அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம்,எழுதலாம். அவர்கள் எழுதுவதே வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை எழுதினாலும் கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த காலத்து “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!
ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமர்சகர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!
• சமீபத்தில் திரு ஞாநி அவர்கள் எழுதிய “அணு ஆயுதம் தேவை இல்லை” பற்றி பலவிதமான expert களும், சாதாரண குடிமக்களும், அவரையும், அவர் கட்டுரையில் உள்ள குறைபாடுகளையும் இஷ்டத்துக்கு விமர்சித்து உள்ளார்கள். அது மட்டுமல்லாமல், அணு சக்தி பற்றி தீவிர ஆராய்ச்சி செய்பவர்களும், பல விஞ்ஞானிகளும் வந்து குறை நிறைகளை சொல்கிறார்கள். இதுபோல் வரும் விமர்சனங்களை பொது மக்கள் படிக்கிறார்களோ இல்லையோ, இதை திரு. ஞாநி அவர்கள், மற்றும் அவரைப்போல் விமர்சகர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் மனம் நிச்சயம் புண்படும் என்பது உண்மைதான். என்ன செய்வது? இதுவும் பேச்சு சுதந்திரம்தான்!
• ஒரு வம்பு பேசுகிறவர் சொல்கிறார், திரு மதன் அவர்களின் மதன் திரைப்பார்வையில், தசாவதாரம் படத்திற்கு மதன் விமர்சனம் பண்ணவில்லை, காசு வாங்கிக்கொண்டு ஒரு “கமர்சியல்” பண்ணுகிறார் என்று. பல படங்களுக்கு திரு மதன் விமர்சனம் செய்யும்போது குறைகளையும், நிறைகளையும் அழகாக விமர்சித்தார், ஆனால் இது என்ன ஒருபக்கமான விமர்சனமாக இருக்கிறது என்று பலர் வியக்கிறார்கள் இன்று. மேலும் “ஹாய் மதனில்” இவர் கொடுக்கிற பலவிதமான பதில்கள் முட்டாள்தனமாக இருக்கிறது என்று சொல்லி பலரும் நகையாடுகிறார்கள்! கருத்துக்களங்களிலும் மற்றும் வலை பூக்களிலும் இன்று இவர் தலை உருளுகிறது என்னவோ உண்மைதான்.
• சமீபத்திய, திரு. சாரு நிவேதிதாவின் ஒரு விமர்சனத்தில், ஒர் பாடல் பழைய “எங்கவிட்டுப்பிள்ளை” படத்தில் இடம் பெற்றதாக இவர் தவறுதலாக எழுதியதும், ஒரு கமல் ரசிகர் சொல்கிறார், “இவர் இன்னும் இந்திய, தமிழ் சினிமாக்களே சரியாக இன்னும் பார்க்கவில்லை, உலகத்தரம் அது இதுனு எதுக்கு பேசுகிறார்?” என்கிறார்.
• இதில் பரிதாபத்திற்குரியது என்னவென்றால், இப்படி விமர்சகர்களை தாக்குபவர்கள் அந்த அந்த துறையில் உள்ள மேதாவிகள் என்பது. நிறைய நேரங்களில் உண்மையையேதான் இவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு விமர்சனத்தையும் விமர்சிக்கும் பொதுஜனங்களும் வேறு வேறு நபர்கள் என்பதும் உண்மை. அதேபோல் விமர்சக்ர்கள் விமர்சிக்கும் எல்லா விசயத்திலும் “ஞாநி களாக” இருக்க முடியாது என்பதை நாம் மனதில் கொள்ளுவோம்! அவர்களுடய “லிமிடேஷன்ஸை” நாம் மனதில் கொள்ள வேண்டும்! அதே சமயத்தில் விமர்சகர்களுக்கு ஒரு திறந்த மனப்பான்மை வந்தே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது இன்று என்பதும் உண்மைதான்!