என்னுடைய முதல் நில நடுக்கம்: இன்று எழுத தொடங்கிய உடனே,'முதன்முதலாக' என்று சேர்த்துக்கொள்ள புதிதாக ஒன்று கிடைத்தது, என்னுடைய முதல் நில நடுக்க அனுபவம். காலை 11.45 அளவில், திடீரென என் கம்ப்யூட்டர், டெஸ்க், சேர் எல்லாம் குலுங்குவது போல ஒரு உணர்வு. என்னுடைய அலுவலக கட்டடம் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது(Earth Quake safe).அதாவது,நிலநடுக்கத்தால் ஏற்படும் பக்கவாட்டு அதிர்ச்சிகளையும் தாங்கும்.கட்டட சுவர்களின் எடை குறைவாக இருக்க மரத்தால் கட்டி இருப்பார்கள், இதனால் யாராவது 'வெயிட் பார்ட்டிகள்' நடந்து போனால் கூட அந்த பகுதியே கொஞ்சம் ஆடுவதை உணரலாம். அது போல ஏதாவது வெயிட் பார்ட்டி ஓடி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே இருந்த வேளையில் ஸ்பீக்கரில் திடீர் அறிவிப்பு. நில நடுக்கம், Magnitude : 5.9 ஏற்பட்டிருக்கிறது என்றும், யாரும் பதட்டமடையவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பிறகென்ன, அறிவிப்பை கேட்டவுடன் நான் ரொம்ப பதட்டமடைந்தேன். :)இது நான் உணர்ந்த முதல் நிலநடுக்க அனுபவம்!
முதல்வாகனம்: நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்தவுடன் வாங்கிய முதல் வாகனம் டொயோட்டா கொரோலா 2004. ஒரு புகழ்பெற்ற கார் டீலர் ஷிப் கடைக்கு போய் ஒரு பத்து நிமிடத்திலேயே அந்த பேஜ்/கோல்ட் கலர் கொரோலா என் கண்ணில் பட்டது. பார்க்க காம்பேக்டாக, அழகாக இருப்பதோடு, மைலேஜும் அதிகமாக தந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ரொம்ப விரும்பிய 6 CD சேஞ்சர் இருந்தது.வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் முதலில் என் பெற்றோருக்கு கார் பற்றி தெரிவித்தேன். அப்பா ரொம்ப ஆர்வமாக கேட்டுக்கொண்டார். அம்மா அசுவாரஸ்யமாய், "பொம்பளைப்பிள்ளை ஒரு புடவையோ, நகையோ வாங்கிக்கக்கூடாதா? கார் எதுக்கு?" என்று சலித்துக்கொண்டார்.
கார் ரொம்ப நன்றாகவே ஓடியது, ஆனால் ஒரு பிரச்சினை. ஃப்ரீவேயில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது, சில சமயம் இந்த வீணாப்போன எதிர்காத்து 'ஒருத்தி ஓட்டுகிறாளே' என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் கொரோலாவை என் லேனை விட்டு மற்றொரு லேனுக்கு தள்ளியது, சமாளித்து 2 வருடம் ஓட்டினேன். ஒரு நாள் கொஞ்சம் பலமாகவே காற்றடிக்க, கொரொலோ ஒரு நிமிடம் கட்டுப்பாட்டை இழந்த மாதிரி ஏறக்குறைய பக்கத்து லேனுக்கே சென்றுவிட்டது. நல்ல வேளையாக பக்கத்து லேனில் அந்த சமயம் வாகனம் ஏதும் வரவில்லை. அடுத்தநாளே கொரோலாவை திரும்பக்கொடுத்துவிட்டு ஹாண்டா அக்யூரா மாற்றினேன். ஆனால் பேஜ் நிறக்காதல் மட்டும் மாறவில்லை, அடுத்து வாங்கிய வாகனமும் பேஜ் நிறம்!
