Friday 2 March 2012

அது இது எது, சிவ கார்த்திகேயனும் பழமொழிகளும்!

அது இது எது? னு விஜய் டி வி ல வருகிற அந்த ஷோவை அனேகமா எல்லாரும் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பீங்க. எனிவே, அதுல வர்ற நம்ம மெரீனா ஹீரோ, சிவ கார்த்தி, அப்பப்போ வந்து இந்த பழமொழிக்கு சரியான அர்த்தம் என்னனு சொல்லுங்கனு கேக்கிறதும், அதுக்கப்புறம் அதற்கு சரியான அர்த்தம்னு எதையாவது விளக்கம் ஒண்ணை சொல்லிப்புட்டு இதுதான் சரியான அர்த்தம் ஏதோ இவருதான் பழமொழிக்கு அத்தாரிட்டி போல சொல்றதும்..

"இது தவறானது", "இதுதான் சரி"னு விளக்கம் சொல்றதெல்லாம், ஏதாவது அகராதி மேற்கோள் காட்டிச் செய்றதுதான் சரியான முறை. சும்மா இவரைப்போல் அரை டவுசர்கள் எல்லாம் வந்து இதற்கு அர்த்தம் இதுதான்னு அடிச்சு சொல்றதெல்லாம் கேணத்தனமா இல்லையா?

நிற்க, நான் அவரு சரியானதுனு சொல்ற அர்த்தத்தை தப்புனு சொல்லவில்லை! அதை ஏன் சரியானதுனு நாங்க ஏற்றுக்கனும்? னு கேக்கிறேன்.

நீங்க என்ன சொல்லுங்க, பழமொழினு வரும்போது, சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகள்தான் மிகவும் அர்த்தமுள்ளதாகவும், தெளிவாகவும் இருக்கு..

என் நண்பன் ஒருவன் இதை அடிக்கடி சொல்லுவான். இன்னைக்கும் இந்தப் பழமொழி கேட்டால் சிரிப்பாத்தான் வருது.

* கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு "செக்ஸ்"க்கு பயந்தா எப்படிடா? LOL!

அப்புறம் மரப்பசுல நம்ம ஜானகிராமன் எழுதிய ஒண்ணு. இதை ஜானகி ராமன் "இன்வெண்ட்" பண்ணியதாக நான் சொல்லவில்லை. மரப்பசு மூலமாக கேள்விப்பட்ட பழமொழி, அம்புட்டுத்தான்.

* அரிசிப் புழு சாப்பிடாதவனும் அவி(வு)சாரி கையால் சாப்பிடதாவனும் இந்த உலகத்திலேயே இருக்கமுடியாது!

நம்ம "பழமொழி அத்தாரிட்டி" சிவ கார்த்திகேயன் தான் இந்தமாரி பழமொழிகளுக்கும் சரியான அர்த்தம் சொல்லனும்!

----------------

பழமொழி பத்தி கூகிள் பண்ணும்போது இது ரெண்டும் மாட்டுச்சு..


* ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி ஆம்படையான் ?

இதுக்கு அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கு..ஆனால் சரியாப் புரியலை.

* ஆச்சானுக்குப் பீச்சான் மதனிக்கு உடப்பிறந்தான் நெல்லுக் குத்தறவளுக்கு நேர் உடப்பிறந்தான்.

இதுக்கு சுத்தமா அர்த்தம் புரியலை! :( இப்போ நெஜம்மாவே நம்ம சிவ கார்த்திகேயன் உதவி ரொம்பத் தேவைதான் போங்க!

தாழ்மையான வேண்டுகோள்:

நானும் பழமொழி சொல்றேன்னு "வரம்பு மீறும்' பழமொழிகளை, மற்றும் விளக்கங்களை பின்னூட்டத்தில் அள்ளிக் கொட்டிடாதீங்கப்பா! நன்றி!

நிறக்குருடு குறைபாடு உள்ளவரா நீங்கள்?

நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு குறைபாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை நல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில வேலைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.

கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



கீழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் வட்டமும், அரக்கு சதுரமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு சதுரம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.




கீழே உள்ள படத்தில் ஒரு அரக்கு "படகு போல்" வரைந்த படம் தெரியனும். உங்களுக்கு அரக்கு படகு தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.



