அவளுக்கு தன் முதல் வருடம் இந்த ஐ ஐ டி யில் வந்து சேர்ந்த ஞாபகம் வந்தது. அன்று இவள்தான் புது வரவுகளில் பேரழகி! இவளை வேடிக்கை பார்க்கதாத மாணவர்களோ, இளம் மற்றும் வயதான பேராசிரியர்களோ இல்லை. நீதாண்டி இந்த வருட #1 என்று அவள் தோழிகள் தன் பாய்ஃப்ரெண்ஸிடம் இருந்து கேட்டு வந்து சொன்னார்கள். அவளுக்கு தன் அழகினால் பெருமிதமும் கொஞ்சம் திமிரும்கூட இருந்ததென்றே சொல்லவேண்டும். அடுத்த வருடம் இன்னொரு புது வரவுக்கு அந்தப்பேரழகிப்பட்டம் போய்விட்டது. இவளுடைய ரசிகர்கள் எல்லாம் புதுவரவின் ரசிகர்களாகி விட்டார்கள்! இருந்தாலும் இவளுடைய “லாயல் விசிறிகள்” இரண்டாவது வருடத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். அப்போதெல்லாம் சகுந்தலா தன் முகத்தை அவளே பார்த்து ரசித்துக்கொள்வாள். கண்னாடி முன் பலமணி நேரம் நின்று தன்னை அழகு பார்ப்பாள். “அழகான பொண்ணு நான், அதற்கேற்றகண்ணுதான்” என்கிற ஆதிகாலத்துப்பாடல் அவளையே நினைத்து எழுதியது போல தோனும் அவளுக்கு. அதெல்லாம் ஒரு காலம்! அந்தக் காலம்!
இன்று? கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தில் இருக்கும் அந்த தழும்புகளைப் பார்த்தாள் சகுந்தலா. இப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் அவள் நிற்கும் நேரம் மிக மிகக் குறைவு! அவளுக்குப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. ஆனால் புதிதாக அவளைப் பார்ப்பவர்கள்தான் ஒரு பரிதாபப்பார்வை பார்த்து அவளை கஷ்டப்படுத்துவார்கள். அவள் முகத்தில் உள்ள தழும்புகளை ஞாபகப்படுத்தி, அவள் முகம் விஹாரமாக இருப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தி அவளை அழவைப்பார்கள்! தன் மேல் அனுதாபம்தான் படுகிறார்கள் என்று அவளுக்குப்புரிந்தாலும் அவளுக்கு அந்தப் பரிதாபப்பார்வை பிடிக்காது!
இவள் 3 ம் வருடம் படிக்கும்போது அந்த எக்ஸ்பரிமெண்ட் பண்ணும்போதுதான் அந்த விபத்து நடந்தது. “லிக்விட் அம்மோனியா” வை ஒரு கண்ணாடிக்குடுவையில் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய வேலை செய்யும் “ஹூட்” ல வைக்கும்போது, இவள் அந்த “மெட்டல் ஸ்டாண்ட்” ல் சரியாக அந்தக்குடுவையை “க்ளாம்ப்” பண்ணாததால், அது நழுவி, கிழே உள்ள இரும்புப்பகுதியில் பட்டு உடைந்து, அம்மோனியா அவள் மேல் தெறித்தது! தெறித்து அவள் முகத்திலும் உடலிலும்கூட பட்டது. நல்லவேளை “சேஃப்டி கண்ணாடி” போட்டிருந்ததால் கண்கள் மட்டும் தப்பியது! ஆனால் அவள் முகம் மற்றும் உடலெல்லாம் பட்டுவிட்டது. உடலெல்லாம் எரிந்தது! எப்படிக் கதறினாள்!