முதல் காதல்: வலைப்பூவின் பெயரிலேயே காதலை வைத்துக்கொண்டு காதலைப்பற்றி எழுதாமல் இருக்க முடியாது இல்லையா? நான் இளங்கலை பொறியியல் படிக்கும் காலத்தில் கூட படிக்கும் மாணவர் மேல் இனக்கவர்ச்சி மாதிரியான ஒரு குழப்பமான காதல் வந்தது. என்னுடைய டான்ஸ் டீமில் அவரும் இருந்தார். எனக்கு எதிர்மறையான குணம் அந்த பையனுக்கு. நான் யார் வம்பிலும் தலையிடாமல் நானுண்டு என் படிப்புண்டு என்று இருக்க, அவருக்கு அப்போதே அரசியலில் ஆர்வம் அதிகம். மாணவர் தேர்தலில் கலந்துக்கொள்வார், கல்லூரியில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் வலியப்போய் இன்வால்வ் பண்ணிக்கொள்வார். அப்போதெல்லாம் எனக்கு அதிகமாக யோசிக்க தெரிந்திருக்கவில்லை. ரஃப் அன்ட் டஃப்பாக அலைபவர்கள் தான் ஹீரோ என்ற தவறான எண்ணம் எனக்கிருந்தது, நிறைய தமிழ் சினிமா பார்த்ததின் விளைவாக இருக்கலாம். ஒரு நாள் ஸ்பென்சர் ப்ளேசாவில் இருக்கும் காஃபி டேவில் தோழிகளோடு உட்கார்ந்திருந்தபோது, அவர் தன் நண்பர்களுடன் உள்ளே நுழைய, லேசாக சிரித்து வைத்தேன். அந்த என்கரேஜ்மெண்டே அவருக்கு போதுமாக இருந்தது, கூட இருந்த நண்பர்களும் ஏற்றிவிட்டார்கள். அன்றிலிருந்து அவர் டிசைனர் உடை, தலை வலி வரும் அளவுக்கு கொலோன், மற்றும் கவனமாக ஸ்டைல் செய்யப்பட்ட தலைமுடியுடன் மட்டுமே கல்லூரிக்கு வந்தார். அஜீத் மாதிரி வேகமாக பைக் ஓட்டினார், மாதவன் மாதிரி தமிழை கடித்து துப்பினார். "எனக்காக ஒருவர் இத்தனை செய்வார்களா?" என்று எனக்கு ரொம்ப வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. செமஸ்டர் எக்ஸாம் முடிவில் ஒரு நாள் ரொம்ப தயங்கி காதலை சொல்லியேவிட்டார். எதிர்ப்பார்த்தது என்றாலும் ரொம்ப பதட்டமாக இருந்தது. ஏதோ பெரிய தவறு செய்கிற எக்ஸைட்மெண்ட்!. படிப்பு முடிந்தவுடன் பார்க்கலாம் என்ற ம்யூச்சுவல் அக்ரீமெண்டுடன் அதுவரை நண்பர்களாகவே இருப்பதாக முடிவு செய்தோம். சாதாரண பேச்சு, சிரிப்பு என்றே நட்பு தொடர்ந்தது. சில நாட்களிலேயே, அவரிடம் எனக்கு பிடித்தது என்று எதை எல்லாம் நினைத்தேனோ, அதெல்லாம் எனக்கு உண்மையிலேயே பிடித்தவை அல்ல என்று தெரிந்துக்கொண்டேன். மேலும் இருவரும் வேறு வேறு மதம்(அவர் முஸ்லிம், நான் இந்து). எனக்கு தனிப்பட்ட முறையில் ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் இருவீட்டு பெற்றோரும் நிச்சயம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பது புரிந்தது. இதை அவரிடம் ஒரு நாள் விளக்கமாக எடுத்துச்சொன்னவுடன், அவரும் அதிலிருந்த நியாயத்தை உணர்ந்து "பிரிந்துவிடலாம்" என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கூட இருந்த அவரின் நண்பர்கள் அவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு ஈகோ பிரச்சினையாக்கினர், அவரும் ரொம்ப சில்லியாக ஏதோ காதல் தோல்வியடைந்தது போல நடந்துக்கொண்டார். ஒரு நாள் வீட்டுக்கே வந்து அப்பாவிடம் வம்பு பண்ணினார். நட்பு எல்லாம் சுத்தமாக விட்டுப்போனது. சில மாதங்களுக்கு முன் பழைய தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த குறிப்பிட்ட மாணவர் தற்சமயம் அரசியலில் நன்றாக வளர்ச்சியடைந்து தீவிர அரசியல்வாதியாகிவிட்டதாக அறிந்தேன்.
பின்குறிப்பு : பரிசலுடைய வரிசைப்படி நான் ஐந்தாவதாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தலைப்பில் 5 என்று குறிப்பிட்டிருக்கிறேன்.