Wednesday, October 5, 2011

ஒரு பாழாப்போன கதை! இது சவால் போட்டிக்காக அல்ல!

"என்னண்ணே அமேரிக்காவிலேயிருந்து வந்து இப்படிப் பேனாவும் கையுமா இந்த ஆலமரத்தடில உக்காந்து இருக்கீங்க?"

"வாப்பா குமாரு! எப்படி இருக்க? நம்ம ஊர்ல அடிக்கிற வெயில்ல உருகிடுவேன் போல! இப்படி மரத்தடியிலே காத்தோட்டமா உக்காந்துக்கிட்டு சும்மா ஒரு கதை எழுதலாம்னு வந்தேன்."

"எதைப்பத்திண்ணே கதை?"

"எதைப்பத்தியா? ஒரு போட்டில கலந்துக்கிறேன். ஏதோ "மாடர்ன்" சூழ்நிலையக்கொடுத்து அதை கதையில் பொருத்தி கதையை எழுதனும்னு சொல்றாக. பெரிய சவாலாத்தான் இருக்கு போ!"

"ஆமாண்ணே, தெரியாமத்தான் கேக்கிறேன்..போட்டினு வந்ததும் திடீர்னு எந்த சூழ்நிலைக்கும் ஏத்தாப்புல எப்படி ஒங்களுக்கு கற்பனை பொத்துக்கிட்டு வரும்?"

"அதை ஏன் கேக்குற குமாரு..ஒண்ணும் வரமாட்டேன்கிதுப்பா.. அது நம்ம மாரி மரமண்டைக்கு இதெல்லாம் ஒத்து வராது. அதனால போட்டியை அறிவாளிகளுக்கு விட்டுக்கொடுத்துப்புட்டு சும்மா ஏதாவது நல்ல கதையா இதுவரைக்கும் யாரும் எழுதாத கரு வச்சு எழுதனும்னு யோசிக்கிறேன்."

"ஏண்ணே! நான் வேணா இதுவரைக்கு நீங்க கேக்காத ஒரு கதை சொல்லவா?"

"என்ன கதை? ஏய் எதுவும் அந்தக்காலத்து அம்புலிமாமால படிச்சதா? ஆமா நம்ம ஊரைவிட்டு நீ எங்கே போயிருக்க குமாரு?"

"இல்லண்ணே இது நம்ம ஊர்க்கதைதான். ஆனா உங்களுக்கு இந்தக்கதை தெரிஞ்சிருக்க வாய்ப்பே யில்லண்ணே.."

"அப்போ சொல்லு குமாரு."

"உங்களுக்கு நம்ம வினோத்தும், மனோஜும் ரெண்டுபேரு இருப்பானுக இல்ல? அவனுகள தெரியுமில்லண்ணே?"

"எந்த வினோத்?"

"உங்களோடதான் ஹைஸ்கூல் எல்லாம் படிச்சான்ண்ணே.. உங்களுக்கு நல்லாத்தெரியும்..ரொம்ப உயரமா ஒள்ளியா இருப்பாரு.. ஃபுட்பால் எல்லாம் வெளையாடுவாரே.. வினோத்..தெக்குத்தெருல இருக்காங்கண்ணே.."

"ஓ அவனா? ரொம்ப நல்ல பையன் குமாரு.. அவங்க அப்பா மலேசியாலேயோ எங்கேயோ அயல்நாட்டிலே இருக்காருனு சொல்லுவாங்க இல்ல? அவங்க வீட்டிலே என்னவோ வேற மொழியில்லே பேசுவாங்க ?"

"அவனேதான். அவன் அப்பன் மலேசியாவிலே இருக்கானோ என்ன காடாத்தோ.. நம்ம ஊர்ல குடும்பத்தைக்கொண்டு வந்து வச்சு ரொம்பக்காலமா இங்கேதான் இருக்கான்..எப்போவாவது வருவான்..அவன்ட்ட நெறையாப் பணம் இருக்குண்ணே..ஆனால் அவன் ஒரு உலக மகா அயோக்கியன் அண்ணே!"

"வினோத் அப்பாவா? அந்த ஆள நான் பாத்ததே இல்லையே குமாரு..இந்த லட்சணத்திலே அந்தாளுக்கு சர்டிஃபிகேட் எல்லாம் எப்படி நான் கொடுக்கிறது?"

"அண்ணே அந்தத் கழிபட்டவனுக்கு ரெண்டு பெண்டாட்டிகள்..அது தெரியுமா உங்களுக்கு?"

