Showing posts with label கற்பு. Show all posts
Showing posts with label கற்பு. Show all posts

Tuesday, January 6, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10



பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9.

எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது, ஒரு சில சமயம் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார்ளோ? என்று நான் நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு ஏதாவது முன்னேற்றம் நிகழும். ஒன்று சொன்னால் எனக்கே நம்ப சிரமமாக இருக்கும், என்னுடைய பெற்றோர்களின் திருமணம் காதல் திருமணம்! 4 வருடங்கள் அம்மாவை ஒரு தலையாக(!) காதலித்து அப்பா திருமணம் செய்துக்கொண்டாராம். காதல் என்றால் வேறெதுவும் ரொமாண்ட்டிக்காக கற்பனை பண்ணிவிடாதீர்கள். அம்மாவுக்கு ஸ்கூல் முடிந்து வரும் போது பத்திரமாக வீடு வரை பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுப்பது, டைப்பிங் க்ளாஸில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது- இப்படி தொடர்ந்து இலவச செக்யூரிட்டி சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொண்டதில்லையாம்(Do you hear a alarm going off in your head?)

இவர்களின் கல்யாணக்கதையைப்பற்றி பேசினால் மட்டும், இருவர் முகத்திலும் புன்சிரிப்பு அரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்பா,அம்மா பின்னால் சுற்றியதை நேரடியாக ஒப்புக்கொள்ளவே மாட்டார். அம்மா எங்களிடம் ஏதாவது கல்யாணக்கதை சொன்னால், "நம்பாதேமா, பாவம் ஏதோ கற்பனையில் மிதக்கிறாள்" என்றெல்லாம் இடையிடையே கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். எனக்கே ஒரு வேளை அம்மா ரொம்ப கற்பனை பண்ணுகிறாரோ? என்று சந்தேகாமாக கூட இருந்தது, ஒரு நாள் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) பழைய திருமண ஆல்பம் பார்க்கும் வரை.

சில படங்களில் ஓரமாக ஒல்லியான உருவத்துடனும், கட்டம் போட்ட சட்டை, பெல் பாட்டம் பேண்டுடன் அசடு வழிய சுப்ரமணியபுரம் ஹீரோ மாதிரி நிற்பது அப்பாவா? அப்பாவே தான்! அம்மாவின் அக்கா கல்யாணத்துக்கு, தானே வலிய வலிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்திருக்கிறார், எல்லாமே அம்மாவுக்காக! அதே புகைப்படங்களில், கொஞ்சம் தள்ளி பட்டுப்பாவாடை தாவணியுடனும், முகம் முழுக்க பெருமிதத்துடனும் தேவதைப்போல அம்மா நிற்கிறார். இருவர் முகத்திலும் எத்தனையோ எதிர்பார்ப்புகள், கனவுகள்! இங்கே யார் எதிர்ப்பார்ப்பை யார் நிறைவேற்றவில்லை, ஏன் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. புகைப்பட ஆதாரத்துடன் அம்மா மடக்கியவுடன், அப்பாவுக்கு பேச்சே வராது. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை" என்று ஏதோ அவசரமான வேலை இருப்பது போல எழுந்து சென்றுவிடுவார்.

பெப்சி உமாவுக்குப்பிறகு வேறொரு பெண்ணும் அப்பாவின் கருத்தைக்கவர்ந்தார், வேறு யாரும் இல்லை, சிம்ரன்! ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார். அதற்குப்பிறகு எல்லாம் சிம்ரன் மயம். சிம்ரன் படம் என்றால் அது எத்தனை கேவலமான படமாக இருந்தாலும் குடும்பதோடு கிளம்பிவிடுவார். அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் வரும், “இவள் ஒரு அழகா? பல்லிக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரி” என்று திட்டிக்கொண்டே கிளம்புவார்.

“ஓவர் வெயிட்டாக இருப்பதால் அப்பாவுக்கு பிடிக்காமல் போய்விட்டதோ” என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட, அதற்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடாமல் டயட் பண்ண துவங்கினார். இரண்டு நாள் பேசாமல் இருந்த அப்பா, மூன்றாவது நாள் “ஏன் அம்மா சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்க, நான் உடனே “சிம்ரன் மாதிரி இளைக்க டயட் பண்றாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் க்ளாசிக்! “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு. அதில் இருந்து அம்மாவை கிண்டல் பண்ண “அம்மா” என்று அழைக்காமல், “சிம்ரன்” என்று கூப்பிடுவோம், காலப்போக்கில் அது “சிம்” என்று உருமாறியது. இங்கே கூட பல முறை “சிம்” என்று எழுதி விட்டு பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன்.

இப்படி ஒரு சில மணி நேரம் இரண்டு பேரும் பழைய ரொமாண்டிக் கனவுகளில் மூழ்குவார்கள், வீடு கொஞ்சம் கலகலப்படையும். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இந்த உலகத்திலேயே ரொம்ப அசிங்கமான சண்டையாக நான் கருதுவது என்ன தெரியுமா? கணவன் –மனைவியிடையே நடக்கும் பொருளாதாரம் சம்மந்தமான சண்டைகள்! அப்பாவின் வரவு- செலவு கணக்குகளில் அம்மாவுக்கு ரொம்ப சந்தேகம். முக்கியமாக பொங்கல், தீபாவளி போனஸ் சமயங்களில் சண்டை ரொம்ப தீவிரமடையும்.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம். “அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சு” என்று தொடர்ந்து அப்பாவை நச்சரிப்பார்(எனக்கு அப்போது அது நச்சரிப்பாக தோன்றியது). ஒரிரண்டு முறை பொறுமையாக பதில் சொல்லும் அப்பா, மூன்றாவது முறை பொறுமை இழப்பார். அவருக்கு கோபம் வந்தால் ரொம்ப அதிகமாக கோபம் வரும், அன்பும் அப்படியே. “ஆமாம் எல்லா பணத்தையும் தே---------- கொடுத்துட்டு வந்தேன், என்ன செய்யனுமோ செய்” என்று பதிலுக்கு இவர் கத்த, அப்புறம் ஒரே கூச்சல், சண்டை, அழுகை. இதுவே ஒரு தொடர்கதையாகப்போனது. அப்போது நான் முடிவு செய்தது தான், “அன்புக்குரியவர்களிடம் பணம் காரணமாக என்றுமே சண்டை போட மாட்டேன்” என்பது.

நான் கொஞ்சம் வளர்ந்து, வரவு செலவு கணக்குகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டவுடன், ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை. அம்மா எல்லாவற்றுக்கும் அழுது சண்டை போடுவாரே தவிர, என்னை மாதிரி ஆதாரம் எல்லாம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவி அவர். எல்லாவற்றுக்கும் ஒழுங்காக கணக்கு எழுதி வைக்கும் பழக்கமுடைய அப்பா, சில செலவு கணக்குகளை எழுதாமல் மறந்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறது. இதை வெளியே சொல்ல எனக்கு பைத்தியமா? அம்மாவிடம் இன்று வரை இதைப்பற்றி மூச்சுவிட்டதில்லை.

- நினைவுகள் தொடரும்

Friday, January 2, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 9

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8

எனக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் டிலோரிஸ் எப்படி இருக்கிறார் என்பதைப்பற்றியும், அப்புறம் என்னுடைய குடும்பம் என்ன ஆனது என்பதைப்பற்றியும் கவலையுடன் விசாரித்திருந்தார்கள், நன்றி :). இதென்ன தேவதைக்கதையா, "And they lived happily ever after" என்று எழுத? In real life, no body lives happily ever after! காலப்போக்கில் சில காயங்கள் ஆறின, அதுமட்டும் உண்மை.

அந்த பயங்கரச்சம்பவம் நடந்த பிறகு அப்பாவை பல நாட்கள் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை விரைவிலேயே அவரும் புரிந்துக்க்கொண்டார், அதற்குப் பிறகு ஏதோ நடமாடும் பிணம் போல தான் அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே இருந்தது, அப்பா மட்டுமல்ல, அம்மாவும் அப்படித்தான் மாறிப்போனார். ஏதோ கடனே என்று இருவரும் வேலைக்கு போனார்கள், ஷாப்பிங் பண்ணினார்கள், சமைத்தார்கள், சாப்பிட்டார்கள். அப்பா வேலையில் இருந்து வந்தவுடன் பழைய மாதிரி நான் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்வதில்லை. வீட்டுக்கு வரும்போதே இன்றாவது நானோ அல்லது அம்மாவோ பேசுவோமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நுழைவார். அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.

வெளியில் வீம்புக்காக கோபமாக நடித்தேனே தவிர, மனதுக்குள் அப்பாவுடன் பேசாமல் இருப்பது எனக்கு கொடுமையாக இருந்தது. பல முறை மறந்துவிட்டு பேசிவிட நினைத்து கடைசி நிமிடத்தில் நினைவு வந்தவளாக நிறுத்தி இருக்கிறேன். இங்கே என்னுடைய பிரச்சினை அம்மா தான், அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய உறுதியை ஒரு 1 மாதக்காலம் கடைப்பிடித்துக்கொண்டு தான் இருந்தேன், ஒரு சனிக்கிழமை காலை எல்லா உறுதியும் தவிடுப்பொடியானது!

நானும், அப்பாவும் மட்டும் சனிக்கிழமைகளில் ஷாப்பிங் போவது வழக்கமாக இருந்தது. 1 வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க என்னை மட்டும் தான் அழைத்துப்போவார். சனிக்கிழமை காலை என்றால் அது "அப்பா-மகள்" நேரம். அம்மாவுக்கு தெரியாமல் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவார்(சனிக்கிழமை, அம்மா தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார், தலை குளித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்குமாம்). ஒரு நாலு வாரங்களாக அப்பா தனியாக ஷாப்பிங் போய் வந்தார், அவருக்கு முன்னால் ரெடியாகி வெளியே ஓடும் நான், அவர் கடைக்கு போகும் நேரம் வந்தால் என் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொள்வேன். எனக்காக வெகு நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழி இல்லாமல் போவார். ஒரு சனிக்கிழமை என் அறைக்கே வந்து கதவைத்தட்டினார்.

