புதுசா ஏதாவது கதை எழுதணும்னு உக்காந்து தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான், மோஹன். அவன் என்ன
யோசித்தாலும் அவனுக்கு வரும் சிந்தனைகள் எல்லாமே ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே
இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில்
இருந்து இன்றைய எந்திர வாழ்விலும் இருக்கும் பழமையானவைதானே? இதிலே என்னத்த புதுமையை புகுத்துவது? பொறாமை,
வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை
எல்லாம் காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டுவரும் உணர்வுகள்தானே? காதல் தோல்வி,
நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம்
காலங்காலமா பல கதைகளில் பலர் எழுதிட்டாங்ளே. இதிலே என்னத்த புதுசா நம்ம எழுதிக்
கிழிக்கிறது? மோஹன் எதை எடுத்து ஒரு புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும்
அதிலே தெரியவில்லை! எல்லாமே ஏற்கனவே பலர் இவனைவிட நல்லாவே
அனுபவித்து எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை
எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லணும்?.
அப்படி ஏதாவது எழுதினால் ஏதாவது புதுசா ஒரு ப்ளாட் வச்சுக் கதை எழுதணும்! எதையாவது புதுமையாகச் சொல்லணும்! இதுவரை யாருமே சொல்லாதது.
இதுவரை யாருமே எழுதாதது. இப்ப விகடன் குமுததில் வருகிற எல்லாமே
பழசாத்தான் தோனுது. அதி வரும் கதைகள் பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல
இருக்கு.
ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா?
அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் பெரிதாக திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே?
என்ன பண்றது?
சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!
அப்போ ஹோமோ
செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்களுடைய காதல்
மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால்? மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி
திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே? ஒரு சில வாசகர்களாவது புரிந்துகொள்வார்களே?
இல்லை வில்லனை
ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது நம்ம ஃபேர்ரி டேல்களில் உள்ளது போலல்லாமல் கெட்டவன் நல்லா
வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும்
அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன? அதாவது ஹிட்லர் உலகை வென்றதுபோல! உலகத்தில் இதுபோல
நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா?
புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? என்ன கதை எழுதினாலும் கதையின்
நாயகன் நல்லவனாகத்தான் இருக்கணுமா? அப்படித்தானே
காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது?
பேசாமல்
கடவுள் மனிதன் செய்யும் அயோக்கித்தனத்தைப் பார்த்து துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை ஒரு சில நல்ல மனிதர்கள் காப்பாத்தி, சமாதானப் படுத்தி வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால்
இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமே? ஆனால் கதை படிக்கிறவன்ல
90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால்,
கதைக்கு "படுகேவலம்" னுதான் விமர்சனம் வரும். அதென்ன வாசகர்களை திருப்தி
படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை துணிவாக வெளிப்படுத்துபவன் இல்லையா உண்மையான எழுத்தாளன்?
இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக் கொண்டிருக்கும்போது..
"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி ஒரு தினுஷான இழுவையுடன்.
"சும்மாதான்..ஏதாவது புதுமையா எழுதலாம்னு ஒரு புது
ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்" என்றான்.
"நீங்க இன்னும் இதை விடலையா?"
"எதை?"
"அதான் இந்த
கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு
செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து
மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்குங்க இதெல்லாம்?"
"உன்னிடம்
போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையுமே உனக்குப் பிடிக்காது!
உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்ணச்சொன்னால் மொதல்ல, கதையில் வரும் ஹீரோயினைத்தான் கவனிப்ப, உனக்கு என் கதையில்
வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே மனசாட்சியே
இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுவ!"
"என்ன சொல்றீங்க? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனு தானே சொல்ல வர்றீங்க?"
"இல்லை.
உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த
ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ
கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்தக் கதை, அதில் வருகிற
கேரக்டர்கள் இதெல்லாம்? நீ அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "
"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சு ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"
"சும்மா ஒரு கற்பனைக் கதைதானே? கற்பனை நாயகிதானே அவள்?"
"உங்க கற்பனையில் வரும் பொண்ணும் நிஜம்தான்!"
"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"
"அது
நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான உணர்ச்சிகள் உள்ள பெண்தான். உங்களால
நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட நல்லா ஜொள்ளு விடுறீங்க"
"நாசமாப் போச்சு போ!"
"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த ஹீரோயின் எப்போவுமே என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."
"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"
"இருந்துட்டுப் போகட்டுமே?"
"அப்படி எழுதினால் யார் படிப்பா?"
"ஏன் படிக்க மாட்டாங்க?"
"
சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல்
வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம்
போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"
"அதனால?"
"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னைச் சொல்லனும்"
"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"
"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்து விடேன்?"
"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதை நினத்து சந்தோஷப்படுங்கள்! அதுவும் இல்லாமல் போயிடப்போது!"
"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"
"உண்மை அதுதான்!"
"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"
"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".
"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாருமே கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்.பலர் பிச்சைக்காரகள்தான்"
"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"
"அவர்
சம்பாரிச்சது கதை எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை
இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா
பொழுதுபோக்குக்காக, பேரு, புகழுக்காக எழுதினாராம்."
"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"
"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'
"எவ்வளவு?"
"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"
"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"
-முற்றும்
**************
நீங்க படிச்சது இல்லைதானே?
ஏற்கனவே படிச்சாச்சா?!!
ஆமா இதுவும் மீள்பதிவுதான்.