அந்த வலியெல்லாம் சில வாரங்களில் போய்விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இந்த வடுக்கள்? அதுபோல் ஒரு பயங்கர விபத்து இதுவரை அந்த ஆய்வகத்தில் எந்தப் பெண்ணுக்குமே, ஏன் ஆண்களுக்குக்கூட நடந்ததில்லையாம். அன்றிலிருந்துதான் அவளுக்கு “அழகான பொண்ணு நான்” பாட்டை கேட்டாலே பிடிக்காமல் போனது. தத்துவப்பாடல்கள் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது, அதில் உள்ள அர்த்தங்கள் எல்லாம புரிய ஆரம்பித்தது. அழகு நிரந்தரமானதில்லை என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு பயங்கரமான பாடமா அவள் கற்க வேண்டும்? பிறவியிலேயே அழகில்லாமல் பிறந்தால்கூட பரவாயில்லை. என்னைப்போல் பாதியில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மிகவும் பரிதாபம் என்று நினைப்பாள் சகுந்தலா.
“எல்லாம் இறைவன் செயல்” என்று சிலர் பேசும்போது எரிச்சலாக வரும் அவளுக்கு. யார் இந்த இறைவன்? மனிதர்களின் வாழ்க்கையில் விளையாட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது? இறைவன் ஒரு கொடூரப்புத்தி உள்ளவன் போலும்! இல்லையென்றால் என் முகத்தை ஏன் இப்படி சிதைக்க வேண்டும்? உலகத்தில் யார் எதை சாதித்தாலும் அது இந்த இறைவன் சாதனையாம்! யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது அவர் விளையாட்டாம்! இல்லை இல்லை அது அவர்கள் முன்பு செய்த பாவத்தின் விளைவாம்! வேடிக்கையான மனிதர்கள்!
“நான் இந்தப்பிறவியில் யாருக்கு என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டால். அது என்னுடைய “கர்மா” வாம்! நான் இந்தப்பிறவியில் அனுபவிப்பது, போன பிறவியில் செய்த பாவமாம்! சரி அப்படியே பார்த்தாலும் “என்னுடைய முதல் பிறவியில் யாருடைய “கர்மா” வால் நன்மை தீமை அனுபவிக்கிறேன்?” என்பதை யாராவது சொல்ல முடியுமா? “கர்மா” என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும் இப்படி எல்லாம் யோசித்தால்! பக்திமான்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லத் தெரிந்த கேள்விதான் கேட்கனும்! இல்லை என்றால் என் கேள்வி விதண்டாவாதமாகிவிடும்! மேலும் இப்படியெல்லாம் கேட்டால் கடவுளுக்குப் பிடிக்காது! எனக்கும்தான் இப்படி ஒரு விபத்து நடந்தது பிடிக்கவில்லை! எனக்குப்பிடித்ததை செய்யாத கடவுளுக்கு நான் ஏன் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்யனும்?
“உனக்கு ஃபோன் கால், சகுந்தலா!” என்றாள் தோழி.
ஹாஸ்டலில் உள்ள “லேண்ட் லைன்” க்கு போய் ரிசீவரை எடுத்தாள்.
“விசா கிடைத்துவிட்டதா, சகுந்தலா! கண்க்ராட்ஸ்” என்றான் அவள் நண்பன் குமார் இன்னொரு அமெரிக்க முனையிலிருந்து!
“ஆமா, குமார்! நாளைக்கு ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு, திருச்சிக்குபோய் எல்லோரிடமும் பை சொல்லிவிட்டு பறந்து வரவேண்டியதுதான் உங்களிடம் என்றாள் மகிழ்ச்சியுடன்!
“சரி, ஃப்ளைட் ஸ்கெட்யுள் எனக்கு இ-மெயில் பண்ணு! உன்னை விஷ் பண்னத்தான் கூப்பிட்டேன், பை” என்றான் குமார்.
“பை, குமார்!” என்று சொல்லிவிட்டு ஹேங் அப் பண்ணினாள்.
இவள் #1 அழகியாக இருக்கும்போது இவளை சட்டை செய்யாத குமார், அந்த விபத்துக்குப்பிறகு, இவள் மேல் எவ்வளவு அன்பு! என்ன பரிவு! மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்! இவர்களை வணங்கலாம், ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு என்று நினைத்துக்கொண்டு இரவு உணவுக்காக ஹாஸ்டலில் இருந்து மெஸ் க்கு புறப்பட்டு சென்றாள், சகுந்தலா!