Friday, October 31, 2008

ரஜினி-கமல்!!! இது உண்மையா?!

கீழே உள்ள செய்தி உண்மையா என்று தெரியவில்லை!

-----------------------------------
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி-கமல், நடிகர்கள் 'பேசா' உண்ணாவிரதம்?

[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 10:02.05 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.
உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!. இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே. சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது. பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

----------------------------

Wednesday, October 29, 2008

அனைவரின் கனிவான கவனத்திற்கும்!

தானம், உதவி- இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை, இன்றைக்கு மற்றவர்களுக்கு செய்தால் நாளைக்கு மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்ற Golden ruleலை கருத்தில் கொண்டு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொஞ்சம் கவனமாக படிக்கவும்:

Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

மேலும் விவரங்களுக்கு:

http://www.mediafire.com/?znwgenm0hiz

இவர்களுக்கு உதவும் பதிவர்கள், புதுகை அப்துல்லா, எஸ்.கே மற்றும் அமிர்தவர்ஷிணி அம்மா போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, October 28, 2008

தமிழ் ஈழப்பிரச்சினை- எனது குறுகிய பார்வையில்

ஈழத்தமிழர்கள், உயிர், உரிமைகள் பறிக்கப்பட்டு நாடுவிட்டு நாடு போய் என்னவெல்லாமோ துன்பம் அனுபவித்து இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினையைப் பற்றி பேசும்போது நல்ல பக்குவம் வேண்டும். அது என்னிடமில்லை என்பதால் என் எழுத்தில் நிறைய குறைகள் வரலாம். சகித்துக்கொள்ளுங்க, ப்ளீஸ்!

* ஈழத்தமிழர்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கும்போது சில பெரிய நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிக மிகத்தவறு. அது எந்த நாடாக இருந்தாலும் அப்படி செய்வது மிருகத்தனம். அதென்னவோ தெரியவில்லை தனிமனிதனுக்கு உள்ள மனிதாபிமானம், நாடு சம்மந்தப்பட்ட அரசியலில் இருப்பதில்லை! :(


* பொதுவாக, பத்திரிக்கைகள் "பிராமண க்ரிடிக்ஸ்" 95% மேல் ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கவனம்! நான் தமிழ் பிராமண உடன்பிறப்புக்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை

இது சமீபத்தில் வந்த ஹிந்து ஆர்ட்டிகிள் மற்றும் சோ ராமசாமி, ஹிந்து ராம் போன்றவர்கள் எழுதுவதில் இருந்து வரும் 'குற்றச்சாட்டு".

சரி, இந்த மெத்தப்படித்த அரைகுறை ஞானம் கொண்ட க்ரிடிக்ஸ் ஈழத்தமிழருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முழு ஆதரவு கொடுத்தால், இந்த பிரச்சினை முடிவாகிவிடப் போகிறாதா என்பது என் கேள்வி?

இல்லை என்றுதான் நினைக்கிறேன்! அதனால் இவர்களை சும்மா உளறிக்கொண்டு திரியட்டும் என்றுவிட்டுவிடுவது நல்லது! இவர்கள் ஈழத்தமிழர்களை கஷ்டத்துக்கு உண்டாக்கி ஏற்கனவே இவர்கள் மேல் உள்ள "ப்ரிஜடிஸ்" மற்றும் "பயஸ்" போன்றவற்றை இன்னும் பலமடங்காக்கி, தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் இந்த க்ரிடிக்ஸ்!

பேசாமல் இவர்கள் வேலையைப்பார்க்க வேண்டியதுதானே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சனுமா?

இவர்களுக்கு மட்டும் ஏன் ஈழத்தமிழர்கள் மேல் இரக்கமே இல்லை?

ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள்?

என்பது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை! ஏன் இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியயுமா என்றும் தெரியவில்லை! உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமல் இவர்கள் மூடிக்கொண்டு இருக்கலாம்!


* இதைவிட கொடுமை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல்வாதிகளும், யார் காங்கிரஸுடன் கூட்டமைப்பது என்கிற போட்டியில், காங்கிரஸ்காரர்களை திருப்திப்படுத்த மனசாட்சியை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஈழப்பிரச்சினையில் சில அரசியல் செய்கிறார்கள்! இதுவும் கண்டிக்கதக்க/மிகவும் வருந்தத்தக்க ஒன்று. மனதளவில் அவர்கள் ஆதரவு ஈழத்தமிழருக்கு இருந்தாலும், மேலே உள்ளவர்களை திருப்திப்படுத்த அவர்கள் மனதை கல்லாக்கி அரசியல் செய்வதை பார்க்கலாம்! :(


* ஈழத்தமிழர்களிடம் இந்த பிரச்சினை பற்றிப்பேசும்போது/விவாதிக்கும்போது நான் கண்ட குறை.

அவர்கள் இந்த பிரச்சினையைப்பற்றிப்பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். :( பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலி தெரியும் என்பது எனக்குத்தெரியும். இருந்தாலும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல், தமிழ் உறவுகள் கொஞ்சம் மாறுபட்ட கருத்துகள் வைத்தாலும் அவர்கள் அறியாமையால் வைத்திருந்தால், அந்த அறியாமையை கனிவாக அவர்களிடம் இருந்து போக்க வேண்டும்.


ஈழத்தமிழ் உறவுகள் என்ன செய்ய வேண்டும்?

* ஈழத்தமிழ் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் எந்தத் தமிழ் அரசியல்வாதி யையும் அவர்கள் நம்பக்கூடாது!

* பிராமண பத்திரிக்கையாளர்களை துச்சமாக நினைத்து ஒதுக்க வேண்டும்!

* ஒரு உண்மையை நம்புங்கள்! தமிழ்நாட்டில் மற்றும் உலகில் உள்ள எல்லாத்தமிழ் சகோதர சகோதரிகளுமே நீங்கள் அதிவிரைவில் தனி தமிழ் ஈழம் அமைத்து, மனநிம்மதியுடன் நீங்கள் நீடூழிவாழவேண்டும் என்றுதான் மனதாற எண்ணுகிறார்கள், பிரார்த்திக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை .

Monday, October 27, 2008

காவேரியும், நானும்..

போன வாரம் என் அலுவலக தோழி ஒருத்தி, "க்ளாசட் முழுக்க துணி வைச்சிருக்கியே, அப்புறம் ஏன் போட்டதையே திரும்ப திரும்ப போடறே?" என்று சொன்னபோது கவனித்தேன், ஏன் போட்டதையே போடுகிறேன்? கவனித்து பார்த்ததில் தெரிந்தது, என்னுடைய க்ளாசட் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. இதனால் அலுவலக உடைகள் எங்கேயோ தொலைந்துப்போக, மேலே இருக்கும் உடைகளையே திரும்பத்திரும்ப அணிந்துக்கொண்டிருக்கிறேன் போல. சென்ற வார இறுதியில் என் க்ளாசட்டுக்கு விடிவு காலம் பிறந்தது, 1 வருடத்துக்கு மேல் உபயோகிக்காத உடைகளை "Good will" என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு வந்தேன்.

உடைகள் என்றதுமே எனக்கு காவேரி தான் நினைவுக்கு வருகிறாள். காவேரி என்பது வேறுயாருமில்லை, என் பெற்றோர் வீட்டின் வேலைக்காரப்பெண்! ஒடிசலான உருவம், கருத்த தேகம், தெற்றுப்பல், உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மைக் செட் குரல், வாய் கொள்ளா சிரிப்பு, கண்களில் எப்போதும் தென்படும் ஒரு துறு துறுப்பு, கூடவே இழையோடும் ஒரு மெல்லிய சோகம் - இதுவே நம்ம கதாநாயகி காவேரியின் அடையாளம்.என்னை விட ஒரு 4-5 வயது சிறியவளாக இருப்பாள்.

போன முறை இந்தியாவுக்கு போன போது அவளை முதல் முறை சந்தித்தேன். திரைச்சீலைக்கு பின்னால் முகத்தை மட்டும் நீட்டி என்னைப்பார்த்து சிரித்தாள். யாராவது அவளை அறிமுகப்படுத்தி வைக்கமாட்டார்களா என்ற ஆர்வம் அவள் முகத்தில் இருந்தது. என்னை வெகு நாட்களுக்குப்பிறகு பார்த்த மகிழ்ச்சியில் என் பெற்றோருக்கு காவேரி மறந்துபோனாள். பொறுத்துப்பொறுத்துப்பார்த்த காவேரி பொங்கி எழுதாள். ஒரு ஸ்வீட் பாக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டு என் முன்னால் வந்தாள்.

"யக்கா இந்தா ஷிட்டு"

நான் FOB(fresh of the boat) என்பதால், காவேரி சொன்னதை ஒரு ஆங்கிலக்கெட்ட வார்த்தையோடு குழப்பிக்கொண்டு அதிர்ந்தேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காவேரி,

"அய்யே, ஷிட்டு எடுத்துக்கோயேன்கா"

விபரீதத்தை உணர்த்த அப்பா என்னை காப்பாற்றினார், "ஒன்னும் இல்லை கயல், ஸ்வீட்டை தான் அப்படி சொல்றா. அமரிக்கா அக்கா வருதுனு 2 வாரமா இங்க்லீஷ் பேச ட்ரை பண்றா"

"யெஸ்ஸு" என்றாள் காவேரி பெருமை கொப்பளிக்க!

சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்த போது தன்னை தானே பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டாள், "யக்கா, நான் தான் இந்த வூட்டு வேலக்காரி, எது வோணும்னாலும் என்னை கேளு, செரியா?"

அடுத்த சில நாட்களில் காவேரியைப்பற்றி நான் கவனித்தது, ஒரு நாளுக்கு ஆயிரம் முறையாவது காவேரியின் பெயர் அந்த வீட்டில் உச்சரிக்கப்பட்டது. யார் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்தாள், சில அதிகப்பிரசங்கி உறவினர்களுக்கு கூட!

"யக்கா டிபன் சாப்ட்டியா?"

"இந்தாக்கா சக்கரைப்பொங்கலு, ஒனக்கு புடிக்குமாமே?"

"யக்கா, தலை கசக்கி வுடட்டுமா?"

"யக்கா, காப்பி கொண்டாந்திருக்கேன்"

எனக்காக அவள் வேலை செய்வது எனக்கு சங்கடமாக இருக்கும், ஒரு மனிதருக்கு தன் தனிப்பட்ட வேலையை செய்யக் கூட ஒரு ஆள் வேண்டுமா? அது சக மனிதரை கேவலப்படுத்துவது இல்லையா? சில வருடங்களில் என்னுடைய பார்வை மாறி இருந்தது. ஆனால் இதெல்லாம் ப்ளாகில் எழுத தான் சரிவரும், வீட்டில் இந்த வாதங்கள் எடுபடாது.

"போடி பேசாம, வந்துட்டா" - இது என் அம்மாவின் பதில்.

ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து தமிழக சேனல்களை அசுவாரஸ்யமாக திருப்பிக்கொண்டிருந்த போது காவேரி கண்ணில் தட்டுபட்டாள். சந்தன நிறத்தில், சிகப்பு நிற எம்ப்ராயிட்ரி பூ சிதறல்களோடு ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். இந்த சுடிதார் ரொம்ப ஃபெமிலியரா இருக்கே? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா, "கயல் இந்த சுடிதார் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்துவிட்டது! கல்லூரியில் நான் விரும்பி அணிந்த சுடிதார், ஒரு ஆணி மாட்டி கிழிந்துவிட்டதால் அதை பீரோவில் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தேன்! எப்படி சரி பண்ணினாள்? வியப்பாக அருகில் சென்று பார்த்தேன். கிழிந்து போன சுடிதாரை தைத்து, தையலை மறைக்கும் படி மேலே எம்ப்ராயட்ரி பண்ணி இருந்தாள், அதே பேட்டர்ன் சுடிதார் முழுவதும் அங்கங்கே ரிபீட் பண்ணி இருந்தாள். பார்க்க டிசைனர் சுடிதார் மாதிரி இருந்தது.