கதவைத்திறந்த எனக்கு அப்பாவைப்பார்த்து ஒரு மாதிரியாகிப்போனது. ரொம்ப நாள் கழித்து அன்று தான் அப்பாவை ஏறெடுத்துப்பார்த்தேன். ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவர் 1 வாரமாக அழுது உருவாக்கிய கோபத்தை ஒரு நிமிடத்தில் உடைத்துவிட்டாரே, என்ற கோபம் அம்மாவுக்கு! சமையலறையில் நாலு பாத்திரத்தை கோபத்துடன் உருட்டினார். நான் அவரைத்திரும்பிக்கூடப்பார்க்காமல்(வேறென்ன, பயம் தான்) அப்பாவை பின் தொடர்ந்தேன். வெளிக்கதவை அடைக்குமுன் அம்மாவின் பார்வை என் முதுகில் சுட்டெரிப்பதை உணர்ந்தேன்.

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார். அம்மா திட்டியது வலித்தாலும், என்னை கோபிக்கவாவது 'அப்பாவை நம்புவேன்' என்று அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவின் நேரத்தில் ஒரு ஜென்மம் = நம் நேரத்தில் ஒரு நாள். என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.

Friday, November 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 8

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
"Did you have inter****** with him?" என்னுடைய ஒரு நடிகரைப்பற்றிய பதிவுக்கு ஒரு சகோதரர் இப்படி ஒரு "கனிவான" பின்னூட்டம் எழுதி இருந்தார். பாவம், அவர் கூட பயணம் செய்பவர்களோடு எல்லாம் இண்டர்கோர்ஸ் வைத்துக்கொள்ளும் மனநோயாளி போலிருக்கிறது. சகோதரரே, அந்த பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய மனநோய் விரைவில் குணமாகவும் பிராத்திக்கிறேன். என்ன அந்த காமெண்டை டிலிட் பண்ணிட்டு பேசாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் இல்லை, கமெண்ட் பக்கத்தில் எழுதினால் ஒருவேளை கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது இல்லையா, அதனால் தான். இப்படி எல்லாம் எழுதி உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது? ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி!

பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி கடுமையாக எழுத எனக்கும் பிடிப்பதில்லை, சிலருக்கு இந்த மொழி தான் புரிகிறது, நான் என்ன செய்ய? சரி அதை விட்டுத்தள்ளுவோம், சில ஜென்மங்கள் என்ன திட்டினாலும் திருந்தாது. போன தொடரில் ஒரு விஷயத்தை சரியாக எழுதாமல் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதாவது, இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிக்க கூடாது என்ற பொருள் வந்துவிட்டது, நான் எழுத நினைத்தது அதுவல்ல.

படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை. நன்றாக படித்து, வேலை கிடைத்து ஒரு நிலையை அடைந்தப்பிறகு 50 வயதுக்காரர் என்ன, Anna Nicole மாதிரி 80 வயது மனிதரைக்கூட காதலியுங்கள், திருமணம் செய்துக்கொள்ளுங்கள், தவறே கிடையாது. காதல் வயதெல்லாம் பார்த்து வருவதில்லை, ஆனால் காதலை செயல்முறைப்படுத்தும்போது வயது வரம்பு அவசியம்! இது தான் நிதர்சனம், நம்பினால் நம்புங்கள்.

மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? வெஸ்டர்னர்ஸ் அப்படி எல்லாம் மறைக்க மாட்டார்கள், திருமணத்தின் போதே 'வெர்ஜின் இல்லை' என்பது நன்றாக தெரிந்தே திருமணம் செய்துக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்! ஏமாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து. அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு பெண் சுதந்திரக்கருத்துக்களை உதிர்ப்பவர்களும், தனியறையில் எப்படி என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. பெண் சுதந்திரம் எல்லாம் ஓவர் நைட்டில் கிடைத்துவிடாது.ஜாதி சமத்துவமே இன்னும் கிடைக்காத போது, ஆண் -பெண் சமத்துவம் கொஞ்சம் பேராசையே! சமத்துவமே வராது என்று சொல்லவில்லை, நிச்சயம் உடனே வராது என்பது மட்டும் உண்மை. இதை எல்லாம் சமாளிக்க முடியுமென்றால், You go girl!!! Sky is the limit!. இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும். நமக்கெல்லாம் Limit is the sky!

இதெல்லாம் புரியாதவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே எழுத முயலுகிறேன், பெற்றோர் கடினமாக உழைத்து நம்மை படிக்க வைக்கும் பணத்தை வீணாக்குவது தவறில்லையா? வீணாக்க விருப்பம் என்றால் சுயமாக சம்பாதித்து உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணாக்கவும். இன்றைய இளையத்தலைமுறை ஆண்களுக்கு தன்னம்பிக்கையுள்ள, படித்த, அதிகாரத்தில் இருக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கிறது, ஒரு நிலைக்கு வந்த பிறகு தானாகவே காதலிக்கும் வாய்ப்புகள் வரும், வேண்டுமென்றால் சுயம்வரம் வைத்து கூட வேண்டியவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தோழி சரஸ்வதியை(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)குறிப்பிடலாம். தானாகவே உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் பட்டியலில் அவளுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

யூனிவர்சிட்டியில் புதிதாக வந்து சேர்ந்த போது எங்கள் யாருக்குமே அவளை அவ்வளவு பிடிக்கவில்லை. ஒல்லியாக, நெடு நெடுவென்று சுடிதாருடன் வருவாள். Fashion sense என்றால் கிலோ என்ன விலை அவளுக்கு, இந்தியப்பெண்கள் குறைவு என்பதால் வேண்டா வெறுப்பாக அவளையும் சேர்த்துக்கொள்வோம். அவளுடைய குடும்ப பிண்ணனியை தெரிந்துக்கொண்ட போது பாவமாக இருந்தது. அப்பா உடற்பயிற்சி ஆசிரியர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், இவளுக்கு முன் ஒரு அக்கா, பின்னால் ஒரு தங்கை. கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாமல் ரொம்ப திணறி இருக்கிறார்கள். படிப்பு மட்டும் அவளுக்கு ரொம்ப நன்றாக வந்தது என்று சொன்னால் அது பச்சைப்பொய்! அதெல்லாம் இல்லை, அவள் ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் டிவி பார்க்கும் போது, வெட்டி அரட்டையடித்து பொழுதைப்போக்கும் போது, டான்ஸ் க்ளப்புக்கு போகும் போது- எதிலும் கலந்துக்கொள்ளாமல் படிப்பு, படிப்பு, படிப்பு!

அவள் உழைப்பெல்லாம் தேர்வுகளில் ஜொலித்தது, பேராசிரியர்கள் அவள் என்றால் மரியாதையாக பார்த்தார்கள். எங்கள் செட்டிலேயே அதிக க்ரேட் பாயிண்ட் ஆவெரேஜில் க்ராஜுவேட் பண்ணினாள். Fortune 500 கம்பனியில் உடனே இண்டர்னாக எடுத்துக்கொண்டார்கள், எங்களுக்கெல்லாம் ஒரு உப்புமா கம்பனிகளில் வேலை கிடைத்தது. 'வேலை கிடைத்துவிட்டதே' என்று எங்களை மாதிரி வெட்டியாக அவள் சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடவில்லை, தன் வேலை மட்டுமில்லாது, மற்றவர்கள் வேலைகளையும் கற்றுக்கொண்டாள். சில மாதங்களில் அவளை நிரந்தரமாகவே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சக தோழிகள் அவளை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தோம். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துக்கொண்டாள். சரஸ்வதி தற்போது 6 மாதமேயான அழகான பெண்குழந்தைக்கு அம்மா, Software quality control பிரிவில் ப்ராஜக்ட் லீட்! ஏதோ தேவதை கதை போல இருக்கிறது இல்லையா?

தேவதைக்கதை எல்லாம் இல்லை, இந்தப்பெண் பல போராட்டங்களை கடந்தே இந்த நிலையை அடைந்திருக்கிறாள். எத்தனையோ நாள் என்னிடம் தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதிருக்கிறாள்! எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்த நாள் நல்லதாக விடியும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவள் ஆண்களையே ஏறெடுத்துப்பார்க்காதை கவனித்து, ஒருவேளை லெஸ்பியனோ என்று கூட நினைத்திருக்கிறோம். இவளுடைய இந்நாள் கணவர், அந்நாள் காதலராக இருக்கும் போது ரெஸ்டாரண்டுக்கு அவரை அறிமுகப்படுத்த அழைத்து வந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறிவிட்டது. "I thought you are a lesbian!" என்று ஒரு தோழி வாய்விட்டே அலற, உடனே அனைவரும் ஆமோதித்தோம். பிறகு சூழ்நிலையை உணர்ந்து அவசரமாக அவளுடைய காதலரின் முகத்தைப்பார்த்தோம், பேயறைந்தது போல இருந்தது! இப்போதும் அதே எக்ஸ்ப்ரெஷனுடன் தான் உலா வருகிறார்(சும்மா ஜோக்):)

-நினைவுகள் தொடரும்

Sunday, October 19, 2008

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I)

ஜானகிராமன் கதைகள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. முதன்முதலில் நான் படித்த அவரின் எழுத்து அவரின் “அம்மா வந்தாள்” நாவல். அம்மா என்றால் அன்பு! அம்மா என்றால் தெய்வம்! தாயில் சிறந்த கோவில் இல்லை! இதுதான் நாம் அறிந்தது. எனக்குத்தெரிய சில நண்பர்கள் பலர் அம்மாவைப்பற்றி யாராவது தவறாக சொன்னால் கொலையே பண்ணுவார்கள் . ஆனால் “அம்மா வந்தாள்” கதையில் வரும் அப்பு வின் அம்மா, அலங்காரம் அந்த வகையை சேர்ந்தவளா?! அலங்காரம் என்கிற அம்மா நடத்தை சரி இல்லாதவள் போல சொல்லாமல் சொல்லி இருப்பார் ஜானகிராமன்.

அந்தக்கதையில்,

ஒரு நாள் அலங்காரத்தின் கணவர் 6 மகன்/மகள்களின் அப்பா, தன் மனைவியைப்பற்றி நினைத்துப்பார்ப்பார். அன்று தனியாக மொட்டைமாடியில் படுத்து இருப்பார். பழைய நினைவுகள்...அலங்காரத்துடன் தான் நடத்திய தாம்பத்ய உறவு, அனுபவித்த இன்பம் பற்றி நினைத்துப்பார்ப்பார்.

அதெல்லாம் அவருக்கு பழைய நடந்து முடிந்த கதை. இன்று அவருடன் அலங்காரம் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்ளும்போதும் அவருக்கு அவள் புரியாத புதிராகத்தான் இருந்தாள். அலங்காரம் ஒரு சில நேரம்பேசுவது அவருக்கு புரியாது. அவளின் ஆசைகள், கனவுகள் இவரால் கொடுக்கமுடியாததாக இருக்கும். ஒவ்வொரு சமயம் அவளை தன்னால் பெண்டாள முடியுமா என்றுகூட அவருக்கே சந்தேகமாக இருப்பதுபோல் தோன்றும் அவருக்கு. இப்படி அவர் மனைவி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போது,

அலங்காரம்! பேரு வச்சிருக்காங்க பாரு! ஒரு விலைமாதுக்கு வைப்பது போல!

