான் ஏன் இங்கே அனுமதிக்க வேண்டும்…?
அதிமுக ஆட்சியைப் பற்றி நான் தீவிரமாக

விமரிசிப்பது இல்லை தான்… அது என் priority -யில்
இல்லை… இப்போதைக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்
என்று பலமுறை இங்கே வெளிப்படையாகத் தெரிவித்து
விட்டேன். மீண்டும் மீண்டும் இதைப்பற்றி
குறைகூறுவதில் எந்தவித பயனும் இல்லை.
நான் எதை அவசியம் என்று கருதுகிறேனோ அதைத்தான்
இங்கு எழுத முடியும்…. என்னை யாரும் இப்படித்தான்
எழுத வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது.
மீண்டும் கூறுகிறேன்…

இடுகையில் கூறப்படும் பொருளைப்பற்றியும்,
பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை பற்றியும் –
விவாதம் செய்வதே சரியாக இருக்கும்…
எழுதுபவரைப் பற்றியோ, பின்னூட்டங்கள் போடுபவர்களைப்
பற்றியோ நாகரிகமற்ற முறையில் பின்னூட்டங்கள்
எழுதுபவர்களுக்கு இந்த தளத்தில் வேலை இல்லை…
அவர்கள் அதை தங்களது சொந்த தளங்களில்
வைத்துக் கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்



யாராவது ஒரு அனானி,என்னைப் பிடிக்காதவன் என் பதிவு மற்றும் பின்னூட்டங்களில் இருக்கும் என் கருத்தை எடுத்து வருண் அல்லது varun என்னும் ஐ டி தயார் செய்து வந்து எதையாவது உளறினால் அது நான் எழுதிய பின்னூட்டமாகாது. அவன் கருத்து  அமெரிக்க அடிமை  ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் சொன்னதாக என்றும் ஆகாது. அந்த அனானி, கூவத்துக்கு அருகில் இருந்தும் அப்பின்னூட்டங்களை எழுதியிருக்கலாம் என்பதை மூளையுள்ளவர்கள் புரிந்து கொள்வது நலம்!

பதிவுலகில் இதுபோல் அனானிகள் உலவுவது சாதாரணம். யாருடைய பெரயரிலேயோ யாரோ போல் கருத்தைச் சொல்லிவிட்டு என்ன நடக்கிறதுனு வேடிக்கை பார்க்கிறதுதான் இந்த இழிபிறவிகளின் வேலை. எவனோ ஒருத்தன் வருண் னு பின்னூட்டமிட, உடனே அத்தளத்தில் உள்ள சில அடிமைகள் எல்லாம் அந்தப் பெயர் உள்ள பதிவரை (ரிலாக்ஸ் ப்ளீஸ் வருணை) விமர்சிக்கிறது.

உடனே தள நடத்துனர் வந்து தளத்தை சுத்தம் செய்துவிட்டு, எதிர்ப்பதிவு எழுதிய அந்தப் பதிவர்தான் (அமெரிக்க அடிமை ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் தான்)  அவர் தளத்தில் பின்னூட்டங்கள் இட்டது என்பது போல் தெரிந்தோ தெரியாமலோ பேசுவது. இதெல்லாம் பதிவுலகில் நடக்கும் நாடகங்கள்.

நான் செய்யாத வேலைக்கு எனக்குக் கிடைக்கும் சம்பளமோ, அல்லது புகழோ அல்லது இகழோ நான் ஏற்றுக்கொள்வதில்லை!

ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், காவீர மைந்தன் தளத்தில் "varun" என்கிற பெயரிலோ வேறு எந்தப் பெயரிலோ பின்னூட்டமிட்டது அடியேன் அல்ல!

I usually dont care about these kind of allegations but today is MLK day, holiday for me! So I had few minutes to let people know that it is someone else's game and I dont deserve the "awarded credit" for it!

Have a nice day, folks!


Friday, January 15, 2016

சோ ராமசாமி ஜல்லிக்கட்டு வேணும்னு சொல்றாரா?

இது ஒரு எதிர்வினை. மிதவாதிகள், தோழர்  தோழிகள் ஒதுங்கி நின்னால் நான் சரியாகப் புரிந்து கொள்ளுவேன்! நம்ம திருவாளர் காவீர மைந்தன் என்ன சொல்றாரு? ஏறு தழுவியே ஆகணும்னு நிக்கிறாரு. ஏன் னா அது இவரோட தமிழர் கலாச்சாரமாம்! மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நாலு காளையை ஏறு தழுவி அடக்கியே ஆவேன்னு நிக்கிறாரு மனுஷன்.

ஆமாங்க, இந்த மாட்டுப் பொங்கலுக்கு காளையை அடக்குவேன் இல்லைனா மாடு முட்டி வீர மரணமாவது அடைவேன்! இதுதான் என் கலாச்சாரம், பண்பாடு!  முடிந்தால் என்னை அடக்கு பார்ப்போம்னு சொல்லாமல் சொல்லுறாரு..

இப்போ இவரு ஜால்ரா அடிக்கும் அ தி மு க ஆட்சி நடப்பதால், இந்த சோ ராமசாமி பக்தருடைய  பதிவு ரொம்ப பவ்வியமாக எழுதப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம்!

