Friday, August 15, 2008

ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள பாட்டிமாவுக்கு,

தமிழ் மணத்தில் இந்த வாரம் யாருக்காவது பகிரங்க கடிதம் எழுத வேண்டிய வாரமாம். என் ப்ளாகில் யாருக்கு கடிதம் எழுதுவது என்று தெரியாமல் குழம்பினேன். சொல்ல நினைப்பதை யாராக இருந்தாலும் இப்போதெல்லாம் நேரடியாகவே சொல்லி விடுகிறேனே? கடிதம் எழுதும் அவசியம் இல்லை. ப்ளாக் என்றால் என்னவென்று கேட்பீர்கள், ப்ளாக் என்றால் வலைப்பூ(அதென்ன மல்லிப்பூ என்றெல்லாம் குறுக்குக்கேள்வி கேட்கக்கூடாது, சொல்வதை கேட்டுக்கொள்ளவும்). ஏற்கெனவே காலம் ரொம்ப கடந்துவிட்டது, அடுத்த வாரம் உங்க நினைவு நாள் வேறு வருகிறது.

நீங்கள் மறைந்து இத்தனை வருடமாகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை, நேற்று தான் உங்கள் கை பிடித்து கவனமாக ரோட்டை க்ராஸ் பண்ணிய மாதிரி இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தீர்களா? நேற்று கூட கடையில் ஒரு அமரிக்க சிறுமியும், ஒரு பாட்டியும் ஜோடியாக ஷாப்பிங் பண்ண வந்தார்கள். அந்த சிறுமி பாட்டியை கட்டிப்பிடித்து
"I love you so much Grandma" என்றாள், எனக்கு உடனே உங்கள் நினைவு வந்துவிட்டது. கொஞ்ச காலமாகவே உங்களைப்பற்றி நிறைய நினைக்கிறேன். அந்த அமரிக்க சிறுமி மாதிரி எல்லாம் நாம் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒருபோதும் உங்களுக்கு தெரிவித்ததில்லை. காரணம் எல்லாம் பெரிதாக எதுமில்லை, அன்பை வார்த்தைகளில் தெரிவிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததே காரணம். சொல்லாமல் விட்டதை இப்போதாவது சொல்லவே இந்த பகிரங்க கடிதம்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாப்பாடு ஊட்டியது நீங்கள் தான். அம்மாவுக்கு நேரம் இருந்தால் கூட உங்கள் உரிமையான "சாப்பாடு ஊட்டுதலை" ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இட்லி, நெய், சர்கரை கலந்த ஒரு கலவையை காலையில் 7 மணிக்கு ஊட்ட ஆரம்பித்து 10 மணி வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெருவில் போகும் வாகனங்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் வேடிக்கை காட்டி, கதை சொல்லி நீங்கள் ஊட்டுவது அரைகுறையாக நினைவு இருக்கிறது. மீண்டும் 12 மணிக்கு மதியம் சாப்பாடு ஊட்டும் ட்யூட்டி ஆரம்பித்துவிடும். என் மீது எத்தனை அக்கறை உங்களுக்கு? இது போல என் மேல் இத்தனை அக்கறையுள்ள ஒரு ஜீவன் என் வாழ்க்கையில் கிடைக்கப்போவதே இல்லை! ஒரு நாளும் இதற்காக நீங்கள் சலித்துக்கொண்டதில்லை. மாறாக, என் தொண்டையில் உணவை விழுங்க முடியாமல் ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கிறதோ என்று ரொம்ப கவலைப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரு நாள் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஆட்டோவில் என்னை, சைல்ட் ஸ்பெஷலில்ஸ்ட் டாக்டர். குமாரசாமியிடம் அழைத்து சென்று, "என் பேத்தி வயத்தில இருந்தப்போ மருமகள் சரியா உடம்பை பார்த்துக்கல, அவ தொண்டைக்குழாயில் ஏதோ அடைப்பு இருக்கு, உடனே படம் பிடிச்சு(எக்ஸ்ரே) பாரு" என்று வம்பு பண்ணி இருக்கிறீர்கள். டாக்டர் மேலோட்டமாக சோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்லைமா, குழந்தைக்கு பசிக்கும் போது ஊட்டுங்க போதும்" என்று சொன்னதற்கு, "படம் பிடித்து ஆப்பரேஷன் பண்ணாமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை" என்று அடம் பிடித்து கடைசியில் அப்பா வந்து உங்களை சமாதானப்படுத்தி அழைத்துப்போனாராம். அதை இன்னும் குடும்ப நிகழ்ச்சிகளில் சொல்லி சிரிக்கிறார்கள். உங்களின் வயதான காலத்தில் அத்தனை தொல்லை கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

