Sunday, October 12, 2008

உருப்புடாதது_அணிமா செய்துக்கொண்டிருக்கும் உருப்படியான காரியம்

ஏதோ என்னால் முடிந்தது இது தான்..நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..
இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..

- உருப்புடாதது_அணிமா


மேலிருக்கும் பின்னூட்டத்தை எனக்கு எழுதியவர் பதிவர் திரு.உருப்புடாதது_அணிமா. சக இந்தியர்கள்/தமிழர்களிடம்(எந்த நாட்டில் இருந்தாலும்) நான் 'இல்லையே' என வருந்துவது, அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மை. யாராவது எப்படியாவது போகட்டும், என்னுடைய வேலை கெடக்கூடாது என்று நினைக்கும் சுயநலம். பல சமுதாய அவலங்களுக்கும், சுகாதாரக்கேட்டுக்கும் இந்த பொறுப்பின்மையே காரணம் என்று நினைக்கிறேன்.

கோடைகாலத்தில் மின்வெட்டினால் அவதிப்படும் போது எப்போதாவது வரும் மெல்லிய தென்றல் போல அணிமா போன்ற மனிதர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். அணிமாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை! பாராட்டு வெறும் புகைப்பிடித்தலை விடுவதற்காக மட்டுமல்ல, சமுதாய அக்கறையுடன் செயல்படுவதற்கும் சேர்த்து. வாழ்த்துக்கள் அணிமா!

Wednesday, October 8, 2008

புகைப்பழக்கம் : ஒரு புகைப்பிடிக்காதவளின் கண்ணோட்டம்!

டிஸ்கி: எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதால், என்னுடைய கருத்துக்கள் ஒரு பக்க சார்புடையதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.



புகைக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒத்துவரவில்லை, எல்லாம் புகைப்பவர்கள் மேல் இருந்து வரும் அந்த பயங்கரமான வாடையே காரணம். என்னுடைய சிறு வயதில் அப்பாவுக்கு இந்த புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் வீட்டுக்குள் இல்லை. அவர் வேலையில் இருந்து வரும் போதே நான் ஓடிப்போய் வரவேற்பது வழக்கம், அப்போதெல்லாம் 'குப்'பென்ற நெடி எனக்கு வயிற்றை புரட்டும். அப்பா என் எதிரில் புகைப்பதில்லை என்பதால் அது என்னவென்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் போகப்போக அவர் புகைகிறார், அவர் மேலிருந்து வருவது சிகரெட் நாற்றம் என்பது புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு நாள் "நீங்கள் இனிமேல் சிகரெட் பிடித்தீர்கள் என்றால் இனிமேல் உங்க மடியில் அல்லது பக்கத்தில் கூட உட்கார மாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட, அதோடு புகைப்பழக்கத்தை அடியோடு அவர் நிறுத்தி 20 வருடம் ஆகிறது.

அதற்கு பிறகு புகைப்பிடித்தலைப்பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, 'நாற்றம் பிடிக்கவில்லை' என்பதைத்தவிர புகைப்பழக்கத்தைப்பற்றி கம்ப்ளெயிண்ட் பண்ண எனக்கு வேறெதுவும் இல்லை. பின்னர் வளர்ந்த பிறகு ஒரு நாள் ஒரு அமரிக்க மருத்துவ வார இதழில், செக்கண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங் பற்றிய ஒரு கட்டுரையைப்படித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. "நாம் புகைப்பிடிக்கவில்லை என்றால் கூட நமக்கு ஆபத்தா?" வியப்பாக இருந்தது. மேலும் சில புத்தகங்களை படித்ததில் அதிர்ச்சி ரக தகவல்கள்!

