Monday, June 30, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி)



நான் முதன் முதலில் அமரிக்கா வந்த போது என் அம்மா ஏர்போர்ட்டில் என் தலை மறையும் வரை சொல்லிக்கொண்டே இருந்தது "போய் சேர்ந்தவுடனே ரங்கராஜன் மாமாவையும், கலா மாமியையும் காண்டாக்ட் பண்ண மறந்துடாதடீ". என்னவோ என்னுடைய அமரிக்க வாழ்கையே என்னுடைய தூரத்து உறவினர்களான ரங்கராஜன் தம்பதியினரிடம் அடங்கி இருப்பதை மாதிரி ஒரு பில்டப் தந்தார். அதே மாதிரி லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் வாசலில் ரங்கராஜன் தம்பதி தயாராக காத்திருந்தனர்.

வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு மாமி தான் முதலில் கேட்டார் "உன்னை எங்கேமா கொண்டு போய் விடனும்?"

"என்னுடைய காலேஜுக்கு மாமி, டார்ம் ரூமில் தான் ஸ்டே பண்ணப்போறேன்"

இடையில் மாமா குறுக்கிட்டு, "முதலில் வீட்டுக்கு வாம்மா, டார்ம் விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்". மாமி ரகசியமாக மாமாவை முறைத்ததை நான் கவனிக்க தவறவில்லை. புது ஊரை, முகங்களை பார்க்கும் பயம் மற்றும் பயணக்களைப்பு(நான் வந்து சேர்ந்த நேரம் இந்தியாவில் பகல் 3 மணி) இருந்ததால் அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. வீடு வரும் வரை காரில் அசாதாரணமான அமைதி நிலவியது.


வீடு வந்தவுடன் அப்பா- அம்மாவுக்கு நலமுடன் ஊர் வந்து சேர்ந்த விஷயத்தை கால் பண்ணி சொல்லிவிட்டு, பிறகு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அவர்கள் குழந்தைகளூடன் பேசிக்கொண்டிருந்தேன். மாமி ஏதோ நினைவுக்கு வந்தவளாக, "என்னோட வா கயல், மேல் தளத்தில் இருக்கும் கெஸ்ட் ரூம் காட்டறேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துக்கோ". நான் மேல் தளத்தில் இருந்த கெஸ்ட் ரூமில் தூங்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டது, தூக்கமில்லாமல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூங்கவிடாமல் ஏதோ பண்ணியது. சிறிது நேரத்துக்கு பிறகு படுத்திருப்பது சலிப்பாக இருக்கவே கீழே இறங்கி வந்து லிவ்விங் ரூமில் இருந்த புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.

பக்கத்து அறை மாஸ்டர் பெட்ரூமில், மாமியும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக கத்தலாக மாறியது. நான் கேட்க முயற்சி பண்ணவில்லை என்றாலும் கேட்பதை தடுக்கமுடியவில்லை.

"இப்போ என்ன அந்த பொண்ணு மேலே தனி கரிசனம் உங்களுக்கு?"

" என்ன கலா இப்படி பேசறே, அது நம்ம சொந்தக்கார பொண்ணு இல்லையா?"

"உங்களை விட எனக்கு தான் சொந்தம், அதான் கேட்கறேனே, எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்?"

"வாயை மூடுடி, இப்படி அசிங்கமா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். அந்த பொண்ணு எனக்கு சொந்த மகள் மாதிரி"

"இந்த டயலாக்கை நாங்க ஏற்கெனெவே கேட்டிருக்கிறோம்"- இந்த முறை மாமியின் குரலில் கிண்டல் தெரித்தது.

"எதுக்கு போய் எதை இழுக்கற? நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? அதை எல்லாம் நான் சொல்லிக்காட்டறேனா? வர வர உனக்கு வாய்கொழுப்பு ரொம்ப அதிகமாயிட்டே போகுது! என் பொறுமையை சோதிக்காதே"

"ஏன் என்ன பண்ணுவீங்க? அடிக்கப்போறீங்களா? இங்கே நீங்க அடிச்சால் நான் ஒன்னும் அழுதுட்டு பேசாமல் இருக்க மாட்டேன். உடனே 911 போலீஸை கூப்பிடுவேன். போலீஸ் வந்தால் என்ன நடக்கும் தெரியுமில்ல? டொமஸ்டிக் அப்யூஸ்"

மாமா குரல் தணிந்தவராக "உன்னோடு வாழறதை விட பேசாமல் விஷம் குடிச்சு சாகலாம். ராட்சசி!"