இது ஒண்ணும் பெரிய வியாதி/குறைபாடு இல்லை. இதுபோல் குறைபாடு இருந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதைவிட தெரிந்துகொள்வது நலம். அதை வெளியில் (இங்கேயும்தான்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! :)

credit should go to: Colorblindness-test

Tuesday 28 February 2012

பதிவர் வால் பையனுக்கு ஒரு ஆலோசனை!

அறிவுரை என்பது பெரிய வார்த்தை. எனக்குத் தெரிய யாருக்குமே பிடிக்காது. பொதுவாக அறிவுரை சொல்ல தகுதி யாருக்கும் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனால் சும்மா ஒரு ஆலோசனை செய்யலாம், நலம் விரும்பியாக இருந்தால்.

இவருடைய சமீபத்து பதிவிலிருந்தும், ஏற்கனவே எழுதிய பல பதிவுகளிலிருந்தும் சாருனா வால் பையனுக்கு சுத்தமாகப் பிடிக்காதுனு தெரியுது. இதே மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கோம். சமீபத்தில் இணையதள கருத்துச் சுதந்திரம் கிடைத்தவுடன் பலருடைய படைப்பையும் ஏன் அவர்களையும் பலவாறு விமர்சிக்கிறோம். பொய் சொல்றவங்களைப் பார்த்து எரிச்சலடைந்து, சமூகத்தை கெடுப்பவர்களைப் பார்த்து கோபமடைந்து, நம் உணர்வுகளை அள்ளிக்கொட்டுறோம். இது நம்முடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, எழுத்துச் சுதந்திரம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம். அதில் சந்தேகமே இல்லை!

ஆனால், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கும் ஒரு வரம்பு இருக்குனு நான் நம்புறேன். ஒருவரை பார்த்தால் அவரை கண்ட இடத்தில் அடிப்பேன் என்று சொல்வது நிச்சயம் பேச்சுச் சுதந்திரத்தில் அடங்காதுனு நான் நினைக்றேன்.

நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

நான் சட்டம் படிக்கவில்லை! அதனால் சட்டத்தை இங்கே கோடிட்டுக் காட்ட இயலாது. ஒருவரை வெறுக்க நமக்கு நிச்சயம் உரிமை இருக்கு. அவர்களை, அவங்க படைப்புகளை வெறுக்கலாம். அவங்களப் பார்த்தால் அடிக்கனும் உதைக்கனும் என்ற எண்ணங்கள் மனதில் இருக்கலாம், தன் நண்பர்களிடம் கொட்டித் தீர்த்துக்கலாம்தான். ஆனால் அதையே உங்கள் தளத்தில் உலகத்துக்குத் தெரியும்படி எழுதுவது, நீங்க வம்பை விலைக்கு வாங்குவது போல. நாளைக்கு நீங்கள் சம்மந்தமேப் படாமல ஏதாவது "மேற்படியாருக்கு" அசம்பாவாதம் நடக்கலாம், அப்படி எதுவும் நடந்துவிட்டால், நீங்கள் எழுதிய ஸ்டேட்மெண்ட் உங்க வாழ்க்கையையே சீரழிக்க வாய்ப்பிருக்கு. நீங்க உண்மையிலேயே அப்படி செய்து அதுக்காக சட்ட ரீதியாக எதிர்கொள்ளுவது என்பது வேற விசயம். ஆனால் நீங்க செய்யாமல், யாரோ செஞ்சதுக்கு பலியாவது எப்படி நியாயமாகும்? ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோங்க, நீங்க தனி ஆள் இல்லை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. அதனால் நண்பர் வால் பையனுக்கு என்னுடைய தாழ்மையான ஆலோசனை என்னனா, இப்படி எல்லாம் நீங்க எழுதக்கூடாது சார் என்பதே. முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள். நீங்க இதை அகற்றுவதால் உங்க ப்ரெஸ்டிஜ் நிச்சயம் இறங்கிவிடாது. நமக்குப் பிடிக்குதோ இல்லையோ சட்டம்தான் நமக்கு எல்லாம் மேல். அதை மதிப்பதில், அதன்படி நடப்பதில், சரி செய்துகொள்வதில் எந்த அவமானமும் இல்லை.