தமிழக மக்களின் உணர்வுகளையும், பண்பாடு, பழக்க வழக்கங்களையும்
சற்றும் உணர முடியாதவர்களிடம், தமிழர்களை கட்டுப்படுத்தும்
அதிகாரம் மட்டும் போய்ச் சேர்ந்திருப்பதால் –
அவர்களால் முடிந்ததை – “ஜல்லிக்கட்டை” தடை செய்வதை –
அவர்கள் செய்யட்டும்….

அவர்களுக்கு உணர்வுகள் புரியாது; பண்பாடு புரியாது;
சட்டம் மட்டும் தான் புரியும் என்றால் – அதுவும்
அவர்களுக்கு வேண்டிய வகையில் மட்டும் தான் புரியுமென்றால் –
அவர்களுக்கு புரிகின்ற அதே சட்டமொழியில் –

புரிய வைத்தால் போயிற்று …
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்,

மக்களுக்கு தங்கள் மொழி, பண்பாட்டைக் காத்துக் கொள்ள
இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை
பாதுகாக்கும் விதத்திலும்,
இன்று(வியாழன்) மாலைவாக்கில் –

பொங்கல் விளையாட்டுக்களை – ஏறுதழுவலை –
முறைப்படுத்தி – தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என்று விரும்புவோம்…
எந்த கொம்பன் (ர்,,,?) ( ! ) மாட்டுப்பொங்கலுக்குள்

இதற்கு தடை கொண்டு வருகிறாரென்றும் பார்ப்போமே…!
இந்த விருப்பம் நிறைவேற உளமாற வேண்டுவோம்…

இப்போ கருணாநிதி அல்லது தி மு க ஆட்சி நடந்துகொண்டிருந்தால் இவரு வார்த்தை ஜாலங்கள் எல்லாம் வேற மாதிரி வீரியத்துடன் இருக்கும்னு நான் உங்களுக்கு சொல்லணுமா என்ன?

சரி, இவரு மாட்டுப்பொங்கலன்று ஏறு தழுவ தமிழ்நாடு அரசு ஏதாவது செய்தால் சரிதான்.

ஆமா, இவரு குரு, சோ ராமசாமி என்ன சொல்றாரு? ஏறு தழுவணும்னா இல்லை வேணாம்னா? அடுத்த முறை நலம் விசாரிக்கப் போகும்போது கேட்டுச் சொன்னால் நல்லாயிருக்கும்.

 எனக்கு என்ன புரியலைனா..

சரி, ஒரு 100 ஆண்டுகள் முன்னால தமிழர் கலாச்சாரத்தைப் பார்ப்போம். வைப்பாட்டி வச்சிக்கிறது, அவுசாரிட்டப் போறது, ஒரு பக்கம் பெண்களை தெய்வம்னு சொல்லிக்கிட்டு இன்னொரு பக்கம் பெண்புத்தி பின் புத்தினு சொல்றது. மனைவிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லைனா  இன்னொரு பெண்ணை இல்லைனா அவ தங்கையைகட்டிக்கிறது. என் சொந்தத்திலேயே இதுபோல் அநியாயம் எல்லாம் நடந்து இருக்கு!  இது எல்லாமே தமிழர் கலாச்சாரம்தான். அதெல்லாம் ஏன்ப்பா தூக்கி எறியணும்னு சொல்றீங்க அப்போ? பெண்ணடிமைத்தனத்தையும் சரினு சொல்ல வேண்டியதுதானே? அதுவும் நம்ம பண்பாடுதானே? இல்லையா?

ஏறு தழுவியே ஆகணும்னு நிக்கிற இவர் பதிவில் ஒரு பின்னூட்டம்..


today.and.me சொல்கிறார்:
கேவியட் மனு நிலுவையில் இருக்கும்போது மாநில அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க இயலாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே.
அதேவேளையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம்,
அல்லது பீட்டா அமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ள மத்திய அரசே அதைத் திரும்பப் பெற்று வழக்கைச் செல்லாததாக்கலாம்.
அல்லது
காளைகள் பெயரை இப்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கச் செய்தால் ஒழிய இது இப்போதைக்கு சட்டப்படி சரியாவதில்லை.
ஏனென்றால் சட்டப்படி
இதை
தமிழர்களின் கலாச்சாரத்தை அடகு வைத்தவர்
முத்தமிழ் வித்தவர்
தமிழர்களின் காவலர்
மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி

 பின்னூட்ட வீரப் பதிவர் பேரு என்ன பார்த்தீங்களா? பெரிய தொரை மகன்! டுடே அண்ட் மீ!னு பேரை வச்சுக்கிட்டு கிழிகிழினு கிழிக்கிறாரு! 

அடேங்கப்பா! பின்னூட்டத்தில் வாயி தமிழ் நாட்டிலிருந்து சான்ஃபிராண்ஸிஸ்கோ வரை நீளும் இந்தாளுக்கு! என்ன எழவைச் சொன்னாலும் கா வீர மைந்தனுக்கு முழு நேர ஜால்ரா!