இப்படி எழுதி இருப்பார்! தன் மனைவியைப்பற்றி, ஒரு தாயை, கணவர் நினைப்பதாக! இந்த இடத்தில்தான் ஜானகிராமன் அலங்காரத்தின் நடத்தை பற்றி முதன் முதலில் கோடிட்டுக்காட்டுவார்.பிறகு அலங்காரம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்வார்.


சரி, இந்த அம்மா வந்தாள் கதை இங்கேயே நிற்கட்டும். பிறகு தொடர்கிறேன்.

இப்பொழுது சில உண்மை நிகழ்வுகளை சொல்கிறேன்.

இந்த நாவலைப்படித்துமுடித்த பிறகு, இதைப்போல் ஒரு அம்மா கேரக்டரைப்பற்றி என் நெருங்கிய நண்பன் சீனிவாசனிடம் பேசினேன். நான் இந்தக்கதையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டேன். இது போல் ஒரு தாயைப்பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாகவும், சங்கடமாகவும், கவலையாகவும் குழப்பமாகவும் இருந்தது. நான் என் நண்பனிடம் பேசும்போது ஒன்று புரிந்தது. நாங்கள் இருவரும் இரண்டுவிதமான அம்மாக்களின் மகன்கள் என்று.

நான் பேசும்போது என் நண்பன் சீனிவாசன் என்னைப்பார்த்து சிரித்தான்.அவனுடைய பர்சனல் லைஃப் பற்றி எனக்கு அன்று வரை சரியாகத் தெரியாது. அவன் சொன்னான், கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை என்றான். அவன் அம்மா கதையில் வரும் அலங்காரத்தைவிட ஒரு “புதிரான அம்மா” என்றான். அவனால் இதை ஈசியாக ஜீரணித்துக்கொள்ள முடிகிறது என்றும், அவன் அம்மா கொஞ்சம் ஒரு புரியாத புதிர் என்றும் சொன்னான். எனக்கு அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவன் ஒரு ஆர்தோடக்ஸ் குடும்பத்தில் இருந்து வருபவன். நல்ல படித்த குடும்பத்தில் இருந்து வந்தவன் . அவன் அப்பா ஒரு பெரிய ப்ரீமியர் இண்ஸ்டிடூட்டில் பெரிய பேராசிரியர். மேலும் அவன் பயங்கரமான அறிவாளி. ஆனால் கொஞ்சம் “எக்சண்ட்ரிக் கேரக்டர்” என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு மாதிரியான ஜீனியஸ். மிகவும் திறந்த மனப்பாங்கு உள்ளவன்.

“என்னடா சொல்ற!!!” என்றேன் மிகவும் குழப்பத்துடன்.

அம்மா என்கிற ஒருவர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமானவர் மதிக்கத்தக்கவர் என்று தெரியும் எனக்கு. என் தாயைப்போலவே எல்லோர் அம்மாவையும் மதிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் அக்கதையைப்பற்றிப்பேசும்போது அவனே அப்படி சொல்வதால்,மறுபடியும் கேட்டேன்.

“அப்படித்தான்்” என்றான் புன்னகையுடன்.

“ஜோக் அடிக்கிறயா? என்றேன் மறுபடியும் அவனிடம்.

“இல்லைடா சீரியஸாத்தான் சொல்றேன்” என்று அவர்களைப்பற்றி சொன்னான்.

அவன் தந்தைக்கு கல்யாணம் ஆன புதிதிலேயே அவன் அம்மா மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவன் அப்பா ஃபீல் பண்ணினாங்களாம்.ஆனால், போகப் போக சரியாகிவிடும் என்று தொடர்ந்தாராம் உறவையும், வாழ்க்கையையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் (என் நண்பனும் அவன் அண்னனும்) அதே நிலைதானாம்.கடைசியில் அப்பா அம்மா பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டதாம். அதனால் கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை. அவன் அம்மா அலங்காரத்தைவிட ஒரு “காம்ளிக்கேட்டெட்” அம்மா என்றான்.

மேலும் அவனிடம் இருந்து தெரிந்து கொண்டது.

அவன் அம்மாவுக்கு மந்திரம் மாயம் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டாம். என் நண்பனுக்கும் அதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்று சொல்லியதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். அவன் அம்மாவுக்கு ஒரு மாதிரியான சாமியார் கல்ட் க்ரூப்பில் பழக்கம் இருப்பதாகவும் சொன்னான். நான் சென்னையில் வளர்ந்த ஒரு நண்பனைப்பற்றிதான் சொல்கிறேன். சாதாரண கடவுள் நம்பிக்கையை நான் இங்கு சொல்லவில்லை. ஒரு மாதிரியான “கல்ட் க்ரூப்” நான் சொல்வது. அவன் அம்மாவை அவன் அப்பாவாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையாம். தற்போது அவன் அம்மா, அப்பாவுடனும் இவனுடனும் சேர்ந்து வாழவில்லை என்றும்.அப்பொழுதுதான் என்னிடம் சொன்னான்.

அவன் அண்ணா மட்டும் அவன் அம்மாவுடனசேர்ந்து வாழ்வதாகவும்,அவன் அவர்களிடம் இருப்பதால் அண்ணனால் இவனைப்போல் சரியாக படிக்க முடியவில்லை என்றும். அவன் அம்மா அவன் மூத்த பையன் என்பதால் எப்படியோ வசியம் பண்ணி தன் தந்தையிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் சொன்னான். அதைவிட கொடுமை என்னவென்றால், என் நண்பன் அவன் அம்மாவை எதற்காவது பார்க்கப்போகும்போது அவர்கள் கொடுக்கும் காஃபி டீயைக்கூட அவன் குடிக்க பயப்படுவேன் என்றான். ஏதாவது மந்திரம்,பொடி போட்டு இவனையும் அவன் அண்ணனை செய்ததுபோல் மயக்கி தன்னுடன் அழைத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்றான்.

அம்மாவைப்பார்த்து அவர்கள் கொடுக்கும் காஃபியைக்குடிக்க பயப்படும் ஒரு மகனை முதன் முதலில் சந்தித்தேன்.

அவன் சொன்னதையெல்லாம் இன்னும் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி சொல்லி ஆச்சர்யப்படுவேன்.

-தொடரும்

Monday, October 6, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 7

சற்று இடைவெளி விட்டு எழுதுவதால் மற்ற இணைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்:
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய நல்ல நண்பருக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை பிடிக்கவில்லை என்று அறிந்துக்கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை, ஒரு விதமான வெறுப்பு!. அவருடைய கோபத்தைப்பார்த்து அந்த எழுத்தாளர் அப்படி என்னத்தான் எழுதுகிறார் என்று பார்க்கும் ஆவல் வந்தது. அவருடைய வலைதளத்தை படித்துப்பார்த்ததில், அவருக்கு வயது குறைவான பெண்களின் மேல் ஆர்வம்(அதில் என்ன பெருமையோ??) அதிகம் போல இருந்தது. 17 வயதில் எல்லாம் கேர்ள் ப்ரெண்ட் வைத்திருக்கிறாராம்(18 வயதுக்கு கீழான பெண்களிடம் பெற்றோர் சம்மதமில்லாத உறவு வைத்திருப்பது தவறில்லையா?).

சரி இந்தியாவில் வயது வரம்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் அப்படித்தான். ஒரு முறை அதைப்பற்றி ஆராய்ச்சி பண்ணியதில், வயது குறைவான பெண்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இனப்பெருக்கத்தின் ஆபத்தான எல்லையில், விளிம்பில் நிற்கும் நடுத்தர வயது ஆண்களுக்கு வயது குறைவான பெண்களைப்பிடிக்கிறதாம். சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species.

நண்பருக்கு இருப்பது மாதிரி அந்த எழுத்தாளர் மீது வெறுப்பெல்லாம் வரவில்லை, ஆனால் ஒரு முக்கியமான கேள்வி மனதை பிசைந்தது. வாரிசு தேவை என்றால் பரவாயில்லை, இந்தக்காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தால் யாருக்குமே அதிகப்படியான வாரிசு தேவை இல்லாதபோது, சம வயது பெண்களை ஏன் காதலிக்க கூடாது? அவர்கள் அழகில்லையா? இப்படியே நடுத்தர வயது பெண்களும் இளவயது ஆண்களை நாடத்துவங்கினால் என்னாவது? பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அழகு என்பது எண்ணத்தில் மற்றும் செயலில் இருக்கிறது, உடலில் அல்ல.

இந்த கருத்தை எழுத ஒரு முக்கியக்காரணம், எழுத்தாளரின் சில கட்டுரைகள்(கதைகள்) என்னை மீண்டும் யூனிவர்ச்சிட்டி வகுப்பறையில் கொண்டு வந்து நிறுத்தியது. அந்தக் குறிப்பிட்ட பேராசிரியருக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும். அவர் வகுப்புக்கே போக வெறுப்பாக இருக்கும்! கம்ப்யூட்டர் லாப்பில் நடக்கும் வகுப்பு என்பதால், சந்தேகம் சொல்லிக்கொடுக்கிறேன் பேர்விழி என்று அளவுக்கு அதிகமாக உரசுவார். "நீங்க வேண்டுமானால் உட்கார்ந்து சொல்லிகொடுங்கள், நான் எழுந்து நிற்கிறேன்" என்றால் அதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டார், நான் உட்கார வேண்டும் அவர் என்னை உரசியப்படி நின்றுக்கொண்டே சொல்லித்தர வேண்டும், இல்லை என்றால் அவருக்கு உயிரே போய்விடும்!. மற்ற பெண்களிடமும் இதே மாதிரி சில்மிஷம் செய்தாலும், அவருக்கு இந்தியப்பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போல, நான் பயந்துக்கொண்டு சந்தேகமே கேட்காமல் இருந்தாலும் அவர் 15 நிமிடமாவது எனக்கு சொல்லித்தராமல்(உரசாமல்) இருந்ததில்லை.

