Thursday, January 7, 2016

ராஜ நடராஜன் மறைவு!

ராஜ நடராஜன், கடந்த 7-8 ஆண்டுகளா எனக்கு வலையுலகில் நன்றாகத் தெரிந்தவர்.  இனிமேல் இவர் கருத்துக்களை நாம் காண இயலாது. முதலில் இவர் மறைந்துவிட்டதாக துயரச்செய்தி நம்பள்கி தளத்தில் வந்தபோது, இது நிச்சயம் புரளியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பல மாதங்கள் முன்புகூட இக்பால் செல்வன் பற்றிய செய்திகூட பொய்யானதே. அதேபோல்தான் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும்போல் நானும் நினைத்தேன். ஆனால்  என் மனவோட்டத்தில் ஜோதி கணேசன் (ஜோதிஜி) அவருடைய நட்பு வட்டத்தில் உள்ளவரரென்பதால் அவருக்குத்தான் உண்மை தெரியும் என்று அவருடைய பின்னூட்டத்திற்காக காத்திதிருந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று.

ஜோதி கணேசன், "வந்த செய்தி உண்மைதான் என்றும் ராஜ நடராஜன் மறைந்துவிட்டார்!" என்றும் சொல்லி இந்தப் புரளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஜனவரி மூன்று வரை சாதாரணமாக பதிவுலகில் உலவிக்கொண்டிருந்தவர். எந்தவிதமான உடல் நலக்குறைவு இருப்பதாகவும் தெரியவில்லை. தேள் கடி இதய நோயுக்கு மருந்தாம் என்றெல்லாம் பதிவு எழுதிக்கொண்டு இருந்தார். திடீர்னு "கார்டியாக் அர்ரெஸ்ட்" என்கிறார்கள். மற்றபடி வேறு விபரங்கள் தெரியவில்லை. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது? அவர் மறைந்து விட்டார்.

ஒரு முறை ஒரு கிருஸ்தவ நண்பர் இதுபோல் ஆக்சிடெண்ட்டில் இறந்துவிட்டார். அப்போது இறுதிச் சடங்கு செய்யும்போது பாதிரியார்கள் சொன்னார்கள். அதாவது இந்த இள வயதிலேயே அவர் முதிர்ச்சியடைந்து, முழுத்தகுதியும் பெற்றுவிட்டதால் ஜீசஸ் அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டார் என்று. அதேபோல் நடராஜன் வாழ்வு இந்த இளவயதில் முழுமை பெற்றுவிட்டது போலும். அதனால் அவர் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார்- யாரிடமும் சொல்லாமல்.

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய ஒரு கவிதை இங்கே!


*********************************

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!
**********************************************

 ராஜ நடராஜன் பற்றி நான் அறிந்த சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.

என்னுடைய அனுமானத்தில் திரு நடராஜன் அரசியல் சம்மந்தமான பதிவுகளில் மட்டும்தான் மிகவும் ஆர்வம் காட்டுபவர். நான் ஆரம்பத்தில் எழுதிய ஒரு சில காதல் கதைகள் படித்துவிட்டு "வருண் எனக்கு உங்க கதை படிச்சா தூக்கம்தான் வருகிறது" என்று சொல்லியிருக்கிறார்னு கூட எனக்கு நேற்று  நடந்துபோல் ஞாபகம் இருக்கிறது. காதல்கதைகள், தத்துவக் கட்டுரைகள்  எல்லாம் இவரை  அரசியல் ஈர்ப்பதுபோல் ஈர்ப்பதில்லை.

பதிவுகள் மட்டுமன்றி, இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் மிகவும் நாகரீகமாக இருக்கும்- அமுதவன் சார் சரியாகச் சொன்னதுபோல் அது பொதுவாக வம்பு கலந்துதான் ஒவ்வொரு பின்னூட்டமும் முடியும். அதாவது முடிவதுபோல் தொடர வேண்டித் தொக்கி நிற்கும்.

பொதுவாக ஒரு  சில விவாதங்களில் எனக்கு  எரிச்சல் கோபம் வரும்போது பின்னூட்டங்களில் சாதாரணமாக கெட்டவார்த்தை  சரளமாக வரும். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, கெட்டவார்த்தை எளிதில் வரும் எனக்கு . ஆனால்  இதுவரை  ராஜ நடராஜன் கெட்டவார்த்தையை மறந்துகூட பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. அந்த வகையில் எனக்கும் நடராஜனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மேலும் ராஜ நடராஜன் ஒரு பக்கா ஒலகநாயகன் விசிறி. என்னுடைய கணிப்பில் ஜெயகாந்தன் விசிறி என்றும்கூட சேர்த்துச்  சொல்லலாம். தன்னை சிவாஜி விசிறி என்று சொல்லிக்கொள்வார் ஆனால்  இவர் சிவாஜி நடிப்பை ரசித்து சிலாகித்து எங்கேயும் எழுதியதை நான் இதுவரைப் பார்த்ததில்லை.

இவருக்குப் பிடிக்காததுனு சொல்ல வந்தால்.. கலைஞர் கருணாநிதியை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால அதையும் அப்பட்டமாகச்  சொல்லமாட்டார். பூடகமாக நாகரீகமாகத்தான் சொல்லுவார்- வம்பு கலந்து. ரஜனிகாந்தை சுத்தமாகப்  பிடிக்காது. அதையும் அப்பட்டமாக சொல்ல மாட்டார். அதைவிட வருண் ஆன என்னுடைய பதிவுலக நாகரிகம், நடத்தை  இவருக்குச் சுத்தமாக ஆகாது. பலமுறை பலவிதமாக எனக்கு அறிவுரை சொல்லி என்னை திருந்தச் சொல்லி, நாகரீகமான பதிவராக மாற்ற முயன்று கடைசிவரை தோற்றவர்னுகூட சொல்லலாம். அதனால் எனக்கும் இவருக்கும் பொதுவாக கருத்து வேற்பாடுகள் வரும். எப்போதுமே விவாதத்தில் நான் ஒரு அணியில் (தனியாக பல சமயங்களில்) இருப்பேன், இவரு என்னுடைய எதிரணியில் எனக்கு சுத்தமாக ஆகாத பதிவர்களுடந்தான் இருப்பார். பதிவுலகக் களேபகரங்களில் என்னுடைய எதிரணிதான் இவருக்கு நாகரீகமாகவும், நியாயமாகப் பேசுவதாகவும் பெரும்பாலும் அமையும். அது உண்மையாகவும் இருக்கலாம். பதிவுலகில் நானும் அவரும் சேர்ந்து ஒரே பக்கம்  இருந்து வாதிட்டதாக எனக்கு இதுவரை ஞாபகம் இல்லை!

இருவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்கிற கண்னோட்டத்தில் பார்க்காமல் இருவரையும் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்கு ஒண்ணு புரியவில்லை. பதிவுலகில் இவர் பற்றி வந்த துயரச் செய்தி பலருக்கும் சென்றடையவில்லையா? இல்லையென்றால் எல்லோரும் பதிவில் கொடுக்கப்பட்ட மின் அஞ்சல்மூலம் இவருடைய உறவினரிடம் பேசிவிட்டார்களா? துக்கம் விசாரித்துவிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனை பெரிய துயர சம்பவத்தைப் பற்றி பதிவுலகில் பலரும் கண்டுக்காமல் போவதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதால் இந்தப்பதிவை நான் எழுத வேண்டிய கட்டாயம்.

