Showing posts with label மீள் பதிவு. Show all posts
Showing posts with label மீள் பதிவு. Show all posts

Wednesday, January 28, 2015

“நான்” என்னும் அகந்தை!

“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் (இல்லை, வாலியின் வரிகள்!! நன்றி மலரன்பன்!!! corrected later) வரிகள் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்” என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது. “நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன் முட்டாளாகிறான்.

“எப்படி?”

* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!

* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.

* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.

* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்.  நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, ஒருமுறை லீவுக்கு ஊருக்குப் போனேன்.

அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.
  “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ வழக்கம்போல் தண்ணியைப்போட்டுட்டு  சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை கெட்டவார்த்தைசொல்லி கண்டமேனிக்குத் திட்டினாராம். அப்போ  ஒரு 18 வயது பையன், சிறுவன், அப்பாவை திட்டியதை கேட்டவன், தாங்க முடியாமல், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை இவன் இஷ்டத்து திட்டிவிட்டானே?" னு ஒரு  கத்தியை வைத்து ஒரே குத்தா குத்தக்கூடாத இடத்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!

என்னங்க,  "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா.. ஒரு சின்னப்பையன் இவ்ளோ பெரிய சண்டியரை கொன்னுபுட்டான்" னு சொல்லிச் சிரித்தார்கள்.

“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.

ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?

இது ஒரு மீளாத...



இது ஒரு மீள்பதிவு!

Friday, March 28, 2014

பாவிகளே! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.


இதுவும் ஒரு மீள்பதிவுதான்!