அமெரிக்கா கொட்டகையில் போயிப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. பல வருடங்களாச்சு! ஆமா, எந்திரன் பார்த்தது. நேரம் சரியாக அமையாததால் கோச்சடையான்கூட பார்க்கவில்லை! அதென்னவோ லிங்கா படம் பார்க்கணும்னு ஒரு ஆவல். படம் பார்க்க நேரமும் கிடைத்தது.
ஒரே க்யூரியாஸிட்டி.. இந்த அறுபத்து நாலு வயசுல ரஜனி என்னதான் நடிச்சு இருக்காரு? இந்த வயதில் ஆடி ஓடி "ரஜனியாக" ஸ்டைலுடன் நடிக்க முடியுமா? அதுவும் இந்த வயதில் சின்னப் பொண்ணுங்க அனூஷ்கா, சோனாக்ஸியோட எல்லாம் ரஜனி டூயட் எல்லாம பாடுவதைப் பார்த்து ரசிக்க முடியுமா? என்ற பதில் தெரியாத கேள்விகளுக்கு பதிலறிய ஆசை. இது போதாதுனு படம் வெளிவரும் முன்னாலேயே ஆளாளுக்கு இது என் கதை என் கதைனு சொல்லி கேஸ் மேலே கேஸ் போடுறாஙகளே?
அப்படி என்னதான் கதை ? சரி போயித்தான் பார்ப்போமே?னு புறப்பட்டுப் போனேன்.
இருங்க!
******************************
இதுக்கு இடையில் பதிவுலகில் விமர்சனங்களும் வந்துவிட்டன.
* மணிமாறன் (இவர் என்ன மூடுல படம் பார்த்தாரோ?) படம் ஒரு தர பார்க்கலாம்னு ஒரே சலிப்பு! இவர் விமர்சனத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை!
*
அப்புறம் நம்ம ரஜினி ரசிகர் கிரி, நான் எதிர்பார்த்ததுக்கு எதிரா இவர் விமர்சனம்! கிரிதான் நமக்கு சுத்தமாப் பிடிக்காத இயக்குனர் பாலா ரசிகரே. அதனால இவர் டேஸ்ட் வேற மாதிரி இருக்கலாம்னு என்னை நானே சரிக்கட்டிக்கிட்டேன்.
* ரஜினி விசிறி ஹாரியின் விமர்சனம். அதுவும் ஓரளவுக்கு நல்லா இருந்தாலும், ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்ல முடியாது.
எல்லாமே நெகட்டிவ்தான்!
* ரஜினி விசிறி ஆரூர் மூனா விமர்சனம் வந்தது!! விமர்சனம் நல்லா இருந்தது! சரி ரஜினி விசிறியாக இருந்தாலும் இவர் ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு நம்பிக்கை வந்தது!
*
உண்மைத்தமிழன், சரவணன் நல்ல விமர்சனம் எழுதி இருந்தாரு. இவரு சுமாரான ரஜினி விசிறி என்றாலும், ஓரளவுக்கு நியாயமாகத்தான் எழுதுவாருனு ஒரு ஆறுதல்.
* அதிசயமாக, ஜாக்கி சேகர் விமர்சனமும் நல்லா இருந்தது!!! இவர் ஒரு கமல் ரசிகர்னுகூடச் சொல்லலாம். இருந்தும் இவர் விமர்சனம் நம்ம ரஜினி விசிறிகள்
கிரி, ஹாரி விமர்சனத்தைவிட நல்லா இருந்தது.
சரினு ரொம்ப எதிர்பார்க்காமல்த்தான் படம் பார்க்கப் போனேன்..
**************************
நான் போனது முதல் நாள் முதல்காட்சி கெடையாது. ரெண்டாவது நாள், நைட் ஷோ. அமெரிக்காவில்தான் இப்போலாம் தமிழ்ப்படம் முக்குக்கு முக்கு தினமும் நாலு ஷோ ஓடுதேனு டிக்கட் எல்லாம் ஆண்லைன்ல வாங்கவில்லை! கொட்டகைக்கு ஒரு அரை மணி நேரம் முன்னால போயிட்டேன்.
அங்கே பார்த்தால் ஒரே குடும்பம் குடும்பமா லிங்கா பார்க்கனு குழந்தைகளையும் அழச்சுண்டு வந்துட்டாங்க நம்ம மக்கள். ஒரே பெண்கள் கூட்டம். அவுங்கல்லாம் நம்மல மாரியில்லாமல் ஏற்கனவே டிக்கட்டும் வச்சுண்டு இருந்தாங்க.
சரி கவுண்டரில் போயி
லிங்கா ஒரு டிக்கட் னு சொன்னதும் அந்த வெள்ளைக்காரி ஒரு சர்காஸ்டிக் லுக்குடன்!