பொதுவாக நம்மில் பலர் மரணம் பற்றிப் பேசப் பிடிக்காதவர்கள்தாம். விதிவிலக்காக என்னை நானே வலியுறுத்தி மரணம் பற்றி நான் சில பதிவு எழுதி இருக்கிறேன்.  பலமுறை செய்ததுபோல் இம்முறையும் அப்பதிவை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

*****************************

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும், நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

*********************************


வேகநரி/quickthefox என்கிற பின்னூட்டப் பதிவர் ஒரு ஆள் இருக்கான். அவன் ராஜ நடராஜன் பற்றி கேள்விப்பட்ட இடத்தில்  (நம்பள்கி பதிவில்) இட்ட பின்னூட்டம் ஒன்று இங்கே!


இந்த செய்தி உண்மை தான் என்று எடுக்கும் போது மிகவும் மிகவும் துன்பமாக உள்ளது.
நம்பள்கி, உங்களை பதிவுலகை விட்டே தூக்கணும் என்கின்ற மென்டல் பதிவர் இருக்கும் போது, உங்கள் பதிவுலக பயணம் சிறக்க வாழ்த்து சொன்னாரே ராஜ நடராஜன், அவர் ஒரு கிரேட் மனிதன்.

 ********************

அவன் மெண்டல்னு சொல்வது என்னைத்தான்.:)

பதிவுலகில்  இரங்கல் செய்திகள் சொல்லுமிடத்தில்கூட தன் வெறுப்பைத் தவறாமல் உமிழும் (வேகநரினு சொல்லிக்கொண்டு திரியும்) இவனைப்போல் ஈனப்பிறவிகள் தொடர்ந்து இருப்பார்கள் என்கிற உண்மை மட்டும் ஒரு போதும் மாறாது.

50 comments:

SathyaPriyan said...

Sad to hear this Varun. May his soul RIP. I have been hearing many such incidents off late.

I heard that when we got independence from the British our average life expectancy was around 37 years for male and much lesser for female. I am not sure if it is true. But if it is, are we going backwards in life?

Amudhavan said...

வருண் கொஞ்சம் கனத்த இதயத்தோடுதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். ராஜநடராஜனோடு பெரிதாக பழக்கமெல்லாம் கிடையாது. பதிவுலகில் சும்மாவே அலட்டிக்கொள்ளும் சில பதிவர்கள் மத்தியில் உண்மையான திறமையோடு அலட்டல் இல்லாமல் எழுதும் பதிவர்களை எனக்குப் பிடிக்கும். அந்தவகையில் ராஜநடராஜனையும் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன், இலங்கைப் பிரச்சினையைப் பற்றி மிக ஆழமான கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.

ராஜநடராஜன் விஷயமாய் நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்களை நானும் உணர்ந்தேன், அல்லது கவனித்தேன். ஒன்று, யாரையும் மிக மோசமான வார்த்தைகளில் எழுதாதவரான ராஜநடராஜன் மறைவு பற்றி பதிவர்கள் யாரும் போதிய முக்கியத்துவம் தராமல் இருப்பது. இத்தனைக்கும் அவர் பதிவுலகில் ஓரளவு நன்கு பரிச்சயமானவர். பல ஆண்டுகளாக பதிவுலகில் உலா வருகிறவர்.

இரண்டு- நீங்கள் நம்பள்கி தளத்தில் எழுதியிருந்ததுபோல அவர் சமீப காலமாக ஒரே மனநிலையில் எதையும் எழுதவில்லை என்பது. ஒரு பின்னூட்டத்திலேயே பல முரண்பாடுகளுடன்தான் எழுதிக்கொண்டிருந்தார். 'என்ன இந்த மனுஷனுக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ இப்படி எதையோ சொல்ல வந்து என்னென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறாரே' என்று யோசித்தேன். அதனைச் சரியாக முடிபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.

பின்னூட்டங்களைத் தாண்டி மெயில் மூலம் அவருடன் இரண்டொரு தடவை தொடர்பில் இருந்துள்ளேன். மற்றபடி பதிவர்களில் எனக்குப் பிடித்த பதிவராக அவரும் இருந்தார் என்பதனால் அவரது மரணம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் செய்தியை நண்பர் ஜோதிஜி மூலம் தொலைபேசிவழி உறுதிசெய்துகொண்டபோது மேலும் வேதனையாக இருந்தது.

நீங்களாவது அவரைப் பற்றி இந்த அளவுக்கு எழுதினது நிச்சயமாகவே ஒரு ஆறுதலாக இருக்கிறது.

boopathy perumal said...

RIB

boopathy perumal said...

இராஜ நடராஜன் மறைவு வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த அஞ்சலிகள்

Angel said...

deeply saddened by the news.. :( nesan shared nambalkis post in fb ..only then i knew about this ..
May his soul rest in peace.

ஸ்ரீராம். said...

வருத்தத்துக்குரிய செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனையோ செலவுகள் செய்யும் நாம், பொழுது போக்கும் நாம், நம் உடல்நிலை குறித்த அக்கறையில் அலட்சியமாக இருந்து விடுகிறோம். அதற்குக் கொடுக்கும் விலை தாங்க முடியாத இழப்பாகி விடுகிறது.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

என் கார்த்தியை யாரும் மிஸ் செய்யக் கூடாது என்ற ஆதங்கத்திலும் அவனை யாரும் மறந்து விடக் கூடாதே என்ற ஒரு வெறியிலும்தான் கார்த்தியின் vijayanagar blogspot .com ஐ நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.( நான் கார்த்திக் அம்மா ) .கார்த்தியும் ஒரு இடத்தில்
'' '' '' நாம் இறந்தபிறகு யார் அழுகிறார்கள் என்பதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோமே '' '' ''என்று எழுதியிருப்பான்.
என் இதயத்தை கூறு போட்ட வார்த்தைகள்.
என்றும் தீரா ,
குறையா வேதனையுடன்
கார்த்திக் அம்மா

--
http://vijayanagar.blogspot.com/2008/05/karthiks-resume.html

மகிழ்நிறை said...

ராஜ் நடராஜன் என்கிற பதிவர் பற்றியே நான் இப்போ தான் தெரிஞ்சுக்கிறேன். உங்கள் பதிவில் மூலம் அவர்க்கு அத்தனை ஒண்ணும் வயசாகவில்லை என தெரிகிறது. அவர் பெற்றது சொர்க்கம், விடுதலை (பாதிரியாரின் கூற்றுப்படி) என்பதெல்லாம் வேறு...அவர் குடும்பத்தாரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வருண் said...

*** SathyaPriyan said...

Sad to hear this Varun. May his soul RIP. I have been hearing many such incidents off late.

I heard that when we got independence from the British our average life expectancy was around 37 years for male and much lesser for female. I am not sure if it is true. But if it is, are we going backwards in life? ***

Sathya priyan!

As soon as I heard this news and the cardiac arrest, I remembered your good friend who lived in mumbai (Mr. Selvakumar?) who passed away couple of years ago. I recall how painful it was to you when you shared that in your blog. This kind of sudden demise happens rarely but I hear such things more often these days.

ILA (a) இளா said...

அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் :(

ஊமைக்கனவுகள் said...


வணக்கம்.