ஆதி கால மனிதர்களுக்கு தற்செயலாக புகையிலைச்செடிகளைப்பற்றிய விவரம் தெரியவந்தது. செடியில் பச்சையாக இருப்பதை விட, காய வைத்து எரிக்கும் போது நிக்கோட்டின் தரும் போதை பல மடங்கு அதிகரிப்பதை கண்டுபிடித்தார்கள். நாகரீகம் அடைந்தவுடன் பைப் வழியாக புகைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.அப்படி பரவியது புகையிலை மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதை செடிகளும் தான். மற்ற போதை பொருட்களுக்கும் புகையிலைக்கும் ஒரு அடிப்படை வித்யாசம் என்னவென்றால், மற்ற போதைப்பொருட்கள் போல செயல் திறனை புகையிலை வெளிப்படையாக பாதிக்கவில்லை.

இது போதாதா? புகைக்கும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் தற்போது கிடைக்கும் மார்டன் சிகரெட்டுகள் கிடைக்கத்தொடங்கியதும், காட்டுத்தீ போல இந்த புகைப்பழக்கம் பரவத்தொடங்கியது. ஐரோப்பியர்களிடம், சீனர்களிடமும் இன்றளவும் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. "பெண்கள் புகைத்தால் உடல் இளைக்கலாம்" என்ற புரளியை சிகரெட் கம்பனிகள் கிளப்பிவிட்டு விட, பெண்களையும் இந்த தீயப்பழக்கம் தொற்றிக்கொண்டது."வெர்ஜினியா ஸ்லிம்ஸ்" போன்ற பெண்களுக்கான சிகரெட்டுகள் 1960துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும் கூட சில சிகரெட் விளம்பரங்களில் ஒரு அழகான பெண் மாடல் ஸ்டைலாக புகைபிடிப்பது போல இருக்கும் படத்தை சிலர் பார்த்திருக்கலாம். புகைக்கும் பெண்கள் செக்ஸியாக கருத்தப்பட்டார்கள். புகைப்பழக்கத்துக்கு செக்ஸ் மற்றும் ஸ்டைல் வர்ணம் பூசப்பட்டது. சிகரெட் கம்பனிகள் பணத்தில் பல்விளக்கி, பணத்திலேயே குளித்தார்கள். இந்தியாவில் திரைப்பட நடிகர் நடிகைகள், மக்களிடையே புகைப்பழக்கத்தை ஸ்டைலாக பரப்பி புண்ணியம் தேடிக்கொண்டார்கள். முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நடிகர் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது 80களில் ரொம்ப பாப்புலராக இருந்த ஸ்டைல்.

சிகரெட் கம்பனிகள் அடிவாங்கத்துவங்கியது, கடந்த 30 வருடங்களில் தான். நுரையீரல் புற்று நோய் மற்றும் இதயநோய்களுக்கும் புகைப்பழக்கத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளிலும் சிகரெட் விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டிகள் ஏதாவது ஒரு ஹெல்த் வார்னிங்கோடு மட்டுமே வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சிகரெட் பெட்டிகளின் மேல் இந்த எச்சரிக்கை செய்திகளை பார்த்தும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களை என்ன சொல்லி நொந்துக்கொள்வது? நுரையீரல் புற்றுநோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் புகைப்பிடிப்பவர்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் புகைப்பிடித்தல் சம்மந்தமான நோய்களில் இறக்கிறார்களாம்.

இறந்துவிடுவது எத்தனையோ மேல், ஆனால் புகைப்பிடிப்பவர்கள் உயிரோடு இருக்கும் போதே சித்திரவதை அனுபவிக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் உடலுக்குள் போகும் நச்சுப்பொருட்கள், தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உடலுறுப்புகளை பாதித்து, "புகைப்பிடிப்பவர்களின் இருமல்(Smoker's cough)" வந்து அவதிப்படுகிறார்கள். மேலும் பசியின்மை, உணவின் சுவை தெரியாமல் போகுதல், கைகால் மரத்துப்போதல் மற்றும் சில்லிடுதல், தோல் மற்றும் பற்களின் நிறம் மாறுதல், ஆண்மைக்குறைவு போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மலட்டுத்தன்மை, பிரசவத்தில் பல சிக்கல்கள், எடை குறைவான குழந்தைகள் போன்ற பல பிரச்சினைகள் பெண்களை தாக்குகின்றன.

