பார்ப்பதற்கு சரஸ்வதி சிறுவயதில் இருந்தது போலவேதான் இருந்தாள் வசந்தி. கண் மூக்கு, காது, நிறம், ஏன் உடல்வாகுகூட அப்படியே சிறுவயதில் சரஸ்வதி இருந்ததுபோல்தான் இருந்தது. ஆனால் வசந்தியின் வெண்மையான பல்வரிசை மட்டும்..
அவள் புன்னகைக்கும்போது எவ்வளவு அழகா இருக்கிறாள்! வசந்தியின் பல்வரிசை தன் பல்வரிசைபோல் தாறுமாறாக இல்லாமல் எவ்வளவு வரிசையா இருக்கு! என்று வியந்தாள். தன் பேத்திக்கா இவ்வளவு அழகான பல்வரிசை! என்று சரஸ்வதியால் நம்பவே முடியவில்லை!
தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சரஸ்வதி வாழ்நாளில் சிரிக்ககூட பயப்படுவாள். வாயை பொத்திக் கொண்டுதான் சிரிப்பாள். அவளுக்கு 50 வயதாகும்வரை யாராவது ஃபோட்டோ எடுத்தால்கூட ஒதுங்கி ஓடிவிடுவாள். அவ்வளவு விஹாரமாக இருந்தது அவள் பல்வரிசை. தன் பல்வரிசைமட்டும் நல்லா இருந்தால் எவ்வளவு அழகா நான் இருந்து இருப்பேன் என்று சரஸ்வதி வாழ்நாளில் ஏங்காமல் இருந்த நாளே இல்லை. சமீபத்தில் பார்த்த படையப்பா படத்தில் வரும் அந்த பாடல் வரி (முகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை) எவ்வளவு சரியாக உள்ளது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்வாள். இப்போது அவளுக்கு பல்லெல்லாம் போய் 78 வயதாகிவிட்டது. பல்லெல்லாம் போய்விட்டதால் அந்த பிரச்சினை இல்லை!
சரஸ்வதி அன்று மகனுடன் கோவிலுக்கு போகும்போது மருமகள் சாந்தி, மற்றும் பேத்தி வசந்தி யாரும் இல்லாமல் அவனிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் மகன் ராஜேந்திரனுடன் நடந்து எங்கே போனாலும் அவளுக்கு பெருமையாக இருக்கும். அதுதான் அவளுக்கு சொர்க்கம்!
சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் மணல் பகுதியில் அம்மாவும் மகனும் அமர்ந்தார்கள்.
“உன் பேத்தி அபப்டியே உன்னை மாதிரியேதான் இருக்காம்மா” என்றான் மகன் ராஜேந்திரன் பெருமையாக.
“குணம் சரிதான்டா. ஆனால் பார்க்க அவள் என்னை மாதிரி இல்லைடா! அவள் பேரழகியா இருக்காள் என் பேத்தி. என்னை மாதிரியா இருக்காள்?” என்றாள் பெருமையாக.
“இல்லம்மா அவள் உன்னை மாதிரியே டபுள் ஆக்ட்டாக இருந்தாள்” இங்கே பாரு அவளுடைய பழைய படங்கள் எல்லாம்” என்று தன்னிடம் இருந்த ஒரு சின்ன ஆல்பத்தை காட்டினான்.
சரஸ்வதியால் நம்பவே முடியலை!! 4 வருடம் முன்னால் எடுத்த படத்தில் அவள் பேத்தியின் முகம் தான் சிறுபிள்ளையாக 13 வயதில் இருந்தது போலவே இருந்தது. முக்கியமாக அவள் பல்வரிசை!
“எப்படிடா இப்போ முகம் வேற மாதிரி இவ்வளவு அழகா இருக்கு?” என்றாள் அம்மா புரியாமல்.
“நீ பிறந்து வளர்ந்த காலத்தில் “ஆர்தோடாண்டிக்ஸ்” என்கிற பல் வைத்தியம் எல்லாம் இந்தியாவில் இல்லை அம்மா. அதனால் உனக்கு உன் ப்லவரிசையை சரிசெய்யும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வசந்திக்கு உனக்குப் போலவே இருந்த பல்வரிசையைத்தான் “ஆர்த்தோடாண்டிக்ஸ்” பல் வைத்தியம் செய்து சரி செய்தோம்” என்று விளக்கினான்
“எப்படிடா? அம்மாவுக்கு புரியவே இல்லை. அதெப்படி இப்படி அழகா மாற்றமுடியும்?” என்றாள் சரஸ்வதி ஆச்சர்யமாக.
“அமெரிக்காவில் பொதுவாக எல்லோருக்கும் பல்வரிசை சரியாக இருக்கும் என்பதை பார்த்து இருக்கியா அம்மா?”
“ஆமாடா வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் சரியாக அழகா பல்வரிசை இருக்கும், பார்த்து இருக்கேன் அங்கே வசந்தி பிறந்த போது வந்தபோது மற்றும் டி வி யில் பார்க்கும்போது. அவங்க வெள்ளைக்காரங்க இல்லையா? அவங்களுக்கு ஏன்டா நமக்கு மாதிரி பல்வரிசை வருது?”
“இல்லம்மா அவர்களிலும் பலருக்கும் உனக்கு, மற்றும் வசந்திக்கு போலதான் சிறுவயதில் இருந்து இருக்கும். ஆனால் அவர்கள் அதை சின்ன வயதிலேயே சரி செய்துவிடுவார்கள்.”
“எப்படிடா இப்படி மாற்ற முடியும்!!!”
“வசந்திக்கு பர்மனெண்ட் பற்கள் வந்தவுடன், மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் நாலு பற்களை ஆப்பரேஷன் செய்து முதலில் எடுத்துவிட்டார்கள்! அப்புறம், பலவிதமா ப்ரேஸஸ் (உலோக கம்பிகள் வைத்து) அழுத்தி அந்த இடைவெளியை சரி செய்தார்கள். ஒரு நாளில் ஒரு மாதத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது! இரண்டு வருடம் வைத்தியம் செய்து அவள் பல்வரிசையை சரி செய்தார்கள்”
“நெஜம்மாவாடா! இப்படியெல்லாம் செய்யமுடியுமா!”
“நீயும் அமெரிக்காவில், ஏன் இந்தியாவில்கூட இப்போ பிறந்து இருந்தால் உன் புன்னகையையும் அழகா ஆக்கியிருக்கலாம்மா” என்றான் ராஜேந்திரன்.
“நான் அதைப்பற்றி இப்போ கவலைப்படலைடா, ராஜா. என் அழகான பேத்தியை பார்க்கும்போது என்னை சரிசெய்து பார்ப்பது போலதான் இருக்குடா அம்மாவுக்கு” என்றாள் சரஸ்வதி குரல் தளுதளுக்க.
“இப்போ எல்லாம் விதியை மதியால் வெல்லலாம் அம்மா! விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது.” என்றான் ராஜேந்திரன்.
--------------------
இதுவும் மீள்பதிவே!
தலைப்பு பெயர் மட்டும் மாற்றிவிட்டேன்:
விதியை மதியால் வெல்லலாம் அம்மா!
2 comments:
உங்களின் பல்லழகியின் பேரழகில் நானும் மயங்கி விட்டேன் !
வாங்க, பகவான் ஜி :) கதையில் சீரியஸான மெசேஜ் இருந்ததால், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணத்தான் இந்தப் படம். :)
Post a Comment