Showing posts with label உருப்புடாதது_அணிமா. Show all posts
Showing posts with label உருப்புடாதது_அணிமா. Show all posts

Friday, October 24, 2008

நான் ஒரு தர சொன்னா 100 தர சொன்ன மாதிரி!

(-: (-: மன்னிக்கவும்! இது சும்மா சினிமா தொடர் பதிவுதான். சும்மா கூட்டம் சேர்க்க இப்படி ஒரு சினிமாவசனத் தலைப்பு! :-) :-)
--------------------------------------

நான் ஒண்ணும் சினிமா பைத்தியம் இல்லை. தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. நிறையப்படம் பிடிக்காது. ஒரு சில படங்கள் பிடிக்கும். நான் ஒரு பழமை விரும்பி.
கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்

நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன்.யாரோடாவது போயிருப்பேன் ஒண்ணும் புரியாமல் வந்து இருப்பேன்.

அ) நினைவு கண்ட முதல் சினிமா?

நெஜம்மாவே தெரியலை!

2. கடைசியில் அரங்கில் பார்த்த சினிமா?

குசேலன்! ஒளிப்பதிவு, மற்றும் க்ளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. படம் சுமார்தான்.

3. அரங்கிலன்றி பார்த்த சினிமா?

சுப்பிரமணியபுரம். அந்த ஹீரோவுக்கு, மதுரைத்தமிழ் வரலை! அது எரிச்சலா இருந்தது.

மதுரையை பற்றி தெரியாத ஒரு தற்பெருமை பேசும் விமர்சகர், சுப்பிரமணியபுரம் ஒரு ஊர் நு சொல்லி எழுதிய விமர்சனம் சிரிப்பை உண்டாக்கியது.

ஓரளவுக்கு நல்ல படம் அதுனு சொல்லலாம். போர் அடிக்கவே இல்லை. ஆனால், கடைசில கஞ்சா கருப்பு துரோகியாவெதெல்லாம் நம்ம மதுரை மக்களிடம் நடக்காத ஒண்ணு. ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்த்து இது மாதிரி எடுக்கிறாங்க! அப்போத்தானே இந்த மாதிரி புதுமையைக் கண்டு நம்ம "க்ரிடிக்கள்" மயங்குவாங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பருத்திவீரன்- இன்று

முள்ளும் மலரும்-அன்று ( டி வி டி யில் பார்த்தலில்). ரசினியும் மறைந்த நடிகைகள் ஷோபா மற்றும் ஃபடாப்பட்டும் என்னம்மா நடிச்சிருக்காங்க! ரசினி நடிப்புல எல்லோரையும் மிரட்டி இருக்காருங்க!!!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்ம ரசினி என்ன பேசினாலும் அரசிலாக்குவது, வேடிக்கையா இருக்கும்.

அது அண்ணாமலை முதல் குசேலன் வரைக்கும்!

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஜீன்ஸ் படத்தில் காட்டிய பிரஷான்ந்தின் டபுள் ஆக்ஷன்.
சிவாஜியில் காட்டிய வெள்ளை ரசினி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எக்கச்சக்கமாக!

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை நல்லாயிருந்தால் பிடிக்கும். இவர்தான் பெரிய ஆள் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

எனக்கு உத்தமபுத்திரனில் ஜீ ராமநாதன் இசை, பாலும் பழமும் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் எம் எஸ் விஸ்வனாதன் இசை, வசந்த மாளிகை, மற்றும் அடிமைப்பெண் படங்களில் கே வி மஹாதேவன் இசை, முதல் மரியாதை இல் இளையராஜா இசை, பாஷா/அண்ணாமலை யில் தேவா இசை, ஒருதலை ராகத்தில் டி ராஜேந்தர் இசை, முதல்வன் இல் ஏ ஆர் ரகுமான் இசை , கஜினி யில் ஹரீஸ் ஜெயராஜ், 7G ரெயின்போ காலனி யில் யுவன் சங்கர் ராஜா இசை, எல்லாமே பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர ஆங்கிலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பது.