இத்தனை பிரச்சினைகள் வந்தும் இவர்கள் மட்டும் புகைப்பிடித்து அழிந்துப்போவதோடு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அழிப்பதே இங்கே முக்கியமான பிரச்சினை. புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் நச்சுப்புகையினால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் 30% சதம் வரையிலும் அதிகரிக்கிறதாம். முக்கியமாக இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறிந்துதான் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பலர் வீட்டில் புகைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது ஆனால் ஊர் மக்கள் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்று நினைப்பது என்ன லாஜிக்?

அமரிக்காவில் சில மாநிலங்களில் பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்படவில்லை என்றாலும், நிறைய பேர் புகைக்க மாட்டார்கள். அப்படி புகைத்தே தீர வேண்டும் என்ற அடிக்ஷன் இருப்பவர்களுக்கு தனியாக புகைக்கும் ஏரியாக்கள் உண்டு. மேலும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் ஒருவர் புகைக்கும் போது நமக்கு ஆகவில்லை என்றால் எங்கேயாவது தூர ஓடி தப்பித்துவிடலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் மக்களுக்கு நகர இடமில்லை, ஏற்கெனெவே வாகனப்புகையால் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இதில் புகைப்பிடிப்பவர்களின் நியூசன்ஸ் வேறு!

பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்வது தனிநபர் சுதந்திர அத்துமீறலாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. உங்களுடைய தனி மனித சுதந்திரம் மற்றவர்களை எப்போது பாதிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே அத்துமீறலாகிவிடுகிறது. "Your freedom ends where my nose starts" என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாகனப்புகையையும், சிகரெட் புகையையும் ஒப்பிடுவது சரி இல்லை, ஏனென்றால் சிகரெட் புகை வாகனப்புகையை விட கேடு விளைவிக்க கூடியது. வாகனங்களாவது போக்குவரத்துக்கு பயன்படுகிறது, சிகரெட் புகைப்பதால் யாருக்கு என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒருவரைப்பார்த்து, "ஏன் திருடுகிறாய், அது சட்டப்படி குற்றம்" என்றால் உடனே அவர் "பக்கத்தில் இருப்பவர்கள் கொலையே செய்யும் போது நான் திருடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அத்தனை அபத்தமானது.

இந்த கட்டுரையின் நோக்கம், புகைப்பிடிப்பவர்களை திட்டவோ அல்லது அவமானப்படுத்தவோ அல்ல. பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருக்கும் சட்டத்தை எதிர்த்து புலம்புவதை விட, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இந்த தீய பழக்கத்தை அடியோடு விட்டுவிடலாமே? மேலும் சிகரெட் புகைக்காததால் பணமும் மிச்சமாகும். சிகரெட் கம்பனிகள் மேல் விதிக்கப்படும் அதிகபட்ச வரிகளை எங்கே இருந்து திரும்ப எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? புகைப்பிடிக்கும் உங்களிடமிருந்து தான்!

பணத்தை விடுங்கள், உடல் நலம் ரொம்ப முக்கியம். புகைப்பதை விட்ட ஒரு வாரத்தில் உடல் நிலை வியப்படைய வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறதாம். மூச்சு விடுவது சுலபமாவதில் ஆரம்பித்து, தோலின் நிறம் சீரடைவது, சுவை மீண்டும் உணர ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங்களை உடனடியாக உணர முடியும். புகைப்பிடித்தால் வரும் பின்விளைவுகளும்(withdrawal effects) 10 நாட்களுக்குள் மறைந்துவிடுவதாக தெரிவிக்கிறார்கள். நீண்டகால முன்னேற்றமாக, புகைப்பதை விட்ட அடுத்த ஐந்து வருடத்தில் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள், இதய நோய்கள் போன்ற பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காகவாவது இந்த பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