சுருக்கம் விழுந்த முகத்துடனும், நடுங்கும் கரத்துடனும், பொக்கை பல் சிரிப்புடனும் இருக்கும் நீங்கள் எனக்கு பேரழகியாக தெரிவீர்கள். அழகு என்ன அழகு? "இப்படி இருந்தால் தான் அழகு" என்ற பிம்பத்தை மீடியாக்கள் எங்கள் எண்ணங்களில் திணிக்கின்றன. அதையே நாங்களும் நம்புகிறோம். உண்மையான அழகு எப்படி இருக்கும்? உங்களை மாதிரியே இருக்கும்! நம்ப மாட்டீர்கள் தெரியும், இருந்தாலும் விளக்குகிறேன். தாத்தாவின் மேல் உங்களுக்கு எத்தனை அன்பு? அவர் மறைந்த பிறகு அவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பதையும், சாப்பிடுவதையும் அடியோடு நிறுத்திவிட்டீர்கள். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வெறும் நூல் புடவை. இதெல்லாம் வேண்டாம் என்று எத்தனை முறை போராடினாலும் நீங்கள் கேட்கவே இல்லை.

தாத்தாவை தவிர வேறு யாரையாவது நீங்கள் மனதளவிலும் நினைத்ததுண்டா? ஏதாவது சினிமா ஹீரோவை டிவில் நான் அழகு என்றால் உடனே நீங்க, "இது என்னடி அழகு? அந்த காலத்துல தலைப்பாகையும், கோட்டும், வேட்டியுமா உங்க தாத்தா வேலைக்கு கிளம்பினார்னா ஊரே திரும்பிப்பார்க்கும்" என்று புளங்காகிதப்படுவீர்கள்.தாத்தாவின் பிறந்தநாள், திவசம், உங்கள் கல்யாண நாள் - இப்படி எது வந்தாலும் தாத்தா படத்தை பார்த்து, பார்த்து அன்றெல்லாம் அழுதுக்கொண்டே இருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள், இப்படி ஒரு மனைவியை இந்த காலத்தில் யாராவது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியுமா? நீங்க தான் உண்மையான 'கனவுக்கன்னி' இல்லையா? இப்போதெல்லாம் காதல், கல்யாணம் எல்லாம் ஏறக்குறைய வியாபாரம் ஆகிவிட்டது!

உலகத்தில் யாராக இருந்தாலும் உங்கள் குழந்தையாக நினைக்கும் அன்பு யாருக்கு வரும்? பழுத்த ஆன்மீகவாதியான உங்களுக்கு எத்தனை சகிப்புத்தன்மை? நாகூர் ஹனீஃபாவின் கேசட்டுகளை வாங்கி விருப்பமாக கேட்பீர்கள், ஏதாவது கிறிஸ்தவ மிஷ்னரிகள் கொடுக்கும் துண்டு சீட்டை வாங்கி முழுக்க படிப்பீர்கள், பைபிள் கொடுத்தால் அதையும் வாங்கி படிப்பீர்கள். நீங்கள் இதற்கெல்லாம் முகம் சுளித்ததே இல்லை. கேட்டால், "ராமர், கிருஷணர் மாதிரி அல்லாவும், இயேசுவும் கூட ஒரு சாமி" என்பீர்கள். இப்போது நடப்பதை எல்லாம் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டிருப்பீர்கள். ராமஜென்ம பூமி, கோத்ரா சம்பவம், குஜராத் வன்முறை, தொடர் குண்டுவெடிப்பு, இஸ்ரேல் -பாலஸ்தீன் பிரச்சினை, அமரிக்கா - அரபு நாடுகள் பிரச்சினை, மதத்தீவிரவாதம் என்று உலகெல்லாம் இரத்த ஆறு ஓடுகிறது. "பாவம், யார் பெற்ற பிள்ளைகளோ, சாகும் போது எப்படி எல்லாம் துடித்தார்களோ" என்று கண்ணீர் விட்டு, இறந்து போனவர்களின் மன சாந்திக்காக பூஜையறையில் மணிக்கணக்காக பிராத்தனை செய்ய நீங்கள் இல்லை.

