Showing posts with label காவேரி. Show all posts
Showing posts with label காவேரி. Show all posts

Monday, October 27, 2008

காவேரியும், நானும்..

போன வாரம் என் அலுவலக தோழி ஒருத்தி, "க்ளாசட் முழுக்க துணி வைச்சிருக்கியே, அப்புறம் ஏன் போட்டதையே திரும்ப திரும்ப போடறே?" என்று சொன்னபோது கவனித்தேன், ஏன் போட்டதையே போடுகிறேன்? கவனித்து பார்த்ததில் தெரிந்தது, என்னுடைய க்ளாசட் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. இதனால் அலுவலக உடைகள் எங்கேயோ தொலைந்துப்போக, மேலே இருக்கும் உடைகளையே திரும்பத்திரும்ப அணிந்துக்கொண்டிருக்கிறேன் போல. சென்ற வார இறுதியில் என் க்ளாசட்டுக்கு விடிவு காலம் பிறந்தது, 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்காத உடைகளை "Good will" என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு வந்தேன்.

உடைகள் என்றதுமே எனக்கு காவேரி தான் நினைவுக்கு வருகிறாள். காவேரி என்பது வேறுயாருமில்லை, என் பெற்றோர் வீட்டின் வேலைக்காரப்பெண்! ஒடிசலான உருவம், கருத்த தேகம், தெற்றுப்பல், உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மைக் செட் குரல், வாய் கொள்ளா சிரிப்பு, கண்களில் எப்போதும் தென்படும் ஒரு துறு துறுப்பு, கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகம் - இதுவே நம்ம கதாநாயகி காவேரியின் அடையாளம்.என்னை விட ஒரு 4-5 வயது சிறியவளாக இருப்பாள்.

போன முறை இந்தியாவுக்கு போன போது அவளை முதல் முறை சந்தித்தேன். திரைச்சீலைக்கு பின்னால் முகத்தை மட்டும் நீட்டி என்னைப்பார்த்து சிரித்தாள். யாராவது அவளை அறிமுகப்படுத்தி வைக்கமாட்டார்களா என்ற ஆர்வம் அவள் முகத்தில் இருந்தது. என்னை வெகு நாட்களுக்குப்பிறகு பார்த்த மகிழ்ச்சியில் என் பெற்றோருக்கு காவேரி மறந்துபோனாள். பொறுத்துப்பொறுத்துப்பார்த்த காவேரி பொங்கி எழுதாள். ஒரு ஸ்வீட் பாக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டு என் முன்னால் வந்தாள்.

"யக்கா இந்தா ஷிட்டு"

நான் FOB(fresh of the boat) என்பதால், காவேரி சொன்னதை ஒரு ஆங்கிலக்கெட்ட வார்த்தையோடு குழப்பிக்கொண்டு அதிர்ந்தேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காவேரி,

"அய்யே, ஷிட்டு எடுத்துக்கோயேன்கா"

விபரீதத்தை உணர்த்த அப்பா என்னை காப்பாற்றினார், "ஒன்னும் இல்லை கயல், ஸ்வீட்டை தான் அப்படி சொல்றா. அமரிக்கா அக்கா வருதுனு 2 வாரமா இங்க்லீஷ் பேச ட்ரை பண்றா"

"யெஸ்ஸு" என்றாள் காவேரி பெருமை கொப்பளிக்க!

சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்த போது தன்னை தானே பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டாள், "யக்கா, நான் தான் இந்த வூட்டு வேலக்காரி, எது வோணும்னாலும் என்னை கேளு, செரியா?"

அடுத்த சில நாட்களில் காவேரியைப்பற்றி நான் கவனித்தது, ஒரு நாளுக்கு ஆயிரம் முறையாவது காவேரியின் பெயர் அந்த வீட்டில் உச்சரிக்கப்பட்டது. யார் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்தாள், சில அதிகப்பிரசங்கி உறவினர்களுக்கு கூட!

"யக்கா டிபன் சாப்ட்டியா?"

"இந்தாக்கா சக்கரைப்பொங்கலு, ஒனக்கு புடிக்குமாமே?"

"யக்கா, தலை கசக்கி வுடட்டுமா?"

"யக்கா, காப்பி கொண்டாந்திருக்கேன்"

எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா? சில வருடங்களில் என்னுடைய பார்வை மாறி இருந்தது. ஆனால் இதெல்லாம் ப்ளாகில் எழுத தான் சரிவரும், வீட்டில் இந்த வாதங்கள் எடுபடாது.

"போடி பேசாம, வந்துட்டா" - இது என் அம்மாவின் பதில்.

ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து தமிழக சேனல்களை அசுவாரஸ்யமாக திருப்பிக்கொண்டிருந்த போது காவேரி கண்ணில் தட்டுபட்டாள். சந்தன நிறத்தில், சிகப்பு நிற எம்ப்ராயிட்ரி பூ சிதறல்களோடு ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். இந்த சுடிதார் ரொம்ப ஃபெமிலியரா இருக்கே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா, "கயல் இந்த சுடிதார் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்துவிட்டது! கல்லூரியில் நான் விரும்பி அணிந்த சுடிதார், ஒரு ஆணி மாட்டி கிழிந்துவிட்டதால் அதை பீரோவில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன்! எப்படி சரி பண்ணினாள்? வியப்பாக அருகில் சென்று பார்த்தேன். கிழிந்து போன சுடிதாரை தைத்து, தையலை மறைக்கும் படி மேலே எம்ப்ராயட்ரி பண்ணி இருந்தாள், அதே பேட்டர்ன் சுடிதார் முழுவதும் அங்கங்கே ரிபீட் பண்ணி இருந்தாள். பார்க்க டிசைனர் சுடிதார் மாதிரி இருந்தது.

"கயல், இந்தக்குட்டியே அழகா எம்ப்ராயட்ரி பண்ணுவா, தெரியுமா?"

"அப்படியா காவேரி? இத்தனை அழகா எம்ப்ராயட்ரி பண்ணத்தெரியுமா?" நான் வியந்து போய் கேட்க,

"யெஸ்ஸூ" என்றாள் ஏதோ சினிமா பாட்டை முணுமுணுத்தபடியே.

ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவள் குடும்பத்தைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.அவள் அம்மா பற்றி, தம்பி பற்றி, முறை பையனைப்பற்றி(ரொம்ப வெட்கப்பட்டுக்கொண்டே பதில் சொன்னாள்). அவள் அப்பாவைப்பற்றி தான் நிறைய பேசினாள், என்னை மாதிரியே அவளும் அப்பா செல்லம் போலிருக்கிறது.

"சின்னப்புள்ளேல, வாராவாரம் எங்க நைனா என்னை சந்தைக்கு இட்டும்பூடும். அங்கே சவ்வு முட்டாய், லப்பர் வளீல் எல்லாம் வாங்கித்தரும். எப்படியாச்சும் என்னை டீச்சரு ஆக்கிப்புட பார்த்துச்சு, ஆனா பாவம், அல்பாயுசுல பூட்ச்சி"

"என்ன சொல்ற காவேரி, அப்பா செத்துப்போயிட்டாரா!!??"

"யெஸ்ஸு"

"என்னடி இப்படி சொல்றே?"

"கலக்கல் சரக்க குடிச்சுபுட்டு சாக்கடையில் வுளுந்து கெடந்தா வெற என்ன ஆவும்? கொடலு வெந்து ரெத்த வாந்தியா எடுத்து செத்து பூட்ச்சு"

என்ன சொல்வது என்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, அவளுடைய முகத்தில் படர்ந்த கனத்த சோகம் 1 நிமிடம் வரையில் மட்டுமே நீடித்தது. பிறகு சுதாரித்துக்கொண்டாள்

"யக்கா, உன்னோட வம்பளத்தா வூட்டு வேலை எல்லாம் என்னாறது? போட்டது போட்ட மாதியே கிடக்கு, ஏதாவது வோணும்னா ஒரு கொரலு குடு, ஓடியாந்துட்ரேன்" கண்ணில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்தப்படியே சிட்டாக ஓடி மறைந்தாள்.

எதுவுமே தோன்றாமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். உலகில் சிலருடைய கஷ்டங்களை நினைத்துப்பார்த்தால் நம்முடைய "பிரச்சினையாக" நாம் நினைப்பது எல்லாம் எவ்வளவு சில்லியாக தோன்றுகிறது இல்லையா? காவேரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது, பணமாக மட்டுமில்லை, பணம் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அந்த பெண்ணை சந்தோஷப்பட வைக்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும்.

அடுத்த நாள் ஷாப்பிங்குக்கு அவளை மட்டும் அழைத்துப்போனேன். அவளுக்கு நம்பவே முடியவில்லை, "யக்கா என்னையா இட்டும்போறே? வெயிட் எதுனாச்சும் தூக்கனுமா?" கண்கள் விரித்து அப்பாவியாக கேட்டாள்.

"பேசாம வா காவேரி"

"யெஸ்ஸூ"

கார் ட்ரைவரிடம் அவளுக்கு பிடித்த சினிமா பாட்டு போட சொல்லி வம்பு பண்ணினாள், கூடவே சுதி சேராமல் இவளும் உரக்க பாடினாள். அந்த புகழ் பெற்ற கடையில் பெண்கள் செக்ஷனில் நுழைந்தவுடனே, 2-3 விற்பனை பெண்கள் என்னை சூழ்ந்தார்கள். "மேடம் புது புது ஐட்டம் வந்திருக்கு பாருங்களேன், யூ.எஸ்காரங்க இதை தான் வாங்கிட்டு போறாங்க". இந்த விற்பனை பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எப்படித்தான் தெரிகிறது என்பதே புரியவில்லை!

மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப்போல ஒரு ஓரமாக ஒடுங்கி நின்ற காவேரியின் கையை பிடித்து இழுத்து "எனக்கில்லை, இவ அளவுக்கு பாருங்க" என்றவுடன் விற்பனை பெண்களின் முகம் காற்றுப்போன பலூனாக களை இழந்தது. உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்.

காவேரிக்கு துணி எடுத்துப்போடுவதில் விற்பனை பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. ராக்கில் இருக்கும் ரெடிமேட் சுடிதார்களை நானே தேர்வு செய்து எடுக்க வேண்டி இருந்தது. அதுவரை அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் இருந்த காவேரி சுயநினைவு வந்தவளாக, "யக்கா, யக்கா எனகெதுக்கு துணி எல்லாம்? தீவாளி கூட இல்லையேகா?" என்றாள். உதடு மட்டும் தான் அப்படி சொன்னது, அவள் கண்கள் "ப்ளீஸ், ப்ளீஸ், நிறுத்திவிடாதே" என்று கெஞ்சின. இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும், வறுமையில் இருக்கும் பெண்கள் என்றால் விதம் விதமாக உடை அணிய ஆசை இருக்காதா? பல சமயம் ரொம்ப சுயநலவாதியாக இருந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன்.

பில் போடும் போது, "யக்கா ரொம்ப வெலேக்கா. ஒரு சுடிதாரு வோணும்னா எடுத்துக்கறேன்" இந்த முறை நிஜமாக தான் சொன்னாள். "அடி பைத்தியமே, ப்ளூமிங் டேலில் ஒரு பர்ஸை இதை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் தெரியுமா?" நினைத்துக்கொண்டேன் ஆனால் சொல்லவில்லை. "செரி, பேக்கையாவது குடுக்கா" குற்ற உணர்ச்சியுடன் பேகை வாங்கிக்கொண்டு நடந்தாள். "வேற ஏதாவது வேணுமா காவேரி? காஸ்மெடிக்ஸ், ஜுவல்லரி ஏதாவது? பரவாயில்லை சொல்லு".

"முடிஞ்சா எனக்கு ஒன்ன மாதிரியே ஒரு சில்பர் வாங்கித்தரியாக்கா?" ரொம்ப தயங்கியப்படி தான் சொன்னாள்(ஹை ஹீல்ஸ் ஷூவை தான் இப்படி குறிப்பிடுகிறாள்). வீடு திரும்பும் போது சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் வாங்கிக்கொடுத்த ஒரு சுடிதாரை ஜோதிகா ஒரு படத்தில் போட்டு வருகிறாராம். இந்த ஹீல்ஸ் மாதிரியே சினேகாவிடம் இருக்கிறதாம்.

இறங்கும் போது நிறைவாக சொன்னாள் "என் சென்மத்தில இத்தனை நல்ல துணிய சேத்து வச்சு பார்த்ததில்லீங்க்கா". உண்மையாக சொல்கிறேன், சிறுவயதில் இருந்து நான் கேட்ட உடைகளை எல்லாம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். பிறகு வேலைக்கு போனவுடன் நானும் (அதான் க்ளாசட் நிறைஞ்சிடுசே!) நிறைய உடைகள் வாங்கி இருக்கிறேன், சலிக்க, சலிக்க. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.

ஊருக்கு போகு முன் ஏர்போட்டுக்கு அந்த சுடிதாரில் ஒன்றையும், ஹைஹீல்ஸ் ஷூவையும் அணிந்து வந்திருந்தாள். கடைசியாக டெர்மினலுக்கு போகுமுன் அனைவரிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பியபோது கவனித்தேன். அவள் கண்ணில் வழமையாக தென்படும் மென்சோகம் காணாமல் போயிருந்தது.

என் தலை மறையும் வரை கத்தினாள், "யக்கா ஒளுங்கா வேளா வேளைக்கு சாப்புடு, செரியா?"

"யெஸ்ஸு"