"என்னப்பா இப்படித்திட்டுற? அப்படியா! இப்போத்தான் கேள்விப்படுறேன்"

" மனோஜ் முதல்தாரத்துக்குப் பொறந்தவன், வினோத் ரெண்டாம்தாரத்துக்குப் பொறந்தவன் ...எல்லாரும் ஒரே வீட்டிலேயேதான் இருக்கானுக.. ஒரே குடும்பமா"

"அதான் அவங்க ரெண்டுபேரும் பார்க்க ரொம்ப வித்தியாசமா சம்மந்தமே இல்லாமல் இருக்காங்களா?"

"அண்ணே அதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமா?"

"என்ன?"

"அவங்க அம்மாமார்கள் ரெண்டுபேரும் ரொம்ப நெருங்கிய சொந்தம்.."

"என்ன சொந்தம், நெருங்கிய சொந்தம்? அக்கா தங்கையா?"

"அண்ணே! சொன்னா நம்ப மாட்டீங்க..அதைவிட சொந்தம்.."

"ஏய் குமாரு!! நீ என்னப்பா சொல்ல வர்ற இப்போ?"

"இது ஊர் உலகத்துக்குத் தெரியாதுண்ணே. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது. ஒரு சில பேருக்குத்தான் இந்தப் பாழாப்போன குடும்ப ரகசியம் தெரியும். எனக்கே கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் தெரிஞ்சுச்சு..நம்மல்லாம் ஆஸ்திரேலியாவிலே நடக்குது, அமெரிக்காவில் நடக்குதுனுதான் நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு சில மேட்டர்கள்ல நம்ம ஊரு அமெரிக்காவைவிட மோசம்னு இதைத் தெரிந்த பிறகுதான் நானே தெரிஞ்சுக்கிட்டேன் அண்ணே"

"யாருப்பா அந்த ஆளு? வினோத்தோட அப்பா ? அவன் பூர்வீகம் என்ன? அவனை எப்படி உயிரோட அதுவும் நம்ம ஊர்ல விட்டானுக?"

"அந்த ஆளு நம்ம ஊர் இல்லண்ணே. எங்கேயிருந்தோ எப்போவோ வந்து குடிவந்தவன். யாருக்கும் அவன் என்ன சாதி ? அவன் குடும்பம் என்ன? அவன் சொந்த பந்தம் என்ன? அவங்க வீட்டிலே என்ன பாஷை பேசுறானுகனு ஒரு எழவும் தெரியாது. அவனுக்கு சொந்தபந்தம்னு நம்ம ஊர்ல யாரும் கெடையாதுண்ணே. எங்கேயோ வெளிநாட்டுல இருந்து நல்லா சம்பாரிக்கிறான். பணம் இருக்கு..அப்பப்போ வெளிநாட்ல இருந்து வருவான்னு மட்டும்தான் தெரியும். வீட்டுக்குள்ளேயே தப்பு நடந்ததும் வேற வழியில்லாமல் என்ன செய்றதுனு தெரியாமல் கட்டி வச்சுப்புட்டாங்களோ என்ன எழவோண்ணே. இதுதான் நான் கேள்விப்பட்டது."

"இதை எல்லாம் என்னை நம்பச்சொல்றியா? நீ எடத்தைக் காலி பண்ணுப்பா, குமாரு!"

"நானும் அப்படித்தான் நெனச்சேண்ணே. ஆனால் உண்மை இதுதான். ஏன்ண்ணே உண்மைக்கதை எல்லாம் எழுதமாட்டீங்களா?"

"ஆளை விடுப்பா! நான் பேசாமல் உப்புச் சப்பு இல்லாமல் ஏதாவது காதல் கதை எழுதிட்டுப்போறேன். புதுமையாக இல்லைனாலும், அறைச்ச மாவையே அறைக்கிறான்னு நெனச்சாலும், பரிசு எதுவும் கெடைக்கலைனாலும் பரவாயில்லை. இந்த பாழாப்போன கதைய நீ என்னிடம் சொல்லாமலே இருந்து இருக்கலாம்.. ஏன்ப்பா இப்படி இருக்கானுக..உன்னைத்தான் மொதல்ல அடிக்கனும் இதையெல்லாம் வந்து என்ட்ட சொல்லிக்கிட்டு இருக்க பாரு.."