வால் பையன் இந்தப் பதிவைப் பார்த்தாலும், படிச்சுப்புட்டு, இவனுக்கு வேலை வெட்டியில்லைனு நெனச்சுக்கிட்டு, அவரு எழுதியதை எல்லாம் எடுக்கப் போவதில்லைனுதான் என் உள் மனதில் தோனுது. இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஒரு வரம்பு, எல்லை இருக்கு என்பதை வால் பையன் மூலமாக உலகுக்குச் சொல்ல அவர் பதிவு உதவியதால் அவருக்கு ஒரு பெரிய நன்றி! வணக்கம்! :)

Thursday 23 February 2012

இந்தியர்களை காட்டுமிராண்டிகளாகக் காட்டும் என்கவுண்டர்!

எந்த ஒரு குற்றசாட்டப்பட்டவனையும், சட்டத்தின் முன்னால் நிறுத்தி, நீதி மன்றத்தில் அவரை குற்றவாளி என்று முடிவு செய்த பிறகு, அன்னாருக்கு மரண தண்டனை வழங்குவதுதான் இந்த நவநாகரிக உலகத்தில் சரியான செயல். அதை விட்டுப்புட்டு, இவன் குற்றவாளினு உலகத்துக்கே தெரியும், அவனை கண்ட இடத்தில் போட்டுத்தள்ளலாம்னு இருக்கிற இந்த "என்கவுண்டர்" என்னும் "இழிவான ஒரு செயல்" இந்தியாவை ஒரு காட்டுப்பய நாடாக உலகிற்கு காட்டும் ஒரு விசயம் என்பதை எல்லோரும் அறிவீர்களா?

யாரு இதை கண்டுபிடித்தது? எதுக்காக இதை இன்னும் இந்தியாவில் செயல் படுத்திக்கிட்டு இருக்காங்கனு எனக்கு விளங்கவே இல்லை. ஒரு அமெரிக்க நண்பரிடம் இதைப் பத்தி சொல்லும்போது, "இந்தியா இவ்வளவு மோசமான காட்டுமிராண்டி நாடா?" னு நேரிடையாகவே என்னிடம் கேட்டார்.

"குற்றவாளி" (குற்றம் சாட்டப்பட்டவர்) க்கும் "ரைட்ஸ்" இருக்கு. சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு குற்றவாளி"னு ஊர்ஜிதம் செய்தவுடந்தான் யாரையுமே தண்டிக்கனும் என்று நமக்குத் தெரிந்ததை இன்னொருமுறை எடுத்துச் சொன்னார்.

என்கவுண்டர் என்பது தவறான ஒண்ணு. அதை இந்தியா அகற்றுவதுதான் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் உலகளவில் கொஞ்சமாவது மரியாதை பெறச்செய்யும் முயற்சி!

Wednesday 22 February 2012

பிரபல பொறம்போக்குகளுக்கு சில கேள்விகள்!

நான் இங்கே "பிரபல" பதிவர்கள் பத்தி எழுதலை, அதனால நீங்க பிரபலப்பதிவர்னு நீங்களே நெனச்சுக்கிட்டு இருந்தாலும், இல்லை உலகம் உங்களை அப்படி நினைத்தாலும், இல்லை அதுதான் உண்மை என்றாலும், நீங்க தவறாக புரிஞ்சுக்கிடாதீங்க. நான் பிரபலங்கள் பத்தி எழுதுறேன்! உங்களைப் பத்தி இல்லைங்க! அதாவது பிரபல நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், விமர்சர்கள் இப்படி வகையறாக்களைப் பத்தி.

மதிப்பிற்குரிய பிரபலங்களே!!!

நீங்க ஒரு பெரிய எழுத்தாளர், இல்லை பிரபல நடிகர், இல்லை பிரபல விமர்சகர்தான் உங்களுக்குனு ஒரு தரம் தகுதி எல்லாம் இருக்கு, உண்மைதான். முக்கியமாக உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க என்பதால் நீங்க பிரபலம்னு நாங்களும் முழுமனதாகவோ இல்லை அரைமனதாகவோ ஒத்துக்கிறோம்!