உங்களின் தளத்தைத் தொடரத் தொடங்கிய நாளிலிருந்து இப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள பதிவை நான் படித்ததில்லை. இது மரணம் பற்றிதென்பது ஒரு முரண். என்றாலும் இது என்னைப் பாதித்தற்குக் காரணம், மரணம் தொடர்புடையதாலா, கவிதை, கருத்து, பாடல், ஒரு நல்ல மனதினை அவர் எழுத்தினை அவர் கருத்தினை இனிப் பெறப்போவதில்லை என்கிற மன அழுத்தத்தினாலா, வாசிக்கின்ற மனதில் மெல்லத் தைத்திறங்கி வலியை மிகுவிக்கும் இந்த எழுத்தின் ஊசிகளாலா என்பதைச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்பதிவின் எழுத்தும் நடையும் என்னை ஏதோ செய்கின்றன.

அதற்காய்ச் சிவாஜி படம் பார்த்து அழுதவனில்லை. அத்தகைய கொடூர மனதோ அல்லது வெறும் நடிப்புத்தானே புரிதலோ ஏதோ ஒன்று என்னிடம் இருந்திருக்கிறது.

திரைப்படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை விடத் திரையில்லாமல், ஒலியில்லாமல், இசையில்லாமல் அதிகமாக இதுபோன்ற எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

திரு. இராஜ நடராஜன் அவர்கள் 31-12-2015 அன்று ஜல்லிக்கட்டு பற்றி நானிட்டிருந்த பதிவொன்றிற்கு முதல்முறையாக வந்திருந்தார். அதில் சி.சு செல்லப்பாவின் வாடி வாசல் குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.

எழுத்துகளை உயிரூட்டிக் கண்முன் மாயபிம்பங்களை உண்மையென நம்பும்படி உருவாக்கும் ரசவாதத்தை ஏற்படுத்திய தமிழின் மிகச்சில எழுத்துகளில் அவர் குறிப்பிட்ட இந்நூலும் ஒன்று.

எனவே அவர் யாரென்று அறிய அவர் பெயரைத் தொடர்ந்து சென்றபோது,
“Profile Not Available

The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.”
என்றே வந்தது. அவர் பதிவுகளின் முகவரியும் தெரியவில்லை.

அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் என் வலைக்கு முதலும் கடைசியுமாக வந்து கருத்திட்ட சில பின்னூட்டக்கார்களின் வரிசையில் அவரும் சேர்ந்தாரோ என எண்ணியிருந்தேன்.

தங்களின் பதிவு என்னை உலுக்கிவிட்டது.

அவரின் கண்பட்ட கருத்திட்ட பதிவை மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்.

எங்கெங்கோ இருந்து முகமறியாமல் உலவுகின்ற மாயவெளியில், எழுத்தின் வாயிலாக மட்டுமே அறிந்தவரைப் பற்றி எழுதப்படுகின்ற, பிரதிபலனற்ற இது போன்ற நினைவுச் சுவடுகள் எழுத்துகளில் இறவாமல் இருக்கின்ற அன்னார் போன்றோர்க்கு நாம செய்யும் மெய்யான அஞ்சலிகள்.

உங்களை வணங்குகிறேன்.

அவரது தள முகவரி இருப்பின் தந்துதவ வேண்டுகிறேன்.

நன்றி.

Peppin said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

வருண் said...

***Amudhavan said...

வருண் கொஞ்சம் கனத்த இதயத்தோடுதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். ராஜநடராஜனோடு பெரிதாக பழக்கமெல்லாம் கிடையாது. பதிவுலகில் சும்மாவே அலட்டிக்கொள்ளும் சில பதிவர்கள் மத்தியில் உண்மையான திறமையோடு அலட்டல் இல்லாமல் எழுதும் பதிவர்களை எனக்குப் பிடிக்கும். அந்தவகையில் ராஜநடராஜனையும் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன், இலங்கைப் பிரச்சினையைப் பற்றி மிக ஆழமான கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.

ராஜநடராஜன் விஷயமாய் நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்களை நானும் உணர்ந்தேன், அல்லது கவனித்தேன். ஒன்று, யாரையும் மிக மோசமான வார்த்தைகளில் எழுதாதவரான ராஜநடராஜன் மறைவு பற்றி பதிவர்கள் யாரும் போதிய முக்கியத்துவம் தராமல் இருப்பது. இத்தனைக்கும் அவர் பதிவுலகில் ஓரளவு நன்கு பரிச்சயமானவர். பல ஆண்டுகளாக பதிவுலகில் உலா வருகிறவர்.

இரண்டு- நீங்கள் நம்பள்கி தளத்தில் எழுதியிருந்ததுபோல அவர் சமீப காலமாக ஒரே மனநிலையில் எதையும் எழுதவில்லை என்பது. ஒரு பின்னூட்டத்திலேயே பல முரண்பாடுகளுடன்தான் எழுதிக்கொண்டிருந்தார். 'என்ன இந்த மனுஷனுக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ இப்படி எதையோ சொல்ல வந்து என்னென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறாரே' என்று யோசித்தேன். அதனைச் சரியாக முடிபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.

பின்னூட்டங்களைத் தாண்டி மெயில் மூலம் அவருடன் இரண்டொரு தடவை தொடர்பில் இருந்துள்ளேன். மற்றபடி பதிவர்களில் எனக்குப் பிடித்த பதிவராக அவரும் இருந்தார் என்பதனால் அவரது மரணம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் செய்தியை நண்பர் ஜோதிஜி மூலம் தொலைபேசிவழி உறுதிசெய்துகொண்டபோது மேலும் வேதனையாக இருந்தது.

நீங்களாவது அவரைப் பற்றி இந்த அளவுக்கு எழுதினது நிச்சயமாகவே ஒரு ஆறுதலாக இருக்கிறது.***

அமுதவன் சார்,

எனக்கு அவர் 2008 லேயே அறிமுகம் ஆனவர். அவர் அனுகுமுறை மிகவும் மெச்சூராக இருக்கும். வார்த்தை பிரயோகம், மற்றும் அதை வெளியிடும்விதம் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியாத அளவு கவன்மாக எழுத்தப்படும்.

என்னுடைய பாணி என்னவென்றால் "அண்டர் டாக்" பக்கம் இருந்து வாதிடுவது. அதனால பொதுவாக நான் இஸ்லாமியப் பதிவர்கள் ஆதரவாக கருத்துக்களை முன் வைப்பேன். அப்போது இன்னொரு அணி அதற்கு எதிராக வாதிடும். பொதுவாக நடராஜன் அந்த அணிக்கு ஆதரவாக இருப்பார். அலிருந்து பொதுவாக நானும் அவரும் எதிர்ரணியில்தான் இருப்போம்- கடைசிவரை.

அவரைப்பற்றி எழுத தகுதியுள்ளவர்கள், நண்பர்கள் ஏகப்பட்ட பேர் இருப்பதால் நான் அமைதி காக்கலாம் என்றுதான் இருந்ந்தேன். ஆனால் பதிவுலகில் இரங்கல் சொல்லக்கூட ஆட்கள் வராதமாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டதும், வேற வழியில்லாமால் நான் எழுத வேண்டியதாகிவிட்டது. அதற்காக ஜோடிச்சு எழுதமுடியாது என்று பொய் கலக்காமல் மனிதாபிமானியாக நான் என்னால் முடிந்ந்தளவு எழுதி நாலு பேருக்கு தெரியப் படுத்தினேன்.

