எனக்கு ஹிந்தி தெரியாது. காந்திக்கு தமிழ் தெரியாது. இது தொடர் பதிவும் கெடையாது! காந்திக்கும் எனக்கும் தெரிந்த ஒரே பொதுமொழி ஆங்கிலம்! ஆனால் ஆங்கிலம் அன்னியர் மொழியாச்சே? நீங்களே சொல்லுங்கள், ஆங்கிலேயரை நம் நாட்டில் இருந்து துரத்தப் பாடுபட்ட காந்தி என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் நல்லாவா இருக்கும்? மஹாத்மா காந்தியும் ஒரு "ஹிப்போக்ரைட்"னு ஆயிடும். இல்லையா?
அவர் கனவில் வந்து ஆங்கிலத்தில் கேள்வி கேக்க அரம்பித்தால் நான் விட்டுடுவேனா? " பெரிய மகாத்மா இவர்" "உலகிற்கே பாடம் கற்றுக் கொடுத்தவர்" என்பதற்காகவெல்லாம் அவரை பெரிய மனசு பண்ணி ஆங்கிலத்தில் கேள்வி கேக்க விட்டுடுவேனா என்ன? என்ன காந்தி அவர்களே! நீங்களே ஆங்கிலத்தில் கேள்வியெல்லாம் கேக்குறீங்க? நீங்களும் ஒரு ஹிப்போக்ரைட் தானா?"னு நான் கேட்டுவிடுவேன் என்கிற பயத்தில், வருணின் உள் மனதையும், தைரியத்தையும் புரிந்த காந்தி வருண் கனவில் வராமல் தப்பி ஓடிட்டாரு!
ஆக ஒரு தொல்லை ஓய்ந்ததுனு நிம்மதியாக இருக்கலாம்னு இருந்தால் நம்ம மதுரைத்தமிழன் எப்படியோ அவர் கனவில் வந்த காந்திட்ட அவர் வாயைத் திறக்குமுன்பே மளமளனு பத்து கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லிட்டார். இவர் சொன்ன பத்து பதில்களும் தமிழில்! அதுவும் காந்தி இவரிடம் ஹிந்தில கேள்விகள் கேட்குமுன்னாலேயே படார் படார்னு பதில்களைத் தமிழில் கொடுத்துவிட்டார்! கேள்விகள்தான் இணையத்தில் எல்லா மூலைகளிலும் இருக்கே! நீங்க என்ன கேக்க வேண்டிக் கிடக்கு, காந்தியாரே? இந்தாங்க இதுதான் என் பதில்கள்னு தமிழ்லயே பதில் சொல்லி கனவில் வந்த காந்தியை அவசரமாக அனுப்பி வச்சுட்டாரு.
காந்தி என்ன செய்வாரு பாவம்? வேற வழியே இல்லாமல், தமிழில் பதில்களைப் பெற்ற காந்தி அவசரமாகத் தமிழ் கற்றுக்கொண்டு மதுரைத் தமிழன் பதில்களை ஒரு வழியாகப் புரிந்து கொண்டார். அதோட அதற்கான கேள்விகள் தமிழில் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அரைகுறையாக கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் கேள்விகளை "ஸ்டாக்" வைத்துக்கொண்டார்.
மறுபடியும் என் கனவில், தமிழ் கேள்விகளுடன் வந்து சேர்ந்துட்டார, காந்தி.
வந்தவர், அமெரிக்காவில் போய் குடியிருக்கும் இவனிடம் எதுக்கு அர்த்தமில்லாத பல கேள்விகள் கேட்க என்று நினைத்து
"ஒரே ஒரு கேள்வியை மட்டும் உன்னிடம் கேக்கிறேன். அதுவும் உன் தாய் மொழி தமிழில்! அதுக்கு மட்டும் பதில் சொல்லு" னு கேட்டார், காந்தி.
"சரி கேளுங்க காந்திஜி" என்றேன்.
"நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கிறாய்?" என்றார்.
கேள்வி புரியாத நான்.
"எங்கா? இல்லைனா யாராகப் பிறக்கணும்னு ஆசைப்படுவேனா?" என்று காந்தியைத் திருப்பிக் கேட்டுக் குழப்ப ஆரம்பித்தேன்.
"ஆமா ஆமா, எங்கு பிறந்தால் என்ன? யாராகப் பிறக்க ஆசைப்படுகிறாய்? என்று சமாளிக்க..
"நான் எப்போ செத்தாலும் சரி, சாகும்போது என்னால் முடிக்கப் படாத வேலைகள், தெளிவு படுத்தப் படாத விடயங்கள், எழுதப்படாத எழுத வேண்டிய பின்னூட்டங்கள் எல்லாமே பாதியில் அனாதையாக நிற்கும். அதனால மறுபிறவி எடுத்து வந்து நிற்பவைகளை தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை! மறுபிறவினு ஒண்ணு இருந்து, பிறந்து வந்தால் பாதியில் நிற்கும் வேலைகளையும், சில சந்தேகங்களையும் தெளிவு படுத்த நான் நானாகவேதான் பிறக்கணும். அதாவது இதே 46 குரோமசோம் களுடன், இதே வருணாகவேதான் எங்கே பிறந்தாலும் பிறக்கணும் என்பது என் அவா!" என்றேன்.
"ஏன் உன்னைவிட உயர்தர மக்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.. மறு பிறவியில் நீ ஏன் ஒரு உயர்வான மனிதனாகப் பிறக்கக்கூடாது?"
அவர் சொன்னதை அவமானமாக எடுத்துக்கொண்ட நான்..
"காந்திஜி! எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும். என் கணிப்பின்படி நான் ரொம்ப நல்லவனும் இல்லை! படு அயோக்கியனும் இல்லை! ஒரு சராசரி மனிதன். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடினால், நான் ஒண்ணும் அவ்வளவு மட்டமான ஆள் கெடையாது. அதனால் மறுபிறவியிலும் நான் இதே வருணாகவேதான் பிறக்க ஆசைப்படுகிறேன்! மன்னிக்கணும், மறுபிறவியில் நான் காந்தியாகவோ, புத்தராகவோ, இல்லை சகலகலாவல்லவரு, மாமேதை கமலஹாசனாகவோ பிறக்க ஒரு போதிலும் ஆசை இல்லை! என்னைவிட நான் அவர்களை உயர்வாகக் கருதுவது என்னை நானே அவமானப்படுத்துவது போல்" என்றேன்
இதுபோல் ஒரு பதிலை என்னிடம் இருந்த எதிர்பார்க்காத காந்தி உணர்ச்சி வசப்பட்டு, ஹிந்தியில்,
"பஹுத் அச்சா!" என்றார்!
ஆனால் மனதுக்குள்ளேயே ..This guy is an egoist என்று ஆங்கிலத்தில் காந்தி நினைப்பது எனக்கும் புரிந்துவிட்டது என்று அவருக்குத் தெரியாது!