"கயல், இந்தக்குட்டியே அழகா எம்ப்ராயட்ரி பண்ணுவா, தெரியுமா?"

"அப்படியா காவேரி? இத்தனை அழகா எம்ப்ராயட்ரி பண்ணத்தெரியுமா?" நான் வியந்து போய் கேட்க,

"யெஸ்ஸூ" என்றாள் ஏதோ சினிமா பாட்டை முணுமுணுத்தபடியே.

ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவள் குடும்பத்தைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.அவள் அம்மா பற்றி, தம்பி பற்றி, முறை பையனைப்பற்றி(ரொம்ப வெட்கப்பட்டுக்கொண்டே பதில் சொன்னாள்). அவள் அப்பாவைப்பற்றி தான் நிறைய பேசினாள், என்னை மாதிரியே அவளும் அப்பா செல்லம் போலிருக்கிறது.

"சின்னப்புள்ளேல, வாராவாரம் எங்க நைனா என்னை சந்தைக்கு இட்டும்பூடும். அங்கே சவ்வு முட்டாய், லப்பர் வளீல் எல்லாம் வாங்கித்தரும். எப்படியாச்சும் என்னை டீச்சரு ஆக்கிப்புட பார்த்துச்சு, ஆனா பாவம், அல்பாயுசுல பூட்ச்சி"

"என்ன சொல்ற காவேரி, அப்பா செத்துப்போயிட்டாரா!!??"

"யெஸ்ஸு"

"என்னடி இப்படி சொல்றே?"

"கலக்கல் சரக்க குடிச்சுபுட்டு சாக்கடையில் வுளுந்து கெடந்தா வெற என்ன ஆவும்? கொடலு வெந்து ரெத்த வாந்தியா எடுத்து செத்து பூட்ச்சு"

என்ன சொல்வது என்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, அவளுடைய முகத்தில் படர்ந்த கனத்த சோகம் 1 நிமிடம் வரையில் மட்டுமே நீடித்தது. பிறகு சுதாரித்துக்கொண்டாள்

"யக்கா, உன்னோட வம்பளத்தா வூட்டு வேலை எல்லாம் என்னாறது? போட்டது போட்ட மாதியே கிடக்கு, ஏதாவது வோணும்னா ஒரு கொரலு குடு, ஓடியாந்துட்ரேன்" கண்ணில் துளிர்த்த கண்ணீரை புறங்கையால் துடைத்தப்படியே சிட்டாக ஓடி மறைந்தாள்.

எதுவுமே தோன்றாமல் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். உலகில் சிலருடைய கஷ்டங்களை நினைத்துப்பார்த்தால் நம்முடைய "பிரச்சினையாக" நாம் நினைப்பது எல்லாம் எவ்வளவு சில்லியாக தோன்றுகிறது இல்லையா? காவேரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது, பணமாக மட்டுமில்லை, பணம் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அந்த பெண்ணை சந்தோஷப்பட வைக்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும்.

அடுத்த நாள் ஷாப்பிங்குக்கு அவளை மட்டும் அழைத்துப்போனேன். அவளுக்கு நம்பவே முடியவில்லை, "யக்கா என்னையா இட்டும்போறே? வெயிட் எதுனாச்சும் தூக்கனுமா?" கண்கள் விரித்து அப்பாவியாக கேட்டாள்.

"பேசாம வா காவேரி"

"யெஸ்ஸூ"

கார் ட்ரைவரிடம் அவளுக்கு பிடித்த சினிமா பாட்டு போட சொல்லி வம்பு பண்ணினாள், கூடவே சுதி சேராமல் இவளும் உரக்க பாடினாள். அந்த புகழ் பெற்ற கடையில் பெண்கள் செக்ஷனில் நுழைந்தவுடனே, 2-3 விற்பனை பெண்கள் என்னை சூழ்ந்தார்கள். "மேடம் புது புது ஐட்டம் வந்திருக்கு பாருங்களேன், யூ.எஸ்காரங்க இதை தான் வாங்கிட்டு போறாங்க". இந்த விற்பனை பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எப்படித்தான் தெரிகிறது என்பதே புரியவில்லை!

மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப்போல ஒரு ஓரமாக ஒடுங்கி நின்ற காவேரியின் கையை பிடித்து இழுத்து "எனக்கில்லை, இவ அளவுக்கு பாருங்க" என்றவுடன் விற்பனை பெண்களின் முகம் காற்றுப்போன பலூனாக களை இழந்தது. உழைக்கும் வர்கத்துப்பெண்கள், தங்களின் நிலையில் இருக்கும் மற்ற பெண்களை இழிவு படுத்தி பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் பார்க்கலாம்.

காவேரிக்கு துணி எடுத்துப்போடுவதில் விற்பனை பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. ராக்கில் இருக்கும் ரெடிமேட் சுடிதார்களை நானே தேர்வு செய்து எடுக்க வேண்டி இருந்தது. அதுவரை அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் இருந்த காவேரி சுயநினைவு வந்தவளாக, "யக்கா, யக்கா எனகெதுக்கு துணி எல்லாம்? தீவாளி கூட இல்லையேகா?" என்றாள். உதடு மட்டும் தான் அப்படி சொன்னது, அவள் கண்கள் "ப்ளீஸ், ப்ளீஸ், நிறுத்திவிடாதே" என்று கெஞ்சின. இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும், வறுமையில் இருக்கும் பெண்கள் என்றால் விதம் விதமாக உடை அணிய ஆசை இருக்காதா? பல சமயம் ரொம்ப சுயநலவாதியாக இருந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன்.

பில் போடும் போது, "யக்கா ரொம்ப வெலேக்கா. ஒரு சுடிதாரு வோணும்னா எடுத்துக்கறேன்" இந்த முறை நிஜமாக தான் சொன்னாள். "அடி பைத்தியமே, ப்ளூமிங் டேலில் ஒரு பர்ஸை இதை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன் தெரியுமா?" நினைத்துக்கொண்டேன் ஆனால் சொல்லவில்லை. "செரி, பேக்கையாவது குடுக்கா" குற்ற உணர்ச்சியுடன் பேகை வாங்கிக்கொண்டு நடந்தாள். "வேற ஏதாவது வேணுமா காவேரி? காஸ்மெடிக்ஸ், ஜுவல்லரி ஏதாவது? பரவாயில்லை சொல்லு".

"முடிஞ்சா எனக்கு ஒன்ன மாதிரியே ஒரு சில்பர் வாங்கித்தரியாக்கா?" ரொம்ப தயங்கியப்படி தான் சொன்னாள்(ஹை ஹீல்ஸ் ஷூவை தான் இப்படி குறிப்பிடுகிறாள்). வீடு திரும்பும் போது சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தாள். நான் வாங்கிக்கொடுத்த ஒரு சுடிதாரை ஜோதிகா ஒரு படத்தில் போட்டு வருகிறாராம். இந்த ஹீல்ஸ் மாதிரியே சினேகாவிடம் இருக்கிறதாம்.

இறங்கும் போது நிறைவாக சொன்னாள் "என் சென்மத்தில இத்தனை நல்ல துணிய சேத்து வச்சு பார்த்ததில்லீங்க்கா". உண்மையாக சொல்கிறேன், சிறுவயதில் இருந்து நான் கேட்ட உடைகளை எல்லாம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். பிறகு வேலைக்கு போனவுடன் நானும் (அதான் க்ளாசட் நிறைஞ்சிடுசே!) நிறைய உடைகள் வாங்கி இருக்கிறேன், சலிக்க, சலிக்க. இவளுக்கு வாங்கிக்கொடுத்ததைப்போன்ற மகிழ்ச்சியை என்றுமே அடைந்ததில்லை.

ஊருக்கு போகு முன் ஏர்போட்டுக்கு அந்த சுடிதாரில் ஒன்றையும், ஹைஹீல்ஸ் ஷூவையும் அணிந்து வந்திருந்தாள். கடைசியாக டெர்மினலுக்கு போகுமுன் அனைவரிடமும் சொல்லிவிட்டு, அவளிடம் திரும்பியபோது கவனித்தேன். அவள் கண்ணில் வழமையாக தென்படும் மென்சோகம் காணாமல் போயிருந்தது.

என் தலை மறையும் வரை கத்தினாள், "யக்கா ஒளுங்கா வேளா வேளைக்கு சாப்புடு, செரியா?"

"யெஸ்ஸு"

Saturday, October 25, 2008

கயல்! நமது ஹிட்கவுண்டருக்கு என்ன ஆச்சு?

நமது ஹிட் கவுண்டர் மறுபடியும் பிரச்சினை கொடுக்கிறது.

நேற்று 14500 இருந்தது. இன்று 13 ஆயிரத்து சம்திங்!

திடீர்னு ரிவேர்ஸ்ல ஓடுது!!!

இதற்கு முன்னால் 18,000 அருகில் சென்று மறுபடியும் 13 ஆயிரத்து சம்திங் வந்தது!

நாந்தான் எதோ தவறுதலாக நினைத்ததாக நினைத்தேன்!

இன்று ஏதோ "க்ளிட்ச்" இருப்பது உறுதியாகிவிட்டது!

என்ன ஆச்சு இந்த ஹிட் கவுண்டருக்கு? :-(

Friday, October 24, 2008

எனது ஈழச்சிந்தனைகள்

இந்த முக்கியமான பிரச்சினைக்கு அழைப்பு தேவை என்று நான் நினைக்கவில்லை. அழைப்பில்லாமலே கலந்துக்கொள்ளுகிறேன்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

ரொம்ப தெரியாது, ஈழப்பிரச்சினைகளைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது, ராஜீவ் காந்தியின் படுகொலை, பின் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ஏறக்குறைய தினம் தினம் வந்த புலனாய்வு செய்திகள். ஒற்றைக்கண் சிவராசன், தாணு போன்ற பெயர்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி இறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை சிறுவயதில் பத்திரிக்கையில் பார்த்து அலறி இருக்கிறேன். ரொம்ப நாள் வரை தவறு செய்தவர்கள் வெறும் புலிகள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின் பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் படித்த போது, என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

முழு ஆதரவும் உண்டு, நான் படித்த வரையில், ஈழத்தமிழர்களுக்கு(பெரும்பான்மை) ஈழம் தனிநாடாக அமைவது தான் விருப்பம் என்று நினைக்கிறேன். இந்தப்பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதால் அவர்களுக்கு எது விருப்பமோ, அதுவே என்னுடைய விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமாக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் படிப்பேன்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

ரொம்ப லேட்!! இந்த ஆதரவிலும் நிறைய அரசியல் கலந்திருப்பது சலிப்பைத்தருகிறது. முக்கியமாக மனிதர்களின் இறப்பை வைத்து கூட அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் மீது ரொம்ப எரிச்சல் வருகிறது. முக்கியமாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்து "தனி தமிழ் நாடு" கேட்கும் வீணர்கள் மீது. இதனால் இவர்கள் பலரது ஆதரவுக்குரல்களை நசுக்க கூடும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் எல்லாம் தீமை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இப்படி செய்பவர்கள் ஒரு புறம் என்றால், தனி ஈழம் அமைந்தால் தமிழ் நாடும் தனியாகிவிடும் என்ற ஆதாரமில்லாத புரளியை கிளப்பி விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை விடும் ஒரு கூட்டம் மறு புறம். பெரும்பாலான தமிழர்களுக்கு தனித்தமிழ் நாட்டில் விருப்பமில்லாத போது, இந்த paranoia பிரச்சாரம் ஏதோ சதி திட்டம் போல தோன்றுகிறது.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

கண்ணீரிலும், கவலையிலும் மூழ்கி இருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆறுதலைத்தவிர வேறெதையும் சொல்ல எனக்கு தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. வரிசையாக குவிக்கப்படும் சடலங்களின் புகைப்படங்களைப்பார்க்கும் போது ரொம்ப ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகளின் முகம் பார்க்கும் போது... மனிதர்களுக்கு மனிதத்தன்மையே மரித்துவிட்டதோ? சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும்.

