விமான பயணம் எனக்கு பிடிக்காத ஒன்று, ஏன் தெரியுமா?
செக்யூரிட்டி செக்கிங், செக்கிங், செக்கிங்! விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அப்படியே பொடி நடையாக நடந்து போனால் கூட போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் சேரலாம் போலிருக்கிறது. அதுவும் எனக்கும், விமான நிலைய செக்யூரிட்டி கேட்டுகளுக்கும் நிரந்தர தகராறு. நான் கேட்டை கடக்கும் போதெல்லாம் அது என்ன மாயமோ தெரியாது, தவறாமல் அலாரம் அடிக்கும். வளையல், செயின், கம்மல், சாண்டல்ஸ் என்று எல்லா மெட்டல்களையும் பார்த்து பார்த்து ரிமூவ் பண்ணி இருந்தாலும், கவனிக்க தவறிய ஹேர்க்ளிப் வில்லியாக சதி பண்ணி இருக்கும்.
சுய புலம்பல் இருக்கட்டும், இதெல்லாம் வழக்கமா நடப்பது தான். இருந்தாலும் அன்றைய விமானப்பயணம் எனக்கு வழக்கத்தை விட கொடுமையாக இருந்தது. நான் கொண்டு வந்த ஹாண்ட் லகேஜில் இருந்த லிக்விட் சோப், ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் 3 oz எடைக்கு அதிகமாம்!(என் இனிய தமிழ் மக்களே, 3 அவுன்சுக்கு குறைவாக யாராவது க்ரீம் எடுத்து வருவாங்களா?). "I am extremely sorry young lady" என்று ஒரு குண்டர் என்னுடைய விக்டோரியா சீக்ரெட் க்ரீம்களையும், பால் மிட்சல் ஷாம்பூ- கண்டிஷனரையும் என் கண் முன்னால் குப்பையில் தூக்கிப்போட்டார்(ண்ணா.. நல்லா இருப்பீங்களாணா?)
என்னுடைய சோகத்தை ஸ்டார்பக்ஸ் காஃபி குடித்து ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞர் தட்டுப்பட்டார். வழக்கமாக இந்தியர்களைப்பார்த்தால் சிரித்து ஒரு 'ஹாய்' சொல்வதுண்டு, அன்றைய தினம் மூட் இல்லாததால் பேசாமல் போய்விட்டேன். விமானத்தில் என்னுடைய பக்கத்து சீட் காலியாக இருந்தது, நான் வழக்கம் போல அங்கே இருந்த அறுவை மேகசீன்களை புரட்டிக்கொண்டிருந்த போது, "எக்ஸ்க்யூஸ்மி" என்ற குரல் என் கவனத்தை கலைத்தது. மீண்டும் அந்த இந்திய இளைஞர்!
"4 மணி நேர பயணம், நீங்க செல்போன்ல தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க. போரடிக்காம போகலாம் இல்லையா? உங்க பக்கத்தில உட்காரலாமா?"- இப்படி தமிழில் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வததென்று தெரியவில்லை. No, offense to gentlemen here, தனியே பயணிக்கும் போது, அந்நியர்களுடன் முக்கியமாக ஆண்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. பாதுகாப்பு சம்மந்தமான கவலை தான் காரணம். "அதுக்கென்ன,go ahead" என்று உதட்டளவில் சொல்லிவிட்டாலும் மனதளவில் தர்மசங்கடம். தமிழ் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படியாவது மறுத்திருக்கலாம்.
அவர் வந்து உட்கார்ந்ததில் இருந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார்.முக்கியமாக நம்ம Gapடன் புகழ் பாடிக்கொண்டிருந்தார்.Gapடன் தான் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராம்(!) ஏற்கெனெவே பயணம் என்றால் மைல்ட் மோஷன் சிக்னெஸ் வந்து அவதிப்படும் எனக்கு அவர் அணிந்திருந்த கொலோன் எக்ஸ்ட்ராவாக தலைவலியையும் ஏற்படுத்தியது. கூடவே ஒரு எண்ணம் "இவரை எங்கோ பார்த்தா மாதிரி இருக்கே?". அவர் சொல்வதற்கெல்லாம் சும்மா சிரித்துவைத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் திடீரென்று என்னிடம் இந்தக்கேள்வியைக்கேட்டார் "என்ன வேலை செய்யறீங்க?"