நமக்குக்கிடைத்திருக்கிற பதிவுலக சுதந்திரத்தால் இன்றைய பதிவுலகில் யாரு வேணா யாரை வேணா எப்படி வேணா விமர்சிக்கலாம் என்கிற நிலை வந்துயிருக்கு. அதனால் உங்களைப் பத்தி தவறான ஒரு செய்தியை தகுதியே இல்லாத ஒரு வம்புப் பதிவர் எழுதுறதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப சகஜம்தான். ஆனால் அந்தப் பதிவில் உள்ள உண்மை மற்றும் பொய்கள் எதுவென்று உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சப்போஸ், அப்படி ஒரு பதிவர் உங்களைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதுறாருனு வச்சுக்குவோம். அதோட அந்தப் பதிவர் "அனானி"களை அந்தத்தளத்தில் கருத்துச் சொல்ல விடுவதில்லை! உங்க நண்பரோ, மனைவியோ, இல்லை உங்களைப் பிடிக்காதவரோ அந்தப் பதிவை படிச்சுப்புட்டு, வந்து உங்ககிட்ட சொல்லிப்புடுறாக. நீங்கதான் பெரிய ஆளாச்சே. இப்படி பொய்த் தகவல் கொடுத்ததால் ஏற்படும் அவதூறை நெனச்சு ரொம்பக் கோவப்படுறீங்க. கோபத்தில் அந்தத் தளத்துக்கு வந்துடுறீங்க. இந்த ஒரு சூழ்நிலையில் நீங்க "எதிர் கருத்து" சொல்லத் துடிக்கிறீங்க. இப்போ நீங்க, நீங்களாவே "இதெல்லாம் தவறான செய்திப்பூ!" னு எடுத்துச் சொல்லலாம். அப்படிச் சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. உங்க உரிமை மதிக்கப்படும், நிச்சயம் பறிக்கப்படாது! பொதுவா ஞாநி அதுபோல் செய்றதுமாரித் தெரியுது.

உங்களைப்பற்றி அவதூறு எழுதிய வலைதளத்துக்கு நீங்க வர்றீங்க! உங்க உண்மையான பெயரை, அதாவது, கமல்ஹாசன், ரஜினிகாந்து, விஜய்யி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஞாநி, எஸ் ராமகிருஷ்ணனு உங்களை நீங்க அந்த வலைதளத்தில் காட்டாமல், ஒரு குப்பன், சுப்பன் இல்லைனா ஏதோ ஒரு பொறம்போக்குப் பேரை வச்சுக்கிட்டு இன்னொரு "ஐடெண்ட்டிட்டி" ல வர்ரீக . வந்து விவாதிக்கிறீங்க, சண்டையே போடுறீங்க!

இப்போ, நீங்க சொல்ற கருத்தில் 100% உண்மைதான் இருக்கு. ஆனால், தங்களை நீங்கள் யாருனு அடையாளம் காட்டிக்கவில்லை! நீங்க உள்ளே களத்தில் இறங்கி அடித்துச் சொல்றீங்க, அப்படி எல்லாம் நடக்கவில்லை னு. இந்த இடத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும், ஒரு சாதாரண பொறம்போக்கு ஐ டில வருவதால் உங்க கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. அப்புறம் நீங்க உள்ளே இறங்கி விசயத்தை விளக்கும்போது உங்களை நீங்களே கொஞ்சம் அடையாளம் காட்டிப்புடுறீங்க. இதெப்படி இந்தாளுக்கு "மேற்படியாருடைய" தனிப்பட்ட பிரச்சினையெல்லாம் இவ்ளோ விலாவரியாத் தெரியுது? னு யோசிக்க வைக்குமளவுக்கு. இவரு உண்மையிலேயே பொறம்போக்கு சுப்பன் தானா? இல்லை சும்மா பொறம்போக்கு வேடம் தரித்து வந்த "இன்னாரா"?னு சந்தேகம் வந்து புடுது. கவலைப் படாதீங்க! வெறும், சந்தேகம்தான், அதை வச்சு ஒண்ணும் பண்ண முடியாதுதான். ஆனால் உங்களுக்கு மனசாட்சி மனசாட்சினு ஒண்ணு இல்லையா? என்ன?? சரி, ஒவ்வொருவருடைய மனசாட்சியும் வேற வேறமாரி செய்லபடலாமா? அது சரிதான்.