இந்தியாவில், பஸ் கூட்டத்தில் இது போன்ற பொறுக்கிகள் தொல்லைப்படுத்திய அனுபவம் இருந்தாலும், ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியரிடம் இருந்து இத்தகைய பொறுக்கித்தனத்தை(மன்னிக்கவும், இந்த கேவலமான செயலை குறிப்பிடுவதற்கு வேறெந்த வார்த்தையும் எனக்கு தெரியவில்லை) நான் எதிர்ப்பார்க்கவில்லை, உடலெல்லாம் பற்றி எரிவது போல அருவருப்பாக இருக்கும். நீங்கள் பெண்ணாக இல்லாத பட்சத்தில் இதை அனுபவப்பூர்வமாக உணர முடியாது என்று நினைக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி, பெண்களுக்கும் காமம் பிடிக்கும் என்றாலும், அது இயல்பாக ஒரு பூ மலருவது போல மனதுக்கு பிடித்திருந்தால் தான் இனிக்கும். இப்படி வற்புறுத்தலாலும், கட்டாயத்தாலும் காமம் வரவே வராது! மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் கணவன் - மனைவி உறவாக இருந்தால் கூட பெண்கள் வெறுத்துவிடுவார்கள். இதை தான் கற்பு என்று குறிப்பிட்டார்களா என்று தெரியாது, ஆனால் எனக்கு அப்படி அழைக்க பிடிப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு preference or personal choice.

செமஸ்டர் முடிய 2 மாதங்களே இருக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆசிரியர் டெஸ்பெரேடாக துவங்கினார். உரசல்கள் எல்லை மீறல்களாக மாறத்துவங்கியது, சக மாணவர்களின் நமட்டுச்சிரிப்பு வேறு! ஒரு மாணவர் வேண்டுமென்றே தன் நண்பரிடம் என் காதில் விழுவது மாதிரி கிண்டலடிக்க துவங்கினார். "ஏதுவுமே படிக்கவில்லை என்றாலும் பாடத்தில் 'A' வாங்குவது எப்படி என்பதை இந்த வகுப்பில் இருந்து தெரிந்துக்கொண்டேன், துரதிஷ்டவசமாக நம்மிடம் சில 'உறுப்புகள்' இல்லை என்பதால் அந்த ஐடியாக்களை செயல்படுத்த முடியாது"

ரொம்ப வருத்தமாக இருந்தது, எவனோ ஏதோ உளறினான் என்பதற்காக மட்டுமில்லை, நிஜமாகவே கஷ்டப்பட்டு இரவும் பகலும் படிக்கும் என்னை ரொம்ப அவமானப்படுத்துவது போல இருந்தது. அடுத்த முறை வகுப்பில் திரும்பவும் அதே ஆசிரியர், அதே வரம்பு மீறல். இந்த முறை வழக்கம் போல அமைதியாக இருக்கவில்லை, மெதுவான ஆனால் உறுதியான குரலில் "கொஞ்சம் என் உடலில் இருந்து கையை எடுக்கறீர்களா, ப்ளீஸ்?" வகுப்பறையில் கனத்த மெளனம், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் முகம் வெளிறியது, வெள்ளைக்காரர் என்பதால் முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. தடுமாற்றத்துடன், "என்ன சொல்கிறாய் நீ?" என்றார். நான் திரும்பவும் நிதானமாக, அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து, "என் உடலில் இருந்து கையை எடுக்கிறீர்களா என்றேன்"

அன்று மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு. அதற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பேராசிரியர் என்னிடம் வம்பு பண்ணவில்லை, தூரத்தில் இருந்தே உக்கிரமாக முறைப்பார். அவர் முறைத்தலை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை, நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை. செம்ஸ்டர் முடிவில் என்னுடைய Final project-டுக்கு 'B' கொடுத்திருந்தார். அந்த வகுப்பு ஒரு Easy 'A' வகுப்பு, அதாவது சுலபமாக நல்ல மதிப்பெண்கள் வாங்கக்கூடிய வகுப்பு(அந்த பாடத்தை முக்கியமாக தேர்வு செய்த காரணமே அது தான்). ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றுபவரை கேள்வி கேட்பது கடினம், நிச்சயமாக எனக்கு குறைவான மதிப்பெண் கொடுத்ததற்கான காரணத்தை அவரால் சுலபமாக ஜோடிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை, எனக்கு புது நம்பிக்கையும், தைரியமும் பிறந்தது. "எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்னம்பிக்கை. அந்த உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!

- நினைவுகள் தொடரும்

Friday, August 29, 2008

எனக்கும் முதல் முறைதான்!

கல்யாணம் முடிந்து முதலிரவுக்கு அடுத்தநாள் காலையில் அவளைப்பார்க்க வந்த அவள் நெருங்கியதோழி சுமதி கேட்டாள், "எப்படியிருந்தது?" என்று.

"இரண்டு பேருக்குமே முதல் அனுபவம் என்பதால் முழுவதும் வெற்றி அடையவில்லை" என்று வெட்கத்தோடு சொன்னாள் ராஜி!

"அப்படியா?! குஷ்பு தியரியை டிஸ்ப்ரூவ் பண்ணிவிடுவார் போல இருக்கு உன் கணவர்?"

"இது பரந்த உலகம், குஷ்பூ ஒரு அறியாமையில் வாழும் ஒரு அரைவேக்காடு என்கிறார், அவர்," என்றாள் ராஜி!

"சரி, சரி, இன்னும் நிறைய காலம் இருக்கு மெதுவாக வெற்றிவாகை சூடலாம்! வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் தோழி சுமதி!

"எனக்கும் இது முதல் முறைதான்" என்று கணவன் முத்துக்குமார் அவளிடம் சொன்னவுடன், ராஜிக்கு அதிசயமாகத்தான் இருந்தது “ஆண்களில் இப்படி மக்குக்களும் உண்டா என்று”? அதே சமயத்தில் அவளுக்கு ஏதோ ஒரு அளவில்லாத சந்தோஷம். பெருமை!

தன் அனுபவமில்லாமைக்கு காரணம் அவளுக்குத்தெரியும். ராஜி வளர்ந்த விதம் வேறு. இன்று வரை ஒர் நாள் கூட அவள் தனியாக எங்கும் இரவு தங்கியதில்லை. ஏன் பகலில் கூட ஒரு மணிநேரம் தோழிகள் வீட்டில்கூட தங்கியதில்லை. பெரியவளானவுடன் அம்மா அப்பாவுடன் தவிர யாருடனும், சினிமாவுக்கோ, பீச்சுக்கு, கோயிலுக்கோ போக அனுமதி ராஜிக்குக்கிடையாது. அவள் அம்மாவுக்கு காதல் என்றால் கெட்ட வார்த்தை. வாழ்க்கைக்கு அவசியமில்லாத ஒரு இன்பம். ராஜியின் அண்ணன் பாலுகூட அவளை தொட்டுப்பேசவோ அடிக்கவோ அனுமதி கிடையாது. அப்படியிருக்கும்போது தெரியாத ஆண்கள், முறைப்பையன்கள் போன்றவர்களெல்லாம் இவள் வயதுக்கு வந்த பிறகு இவளை தனியாகப்பார்ப்பது, பேசுவது, பழகுவதெல்லாம் குதிரைக்கொம்பு. பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகும்போது ராஜியை அப்பா அல்லது அண்ணா வந்து சரியாக அவளை ட்ராப் பண்ணி, பிக் அப் பண்ணி விடுவார்கள். அதனால் அவளுக்கு இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஒரு போதுமே இருந்ததில்லை. பீரியேட்ஸ் ரெகுலராக இல்லை என்றாலும் அதைப்பற்றி ராஜி கவலைப்பட்டதே இல்லை.

ஆனால், தைரியமாக, தன் கணவர், முத்துகுமாரிடம் கேட்டுவிட்டாள், ராஜி! "நீங்க ஹாஸ்டலில் இருந்து படித்து இருக்கீங்க. என் அளவுக்கு கட்டுப்பாடும் உங்களுக்கு கிடையாது. அப்படி இருந்தும் உங்களுக்கும் எப்படி இது முதல் அனுபவம்?" என்று.

அவள் கணவர் சொன்னார் "ஆண்களிலும் பல வகை இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில், காதல் என்பது நம் சமுதாயத்தில் வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் காதல், அதுனுடன் காமம் கலப்பது முட்டாள்த்தனம்- இது என்னுடைய நிலைமையில்! என் தங்கை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவன் நான். இன்னொருவன் தங்கையை அல்லது இன்னொருவர் மகளை மட்டும் நான் ஏன் துச்சமாக நினைக்கனும்?. அது மட்டுமல்ல, வாழ்க்கையில், நான் படிப்பு, மார்க்ஸ், ஃப்யூட்சர் என்று போராடிக்கொண்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரு காதலி கிடைப்பதில்லை. மேலும் அழகான பெண்கள் வந்து என்னை “ஃபோர்ஸ்” பண்ணி என்னைக்காதலிக்கும் அளவுக்கு நான் பெரிய மன்மதனும் இல்லை என்று"

"என்னைப்போல் பல ஆண்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரியிடம் காமம் கற்றுக்கொள்வதெல்லாம் அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பாக நினைப்பவன் நான். அதுவும் எயிட்ஸ் நமது நாட்டில் இப்படி பரவிக்கொண்டு இருக்கும்போது, ஏன் வம்பை நான் விலைகொடுத்து வாங்கனும், ராஜி?" என்று முடித்தார் அவள் கணவர், முத்துக்குமார்.

Monday, August 11, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 6

நம் குடும்பத்தில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்தது? என்று சுயபச்சாதாபத்தில் மூழ்கி இருந்த எனக்கு, டிலோரிஸின் வாழ்க்கை ஒரு நல்ல eye opener. ஒரு சிறு பெண்ணுக்கு என்னென்ன துன்பம் வரக்கூடாதோ அத்தனையும் அனுபவித்தவர். அவர் தொடர்ந்து சொன்னவை அதிர்ச்சி ரகம், என்னால் முடிந்ததை மொழிபெயர்த்து எழுதுகிறேன், மீதி உங்கள் கற்பனைக்கு.

"அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் போது பக்கத்து வீட்டு பெண் வருவாள், அவளும் திருமணமானவள் தான். கணவன் வேலைக்கு போன பின் எங்க வீட்டுக்கு வந்துவிடுவாள்"

லேசாக தயங்கியப்படி, "பிறகு அப்பாவும், அந்த பெண்ணும் என் கண் முன்னாலயே..."
சொல்லும்போதே டிலோரிஸின் கண்கள் கலங்கியது.