The Godfather 1 & 2, Unforgiven, Shawshank Redemtion, Sixth sense, American beauty, Departed etc.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நம்ம ஊர்ல தெருச்சண்டை, கோயில் திருவிழா, கல்யாண கொண்டாட்டம் எல்லாவற்றிலும் இதைவிட 10 மடங்கு ஈடுபாடு உண்டாகும்னு நினைக்கிறேன்.

தொடர்பதிவு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இவன், அது சரி, அணிமா மற்றும் கயல்! :-)

ஆமா அடுத்து யாரை அழைப்பது?


1) எஸ் கே


2) சுந்தர் :-)

Wednesday, October 22, 2008

அடாவடியா எழுதுறது தான் நம்ம ஸ்டைல்!

நான் பார்க்கும் தமிழ் சினிமாவே ரொம்ப ரொம்ப குறைவு, இந்த லட்சணத்தில் ரொம்ப நாளுக்குப்பிறகு பார்த்த தமிழ் சினிமா பிடிக்காமல் போக, அதை விமர்சித்து எழுதிய விமர்சனத்தை ஒரு குறிப்பிட்ட நடிகரைப்பற்றிய விமர்சனமாக கருதிய 'உலகநாயகர்கள்' பொதுவாக ஒரு கமெண்ட் எழுதினார்கள், "விமர்சனமா இது? அடாவடியா இருக்கே!".

அந்த நற்பெயரைக்காப்பாற்ற மற்றொரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது! Way past due date இந்த தொடர் விளையாட்டை தொடருகிறேன் என்று சொல்ல ஆசை தான், ஆனால் உண்மை அதுவல்ல. வேலைக்கு வந்து ஏதோ தமிழ் மணம் பார்த்தோமா, விகடன்-குமுதம் படிச்சோமா என்று நல்ல பிள்ளையாக இருந்த எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் கொடுக்கும் அக்கிரமம் நடந்தது. ஜாவா கோடுகளோடு நான் போராடிக்கொண்டிருந்தபோது உங்களது தொடர் விளையாட்டை ஒரு ஏக்கப்பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோக நிகழ்ச்சியாகும்.

இனி ஒரு formal statement: தொடர் விளையாட்டுக்கு அழைத்த அதுசரி, அணிமா மற்றும் இவனுக்கு நன்றி :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறக்கும் முன்பே டிவி வாங்கிவிட்டார்கள் என்பதால் நினைவு தெரிந்ததில் இருந்தே(3 வயது இருக்கும்) சினிமா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். முதன் முதலில் "Tarzan" என்ற படம் பார்த்ததாக நினைவு, காட்டிலேயே வளரும் சிறுவனுடைய கதை. அந்த சமயத்தில் தூர்தர்ஷன் என்ற ஒரே சேனல் தான். அதில் வெள்ளிக்கிழமைகளில் "ஒளியும் ஒலியும்", சனிக்கிழமைகளில் இந்திப்படம், ஞாயிற்றுக்கிழமை என்றால் தமிழ்ப்படம் பார்த்த நினைவிருக்கிறது(கூடவே ஞாயிறு மதியங்களில் வேற்றுமொழிப்படங்கள் வந்ததாக ஞாபகம்).

Tarzan படம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதுவும் Tarzan மரம் விட்டு மரம் தாவும் காட்சிகள்! டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அரங்கிலா? அதெல்லாம் இந்தியாவில் பார்த்ததோடு சரி, இங்கே அத்தனை நேரம் உட்கார்ந்து பார்க்க பொறுமை இல்லை. கடைசியாக அரங்கில் உட்கார்ந்து பார்த்த படம், "அன்பே சிவம்", என்னுடைய All time favorite!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தசா.... வேண்டாம், ஏன் திரும்பவும் வம்பு? விட்டுடுங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

திரும்பவும் அன்பே சிவம்! கமலஹாசனைத்தவிர வேறு யாராலும் நடித்திருக்கவே முடியாத நல்லசிவம் பாத்திரம். அந்தப்படத்தைப்பார்ப்பதற்கு முன் என்னுடைய பார்வையும் படத்தில் வரும் மாதவனின் பார்வையைப்போலவே இருந்தது, எல்லாவற்றிலும் சுயநலம். சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் சிந்திக்க, கவலைப்பட எனக்கு சொல்லிக்கொடுத்த படம் என்பதால் அந்தப்படத்தின் மீது பெருமதிப்பு உண்டு.