நான் ஒரு தர சொன்னா 100 தர சொன்ன மாதிரி!

(-: (-: மன்னிக்கவும்! இது சும்மா சினிமா தொடர் பதிவுதான். சும்மா கூட்டம் சேர்க்க இப்படி ஒரு சினிமாவசனத் தலைப்பு! :-) :-)
--------------------------------------

நான் ஒண்ணும் சினிமா பைத்தியம் இல்லை. தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. நிறையப்படம் பிடிக்காது. ஒரு சில படங்கள் பிடிக்கும். நான் ஒரு பழமை விரும்பி.
கயலுக்கும் எனக்கும் ரொம்ப டேஸ்ட் வேறுபடும் என்பது உங்களுக்குப் புரியும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்

நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன்.யாரோடாவது போயிருப்பேன் ஒண்ணும் புரியாமல் வந்து இருப்பேன்.

அ) நினைவு கண்ட முதல் சினிமா?

நெஜம்மாவே தெரியலை!

2. கடைசியில் அரங்கில் பார்த்த சினிமா?

குசேலன்! ஒளிப்பதிவு, மற்றும் க்ளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. படம் சுமார்தான்.

3. அரங்கிலன்றி பார்த்த சினிமா?

சுப்பிரமணியபுரம். அந்த ஹீரோவுக்கு, மதுரைத்தமிழ் வரலை! அது எரிச்சலா இருந்தது.

மதுரையை பற்றி தெரியாத ஒரு தற்பெருமை பேசும் விமர்சகர், சுப்பிரமணியபுரம் ஒரு ஊர் நு சொல்லி எழுதிய விமர்சனம் சிரிப்பை உண்டாக்கியது.

ஓரளவுக்கு நல்ல படம் அதுனு சொல்லலாம். போர் அடிக்கவே இல்லை. ஆனால், கடைசில கஞ்சா கருப்பு துரோகியாவெதெல்லாம் நம்ம மதுரை மக்களிடம் நடக்காத ஒண்ணு. ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்த்து இது மாதிரி எடுக்கிறாங்க! அப்போத்தானே இந்த மாதிரி புதுமையைக் கண்டு நம்ம "க்ரிடிக்கள்" மயங்குவாங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பருத்திவீரன்- இன்று

முள்ளும் மலரும்-அன்று ( டி வி டி யில் பார்த்தலில்). ரசினியும் மறைந்த நடிகைகள் ஷோபா மற்றும் ஃபடாப்பட்டும் என்னம்மா நடிச்சிருக்காங்க! ரசினி நடிப்புல எல்லோரையும் மிரட்டி இருக்காருங்க!!!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்ம ரசினி என்ன பேசினாலும் அரசிலாக்குவது, வேடிக்கையா இருக்கும்.

அது அண்ணாமலை முதல் குசேலன் வரைக்கும்!

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஜீன்ஸ் படத்தில் காட்டிய பிரஷான்ந்தின் டபுள் ஆக்ஷன்.
சிவாஜியில் காட்டிய வெள்ளை ரசினி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எக்கச்சக்கமாக!

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை நல்லாயிருந்தால் பிடிக்கும். இவர்தான் பெரிய ஆள் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

எனக்கு உத்தமபுத்திரனில் ஜீ ராமநாதன் இசை, பாலும் பழமும் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் எம் எஸ் விஸ்வனாதன் இசை, வசந்த மாளிகை, மற்றும் அடிமைப்பெண் படங்களில் கே வி மஹாதேவன் இசை, முதல் மரியாதை இல் இளையராஜா இசை, பாஷா/அண்ணாமலை யில் தேவா இசை, ஒருதலை ராகத்தில் டி ராஜேந்தர் இசை, முதல்வன் இல் ஏ ஆர் ரகுமான் இசை , கஜினி யில் ஹரீஸ் ஜெயராஜ், 7G ரெயின்போ காலனி யில் யுவன் சங்கர் ராஜா இசை, எல்லாமே பிடிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர ஆங்கிலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பது.

The Godfather 1 & 2, Unforgiven, Shawshank Redemtion, Sixth sense, American beauty, Departed etc.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! இல்லவே இல்லை!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, சங்கர், தங்கர்பச்சான், சேரன் எல்லாம் இருக்காங்களே? நிறைய இசையமைப்பாளர்களும் முன்னேறிக்கொண்டு வர்றாங்க. நல்லா வரும் என்றுதான் தோனுது.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நம்ம ஊர்ல தெருச்சண்டை, கோயில் திருவிழா, கல்யாண கொண்டாட்டம் எல்லாவற்றிலும் இதைவிட 10 மடங்கு ஈடுபாடு உண்டாகும்னு நினைக்கிறேன்.

தொடர்பதிவு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இவன், அது சரி, அணிமா மற்றும் கயல்! :-)

ஆமா அடுத்து யாரை அழைப்பது?


1) எஸ் கே


2) சுந்தர் :-)

Thursday, October 23, 2008

நடிகருடன் ஒரு விமானப்பயணம்!

விமான பயணம் எனக்கு பிடிக்காத ஒன்று, ஏன் தெரியுமா?

செக்யூரிட்டி செக்கிங், செக்கிங், செக்கிங்! விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அப்படியே பொடி நடையாக நடந்து போனால் கூட போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் சேரலாம் போலிருக்கிறது. அதுவும் எனக்கும், விமான நிலைய செக்யூரிட்டி கேட்டுகளுக்கும் நிரந்தர தகராறு. நான் கேட்டை கடக்கும் போதெல்லாம் அது என்ன மாயமோ தெரியாது, தவறாமல் அலாரம் அடிக்கும். வளையல், செயின், கம்மல், சாண்டல்ஸ் என்று எல்லா மெட்டல்களையும் பார்த்து பார்த்து ரிமூவ் பண்ணி இருந்தாலும், கவனிக்க தவறிய ஹேர்க்ளிப் வில்லியாக சதி பண்ணி இருக்கும்.

சுய புலம்பல் இருக்கட்டும், இதெல்லாம் வழக்கமா நடப்பது தான். இருந்தாலும் அன்றைய விமானப்பயணம் எனக்கு வழக்கத்தை விட கொடுமையாக இருந்தது. நான் கொண்டு வந்த ஹாண்ட் லகேஜில் இருந்த லிக்விட் சோப், ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் 3 oz எடைக்கு அதிகமாம்!(என் இனிய தமிழ் மக்களே, 3 அவுன்சுக்கு குறைவாக யாராவது க்ரீம் எடுத்து வருவாங்களா?). "I am extremely sorry young lady" என்று ஒரு குண்டர் என்னுடைய விக்டோரியா சீக்ரெட் க்ரீம்களையும், பால் மிட்சல் ஷாம்பூ- கண்டிஷனரையும் என் கண் முன்னால் குப்பையில் தூக்கிப்போட்டார்(ண்ணா.. நல்லா இருப்பீங்களாணா?)

என்னுடைய சோகத்தை ஸ்டார்பக்ஸ் காஃபி குடித்து ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞர் தட்டுப்பட்டார். வழக்கமாக இந்தியர்களைப்பார்த்தால் சிரித்து ஒரு 'ஹாய்' சொல்வதுண்டு, அன்றைய தினம் மூட் இல்லாததால் பேசாமல் போய்விட்டேன். விமானத்தில் என்னுடைய பக்கத்து சீட் காலியாக இருந்தது, நான் வழக்கம் போல அங்கே இருந்த அறுவை மேகசீன்களை புரட்டிக்கொண்டிருந்த போது, "எக்ஸ்க்யூஸ்மி" என்ற குரல் என் கவனத்தை கலைத்தது. மீண்டும் அந்த இந்திய இளைஞர்!

"4 மணி நேர பயணம், நீங்க செல்போன்ல தமிழ்ல பேசிட்டு இருந்தீங்க. போரடிக்காம போகலாம் இல்லையா? உங்க பக்கத்தில உட்காரலாமா?"- இப்படி தமிழில் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வததென்று தெரியவில்லை. No, offense to gentlemen here, தனியே பயணிக்கும் போது, அந்நியர்களுடன் முக்கியமாக ஆண்களுடன் நான் அதிகம் பழகுவதில்லை. பாதுகாப்பு சம்மந்தமான கவலை தான் காரணம். "அதுக்கென்ன,go ahead" என்று உதட்டளவில் சொல்லிவிட்டாலும் மனதளவில் தர்மசங்கடம். தமிழ் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படியாவது மறுத்திருக்கலாம்.

அவர் வந்து உட்கார்ந்ததில் இருந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார்.முக்கியமாக நம்ம Gapடன் புகழ் பாடிக்கொண்டிருந்தார்.Gapடன் தான் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராம்(!) ஏற்கெனெவே பயணம் என்றால் மைல்ட் மோஷன் சிக்னெஸ் வந்து அவதிப்படும் எனக்கு அவர் அணிந்திருந்த கொலோன் எக்ஸ்ட்ராவாக தலைவலியையும் ஏற்படுத்தியது. கூடவே ஒரு எண்ணம் "இவரை எங்கோ பார்த்தா மாதிரி இருக்கே?". அவர் சொல்வதற்கெல்லாம் சும்மா சிரித்துவைத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் திடீரென்று என்னிடம் இந்தக்கேள்வியைக்கேட்டார் "என்ன வேலை செய்யறீங்க?"

நான் என்னுடைய கணிப்பொறியியல் வேலையைப்பற்றியும், ப்ராஜெக்டுகளைப்பற்றியும் சொல்லிவிட்டு ஃபார்மாலிட்டிக்காக அதே கேள்வியை அவரிடமும் கேட்டு வைத்தேன், அங்கே தான் வந்தது வினை. உடனே அவரின் முகம் சிறுத்துவிட்டது, "என்ன இப்படி கேட்டுட்டீங்க, நான் தான் *****. என் படம் பார்த்ததில்லையா? -----, ----- படத்தில் எல்லாம் நடிச்சிருக்கேனே, அதிலும் இந்த(ஒரு படத்தின் பெயரைக்குறிப்பிட்டு)படம் நல்லா ஓடியதே? எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

அவர் குறிப்பிட்ட அந்த பாடாவதி படம் அவர் சொன்ன பிறகு தான் நினைவு வந்தது, கூடவே அவர் முகமும். "ஷாருக்கான் படத்தை காப்பி அடிச்சது மாதிரி இருக்கே" என்று எரிச்சலடைந்து பாதியிலேயே டிவிடியை நிறுத்திய படம். "ஓ நல்லா நினைவிருக்கே, ரொம்ப சாரி நான் ஒரு சரியான ஸ்காட்டர் ப்ரெயின்" என்று எப்படியோ சமாளித்தேன்.