அவருடைய க்ளோஸ் நண்பர்கள் இதைக் கேள்விப்பட்டு இன்னும் அவரைப்பற்றிப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

அவரின் மறைவுச் செய்தி ஜோதிஜி அண்ணனின் முகநூல் பகிர்வின் மூலமாகத்தான் அறிந்தேன். அவருடன் எனக்கு பதிவராய்த் தொடர்பு இல்லை... அவரை வாசித்ததும் இல்லை... ஆனால் ஜோதிஜி அண்ணா கொடுத்த இணைப்பின் மூலமாகச் சென்று வாசித்தேன்... இறப்பதற்கு முன்பு வரை பதிவெழுதியிருப்பார் போலிருக்கிறது...

இப்படிப்பட்ட திடீர் இழப்புக்கள் மனசை ஏதோ செய்கிறது...

வருண் said...

***boopathy perumal said...

இராஜ நடராஜன் மறைவு வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த அஞ்சலிகள்

January 8, 2016 at 12:58 AM***

இவர் மறைவு சம்மந்தமான உங்கள் பின்னூட்டங்களை பிற தளங்களில் வாசித்தேன். ரொம்ப காலமாக வலையுலகில் உள்ள உங்களை நான் இப்போதுதான் கவனிக்கிறேன். இங்கும் அஞ்சலி செலுத்த வந்தமைக்கு நன்றி.

வருண் said...

***Angelin said...

deeply saddened by the news.. :( nesan shared nambalkis post in fb ..only then i knew about this ..
May his soul rest in peace.***

அவருக்கு சிம்ப்டம்ஸ் எதுவும் இல்லாமல் ஹெல்த்தியாகவே கடைசிவரை இருந்து இருப்பார் போல தோனுது. கல்யாணம் ஆனவர்னு நினைக்கிறேன். குழந்தைகள் உண்டா என்னனு தெரியவில்லை. அவரு திடீர்னு போயி சேர்ந்துட்டார். குடும்பத்தினர்தான் பாவம். :(

வருண் said...

***ஸ்ரீராம். said...

வருத்தத்துக்குரிய செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனையோ செலவுகள் செய்யும் நாம், பொழுது போக்கும் நாம், நம் உடல்நிலை குறித்த அக்கறையில் அலட்சியமாக இருந்து விடுகிறோம். அதற்குக் கொடுக்கும் விலை தாங்க முடியாத இழப்பாகி விடுகிறது.***

பொதுவாகவே "இக்னோரன்ஸ்" "நல்லாத்தானே இருக்கிறோம்..எதுவும் இருக்காது" என்கிற மனநிலை மனவியாதி வராமல் இருக்க உதவும்தான். ஆனால் இதுபோல் மாஸ்ஸிவ் கார்டியாக் அர்ரெஸ்ட் ஒரு சிலருக்கு வந்து விடுகிறது. கவனக்குறைவுக்கு உயிர் விலை என்பது அதிகம்தான். :(

வருண் said...

*** Ponniyinselvan/karthikeyan said...

என் கார்த்தியை யாரும் மிஸ் செய்யக் கூடாது என்ற ஆதங்கத்திலும் அவனை யாரும் மறந்து விடக் கூடாதே என்ற ஒரு வெறியிலும்தான் கார்த்தியின் vijayanagar blogspot .com ஐ நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.( நான் கார்த்திக் அம்மா ) .கார்த்தியும் ஒரு இடத்தில்
'' '' '' நாம் இறந்தபிறகு யார் அழுகிறார்கள் என்பதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோமே '' '' ''என்று எழுதியிருப்பான்.
என் இதயத்தை கூறு போட்ட வார்த்தைகள்.
என்றும் தீரா ,
குறையா வேதனையுடன்
கார்த்திக் அம்மா

--
http://vijayanagar.blogspot.com/2008/05/karthiks-resume.html***

காலம் எந்த ஒரு பேரிழப்பின் வேதனையை குறைக்கும், நாட்கள் ஆக ஆக மனது கொஞ்சம் இலகுவாகும் என்கிற வாதங்கள் எல்லாம் உங்களைப் பார்க்கும்போது உண்மை இல்லை என்றுனுதான் எனக்குத்தோனுது. :(

உங்க தொடுப்பைத் தொடர்ந்து போய் வாசிக்கிறேன். :(

வருண் said...

***Mythily kasthuri rengan said...

ராஜ் நடராஜன் என்கிற பதிவர் பற்றியே நான் இப்போ தான் தெரிஞ்சுக்கிறேன். ***

பதிவுலகில் ஏகப்பட்ட மாற்றங்கள், மைதிலி. நாம் அடியெடுத்து வைக்கும் நேரத்தைப் பொருத்துத்தான் நம்க்கு தெரிந்ந்த, தெரியாத பதிவர்கள் அமைகிறார்கள்.

**உங்கள் பதிவில் மூலம் அவர்க்கு அத்தனை ஒண்ணும் வயசாகவில்லை என தெரிகிறது. அவர் பெற்றது சொர்க்கம், விடுதலை (பாதிரியாரின் கூற்றுப்படி) என்பதெல்லாம் வேறு...அவர் குடும்பத்தாரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.**

I think I have seen his photo in thulasi teacher 60th wedding ceremony and I think he attended that functions (people shared photos here and there) if I remember correctly. He was married but not sure whether he has had kids. Yes, he was young! :(

வருண் said...

***Raja ILAmurugu said...

அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் :(***

வாங்க இளா. உங்களுக்கு நன்கு தெரிந்த்வராகத்தானே இருக்கும்? இப்போ எல்லாம் யாருக்கு யாரைத் தெரிந்து இருக்கும் என்கிறதுகூட சரியாகப் புரியமாட்டேன் என்கிறது.

வருண் said...

***ஊமைக் கனவுகள் said...


வணக்கம்.

உங்களின் தளத்தைத் தொடரத் தொடங்கிய நாளிலிருந்து இப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள பதிவை நான் படித்ததில்லை. இது மரணம் பற்றிதென்பது ஒரு முரண். என்றாலும் இது என்னைப் பாதித்தற்குக் காரணம், மரணம் தொடர்புடையதாலா, கவிதை, கருத்து, பாடல், ஒரு நல்ல மனதினை அவர் எழுத்தினை அவர் கருத்தினை இனிப் பெறப்போவதில்லை என்கிற மன அழுத்தத்தினாலா, வாசிக்கின்ற மனதில் மெல்லத் தைத்திறங்கி வலியை மிகுவிக்கும் இந்த எழுத்தின் ஊசிகளாலா என்பதைச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்பதிவின் எழுத்தும் நடையும் என்னை ஏதோ செய்கின்றன.

அதற்காய்ச் சிவாஜி படம் பார்த்து அழுதவனில்லை. அத்தகைய கொடூர மனதோ அல்லது வெறும் நடிப்புத்தானே புரிதலோ ஏதோ ஒன்று என்னிடம் இருந்திருக்கிறது.

திரைப்படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை விடத் திரையில்லாமல், ஒலியில்லாமல், இசையில்லாமல் அதிகமாக இதுபோன்ற எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

திரு. இராஜ நடராஜன் அவர்கள் 31-12-2015 அன்று ஜல்லிக்கட்டு பற்றி நானிட்டிருந்த பதிவொன்றிற்கு முதல்முறையாக வந்திருந்தார். அதில் சி.சு செல்லப்பாவின் வாடி வாசல் குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.

எழுத்துகளை உயிரூட்டிக் கண்முன் மாயபிம்பங்களை உண்மையென நம்பும்படி உருவாக்கும் ரசவாதத்தை ஏற்படுத்திய தமிழின் மிகச்சில எழுத்துகளில் அவர் குறிப்பிட்ட இந்நூலும் ஒன்று.