எனக்குத் தெரிய செண்ட்ரல்ல இப்போ ஐயா மோடி ஆள்றாரு. தமிழ்நாடு இப்போ நம்ம "பெரியம்மா" கீழேதான் இருக்கு. ஆனால் இந்த மேதை  இப்போவும் பின்னூட்டத்தில் கருணாநிதிக்குத்தான் அர்ச்சனை பண்ணுறான்.

இதுவும் (டுடே அண்ட் மீ தான்) காவீர மைந்தனோட சேர்ந்ந்து ஏறு தழுவப்போதோ என்னனு தெரியலை! பின்னூட்டம் எல்லாம் பார்த்தால் வாயிலேயே மாட்டை அடக்குற ஆள் மாதிரித்தான் தெரியுது!

ஏன்ப்பா இவர்களுக்குள்ளே  கருத்து வேறு பாடே வராதா??

ஏறுதழுவ/ மஞ்சு விரட்டு வேணாம் ஐயா, எதுக்கு பாவம் மாட்டைப்போயி?னு  காவீர மைந்தனிடம்  பின்னூட்டத்தில் சொல்ல ஒரு பயலைக்கூட அந்தத் தளத்தில்  காணோம்.

இவர்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லவே  இல்லைனா அந்தத் தளம் நடத்துபவர்களுக்கும் அங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கும் ஐந்தறிவுதான்னு நான் நம்புறேன்.

மனிதன்னா சுய சிந்தனை இருக்கணும். முழுநேர ஜால்ராவா இருந்தால் மாக்கள்தான் இவர்கள்!

--------------------------

இதைவிட வேடிக்கை என்னனா நம்ம வன்னியகுல வீரர் அருள் அவர்கள் மஞ்சு விரட்டுக்கு எதிரா பதிவு எழுதுவது.

அதாவது இது முக்குலத்தோருடைய கலாச்சாரம்னு இவருக்கு அரைகுறையாப் புரிஞ்சிருச்சு. சாதிச் சங்கம் நடத்தும் இவருக்கு இது  எங்க வன்னியர் கலாச்சாரம் இல்லை. அதனால் இதுக்கு நாங்க எதிர்ப்புத்தான் சொல்லுவோம்னு நிக்கிறாரு. இதெல்லாம் உண்மையிலேயே பகுத்தறிந்து வரும் கருத்துக்கள் இல்லைனு நான் அடிச்சுச் சொல்லுவேன்! ஏன்னா வன்னியரை இதுவரை எந்தவகையிலும் இவரு விமர்சிச்சு நான் பார்த்ததில்லை!

ஏன்ப்பா ஆளாளுக்கு இன்னும் சாதி அடிப்படையிலேயே எதைனாலும் பேசுறீங்க?

உங்களால் ஒரு சாதாரண மனிதனாக சிந்ந்திக்க முடியாத மூளையில் ஊனம் உள்ளவர்களா நீங்க எல்லாம்?

-------------------------------

வெள்ளம் வந்துடுச்சு, எல்லாம் போச்சுனு ஒப்பாரி வைத்து இன்னும் முடிஞ்ச பாடில்லை. அதுக்குள்ள ஏறு தழுவியே ஆவேன்னு நிக்கிறாங்கப்பா!

மனிதன் எப்போவுமே தன்னால் அடக்க முடிஞ்ச அப்பாவியைத்தான் ஏறி மேய்வான். அது ஏன் மாட்டுட்ட வீரத்தை காட்டுறீங்க? ஒரு புலி, சிங்கத்தை அடக்குறது?  கடிச்சிருமா? நீங்களும் திருப்பிக் கடிங்க!!

Tuesday, January 12, 2016

வாழ்க்கையில் பயணங்கள்?

 பயணங்கள் பற்றி தொடர்பதிவு. அதற்கு தகுதியே இல்லாத நான் எழுதினால் எப்படி இருக்கும்? னு பாருங்க. இதுவும் ஒரு வகையான பாடம் அல்லது அனுபவம்தான் உங்களுக்கு. வெங்கட் ஃபட் னு ஒரு கன்னட பிராமின் சமையல் பத்தி பேச வருவான்(ரு) தெரியுமா? அவரு என்னனா சுத்தமான வெஜிட்டேரியனாம், ஆனால் நான்வெஜ் சமைப்பதில் எக்ஸ்பர்ட்! சமைப்பாரு ஆனால் டேஸ்ட்கூட பண்ணிப் பார்க்க மாட்டாரு. அவரையே கட்டி அழும் நம் மக்கள் (நீங்கதான்) இருக்கும்போது நான் பயணம் பற்றி எழுதுவதை நீங்க வாசிப்பதில் தப்பே இல்லை!


1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

 சிறு வயதில் ராமேஸ்வரம் போனதுனு நினைக்கிறேன். பாம்பன் பாலத்தின் மேலே போகும்போது அந்த வயதில் த்ரில்லாக இருந்துச்சு..

 2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

 சிறுவயதிலிருந்து ஆரம்பிக்கிறேன். நாங்க லோவர் மிடில் க்ளாஸ். அப்படினா? நாகரிகமாக ஏழைனு சொல்லுவது. ஏழைகள் எப்படி வாழணும்? பொதுவாக ஊர் சுத்துவது எக்ஸ்கர்ஷன் போவதெல்லாமல் என் அம்மாவைப் பொருத்தவரையில் "லக்ஸுரி" "வீண் செலவு". செலவைக் கட்டுப்படுத்த சாப்பாட்டையோ, தேவையான ஆடைகள் வாங்குவதையோ நிறுத்த முடியாது.. ஆனால் ஊர் சுத்துவதை, அதற்காக ஆகும் செலவை  தவிர்க்கலாம்.