"அருவருப்பினால் பொறுக்கமுடியாமல் தான் தலையை வேறு பக்கமாக திருப்பிக்கொள்வேன். அப்பா என் முகத்தை தன் பக்கம் வலுக்கட்டாயமாக திருப்பி அந்தக்காட்சியை பார்க்க சொல்லி வற்புறுத்துவார். 'இது தான் உனக்கு ஹோம்ஸ்கூல் பாடம்' என்று கோணலாக சிரிப்பார்"

"இவர்கள் இந்த நிலையில் இருக்கும் போதே அந்த பெண் குடிபோதையில் மயங்கிவிடுவாள். அவருக்கு அடங்காமல் வெறிப்பிடித்த மிருகம் மாதிரி என்னை சேரில் உட்கார வைத்து, வலுக்கட்டாயமாக என் வாயை திறந்து...."

"முடிந்த பிறகு மட்டுமே அப்பா என்னிடம் கொஞ்சம் அன்பாக இருப்பார். என் கையில் இரண்டு டாலர் கொடுப்பார், என்னுடைய நீல கண் தேவதையே(My blue eyed angel) என்று கொஞ்சுவார். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த மிக்டானல்ட்ஸுக்கு ஓடிப்போய் பர்கர் வாங்கி சாப்பிடுவேன். உணவை மெல்லும் போது வாயெல்லாம் ரொம்ப வலிக்கும்"

இப்போது டிலோரிஸ் குலுங்கி, குலுங்கி அழத்தொடங்கினார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை என்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டே கேட்டேன்- "நீ ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை?"

டிலோரிஸ் சுதாரித்துக்கொண்டு விரக்தியாக, "எத்தனையோ முறை சொல்ல முயற்சி பண்ணினேன், அம்மாவுக்கே அரைகுறையாக நடப்பதெல்லாம் தெரியும். ஆனால் அவளுக்கு கணவனை எதிர்க்க பயம். இயலாமையில் என்னை தான் "ஹோர்(விபச்சாரி)" என்று திட்டுவாள், அடிப்பாள். அம்மாவும் என்ன செய்வாள், பாவம்! கடுமையான வேலை, குடும்ப கஷ்டம், இடையில் நான் வேறு".

ஒரு அம்மா இப்படி எல்லாம் செய்வாளா என்று எனக்கு வியப்பாக இருந்தது. பின்னர் நான் படித்து தெரிந்துக்கொண்டது: ஒரு குடும்பத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பது எப்படியும் அந்த குடும்பத்தலைவிக்கு தெரிந்துவிடுமாம், தெரிந்தும் தெரியாதது போல இருப்பார்களாம்(Enablers). எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவனைப்பற்றிய பயமும், குடும்ப கட்டமைப்பை குலைக்க விரும்பாமையும் காரணமாக இருக்கலாம். அதற்காக சொந்த மகளையே பலிகொடுக்க துணிகிறார்கள். வெளிநாட்டிலேயே இப்படி என்றால், நம் நாட்டில் பெண்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது!

"எத்தனை முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன் தெரியுமா? ஏதோ கடவுள் அருளால் ஒவ்வொரு முறையும் தப்பித்தேன்". தன் கழுத்தில் இருந்த மதச்சின்ன டாலரை இரண்டு கையாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மெக்சிகன் ஆரிஜினில் வருபவர்கள் பெரும்பாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள்.

"அப்பா பார்க்காத போது நானும் குடிக்க ஆரம்பித்தேன். உணர்வுகள் மரத்துப்போகும் அளவு குடித்தால் அப்பாவின் வக்கிர செயல்கள் உறைக்கவில்லை, வலிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மதுவுக்கு நானும் அடிமையாகிவிட்டேன்! இப்படியே காலம் ஓடிவிட்டது. எனக்கு 17 வயது, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அம்மாவின் கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் திருடிக்கொண்டு ஒரு பாருக்கு போனேன், அங்கே தான் என் கணவரை சந்தித்தேன்". டிலோரிஸ், தன் கணவரை பற்றி சொல்லும்போது, அவர் முகம் உடனடியாக பிரகாசமடைந்தது.ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டமாதிரி!

"அவர் ஒரு பிஸ்னஸ் மேன், மனைவியை இழந்தவர். அவரை பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அவரோடு பேசும் சுவாரஸ்யத்தில் குடிக்க கூட மறந்துவிட்டேன். அவர் கூட இருந்தால் என் துன்பமெல்லாம் மறைந்துவிடும் என்று தோன்றியது. என்னைக்காப்பாற்ற கடவுள் அனுப்பிய தேவதை என் கணவர். என்னை வீட்டுக்கு கொண்டு போய் விடும்போது என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்?"

"'இன்று உலகத்திலேயே மிக அழகான,அன்பான பெண்ணை சந்தித்தேன்' என்றார். இத்தனைக்கும் அன்று நான் துளி மேக்கப் போடவில்லை, ஹைஸ்கூல் கூட முடித்திருக்கவில்லை!".இதை சொல்லும் போது டிலோரிஸின் முகத்தில் வெட்கம், பெருமிதம் எல்லாம் கலந்த உணர்வுகள்.

"திருமணத்துக்கு பிறகு எல்லாம் சரியாப்போச்சா டிலோரிஸ்?"

"அது தான் இல்லை, திருமணத்துக்குப் பிறகும் என் கடந்த காலம் என்னை விடாமல் துரத்தியது"


- நினைவுகள் தொடரும்

Monday, August 4, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 5

எனக்கு எதை பார்த்து வியப்பாக இருக்கிறது தெரியுமா? இந்த பதிவுகளைப்படித்து மற்ற பதிவர்கள் அதிர்ச்சி அடைவது. என்னுடைய அனுபவத்தைப்போல உலகில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது/ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது, சொல்லப்போனால் என்னை விட பல மடங்கு அதிகமாக!

உதாரணத்துக்கு இந்த நினைவலைகளின் பின்னூட்டத்தில் துளசி டீச்சர் தன்னுடைய தந்தையினால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட வேதனையை பகிர்ந்துக்கொண்டிருப்பார்கள். அது போன்ற அனுபவங்கள் என் அனுபவங்களை விட பலமடங்கு கொடியவை. அந்த ஒரு முறை சறுக்கலைத்தவிர, அப்பா வேறு எந்த தவறும் செய்ததாக நினைவில்லை(அல்லது முட்டாள்தனமான தவறுகள் செய்து மாட்டிக்கொள்ளவில்லை). காலையில் இருந்து மாலை வரை குடும்பத்துக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பத்தலைவர்களுள் அவரும் ஒருவராகவே இருந்தார். நான் இதை எல்லாம் எழுதுகிறேன், மற்றவர்கள் எழுதுவதில்லை. சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

இதை விடவும் பயங்கரமான அனுபவங்கள் சில பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, நாம் கற்பனை பண்ணிக்கூட பார்க்க தயங்கும் பயங்கரம்! உதாரணத்துக்கு திருமதி. டிலோரிஸ். என்னுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே வசிக்கிறார் இந்த அமரிக்க-மெக்சிகன் பெண்மணி. எனக்கு உடற்பயிற்சி செய்வது ரொம்ப பிடிக்கும். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை உள்ள ஜிம்மை விட, சுதந்திரமாக பார்க் போன்ற பொது இடங்களில் ஜாக் பண்ணுவதே பிடிக்கும். அங்கே பலரும் ஜாக் பண்ணிக்கொண்டிருப்பார்கள்,அப்படித்தான் டிலோரிஸ் எனக்கு அறிமுகமானார். டிலோரிஸ்(Delores) என்றால் ஸ்பானிஷ் மொழியில் துன்பம் அல்லது வருத்தம் என்று அர்த்தமாம். அவருடைய வாழ்க்கைக்கதையை கேட்ட பிறகு, 'என்ன பொருத்தமான பெயர்'! என்று நினைத்து வியந்தேன்.

சிரித்த முகம், சுருள் சுருளான பொன்நிற முடி, நீலக்கண்கள் - டிலோரஸை முதன் முதலில் சந்தித்தபோது நான் முதலில் கவனித்தது. அதை சொன்னால், "இல்லை எனக்கு உன்னுடைய ப்ரவுன் முடியும், ப்ரவுன் நிறக்கண்களுமே ரொம்ப பிடித்திருக்கிறது" என்று சொல்லி சிரிப்பார். ஒரு 40- 45 வயது இருக்கும், அந்த வயதிலும் ரொம்ப ஃபிட்டாக இருந்தார், அவர் சொல்லவில்லை என்றால் எனக்கு அவருடைய வயதே தெரிந்திருக்காது. தினமும் பார்த்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் துணையாக ஜாக் பண்ண ஆரம்பித்தோம்.

டிலோரஸை பல நேரம் அந்த பகுதியில் பார்த்திருக்கிறேன். நான் அவசரமாக வேலைக்கு ட்ரைவ் பண்ணிக்கொண்டிருக்கும் காலை நேரங்களில், பக்கத்து ஸ்கூல் குழந்தைகள் கவனமாக தெருவை கடக்க உதவும் வாலண்டியராக பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருப்பார். சில சமயம் மாலை நேரங்களில், ஆல்பர்ட்சன்ஸில் வாங்கிய உணவுப்பொருட்களை வெளியே நிற்கும் ஹோம்லெஸ்களுக்கு தானமாக கொடுத்துக்கொண்டிருப்பார். அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணியதால், அதே வயதுடைய, கூடவே இத்தனை நல்ல மனமுடைய பெண்மணியிடம் பழகுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆபீஸ் விட்டு வரும்போது, அவர் செய்யும் இரவு உணவு ஏதாவது, என்சிலாடாவோ அல்லது புரிட்டோவோ கொண்டு வந்து கொடுப்பார். ஒருவருடைய வீட்டுக்கு மற்றொருவர் வந்தால், சுதந்திரமாக கிச்சன் வரைக்கும் சென்று தண்ணீர் எடுத்துக்குடிக்கும் அளவு எங்களுடைய நட்பு வளர்ந்தது.