எனவே அவர் யாரென்று அறிய அவர் பெயரைத் தொடர்ந்து சென்றபோது,
“Profile Not Available

The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.”
என்றே வந்தது. அவர் பதிவுகளின் முகவரியும் தெரியவில்லை.

அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் என் வலைக்கு முதலும் கடைசியுமாக வந்து கருத்திட்ட சில பின்னூட்டக்கார்களின் வரிசையில் அவரும் சேர்ந்தாரோ என எண்ணியிருந்தேன்.

தங்களின் பதிவு என்னை உலுக்கிவிட்டது.

அவரின் கண்பட்ட கருத்திட்ட பதிவை மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்.

எங்கெங்கோ இருந்து முகமறியாமல் உலவுகின்ற மாயவெளியில், எழுத்தின் வாயிலாக மட்டுமே அறிந்தவரைப் பற்றி எழுதப்படுகின்ற, பிரதிபலனற்ற இது போன்ற நினைவுச் சுவடுகள் எழுத்துகளில் இறவாமல் இருக்கின்ற அன்னார் போன்றோர்க்கு நாம செய்யும் மெய்யான அஞ்சலிகள்.

உங்களை வணங்குகிறேன்.

அவரது தள முகவரி இருப்பின் தந்துதவ வேண்டுகிறேன்.

நன்றி.***

வாங்க ஜோசப் விஜூ!

உங்க பதிவில் பின்னூட்டத்தில் தொடுப்புகள் கொடுத்துள்ளேன். தயவு செய்து அவைகளைப் பார்க்கவும்.

நிஷா said...

நான் இந்த பதிவுலகில் புதிதாய் நுழைந்தேன்.ராஜ நடராஜன் அவர்கள் பதிவுகளை படித்ததும் இல்லை.ஆனாலும் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் ஏதோ நமக்கு அறிமுகாமன்வர் நம்ம விட்டு அகன்றதாய் தோன்றியது. அதிலும் மரணத்தின் கடைசி நொடி வரை பதிவெழுதி நோயில்லாமல் வலியில்லாமல் போய் விட்டார் எனும் போது மனம் கனக்கின்றது.

பதிவர் என்ற வகையில் பதிவுலகில் ஐக்கியம்,ஒற்றுமை, மனித்னேயம் பேணப்பட வலைப்பதிவில் முதன்மையாயிருப்பவர்கள் இதை குறித்து அறிவித்து பதிவொன்றை வெளியிட்டு பதிவுலகம் சார்பாய் ஜஸ்ட் ஒரு மலர்வளையமாவது வைத்து இறுதி மரியாதை செலுத்தி இருக்கலாம்.

நான் இங்கே புதிதாய் நுழைந்ததால் இம்மாதிரி கருத்துக்கள் எனக்கெதுக்கு என தோணலாம். இருக்கும் வரை ஐயா, அண்ணா, தம்பி என சொல்லி விட்டு இனியில்லை என்றாகும் போது பத்தோடு பதினொறாய் போய் விடுதல் மரணத்தினை விட கொடியது!

ஷோ சாட் வருண் அவர்களே! மனம் வருத்துகின்றேன். அன்னாரின் தீடிர் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் சீக்கிரம் இவ்விழப்பிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கின்றேன்.

இன்று அவர் சென்றார். நாளை நாமும் செல்வோம் எனும் போது என்னைப்பொறுத்தவரை மரணம் விடுதலை தான்.

நிஷா said...

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

எத்தனை உண்மையான வார்த்தைகள்.
நானும் தான் அன்பு பாராட்ட தெரிந்த எனக்கு அவர்களின் காணும் குறைபாடுகளையும் சட்டென சொல்லி திருத்த வைக்கும் குணமும், தப்பை தப்பென சுட்டுவதனாலும் என்னை பலருக்கு பிடிப்பதில்லை.ஆனாலும் என்னை வெறுத்து ஒதுக்கியதாய் நினைக்கும் எவரையும் நான் வெறுத்ததில்லை.ஒரு மரணம் எத்தகையை சிந்தனையை தருகின்றது. மரணத்தின் பின்னும் வன்மம் விரோதம் பாராட்டுவோர் கொண்டு வந்ததும் கொண்டு செல்லபோவதும் தான் என்ன?

பழமைபேசி said...

ஆமாங்க... மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கு... அவருடைய தங்கை கணவரை அழைத்துப் பேசினேன்.... we lost a great man... :-((

Kite said...

அதிர்ச்சியளிக்கும் செய்தி. அமுதவன், வருண், வவ்வால், இக்பால் செல்வன், செங்கோவி பதிவுகளில் இவரது பின்னூட்டங்களைப் படித்துள்ளேன். நிறைய விஷய ஞானம் உள்ளவர்.

குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா நற்கதி எய்ய என் பிரார்த்தனைகள்.

bandhu said...



ராஜ நடராஜன் மறைவு மிக வருத்தம் அளித்தது. ஒரு சக immigrant ஆக மிகவும் வருந்தினேன்.

what you have done here is awesome. கருத்து வேறுபாடு வேறு. வெறுப்பு வேறு என்று நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.

நெருங்கியவர்கள் உடல் நிலை பாதிக்கப் பட்டால் எதுவுமே செய்ய இயலாமல் இருப்பது தான் என்னைப் பொருத்தவரை, அயல் நாட்டில் வசிப்பவர் மற்றும் அவர் சொந்தம் அனுபவிக்கும் nightmare! மற்றும் ஒரு முறை அது உண்மை என உணர்ந்தேன்.

தனிமரம் said...

நடராஜன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

வருண் said...

///**உங்கள் பதிவில் மூலம் அவர்க்கு அத்தனை ஒண்ணும் வயசாகவில்லை என தெரிகிறது. அவர் பெற்றது சொர்க்கம், விடுதலை (பாதிரியாரின் கூற்றுப்படி) என்பதெல்லாம் வேறு...அவர் குடும்பத்தாரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.**

I think I have seen his photo in thulasi teacher 60th wedding ceremony and I think he attended that functions (people shared photos here and there) if I remember correctly. He was married but not sure whether he has had kids. Yes, he was young! :(///

Mythili and folks:

MY sincere apologies!!!! It seems my estimate about Raja Natrajan is completely wrong!!

ராஜ நடராஜன் வயது 63 என்கிறார், ஜோதிஜி. அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உண்டாம். மனைவி கேரளாவைச் சேர்ந்தவராம். இதெல்லாம் எனக்கும் இப்பத்தான் தெரியும். மேலும் விபரங்களுக்கு அவர் தளம் சென்று வாசிக்கவும்.

http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_30.html

I apologize once more time for giving wrong personal information about him esp his age, based on my own "estimate" and "judgment"!!

ஜோதிஜி said...

வருண் இப்போது தான் உங்கள் பதிவை படித்தேன். ஒரு மாதிரியான கலவையான உணர்வை உருவாக்கி விட்டீங்க. நான் அவரைப் பற்றிய தகவல்கள் எழுதலாமே? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்ததும் நான் எழுதியது சரிதான் என்ற எண்ணம் உருவானது. தொடக்கம் முதல் உங்களை கவனித்தவன் என்ற முறையில் ஆழ்மன உங்களின் ஈரம் இந்த பதிவின் மூலம் தெரிந்தது.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த அஞ்சலிகள்! உங்கள் பதிவின் மூலமாகவே அறிய வந்து அவரது வலைப்பக்கம் சென்றேன். எனது பதிவுகள் பலவற்றுக்கும் கருத்தளித்திருக்கிறார். பல மாத இடைவெளிக்குப் பிறகு மறுபடி சமீபத்திய பதிவொன்றுக்கு வருகை தந்திருந்தார். திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

ஸ்ரீராம். said...