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, நாம் எப்படி நம்மைப் பழக்கப் படுத்தப்படுகிறோமோ, அதேபோல் நாம் நாளடைவில் மாறி விடுவோம். சிறு வயதிலேயே இப்படிப் பழக்கப்படுத்திவிட்டதால், இப்போவும் பயணம் செய்வதில் ஆர்வக் குறைவாகிவிட்டதோ என்னவோ தெரியவில்லை.

பாவம் ஏழை வருண் என்று எனக்காக கண்ணீர் விட்டு அழாதீங்க! :) என் சுற்றத்தார் எல்லோருமே பணக்காரங்கதான். அம்மாவின் அப்பா பெரிய பணக்காரர் மேலும் மாமாக்கள் எல்லாம் மிகவும் வசதியானவங்க. எங்க வீட்டில் மட்டும்தான் வசதி கிடையாது. இருந்தாலும் சொத்துப் பத்து இருந்ததாலும் பணக்கார மாமாக்கள் இருந்ததாளும் நான் ஏழைனு ஒரு உணர்வு ஒரு போதிலும் எனக்கு வந்ததில்லை.

ஏழைகள்தான் திருடுவாங்க, அவங்க வாழக்கைத் தரம் கீழிருக்கும் போன்ற வியாக்யாணக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை எல்லாம் என் அம்மா சரியாகத்தான் வளர்த்தாங்க.

 எனவே, இதுபோல் ஃபனன்ஸியல் நிலைமை இருந்ததால் பள்ளியில் போகும் டூர் எல்லாம் சாண்ஸே இல்லை. ஒரு முறை கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் குற்றாலம் போனது நேற்று நடந்ததுபோல் ஞாபகம் இருக்கு. மறக்கவே முடியாத பயணம்னு சொல்லலாம். அதற்கு மட்டும் எப்படி அம்மா போகவிட்டாங்கனு தெரியலை. ஆமா எங்க வீட்டில் "அம்மாதான் எல்லாம்"! :)


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

நண்பர்களுடன்! முகநூல் நண்பர்களல்ல!  நமக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்கள். ரெண்டு உயிர் இருந்தால் ஒண்ணைக் கொடுப்பாங்களா?னு கேக்காதீங்க! என்னோடு சிறு வயதிலிருந்து என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்ந்த நண்பன் அப்துல் ரகுமான் போன்ற நண்பர்களுடன். ரயிலில் செக்கன்ட் க்ளாஸ்ல உக்காந்து,  சீட்டு விளையாடிக் கொண்டே, அரட்டை அடித்துக்கொண்டே  பயணம் செய்யணும்.அப்படித்தான் குற்றாலம் பயணம் செய்தோம்.

 4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

நான் ஒரு வினோதப்பிறவி. என் ரசனையும் ஒரு மாதிரிதான். அந்தக்காலத்து அடுத்த வீட்டுப்பெண்  படத்தில் வரும் "கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே" பாட்டையும் ரசிப்பேன். இப்போ வர்ர நிக்கி மினாஜ் உடைய அனக்கோண்டா பாட்டையும் ரசிப்பேன். "mood டைப் பொருத்து".

  5. விருப்பமான பயண நேரம்.

நான் ட்ரைவ் பண்ணனும்னா அதிகாலையிலிருந்து அஸ்தமிக்கிறவரை. ஆனால் ஸ்பீட் லிமிட்க்கு மேலே ஒரு 10 மைலாவது அதிகமாகப் போனால்த்தான் திருப்தியாவும்,ஒரு த்ரில்லாவும் இருக்கும். அங்கிட்டு இங்கிட்டு "காப்" தெரியும்போது மட்டும் ஸ்பீட் லிமிட்ல போற மாதிரி நடிக்கிறது. ஆனால் ஒண்ணு, இதுவரை ஸ்பீடிங் டிக்கட் வாங்கியது இல்லைனு பெருமையாக சொல்லிக்கிறது. :)

ட்ரெயின், பஸ்ல என்றால் இரவு நேரங்களும் பரவாயில்லை.

 6. விருப்பமான பயணத்துணை.

இங்கே என்ன மாதிரி பயணம் என்பதைப் பொருத்து "விருப்பமான பயணத்துணை" யாரா இருந்தால் நல்லாயிருக்கும் என்பது மாறுபடும்.

சொர்க்கத்துக்குப் போகணும்னா யாரோடனாலும் போகலாம். நரகத்துக்கு போகணும்னா  ஒரு சிலரோடதான் போக முடியும்.அப்போத்தான் அதுவும் சொர்க்கமாகும்.

 7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

ஒண்ணு  தெரிஞ்சுக்கோங்க, எனக்கு எந்த நேரத்தில் எதைப் படிக்கணும்னு கூறே கிடையாது. சமீபத்தில் அதிகமாகப் படிப்பது என்னுடைய "ஐ ஃபோன்" ல ஆன்லைன்மூலம் அதிகமாகப் படிப்பதெல்லாம் கெமிஸ்ட்ரியும் பயோ கெமிஸ்ட்ரியும்தான். இல்லைனா அமெரிக்கன் ஃபுட்பால் சம்மந்தப்பட்ட செய்திகள்.