டிலோரிஸ் என்னுடைய பெற்றோரைப்பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துக்கொள்வார், அவருடைய கணவரைப்பற்றியும், குழந்தைகளைப்பற்றியும் பெருமிதத்துடன் நிறைய சொல்லுவார். என்னுடைய பெற்றோரைப்பற்றி சொல்லும்போதெல்லாம், அவருடைய கண்களில் ஒரு வித ஏக்கம் தோன்றி மறையும். ஒரு நாள் அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, "இவர் தன் பெற்றோரைப்பற்றியோ அல்லது பிறந்த வீட்டைப்பற்றியோ எதுவுமே பேசுவதில்லையே?". ஒரு நாள் என்னுடைய சந்தேகத்தை ஆர்வத்துடன் கேட்டே விட்டேன், உடனே அவருடைய பளீர் சிரிப்பு மறைந்தது. இறுகிய முகத்துடன் சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, "உனக்கு அப்புறம் சொல்றேன் மினியக்கா" என்றார். மினியக்கா(Muñeca) என்றால் "சின்ன குழந்தையே, அல்லது பெண்ணே" என்று ஸ்பானிஷில் அர்த்தமாம், மெக்சிகன் அம்மாக்கள் செல்லமாக தங்கள் மகள்களை அழைப்பது. அதையும் அவரே தான் சொன்னார். "ஒருவேளை கேட்கக்கூடாது ஏதாவது கேட்டு வருத்தப்படுத்திவிட்டோமோ?" எனக்கு கவலையாக இருந்தது.

சில நாட்கள் ஏதுவுமே நடக்காத மாதிரி வழக்கம்போல ஜாகிங் போனோம், உலக விஷயங்களைப்பற்றி பேசினோம், க்ளோபல் வார்மிங்கைப்பற்றி கவலைப்பட்டோம். நான் கேட்ட கேள்வியை சுத்தமாக மறந்துவிட்ட பிறகு, ஒருநாள் அவரே அந்த சப்ஜெக்ட் பற்றி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் 4 சகோதரிகளுள் கடைக்குட்டியாக பிறந்திருக்கிறார் டிலோரிஸ். அவருக்கு 6 வயது இருக்கும் போது, அப்பாவுக்கு வேலை போய்விட, டிலோரிஸின் அம்மா காலையில் இருந்து இரவு வரையிலும் ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அம்மா வேலையில் இருந்து வந்த பிறகு அசதியில் அடித்துப்போட்டது மாதிரி தூங்குவாராம். குடும்பத்தை வறுமை வாட்ட, ஏற்கெனெவே குடிகாரரான டிலோரிஸின் அப்பா, மனைவி வேலைக்கு போனவுடன் பகல் நேரத்திலேயே குடிக்க ஆரம்பித்திருக்கிறார். பெரிய அக்கா வேலைக்கு போக, அடுத்த இரண்டு சகோதரிகள் அரசு பள்ளிக்கு சென்றுவிட, டிலோரிஸை மட்டும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடிப்படைக்கல்வியை அவருடைய அப்பாவே சொல்லிக்கொடுத்து, "ஹோம் ஸ்கூல்" பண்ணி இருக்கிறார்.

சிறுவயதிலேயே அவர் சகோதரிகளை விட டிலோரிஸ் மிக அழகாக இருப்பாராம், வளர்ச்சியிலும் அப்படியே. மதிய வேளையில் டிலோரிஸுக்கு ரொம்ப பசிக்குமாம், வயறு வலிக்கும் அளவுக்கு! தன்னை சுற்றி பாட்டிலும் கையுமாக இருக்கும் அப்பாவிடம் தயங்கி தயங்கி தனக்கு பசிக்கிறது என்பதை தெரிவித்தால், மூர்க்கமாக டிலோரிஸை எட்டி உதைப்பாராம். "நீ பிறந்ததே வேஸ்ட், உன்னால் எனக்கு ஒரு டாலருக்கு பயனில்லை" என்று முகம் சிவக்க கத்துவாராம். அதற்கு பிறகு அவர் சொன்னதை கேட்க எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

-நினைவுகள் தொடரும்.

Wednesday, July 9, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 3

வீட்டில் நுழைந்தவுடனே படபடக்கும் இதயத்தோடு அம்மாவை என் கண்கள் தேடியது. தலைவிரி கோலமாக, அலுவலகத்துக்கு அணிந்து சென்ற சேலை கூட மாற்றாமல் ஹாலின் ஒரு மூலையில் முகம் எல்லாம் வீங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அம்மாவின் கை இயந்திரத்தனமாக காஃபிக்கோப்பையை பிடித்திருந்தது.

"அம்மாவுக்கு என்னாச்சு??" என்று கேட்டபடியே வேகமாக அம்மாவை நோக்கி சென்ற என்னை அப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது. இந்த முறை சற்று கடுமையாக. "ரூமுக்கு போ என்று சொன்னேன் இல்லையா? அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, அதான் காஃபி வாங்கித்தந்தேன். கொஞ்ச நேரத்தில் சரியாயிடுவா". கொஞ்சம் தயக்கத்தோடு என் அறைக்கு சென்று புத்தகத்தை பிரித்து வைத்து படிப்பது போல பாவனை பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கவனம் எல்லாம் ஹாலிலேயே இருந்தது. ஆனால் அதற்கு பிறகு டிவி ஓடும் சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை. பக்கத்து அறையில் அண்ணா இருக்கிறானா என்று எட்டிப்பார்த்தேன். "எனக்கும் வீட்டில் நடப்பதற்கும் ஏதும் சம்மந்தமில்லை" என்பது மாதிரி சுவாரஸ்யமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். அண்ணா எப்போதும் இப்படித்தான், வீட்டில் பிரச்சினை என்று வந்தால் அதில் இன்வால்வ் ஆகவே மாட்டான். ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் என்றால், பெண் பிள்ளைகள் தான் அதிகம் உள்வாங்குகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். இரவு அன்று யாரும் சாப்பிடவில்லை.

இரவு நேரம்- பசி மற்றும் குழப்பத்தால் தூங்காமல் சும்மா படுத்துக்கொண்டிருந்தேன். அம்மா என் அறைக்குள் வரும் சத்தம் கேட்டது. "கயல் தூங்கிட்டியாமா?"

"இல்லைமா இன்னும் தூங்கல, என்னாச்சு உனக்கு?"

கேட்டது தான் தாமதம், பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

"நான் மோசம் போயிட்டேண்டி, என் வாழ்க்கையே பாழாப்போச்சு"

அம்மா அப்படி அழுது நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கும் எனக்கும் அந்த காலக்கட்டத்தில் தான் அம்மா-மகள் உறவு நெகிழ்ந்து தோழிகள் போல பேச ஆரம்பித்திருந்தோம். Did mom take our "friendship" too far? நான் பொறுமை இழந்து, "என்னாச்சு சீக்கிரம் சொல்லுமா!"

அம்மாவே தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். "இன்னைக்கு ஆஃபீஸில் ரொம்ப தலைவலி. பர்மிஷன் போட்டுட்டு 3 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தேன். வாசலில் அப்பா பைக் நிக்குது, ஏன் சீக்கிரம் வந்தார்னு நினைச்சிட்டே கதவை திறந்து வீட்டுக்குள் வந்தால், பாத்ரூமில் ஏதோ சிரிப்புச்சத்தம்".

அடுத்த பகுதிகளை மன உறுதி இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். மற்றவர்கள் தயவு செய்து இதோடு நிறுத்திக்கொள்ளவும்.

"சந்தேகப்பட்டு பாத்ரூம் கதவை திறந்துப்பார்த்தால், அப்பாவும் ஒரு பொம்பளையும் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அம்மணமா.." மீண்டும் பெருங்குரலெடுத்து அழுத்தார்.

"நான் பார்த்த அதிர்ச்சில அப்பா அப்படியே நிக்கறார், அந்த பொம்பளை தான் சுதாரிச்சிட்டு அவசர அவசரமா பாவாடையக்கட்டினாள். நீ சொன்னா நம்ப மாட்டே கயல், அந்த பொம்பளை சரியான சேரி பொம்பளை மாதிரி இருக்கா. அவ கருப்புகலரும், பல்லும் சே! அவலட்சணமா இருக்கா. அவளோட போய் எப்படி-டி உங்கப்பா இப்படி எல்லாம்" (மீண்டும் அழுகை). அம்மா நல்ல சிவந்த நிறம் என்பதால் கருப்பானவர்கள் அனைவருமே பொதுவாக அவருடைய அகராதியில் அழகில்லாதவர்கள்.

'உலகம் சுற்றுவது ஒரு நிமிடம் நின்றுவிட்டது' போன்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு அன்று அப்படித்தான் இருந்தது. உடம்பின் இரத்தமெல்லாம் உறைந்தது போல இருந்தது. செக்ஸ் பற்றி எதுவும் தெரியாத அந்த வயதில் என்னுடைய முதல் Rude awakening. அம்மா சொல்லுவதை கேட்கவே விருப்பம் இல்லை. அதற்கு பிறகு மெளனத்தையே பதிலாக அளித்துக்கொண்டிருந்தேன்.

"அந்த பொம்பளை பெரிய ரவுடியா இருக்கா கயல். ஏண்டி இப்படி பண்ணினேனு அவளை உலுக்கினா என்ன சொல்றா தெரியுமா?

"......"

"உன் புருசனை காப்பாத்திக்க வக்கில்ல எங்கிட்ட ஏன் வந்து எகிற்ற?-ன்றா. இதை எல்லாம் பார்த்தும் அந்த மனுஷன் அமைதியா இருக்கார். இவர் பண்ணிய காரியத்துக்கு நான் யார்யார்டலாம் பேச்சு வாங்கவேண்டி இருக்கு பார்த்தியாடி?"

"......"

அம்மா மீண்டும் என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தார், என் யூனிபார்ம் டாப்ஸ் நனையும் வரை. எனக்கு அந்த initial shock-க்கு பிறகு உடனடியாக வந்த உணர்வு, சகிக்க முடியாத அருவருப்பு. வயிற்றை புரட்டுவது போல குமட்டிக்கொண்டு வந்தது. அடுத்ததாக, அப்பா மீது கடுமையான வெறுப்பு! வெறுப்பு! வெறுப்பு!

தவறு செய்ததாக சொல்லப்படும் பெண்ணைப்பற்றி விசாரித்ததில், அவள் அடுத்த தெருவில் தான் இருந்தாள், ஏழை குடும்பத்துப்பெண், ஒரு 20-25 வயதிருக்கும். திருமணத்துக்காக அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருந்தார்கள். அவள் கல்யாணத்துக்கு நகை, பணம் சேர்க்க தான் சில தவறான உறவுகளில் சிக்கிக்கொண்டாள் என்று பின்னாட்களில் கேள்விப்பட்டேன்.

பிறகு என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பெரிய இடைவெளி விழுந்தது. இருவருக்கும் படுக்கை தனித்தனியானது, பேச்சு வார்த்தை சுத்தமாக நின்றுப்போய் ஒரு வரி கேள்வி-பதில்களானது, அதுவும் முழுக்க முழுக்க குழந்தைகள் சம்மந்தமாக மட்டும். இரவானால் அம்மா என் ரூமுக்கு வந்து படுத்துக்கொள்வார். "இனிமேல் உயிரோட இருக்க வரைக்கும் அவரோடு படுக்கமாட்டேன் கயல்".

