Wednesday, August 14, 2013

பாவிகளே!!! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.

5 comments:

நன்னயம் said...

மனிதர்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை போட்டு உடைத்திருக்கிண்றீர்கள்.
மிருகாபிமானம் பேசும் பலர் வீடுகளில் சிக்கன் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது

நன்னயம் said...

இப்போதுதான் இன்னொரு முரண்பாட்டு பதிவை பார்த்தேன். முகம்மது ஆசிக் என்பவர் எகிப்தில் கொல்லப்படும் மக்கள் தொடர்பாக ரத்த கண்ணீர் வடித்திருக்கின்றார். அதில் சிரியாவில் அதைவிட அதிகமாக கொல்லப்பட்டு, இன்னும் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்காக ஒரு முதலை கண்ணீர் கூட அவர் வடிக்க தயாரில்லை. எகிப்தில் உள்ள முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு சிரியா முஸ்லிம்களுக்கு இருக்காதா ?

http://pinnoottavaathi.blogspot.com/2013/08/blog-post.html#comment-form

Anonymous said...

//ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது.//

நன்றாக அலசியிருக்கிறீர்கள். ஒரு மாட்டிடமிருந்து பால் கறக்கிறேன் என்று சொல்லி தினமும் மாட்டின் கொங்கையை பிடித்து இழுப்பதை விட, (இறைச்சிக்காக) ஒரே வெட்டில் சாகடிப்பதே மேல். மனிதனைவிட பலசாலியான இன்னொரு ஜந்து தினமும் ஒரு மனித தாயின் மார்பிலிருந்து பாலை கறந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து பார்த்தால், அப்போது தெரியும் மாட்டின் வழி என்னவென்று.
இது பால் vegeterian என்று சொல்லும் நமது சைவ நண்பர்களுக்காக.

காரிகன் said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு. பாராட்டுகள். ஒரு சையன்ஸ் என்சைக்ளோபீடியா வில் படித்தது இது. பெர்செண்டேஜ் படி பார்த்தால் மனிதன் (தனியாகக் கூட அல்ல மம்மல்ஸ் -பாலூட்டிகள்- வகையின் கீழே வருகிறான்). வெறும் 7 % தான் தேனிகள் ஈக்கள் போன்ற இன்செக்ட்உயிரினங்கள் 52%(கொஞ்சம் முன்ன பின்ன இருக்காலம்.) இந்த 7% வைத்துகொண்டு இந்த உலகமே நமக்காக படைக்கப்பட்டதுபோல நாம் செய்யும் அட்டகாசம் ரொம்பவும் அதிகம்தான். மனிதர்கள் இல்லாமலே பல உயிரினங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன ஒரு காலத்தில்.நாம் வந்த பிறகே அவைகளுக்கு கொடுமைகள் ஆரம்பித்தன.

'பரிவை' சே.குமார் said...

முரண்களை உடைத்தெறியும் பகிர்வு அருமை...