இன்னைக்கு காலையில் திடீர்னு நான் எழுதிய பழைய பதிவை ஒண்ணைத் தோண்டி எடுத்து வாசிச்சேன்..


அதாவது யோகா, தியானம் செய்றவங்க, நமக்கு எதுவும் வராதுனு கவனக்குறைவா இருந்துடுறாங்க. கார்டியாக் அர்ரெஸ்ட் ஒரு சிலருக்கு வந்து விடுகிறது. இவர்களும் டாக்டர்களை வருடம் ஒரு முறை சந்தித்து உடல் நலம் தெரிந்து கொள்வது நல்லதுனு எழுதிய பதிவு.

இதை எதுக்கு இப்போ தோண்டி எடுத்தேன் என்றால்.. ராஜ நடராஜன் யோகா எல்லாம் செய்வார்னு எழுதியிருந்தார்கள் ..ஒருவேளை அதனால்தான் கவனக்குறைவாக நமக்கு என்ன வரப்போது? னு இருந்துட்டாரோ னு ஒரு சிந்தனை வந்தது அதன் விளைவுதான்.

உங்களையெல்லாம் காப்பத்தணும்னு பெரிய அறிவுரை எல்லாம் இல்லை.


 8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அதென்னவோ அமெரிக்கால இருக்கும்போதுதான் இந்தியாவில் ட்ராவல் பண்ணனும்னு ஆசை வருது. அம்மா அப்பாவுடன் ஏதாவது சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போவது நல்லாயிருக்கும்னு தோனுது. கடல்கடந்து  இருப்பதால் அப்படிப்போனால் நல்லாயிருக்கும்னு தோனுது.
  
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
 Again it depends on my mood and what kind travel it is, honestly. 

  10. கனவுப் பயணம் ஏதாவது ?
 கனவுப் பயணமா? அப்படினா?

சில ஆண்டுகள் முன்னால தோழி ஒருத்தி "world cruise" போக ஆசை னு சொன்னாள். ஒரு சிலர் அவங்க ஹவாய்யி போகணும், கனடா பக்கம் உள்ள நயாகரா போகணும்,  யூரோப் போகணும் னு சொல்லிக் கேட்டு இருக்கேன்.

"ஏன் நமக்கு மட்டும் இப்படி ஆசை எதுவும் இல்லை?" னு நான் யோசிப்பதுண்டு.

-----------------

சரி மைதிலி, என்னை இந்த வம்பில் மாட்டி விட்டதுக்கு நன்றி சொல்லிடுறேன்.

கேள்விகளை, கிரேஸ் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணினேன். நன்றி.

Thursday, January 7, 2016

ராஜ நடராஜன் மறைவு!

ராஜ நடராஜன், கடந்த 7-8 ஆண்டுகளா எனக்கு வலையுலகில் நன்றாகத் தெரிந்தவர்.  இனிமேல் இவர் கருத்துக்களை நாம் காண இயலாது. முதலில் இவர் மறைந்துவிட்டதாக துயரச்செய்தி நம்பள்கி தளத்தில் வந்தபோது, இது நிச்சயம் புரளியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பல மாதங்கள் முன்புகூட இக்பால் செல்வன் பற்றிய செய்திகூட பொய்யானதே. அதேபோல்தான் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும்போல் நானும் நினைத்தேன். ஆனால்  என் மனவோட்டத்தில் ஜோதி கணேசன் (ஜோதிஜி) அவருடைய நட்பு வட்டத்தில் உள்ளவரரென்பதால் அவருக்குத்தான் உண்மை தெரியும் என்று அவருடைய பின்னூட்டத்திற்காக காத்திதிருந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று.

ஜோதி கணேசன், "வந்த செய்தி உண்மைதான் என்றும் ராஜ நடராஜன் மறைந்துவிட்டார்!" என்றும் சொல்லி இந்தப் புரளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஜனவரி மூன்று வரை சாதாரணமாக பதிவுலகில் உலவிக்கொண்டிருந்தவர். எந்தவிதமான உடல் நலக்குறைவு இருப்பதாகவும் தெரியவில்லை. தேள் கடி இதய நோயுக்கு மருந்தாம் என்றெல்லாம் பதிவு எழுதிக்கொண்டு இருந்தார். திடீர்னு "கார்டியாக் அர்ரெஸ்ட்" என்கிறார்கள். மற்றபடி வேறு விபரங்கள் தெரியவில்லை. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது? அவர் மறைந்து விட்டார்.

ஒரு முறை ஒரு கிருஸ்தவ நண்பர் இதுபோல் ஆக்சிடெண்ட்டில் இறந்துவிட்டார். அப்போது இறுதிச் சடங்கு செய்யும்போது பாதிரியார்கள் சொன்னார்கள். அதாவது இந்த இள வயதிலேயே அவர் முதிர்ச்சியடைந்து, முழுத்தகுதியும் பெற்றுவிட்டதால் ஜீசஸ் அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டார் என்று. அதேபோல் நடராஜன் வாழ்வு இந்த இளவயதில் முழுமை பெற்றுவிட்டது போலும். அதனால் அவர் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார்- யாரிடமும் சொல்லாமல்.