"இட்ஸ் ஓகே" என்று அவர் சொன்னாலும் ஏமாற்றத்தை மறைக்க முடியாமல் தடுமாறினார்(இந்த எக்ஸ்ப்ரெஷன்களில் பாதியாவது படத்தில் காட்டி இருக்க கூடாதா?). அவரை அடையாளம் காண முடியாமல் போனதில் எரிச்சலோ என்னவோ, பிறகு தொடர்ந்து இந்தியர்கள் எப்படி இந்தியாவில் படித்துவிட்டு அமரிக்காவில் வேலை செய்ய ஓடிவிடுகிறார்கள், அதனால் இந்தியாவுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைப்பற்றி எல்லாம் எனக்கு முழு நீள லெக்சர் கொடுத்தார்(அதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும்?).

லெக்சரின் முடிவில், "வேலை எல்லாம் போதும், நீங்க ஏன் சென்னை வந்து செட்டில் ஆகக்கூடாது? எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ், நாமெல்லாம் ஜாலியா ஊர்சுற்றலாம்" என்று கடைசியாக ஒரு போடு போட்டார். சென்னையில் வந்து அப்படி நடிகருடன் ஊர் சுற்றினால் என்னுடைய கன்சர்வேட்டிவ் பெற்றோர்களும், உறவினர்களும் என்ன கலாட்டாவெல்லாம் பண்ணுவார்கள்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. அவர் சொன்னதைக்கேட்டு சிரிப்பதாக நினைத்த நம்ம ஹீரோ அதற்கு பிறகு டாப் கியரில் அலற(பேச) ஆரம்பித்தார். எனக்கு ஒரு விஷயம் புரிவதில்லை, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடம் பேச இப்படி ஏன் எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி சிலர் கத்தவேண்டும்?

அவருடைய அலறலில் இருந்து நான் அறிந்துக்கொண்டவை: நம்ம ஹீரோவுக்கு ஏதோ ஷூட்டிங்காம். அவர் சொன்ன படத்தலைப்பை கேட்டாலே தூக்கம் வரும், அப்படி ஒரு அற்புதமான டைட்டில். அப்படி ஒரு படத்தை நான் எங்கேயும் கேள்விப்பட்டதாகவே நினைவில்லை. ஒரு வேளை மெகாசீரியலாக இருக்குமோ? அடுத்த ஜேகே ரித்தீஷ் ஆவதற்கான எல்லா பிரகாசமான வாய்ப்பும் நம்ம ஹீரோவுக்கு இருந்தது.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை எல்லாம் கட்டாய ஓய்வு எடுக்க வைக்கனுமாம், அவரை மாதிரி யூத்துகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறதாம்(அவங்க ஓய்வெடுத்துட்டா மட்டும்?). வாய்ப்புகள் கிடைக்க அவர் படும் சிரமங்களை எல்லாம் ரொம்ப விரிவாக விளக்கினார், கடைசியில் "பாருங்க உங்களுக்கு கூட என்னை அடையாளம் தெரியாமல் போச்சு" என்று அவர் சொன்னதும் எனக்கே பாவமாக போய்விட்டது. "எனக்கு ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்" என்று அவரிடம்(வேறுவழி இல்லாமல்)கேட்டேன்.

ஏதோ ஒரு போஸ்ட் கார்ட்டில் அவருடைய தொலைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரி எழுதி, கூடவே ஆட்டோகிராப்பும் போட்டு கொடுத்தார். இறங்கிய பிறகு, நான் போக வேண்டிய இடம் வரையில் கொண்டு வந்து விட்டு, போகும் போது "மறக்காமல் சென்னை வரும் போது என்னை வந்து பார்க்கனும், டைம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு போனார். சரி என்று சொன்னேன்(நிச்சயம் போகப்போவதில்லை).

அவர் எழுதிக்கொடுத்த ஆட்டோகிராப் கார்ட் எங்கோ தொலைந்துவிட்டது, இப்படி சில தகவல்களை நான் தொலைப்பதற்காகவே வாங்குவதுண்டு. ஆனால் அவர் குறிப்பிட்ட படத்தை மட்டும் ரிலீஸ் ஆகும் போது டிவிடியில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

Wednesday, October 22, 2008

அடாவடியா எழுதுறது தான் நம்ம ஸ்டைல்!

நான் பார்க்கும் தமிழ் சினிமாவே ரொம்ப ரொம்ப குறைவு, இந்த லட்சணத்தில் ரொம்ப நாளுக்குப்பிறகு பார்த்த தமிழ் சினிமா பிடிக்காமல் போக, அதை விமர்சித்து எழுதிய விமர்சனத்தை ஒரு குறிப்பிட்ட நடிகரைப்பற்றிய விமர்சனமாக கருதிய 'உலகநாயகர்கள்' பொதுவாக ஒரு கமெண்ட் எழுதினார்கள், "விமர்சனமா இது? அடாவடியா இருக்கே!".

அந்த நற்பெயரைக்காப்பாற்ற மற்றொரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது! Way past due date இந்த தொடர் விளையாட்டை தொடருகிறேன் என்று சொல்ல ஆசை தான், ஆனால் உண்மை அதுவல்ல. வேலைக்கு வந்து ஏதோ தமிழ் மணம் பார்த்தோமா, விகடன்-குமுதம் படிச்சோமா என்று நல்ல பிள்ளையாக இருந்த எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் கொடுக்கும் அக்கிரமம் நடந்தது. ஜாவா கோடுகளோடு நான் போராடிக்கொண்டிருந்தபோது உங்களது தொடர் விளையாட்டை ஒரு ஏக்கப்பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோக நிகழ்ச்சியாகும்.

இனி ஒரு formal statement: தொடர் விளையாட்டுக்கு அழைத்த அதுசரி, அணிமா மற்றும் இவனுக்கு நன்றி :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறக்கும் முன்பே டிவி வாங்கிவிட்டார்கள் என்பதால் நினைவு தெரிந்ததில் இருந்தே(3 வயது இருக்கும்) சினிமா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். முதன் முதலில் "Tarzan" என்ற படம் பார்த்ததாக நினைவு, காட்டிலேயே வளரும் சிறுவனுடைய கதை. அந்த சமயத்தில் தூர்தர்ஷன் என்ற ஒரே சேனல் தான். அதில் வெள்ளிக்கிழமைகளில் "ஒளியும் ஒலியும்", சனிக்கிழமைகளில் இந்திப்படம், ஞாயிற்றுக்கிழமை என்றால் தமிழ்ப்படம் பார்த்த நினைவிருக்கிறது(கூடவே ஞாயிறு மதியங்களில் வேற்றுமொழிப்படங்கள் வந்ததாக ஞாபகம்).

Tarzan படம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதுவும் Tarzan மரம் விட்டு மரம் தாவும் காட்சிகள்! டார்ஜன் மாதிரியே கட்டில், நாற்காலி, சோபா என்று ஏறி குதித்து அம்மாவிடம் அடி வாங்கி இருக்கிறேன். விலங்குகளின் மீது விசேஷ மதிப்பு வந்தது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அரங்கிலா? அதெல்லாம் இந்தியாவில் பார்த்ததோடு சரி, இங்கே அத்தனை நேரம் உட்கார்ந்து பார்க்க பொறுமை இல்லை. கடைசியாக அரங்கில் உட்கார்ந்து பார்த்த படம், "அன்பே சிவம்", என்னுடைய All time favorite!

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தசா.... வேண்டாம், ஏன் திரும்பவும் வம்பு? விட்டுடுங்க!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

திரும்பவும் அன்பே சிவம்! கமலஹாசனைத்தவிர வேறு யாராலும் நடித்திருக்கவே முடியாத நல்லசிவம் பாத்திரம். அந்தப்படத்தைப்பார்ப்பதற்கு முன் என்னுடைய பார்வையும் படத்தில் வரும் மாதவனின் பார்வையைப்போலவே இருந்தது, எல்லாவற்றிலும் சுயநலம். சுற்றி இருப்பவர்களைப்பற்றியும் சிந்திக்க, கவலைப்பட எனக்கு சொல்லிக்கொடுத்த படம் என்பதால் அந்தப்படத்தின் மீது பெருமதிப்பு உண்டு.

அப்புறம், முதல்வன்!- பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை வியக்க வைத்த படம். அதில் வரும் மனிதக்குரங்... சாரி, கைத்தவறிவிட்டது. படத்தில் வரும் மனிஷா கொயிராலாவைத்தவிர அனைத்தும் பிடித்திருந்தது.

சின்ன வயதில் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" என்ற படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவும் இல்லை. தமிழ் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தை ரசிப்பதுண்டு, ஆனால் 'தாக்கிய' என்பதெல்லாம் ரொம்ப ஓவர். தொழில்நுட்பம் என்றாலே எனக்கு ஹாலிவுட் படங்களே நினைவில் வருகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது சில சமயம்.அதிலும் கிசு கிசு பகுதியைப்படித்து மூளை குழம்புவது தான் மிச்சம்.

7.தமிழ்ச்சினிமா இசை?

ஏ.ஆர்.ஆரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கேட்கும் போது சாதாரணமாக இருக்கும் பாடல்கள் கூட திரும்ப திரும்ப கேட்கும் போது பிடித்துப்போய்விடும். என்னுடைய ஐபாடில் இருக்கும் தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே ரஹ்மான் பாடல்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழைத்தவிர உலகத்திரைப்படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, முக்கியமாக ஹாலிவுட் படங்கள். இந்த ஹலோவீனுக்கு "Saw" வருகிறது, அதையும் விடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏறக்குறைய புதிதாக ரிலீஸாகும் ஹாலிவுட் படங்களில் 50% பார்த்துவிடுவேன். பிறகு சைனீஸ் படங்கள், "Crouching Tiger, Hidden Dragon" படம் பார்த்தபிறகு சீன இயக்குநர்கள் மீதும், நடிகர்கள் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது. ஜாப்பனீஸ் படங்களில் பேய்ப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் "One missed call" பார்த்திருக்கீங்களா? ஹாரர் படங்களை ஜாப்பனீஸை விட பயங்கரமாக யாராலும் எடுக்க முடியாது. தமிழில் ஏன் பேய்ப்படங்கள் அதிகமாக வருவதில்லை?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித்தொடர்பு என்றால் உறவினர்களா? நெருங்கிய உறவினர் யாரும் கிடையாது, ஆனால் நண்பர்கள் உண்டு. சமீபத்தில் கூட விமானத்தில் ஒரு நடிகரை சந்தித்தேன், அவர் நடிகர் என்பதே அவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது(அது ஒரு பெரிய கதை, தனிப்பதிவாவே எழுதலாம்). அவரிடமே போய் "என்ன வேலை செய்யறீங்க?" என்று கேட்டு வைத்தேன். அந்தளவு எனக்கு தமிழ்சினிமாவைப்பற்றிய பொது அறிவு இருக்கிறது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்சினிமா தற்போது ஒரு cult-ல் சிக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம், அரசியல், சூப்பர் ஹீரோயிசம், ஆபாசம், வன்முறை - இதை விட்டால் வேறு படங்கள் வருவதில்லை. நல்ல கதையமைப்புக்கொண்ட படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இதே நிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம் என்பதில் சந்தேகமில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னை அது கொஞ்சம் கூட பாதிக்காது, ஆனால் தமிழகத்துக்கு நிறைய நன்மை இருக்கிறது. தமிழகம் உருப்படும்! தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் தான் பாவம்.

அடுத்து யாரை அழைப்பது? எழுதாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

1. வருண்

2. எஸ்.கே(?)

