Thursday, April 16, 2009

சாவுகிராக்கி!

அந்த மெடிக்கல் ஷாப்க்கு மூர்த்தி போகும்போது மணி ஈவெனிங் 6:30 இருக்கும். தன் பைக்கை முன்னால் நிறுத்திவிட்டு, அந்த கடைக்குச் செல்லும்போது அங்கே ஒரே பழைய சேலைகட்டிய ஒரு அம்மா தன் பிள்ளையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு சீட்டை அந்த கடைக்காரனிடம் கொடுத்தாள். அந்த அம்மா வாங்கி போகட்டும் என்று அமைதியாக நின்றான்,மூர்த்தி.

கடைக்காரனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் அவனுக்கு புரிந்தது இதுதான். அந்த காகிதத்தில் உள்ள “ப்ரிஸ்க்ரிப்ஷன்”க்கு தேவையான பணம் ரூ 800. ஆனால் தமிழ் தெரியாத அந்த கடை முதலாளியிடம் அவள் கொடுத்த பணமோ ரூ 200. காய்கறி கடையில் பேரம் பேசுவதுபோல், “இந்தப்பணத்திற்கு கொடுங்க” “என்னிடம் வேறபணம் இல்லை” என்று தமிழிலேயே பேசுகிறாள் அந்த கடைக்காரனிடம்.

அவளைப்பார்த்தால் ஏதோ சித்தாள் வேலை, அல்லது கூலிவேலை பார்க்கும் தமிழ் பேசும் ஏழைத்தாய் என்று தெளிவாக தெரிந்தது. "அந்த சீட்டில் என்ன எழுதி இருக்கிறது?", "அதற்கு எவ்வளவு காசு ஆகும்?" என்று அவளுக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை. கணவன் இருக்கிறானோ இல்லை இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கானோ தெரியவில்லை. பெங்களூரில் போய் உழைத்து பிழைக்க சென்ற ஏழைத்தமிழச்சிகளில் அவளும் ஒருத்தி.

கடைக்காரன் ஒரு வட மாநிலத்தவனோ, அல்லது கன்னடிகாவோ தெரியவில்லை, பார்த்தால் தமிழனாகத் தெரியவில்லை. இந்த அம்மாவை என்ன செய்வது, அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் முழிக்கிறான். அவனுக்கு என்னவோ அவளைப்பார்த்தாலே எரிச்சலும் கோபமும்தான் வருகிறது. அவன் பாஷையில் இதெல்லாமவனுக்கு “சாவுகிராக்கி”!

கடைக்கு வந்து காத்திருக்கும் மூர்த்திக்கு மறுபடியும் ஒரு வரவேற்பு புன்னகை இட்டுவிட்டு, அந்த அம்மாவை விரட்டுகிறான் அவன். இந்தக்காசுக்கு அந்த மருந்தை கொடுக்க முடியாது என்று அரைகுறைத்தமிழில்.

இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, அந்த தமிழ் அம்மாவிடம் “என்ன சீட் இங்கே தாங்க பார்ப்போம்?” என்றான்.

தமிழில் பேசியதும், உடனே அதை அவனிடம் கொடுத்தாள். அது ஒரு டாக்டர் எழுதிக்கொடுத்த "ப்ரிஸ்க்ரிப்ஷன்" என்று விளங்கியது.

“டாக்டர் இந்த மருந்து சாப்பிடனும்னு சொல்றார்” என்றாள் அவள் தமிழில்.

கடைக்காரனும், அவன் நிலைமையை ஆங்கிலத்தில் மூர்த்தியிடம் சொன்னான். மூர்த்திக்கு நிலைமை புரிந்தது. அவளால் ரூ 800 இப்போ கொடுக்க முடியாது என்றும், இந்த 200 ரூபாயே எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரித்தாளோ என்று.

மூர்த்தி கடைக்காரனிடம் திரும்பி, “Please give that medicine and get the whatever money she gives you, I will pay you the rest” என்றான். அவனுக்கு கோயில் உண்டியலில் எல்லாம் பணம் போடும் பழக்கமில்லை. பிச்சைக்காரகளுக்கும் பணம் கொடுக்கும் வழக்கமும் இல்லை.

மூர்த்தி சொன்னதும், கடைக்காரன், ஒரு வினாடி மூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தான். ஆனால் உடனே புன்னகையுடன் மறுபேச்சில்லாமல், அந்த மருத்து மாத்திரைகளை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டான். அவளுக்கு மூர்த்தி என்ன சொன்னான் என்று கூட சரியாகப்புரியவில்லை. மருந்தை வாங்கிக்கொண்டு நன்றியுடன் அவள் புறப்பட்டாள். அவள் முகத்தில் ஏற்பட்ட “சிறிய மகிழ்ச்சி” இன்றும் மூர்த்தியால் மறக்கமுடியாது.

மூர்த்தி, அவன் வாங்க வந்த மருந்துகளை வாங்கிவிட்டு, அந்த 600 வையும் சேர்த்து கொடுத்துவிட்டு நகர்ந்தான். அவனுக்கு அந்த ரூ600 ஒண்ணுமே இல்லாத சாதாரண ஒரு பணம். இதுபோல் சிறு உதவியை மனிதாபிமானம் என்று நம்பினான். ஆனால் அந்த ஏழைத்தாய்க்கு? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வது இவள் போல் ஏழைகளுக்குத்தான் நன்றாகப் பொருந்தும் என்று நினைத்துக்கொண்டான். மூர்த்திக்கு கடைக்காரன்மேல் தவறாக எதுவும் தோனவில்லை. அவன் ஒரு வியாபாரி. பரோபகாரி இல்லை. ஏழைகளை பார்த்து பார்த்து “டயர்டாகி” விட்டானோ என்னவோ பாவம் என்று நினைத்தான் மூர்த்தி.

2 comments:

ஸ்வர்ணரேக்கா said...

நன்று...

வருண் said...

உங்கள் வருகைக்கும், "நன்று..." க்கும் நன்றி, ஸ்வர்ணரேகா! :-)