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய ஒரு கவிதை இங்கே!


*********************************

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!
**********************************************

 ராஜ நடராஜன் பற்றி நான் அறிந்த சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.

என்னுடைய அனுமானத்தில் திரு நடராஜன் அரசியல் சம்மந்தமான பதிவுகளில் மட்டும்தான் மிகவும் ஆர்வம் காட்டுபவர். நான் ஆரம்பத்தில் எழுதிய ஒரு சில காதல் கதைகள் படித்துவிட்டு "வருண் எனக்கு உங்க கதை படிச்சா தூக்கம்தான் வருகிறது" என்று சொல்லியிருக்கிறார்னு கூட எனக்கு நேற்று  நடந்துபோல் ஞாபகம் இருக்கிறது. காதல்கதைகள், தத்துவக் கட்டுரைகள்  எல்லாம் இவரை  அரசியல் ஈர்ப்பதுபோல் ஈர்ப்பதில்லை.

பதிவுகள் மட்டுமன்றி, இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் மிகவும் நாகரீகமாக இருக்கும்- அமுதவன் சார் சரியாகச் சொன்னதுபோல் அது பொதுவாக வம்பு கலந்துதான் ஒவ்வொரு பின்னூட்டமும் முடியும். அதாவது முடிவதுபோல் தொடர வேண்டித் தொக்கி நிற்கும்.

பொதுவாக ஒரு  சில விவாதங்களில் எனக்கு  எரிச்சல் கோபம் வரும்போது பின்னூட்டங்களில் சாதாரணமாக கெட்டவார்த்தை  சரளமாக வரும். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, கெட்டவார்த்தை எளிதில் வரும் எனக்கு . ஆனால்  இதுவரை  ராஜ நடராஜன் கெட்டவார்த்தையை மறந்துகூட பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. அந்த வகையில் எனக்கும் நடராஜனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மேலும் ராஜ நடராஜன் ஒரு பக்கா ஒலகநாயகன் விசிறி. என்னுடைய கணிப்பில் ஜெயகாந்தன் விசிறி என்றும்கூட சேர்த்துச்  சொல்லலாம். தன்னை சிவாஜி விசிறி என்று சொல்லிக்கொள்வார் ஆனால்  இவர் சிவாஜி நடிப்பை ரசித்து சிலாகித்து எங்கேயும் எழுதியதை நான் இதுவரைப் பார்த்ததில்லை.

இவருக்குப் பிடிக்காததுனு சொல்ல வந்தால்.. கலைஞர் கருணாநிதியை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால அதையும் அப்பட்டமாகச்  சொல்லமாட்டார். பூடகமாக நாகரீகமாகத்தான் சொல்லுவார்- வம்பு கலந்து. ரஜனிகாந்தை சுத்தமாகப்  பிடிக்காது. அதையும் அப்பட்டமாக சொல்ல மாட்டார். அதைவிட வருண் ஆன என்னுடைய பதிவுலக நாகரிகம், நடத்தை  இவருக்குச் சுத்தமாக ஆகாது. பலமுறை பலவிதமாக எனக்கு அறிவுரை சொல்லி என்னை திருந்தச் சொல்லி, நாகரீகமான பதிவராக மாற்ற முயன்று கடைசிவரை தோற்றவர்னுகூட சொல்லலாம். அதனால் எனக்கும் இவருக்கும் பொதுவாக கருத்து வேற்பாடுகள் வரும். எப்போதுமே விவாதத்தில் நான் ஒரு அணியில் (தனியாக பல சமயங்களில்) இருப்பேன், இவரு என்னுடைய எதிரணியில் எனக்கு சுத்தமாக ஆகாத பதிவர்களுடந்தான் இருப்பார். பதிவுலகக் களேபகரங்களில் என்னுடைய எதிரணிதான் இவருக்கு நாகரீகமாகவும், நியாயமாகப் பேசுவதாகவும் பெரும்பாலும் அமையும். அது உண்மையாகவும் இருக்கலாம். பதிவுலகில் நானும் அவரும் சேர்ந்து ஒரே பக்கம்  இருந்து வாதிட்டதாக எனக்கு இதுவரை ஞாபகம் இல்லை!

இருவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்கிற கண்னோட்டத்தில் பார்க்காமல் இருவரையும் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்கு ஒண்ணு புரியவில்லை. பதிவுலகில் இவர் பற்றி வந்த துயரச் செய்தி பலருக்கும் சென்றடையவில்லையா? இல்லையென்றால் எல்லோரும் பதிவில் கொடுக்கப்பட்ட மின் அஞ்சல்மூலம் இவருடைய உறவினரிடம் பேசிவிட்டார்களா? துக்கம் விசாரித்துவிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனை பெரிய துயர சம்பவத்தைப் பற்றி பதிவுலகில் பலரும் கண்டுக்காமல் போவதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதால் இந்தப்பதிவை நான் எழுத வேண்டிய கட்டாயம்.