எனிவே, "பொறம்போக்கு" ஐ டி ல வர்ர, "பிரபலம்" உங்களுக்கு சில கேள்விகள்!

* இணையதளம் தவிர, சாதாரண உலகில் இதை நீங்க செய்றது கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டம். இணையதளத்தில் மட்டும்தான் இப்படி இன்னொருவர்போல வந்து உங்களுக்காக நீங்களே வாதாட முடியும். இல்லையா?

* நீங்க செய்ற இந்தக் காரியம் உங்க மனசாட்சிக்கு சரினு தோனுதா? இது ஒரு கீழ்த்தரமான செயல் இல்லையா?

* இது மாதிரி செய்வது பெரிய மனுஷனுக்கு (பிரபலங்களுக்கு) அழகா? அப்புறம் உங்களுக்கு முதுகெலும்பு இல்லைனு நான் சொல்லலாமா?

ஏன் இந்தக் கேள்விகள்? எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு??

ஒரு சில பிரபலங்கள் இணையதள பதிவுலகில் மாறுவேடத்தில் திரிவதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கெடச்சி இருக்கு. இந்த பிரபலங்கள் தாங்கள் தாக்கப் படும்போது சுப்பனாகவோ, சொக்கனாகவே வந்து இஷ்டத்துக்கு வார்த்தை ஜாலங்களை அள்ளிவிடுவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை இந்தப் பதிவையும் அந்த மாதிரிப் பொறம்போக்கு பிரபலம் வாசிக்கலாம். அவங்களுக்குத்தான் இந்த மெசேஜ்! அப்படி இன்னொருவர்போல வந்து தனக்காக விவாதம் செய்றது எல்லாம் ரொம்பக் கீழ்த்தரமான செயல்னு பொறம்போக்குப் பிரபலங்ககிட்ட சொல்லிப்புடனும்னுதான் இந்த கேள்விகள், பதில்கள், இந்தப் பதிவு எல்லாமே!

Tuesday 21 February 2012

சாரு நிவேதிதா என்னும் போதைப் பொருள்!

சாரு நிவேதிதா பற்றி பதிவுகள் எழுதுவது எப்படினா..என்ன சொல்றது? சாருவைப் பத்தி க்ரிடிசைஸ் பண்ணுறது இல்லைனாஅவர வச்சு "காமெடி" பண்ணுறதெல்லாம் யாரு வேணா ரொம்ப எளிதாச்செய்யலாம். சமீபத்துல அது ஒரு மாதிரியான "போரான" "சப்ஜெக்ட்டா" ஆயிப்போச்சுனுகூடச் சொல்லலாம்.

உண்மையைச் சொல்லப்போனா சாரு, ஒரு போதைப் பொருள் மாதிரி. இவரைப் பத்தி எழுத வேணாம்னு விட்டுத் தொலைச்சாலும் மறுபடியும் ஒரு நாள் எதையாவது எழுத வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுவார். பொதுவாக இவரைப் பத்தி திட்ட ஆரம்பிச்சா "இவரைப் பத்தி தெரியாதாக்கும்?" "புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா!" னு ஆளாளுக்கு அலுத்துக்கிறதைத்தான் பார்க்கலாம்

என்னதான் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும் சாருவைப் பாராட்ட வேண்டிய சில விசயங்கள் உண்டு. அதைப் பார்க்கலாம் இங்கே!

நான் பார்த்தவரைக்கும் ஒரு எழுத்தாளனா இருந்துக்கிட்டு சாரு என்னைக்குமே தன் அகந்தையை அநாகரிகமாக வெளியே காட்டுவதில்லை. மற்றவனை கடுமையாக விமர்சிப்பது வேற, தாந்தான் பெரிய இவன்னு எழுதுவது வேற. இது ரெண்டுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்க ஒழுங்காப் புரிஞ்சுக்கனும்!

அப்புறம் தன்னைவிட வயதில் சின்னப் பசங்களோட கூடிக் கும்மாளம் போடுறது, தண்ணியடிக்கிறது, வெட்டிப் பேச்சு பேசுறது இதெல்லாம் நிச்சயம் இவருக்கு ப்ள்ஸ் பாயிண்ட்ஸா ஆகிறது இன்றைய சமுதாயத்தில்.