Sunday, October 19, 2008

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I)

ஜானகிராமன் கதைகள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. முதன்முதலில் நான் படித்த அவரின் எழுத்து அவரின் “அம்மா வந்தாள்” நாவல். அம்மா என்றால் அன்பு! அம்மா என்றால் தெய்வம்! தாயில் சிறந்த கோவில் இல்லை! இதுதான் நாம் அறிந்தது. எனக்குத்தெரிய சில நண்பர்கள் பலர் அம்மாவைப்பற்றி யாராவது தவறாக சொன்னால் கொலையே பண்ணுவார்கள் . ஆனால் “அம்மா வந்தாள்” கதையில் வரும் அப்பு வின் அம்மா, அலங்காரம் அந்த வகையை சேர்ந்தவளா?! அலங்காரம் என்கிற அம்மா நடத்தை சரி இல்லாதவள் போல சொல்லாமல் சொல்லி இருப்பார் ஜானகிராமன்.

அந்தக்கதையில்,

ஒரு நாள் அலங்காரத்தின் கணவர் 6 மகன்/மகள்களின் அப்பா, தன் மனைவியைப்பற்றி நினைத்துப்பார்ப்பார். அன்று தனியாக மொட்டைமாடியில் படுத்து இருப்பார். பழைய நினைவுகள்...அலங்காரத்துடன் தான் நடத்திய தாம்பத்ய உறவு, அனுபவித்த இன்பம் பற்றி நினைத்துப்பார்ப்பார்.

அதெல்லாம் அவருக்கு பழைய நடந்து முடிந்த கதை. இன்று அவருடன் அலங்காரம் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதில்லை. அவளுடன் உறவு வைத்துக்கொள்ளும்போதும் அவருக்கு அவள் புரியாத புதிராகத்தான் இருந்தாள். அலங்காரம் ஒரு சில நேரம்பேசுவது அவருக்கு புரியாது. அவளின் ஆசைகள், கனவுகள் இவரால் கொடுக்கமுடியாததாக இருக்கும். ஒவ்வொரு சமயம் அவளை தன்னால் பெண்டாள முடியுமா என்றுகூட அவருக்கே சந்தேகமாக இருப்பதுபோல் தோன்றும் அவருக்கு. இப்படி அவர் மனைவி பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போது,

அலங்காரம்! பேரு வச்சிருக்காங்க பாரு! ஒரு விலைமாதுக்கு வைப்பது போல!

இப்படி எழுதி இருப்பார்! தன் மனைவியைப்பற்றி, ஒரு தாயை, கணவர் நினைப்பதாக! இந்த இடத்தில்தான் ஜானகிராமன் அலங்காரத்தின் நடத்தை பற்றி முதன் முதலில் கோடிட்டுக்காட்டுவார்.பிறகு அலங்காரம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்வார்.


சரி, இந்த அம்மா வந்தாள் கதை இங்கேயே நிற்கட்டும். பிறகு தொடர்கிறேன்.

இப்பொழுது சில உண்மை நிகழ்வுகளை சொல்கிறேன்.

இந்த நாவலைப்படித்துமுடித்த பிறகு, இதைப்போல் ஒரு அம்மா கேரக்டரைப்பற்றி என் நெருங்கிய நண்பன் சீனிவாசனிடம் பேசினேன். நான் இந்தக்கதையால் பயங்கரமாக பாதிக்கப்பட்டேன். இது போல் ஒரு தாயைப்பார்க்கும்போது எனக்கு மிகவும் எரிச்சலாகவும், சங்கடமாகவும், கவலையாகவும் குழப்பமாகவும் இருந்தது. நான் என் நண்பனிடம் பேசும்போது ஒன்று புரிந்தது. நாங்கள் இருவரும் இரண்டுவிதமான அம்மாக்களின் மகன்கள் என்று.

நான் பேசும்போது என் நண்பன் சீனிவாசன் என்னைப்பார்த்து சிரித்தான்.அவனுடைய பர்சனல் லைஃப் பற்றி எனக்கு அன்று வரை சரியாகத் தெரியாது. அவன் சொன்னான், கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை என்றான். அவன் அம்மா கதையில் வரும் அலங்காரத்தைவிட ஒரு “புதிரான அம்மா” என்றான். அவனால் இதை ஈசியாக ஜீரணித்துக்கொள்ள முடிகிறது என்றும், அவன் அம்மா கொஞ்சம் ஒரு புரியாத புதிர் என்றும் சொன்னான். எனக்கு அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவன் ஒரு ஆர்தோடக்ஸ் குடும்பத்தில் இருந்து வருபவன். நல்ல படித்த குடும்பத்தில் இருந்து வந்தவன் . அவன் அப்பா ஒரு பெரிய ப்ரீமியர் இண்ஸ்டிடூட்டில் பெரிய பேராசிரியர். மேலும் அவன் பயங்கரமான அறிவாளி. ஆனால் கொஞ்சம் “எக்சண்ட்ரிக் கேரக்டர்” என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு மாதிரியான ஜீனியஸ். மிகவும் திறந்த மனப்பாங்கு உள்ளவன்.

“என்னடா சொல்ற!!!” என்றேன் மிகவும் குழப்பத்துடன்.

அம்மா என்கிற ஒருவர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமானவர் மதிக்கத்தக்கவர் என்று தெரியும் எனக்கு. என் தாயைப்போலவே எல்லோர் அம்மாவையும் மதிக்கத் தெரிந்தவன் நான். ஆனால் அக்கதையைப்பற்றிப்பேசும்போது அவனே அப்படி சொல்வதால்,மறுபடியும் கேட்டேன்.

“அப்படித்தான்்” என்றான் புன்னகையுடன்.

“ஜோக் அடிக்கிறயா? என்றேன் மறுபடியும் அவனிடம்.

“இல்லைடா சீரியஸாத்தான் சொல்றேன்” என்று அவர்களைப்பற்றி சொன்னான்.

அவன் தந்தைக்கு கல்யாணம் ஆன புதிதிலேயே அவன் அம்மா மிகவும் வித்தியாசமாக இருப்பதாக அவன் அப்பா ஃபீல் பண்ணினாங்களாம்.ஆனால், போகப் போக சரியாகிவிடும் என்று தொடர்ந்தாராம் உறவையும், வாழ்க்கையையும். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் (என் நண்பனும் அவன் அண்னனும்) அதே நிலைதானாம்.கடைசியில் அப்பா அம்மா பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டதாம். அதனால் கதையில் வரும் அலங்காரம் அவனுக்கு வித்தியாசமான அம்மாவாக தோனவில்லை. அவன் அம்மா அலங்காரத்தைவிட ஒரு “காம்ளிக்கேட்டெட்” அம்மா என்றான்.

மேலும் அவனிடம் இருந்து தெரிந்து கொண்டது.

அவன் அம்மாவுக்கு மந்திரம் மாயம் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டாம். என் நண்பனுக்கும் அதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்று சொல்லியதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். அவன் அம்மாவுக்கு ஒரு மாதிரியான சாமியார் கல்ட் க்ரூப்பில் பழக்கம் இருப்பதாகவும் சொன்னான். நான் சென்னையில் வளர்ந்த ஒரு நண்பனைப்பற்றிதான் சொல்கிறேன். சாதாரண கடவுள் நம்பிக்கையை நான் இங்கு சொல்லவில்லை. ஒரு மாதிரியான “கல்ட் க்ரூப்” நான் சொல்வது. அவன் அம்மாவை அவன் அப்பாவாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையாம். தற்போது அவன் அம்மா, அப்பாவுடனும் இவனுடனும் சேர்ந்து வாழவில்லை என்றும்.அப்பொழுதுதான் என்னிடம் சொன்னான்.

அவன் அண்ணா மட்டும் அவன் அம்மாவுடனசேர்ந்து வாழ்வதாகவும்,அவன் அவர்களிடம் இருப்பதால் அண்ணனால் இவனைப்போல் சரியாக படிக்க முடியவில்லை என்றும். அவன் அம்மா அவன் மூத்த பையன் என்பதால் எப்படியோ வசியம் பண்ணி தன் தந்தையிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் சொன்னான். அதைவிட கொடுமை என்னவென்றால், என் நண்பன் அவன் அம்மாவை எதற்காவது பார்க்கப்போகும்போது அவர்கள் கொடுக்கும் காஃபி டீயைக்கூட அவன் குடிக்க பயப்படுவேன் என்றான். ஏதாவது மந்திரம்,பொடி போட்டு இவனையும் அவன் அண்ணனை செய்ததுபோல் மயக்கி தன்னுடன் அழைத்துக்கொள்வார்கள் என்ற பயம் என்றான்.

அம்மாவைப்பார்த்து அவர்கள் கொடுக்கும் காஃபியைக்குடிக்க பயப்படும் ஒரு மகனை முதன் முதலில் சந்தித்தேன்.

அவன் சொன்னதையெல்லாம் இன்னும் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி சொல்லி ஆச்சர்யப்படுவேன்.

-தொடரும்

Thursday, October 16, 2008

காதல் கல்வெட்டு-14

இருவரும் கோயிலுக்கு உள்ளே சென்றார்கள். அந்த கோயில் நுழைவாயில் பேஸ்மெண்ட்ல இருந்தது. அந்தக் கோயிலில் கிழே பிரசாதம் (புளி சாதம், தயிர் சாதம், மசால் வடை) எல்லாம் விற்பார்கள். மாலையாகிவிட்டதால் இந்நேரம் விற்பதில்லை. கோயில் மேலே இருந்தது. கோயில் பிரஹாரத்திற்கு படியேறிச்செல்ல வேண்டும். படியேறி கோயில் மேலே சென்றால் எல்லா கடவுள்களும் அங்கே இருப்பார்கள். எல்லா கடவுளுக்கும் நடுநாயகமாக நாராயணன் (வெங்கடாஜலபதி) இருப்பார்.

மேலே படியேறும்போது, கயல், வருணை உரசியப்படி நடந்தாள்.

"கயல்! நீ கொஞ்சம் இடம் விட்டு நடக்கறியா, ப்ளீஸ்?!"

"அதென்ன வருண்? ஏன்?" என்றாள் மெல்லிய குரலில்.

"அது அப்படித்தான். என்னால் கோயில்ல சாமி கும்பிடுவதில் கான்செண்ட்ரேட் பண்ணமுடியாது. அப்புறம் தேவையில்லாத நினைவுகள் மனதில் இருக்கும். இதுக்குத்தான் நான் கோயிலுக்கே வருவதில்லை!"

"இதென்ன ஜோக்கா? நிஜம்மாத்தான் சொல்றீங்களா?"

"இல்லை கயல், சீரியஸாத்தான் சொல்றேன். கோயிலில் சாமி கும்பிட வரும்போது என்னை அழகான பெண்கள் டிஸ்ட்ராக்ட் பண்ணுவதுண்டு. சாமி கும்பிடுவதைவிட அவர்களை வேடிக்கைப்பார்த்தத்தான் தோனும். சாமி கும்பிடுவதைவிட்டுவிட்டு இப்படி மனம் அலைவதால் ரொம்ப கில்ட்டியா இருக்கும், கயல். அதனாலும் கோயிலுக்கு தேவை இல்லாமல் வருவதில்லை!"

"இப்போ நான் உங்களை டிஸ்ட்ராக்ட் பண்ணினேனா?"

"ஆமா! நீ இல்லை. சரி இதைப்பற்றி அப்புறம் பேசலாமே, ப்ளீஸ்?"

"சரி எனக்குப்புரியுது. வாங்க!" என்று புன்னகையுடன்.

