Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Tuesday, January 6, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10



பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9.

எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது, ஒரு சில சமயம் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார்ளோ? என்று நான் நினைத்து சந்தோஷப்படும் அளவுக்கு ஏதாவது முன்னேற்றம் நிகழும். ஒன்று சொன்னால் எனக்கே நம்ப சிரமமாக இருக்கும், என்னுடைய பெற்றோர்களின் திருமணம் காதல் திருமணம்! 4 வருடங்கள் அம்மாவை ஒரு தலையாக(!) காதலித்து அப்பா திருமணம் செய்துக்கொண்டாராம். காதல் என்றால் வேறெதுவும் ரொமாண்ட்டிக்காக கற்பனை பண்ணிவிடாதீர்கள். அம்மாவுக்கு ஸ்கூல் முடிந்து வரும் போது பத்திரமாக வீடு வரை பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பு கொடுப்பது, டைப்பிங் க்ளாஸில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது- இப்படி தொடர்ந்து இலவச செக்யூரிட்டி சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார். இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொண்டதில்லையாம்(Do you hear a alarm going off in your head?)

இவர்களின் கல்யாணக்கதையைப்பற்றி பேசினால் மட்டும், இருவர் முகத்திலும் புன்சிரிப்பு அரும்புவதை பார்த்திருக்கிறேன். அப்பா,அம்மா பின்னால் சுற்றியதை நேரடியாக ஒப்புக்கொள்ளவே மாட்டார். அம்மா எங்களிடம் ஏதாவது கல்யாணக்கதை சொன்னால், "நம்பாதேமா, பாவம் ஏதோ கற்பனையில் மிதக்கிறாள்" என்றெல்லாம் இடையிடையே கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். எனக்கே ஒரு வேளை அம்மா ரொம்ப கற்பனை பண்ணுகிறாரோ? என்று சந்தேகாமாக கூட இருந்தது, ஒரு நாள் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) பழைய திருமண ஆல்பம் பார்க்கும் வரை.

சில படங்களில் ஓரமாக ஒல்லியான உருவத்துடனும், கட்டம் போட்ட சட்டை, பெல் பாட்டம் பேண்டுடன் அசடு வழிய சுப்ரமணியபுரம் ஹீரோ மாதிரி நிற்பது அப்பாவா? அப்பாவே தான்! அம்மாவின் அக்கா கல்யாணத்துக்கு, தானே வலிய வலிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்திருக்கிறார், எல்லாமே அம்மாவுக்காக! அதே புகைப்படங்களில், கொஞ்சம் தள்ளி பட்டுப்பாவாடை தாவணியுடனும், முகம் முழுக்க பெருமிதத்துடனும் தேவதைப்போல அம்மா நிற்கிறார். இருவர் முகத்திலும் எத்தனையோ எதிர்பார்ப்புகள், கனவுகள்! இங்கே யார் எதிர்ப்பார்ப்பை யார் நிறைவேற்றவில்லை, ஏன் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு இன்னும் புரியவில்லை. புகைப்பட ஆதாரத்துடன் அம்மா மடக்கியவுடன், அப்பாவுக்கு பேச்சே வராது. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை" என்று ஏதோ அவசரமான வேலை இருப்பது போல எழுந்து சென்றுவிடுவார்.

பெப்சி உமாவுக்குப்பிறகு வேறொரு பெண்ணும் அப்பாவின் கருத்தைக்கவர்ந்தார், வேறு யாரும் இல்லை, சிம்ரன்! ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார். அதற்குப்பிறகு எல்லாம் சிம்ரன் மயம். சிம்ரன் படம் என்றால் அது எத்தனை கேவலமான படமாக இருந்தாலும் குடும்பதோடு கிளம்பிவிடுவார். அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் வரும், “இவள் ஒரு அழகா? பல்லிக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரி” என்று திட்டிக்கொண்டே கிளம்புவார்.

“ஓவர் வெயிட்டாக இருப்பதால் அப்பாவுக்கு பிடிக்காமல் போய்விட்டதோ” என்ற சந்தேகம் அம்மாவுக்கு வந்துவிட, அதற்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடாமல் டயட் பண்ண துவங்கினார். இரண்டு நாள் பேசாமல் இருந்த அப்பா, மூன்றாவது நாள் “ஏன் அம்மா சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்க, நான் உடனே “சிம்ரன் மாதிரி இளைக்க டயட் பண்றாங்க” என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் க்ளாசிக்! “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு. அதில் இருந்து அம்மாவை கிண்டல் பண்ண “அம்மா” என்று அழைக்காமல், “சிம்ரன்” என்று கூப்பிடுவோம், காலப்போக்கில் அது “சிம்” என்று உருமாறியது. இங்கே கூட பல முறை “சிம்” என்று எழுதி விட்டு பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன்.

இப்படி ஒரு சில மணி நேரம் இரண்டு பேரும் பழைய ரொமாண்டிக் கனவுகளில் மூழ்குவார்கள், வீடு கொஞ்சம் கலகலப்படையும். ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிவிடும். இந்த உலகத்திலேயே ரொம்ப அசிங்கமான சண்டையாக நான் கருதுவது என்ன தெரியுமா? கணவன் –மனைவியிடையே நடக்கும் பொருளாதாரம் சம்மந்தமான சண்டைகள்! அப்பாவின் வரவு- செலவு கணக்குகளில் அம்மாவுக்கு ரொம்ப சந்தேகம். முக்கியமாக பொங்கல், தீபாவளி போனஸ் சமயங்களில் சண்டை ரொம்ப தீவிரமடையும்.

சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம். “அதென்ன ஆச்சு, இதென்ன ஆச்சு” என்று தொடர்ந்து அப்பாவை நச்சரிப்பார்(எனக்கு அப்போது அது நச்சரிப்பாக தோன்றியது). ஒரிரண்டு முறை பொறுமையாக பதில் சொல்லும் அப்பா, மூன்றாவது முறை பொறுமை இழப்பார். அவருக்கு கோபம் வந்தால் ரொம்ப அதிகமாக கோபம் வரும், அன்பும் அப்படியே. “ஆமாம் எல்லா பணத்தையும் தே---------- கொடுத்துட்டு வந்தேன், என்ன செய்யனுமோ செய்” என்று பதிலுக்கு இவர் கத்த, அப்புறம் ஒரே கூச்சல், சண்டை, அழுகை. இதுவே ஒரு தொடர்கதையாகப்போனது. அப்போது நான் முடிவு செய்தது தான், “அன்புக்குரியவர்களிடம் பணம் காரணமாக என்றுமே சண்டை போட மாட்டேன்” என்பது.

நான் கொஞ்சம் வளர்ந்து, வரவு செலவு கணக்குகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டவுடன், ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை. அம்மா எல்லாவற்றுக்கும் அழுது சண்டை போடுவாரே தவிர, என்னை மாதிரி ஆதாரம் எல்லாம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவி அவர். எல்லாவற்றுக்கும் ஒழுங்காக கணக்கு எழுதி வைக்கும் பழக்கமுடைய அப்பா, சில செலவு கணக்குகளை எழுதாமல் மறந்திருப்பார் என்பதை நான் நம்பவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடந்துக்கொண்டு இருக்கிறது. இதை வெளியே சொல்ல எனக்கு பைத்தியமா? அம்மாவிடம் இன்று வரை இதைப்பற்றி மூச்சுவிட்டதில்லை.

- நினைவுகள் தொடரும்