"அதை செய்ங்க முதல்ல. பெருசா பேச வந்துட்டார். அந்த பொண்ணு நம்மை பார்க்க வந்த கோலத்தை பாருங்க! ஜீன்ஸும், இறுக்க பிடிச்ச டிஷர்ட்டும். நல்ல பொண்ணு இப்படியா ட்ரெஸ் பண்ணும்?"

"அநியாயமா பேசாதே, இப்போலாம் மெட்ராஸில் பொண்ணுங்க இதை தானே போடறாங்க? ஏன் நீ போடல? கொஞ்ச நாள் வாயை கட்டுமா தாயே, கொஞ்சம் பழகின உடனே டார்முக்கு கொண்டு போய் விடலாம்"

மாமி எதையோ சொல்ல எத்தனிக்க,அதற்கு மேல் அங்கு நிற்க மனம் ஒப்பவில்லை. "ஜீன்ஸ், கோலம்" போன்ற வார்த்தைகள் என் மனதை ரொம்ப பாதித்ததால்(நான் ரொம்ப சென்சிடிவ் டைப்) பேசாமல் கெஸ்ட் ரூம் சென்று படுத்துக்கொண்டேன். இரவு 8 மணிக்கு மாமி தான் வந்து எழுப்பினாள்.

"கயல் எழுந்துக்கோமா, ஏதாவது வந்து சாப்பிடேன்"

பாத்ரூம் சென்று ஃப்ரெஷென் பண்ணிக்கொண்டு கீழ் தளத்தில் உள்ள டைன்னிங் டேபிளை அடைந்தேன். வீட்டில் கடும் அமைதி நிலவியது. குழந்தைகள் டிவியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, மாமா சாப்பிட்டுக்கொண்டே ஏதோ புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார்.

"இப்போ எப்படி இருக்கு கயல் பரவாயில்லையா?" என்றார் முகத்தை ஏறிட்டுப்பார்க்காமலே. ஒருவேளை என் முகத்தை ஏறிட்டுப்பார்க்கவில்லை என்றால் பிரச்சினை வராது என்று நினைத்தார் போலும்.

"நல்லா இருக்கேன் மாமா, நீங்க ஏன் பேயடிச்சா மாதிரி இருக்கீங்க"

மாமி அவசரமாக, "அவருக்கு உடம்புக்கு சுகமில்லை கயல். அப்புறம் ஒரு விஷயம், உனக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் இந்த ஊரை நல்லா பழகற வரைக்கும் இங்கே தங்கிக்கலாம். இன்னொரு விஷயம், நாங்க ரொம்ப கன்சர்வேட்டிவ், பசங்க இண்டியன் கல்சர் மறக்ககூடாது இல்லையா? அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்க சரியா?"

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. வந்த சில மணி நேரத்தில் இவங்க குடும்ப கலாச்சாரத்தை குலைக்கிற மாதிரி என்ன செய்துவிட்டேன்?

"இல்லை மாமி, நாளைக்கே நான் டார்முக்கு போகனும், முடிஞ்சால் என்னை கொண்டு போய் விடறீங்களா" - அப்போதிருந்த நிலையில், பயத்தில் இந்த வார்த்தைகளை எப்படி சொன்னேன் என்பது இன்று வரை எனக்கே புரியாத புதிர்.

மாமி முகம் உடனே மலர்ந்தது, பல்ப் போட்ட மாதிரி ஒரு பிரகாசம். "ஏன் கயல் 4-5 நாளாவது இரேன், டிஸ்னிவோர்ல்ட், ஹாலிவுட் ஸ்டுடியோஸ் எல்லாம் போகலாம். இப்போ என்ன அவசரம்?"