தன் வலைதளத்தில் "அடியேன்" என்று இவரு தன்னைப் பத்தி சொல்வது ரொம்ப "எளிமையாக" தன்னைப்பத்தி சொல்வதுபோல இருக்கு. வர வர "அடியேன்" என்கிற வார்த்தை "சாரு"க்கு மறுபெயர்னு சொல்ற அளவுக்கு ஆகிப்போயிடும் போலயிருக்கு. :-)

அப்புறம் எப்பப்பார்த்தாலும் எதையாவது தன் பிரச்சினையை எழுதி (எவனுக்குப் பிரச்சினை இல்லை?) இவன் என்னை இப்படி செஞ்சுபுட்டான், இவன் எனக்கு துரோகம் பண்ணிப்புட்டான், அப்படி இப்படினு எதையாவது புலம்புவது, தமிழன் எழுத்தாளனை மதிக்கிறதே இல்லைனு ஒரு ஒப்பாரி வைப்பது. இதுபோல் தன்னை வெளிவுலகுக்கு ஒரு "பரிதாபப்பட்ட ஜென்மம்" போல் இவரு காட்டிக்கொள்வதால் இவரை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு நியாயமாகத் திட்டும் போதுகூட இவர் மேலே ஒரு பரிதாபம் உருவாகுது னுகூட சொல்லலாம்.

போதாக்குறைக்கு இவர் மேலேதான் ஏகப்பட்ட ("பொய்")குற்றச்சாட்டுகள்..

* கதைத் திருட்டு குற்றச்சாட்டு.

* நித்தியானந்தா சம்மந்தப்பட்ட "கமர்சியல்" கட்டுரைகள் எழுதியது. அப்புறம் அதை வைரஸ் வந்து தின்னுட்டதால அதெல்லாம் காணாமல்ப் போனது.

* யாரோ ஒரு கொஞ்ச வயதுப் பொண்ணோட அநாகரிகமாக "சாட்" (அந்தப் பெண் விரும்பாத வகையில்) செய்ததாகக் குற்றச்சாட்டு.

இப்படி ஏகப்பட்டது..

ஆனால், சாரு இன்னும் கற்றுக்க வேண்டியதுனு சொன்னா, நிச்சயம் இதைச் சொல்லியே ஆகனும்! "இவருக்கு எப்படி நட்பு பாராட்டுறதுனு சுத்தமாத் தெரியலை"னு சொல்லலாம். கூடத் திரிய நாலு ஜால்ராப் பசங்க எப்போவுமே இருக்கத்தான் செய்வானுக, அதெல்லாம் உறுப்படியான நட்பாகுமா? நான் சொல்ல வர்றது "உண்மையான நண்பர்கள்"! பாராட்டும்போது பாராட்டி, தப்பு செய்யும்போது, "ஏன்யா உன் பேரைக் கெடுக்கிற, லூசு?" னு உரிமையுடன் கண்டித்து சொல்றவர்கள்.

நான் பார்த்தவரைக்கும் சாரு நல்ல நண்பர்களை இழந்துகொண்டே வருகிறதுபோல தோனுது. இப்படியே போச்சுனா.. நெனைக்கவே சங்கடமாயிருக்கு.

Wednesday 15 February 2012

சாதியை ஒழிப்பது மனித இயற்கைக்குப் புறம்பானது?!

நம்ம டோண்டு ஐயாதான் இப்படி ஒரு காமெடியான வரியை எழுதியிருக்காரு. வழக்கம்போல ஜாதிக்கு வக்காலத்து வாங்காமல் வாங்கி, அது நம்ம கலாச்சாரத்துடன் கலந்துவிட்டது, அதனால அதை ஒழிப்பது என்பது இப்போதைக்கு நடக்கிற காரியம் இல்லைனு அவரு எப்போவும் சொல்றதை இப்போவும் சொல்ல வரும்போது, "ஜாதியை ஒழிக்க நினைப்பது மனித இயற்கைக்கு புறம்பானது" னு சொல்லியிருக்காரு.

ஆமா, ஜாதிக்கும் மனித இயற்கைக்கும் என்ன சம்மந்தம்னு தெரியலை எனக்கு.