அப்புறம், முதல்வன்!- பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை வியக்க வைத்த படம். அதில் வரும் மனிதக்குரங்... சாரி, கைத்தவறிவிட்டது. படத்தில் வரும் மனிஷா கொயிராலாவைத்தவிர அனைத்தும் பிடித்திருந்தது.

சின்ன வயதில் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" என்ற படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவும் இல்லை. தமிழ் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தை ரசிப்பதுண்டு, ஆனால் 'தாக்கிய' என்பதெல்லாம் ரொம்ப ஓவர். தொழில்நுட்பம் என்றாலே எனக்கு ஹாலிவுட் படங்களே நினைவில் வருகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது சில சமயம்.அதிலும் கிசு கிசு பகுதியைப்படித்து மூளை குழம்புவது தான் மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

ஏ.ஆர்.ஆரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கேட்கும் போது சாதாரணமாக இருக்கும் பாடல்கள் கூட திரும்ப திரும்ப கேட்கும் போது பிடித்துப்போய்விடும். என்னுடைய ஐபாடில் இருக்கும் தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே ரஹ்மான் பாடல்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழைத்தவிர உலகத்திரைப்படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, முக்கியமாக ஹாலிவுட் படங்கள். இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏறக்குறைய புதிதாக ரிலீஸாகும் ஹாலிவுட் படங்களில் 50% பார்த்துவிடுவேன். பிறகு சைனீஸ் படங்கள், "Crouching Tiger, Hidden Dragon" படம் பார்த்தபிறகு சீன இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது. ஜாப்பனீஸ் படங்களில் பேய்ப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் "One missed call" பார்த்திருக்கீங்களா? ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது. தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித்தொடர்பு என்றால் உறவினர்களா? நெருங்கிய உறவினர் யாரும் கிடையாது, ஆனால் நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட விமானத்தில் ஒரு நடிகரை சந்தித்தேன், அவர் நடிகர் என்பதே அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது(அது ஒரு பெரிய கதை, தனிப்பதிவாவே எழுதலாம்). அவரிடமே போய் "என்ன வேலை செய்யறீங்க?" என்று கேட்டு வைத்தேன். அந்தளவு எனக்கு தமிழ்சினிமாவைப்பற்றிய பொது அறிவு இருக்கிறது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை அது கொஞ்சம் கூட பாதிக்காது, ஆனால் தமிழகத்துக்கு நிறைய நன்மை இருக்கிறது. தமிழகம் உருப்படும்! தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் தான் பாவம்.

அடுத்து யாரை அழைப்பது? எழுதாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

1. வருண்

2. எஸ்.கே(?)

Sunday, October 12, 2008

உருப்புடாதது_அணிமா செய்துக்கொண்டிருக்கும் உருப்படியான காரியம்

ஏதோ என்னால் முடிந்தது இது தான்..நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..
இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..

- உருப்புடாதது_அணிமா


மேலிருக்கும் பின்னூட்டத்தை எனக்கு எழுதியவர் பதிவர் திரு.உருப்புடாதது_அணிமா. சக இந்தியர்கள்/தமிழர்களிடம்(எந்த நாட்டில் இருந்தாலும்) நான் 'இல்லையே' என வருந்துவது, அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மை. யாராவது எப்படியாவது போகட்டும், என்னுடைய வேலை கெடக்கூடாது என்று நினைக்கும் சுயநலம். பல சமுதாய அவலங்களுக்கும், சுகாதாரக்கேட்டுக்கும் இந்த பொறுப்பின்மையே காரணம் என்று நினைக்கிறேன்.

கோடைகாலத்தில் மின்வெட்டினால் அவதிப்படும் போது எப்போதாவது வரும் மெல்லிய தென்றல் போல அணிமா போன்ற மனிதர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். அணிமாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை! பாராட்டு வெறும் புகைப்பிடித்தலை விடுவதற்காக மட்டுமல்ல, சமுதாய அக்கறையுடன் செயல்படுவதற்கும் சேர்த்து. வாழ்த்துக்கள் அணிமா!