Showing posts with label எம் ஜி ஆர். Show all posts
Showing posts with label எம் ஜி ஆர். Show all posts

Friday, January 30, 2009

எம் ஜி ஆர் vs ரஜினி (2)

* எம் ஜி ஆர், சினிமாவில் கத்தி சண்டை, சிலம்பம் எல்லாம் நல்லாவே போடுவாரு. ஹைதர் காலத்து எம் ஜி ஆர் ரசிகர்களெல்லாம் இதை சொல்லுவார்கள். சினிமாவில்தான் இருந்தாலும் இதற்கும் நல்ல பரிச்சயம், திறமை வேணும். ரஜினிக்கு இதுபோல் சண்டைகளில் பரிச்சயம் இல்லை. அடுத்த வாரிசுவில் இவர் செய்யும் வாள் சண்டை அவ்வளவு சிறப்பாக இருக்காது .

* எம் ஜி ஆர், உடல் ஊனமுற்றவராக நடித்ததாக எனக்கு எந்தப்படமும் தெரியாது. அடிமைப்பெண்னில் வருகிற வேங்கையன் முதலில் கூனாக வந்தாலும் பிறகு நிமிர்ந்து நல்லாகிவிடுவார். ரஜினி முள்ளும் மலரும் படத்தில் ஒரு கை இழந்தவராக நடித்து இருக்கிறார்.

* எம் ஜி ஆர் காமெடி படமோ, அல்லது காமெடி ரோல் போல நடித்ததில்லை. அவருக்கு காமெடியெல்லாம் வருமா என்னனு தெரியலை. ரிஷபன் சொன்னது போல் ரஜினிக்கு காமெடி மிகப்பெரிய பலம். அவர் நடித்த தில்லு முல்லு முழு நீள காமெடிப்படம். மேலும் காமெடியன்கள், கவுண்டமணி, விசு, செந்தில், வடிவேலு, விவேக் (மன்னன், வீரா, சந்திரமுகி, சிவாஜி) போன்றவர்களுடன் இணைந்து காமெடி செய்துள்ளார்.

* எம் ஜி ஆர் படங்களில் இரண்டாவது ஹீரோ என்பது ரொம்ப கஷ்டம். ஜெமினி, எஸ் எஸ் ஆர், முத்துராமன் போன்றவர்கள் சிவாஜியுடன் நிறையப்படங்களில் இணைந்து நடித்தூள்ளார்கள் அவர்களுக்கு தனியாக டூயட்களும் வரும். ஆனால் எம் ஜி ஆர் படங்களில் அது போல் அவர் யாருக்கும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டதாக தெரியவில்ல! ஜெமினி, முத்து ராமன், மற்றும் சிவாஜி (கூண்டுக்கிளி) போன்றவர்கள் எம் ஜி ஆருடன் இணணந்து நடித்த படங்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும்தான். பொன்மனச்செம்மல் தான். ஆனால் இன்னொருவருக்கு நல்ல ரோல் கொடுக்கும் அளவுக்கு பெரிய மனது அல்லது தன் நடிப்பில் நம்பிக்கை இவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ரஜினியுடன் அவர் சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் பிரபு (குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்), சத்யராஜ் (மிஸ்டர் பாரத்), மற்றும் சிவாஜி (படையப்பா, படிக்காதவன்) போன்றவர்களுக்கு நல்ல ரோல் கொடுத்து நடித்துள்ளார். இன்னொருவர் தன் புகழை அடித்துப்போய்விடுவார் என்று ரஜினி அதிகம் பயப்படுவது இல்லை. அவர் நடிப்பின்மேல் அவருக்கு நம்பிக்கை ஜாஸ்தியோ என்னவோ.

* எம் ஜி ஆர் இயக்கிய படங்கள் இரண்டு. அது இரண்டையும் தயாரித்ததும் அவரே. அவைகள், நாடோடி மன்னன் (1958)மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் (1973) . இரண்டும் மாபெரும் வெற்றிப்படங்கள். இந்த இரண்டு படங்கள் வந்த வருடத்தில் எம் ஜி ஆர் வெளியிட்ட படங்கள் ஒன்று (1958) அல்லது இரண்டு (பட்டிக்காட்டு பொன்னையா 1973- இது ஒரு தோல்விப்படம்) மட்டுமே. ரஜினி ஒரு இயக்குனராக எந்தப்படத்தையும் இயக்கியதில்லை!

* கெளரவ வேடத்தில் நடிப்பதை அகெளவரவமாக நினைப்பவர் எம் ஜி ஆர் என்று நினைக்கிறேன். இவர் கெளரவ வேடங்களில் நடித்து எந்தப்படமும் நான் பார்த்ததில்லை. ரஜினி , அன்புள்ள ரஜினிகாந்த், மற்றும் பல படங்களில் கெளரவ வேடங்களில் நடித்து உள்ளார்.

* எம் ஜி ஆர் க்கு இசையமைப்பாளர்கள் யாரும் பின்னனி பாடல்கள் பாடியதாக எனக்கு தெரிய இல்லை. ரஜினிக்கு எம் எஸ் விஸ்வநாதன் (சம்போ ஷிவ சம்போ, நினைத்தாலே இனிக்கும்), இளளயராஜா (உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, பணக்காரன்), மற்றும் எ ஆர் ரகுமான் (அதிரடிக்காரன், சிவாஜி) போன்றவர்கள் பின்னனி பாடியுள்ளார்கள்.

* எம் ஜி ஆர் கடைசிவரை, இளைஞனாகவேதான் நடித்தார். ரெண்டு ரோலில் அப்பா இறந்து போவதுபோல் வரலாம் (அடிமைப்பெண்). ஆனால் வயது வந்த பெண்ணுக்கு, பையனுக்கு தந்தை என்பது போலெல்லாம் வயதான தந்தையாக அல்லது கிழவனாக நடித்ததாக தெரியவில்லை (ஒரு சில பாடல்களில் அந்த் கெட்-அப்ல வருவதுண்டு). ரஜினி, 6-60 வரை, எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, படையப்பா போன்ற படங்களில் வயது வந்த பெண் குழந்தைக்கு தந்தையாகவும் நடித்தும் உள்ளார்.

குறிப்பு: நான் நிறைய "டேட்டா" தவறுதலாக கொடுத்து இருக்கலாம். எம் ஜி ஆர் பழைய படங்கள் (40, 50, 60 ல் வந்த படங்கள்) நான் பல பார்த்ததில்லை . தவறுதலாக சொன்ன விசயங்கள் எதுவும் இருந்தால் தயவு செய்து பின்னூட்டங்களில் சொல்லவும்.