ஏற்ற தாழ்வு, மனித இயற்கை!

அழகு, அழகின்மை, மனித இயற்கை!

அறிவாளி, புத்தியில்லாதவன் மனித இயற்கை!

வீரம், கோழைத்தனம், மனித இயற்கை!

இதெல்லாம் மனித இயற்கை, சரிதான். ஆனால் இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட சாதி என்னும் ஒருவகையான பிரிவினை மனித இயற்கைனு சொல்றது சுத்தமான அபத்தம் இல்லையா? ஜாதி அடிப்படையில் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது எப்படி மனித இயற்கையாகும்?!

அவர் பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் ஒண்ணு எழுதிப் போட்டுட்டுத்தான் வந்தேன். நிச்சயம் அது வெளியே வரும். இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதியதால், அவ்ளோ திருப்தியில்லை! இப்போ அதன் தமிழாக்கம் இங்கே!

சாதியை ஒழிப்பது, அதாவது ஜாதிங்கிறத சொல்லிக்கிட்டு திரிகிறவங்க இல்லாமல்ப் போவது என்பது நம் வாழ்நாளில் நடக்கப் போற விசயம் இல்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் ஜாதியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதால் அதுக்குக் காரணம் மனித இயற்கைக்கு புறம்பானது என்பதெல்லாம் சுத்தமான அபத்தம்.

கவனித்துப் பார்த்தால் சாதி மட்டுமல்ல, உலகில் நெறைய விசயங்களை முழுமையாக நம்மால் ஒழிக்க முடியவில்லைதான்.

* கேன்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற வியாதிகளையும்தான் அடியோட ஒழிப்பதென்பது இப்போதைக்கு முடியாது. அதனால அதை ஒழிக்க நாம போராட முயற்சி செய்யாமலா இருக்கோம்? அவைகளை ஓரளவுக்கு கட்டுப் படுத்துவதால் எத்தனையோ பேர் இன்னைக்கு உயிரோட இருக்காங்க இல்லையா? இதுபோல் வியாதிகள் வரத்தான் செய்யும், வந்துட்டுப் போகுது, அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது, வந்தால் அதை ஒழிக்க வழி கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இயற்கைக்கு புறம்பானதுனு பேசாமல் எல்லோரும் சாவோமா? காலரா, பெரியம்மை போன்ற வியாதிகளை எல்லாம் நம்ம அரவே ஒழிக்கவில்லையா? அதனால் இன்னைக்கு மனிதன் இனம் அதிக நாட்கள் வாழ வில்லையா? நன்மையடையவில்லையா??

* பொறாமை, அறியாமை, தாந்தான் பெரிய இவன் என்கிற அகம்பாவம் போன்ற மனித இயல்புகள் எல்லாமே இயற்கையானதுதான். அதனால் அதுபோல் சின்னப்புத்திகளை தவறு என்று சுட்டிக்காட்டி, அதை ஒழித்தால்தான் மனித இனம் மேலும் உயரும் என்றும் காலங்காலமாக நம் முன்னோர்கள் படிச்சு, நாமும் படிச்சு, இளையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லையா? ஏன் அப்படி செய்றோம்?அது இயற்கையான உணர்வுகள் என்பதால் அதுக்கு எதிரா நாம் செயல்படுவது தப்பு, இயற்கைக்குப் புறம்பானதுனு எல்லாம் சொல்லிக்கிட்டு நாம் அதுபோல் உணர்வுகளை கண்டுக்காமல் விட்டுவிட்டு நம்ம பாட்டுக்கு வாழ்ந்திருந்தோமேயானால் இன்னைக்கும் மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பான்.

அதனால ஒண்ணை முழுமையாக ஒழிக்க முடியாது என்ற நிலையிருந்தாலும், அதை ஓரளவுக்கு ஒழிக்க, அதனால் விளையும் கொடுமைகளை கட்டுப்படுத்த முயல்வதே இன்னைக்கு நாம் நம் எதிர்கால சந்ததிகளுக்கு செய்ய வேண்டிய நம் கடமை! நம்மால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதால் "எல்லாம் பகவான் செயல்" "இயற்கைக்கு புறம்பானது" என்று பேசுவதெல்லாம் அபத்தம், அறியாமை!