வேண்டுமென்றே அவன் வலது கரத்தின் விரல்களுடன் தன் இடதுகரத்தைக் கோர்த்துக்கொண்டு மேலே நடந்தாள், கயல். கோயில் உள்ளே நுழைந்தவுடன் முன்னால் ஒரு டேபிளில் உட்கார்ந்து இருந்தவரிடம் அர்ச்சனைக்கு தேவையான பாக்கேஜ் வாங்கிக்கொண்டு நேராக பிரஹாரம் சென்றார்கள். அங்கே இருந்த நடுத்தர வயது அர்ச்சகரிடம் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள், கயல்.

அவர், "யார் பெயருக்கு அர்ச்சனை? நட்சத்திரம் என்னம்மா?" என்று கேட்டார்.

கயல், அம்மா பேரும் நட்சத்திரமும் சொன்னாள். அர்ச்சகர், சமஸ்கிரத்தில் மந்திரங்கள் சொல்லி அம்மா பெயருக்கு அர்ச்சனை செய்தார். வருண், தன் ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்ட முயற்சி செய்து இந்த முறையும் தோல்வியுற்றான். அது அவனுக்கு அர்த்தமற்றதாக தோன்றியது என்பதால் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு பேசாமல் அந்த சிலையில் இருந்த ஆடை ஆபரனங்களை வேடிக்கைப்பார்த்தான்.

பூசாரி, அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாதரணை காட்டிவிட்டு, பிரசாதம் எல்லாம் கொடுத்தார். அவர் தட்டில் தட்சனை வைத்துவிட்டு, ஒரு முறை எல்லா சாமிகளையும் சுற்றி வணங்கிவிட்டு, கோயில் நடுவில் வந்து தரையில் அமர்ந்தான், வருண். கோயிலுக்கு வருவதிலேயே, அவனுக்கு அங்கே கொஞ்ச நேரம் அமைதியாக அந்த குளிர்தரையில் அமர்ந்து இருப்பதுதான் அவனுக்கு ரொம்பப்பிடித்த விசயம்.

அவன் அருகில் வந்து அமர்ந்த, கயல், "சாமியிடம் என்ன வேண்டினீர்கள், வருண்?"

"அதுவா? "உங்க அம்மாவுக்கு அடிக்கடி பொறந்தநாள் வரனும். அடிக்கடி கோயிலுக்கு வந்து அவங்க பேருக்கு அர்ச்சனை செய்கிற சாக்கை வைத்து உன்னோட சேர்ந்து கோயிலில் சுத்தனும்னு வேண்ட முயற்சி செய்தேன். ஆனால் இதற்காக கடவுளிடம் வேண்டுவதெல்லாம் எனக்கு அர்த்தமில்லாமல் தோனுச்சு, அதனால் விட்டுவிட்டேன்"

"என்னோட சேர்ந்து நேரம் செலவழிப்பது உண்மையிலேயே பிடிக்குதா வருண்?" என்ற கயல், அவன் வலதுகரத்தை தன் மடியில் எடுத்து வைத்து தன் கரத்தால் அழுத்திக் கொண்டே கேட்டாள்.

"உண்மையிலேயே நல்லாயிருக்கு, கயல், உன்னோட இருக்கிற கொஞ்ச நேரம்" என்றான் வருண் அவளை ஆழமாகப்பார்த்துக்கொண்டு. கொஞ்ச நேரம் இரண்டு பேருமே பேசாமல் மெளனமாக இருந்தார்கள். சில நேரம் மெளனத்தை விட வீரியமிக்க மொழி இருப்பதில்லை.

"சரி வா, புறப்படுவோமா, கயல்?"

"வெளியில் அந்த மரத்தடியில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டுப் போவோமா?"

"சரி, வா, அந்த ஸ்டோன் பென்ச்ல உட்காரலாம்".

அங்கே மரத்தடி நிழலில் ஒரு ஸ்டோன் பென்ச் இருந்தது. அதில் அமர்ந்தான் வருண். அவன் அருகில் அமர்ந்தாள் கயல். அவள் மனது ஒரு மாதிரியாக இருந்தது. அம்மாவைப்பற்றி அர்ச்சனை செய்யும்போது மட்டும் ஒரு நிமிடம் நினைத்தாள். கோவிலில் வருண் சொன்னது அவளுக்கு மனதில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

"அம்மாவை கால் பண்ணி விஷ் பண்ணியாச்சா, கயல்?" என்று அமைதியைக் கலைத்தான், வருண்.

"இப்போ கூப்பிடவா வருண், இஃப் யு டோண்ட் மைண்ட்?"

"கூப்பிடு கயல்"

"ஹல்லோ"

"ஹாப்பி பர்த்டே அம்மா!"

"கயலா? அம்மா பிறந்தநாளை மறக்காமல் கூப்பிட்டுவிட்ட பாப்பா!"

"கோயிலுக்கு வந்து உன் பேருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, கோயில் வெளியே இருந்து கால் பண்றேன்"

"அப்படியா? நீ மட்டும் தனியாகவா வந்த, பாப்பா?"

"இல்லைம்மா, ஃப்ரெண்டு ஒருத்தரோட வந்தேன். அவரிடம் ஒரு வார்த்தை பேசுறியா?"

"வேணாம்டி. உன் ஃப்ரெண்ட் பேர் என்ன?"

"வருண், அம்மா. கொடுக்கிறேன் பேசு" என்று வருணிடம் கொடுத்தாள்.

"ஹாப்பி பர்த்டே ஆண்ட்டி"

"தேங்க்ஸ்"

"ஆண்ட்டி! உங்க மேலே கயல் எவ்ளோ உயிரா இருக்கா தெரியுமா ஆண்ட்டி? ஆமா நீங்களும் அவள் பிறந்த நாளுக்கு நீங்க கோயிலுக்கு போய், கடவுளிடம் அவளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டிக்குவீங்களா, ஆண்ட்டி?"

"இப்போ எனக்கு நல்ல புத்தி இல்லையா? கொழுப்புத்தானே உங்களுக்கு?"

"ஆமாம். நானும் கோயிலுக்கு போய் அவள் பெயருக்கு அர்ச்சனை பண்ணுவேன்"

"சரி ஆண்ட்டி, உங்களோட பேசியதில் மகிழ்ச்சி" என்று கயலிடம் கொடுத்தான்.

"யார்டி உன் ஃப்ரெண்டு?"

"ஏன்மா? அவர் பெயர் வருண். சொன்னேன் இல்லையா?"

"இல்லை, நீ இவரைப்பற்றி இதுவரை எதுவுமே சொன்னதே இல்லையே?"

"இப்போத்தான் சொல்லிட்டேன் இல்லை? சரிம்மா உன்னை விஷ் பண்ணத்தான் கூப்பிட்டேன், வச்சுடுறேன்" என்று முடித்தாள்.

"என்ன அதுக்குள்ளே பேசி முடிச்சுட்ட, கயல்?"

"ஏதாவது ஆரம்பித்துவிடுவார்கள், பாவம் நீங்கள்! அதான்"

"ஹேய் அடுத்தவாரம் என் வீட்டிற்கு வர்றியா?"

"எதுக்கு டின்னருக்கா வருண்?"

"அதெல்லாம் வேணாம். டீ மட்டும் தருவேன், வர்றியா?"

"இதென்ன கேள்வி? கட்டாயம் வர்றேன்"

"இல்ல, கொஞ்ச நாள்தான் பழக்கம். ஒருவேளை இவனொரு சைக்கோவா இருந்தால் என்ன பண்றதுனு, பயம்மா இல்லை?'

"நீங்கதான் பயப்படனும். எனக்கு உங்களிடம் பயம் எதுவும் இல்லை!"

"சரி போகலாமா, கயல்?"

"ஏன் என்னோட இருப்பது போர் அடிக்குதா?"

"இல்லை நேரம் ஆச்சு இல்லையா?'

இருவரும் எழுந்து காரில் அமர்ந்தார்கள். கயல், காரை வருண் வீடு நோக்கி ஓட்டிச்சென்றாள். அவளுக்கு எதுவும் பேசத்தோனவில்லை. வீடு வந்ததும், இறங்கிக்கொண்டான்.

"கவனமாக ட்ரைவ் பண்னு கயல், பை" என்றான்.

"குட் நைட் வருண்"

"அடுத்தவாரம் பார்ப்போம் என் வீட்டில், சரியா?"

"நிச்சயமா! பை வருண்"

அவள் கார் அவள் வீட்டைநோக்கி பயணித்தது

-தொடரும்

Tuesday, October 14, 2008

இந்த வார பூச்செண்டு: திரு. புதுகை அப்துல்லா




கயல்விழிக்கு வேறு வேலையே கிடையாதா? என்று அனைவரும் அலுத்துக்கொள்ளும் முன்பு ஒன்று தெரிவித்துக்கொள்கிறேன், நம் அனைவரிடமும் இப்படி ஏதாவது ஒரு விட்டொழிக்க வேண்டிய பழக்கம் இருக்கிறது, ஆனால் நமக்கு அந்தப் பழக்கத்தை விடுவதற்கான மன உறுதி இருக்கிறதா? உதாரணத்துக்கு, எனக்கு கூட கனவுலகத்திலேயே கார் ஓட்டும் கெட்ட பழக்கம் இருக்கிறது. சில நேரம் சேர வேண்டிய இடம் வந்த பிறகு, "இந்த இடத்துக்கு எப்படி வந்தோம்?" என்று கூட நினைத்திருக்கிறேன்.இப்படி கவனச்சிதறலோடு வாகனத்தை ஓட்டி ஒரு நாள் நான் மட்டுமில்லாது மற்றவர்களுக்கும் தொல்லை கொடுப்பது மாதிரியான விபத்தில் சிக்கப்போவது உறுதி!

அமரிக்கா வந்து நான் தெரிந்துக்கொண்ட ஒரு விஷயம், இங்கே அமரிக்கர்களுக்கு, அவர்கள் மேல் மற்றவர்கள் அதிகமான அக்கறையோ அல்லது உரிமையோ எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை. அவர்களுடைய ப்ரைவசி பாதிக்கிறதாம், அப்படி செய்வது ரொம்ப அநாகரீகமாம், அஃபெண்ட் ஆகிவிடுகிறார்களாம்! - இந்த பாடத்தை சீக்கிரமே அழுத்தம் திருத்தமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வந்தது.

எனக்கு யூனிவர்சிட்டியில் ஒரு அமரிக்க தோழி இருந்தார், அவருக்கு அனரெக்சியாவோ, எந்த எழவோ, என்ற நோய் இருந்தது(அது எனக்கு சத்தியமா தெரியாது). அந்தப்பெண் காலையில் இருந்து மாலை வரை சாப்பிட்ட மாதிரியே நினைவில்லை. நான் சாப்பிடும் போது சும்மா பக்கத்தில் உட்கார்ந்து கம்பனி கொடுப்பார். சில நாட்கள் பொறுமையாக இருந்துப்பார்த்தேன். பிறகு பொறுக்க முடியாமல், "கொஞ்சமாவது சாப்பிடு, இப்படி இருந்தால் உடம்புக்கு என்ன ஆகும்? கொஞ்சம் சாலடாவது சாப்பிடு" என்று தெரியாமல் சொல்லிவிட்டேன். உடனே அவளுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது, "Please try to be my friend,not my Mom. You are offending me!(தயவுசெய்து என் தோழியாக இருக்க முயற்சி செய், அம்மாவாக இல்லை. நீ என்னை அஃபெண்ட் பண்ணுகிறாய்!). தெரிஞ்சவங்க சொல்லுங்க, "அஃபெண்ட் பண்ணுவது" என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? நான் ரொம்ப நாளாகவே யோசித்த விஷயம் இது!