மிக மிகச் சமீபத்தில்தான் எங்கள் ப்ளாக் பக்கமும் அவர் வந்திருந்தார்.

ராமலக்ஷ்மி said...

@ ஜோதிஜி திருப்பூர்,

ராஜநடராஜன் அவர்களின் வலைப்பக்கத்தில் தாங்கள் பதிந்தவற்றின் மூலமாகவே அவரைப் பற்றிய விவரங்கள் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. நன்றி. வருணின் இந்தப் பதிவு குறித்து கூறியிருப்பதும் சரி. குறிப்பாக மரணத்தைப் பற்றிய வரிகள்.. சிந்திக்க வேண்டியவை.


Angel said...

ஜோதிஜி அவர்களின் பின்னூட்டத்தை அங்கு சென்று வாசித்தேன் மனம் கனத்து போனது :( .. என்ன சொல்வதென்றே தெரியலை ...இத்தனை நாட்கள் ஒரு நல்ல மனிதருடன் பழகாமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கு .ஒரு சிறு அருமை, பகிர்வுக்கு நன்றி என்ற வார்த்தைகள் கூட அவருக்கு பின்னூட்டத்தில் தரவில்லையே நான் :(
செங்கோவி ரெவரி வவ்வால் உங்க அனைவர் பின்னூட்டத்திலும் பார்த்திருக்கிறேன் இவரை ..
மிக அருமையான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திப்போம் .அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனிடம் வேண்டுவோம்

காரிகன் said...

வருண்,

ராஜ நடராஜன் இழப்பு ஒரு திடீர் செய்தி. அதிர்ச்சியானது. ஒரே ஒரு முறை என் தளம் வந்திருக்கிறார். அவரது ஆன்மாவுக்கான எனது பிராத்தனை எப்போதும் உண்டு. RIP Raaja Nataraajan.

வருண் said...

***நிஷா said...

நானும் தான் அன்பு பாராட்ட தெரிந்த எனக்கு அவர்களின் காணும் குறைபாடுகளையும் சட்டென சொல்லி திருத்த வைக்கும் குணமும், தப்பை தப்பென சுட்டுவதனாலும் என்னை பலருக்கு பிடிப்பதில்லை.***

மனதில் பட்டதை சொல்லாமல்ப் போவதுதான் நாகரீகம். குறையை நிறைபோல் சொல்வதுதான் அதிநாகரிகம். பொதுவாக உண்மையைத் தாங்கும் மனப்பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை. பதிவர்கள் பலரிடம் இருக்கும் இந்தக் குறைபாடு உங்களை குறையுள்ளவராக ஆக்கிவிடும். :(

I am selfish when comes to this point. I share/tell what makes me comfortable rather comforting others by saying something which is "untrue"! :)

Welcome to Blog world, Nisha!

வருண் said...

***பழமைபேசி said...

ஆமாங்க... மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கு... அவருடைய தங்கை கணவரை அழைத்துப் பேசினேன்.... we lost a great man... :-((***


பழமை! நல்ல நண்பருக்கு செய்ய வேன்டியதை ஒழுங்காக செய்து முடித்து இருக்கீங்க.

எனக்கு என்ன ஒரு வருத்தம்னா.. சமீபத்தில் நான் அவர் தளத்தில் போய் சன்டை போடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். என்னை நானே திருத்திக்க முயன்ற முயற்சி இது. ஒரு வேளை நான் அவர் தளத்தில் எப்போவும்போல போயி அவர் பதிவில் ஆயிரம் குறை கண்டுபிடிச்சு இஷ்டத்துக்கு சண்டை இழுத்து வம்பு பேசி அவரை என்கேஜ் செய்து இருந்தால் அவர் "ஸ்ட்ரெஸ்" எல்லாம் போக என் சண்டை/குதர்க வாதம் ஒரு வடிகாலாக இருந்து இருக்குமோ??. நான் மிகவும் ஒதுங்கிவிட்டதால்தான் இப்படி நிகழ்ந்துவிட்டதோ??? இப்படியும்கூட என் சிந்தனைகள் ஓடுகின்றன..

வருண் said...

***Jagannath said...

அதிர்ச்சியளிக்கும் செய்தி. அமுதவன், வருண், வவ்வால், இக்பால் செல்வன், செங்கோவி பதிவுகளில் இவரது பின்னூட்டங்களைப் படித்துள்ளேன். நிறைய விஷய ஞானம் உள்ளவர்.

குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா நற்கதி எய்ய என் பிரார்த்தனைகள்.***

ஒரு காலத்தில் பதிவுலகில் இவரைத் தெரியாதாவங்களே கிடையாதுங்க. பதிவுலகம் மாற மாற பழைய பதிவர்கள் எல்லாம் அன்னியமாகி விட்டார்கள்.

எனக்குத் தெரிய இவரோட உறவாடிய பதிவர்கள் நண்பர்கள் கூட இவருக்கு அஞ்சலி செலுத்த இவர் தளத்திற்கோ இல்லைனா இவரைப் பற்றி எழுதிய பதிவுகளுக்கோ வரவில்லை என்பதுதான் நெருடுகிறது...பதிவுலகம் ரொம்பத்தான் மாறிவிட்டது..

நான் ஒரு சிலரிடம் போய் சொன்னேன்.. உண்மைத்தமிழன் சரவணன், தெகா, பழமை பேசி போன்றவர்கள் அதில் அடங்கும்.

அவர் குடும்பத்தினருக்குத்தான் எல்லாத் துயரமும்..

வருண் said...

***bandhu said...



ராஜ நடராஜன் மறைவு மிக வருத்தம் அளித்தது. ஒரு சக immigrant ஆக மிகவும் வருந்தினேன்.

what you have done here is awesome. கருத்து வேறுபாடு வேறு. வெறுப்பு வேறு என்று நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.

நெருங்கியவர்கள் உடல் நிலை பாதிக்கப் பட்டால் எதுவுமே செய்ய இயலாமல் இருப்பது தான் என்னைப் பொருத்தவரை, அயல் நாட்டில் வசிப்பவர் மற்றும் அவர் சொந்தம் அனுபவிக்கும் nightmare! மற்றும் ஒரு முறை அது உண்மை என உணர்ந்தேன்.****

எனக்குத் தெரிய என் உறவினர் ஒருவர் தன் பொண்ணை அமெரிக்க வாழ் மாப்பிள்ளைக்கு கொடுக்க மாட்டேன்னுனடம் பிடித்தார். காரணம்? சொந்தம் விட்டுப் போயிடும் என்பது. அதென்னவோ உண்மைதான். என்னதான் இணையதளம், முகநூல், ட்விட்டர், வானேஜ் ஃபோன் காண்டாக்ட்ஸ்னு இருந்தாலும் நல்லது கெட்டதுக்குப் போகலைனா சொந்தம் எல்லாம் விட்டுப்போனதாகத்தான் அர்த்தம்.

வருண் said...

***தனிமரம் said...

நடராஜன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.**

இங்கும் உங்க அஞ்சலியை செலுத்த வந்தமைக்கு நன்றிங்க.

வருண் said...