நான் என்னுடைய கணிப்பொறியியல் வேலையைப்பற்றியும், ப்ராஜெக்டுகளைப்பற்றியும் சொல்லிவிட்டு ஃபார்மாலிட்டிக்காக அதே கேள்வியை அவரிடமும் கேட்டு வைத்தேன், அங்கே தான் வந்தது வினை. உடனே அவரின் முகம் சிறுத்துவிட்டது, "என்ன இப்படி கேட்டுட்டீங்க, நான் தான் *****. என் படம் பார்த்ததில்லையா? -----, ----- படத்தில் எல்லாம் நடிச்சிருக்கேனே, அதிலும் இந்த(ஒரு படத்தின் பெயரைக்குறிப்பிட்டு)படம் நல்லா ஓடியதே? எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
அவர் குறிப்பிட்ட அந்த பாடாவதி படம் அவர் சொன்ன பிறகு தான் நினைவு வந்தது, கூடவே அவர் முகமும். "ஷாருக்கான் படத்தை காப்பி அடிச்சது மாதிரி இருக்கே" என்று எரிச்சலடைந்து பாதியிலேயே டிவிடியை நிறுத்திய படம். "ஓ நல்லா நினைவிருக்கே, ரொம்ப சாரி நான் ஒரு சரியான ஸ்காட்டர் ப்ரெயின்" என்று எப்படியோ சமாளித்தேன்.
"இட்ஸ் ஓகே" என்று அவர் சொன்னாலும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல் தடுமாறினார்(இந்த எக்ஸ்ப்ரெஷன்களில் பாதியாவது படத்தில் காட்டி இருக்க கூடாதா?). அவரை அடையாளம் காண முடியாமல் போனதில் எரிச்சலோ என்னவோ, பிறகு தொடர்ந்து இந்தியர்கள் எப்படி இந்தியாவில் படித்துவிட்டு அமரிக்காவில் வேலை செய்ய ஓடிவிடுகிறார்கள், அதனால் இந்தியாவுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைப்பற்றி எல்லாம் எனக்கு முழு நீள லெக்சர் கொடுத்தார்(அதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்?).
லெக்சரின் முடிவில், "வேலை எல்லாம் போதும், நீங்க ஏன் சென்னை வந்து செட்டில் ஆகக்கூடாது? எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார். சென்னையில் வந்து அப்படி நடிகருடன் ஊர் சுற்றினால் என்னுடைய கன்சர்வேட்டிவ் பெற்றோர்களும், உறவினர்களும் என்ன கலாட்டாவெல்லாம் பண்ணுவார்கள்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. அவர் சொன்னதைக்கேட்டு சிரிப்பதாக நினைத்த நம்ம ஹீரோ அதற்கு பிறகு டாப் கியரில் அலற(பேச) ஆரம்பித்தார். எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் பேச இப்படி ஏன் எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சிலர் கத்தவேண்டும்?
அவருடைய அலறலில் இருந்து நான் அறிந்துக்கொண்டவை: நம்ம ஹீரோவுக்கு ஏதோ ஷூட்டிங்காம். அவர் சொன்ன படத்தலைப்பை கேட்டாலே தூக்கம் வரும், அப்படி ஒரு அற்புதமான டைட்டில். அப்படி ஒரு படத்தை நான் எங்கேயும் கேள்விப்பட்டதாகவே நினைவில்லை. ஒரு வேளை மெகாசீரியலாக இருக்குமோ? அடுத்த ஜேகே ரித்தீஷ் ஆவதற்கான எல்லா பிரகாசமான வாய்ப்பும் நம்ம ஹீரோவுக்கு இருந்தது.
ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை எல்லாம் கட்டாய ஓய்வு எடுக்க வைக்கனுமாம், அவரை மாதிரி யூத்துகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறதாம்(அவங்க ஓய்வெடுத்துட்டா மட்டும்?). வாய்ப்புகள் கிடைக்க அவர் படும் சிரமங்களை எல்லாம் ரொம்ப விரிவாக விளக்கினார், கடைசியில் "பாருங்க உங்களுக்கு கூட என்னை அடையாளம் தெரியாமல் போச்சு" என்று அவர் சொன்னதும் எனக்கே பாவமாக போய்விட்டது. "எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்" என்று அவரிடம்(வேறுவழி இல்லாமல்)கேட்டேன்.
ஏதோ ஒரு போஸ்ட் கார்ட்டில் அவருடைய தொலைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரி எழுதி, கூடவே ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார். இறங்கிய பிறகு, நான் போக வேண்டிய இடம் வரையில் கொண்டு வந்து விட்டு, போகும் போது "மறக்காமல் சென்னை வரும் போது என்னை வந்து பார்க்கனும், டைம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு போனார். சரி என்று சொன்னேன்(நிச்சயம் போகப்போவதில்லை).
அவர் எழுதிக்கொடுத்த ஆட்டோகிராப் கார்ட் எங்கோ தொலைந்துவிட்டது, இப்படி சில தகவல்களை நான் தொலைப்பதற்காகவே வாங்குவதுண்டு. ஆனால் அவர் குறிப்பிட்ட படத்தை மட்டும் ரிலீஸ் ஆகும் போது டிவிடியில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.