மருமகள் மீது எத்தனை அன்பு உங்களுக்கு? அம்மாவை ஊக்கப்படுத்தி டிகிரி முடிக்க வைத்து, படிக்கும் போது தொந்தரவு பண்ணாமல் இருக்க எங்களை நீங்களே கவனித்து,தேர்வு நேரத்தில் அம்மா கண்விழித்து படித்தால் தேநீர் போட்டுக்கொடுத்து - அதை எல்லாம் நினைத்தால் வியப்பாக இருக்கிறது. "பொம்மனாட்டிக்கு படிப்பு ரொம்ப முக்கியம்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். நீங்கள் பள்ளிக்கு போகவில்லை என்றாலும், தாத்தாவிடம் இருந்து தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் உங்கள் சொந்த முயற்சியில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன். வெள்ளிக்கிழமை அம்மா அலுவலகம் விட்டு வந்தால், வேறு உடை மாற்ற சொல்லி, தலை பின்னி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, ஹாலில் வம்பளத்துக்கொண்டிருக்கும் அப்பாவின் நண்பர்களை உரிமையுடன் துரத்திவிட்டு, அம்மாவையும்-அப்பாவையும் நைட் ஷோ சினிமாவுக்கு அனுப்பும் உங்கள் வெள்ளை மனதை என்ன சொல்லி பாராட்டுவது? ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் அவர்களிடையே இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.

"வீட்ல இருக்கற தயிரை எல்லாம் மோராக்கி போற வரவங்களுக்கு எல்லாம் தானம் பண்ணினால், வீட்டுக்கு என்ன மிஞ்சும்?" என்று அம்மா உங்களின் தாராளக்குணத்தை குறை கூறினால் உடனே கோபமாக, "உங்கப்பா வீட்ல இருந்தா தயிர் கொண்டுவர? தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தால் புண்ணியம்.இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப சுயநலவாதிகளா இருக்கீங்க" என்று கண்டிக்கவும் தயங்கியதில்லை(இன்னும் நீங்க எங்களைப்போன்ற மார்டன் பெண்களை எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?).எனக்கு தெரிந்தவரையில், வீட்டுக்கு வந்தவர்களுக்கு காபியோ, டிஃபனோ கொடுக்காமல் நீங்கள் அனுப்பியதில்லை. நீங்கள் இறந்த வீட்டில், அப்பாவை விட அதிகமாக அழுதது அம்மா என்பது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்த நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூளையில் கட்டி வந்து அதனால் முழு உடலும் செயலிழந்து, நினைவு திரும்புவதும், தப்புவதுமாக ஒரு 10 நாட்கள் மருத்துவமனை படுக்கையில் நீங்கள் பட்ட பாடு! அப்பாவிடம் மெல்லிய குரலில் "என்னை விட்டுருப்பா, முடியல" என்று நீங்கள் சொல்லியதை அலட்சியம் செய்து தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் பலன் ஏதுமில்லை. மரணத்திலும் வழக்கம் போல நீங்கள் தான் வென்றீர்கள். எனக்கு அடிக்கடி குற்ற உணர்ச்சி வரும், உங்களை நான் இன்னும் நன்றாக கவனித்துக்கொண்டிருக்கலாமோ? உங்களிடம் இன்னும் அன்பாக இருந்திருக்கலாமோ? Did we take you for granted?

"இறந்தவர்கள் ஆவியாக வந்து நடப்பதை எல்லாம் பார்ப்பார்கள்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். எனக்கு அதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை. நீங்கள் படித்தாலும்,படிக்கப்போவதில்லையென்றாலும் என்னுடைய மனதிருப்திக்காக கடிதம் எழுதுகிறேன். நெஞ்சம் நிறைய நினைவுகளோடு, உங்களின் கண்ணாடி,கைக்கடிகாரம், பழையபுடவைகள் போன்றவற்றை அப்பாவிடம் கேட்டு வாங்கி கவனமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். உங்களுடைய பேத்தியாக பிறந்ததில் ரொம்ப பெருமைப்படுகிறேன். வருங்காலத்தில், உங்களின் அன்பு, பொறுமை, இரக்கம், அறிவு, போன்ற நற்பண்புகளில் பாதியாவது கொண்ட பெண்மணியாக மாறினேன் என்றால், அதையே என் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்.


இப்படிக்கு உங்கள் அன்பு பேத்தி,

கயல்விழி

Tuesday, August 12, 2008

நீங்கள் HIV பாசிடிவா?

பயந்துவிடாதீர்கள்!

Please dont take it offensively!

எனக்கு ரொம்ப நாளா ஒரு கவலை! நம்ம ஊரில் இப்போ கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ், கல்யாணத்திற்கு அப்புறம் மல்டிப்பிள் பார்ட்னெர்ஸ் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கு.

என்ன “முற்போக்குவாதிகள்” “அதனால் என்ன தப்பு? ” என்கிறீர்களா?