***ஜோதிஜி திருப்பூர் said...

வருண் இப்போது தான் உங்கள் பதிவை படித்தேன். ஒரு மாதிரியான கலவையான உணர்வை உருவாக்கி விட்டீங்க. நான் அவரைப் பற்றிய தகவல்கள் எழுதலாமே? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்ததும் நான் எழுதியது சரிதான் என்ற எண்ணம் உருவானது. தொடக்கம் முதல் உங்களை கவனித்தவன் என்ற முறையில் ஆழ்மன உங்களின் ஈரம் இந்த பதிவின் மூலம் தெரிந்தது.***

என்னைப் பொருத்தவரையில் பதிவுலகில் சஞ்சாரிக்கும் நம் அனைவருக்குமே இரட்டை வாழ்க்கைதாங்க.

ஒண்ணு, நீங்கள் நடராஜன் பற்றி எழுதியதுபோல் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட பர்சனல் லைஃப்.

இன்னொன்னு பதிவுலகில் நாம் வாழும் பதிவர் வாழ்க்கை.

உங்க பதிவில் நீங்க நடராஜனுடைய குடும்ப வாழ்க்கையை எழுதி இருக்கீங்க.

நான் அவருடைய பதிவுலக வாழக்கையை நான் புரிந்துகொண்ட விதத்தை வைத்து எழுதியுள்ளேன்.

இவைகள் இரண்டையுமே நடராஜன் பற்றி சரியாகத் தெரியாத பதிவர்கள் தெரிந்து கொள்வது நல்லது என்பது என் எண்ணம். என்ன ஒண்ணு என்னைவிட அவருடன் அதிகம் அன்பு பாராட்டிய நண்பர்கள் அவர் பதிவுலக வாழ்க்கை பற்றி எழுதியிருந்தால் இன்னும் நல்லாயிருந்து இருக்கும்..

Iniya said...

வணக்கம் வருண் !

உங்கள் மூலமாகவே ராஜ நடராஜன் அவர்கள் பற்றி அறிகிறேன். உங்கள் இந்தப் பதிவில் நிறைய விடயங்களைப் பற்றி எடுத்துக் கூறி யுள்ளீர்கள். அனைத்தும் உண்மையும் நியாயமானவையுமே. வாசிக்க வாசிக்க ஏனோ ஒரு இனம் புரியாத வேதனை சூழ்ந்து கொண்டது. அதனால் என்ன எழுதுவது என்று புரியாமல் மனம் கனக்க சென்று விட்டேன். இப்போது மீண்டும் வந்தே எழுதுகிறேன். அவருடைய நற்குணங்களைக் கேட்க கேட்க ரொம்பவே நெகிழ்ந்தேன். வேதனையும் மிகுந்தது . நல்லவர்களை தன் பக்கம் வைக்க எண்ணி ஆண்டவன் அழைத்து விடுகிறான் போலும். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

viju அவர்களும் தான் பதிவிற்கு முதலும் கடைசியுமாக பின்னூட்டம் இட்டார் என்றவுடன் ரொம்பவே உடைந்து விட்டேன் இம் மனித வாழ்வை எண்ணி.
வருண் உண்மையில் U ARE GREAT. அவர் இறப்பை நீங்கள் உண்மையில் சிறப்பித்திருக்கிறீர்கள். அதற்குத் தலை வணங்குகிறேன் கண்ணன் பெயர் பொருத்தமாகவே உள்ளது. ஆனாலும் இங்கு சிரிக்க முடியலை வருண் . நன்றி !

Kasthuri Rengan said...

ஹலோ வருண்
இந்தப் பதிவரைப் பற்றி அறிகிலேன்...
மன்னிக்கவும்
பூரண இளைப்பாறுதல் அவருக்குக் கிடைக்கட்டும் ...

வருண் said...

**ராமலக்ஷ்மி said...


ஆழ்ந்த அஞ்சலிகள்! உங்கள் பதிவின் மூலமாகவே அறிய வந்து அவரது வலைப்பக்கம் சென்றேன். எனது பதிவுகள் பலவற்றுக்கும் கருத்தளித்திருக்கிறார். பல மாத இடைவெளிக்குப் பிறகு மறுபடி சமீபத்திய பதிவொன்றுக்கு வருகை தந்திருந்தார். திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திப்போம்.***


வாங்க ராமலக்‌ஷ்மி!


பொதுவாக நான் பதிவர்கள் யாருடனும் மின்மடல், தொலைபேசி, ட்விட்டர்/முகநூல் போன்ற தொடர்புகளோ வைத்திருப்பதில்லை. பதிவர் சந்திப்பில் எதிலும் கலந்து கொண்டதும் இல்லை. அதனால் 7-8 வருடங்கள் பதிவுலகில் தெரிந்த ராஜ நடராஜன் எனக்கு ஒரு "சரியாகத் தெரியாத பதிவராக"த் தான் இருந்தார். ஆனால் பதிவுலகில் மற்றவர்கள் என்னைப்போல் அறியாமையில் மூழ்காமல் ராஜ நடராஜன் பற்றி நன்கு தெரிந்து இருப்பார்கள், இவர் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அவர் வயது போன்றவை மற்ற பதிவர்களுக்குத் தெரிந்து இருக்கும் என்றே நம்பியிருந்தேன்.

ஜோதிஜியின் பதிவைப்பார்த்த பிறகுதான் இவர் தன்னைப்பற்றி பதிவுலகில் யாருக்கும் எந்த ஒரு "க்ளு" வும் கொடுக்காதிருந்து இருக்கிறார் என்பதையே உணர்கிறேன்.

ரெண்டு மூன்று வருடங்கள் முன்பு ஒரு முறை வேலை போய்விட்டது என்பதுபோல் பதிவொன்று எழுதினார். ரெ வெரி மற்றும் ஒரு சிலர் உதவ முன் வந்தார்கள். அதன் பிறகு அவர் பதிவுலக வாழ்க்கை கொஞ்சம் குறைந்து ரொம்ப நாள ஆளைக் காணவில்லை.மறுபடியும் 3 மாதங்கள் முன்னால் வந்தார், பதிவுகள் பின்னூட்டங்கள் எழுதினார். அப்போதுதான் உங்க தளத்திற்கு மறுபடியும் வந்திருப்பார்.

திரும்ப வந்து மூன்றே மாத்தில் அவர் கடைசிப்பதிவும் பின்னூட்டமும் முடிந்துவிட்டது.

எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தாலும் பதிவுலகில் இப்போது இருக்கும் பதிவர்களின் நான்தான் அவருக்கும் அதிக பரிச்சயம் உள்ள பதிவர் என்று தெளிவாக விளங்குகிறது. அந்த வகையில் பதிவுலகில் அவருக்கு நான் செய்ய வேண்டிய கடைசிப் பணி, கடமை இப்பதிவுனு நினைக்கிறேன்.

வருண் said...

***ஸ்ரீராம். said...

மிக மிகச் சமீபத்தில்தான் எங்கள் ப்ளாக் பக்கமும் அவர் வந்திருந்தார்.***

எனக்கென்னவோ எங்கள் ப்ளாக் க்கு அவர் முன்பே வந்து பின்னூட்டமிட்டு இருப்பார்னுதான் நினைக்கிறேன். அவர் பேரை க்ளிக் செய்தால் "ப்ரஃபைல் நாட் அவைலபில்" என்று வரும் என்பதால் யாரோ அனானி போல் இவர் என்று பலரும் நினைத்து விடுவார்கள்.

7-8 வருடங்கள் இவரப்போல் 7ப்ளாக் வைத்து நடத்துபவர்கள் பொதுவாக இவரைப்போல் "ப்ரஃபைல் நாட் அவைலபில்" என்று வைத்திருப்பது அரிது. அவருக்கு என்ன பிரச்சினையோ..ஏன் இப்படி செட் பண்ணனும்னு கட்டாயமோ தெரியவில்லை.