Monday, October 6, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 7

சற்று இடைவெளி விட்டு எழுதுவதால் மற்ற இணைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்:
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய நல்ல நண்பருக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை பிடிக்கவில்லை என்று அறிந்துக்கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை, ஒரு விதமான வெறுப்பு!. அவருடைய கோபத்தைப்பார்த்து அந்த எழுத்தாளர் அப்படி என்னத்தான் எழுதுகிறார் என்று பார்க்கும் ஆவல் வந்தது. அவருடைய வலைதளத்தை படித்துப்பார்த்ததில், அவருக்கு வயது குறைவான பெண்களின் மேல் ஆர்வம்(அதில் என்ன பெருமையோ??) அதிகம் போல இருந்தது. 17 வயதில் எல்லாம் கேர்ள் ப்ரெண்ட் வைத்திருக்கிறாராம்(18 வயதுக்கு கீழான பெண்களிடம் பெற்றோர் சம்மதமில்லாத உறவு வைத்திருப்பது தவறில்லையா?).

சரி இந்தியாவில் வயது வரம்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் அப்படித்தான். ஒரு முறை அதைப்பற்றி ஆராய்ச்சி பண்ணியதில், வயது குறைவான பெண்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இனப்பெருக்கத்தின் ஆபத்தான எல்லையில், விளிம்பில் நிற்கும் நடுத்தர வயது ஆண்களுக்கு வயது குறைவான பெண்களைப்பிடிக்கிறதாம். சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species.

நண்பருக்கு இருப்பது மாதிரி அந்த எழுத்தாளர் மீது வெறுப்பெல்லாம் வரவில்லை, ஆனால் ஒரு முக்கியமான கேள்வி மனதை பிசைந்தது. வாரிசு தேவை என்றால் பரவாயில்லை, இந்தக்காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தால் யாருக்குமே அதிகப்படியான வாரிசு தேவை இல்லாதபோது, சம வயது பெண்களை ஏன் காதலிக்க கூடாது? அவர்கள் அழகில்லையா? இப்படியே நடுத்தர வயது பெண்களும் இளவயது ஆண்களை நாடத்துவங்கினால் என்னாவது? பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அழகு என்பது எண்ணத்தில் மற்றும் செயலில் இருக்கிறது, உடலில் அல்ல.

இந்த கருத்தை எழுத ஒரு முக்கியக்காரணம், எழுத்தாளரின் சில கட்டுரைகள்(கதைகள்) என்னை மீண்டும் யூனிவர்ச்சிட்டி வகுப்பறையில் கொண்டு வந்து நிறுத்தியது. அந்தக் குறிப்பிட்ட பேராசிரியருக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும். அவர் வகுப்புக்கே போக வெறுப்பாக இருக்கும்! கம்ப்யூட்டர் லாப்பில் நடக்கும் வகுப்பு என்பதால், சந்தேகம் சொல்லிக்கொடுக்கிறேன் பேர்விழி என்று அளவுக்கு அதிகமாக உரசுவார். "நீங்க வேண்டுமானால் உட்கார்ந்து சொல்லிகொடுங்கள், நான் எழுந்து நிற்கிறேன்" என்றால் அதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டார், நான் உட்கார வேண்டும் அவர் என்னை உரசியப்படி நின்றுக்கொண்டே சொல்லித்தர வேண்டும், இல்லை என்றால் அவருக்கு உயிரே போய்விடும்!. மற்ற பெண்களிடமும் இதே மாதிரி சில்மிஷம் செய்தாலும், அவருக்கு இந்தியப்பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போல, நான் பயந்துக்கொண்டு சந்தேகமே கேட்காமல் இருந்தாலும் அவர் 15 நிமிடமாவது எனக்கு சொல்லித்தராமல்(உரசாமல்) இருந்ததில்லை.