டிக்கட் விலை இருபது டாலர் என்றார். "ஆமா எட்டு டாலர்தானே எல்லாப் படமும் இருபது டாலருக்கு அப்படி என்ன படம் பார்க்கிறார்கள்?" என்பது போல ஒரு லுக்கு விட்டுச்சு அந்த அம்மணி. "உனக்கு இதெல்லாம் புரியாதும்மா" னு நானும் சிரிச்சுக்கிட்டேன்.. சரி டிக்கட்டை கொடு னு வாங்கிட்டு உள்ள போனால், ஒரே தாய்க்குலங்கள்தான்ப்பா அலைமோதுச்சுக..
"போய் ஒரு ரோ ஃபுல்லா சீட் போடணும். அவ வர்ரா. இவ வர்ரா.. ஒண்ணா உக்காந்து பார்க்கணும்"னு ஒரு அம்மா ஒரே அமர்க்கலம் பண்ணிட்டு இருந்துச்சு!
"நேத்தே முதல் காட்சி முடிந்ததுங்க. இன்னைக்கு கூட்டம் கம்மியாத்தான் இருக்கும். இடம்லாம் ஈஸியா கிடைக்கும்.. கவலைப்படாதீங்க!" னு நானும் தெரிஞ்ச ஆள் மாதிரி பதில் சொன்னேன். அதென்னனு தெரியல. தமிழ்ப் படம் பார்க்க போனா இந்த ஆண்ட்டிகள் (ரஜினி ரசிகைகள்) எல்லாரும் நமக்கு சொந்தம் போலதான் தோனும். :)
"நீங்கதான் வெங்கட் ஃப்ரெண்டா?"னு இன்னொரு அம்மா என்னிடம் ஓடி வந்துச்சு!
"ஐயோ, அது நான் இல்லைங்க!" னு சொல்லிட்டு வரிசையில் நின்னா ஒரே திருவிழாக்கோலம்தான்.
தியேட்டர் உள்ள போகும்போதே கூட்டம் ஓரளவுக்கு வரும்னு தோன்றியது. கொஞ்சம் நல்ல இடமாப் போயி பிடிச்சுக்குவோம்னு (அமெரிக்காவில் சீட் நம்பர் எல்லாம் கெடையாதுங்க. இவங்க உங்களைவிட கொஞ்சம் பின் தங்கிதான் இருக்காங்க) வேகமா உள்ள போயிட்டேன். நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமா பிள்ளை குட்டிகளை இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க நம்ம மக்கள்.
கழுத்து வலிக்கிறாப்பிலே படம் பார்க்கும் சீட்கள்.. அதாங்க முன்னால முதல் மூனு ரோ மட்டும் ஃபில் ஆக வில்லை. மற்ற ரோ எல்லாமே ஃபில் ஆயிடுச்சு! தியேட்டரில் ஒரு 80% ஃபுல்லாகி இருந்ததுனு சொல்லலாம். ஒரு 150 பேரு இருப்பாங்கனு நெனைக்கிறேன்.
20 டாலர் தெண்டம் போட்டு படம் பார்க்க வந்து இருக்கேனே?னு ஒருத்தர் கூட கவலைப் பட்ட மாதிரி தெரியலை. இதுல ஒரு சில அம்மாக்கள் விசில் எல்லாம் கொண்டு வந்து அடிச்சுக்கிட்டு படம் பார்க்கிறாங்கப்பா. :)
**********************
பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளி வந்துவிட்டாலும், பாடல்களை அவ்வளவா கேட்கவில்லை. ஏதோ ஒரு 5 பாட்டு இருக்குணு தெரியும். ரெண்டு டூயட்டையும் யு ட்யூப்ல லேசா பார்த்து இருந்தேன்.
சரி, படத்தைப் பத்திச் சொல்லவா?
படம் ஆரம்பம் கிராமத்தில். ஒரு அஞ்சு நிமிடம் ரஜினி இல்லாமலே படம் ஓடுச்சு. அப்புறம்தான் இண்ட்ரோ சாங் (ஓ நண்பா) வந்தது.
படையப்பாவில், சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு னு வெளியே அவுட்டோரில் எடுத்து இருப்பாங்க. இங்கே ஒரு செட்டு போட்டு இந்தப் பாட்டு எடுத்து இருந்தாங்க. பாட்டு நல்லாத்தான் இருந்தது. பார்க்கவும் கேட்கவும்! இந்த வயதில் ரஜினி நல்லா எனெர்ஜ்டிக்காத்தான் இருந்தார்.
அப்புறம், திருடன் ரஜினி- சந்தானம் காமெடி.
அப்புறம்தான் சேச்சி அனூஷ்கா வந்தார்.