அந்த காலக்கட்டத்திலெல்லாம் சரியாக இரவு நேரத்தில் கரண்ட் கட்டாகும். அப்பா மொழியில் சொல்லுவதென்றால், "ப்ளடி எலெக்ட்ரிசிட்டி போர்ட் பாஸ்டர்ட்ஸ்"(அவருக்கு இருக்கும் தீவிர ஆங்கில மோகத்தினால் திட்டும் போது கூட ஆங்கிலத்தில் தான் திட்டுவார்). மின்சாரத்தால் இயங்கும் ப்ரிட்ஜ், டிவி, தடதடக்கும் மின்விசிறி எல்லாம் நின்றுவிட்டால் நம்மை சுற்றியுள்ள மற்ற சிறு சிறு ஓசைகளை கவனிக்க ஆரம்பிப்போம் இல்லையா?

அப்படி மின்சாரம் இல்லாத நிசப்தமான இரவு நேரங்களில் நான் கவனிக்க நேர்ந்த ஓசைகள் நன்றாக நினைவிருக்கிறது. ஜன்னல் காற்றினால் படபடக்கும் ஓசை, பாத்ரூம் குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக பக்கெட்டில் விழும் ஓசை, கொசுக்களின் ரீங்காரம், கூடவே என் அம்மாவின் மெல்லிய விசும்பல்!.

பி.கு: இந்த நிகழ்வின் இண்டென்சிட்டியில் பாதியை தான் என்னால் எழுத்தில் கொண்டுவர முடிந்தது.

-நினைவுகள் தொடரும்.

Monday, July 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 2



முன்பே ஒரு விஷயம் தெளிவாக எழுதிவிடுகிறேன், தமிழ்ப்பெண்கள் என்றால் சில விஷயங்களைப்பற்றியே பேசக்கூடாது, எழுதக்கூடாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1.அரசியல் 2.பாலியல்(அந்தப்பெண் அரசியல்வாரிசாகவோ அல்லது மருத்துவராகவோ இல்லாதபட்சத்தில்). தமிழ்சினிமாவில் கூட பொதுவாக பெண்களை ஏதோ அரை லூசுகள் ரேஞ்சுக்கு காட்டுகிறார்கள். உதாரணமாக மனிஷா கொய்ராலா(முதல்வன்), லைலா(ஏறக்குறைய எல்லா படத்திலும்), சமீபத்தில் ஜெனிலியா(சந்தோஷ் சுப்பிரமணியம்) போன்றவர்களை குறிப்பிடலாம். கதாநாயகி வாயாடியாக இருந்தாலும் பரவாயில்லை, விஷயம் தெரிந்த அறிவாளியாக மட்டும் இருக்கவே கூடாது(சில விதிவிலக்குகளைத்தவிர).

தமிழ்பெண்கள் என்ன அரைலூசுகள் என எண்ணும் அளவுக்கு அப்பாவிகளா? இல்லவே இல்லை, சினிமா பெண்களுக்கும் நிஜ உலக பெண்களுக்கும் சம்மந்தமில்லை. தமிழ்ப்பெண்களுக்கு காம உணர்வு இருக்காதா? நிச்சயம் உண்டு. காமத்தைப்பற்றி படிக்கவும், எழுதவும், பார்க்கவும் பிடிக்கும். அரசியலைப்பற்றி திறனாயவும் பிடிக்கும். ஆனால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயக்கம். சமுதாயம் நம்மைப்பற்றி என்ன நினைக்குமோ என்ற பயம். நான் அந்த வட்டத்தை எல்லாம் தாண்டி பாலியல் பற்றியும், அரசியல் பற்றியும் முடிந்தவரை எழுதப்போகிறேன். என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, ஏனெனில் நான் யார் என்பது எனக்கு மிகத்தெளிவாக தெரியும். I don't need reassurance, even though I don't mind having some.

கற்பு பற்றிய என் முதல் நினைவுக்கு சில வருடங்கள் முன்னால் பயணிக்க வேண்டும். அப்போது எனக்கு ஒரு 15 வயதிருக்கும். எதிர்பாலினரால் முதன்முறையாக கவனிக்கப்பட்டு வந்த காலமது, எனக்கும் அப்படி சில க்ரஷ்கள் இருந்தது. பாய்ஸ் என்றால் எதிரிகளாக கருதிவந்தது கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கிய பருவம். இதில் குறிப்பாக விக்கி என்ற கூடப்படித்த மாணவன் என் கருத்தை கவர்ந்தான், எனென்றால் அவன் தான் என்னில் மற்றவர்களை விட அதிக கவனம் செலுத்தினான். அந்த பரவச தினங்களில் அன்றொருநாள், ட்யூஷன் விட்டு வந்த என்னை பிக்கப் பண்ண வந்த அப்பாவின் முகத்தில் என்றும் காணாத இறுக்கம். எப்போதும் "ஏதாவது வாங்கித்தரட்டுமா, சாப்படறியாமா" என்றெல்லாம் அன்பாக கேட்கும் அப்பாவின் முகத்தில் சிந்தனையுடன் கலந்த கவலை ரேகைகள். சாலைவிதிகளை மீறாத அப்பா அன்று வாகனம் ஓட்டுவதில் நிறையவே தப்பு செய்தார். "வூட்ல சொல்லிட்டு வந்தியா" போகிற போக்கில் ஒரு ஆட்டோக்காரன் திட்டினான்.

எனக்கு ஏதோ ஒன்று ரொம்ப சரி இல்லை என்பது மட்டும் தெரிந்தது, ஆனால் அது என்னவென்று கேட்டு தெரிந்துக்கொள்ள பயம். அப்பா என்பவர் என்னைப்பொறுத்தவரையில் ரொம்ப மரியாதைக்குரிய மற்றும் அன்புக்குரிய ஜீவன். "உடம்புக்கு ஏதும் சரி இல்லையோ, ஒருவேளை ஹேமாவுடைய அப்பா மாதிரி ஹார்ட் அட்டாக் ஏதும்.." நினைப்பே என்னை கலக்கியது. "அப்பாவுக்கு ஏதும் ஆகக்கூடாது கடவுளே!"

"இன்று பெப்சி உங்கள் சாய்ஸ் வரும் டேடி" அவர் கவனத்தை கலைக்க ஏதோ என்னாலான முயற்சி செய்து பார்த்தேன். செய்திகளுக்குப்பிறகு அப்பா கொஞ்சமும் மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிகழ்ச்சி இந்த பெப்சி உங்கள் சாய்ஸ். எங்களுடைய படிப்பு கெடும் என்பதற்காக வீட்டில் கேபிள் டிவி கனெக்ஷன் போடவில்லை. ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு போயிருந்த போது தான் முதன்முதலில் பெப்சி உங்கள் சாய்ஸ் பார்க்க நேர்ந்தது.

"ஹலோ நான் தான் பெப்சி உமா பேஷ்றேன், பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ஷிக்காக. நீங்க யார் பேஷறது?" - பட்டுப்புடவையும், விரித்துப்போட்ட ஹேர்ஸ்டைலும், நல்ல குரல்வளமும், அழுத்தமான மேக்கப்புமாக இருந்த பெப்சி உமாவை அப்பாவுக்கு பார்த்தவுடனே பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "யார் இந்த பொண்ணு, நல்லா பேசறாளே?" என்று கேட்டு விசாரித்து தெரிந்துக்கொண்டார். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக வீட்டுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. பிறகு பெப்சி உமாவின் நிகழ்ச்சியாக இருந்தால் வாரம் தவறாது எங்களுடைய மறைமுக கிண்டல்களையும் பொருட்படுத்தாது ஏதோ தெய்வத்தைப்பார்ப்பது மாதிரி ஒருவித பரவச நிலையில் பார்ப்பார். பார்ப்பாரே தவிர எங்களுக்கு முன்னால் பெப்சி உமாவுக்கு ஃபோன் பண்ணி பேச முயற்சி பண்ணியதில்லை. ஒருவேளை நாங்கள் பார்க்காதபோது செய்திருக்கலாம். பெப்சி உமாவுக்கு கல்யாணம் ஆனபோது வருத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர்.

ஆனால் அன்று, பெப்சி உமாவும் அவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. வீடு வந்தவுடன் அவர் மெளனம் கலைந்தது, "அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை, தொந்தரவு பண்ணாதே. நீயே டேபிள் மேல் இருக்கிறதை சாப்பிட்டு உன் ரூமுக்கு போய் நல்ல பிள்ளையா ஹோம்வொர்க் பண்ணு, சரியா?". எனக்கு எதோ புரிந்தது மாதிரி இருந்தது. "இந்த பிரச்சினை அம்மாவுடன் சம்மந்தப்பட்டதா?". முன்பு இருந்ததை விட கலக்கம் பலமடங்கு அதிகரித்தது.

- நினைவுகள் தொடரும்

Friday, July 4, 2008

கற்பு, குஷ்பு, நாம்

“என்னடா ரொம்ப "டல்"லா இருக்க, வசந்த்?

"ஒண்ணுமில்லடா நேத்து ஒரு விவாதம்!"

“யாரோட?”

“சந்தியாவோடதான்”

“எதுவும் ஈகோ க்ளாஷா?”

“இல்லைடா, குஷ்பு, கற்பு, நம்மைப் பற்றி”

“குஷ்பு சொன்னதில் தப்பில்லை, இப்போலாம் எல்லோரும் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வச்சிக்கிறாங்கனு சொல்லியிருப்பாள்?”

“ஆமடா!”

“இந்தக்காலத்து படித்த பெண்கள் அப்படித்தான் ஃபீல் பண்ணுறாங்கடா”

“நீயும் இதை நம்புறியா?”

“பெண்கள் பத்தி நமக்கென்ன தெரியும், வசந்த்?”

“ரொம்ப கொஞ்சம்தான், அப்போ அவங்க சொல்றதைத்தான் நாம் நம்பனும்னு சொல்றியா?”

“நிச்சயமா!”

“இல்லைடா, எனக்குத்தெரிய நிறைய பசங்ககூட திருமணத்துக்கு முன் வெர்ஜினா இருந்ததா கேள்விப்பட்டு இருக்கிறேன்”

“பசங்க பற்றி நமக்கு நிச்சயம் தெரியும். அப்படி இருந்தால் என்ன? அதைப்பற்றியெல்லாம் அவங்க பெருமைப்படலை! அந்த மாதிரி ஆண்களைப்பார்த்து பரிதாபப்பட்டாலும் படுவாங்க! இந்தக்காலத்து பெண்கள்ல கூட சிலர்/பலர் வேர்ஜினாக இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் இங்கே பிரச்சினை அதில்லை”

“என்ன சொல்றடா?”