இந்தியாவில், பஸ் கூட்டத்தில் இது போன்ற பொறுக்கிகள் தொல்லைப்படுத்திய அனுபவம் இருந்தாலும், ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியரிடம் இருந்து இத்தகைய பொறுக்கித்தனத்தை(மன்னிக்கவும், இந்த கேவலமான செயலை குறிப்பிடுவதற்கு வேறெந்த வார்த்தையும் எனக்கு தெரியவில்லை) நான் எதிர்ப்பார்க்கவில்லை, உடலெல்லாம் பற்றி எரிவது போல அருவருப்பாக இருக்கும். நீங்கள் பெண்ணாக இல்லாத பட்சத்தில் இதை அனுபவப்பூர்வமாக உணர முடியாது என்று நினைக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி, பெண்களுக்கும் காமம் பிடிக்கும் என்றாலும், அது இயல்பாக ஒரு பூ மலருவது போல மனதுக்கு பிடித்திருந்தால் தான் இனிக்கும். இப்படி வற்புறுத்தலாலும், கட்டாயத்தாலும் காமம் வரவே வராது! மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் கணவன் - மனைவி உறவாக இருந்தால் கூட பெண்கள் வெறுத்துவிடுவார்கள். இதை தான் கற்பு என்று குறிப்பிட்டார்களா என்று தெரியாது, ஆனால் எனக்கு அப்படி அழைக்க பிடிப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு preference or personal choice.

செமஸ்டர் முடிய 2 மாதங்களே இருக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆசிரியர் டெஸ்பெரேடாக துவங்கினார். உரசல்கள் எல்லை மீறல்களாக மாறத்துவங்கியது, சக மாணவர்களின் நமட்டுச்சிரிப்பு வேறு! ஒரு மாணவர் வேண்டுமென்றே தன் நண்பரிடம் என் காதில் விழுவது மாதிரி கிண்டலடிக்க துவங்கினார். "ஏதுவுமே படிக்கவில்லை என்றாலும் பாடத்தில் 'A' வாங்குவது எப்படி என்பதை இந்த வகுப்பில் இருந்து தெரிந்துக்கொண்டேன், துரதிஷ்டவசமாக நம்மிடம் சில 'உறுப்புகள்' இல்லை என்பதால் அந்த ஐடியாக்களை செயல்படுத்த முடியாது"

ரொம்ப வருத்தமாக இருந்தது, எவனோ ஏதோ உளறினான் என்பதற்காக மட்டுமில்லை, நிஜமாகவே கஷ்டப்பட்டு இரவும் பகலும் படிக்கும் என்னை ரொம்ப அவமானப்படுத்துவது போல இருந்தது. அடுத்த முறை வகுப்பில் திரும்பவும் அதே ஆசிரியர், அதே வரம்பு மீறல். இந்த முறை வழக்கம் போல அமைதியாக இருக்கவில்லை, மெதுவான ஆனால் உறுதியான குரலில் "கொஞ்சம் என் உடலில் இருந்து கையை எடுக்கறீர்களா, ப்ளீஸ்?" வகுப்பறையில் கனத்த மெளனம், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் முகம் வெளிறியது, வெள்ளைக்காரர் என்பதால் முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. தடுமாற்றத்துடன், "என்ன சொல்கிறாய் நீ?" என்றார். நான் திரும்பவும் நிதானமாக, அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து, "என் உடலில் இருந்து கையை எடுக்கிறீர்களா என்றேன்"

அன்று மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு. அதற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பேராசிரியர் என்னிடம் வம்பு பண்ணவில்லை, தூரத்தில் இருந்தே உக்கிரமாக முறைப்பார். அவர் முறைத்தலை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை, நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை. செம்ஸ்டர் முடிவில் என்னுடைய Final project-டுக்கு 'B' கொடுத்திருந்தார். அந்த வகுப்பு ஒரு Easy 'A' வகுப்பு, அதாவது சுலபமாக நல்ல மதிப்பெண்கள் வாங்கக்கூடிய வகுப்பு(அந்த பாடத்தை முக்கியமாக தேர்வு செய்த காரணமே அது தான்). ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றுபவரை கேள்வி கேட்பது கடினம், நிச்சயமாக எனக்கு குறைவான மதிப்பெண் கொடுத்ததற்கான காரணத்தை அவரால் சுலபமாக ஜோடிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை, எனக்கு புது நம்பிக்கையும், தைரியமும் பிறந்தது. "எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்னம்பிக்கை. அந்த உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!

- நினைவுகள் தொடரும்