பொதுவாக நம்மில் பலர் மரணம் பற்றிப் பேசப் பிடிக்காதவர்கள்தாம். விதிவிலக்காக என்னை நானே வலியுறுத்தி மரணம் பற்றி நான் சில பதிவு எழுதி இருக்கிறேன்.  பலமுறை செய்ததுபோல் இம்முறையும் அப்பதிவை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

*****************************

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும், நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

*********************************


வேகநரி/quickthefox என்கிற பின்னூட்டப் பதிவர் ஒரு ஆள் இருக்கான். அவன் ராஜ நடராஜன் பற்றி கேள்விப்பட்ட இடத்தில்  (நம்பள்கி பதிவில்) இட்ட பின்னூட்டம் ஒன்று இங்கே!


இந்த செய்தி உண்மை தான் என்று எடுக்கும் போது மிகவும் மிகவும் துன்பமாக உள்ளது.
நம்பள்கி, உங்களை பதிவுலகை விட்டே தூக்கணும் என்கின்ற மென்டல் பதிவர் இருக்கும் போது, உங்கள் பதிவுலக பயணம் சிறக்க வாழ்த்து சொன்னாரே ராஜ நடராஜன், அவர் ஒரு கிரேட் மனிதன்.

 ********************

அவன் மெண்டல்னு சொல்வது என்னைத்தான்.:)

பதிவுலகில்  இரங்கல் செய்திகள் சொல்லுமிடத்தில்கூட தன் வெறுப்பைத் தவறாமல் உமிழும் (வேகநரினு சொல்லிக்கொண்டு திரியும்) இவனைப்போல் ஈனப்பிறவிகள் தொடர்ந்து இருப்பார்கள் என்கிற உண்மை மட்டும் ஒரு போதும் மாறாது.

Monday, January 4, 2016

உளறலில் ஆரம்பிக்கும் புத்தாண்டு 2016!

இது ஆங்கிலப் புத்தாண்டு! ஆம், ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்தப் புத்தாண்டை கொண்டாடணுமா? இதையெல்லாம் கண்டுக்காமல் விட்டுப் போக வேண்டாமா? வெள்ளைக்காரன் நம்மிடம் வலுக்கட்டாயமாகத் திணித்த ஒன்றாச்சே இது! புறக்கணிப்போம்!

சரி, ஆங்கிலத்தை விடுங்க! தமிழ்ப் புத்தாண்டாணு கொண்டாடும் ஏப்ரல் 14 புத்தாண்டாவது  தமிழர்களின் புத்தாண்டா? இல்லை சமஸ்கிரதத்தைக் கொண்டு வந்த ஹிந்துக்களால் திணிக்கப் பட்ட ஒன்றா அதுவும்? அப்படியென்றால் அதையும் கொண்டாடவோ இல்லை பெரிது படுத்தவோ தேவையில்லையே? அதையும் புறக்கணிப்போம்!

ஆமாம், தமிழரின் புத்தாண்டுணு தை மாதத்தில்  பொங்கல் தினம்தான். ஆனால் தைத்திருநாளும் தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் பல பகுதிகளில் பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றனவே? இதையும் எப்படி தமிழர் திருநாள் என உரிமை கொண்டாட முடியும்? என்றெல்லாம் பதிவெழுதி விவாதித்து வெட்டு குத்து, கெட்ட வார்த்த சண்டை எல்லாம் போட்டாச்சு..

இதெல்லாம் விதண்டாவாதமோ இல்லைனா விவாதிக்க வேண்டியதோ தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால்,

 நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மிடம் பல விசயங்கள் திணிக்கப் படுகின்றன. அப்படி நாம் விரும்பாத, நம்மிடம் திணிக்கப்பட்ட, விசயங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு   நம் கலாச்சாரமாகி விடுகிறது!  இப்படி எங்கிருந்தோ வந்த ஒன்று, நம்மிடம் திணிக்கப்பட்டுத்தான் பிறகு அது நாமே பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் நம் கலாச்சாரமாகி வந்து நிற்கிறது.

புரியலையா?

சிங்கம் இருக்கு இல்லை? அதாங்க "சிங்கிளா" வரும் சிங்கம்? :) அதில் ஆண் சிங்கம் தனக்கென்று ஒரு குடும்பம் வைத்துக்கொண்டு தாந்தான் ராஜாவாக ஒரு சின்ன கூட்டமாக வாழுமாம். வாழுதா? அந்த ராஜா வீரசிங்கத்திற்கு வயதாக ஆக, வலிமை குறையுமாம். அப்போது இன்னொரு வலிமையுள்ள இளம் சிங்கம் அதை அடித்து கொன்று விட்டு அல்லது துரத்திவிட்டு அதன் ராணியை/மனைவியை தான் அபகரித்துக்கொண்டு தன் மனைவியாக்கிக் கொள்ளுமாம். அதுமட்டுமல்ல அப்படி ஆக்கிக்கொண்டு, அதன் மாஜி கணவனுக்குப் பெற்ற அந்த ராணியின் பச்சைக்குழந்தைகளையும் இரக்கமே இல்லாமல் கொன்றுவிட்டு, அதனுடன் புதிய வாழக்கை ஆரம்பிக்குமாம். மறுபடியும் தன் குழந்தைகளை அப்பெண் சிங்கத்துடன் உறவுகொண்டு பெற்றுக்கொண்டு அவைகளை வளர்க்குமாம்.  அந்த பரிதாபத்க்குரிய பெண் சிங்கமும் அந்த கொலைகாரப் புருசனுடன் பழசை மறந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து முடிக்குமாம். நான் சிங்கம்டா னு அடிச்சுக்கிறவா எல்லாம் சிங்கம் ரொம்ப அசிங்கமான மிருகம்னு தெரிந்து கொண்டாச்சா?