* இல்லைங்க, நாம் முன்னேறுகிறோம் என்று ஒரு பக்கம் நீங்கள் பெருமைப்பட்டாலும் இன்னொரு பக்கம், நம்ம பாதுகாப்பான உடலுறவு முறையை பின்பற்றுகிறோமா? என்கிற கவலை எனக்கு.

* நம்ம ஊரில் உள்ள இளைய சமுதாயம் மற்றும் “செக்ஸ் முற்போக்குவாதிகள்” இந்த மாதிரி "கேசுவல் செக்ஸ்" வச்சிக்கிறவங்க எல்லாம் கவனமாக ஆணுறை பயன்படுத்துகிறார்களா? இல்லை அதெற்கெல்லாம் நேரம் அமைவதில்லையா, கிடைப்பதில்லையா ?

* மல்டிப்பிள் செக்ஸ் பார்ட்னெர்ஸ் வைத்துள்ளவர்கள், முக்கியமாக ஆண்கள், எப்போவாவது எச் ஐ வி டெஸ்ட் பண்ணுவதுண்டா? இல்லை அதெல்லாம் நமக்கு வராதுனு இருக்கிறார்களா?

ஒரு 10 வருடம் முன்னால், எச் ஐ வி பாஸிடிவ் கேஸ் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பதாக படித்தேன். ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நிலைமை என்ன?

இதைப்பற்றி கொஞ்சம் பேசலாமே?

ஒரு முக்கியமான விசயம்! எச் ஐ வி, இரத்த பறிமாற்றத்தில், மருத்துவ கவனக்குறைவில் பரவுவதைப்பற்றி இங்கே நான் கவனம் செலுத்த விரும்பவில்லை! இங்கே உடலுறவு மூலமாக பரவுவதைப்பற்றி மட்டும் பேசுவோம்!

நான் என்ன நினைக்கிறேன் என்றால்,

* நம்ம ஊரில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு, ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்பவர்கள், கல்யாணம் செய்வதற்கு முன்னால், ஜாதகத்தோட HIV test result பரிமாறிக்கொள்ளனும்!

* ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் பார்ட்னர்கள் வைத்துள்ளவர்கள் ஆணுறை கட்டாயம் பயன் படுத்தனும்!

* நம்ம அரசாங்கம் ரேசன் கார்டுக்கு மாதம் மாதம் இலவசமா எல்லோருக்கும் ஆணுறை சப்ளை பண்ணனும்!

இல்லை, HIV/AIDS அப்படி ஒண்ணும் தமிழ்நாட்டில் "major threat" இல்லையா? நான் தான் பெரிது படுத்துகிறேனா? அப்படியென்றால் என்னுடைய அறியாமையை போக்குங்கள்! என்னை மன்னியுங்கள்!

Monday, August 11, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 6

நம் குடும்பத்தில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்தது? என்று சுயபச்சாதாபத்தில் மூழ்கி இருந்த எனக்கு, டிலோரிஸின் வாழ்க்கை ஒரு நல்ல eye opener. ஒரு சிறு பெண்ணுக்கு என்னென்ன துன்பம் வரக்கூடாதோ அத்தனையும் அனுபவித்தவர். அவர் தொடர்ந்து சொன்னவை அதிர்ச்சி ரகம், என்னால் முடிந்ததை மொழிபெயர்த்து எழுதுகிறேன், மீதி உங்கள் கற்பனைக்கு.

"அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் போது பக்கத்து வீட்டு பெண் வருவாள், அவளும் திருமணமானவள் தான். கணவன் வேலைக்கு போன பின் எங்க வீட்டுக்கு வந்துவிடுவாள்"

லேசாக தயங்கியப்படி, "பிறகு அப்பாவும், அந்த பெண்ணும் என் கண் முன்னாலயே..."
சொல்லும்போதே டிலோரிஸின் கண்கள் கலங்கியது.

"அருவருப்பினால் பொறுக்கமுடியாமல் தான் தலையை வேறு பக்கமாக திருப்பிக்கொள்வேன். அப்பா என் முகத்தை தன் பக்கம் வலுக்கட்டாயமாக திருப்பி அந்தக்காட்சியை பார்க்க சொல்லி வற்புறுத்துவார். 'இது தான் உனக்கு ஹோம்ஸ்கூல் பாடம்' என்று கோணலாக சிரிப்பார்"

"இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போதே அந்த பெண் குடிபோதையில் மயங்கிவிடுவாள். அவருக்கு அடங்காமல் வெறிப்பிடித்த மிருகம் மாதிரி என்னை சேரில் உட்கார வைத்து, வலுக்கட்டாயமாக என் வாயை திறந்து...."

