நான் வளர்ந்த தமிழ் மண்ணில் என்னுடைய இஸ்லாமிய நண்பர்களின் அன்னையர்கள், சகோதரிகள் முக்காடு அணிவதைத்தான் நான் முதன்முதலில் பார்த்து இருக்கிறேன். எங்க ஆத்துலே உள்ள பெண்கள் எல்லாம் யாரும் முக்காடு அணிவதில்லை! அதனால இந்த முக்காடு அணிவது இஸ்லாமியர்களுடைய கலாச்சாரம் என்று நம்பி அதைப் பற்றி ரொம்ப ஆராய்ந்ததில்லை. இன்னும் ஒண்ணு, நான் வளர்ந்த/வசித்த பகுதியில் பெரும்பாலும் இஸ்லாமியப்பெண்கள் "பர்தா" அணிவதில்லை.
அப்புறம் ஒரு சில ஹிந்திப்படங்களில் வட இந்திய இந்துப் பெண்கள் முக்காடு அணிந்து வருவதை பார்த்து இருக்கிறேன். ஒருவேளை வட இந்தியாவில் வயதானவர்கள் அல்லது கணவனை இழந்தவர்கள் மட்டும் அணிவார்களோ? என்ற சந்தேகம் வந்ததுண்டு. அப்போ, இதையெல்லாம் பற்றி ரொம்ப ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிட்டேன்.
இப்போ "உறவுகள் தொடர்கதை" னு விஜய் டி வி ல வருகிற தமிழாக்கம் செய்யப்பட்ட வடமொழி சீரியல் பார்க்கும்போது அதில் வரும் ஆண்கள் எல்லாம் பெரிய பெரிய பொட்டு வச்சுருக்காங்க இல்லைனா நாமம் போட்டு இருக்காங்க. அதனால அவங்க இந்துக்களாத்தான இருக்கனும்? அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே முக்காடு அணிந்து இருக்காங்க. வீட்டைவிட்டு வெளியே வரும்போது அல்ல! கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் இவர்கள் வீட்டில் இருக்கும்போதே, முக்காடு அணிந்துதான் இருக்காங்க!
இந்த சீரியலில் வரும் இந்துக்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்?
இந்து மதம் இஸ்லாமிய மதத்தைவிட பழமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கெடையாது. அதனால இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிவது என்கிற வழக்கம், இதுபோல வட இந்திய இந்துப்பெண்களிடம் இருந்து இஸ்லாமியர்களுக்கும் தாவிய ஒரு பழக்கவழக்கமா இருக்குமோ? னு யூகிக்கத் தோனுது. யாராவது விபரம் தெரிந்த பெரியவா இந்துப் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள்னு சொன்னால் நல்லாயிருக்கும்.
உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன், ப்ளீஸ்!