“நாங்க ஏன் வேர்ஜினா இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்கிறங்க? உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கீங்கனு கேக்கிறாங்க?”

“கல்யாணத்துக்கு முன் வெர்ஜினா இருப்பதில் அவங்க பெருமையடையறாங்களா? நான் நிச்சயம் பெருமையடைவேன்”

“இப்போதெல்லாம் பெருமையடைவதில்லை என்று நினைக்கிறேன், ஏன் பெருமையடையனும்?”

“எனக்கு சரியா தெரியல, இருந்தாலும் ஒரு சின்ன உறுத்தல் இந்த விஷயத்தில் எனக்கு”

“ஏன்?”

“சரியா தெரியாது”

“ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“இன்னும் நம்ம கலாச்சாரத்தில் >70% arranged marriage தான் பண்ணுறோம். ஆனால், சந்தியா, குஷ்பு, நீ, நான் எல்லாம் பார்க்கிற, இருக்கிற சொசையிட்டியில் arranged marriage, ரொம்ப அரிது. arranged marriage பண்ணுகிற பெண் வேர்ஜினா இல்லைனா, அவள் வரப்போகிற கணவனிடம் இல்லாமல் யாரிடமோ செக்ஸ் பற்றி பழகி இருக்காள்னு ஆகுது. அது சரியல்ல.. ஏன் காதலித்த அவனையே கல்யாணம் செய்து இருக்கலாம் இல்லையா?..இவங்க எல்லோரும் தனக்குப்பிடித்தவருடன் பழகி, காதல் மற்றும் காமத்தில் கலந்து பின்பு அவர்களையே கல்யாணம் பண்ணிக்கொண்டால் நல்லா இருக்குமே.. எதுக்கு செக்ஸ் பழக ஒரு ஆள், வாழ இன்னொரு ஆள்? இப்படியெல்லாம் யோசிக்கிறயா”

“Exactly”

“சரி, இதைவிடுடா, ரெண்டு டிக்கட்ஸ் இருக்கு, தசாவதாரம் பார்க்கப்போகலாம், வாறியா?

Monday, June 30, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி)



நான் முதன் முதலில் அமரிக்கா வந்த போது என் அம்மா ஏர்போர்ட்டில் என் தலை மறையும் வரை சொல்லிக்கொண்டே இருந்தது "போய் சேர்ந்தவுடனே ரங்கராஜன் மாமாவையும், கலா மாமியையும் காண்டாக்ட் பண்ண மறந்துடாதடீ". என்னவோ என்னுடைய அமரிக்க வாழ்கையே என்னுடைய தூரத்து உறவினர்களான ரங்கராஜன் தம்பதியினரிடம் அடங்கி இருப்பதை மாதிரி ஒரு பில்டப் தந்தார். அதே மாதிரி லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் வாசலில் ரங்கராஜன் தம்பதி தயாராக காத்திருந்தனர்.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு மாமி தான் முதலில் கேட்டார் "உன்னை எங்கேமா கொண்டு போய் விடனும்?"

"என்னுடைய காலேஜுக்கு மாமி, டார்ம் ரூமில் தான் ஸ்டே பண்ணப்போறேன்"

இடையில் மாமா குறுக்கிட்டு, "முதலில் வீட்டுக்கு வாம்மா, டார்ம் விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்". மாமி ரகசியமாக மாமாவை முறைத்ததை நான் கவனிக்க தவறவில்லை. புது ஊரை, முகங்களை பார்க்கும் பயம் மற்றும் பயணக்களைப்பு(நான் வந்து சேர்ந்த நேரம் இந்தியாவில் பகல் 3 மணி) இருந்ததால் அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. வீடு வரும் வரை காரில் அசாதாரணமான அமைதி நிலவியது.


வீடு வந்தவுடன் அப்பா- அம்மாவுக்கு நலமுடன் ஊர் வந்து சேர்ந்த விஷயத்தை கால் பண்ணி சொல்லிவிட்டு, பிறகு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அவர்கள் குழந்தைகளூடன் பேசிக்கொண்டிருந்தேன். மாமி ஏதோ நினைவுக்கு வந்தவளாக, "என்னோட வா கயல், மேல் தளத்தில் இருக்கும் கெஸ்ட் ரூம் காட்டறேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துக்கோ". நான் மேல் தளத்தில் இருந்த கெஸ்ட் ரூமில் தூங்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டது, தூக்கமில்லாமல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூங்கவிடாமல் ஏதோ பண்ணியது. சிறிது நேரத்துக்கு பிறகு படுத்திருப்பது சலிப்பாக இருக்கவே கீழே இறங்கி வந்து லிவ்விங் ரூமில் இருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.

பக்கத்து அறை மாஸ்டர் பெட்ரூமில், மாமியும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக கத்தலாக மாறியது. நான் கேட்க முயற்சி பண்ணவில்லை என்றாலும் கேட்பதை தடுக்கமுடியவில்லை.

"இப்போ என்ன அந்த பொண்ணு மேலே தனி கரிசனம் உங்களுக்கு?"

" என்ன கலா இப்படி பேசறே, அது நம்ம சொந்தக்கார பொண்ணு இல்லையா?"

"உங்களை விட எனக்கு தான் சொந்தம், அதான் கேட்கறேனே, எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்?"

"வாயை மூடுடி, இப்படி அசிங்கமா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். அந்த பொண்ணு எனக்கு சொந்த மகள் மாதிரி"

"இந்த டயலாக்கை நாங்க ஏற்கெனெவே கேட்டிருக்கிறோம்"- இந்த முறை மாமியின் குரலில் கிண்டல் தெரித்தது.

"எதுக்கு போய் எதை இழுக்கற? நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? அதை எல்லாம் நான் சொல்லிக்காட்டறேனா? வர வர உனக்கு வாய்கொழுப்பு ரொம்ப அதிகமாயிட்டே போகுது! என் பொறுமையை சோதிக்காதே"

"ஏன் என்ன பண்ணுவீங்க? அடிக்கப்போறீங்களா? இங்கே நீங்க அடிச்சால் நான் ஒன்னும் அழுதுட்டு பேசாமல் இருக்க மாட்டேன். உடனே 911 போலீஸை கூப்பிடுவேன். போலீஸ் வந்தால் என்ன நடக்கும் தெரியுமில்ல? டொமஸ்டிக் அப்யூஸ்"

மாமா குரல் தணிந்தவராக "உன்னோடு வாழறதை விட பேசாமல் விஷம் குடிச்சு சாகலாம். ராட்சசி!"

"அதை செய்ங்க முதல்ல. பெருசா பேச வந்துட்டார். அந்த பொண்ணு நம்மை பார்க்க வந்த கோலத்தை பாருங்க! ஜீன்ஸும், இறுக்க பிடிச்ச டிஷர்ட்டும். நல்ல பொண்ணு இப்படியா ட்ரெஸ் பண்ணும்?"

"அநியாயமா பேசாதே, இப்போலாம் மெட்ராஸில் பொண்ணுங்க இதை தானே போடறாங்க? ஏன் நீ போடல? கொஞ்ச நாள் வாயை கட்டுமா தாயே, கொஞ்சம் பழகின உடனே டார்முக்கு கொண்டு போய் விடலாம்"

மாமி எதையோ சொல்ல எத்தனிக்க,அதற்கு மேல் அங்கு நிற்க மனம் ஒப்பவில்லை. "ஜீன்ஸ், கோலம்" போன்ற வார்த்தைகள் என் மனதை ரொம்ப பாதித்ததால்(நான் ரொம்ப சென்சிடிவ் டைப்) பேசாமல் கெஸ்ட் ரூம் சென்று படுத்துக்கொண்டேன். இரவு 8 மணிக்கு மாமி தான் வந்து எழுப்பினாள்.

"கயல் எழுந்துக்கோமா, ஏதாவது வந்து சாப்பிடேன்"

பாத்ரூம் சென்று ஃப்ரெஷென் பண்ணிக்கொண்டு கீழ் தளத்தில் உள்ள டைன்னிங் டேபிளை அடைந்தேன். வீட்டில் கடும் அமைதி நிலவியது. குழந்தைகள் டிவியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, மாமா சாப்பிட்டுக்கொண்டே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார்.

"இப்போ எப்படி இருக்கு கயல் பரவாயில்லையா?" என்றார் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமலே. ஒருவேளை என் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவில்லை என்றால் பிரச்சினை வராது என்று நினைத்தார் போலும்.

"நல்லா இருக்கேன் மாமா, நீங்க ஏன் பேயடிச்சா மாதிரி இருக்கீங்க"

மாமி அவசரமாக, "அவருக்கு உடம்புக்கு சுகமில்லை கயல். அப்புறம் ஒரு விஷயம், உனக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் இந்த ஊரை நல்லா பழகற வரைக்கும் இங்கே தங்கிக்கலாம். இன்னொரு விஷயம், நாங்க ரொம்ப கன்சர்வேட்டிவ், பசங்க இண்டியன் கல்சர் மறக்ககூடாது இல்லையா? அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க சரியா?"

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வந்த சில மணி நேரத்தில் இவங்க குடும்ப கலாச்சாரத்தை குலைக்கிற மாதிரி என்ன செய்துவிட்டேன்?

"இல்லை மாமி, நாளைக்கே நான் டார்முக்கு போகனும், முடிஞ்சால் என்னை கொண்டு போய் விடறீங்களா" - அப்போதிருந்த நிலையில், பயத்தில் இந்த வார்த்தைகளை எப்படி சொன்னேன் என்பது இன்று வரை எனக்கே புரியாத புதிர்.

மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"

"இருக்கட்டும் மாமி, நிதானமா பார்க்கலாம். எனக்கு இன்னும் 1.5 வாரத்தில் கிளாசஸ் தொடங்குது. இன்னும் எந்தெந்த க்ளாஸ் எடுப்பதென்று ப்ளான் பண்ணனும், புக்ஸ் வாங்கனும் நிறைய வேலை இருக்கு எனக்கு!"

"உங்கம்மா சொன்னாமாதிரி ரொம்ப பிடிவாதக்காரிடி நீ" - என்றார் கலா மாமி, சிரித்துக்கொண்டே.

பி.கு: 360 டிகிரிக்கான காரணத்தை கடைசியில் விளக்குகிறேன்.

- தொடரும்