"முடிந்த பிறகு மட்டுமே அப்பா என்னிடம் கொஞ்சம் அன்பாக இருப்பார். என் கையில் இரண்டு டாலர் கொடுப்பார், என்னுடைய நீல கண் தேவதையே(My blue eyed angel) என்று கொஞ்சுவார். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த மிக்டானல்ட்ஸுக்கு ஓடிப்போய் பர்கர் வாங்கி சாப்பிடுவேன். உணவை மெல்லும் போது வாயெல்லாம் ரொம்ப வலிக்கும்"

இப்போது டிலோரிஸ் குலுங்கி, குலுங்கி அழத்தொடங்கினார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டே கேட்டேன்- "நீ ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை?"

டிலோரிஸ் சுதாரித்துக்கொண்டு விரக்தியாக, "எத்தனையோ முறை சொல்ல முயற்சி பண்ணினேன், அம்மாவுக்கே அரைகுறையாக நடப்பதெல்லாம் தெரியும். ஆனால் அவளுக்கு கணவனை எதிர்க்க பயம். இயலாமையில் என்னை தான் "ஹோர்(விபச்சாரி)" என்று திட்டுவாள், அடிப்பாள். அம்மாவும் என்ன செய்வாள், பாவம்! கடுமையான வேலை, குடும்ப கஷ்டம், இடையில் நான் வேறு".

ஒரு அம்மா இப்படி எல்லாம் செய்வாளா என்று எனக்கு வியப்பாக இருந்தது. பின்னர் நான் படித்து தெரிந்துக்கொண்டது: ஒரு குடும்பத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பது எப்படியும் அந்த குடும்பத்தலைவிக்கு தெரிந்துவிடுமாம், தெரிந்தும் தெரியாதது போல இருப்பார்களாம்(Enablers). எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவனைப்பற்றிய பயமும், குடும்ப கட்டமைப்பை குலைக்க விரும்பாமையும் காரணமாக இருக்கலாம். அதற்காக சொந்த மகளையே பலிகொடுக்க துணிகிறார்கள். வெளிநாட்டிலேயே இப்படி என்றால், நம் நாட்டில் பெண்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது!

"எத்தனை முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் தெரியுமா? ஏதோ கடவுள் அருளால் ஒவ்வொரு முறையும் தப்பித்தேன்". தன் கழுத்தில் இருந்த மதச்சின்ன டாலரை இரண்டு கையாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மெக்சிகன் ஆரிஜினில் வருபவர்கள் பெரும்பாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள்.

"அப்பா பார்க்காத போது நானும் குடிக்க ஆரம்பித்தேன். உணர்வுகள் மரத்துப்போகும் அளவு குடித்தால் அப்பாவின் வக்கிர செயல்கள் உறைக்கவில்லை, வலிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு நானும் அடிமையாகிவிட்டேன்! இப்படியே காலம் ஓடிவிட்டது. எனக்கு 17 வயது, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் திருடிக்கொண்டு ஒரு பாருக்கு போனேன், அங்கே தான் என் கணவரை சந்தித்தேன்". டிலோரிஸ், தன் கணவரை பற்றி சொல்லும்போது, அவர் முகம் உடனடியாக பிரகாசமடைந்தது.ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டமாதிரி!

"அவர் ஒரு பிஸ்னஸ் மேன், மனைவியை இழந்தவர். அவரை பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அவரோடு பேசும் சுவாரஸ்யத்தில் குடிக்க கூட மறந்துவிட்டேன். அவர் கூட இருந்தால் என் துன்பமெல்லாம் மறைந்துவிடும் என்று தோன்றியது. என்னைக்காப்பாற்ற கடவுள் அனுப்பிய தேவதை என் கணவர். என்னை வீட்டுக்கு கொண்டு போய் விடும்போது என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்?"

"'இன்று உலகத்திலேயே மிக அழகான,அன்பான பெண்ணை சந்தித்தேன்' என்றார். இத்தனைக்கும் அன்று நான் துளி மேக்கப் போடவில்லை, ஹைஸ்கூல் கூட முடித்திருக்கவில்லை!".இதை சொல்லும் போது டிலோரிஸின் முகத்தில் வெட்கம், பெருமிதம் எல்லாம் கலந்த உணர்வுகள்.

"திருமணத்துக்கு பிறகு எல்லாம் சரியாப்போச்சா டிலோரிஸ்?"

"அது தான் இல்லை, திருமணத்துக்குப் பிறகும் என் கடந்த காலம் என்னை விடாமல் துரத்தியது"


- நினைவுகள் தொடரும்