நான் பயந்த மாரி இல்லாமல் 64 வ்யது ரஜினியையும் 25 வயது அனுஷ்காவையும் ஜோடியாக ரசிச்சுப் பார்க்க முடிந்தது. அனுஷ்கா சூரயாவுடன் பார்க்கும்போது ரொம்ப உயரமாத் தெரிவார். இப்போ ரஜினியோட பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மேலும் கொஞ்சம் (ரொம்பவே) வெயிட் போட்டு இருப்பதால் இந்த ஜோடி நல்லாத்தான் இருந்தது.
வேறமாரிச் சொல்லணும்னா இவங்க ரொம்மாண்ஸ், சந்திரமுகில , ரஜினி-நயனை ரொமாண்ஸைவிட, சிவாஜில ரஜினி-ஸ்ரேயா ரொமாண்ஸைவிட, எந்திரன்ல ரஜினி-ஐஸ்வர்யா ஜோடியை விட நல்லா இருந்தது நான் சொன்னால் நம்ப மாட்டீங்க. என்னுடைய மதிப்பீடு அது.
எனக்கு இந்த கெமிஸ்ட்ரி பிடிச்சி இருந்தது. இதற்கு முக்கியக் காரணம்
அனூஷ்கா சாதாரணமாக ரஜினியோட காசுவலாக க்ளோஸாக நடிச்சு இருந்தார்.
ஆக, என்னுடைய பயம் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடுச்சு.
அதுக்கப்புறம் படம் ஜாலியாத்தான் போச்சு. காமெடியெல்லாம் சிரிக்க முடிஞ்சது. எரிச்சல் தரவில்லை!
இடைவேளைக்கு அப்புறம் படம் நீளம், போர் னு எல்லாரும் சொன்னாங்க, சத்தியமாக எனக்கு அப்படி தோனவில்லை.
ப்ஃளாஷ்பேக் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ரஜினியின் நடிப்பையோ பாடல்களையோ, பேக்ரவுண்ட் ம்யூசிக்கோ எனக்கு எதுவும் குறையாகத் தோனவில்லை!
ஆளாளக்கு விமர்சகர்கள் எல்லாம் நல்ல வில்லன் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. எனக்கு அதெல்லாம் தேவைப் படவில்லை!
சும்மா சொல்லக்கூடாது சோனாக்சியும் நல்லாவே நடிச்சு இருந்தார். சோனாக்ஸி-ரஜினி காம்பினேஷனும் ரொம்ப விரசமில்லாமல் நாகரீகமாக இருந்தது. அனுஷ்கா-ரஜினி அளவுக்கு கெமிஸ்ட்ரி இல்லை என்றாலும் நல்லாத்தான் இருந்துச்சு. அவர்களுக்கு வரும் டூயட்டும் நல்லாவே இருந்தது.
லிங்கேஸ்வரன் ரஜினி பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். (இருங்க! நீஙக ரஜினியை வெறுப்பவராக இல்லை என்றால்! :) )
ரெண்டு டூயட்களுமே நல்லா இருந்தது.
படையப்பா படத்தில் வர்ர டூயட், எந்திரன் டூயட், சந்திரமுகி டூயட், சிவாஜி டூயட்களைவிட எனக்கு இந்தப் ப்படத்தில் எடுத்து இருந்த டூயட்கள் பிடிச்சதுனு நான் சொல்லணும். :)
அப்புறம் எல்லாரும் குறை சொல்லும் க்ளைமேக்ஸ் எனக்கு எரிச்சல் எல்லாம் தரவில்லை! ரஜினியின் மசாலாப் படத்தில் க்ளைமாக்ஸ்னா இப்படித்தான் இருக்கும். இதுபோல் மசாலாப் படத்தில் க்ளைமேக்ஸ்னு என்ன எதிர் பார்க்கிறாங்கனு தெரியலை. :)
ஆக இதிலிருந்து உங்களுக்கு நல்லா புரிஞ்சி இருக்கும்?
வருண் ஒரு பக்கா ரஜினி ரசிகன் என்று! நான் ரஜினி விசிறி என்பதால்தான் என்னால ரசிக்க முடிந்ததா என்னனு தெரியவில்லை!
கூட படம் பார்த்த எல்லலோருமே படம் முடிஞ்சு திருப்தியாகப் போனதுபோலதான் தெரிஞ்சது. நான் ஒவ்வொருத்தராப் போயி விசாரிக்கவில்லை.
நீங்க ரஜினியை வெறுப்பவர் இல்லை என்றால் கட்டாயம் போயிப் பாருங்க. ஒரு தர இல்லை, ரெண்டு தர. ரஜினி பிடிக்காதுனா உங்க அபிமான நடிகர் படம் வர்ர வரை வெயிட் பண்ணுங்க!