"நீங்க அமெரிக்காவிலே இருக்கீக.. இதெல்லாம் உங்களுக்கு என்ன பெரிய மேட்டாராண்ணே? அவன் என்ன சாதியோ..எந்த ஊர்ல என்ன கலாச்சாரத்திலே பொறந்து வளர்ந்தானோ தெரியலையேண்ணே"

"என்ன சாதினா என்ன? என்ன மொழி பேசினால் என்ன? அவன் என்ன மிருகமாஅவன்?"

"மனுஷன்ந்தான்.. சாமியெல்லாம் ரொம்பவே கும்பிடுவான்.."

"செஞ்ச பாவத்தை கழுவவோ என்னவோ போ! சரி நான் ஒண்ணு கேக்கவா, குமாரு?"

"சொல்லுங்கண்ணே?'

"அடிக்க வரக்கூடாது?"

"உங்களையா? அட ஏண்ணே நீங்க வேற.."

"சப்போஸ், நீயோ நானோ, இந்த வினோத் நிலைமையில் இருந்தால் எப்படி இருக்கும் நம்ம வாழ்க்கை?"

"நெனச்சுப் பார்க்கவே பயம்மா இருக்குண்ணே..போன ஜன்மத்திலே நம்ம எதுவும் பாவம் செய்யலை போலண்ணே. அதான் நமக்கெல்லாம் இப்படி ஒரு நெலை வரலைண்ணே"

"ரொம்பப் பாவம் இல்ல? பிள்ளைங்க நிலைமை? தப்பு நடந்தது தெரிந்ததும், களைச்சுப்புட்டு அவன் அப்பனை கண்டதுண்டமா வெட்டி இருக்க வேணாமா? அதோட ஒருவழியா எல்லா எழவும் முடிஞ்சி இருக்கும் இல்லை? ப்ரோலைஃப் னு சொல்லி ஒளறிக்கிட்டுத்திரிகிற லூசுப்பயலுகளா என்ன நம்ம?"

"நம்ம ஊர்க்காரன்னா அப்போவே அதுதான் நடந்து இருக்கும். ஒருவழியா இந்த எழவும் முடிஞ்சி தொலஞ்சு இருக்கும். இந்த ஆளு பூர்வீகம், இவன் வீட்டிலே என்ன நடக்குது . இந்தத்தப்பு எப்போ நடந்தது எதுவுமே நம்ம ஊர்ல இருக்கவன் யாருக்கும் தெரியாதுண்ணே.. உங்களுக்கே இப்போத்தானண்ணே தெரியும்? அதுவும் நான் சொல்லி?"

"சரி, நீ சொல்றத நான் எதுக்கு நம்பனும்? நம்ம மக்கள் இவ்ளோ கேவலமா இருப்பாங்களா என்ன?"

"நீங்க நம்புறீங்களோ இல்லையோ, இதுதான் உண்மைண்ணே. "

"இதையெல்லாம் உண்மையிலேயே நடந்ததா நான் என் கதையிலே எழுதினா நம்ம ஊருக்கும், நம்ம கலாச்சாரத்துக்கும், உனக்கும் எனக்கும்தான் அவமானம், கேவலம். நம்ம தலையிலே நம்ம மண் அள்ளிப் போட்டுக்கிட்டதாத்தான் ஆகும். எல்லாரும் என்னைத்தான் அசிங்கமாப் பார்ப்பானுக..பேசாமல் இதை ஒரு பொய்க்கதைனு நான் நெனச்சுக்கிறேனே?"

"என்னண்ணே நான் என்ன உங்ககிட்ட பொய்யா சொல்லுறேன்?"

"நீ பொய் சொல்றேனு நான் சொல்லல, குமாரு. உன்னிடம் எவனாவது வம்புபேசுறவன் பொய் சொல்லியிருக்கான்னு நான் நம்ப விரும்புறேன்னு சொல்றேன்.. ஒரு சில உண்மைகள் பொய்யாக்கப்படுவதாலோ, மறைக்கப் படுவதாலோ தப்பில்லை பாரு, குமாரு."

"அட என்னண்ணே நீங்க..எப்பவும் பெரிய உண்மை வியம்பி மாதிரிப் பேசுவீங்க. இப்போ நீங்களே.."

"சரி வாப்பா போகலாம். ஒரு மிக்சர், டி வாங்கி குடிச்சுப்புட்டு திரும்ப வந்து ஒரு காதல் கதை எழுதப்போறேன். இந்த மாரிப் பாழாப்போன கதையெல்லாம் நமக்கு வேணாம்!"

No comments: