பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8
எனக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் டிலோரிஸ் எப்படி இருக்கிறார் என்பதைப்பற்றியும், அப்புறம் என்னுடைய குடும்பம் என்ன ஆனது என்பதைப்பற்றியும் கவலையுடன் விசாரித்திருந்தார்கள், நன்றி :). இதென்ன தேவதைக்கதையா, "And they lived happily ever after" என்று எழுத? In real life, no body lives happily ever after! காலப்போக்கில் சில காயங்கள் ஆறின, அதுமட்டும் உண்மை.
அந்த பயங்கரச்சம்பவம் நடந்த பிறகு அப்பாவை பல நாட்கள் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை விரைவிலேயே அவரும் புரிந்துக்க்கொண்டார், அதற்குப் பிறகு ஏதோ நடமாடும் பிணம் போல தான் அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே இருந்தது, அப்பா மட்டுமல்ல, அம்மாவும் அப்படித்தான் மாறிப்போனார். ஏதோ கடனே என்று இருவரும் வேலைக்கு போனார்கள், ஷாப்பிங் பண்ணினார்கள், சமைத்தார்கள், சாப்பிட்டார்கள். அப்பா வேலையில் இருந்து வந்தவுடன் பழைய மாதிரி நான் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்வதில்லை. வீட்டுக்கு வரும்போதே இன்றாவது நானோ அல்லது அம்மாவோ பேசுவோமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நுழைவார். அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.
வெளியில் வீம்புக்காக கோபமாக நடித்தேனே தவிர, மனதுக்குள் அப்பாவுடன் பேசாமல் இருப்பது எனக்கு கொடுமையாக இருந்தது. பல முறை மறந்துவிட்டு பேசிவிட நினைத்து கடைசி நிமிடத்தில் நினைவு வந்தவளாக நிறுத்தி இருக்கிறேன். இங்கே என்னுடைய பிரச்சினை அம்மா தான், அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய உறுதியை ஒரு 1 மாதக்காலம் கடைப்பிடித்துக்கொண்டு தான் இருந்தேன், ஒரு சனிக்கிழமை காலை எல்லா உறுதியும் தவிடுப்பொடியானது!
நானும், அப்பாவும் மட்டும் சனிக்கிழமைகளில் ஷாப்பிங் போவது வழக்கமாக இருந்தது. 1 வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க என்னை மட்டும் தான் அழைத்துப்போவார். சனிக்கிழமை காலை என்றால் அது "அப்பா-மகள்" நேரம். அம்மாவுக்கு தெரியாமல் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவார்(சனிக்கிழமை, அம்மா தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார், தலை குளித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்குமாம்). ஒரு நாலு வாரங்களாக அப்பா தனியாக ஷாப்பிங் போய் வந்தார், அவருக்கு முன்னால் ரெடியாகி வெளியே ஓடும் நான், அவர் கடைக்கு போகும் நேரம் வந்தால் என் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொள்வேன். எனக்காக வெகு நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழி இல்லாமல் போவார். ஒரு சனிக்கிழமை என் அறைக்கே வந்து கதவைத்தட்டினார்.
கதவைத்திறந்த எனக்கு அப்பாவைப்பார்த்து ஒரு மாதிரியாகிப்போனது. ரொம்ப நாள் கழித்து அன்று தான் அப்பாவை ஏறெடுத்துப்பார்த்தேன். ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவர் 1 வாரமாக அழுது உருவாக்கிய கோபத்தை ஒரு நிமிடத்தில் உடைத்துவிட்டாரே, என்ற கோபம் அம்மாவுக்கு! சமையலறையில் நாலு பாத்திரத்தை கோபத்துடன் உருட்டினார். நான் அவரைத்திரும்பிக்கூடப்பார்க்காமல்(வேறென்ன, பயம் தான்) அப்பாவை பின் தொடர்ந்தேன். வெளிக்கதவை அடைக்குமுன் அம்மாவின் பார்வை என் முதுகில் சுட்டெரிப்பதை உணர்ந்தேன்.
திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார். அம்மா திட்டியது வலித்தாலும், என்னை கோபிக்கவாவது 'அப்பாவை நம்புவேன்' என்று அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவின் நேரத்தில் ஒரு ஜென்மம் = நம் நேரத்தில் ஒரு நாள். என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.