வருண் said...

*** Angelin said...

ஜோதிஜி அவர்களின் பின்னூட்டத்தை அங்கு சென்று வாசித்தேன் மனம் கனத்து போனது :( .. என்ன சொல்வதென்றே தெரியலை ...இத்தனை நாட்கள் ஒரு நல்ல மனிதருடன் பழகாமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கு .ஒரு சிறு அருமை, பகிர்வுக்கு நன்றி என்ற வார்த்தைகள் கூட அவருக்கு பின்னூட்டத்தில் தரவில்லையே நான் :(***

நான் சொன்னதுபோல் நடராஜனுக்கு ஒரு டேஸ்ட் உண்டு. அது என்னனா அரசியல்ப் பதிவுகள். மற்றபடி "உணர்ச்சிப்பூர்வமான விசய்ங்கள்'"பெண்ணியம்" "கதைகள்" "இழப்புகளை பகிர்ந்து கொள்ளல்" போன்ற பதிவுகளில் அவருக்கு நாட்டம் கிடையாது. அதனால் உங்களுக்கு அவரோட "இண்டெராக்ட்" பண்ண சாண்ஸ் கிடைத்து இருக்காதுனு நம்புறேன்.


***செங்கோவி ரெவரி வவ்வால் உங்க அனைவர் பின்னூட்டத்திலும் பார்த்திருக்கிறேன் இவரை ..***

நிச்சயம் இவர் பின்னூட்டங்களையும் நீங்க பார்த்து இருப்பீங்க. அவர் பின்னூட்டங்கள் கொஞ்சம் "பொதுப்படையாக" இருக்கும். அழுபவர்களுக்கு கண்ணீரைத் துடைத்துவிட முயல்வதுபோல் "உணர்ச்சி கலந்து" ஒருபோதும் இருக்காது. அதனால் உங்கள் மனதில் தங்காமல் போயிருக்கலாம்னு நினைக்கிறேன்

*** மிக அருமையான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திப்போம் .அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனிடம் வேண்டுவோம் **

ஆர்ப்பாட்டமில்லாமல் கஷ்டப்படாமல் எளிதாகப் போயிட்டார்னுதான் தோனுது. ஆனால் அவர் குடும்பத்தினர்தான் பாவம். :(

வருண் said...

*** காரிகன் said...

வருண்,

ராஜ நடராஜன் இழப்பு ஒரு திடீர் செய்தி. அதிர்ச்சியானது. ஒரே ஒரு முறை என் தளம் வந்திருக்கிறார். அவரது ஆன்மாவுக்கான எனது பிராத்தனை எப்போதும் உண்டு. RIP Raaja Nataraajan.***

வாங்க காரிகன். மிகவும் அதிர்ச்சியான செய்திதான். பட்டாபட்டினு ஒரு பதிவரும் இதேபோல் தான் திடீர்னு மறைந்தார். அதன் பிறகு இவர்..

வருண் said...

***Iniya said...

வணக்கம் வருண் !

உங்கள் மூலமாகவே ராஜ நடராஜன் அவர்கள் பற்றி அறிகிறேன். உங்கள் இந்தப் பதிவில் நிறைய விடயங்களைப் பற்றி எடுத்துக் கூறி யுள்ளீர்கள். அனைத்தும் உண்மையும் நியாயமானவையுமே. வாசிக்க வாசிக்க ஏனோ ஒரு இனம் புரியாத வேதனை சூழ்ந்து கொண்டது. அதனால் என்ன எழுதுவது என்று புரியாமல் மனம் கனக்க சென்று விட்டேன். இப்போது மீண்டும் வந்தே எழுதுகிறேன். அவருடைய நற்குணங்களைக் கேட்க கேட்க ரொம்பவே நெகிழ்ந்தேன். வேதனையும் மிகுந்தது . நல்லவர்களை தன் பக்கம் வைக்க எண்ணி ஆண்டவன் அழைத்து விடுகிறான் போலும். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

viju அவர்களும் தான் பதிவிற்கு முதலும் கடைசியுமாக பின்னூட்டம் இட்டார் என்றவுடன் ரொம்பவே உடைந்து விட்டேன் இம் மனித வாழ்வை எண்ணி.
வருண் உண்மையில் U ARE GREAT. அவர் இறப்பை நீங்கள் உண்மையில் சிறப்பித்திருக்கிறீர்கள். அதற்குத் தலை வணங்குகிறேன் கண்ணன் பெயர் பொருத்தமாகவே உள்ளது. ஆனாலும் இங்கு சிரிக்க முடியலை வருண் . நன்றி !***

7-8 வருடம் பதிவுலகில் பழக்கமான ஒரு பதிவருக்கு அவருடன் அதிகமாக உறவாடிய/வாதடிய/விவாதித்த எதிரணிப்பதிவரான நான் செய்ய வேண்டிய ஒரு சின்னக் கடமை இதுனுதான் நான் நினைக்கிறேன் இனியா.

வருண் said...

***Mathu S said...

ஹலோ வருண்
இந்தப் பதிவரைப் பற்றி அறிகிலேன்...
மன்னிக்கவும்
பூரண இளைப்பாறுதல் அவருக்குக் கிடைக்கட்டும் ...***

"எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரையும் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்னு என்று நான் தவறாக நினைத்திருந்தேன்" என்பதை இப்போது உங்களைப் போல் பலர் பின்னூட்டங்களில் "இவரைத் தெரியாதே' என்று சொல்வதைப் பார்க்கும்போதுதான் உணருகிறேன்,மது.

Thekkikattan|தெகா said...

வருண்,

அவருடைய மரணம் குறித்து அறிந்தேன். எப்பொழுதும் போலவே கூகுள் ப்ளஸில் எங்களுடைய நினைவு கூர்தலை பகிர்ந்து கொண்டதோடு நாட்கள் நகர்ந்து சென்றன.

ஏன் பரவலாக இங்கே ராஜ நடையைப் பற்றி பதிவுகள் எழுதப் படவில்லை என்பது குறித்து பெரிதாக ஆராய்ந்து அறிய ஒன்றுமே இல்லை. நல்ல பதிவர்கள் எப்பொழுதுமே அண்டர் ப்ரோஃபைல்ட்; தங்களை சரியாக மார்க்கெட்டிங் செய்து கொள்ளதாவர்கள். எத்தனை வருடங்கள் இங்கே புழங்கி இருந்தாலும், அவர்கள் வாசித்து மற்றவர்களை ஊக்குவித்து, தவறுகளை சுட்டிக்காட்டி வளைய வந்த அளவிற்கு மாஸிற்கு பின்னால் அழையும் கூட்டத்தின் புத்தியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இங்கே பொரணி பேசவும், எல்லாமே தனக்கு தெரிந்து போனதாகவும் அலப்பறை செய்து கொண்டு டாப்ளாய்ட் ஸ்டையில் எழுதும் ஜனரஞ்சக எழுத்தர்களுக்கே அந்த ஈக்களின் எண்ணிக்கையை ஒத்த கூட்டம் சேரும்.

ராஜ நடையின் ஆன்மா சாந்தியடையட்டும்!

கோவி.கண்ணன் said...

என்னுடைய நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர், என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க வாய்ப்பிருக்கும் என்று நினைத்திருந்தேன்.

காலதாமதமான அஞ்சலி... வருத்தமடைகிறேன்