சிங்கம் ஒரு மிருகம், அதான் இப்படினு சொல்லுவான் மனிதன்.  நாம் மனிதம் உள்ள மனிதன் என்பான். ஆனால், உண்மை என்னனா மனிதனும் சிங்கம் போலவே  அதே வகை  மிருகம்தான். ஆனால் என்ன ஒண்ணு, இவன் சிங்கம் செய்வதையே, நியாயப்படி, தர்மப்படிசெய்வதாக  பகவத்கீதை எல்லாம் பாடி, சட்டம், அது இதுனு பல பொய்களைச் சொல்லி சோடிச்சு,   நாகரிகமாகச் செய்வான். அதிலும்  முழுக்க முழுக்க சுயநலம்தான் இருக்கும்.

அப்படித்தான் நம் விருப்பத்திற்கு எதிராக பல விசயங்கள் நமக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு அதையே நாம் நாளடைவில் நம் கலாச்சாரம், நம் தனித்துவம் என்று அதைப் போற்றி, பெருமை பேசி, நாமும்  வாழ்ந்து மடிகிறோம். இதுதான் உண்மை.

நீங்கள் இன்று உடுத்தியுள்ள உங்கள் உடையைப் பாருங்க! நான் சொல்வது புரியும்! இல்லை இப்போவும் வேட்டிதான்/சேலைதான் கட்டியிருக்கீங்களா? ஏன் அந்த உடைகளும்  தமிழர்கள்தான் கண்டுபிடிச்சாங்கனு எப்படி சொல்ல முடியும்? இன்றைய முழுக்கால் சட்டை, சல்வார் காமிஸ் போல் அன்று நம்மிடம் வந்து ஒட்டிக்கொண்ட ஒன்றாகத்தான் அதுவும் இருக்க வேண்டும்!

திறந்த மனதுடன் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீங்கனா இதுபோல் உண்மைகள் புலப்படும். அதன் பிறகு நீங்க பெருமையாகவும், அகந்தையுடனும் செய்த எதுவுமே பெரிதாகவோ, அர்த்தமுள்ளதாகவோ தோனாது.

அதனால..

அதனால?

நம் கலாச்சாரம்தான் உலகில் முதலில் தோன்றியது என்கிற எண்ணத்தை விடுங்கள். விட்டுவிட்டு  பல உயிருக்கு நீங்கள் வாழ்வதற்காக அன்றாடம் தீங்கு செய்வதுபோல் இன்னொரு பக்கம்  உங்களால் முடிந்த நன்மையும் பல உயிர்களுக்கு செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்கள் வாழ்க்கை "தெர் மோ டைனமிக்ஸ் முதல் விதிபோல் அமையும்"  அதாவது ஓரளவுக்கு அர்த்தமுள்ளதான அமையும்.

அதில் பாதகமில்லை!

அதாவது நீங்கள் செய்த தீமைகளை, நீங்கள் செய்த நன்மைகள் சமன் செய்துவிடும்!


 Around 1850 Rudolf Clausius and William Thomson (Kelvin) stated both the First Law - that total energy is conserved. 
Later, 

“Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another.”― Albert Einstein


 இப்போ ஐண்ஸ்டைன் சொன்னது, க்ளாசியஸ் மற்றும் கெல்வின் சொன்னதுதான். சரியா?

சரி, க்ளாசியஸ்க்கு முன்னாலே இதே சிந்தனை வேற யாருக்கும் வராமல் இருந்து இருக்கணும்னு இல்லை. ஆக அறிவியல் கலாச்சாரம் போலதான். இன்னொருவருடையதை நாம் தழுவி நம்முடையதாக பெருமை பேசுகிறோம்.:)

அதை விடுத்து, எனக்கு அது வேணும், இது வேணும், "நான்" "நான்"னு  சுயநலமாகவே சாதாரண மனுஷ சென்மமாக வாழ்ந்து முடித்தால்?

அப்படி வாழ்ந்து மடிந்தால்?  தெர்மோடைனமிக்ஸ் ரெண்டாம் விதிப் படி உங்க வாழ்க்கை முடியும்.

அதாவது உலகை உங்களால் முடிந்தளவுக்கு இன்னும் கொஞ்சம் நாசமாக்கிவிட்டு செல்வீர்கள். அதை முடிந்தால் தவிருங்கள்!

The second law of thermodynamics states that the degree of disorder is always increasing in the universe.
அதாவது, உலகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. மனிதனின் சுயநல இழிச் செயல்களால்!

வருண்!!

இப்போ எதுக்கு ஃபிசிக்ஸ்/கெமிஸ்ட்ரி எல்லாம்? 

தலைப்பின் முதல் வரியை இன்னொரு தர வாசியுங்கள்!