எனவே இப்போதெல்லாம் யாராவது என்னிடம் "நாளைக்கு நான் சாகப்போகிறேன்" என்று சொன்னாலும் என் இயல்பான பதட்டத்தை மறைத்துக்கொண்டு, "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி, மறக்காமல் தகவல் சொல்லுங்க, இல்லைனா ஈமெயில் அனுப்புங்க. உங்க இறுதிச்சடங்கில் கண்டிப்பா கலந்துக்கறேன்" என்று சொல்லும் அளவுக்கு தேறிவிட்டேன்.

இந்தியர்களும் இப்போதெல்லாம் அதே அமரிக்க கலாச்சாரத்துக்கு மாறிவிட்டாலும், எனக்கு அவர்களிடமும் அப்படியே தொடர்ந்து நடிக்க மனம் வருவதில்லை. இந்தியக்கலாச்சாரத்தில் மாற்றங்கள் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், அது ஒரு அப்டேட் அளவுக்கு இருக்கலாமே தவிர, முழுக்க முழுக்க நம் அடையாளத்தை தொலைக்கத்தேவையில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

அக்கறைக்காக மட்டுமில்லை, அவர்களுடைய முயற்சிக்காகவும், சமுதாயப்பொறுப்புணர்வுக்காகவும் சேர்த்து என்னிடம் "புகையை விட்டுவிட்டேன்" என்று தெரிவிப்பவர்களுக்கு ஒரு சப்போர்ட்டுக்காக வாழ்த்து பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். They deserve that much atleast!

இந்த வாரம் பாராட்டுக்குரியவர் திரு புதுகை அப்துல்லா அவர்கள். நான் பார்த்தவரைக்கும் மற்றவர்களை புண்படுத்தாமல் நாகரீகமாகவும், மனிதாபிமானத்துடனும் எழுதும் மிகச்சில பதிவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் பின்னூட்டம் வாயிலாக கீழ்கண்ட ஒரு முக்கியமான செய்தியை தெரிவித்திருந்தார்.

"கயல்விழி நான் நிறுத்திவிட்டேன் இந்த ரம்ஜான் நோன்பு இருந்ததில் இருந்து :))"


அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் :) You go guy!!!

Sunday, October 12, 2008

உருப்புடாதது_அணிமா செய்துக்கொண்டிருக்கும் உருப்படியான காரியம்

ஏதோ என்னால் முடிந்தது இது தான்..நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..
இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..

- உருப்புடாதது_அணிமா


மேலிருக்கும் பின்னூட்டத்தை எனக்கு எழுதியவர் பதிவர் திரு.உருப்புடாதது_அணிமா. சக இந்தியர்கள்/தமிழர்களிடம்(எந்த நாட்டில் இருந்தாலும்) நான் 'இல்லையே' என வருந்துவது, அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மை. யாராவது எப்படியாவது போகட்டும், என்னுடைய வேலை கெடக்கூடாது என்று நினைக்கும் சுயநலம். பல சமுதாய அவலங்களுக்கும், சுகாதாரக்கேட்டுக்கும் இந்த பொறுப்பின்மையே காரணம் என்று நினைக்கிறேன்.

கோடைகாலத்தில் மின்வெட்டினால் அவதிப்படும் போது எப்போதாவது வரும் மெல்லிய தென்றல் போல அணிமா போன்ற மனிதர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். அணிமாவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை! பாராட்டு வெறும் புகைப்பிடித்தலை விடுவதற்காக மட்டுமல்ல, சமுதாய அக்கறையுடன் செயல்படுவதற்கும் சேர்த்து. வாழ்த்துக்கள் அணிமா!

Wednesday, October 8, 2008

புகைப்பழக்கம் : ஒரு புகைப்பிடிக்காதவளின் கண்ணோட்டம்!

டிஸ்கி: எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதால், என்னுடைய கருத்துக்கள் ஒரு பக்க சார்புடையதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.



புகைக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே ஒத்துவரவில்லை, எல்லாம் புகைப்பவர்கள் மேல் இருந்து வரும் அந்த பயங்கரமான வாடையே காரணம். என்னுடைய சிறு வயதில் அப்பாவுக்கு இந்த புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் வீட்டுக்குள் இல்லை. அவர் வேலையில் இருந்து வரும் போதே நான் ஓடிப்போய் வரவேற்பது வழக்கம், அப்போதெல்லாம் 'குப்'பென்ற நெடி எனக்கு வயிற்றை புரட்டும். அப்பா என் எதிரில் புகைப்பதில்லை என்பதால் அது என்னவென்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் போகப்போக அவர் புகைகிறார், அவர் மேலிருந்து வருவது சிகரெட் நாற்றம் என்பது புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு நாள் "நீங்கள் இனிமேல் சிகரெட் பிடித்தீர்கள் என்றால் இனிமேல் உங்க மடியில் அல்லது பக்கத்தில் கூட உட்கார மாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட, அதோடு புகைப்பழக்கத்தை அடியோடு அவர் நிறுத்தி 20 வருடம் ஆகிறது.

அதற்கு பிறகு புகைப்பிடித்தலைப்பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை, 'நாற்றம் பிடிக்கவில்லை' என்பதைத்தவிர புகைப்பழக்கத்தைப்பற்றி கம்ப்ளெயிண்ட் பண்ண எனக்கு வேறெதுவும் இல்லை. பின்னர் வளர்ந்த பிறகு ஒரு நாள் ஒரு அமரிக்க மருத்துவ வார இதழில், செக்கண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங் பற்றிய ஒரு கட்டுரையைப்படித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. "நாம் புகைப்பிடிக்கவில்லை என்றால் கூட நமக்கு ஆபத்தா?" வியப்பாக இருந்தது. மேலும் சில புத்தகங்களை படித்ததில் அதிர்ச்சி ரக தகவல்கள்!

ஆதி கால மனிதர்களுக்கு தற்செயலாக புகையிலைச்செடிகளைப்பற்றிய விவரம் தெரியவந்தது. செடியில் பச்சையாக இருப்பதை விட, காய வைத்து எரிக்கும் போது நிக்கோட்டின் தரும் போதை பல மடங்கு அதிகரிப்பதை கண்டுபிடித்தார்கள். நாகரீகம் அடைந்தவுடன் பைப் வழியாக புகைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.அப்படி பரவியது புகையிலை மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதை செடிகளும் தான். மற்ற போதை பொருட்களுக்கும் புகையிலைக்கும் ஒரு அடிப்படை வித்யாசம் என்னவென்றால், மற்ற போதைப்பொருட்கள் போல செயல் திறனை புகையிலை வெளிப்படையாக பாதிக்கவில்லை.

இது போதாதா? புகைக்கும் வழக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் தற்போது கிடைக்கும் மார்டன் சிகரெட்டுகள் கிடைக்கத்தொடங்கியதும், காட்டுத்தீ போல இந்த புகைப்பழக்கம் பரவத்தொடங்கியது. ஐரோப்பியர்களிடம், சீனர்களிடமும் இன்றளவும் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. "பெண்கள் புகைத்தால் உடல் இளைக்கலாம்" என்ற புரளியை சிகரெட் கம்பனிகள் கிளப்பிவிட்டு விட, பெண்களையும் இந்த தீயப்பழக்கம் தொற்றிக்கொண்டது."வெர்ஜினியா ஸ்லிம்ஸ்" போன்ற பெண்களுக்கான சிகரெட்டுகள் 1960துகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும் கூட சில சிகரெட் விளம்பரங்களில் ஒரு அழகான பெண் மாடல் ஸ்டைலாக புகைபிடிப்பது போல இருக்கும் படத்தை சிலர் பார்த்திருக்கலாம். புகைக்கும் பெண்கள் செக்ஸியாக கருத்தப்பட்டார்கள். புகைப்பழக்கத்துக்கு செக்ஸ் மற்றும் ஸ்டைல் வர்ணம் பூசப்பட்டது. சிகரெட் கம்பனிகள் பணத்தில் பல்விளக்கி, பணத்திலேயே குளித்தார்கள். இந்தியாவில் திரைப்பட நடிகர் நடிகைகள், மக்களிடையே புகைப்பழக்கத்தை ஸ்டைலாக பரப்பி புண்ணியம் தேடிக்கொண்டார்கள். முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நடிகர் சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பது 80களில் ரொம்ப பாப்புலராக இருந்த ஸ்டைல்.

சிகரெட் கம்பனிகள் அடிவாங்கத்துவங்கியது, கடந்த 30 வருடங்களில் தான். நுரையீரல் புற்று நோய் மற்றும் இதயநோய்களுக்கும் புகைப்பழக்கத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளிலும் சிகரெட் விளம்பரம் மற்றும் சிகரெட் பெட்டிகள் ஏதாவது ஒரு ஹெல்த் வார்னிங்கோடு மட்டுமே வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சிகரெட் பெட்டிகளின் மேல் இந்த எச்சரிக்கை செய்திகளை பார்த்தும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களை என்ன சொல்லி நொந்துக்கொள்வது? நுரையீரல் புற்றுநோயாளிகளில் பத்தில் ஒன்பது பேர் புகைப்பிடிப்பவர்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. அது மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் புகைப்பிடித்தல் சம்மந்தமான நோய்களில் இறக்கிறார்களாம்.

இறந்துவிடுவது எத்தனையோ மேல், ஆனால் புகைப்பிடிப்பவர்கள் உயிரோடு இருக்கும் போதே சித்திரவதை அனுபவிக்கிறார்கள். சிகரெட் புகைப்பதால் உடலுக்குள் போகும் நச்சுப்பொருட்கள், தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான உடலுறுப்புகளை பாதித்து, "புகைப்பிடிப்பவர்களின் இருமல்(Smoker's cough)" வந்து அவதிப்படுகிறார்கள். மேலும் பசியின்மை, உணவின் சுவை தெரியாமல் போகுதல், கைகால் மரத்துப்போதல் மற்றும் சில்லிடுதல், தோல் மற்றும் பற்களின் நிறம் மாறுதல், ஆண்மைக்குறைவு போன்றவை ஏற்படுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மலட்டுத்தன்மை, பிரசவத்தில் பல சிக்கல்கள், எடை குறைவான குழந்தைகள் போன்ற பல பிரச்சினைகள் பெண்களை தாக்குகின்றன.

இத்தனை பிரச்சினைகள் வந்தும் இவர்கள் மட்டும் புகைப்பிடித்து அழிந்துப்போவதோடு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அழிப்பதே இங்கே முக்கியமான பிரச்சினை. புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் நச்சுப்புகையினால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் 30% சதம் வரையிலும் அதிகரிக்கிறதாம். முக்கியமாக இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறிந்துதான் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பலர் வீட்டில் புகைப்பதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது ஆனால் ஊர் மக்கள் எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்று நினைப்பது என்ன லாஜிக்?

அமரிக்காவில் சில மாநிலங்களில் பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்படவில்லை என்றாலும், நிறைய பேர் புகைக்க மாட்டார்கள். அப்படி புகைத்தே தீர வேண்டும் என்ற அடிக்ஷன் இருப்பவர்களுக்கு தனியாக புகைக்கும் ஏரியாக்கள் உண்டு. மேலும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் ஒருவர் புகைக்கும் போது நமக்கு ஆகவில்லை என்றால் எங்கேயாவது தூர ஓடி தப்பித்துவிடலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில் மக்களுக்கு நகர இடமில்லை, ஏற்கெனெவே வாகனப்புகையால் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இதில் புகைப்பிடிப்பவர்களின் நியூசன்ஸ் வேறு!

பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்வது தனிநபர் சுதந்திர அத்துமீறலாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. உங்களுடைய தனி மனித சுதந்திரம் மற்றவர்களை எப்போது பாதிக்க ஆரம்பிக்கிறதோ, அப்போதே அத்துமீறலாகிவிடுகிறது. "Your freedom ends where my nose starts" என்ற சொற்றொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாகனப்புகையையும், சிகரெட் புகையையும் ஒப்பிடுவது சரி இல்லை, ஏனென்றால் சிகரெட் புகை வாகனப்புகையை விட கேடு விளைவிக்க கூடியது. வாகனங்களாவது போக்குவரத்துக்கு பயன்படுகிறது, சிகரெட் புகைப்பதால் யாருக்கு என்ன பயன்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒருவரைப்பார்த்து, "ஏன் திருடுகிறாய், அது சட்டப்படி குற்றம்" என்றால் உடனே அவர் "பக்கத்தில் இருப்பவர்கள் கொலையே செய்யும் போது நான் திருடுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அத்தனை அபத்தமானது.

இந்த கட்டுரையின் நோக்கம், புகைப்பிடிப்பவர்களை திட்டவோ அல்லது அவமானப்படுத்தவோ அல்ல. பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருக்கும் சட்டத்தை எதிர்த்து புலம்புவதை விட, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இந்த தீய பழக்கத்தை அடியோடு விட்டுவிடலாமே? மேலும் சிகரெட் புகைக்காததால் பணமும் மிச்சமாகும். சிகரெட் கம்பனிகள் மேல் விதிக்கப்படும் அதிகபட்ச வரிகளை எங்கே இருந்து திரும்ப எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? புகைப்பிடிக்கும் உங்களிடமிருந்து தான்!

பணத்தை விடுங்கள், உடல் நலம் ரொம்ப முக்கியம். புகைப்பதை விட்ட ஒரு வாரத்தில் உடல் நிலை வியப்படைய வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறதாம். மூச்சு விடுவது சுலபமாவதில் ஆரம்பித்து, தோலின் நிறம் சீரடைவது, சுவை மீண்டும் உணர ஆரம்பிப்பது போன்ற நல்ல மாற்றங்களை உடனடியாக உணர முடியும். புகைப்பிடித்தால் வரும் பின்விளைவுகளும்(withdrawal effects) 10 நாட்களுக்குள் மறைந்துவிடுவதாக தெரிவிக்கிறார்கள். நீண்டகால முன்னேற்றமாக, புகைப்பதை விட்ட அடுத்த ஐந்து வருடத்தில் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள், இதய நோய்கள் போன்ற பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறதாம். புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்காக இல்லை என்றாலும் மற்றவர்களுக்காகவாவது இந்த பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

Monday, October 6, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 7

சற்று இடைவெளி விட்டு எழுதுவதால் மற்ற இணைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்:
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

சமீபத்தில் ஒரு மதிப்பிற்குரிய நல்ல நண்பருக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை பிடிக்கவில்லை என்று அறிந்துக்கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் சாதாரணமாக எல்லாம் இல்லை, ஒரு விதமான வெறுப்பு!. அவருடைய கோபத்தைப்பார்த்து அந்த எழுத்தாளர் அப்படி என்னத்தான் எழுதுகிறார் என்று பார்க்கும் ஆவல் வந்தது. அவருடைய வலைதளத்தை படித்துப்பார்த்ததில், அவருக்கு வயது குறைவான பெண்களின் மேல் ஆர்வம்(அதில் என்ன பெருமையோ??) அதிகம் போல இருந்தது. 17 வயதில் எல்லாம் கேர்ள் ப்ரெண்ட் வைத்திருக்கிறாராம்(18 வயதுக்கு கீழான பெண்களிடம் பெற்றோர் சம்மதமில்லாத உறவு வைத்திருப்பது தவறில்லையா?).

சரி இந்தியாவில் வயது வரம்புக்கு எல்லாம் முக்கியத்துவம் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாகவே ஆண்களுக்கு வயது குறைவான பெண்களையே பிடிக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் அப்படித்தான். ஒரு முறை அதைப்பற்றி ஆராய்ச்சி பண்ணியதில், வயது குறைவான பெண்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இனப்பெருக்கத்தின் ஆபத்தான எல்லையில், விளிம்பில் நிற்கும் நடுத்தர வயது ஆண்களுக்கு வயது குறைவான பெண்களைப்பிடிக்கிறதாம். சப்கான்ஷியஸாக தங்களின் வாரிசை மேலும் பெருகப்பண்ணும் மனிதர்களுக்குண்டான இயல்பான ஆர்வம்! Probogation of species.

நண்பருக்கு இருப்பது மாதிரி அந்த எழுத்தாளர் மீது வெறுப்பெல்லாம் வரவில்லை, ஆனால் ஒரு முக்கியமான கேள்வி மனதை பிசைந்தது. வாரிசு தேவை என்றால் பரவாயில்லை, இந்தக்காலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தால் யாருக்குமே அதிகப்படியான வாரிசு தேவை இல்லாதபோது, சம வயது பெண்களை ஏன் காதலிக்க கூடாது? அவர்கள் அழகில்லையா? இப்படியே நடுத்தர வயது பெண்களும் இளவயது ஆண்களை நாடத்துவங்கினால் என்னாவது? பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மனது வைத்தால் எந்த வயதிலும் அழகாக இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அழகு என்பது எண்ணத்தில் மற்றும் செயலில் இருக்கிறது, உடலில் அல்ல.

இந்த கருத்தை எழுத ஒரு முக்கியக்காரணம், எழுத்தாளரின் சில கட்டுரைகள்(கதைகள்) என்னை மீண்டும் யூனிவர்ச்சிட்டி வகுப்பறையில் கொண்டு வந்து நிறுத்தியது. அந்தக் குறிப்பிட்ட பேராசிரியருக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும். அவர் வகுப்புக்கே போக வெறுப்பாக இருக்கும்! கம்ப்யூட்டர் லாப்பில் நடக்கும் வகுப்பு என்பதால், சந்தேகம் சொல்லிக்கொடுக்கிறேன் பேர்விழி என்று அளவுக்கு அதிகமாக உரசுவார். "நீங்க வேண்டுமானால் உட்கார்ந்து சொல்லிகொடுங்கள், நான் எழுந்து நிற்கிறேன்" என்றால் அதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டார், நான் உட்கார வேண்டும் அவர் என்னை உரசியப்படி நின்றுக்கொண்டே சொல்லித்தர வேண்டும், இல்லை என்றால் அவருக்கு உயிரே போய்விடும்!. மற்ற பெண்களிடமும் இதே மாதிரி சில்மிஷம் செய்தாலும், அவருக்கு இந்தியப்பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போல, நான் பயந்துக்கொண்டு சந்தேகமே கேட்காமல் இருந்தாலும் அவர் 15 நிமிடமாவது எனக்கு சொல்லித்தராமல்(உரசாமல்) இருந்ததில்லை.

இந்தியாவில், பஸ் கூட்டத்தில் இது போன்ற பொறுக்கிகள் தொல்லைப்படுத்திய அனுபவம் இருந்தாலும், ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியரிடம் இருந்து இத்தகைய பொறுக்கித்தனத்தை(மன்னிக்கவும், இந்த கேவலமான செயலை குறிப்பிடுவதற்கு வேறெந்த வார்த்தையும் எனக்கு தெரியவில்லை) நான் எதிர்ப்பார்க்கவில்லை, உடலெல்லாம் பற்றி எரிவது போல அருவருப்பாக இருக்கும். நீங்கள் பெண்ணாக இல்லாத பட்சத்தில் இதை அனுபவப்பூர்வமாக உணர முடியாது என்று நினைக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி, பெண்களுக்கும் காமம் பிடிக்கும் என்றாலும், அது இயல்பாக ஒரு பூ மலருவது போல மனதுக்கு பிடித்திருந்தால் தான் இனிக்கும். இப்படி வற்புறுத்தலாலும், கட்டாயத்தாலும் காமம் வரவே வராது! மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் கணவன் - மனைவி உறவாக இருந்தால் கூட பெண்கள் வெறுத்துவிடுவார்கள். இதை தான் கற்பு என்று குறிப்பிட்டார்களா என்று தெரியாது, ஆனால் எனக்கு அப்படி அழைக்க பிடிப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை இது ஒரு preference or personal choice.

செமஸ்டர் முடிய 2 மாதங்களே இருக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆசிரியர் டெஸ்பெரேடாக துவங்கினார். உரசல்கள் எல்லை மீறல்களாக மாறத்துவங்கியது, சக மாணவர்களின் நமட்டுச்சிரிப்பு வேறு! ஒரு மாணவர் வேண்டுமென்றே தன் நண்பரிடம் என் காதில் விழுவது மாதிரி கிண்டலடிக்க துவங்கினார். "ஏதுவுமே படிக்கவில்லை என்றாலும் பாடத்தில் 'A' வாங்குவது எப்படி என்பதை இந்த வகுப்பில் இருந்து தெரிந்துக்கொண்டேன், துரதிஷ்டவசமாக நம்மிடம் சில 'உறுப்புகள்' இல்லை என்பதால் அந்த ஐடியாக்களை செயல்படுத்த முடியாது"

ரொம்ப வருத்தமாக இருந்தது, எவனோ ஏதோ உளறினான் என்பதற்காக மட்டுமில்லை, நிஜமாகவே கஷ்டப்பட்டு இரவும் பகலும் படிக்கும் என்னை ரொம்ப அவமானப்படுத்துவது போல இருந்தது. அடுத்த முறை வகுப்பில் திரும்பவும் அதே ஆசிரியர், அதே வரம்பு மீறல். இந்த முறை வழக்கம் போல அமைதியாக இருக்கவில்லை, மெதுவான ஆனால் உறுதியான குரலில் "கொஞ்சம் என் உடலில் இருந்து கையை எடுக்கறீர்களா, ப்ளீஸ்?" வகுப்பறையில் கனத்த மெளனம், அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் முகம் வெளிறியது, வெள்ளைக்காரர் என்பதால் முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது. தடுமாற்றத்துடன், "என்ன சொல்கிறாய் நீ?" என்றார். நான் திரும்பவும் நிதானமாக, அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து, "என் உடலில் இருந்து கையை எடுக்கிறீர்களா என்றேன்"

அன்று மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு. அதற்கு பிறகு அந்த குறிப்பிட்ட பேராசிரியர் என்னிடம் வம்பு பண்ணவில்லை, தூரத்தில் இருந்தே உக்கிரமாக முறைப்பார். அவர் முறைத்தலை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை, நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை. செம்ஸ்டர் முடிவில் என்னுடைய Final project-டுக்கு 'B' கொடுத்திருந்தார். அந்த வகுப்பு ஒரு Easy 'A' வகுப்பு, அதாவது சுலபமாக நல்ல மதிப்பெண்கள் வாங்கக்கூடிய வகுப்பு(அந்த பாடத்தை முக்கியமாக தேர்வு செய்த காரணமே அது தான்). ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றுபவரை கேள்வி கேட்பது கடினம், நிச்சயமாக எனக்கு குறைவான மதிப்பெண் கொடுத்ததற்கான காரணத்தை அவரால் சுலபமாக ஜோடிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை, எனக்கு புது நம்பிக்கையும், தைரியமும் பிறந்தது. "எதுவாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்" என்ற தன்னம்பிக்கை. அந்த உணர்வை உங்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினம், அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!

- நினைவுகள் தொடரும்