மூத்த பதிவர் தருமிக்கு பதில் சொல்றேன்னு மதுரைத் தமிழன் கொடுத்த காணொளி மற்றும் பார்வையாளர்கள் "டேட்டா" பதிவர்களை ஊக்குவித்ததோ இல்லையோ, பல பதிவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத்தான் உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அறிவாரா என்று தெரியவில்லை!
மதுரைத் தமிழர் தன்னுடைய ஒரு சில பதிவுகளை 30,000 முதல் 50,000 பேர் வாசிக்கிறார்கள் என்று சொல்லி, அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள்!
அவருடைய முயற்சி என்னவென்றால்.. பதிவுலகை குறைத்து மதிப்பிடாமல் முகநூல், ட்விட்டர் போன்றவைகளை புறக்கணித்துவிட்டு பதிவர்கள் பதிவுலகில் நெறைய ஆக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிப்பது. அதாவது பதிவர்கள் மனம் தளராமல் நீங்கள் பதிவு எழுத எழுத, வருடங்கள் கடக்கக் கடக்க அவருக்கு கிடைத்த வாசகர்கள்போல் உங்க பதிவுகளையும் குறைந்தது 10,000 வாசகர்களாவது வாசிப்பாங்கனு சொல்ல முயன்றுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? மதுரைத் தமிழரின் பார்வையாளர்கள் டேட்டா வைப் பார்த்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு எழுதும் பதிவர்கள் பலரும் பயந்து பீதியடைந்துள்ளனர். தன் தளத்தில் வந்து வாசித்த வாசகர்களை எண்ணிப் பார்த்த இவர்கள் ..மிகச்சிறிய பார்வையாளர் வட்டத்தையே தங்கள் பதிவு இப்போதும் அடைகிறது என்பதை உணர்ந்து
"10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே! நம்ம எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறோம்?" என்கிற ஒரு மனச் சோர்வுதான் இப்பதிவால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் நம்ம செய்கிற "ஊக்குவிப்பு" முயற்சி தடம் மாறி, "டிஸ்கரேஜ்மெண்ட்" ஆகத்தான் முடியும்! அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்!
படைப்பாளிகள் கவனிக்கவும்!
நீங்க எத்தனை அழகாக எழுதினாலும், சிறந்த ஆக்கசக்தி உள்ளவராக இருந்தாலும்
கவிதை, கட்டுரை, கதை போன்ற ஆக்கங்களுக்கு வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைக்காது. ஆக்கங்களுக்கு மிகவும் குறைவாகவே வாசகர்கள் வருவார்கள். இது பதிவுலக அனுபவத்தில் பலருக்குத் தெரியும். அதாவது தக்க சமயத்தில் வம்பு, சினிமா, டி வி, அரசியல் போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதினால், அல்லது கவர்ச்சியான வார்த்தைகளை தலைப்பில் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றில் இட்டு எழுதினால் மட்டுமே அதிக வாசகர்கள் வருவார்கள்.
நீங்க என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு பதிவுக்கு 30,000 - 50,000 வாசகர்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கமாட்டாங்க. அப்படி ஏதாவது வேணும்னா நீங்க "அவர்கள் உண்மைகள்" தளத்தை ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம். :) நான் சொல்வதெல்லாம் உண்மை!
********************
சொந்தக்கதை:
அமெரிக்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதுண்டு. அவர் வீட்டில் இரண்டு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள்.
அவைகள் மனிதருக்கு உதவி செய்யும் நாய்கள். ஹெல்ப்பர் டாக்ஸ் என்பார்கள்.
 |
| குறையுள்ள சிறுவனுக்கு உதவும் ஹெல்ப்பர் டாக் |
 |
| வயதானவருக்கு ஷாப்பிங் செய்யும் ஹெல்ப்பர் டாக் |
அவைகளில் ஒன்று கொஞ்சம் வயதானது. பெயர் பெத். 12 வயதாகிறது என்கிறார்கள். தன் வயதிற்கேற்றார்போல் நிதானமாக இருக்கும் பெத். இரண்டாவது ஒன்றுக்கு 4 வயதாகிறது. பெயர் ஜாஸ். முதலில் அன்னியமாகத் தெரிந்த நான் இப்போது ஜாஸ்க்கு நண்பனாகிவிட்டேன் . நண்பர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஜாஸுடன் ஒரு 10 நிமிடம் செலவழிக்காவிட்டால், (அதுக்கு உடம்பு சொறிந்துவிடணும், கொஞ்சணும்) என்னை வீட்டுக்கு உள்ளே போகவோ பேசவோ விட மாட்டான் ஜாஸ்! He demands me to give him attention FIRST!
மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் அவைகள் மேல் அன்பாக இருந்தால் நம்மிடம் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து அன்பைக் கொடுக்கும்படி "டிமாண்ட்" பண்ணுகிறதுகள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் "மொதல்ல என்னைய கொஞ்சிட்டு அப்புறம் போய் உன் நண்பன் வில்லியமைப் பார்!" என்கிறது ஜாஸ்!
*************************
பதிவர் சந்திப்பு:
வழக்கம்போல பதிவர்கள் சந்திப்பு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடன், சிரத்தையுடன் அதை எடுத்து நடத்திய பதிவர்களுக்கு, சக பதிவர்கள் சிலருடைய விமர்சனங்களால் எரிச்சல், கோபம்!
கடந்த மூன்று சந்திப்புகளில் ஒவ்வொரு பதிவர் சந்திப்பு நடந்த முடிந்த பிறகும் இதுபோல் ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இது பழகிப்போன விடயம் என்பதால் இந்த முறை இந்தச் சர்ச்சையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
அடுத்த பதிவர் சந்திப்பு முடிந்த பிறகும், அதை எடுத்து நடத்தியவர்களிடம் இருந்து "இனிமேல் பதிவர் சந்திப்பு அவசியம்தானா?" என்று ஒரு பதிவு கட்டாயம் வரத்தான் செய்யும் என்பதை இப்போதே சொல்வதற்கு உங்களுக்கு ஆரூடம் தெரியவோ, அல்லது நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியமோ இல்லை! தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்! :)
***********************
புதிர் மாதிரி!
 |
| என்ன முழிக்கிறீங்க? என்னடா இது இழவு னு நினைக்காதீங்க. மேலே உள்ள என் பெயர் என்ன தெரியுமா? |
|
|
வயாகரானு சொல்லுவாங்க இல்லை? அது ஷாத்சாத் நானேதான்! :)