"இருக்கட்டும் மாமி, நிதானமா பார்க்கலாம். எனக்கு இன்னும் 1.5 வாரத்தில் கிளாசஸ் தொடங்குது. இன்னும் எந்தெந்த க்ளாஸ் எடுப்பதென்று ப்ளான் பண்ணனும், புக்ஸ் வாங்கனும் நிறைய வேலை இருக்கு எனக்கு!"

"உங்கம்மா சொன்னாமாதிரி ரொம்ப பிடிவாதக்காரிடி நீ" - என்றார் கலா மாமி, சிரித்துக்கொண்டே.

பி.கு: 360 டிகிரிக்கான காரணத்தை கடைசியில் விளக்குகிறேன்.

- தொடரும்

Friday, June 27, 2008

காதல் கல்வெட்டு-3

கயலின் சிந்தனை மறுபடியும் காஃபி ஷாப்புக்கே சென்றது...

வருண் ஒரு மூலையில் உள்ள டேபிளில் அமர்ந்து செல்போனில் யாருடனோ இரண்டு நிமிடங்கள் பேசினான். பிறகு காபியுடன் நடந்து சென்று, ப்ரவ்ன் சுகர் ஒன்று எடுத்து தன் காபியில் கலந்தான். பிறகு மெதுவாக கயல் இருக்கும் டேபிலுக்கு வந்தான்.

உங்க டேட் வரவில்லையா, கயல்? தனிமையில் இனிமை காண்கிறீர்கள்?

“டேட்” லாம் ஒண்ணும் இல்லை, வருண். சும்மா தனியாகத்தான் வந்தேன்.

Would you mind I am taking this spot, Kayal?

No, not at all, I thought you wanted to be alone, Varun.

Nope, I had to leave a message, Kayal. Suddenly remembered and so I went there. And..

And?

I was not sure, whether I am annoying you? தமிழ்ல பேசுவதால் நான் உங்களுக்கு ஒரு அந்நியன் இல்லாமல் போய்விடுமா?

உண்மைதான், உங்களிடம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்! Just kidding, வருண்!

“just kidding” நு சொல்லி எல்லாவற்றையும் அழகா சொல்லிவிடுறீங்க, கயல்! சரி, I agree with you, தமிழர்களில் நிறையவே மோசமானவர்கள் இருக்காங்க. நானும் அதில் ஒருவரா ஏன் இருக்கக்கூடாது என்கிற உங்கள் ஐயத்தில் தவறில்லை.

You are doing great, Varun!

What do you mean?

You already started scoring. I cant believe this!

I did not mean to, Kayal. I am glad to know that though!

கொஞ்ச நேரம் அமைதியாக இருவரும் காஃபியைப் பருகினார்கள். வருண் மறுபடியும் அமைதியைக் கலைத்தான்.

இந்த ஊர் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

You mean U S? of course, ரொம்ப பிடிச்சிருக்கு, வருண். நிறைய சுதந்திரம் கிடைக்குது. நான் சுதந்திரமா யாருக்கும் பாரமா இல்லாமல் இருக்கிறது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?

எனக்கும் பிடிச்சிருக்கு. ஒரு அளவுக்கு “corruption” ல involve ஆகாமல் வாழ முடியுது. We don’t have to waste our time with all bureaucratic BS, right?

ஆமாம், யார் அந்த பெண்?

ஓ, அவளா.. அவள் பெயர் ஜென்னிபர். அவளோட அண்ணா என் கலீக். அவளுக்கு ட்யூட்டரிங் பண்ண முடியுமானு கேட்டான். அவளுக்கு ட்யூட்டரிங் பண்ணுகிறேன். இங்கேதான் பொதுவா மீட் பண்ணுவோம். சில சமயம் லைப்ரரிக்கு போவோம்.

என்ன ட்யூட்டரிங்?

சும்மா some basic physics! Nothing serious. It keeps me busy.

எனக்கு ஒரு friend இருக்காள். அவளும் physics tutoring ஆள் தேடிக்கொண்டு இருக்காள். Can you teach her too, Varun?

I am not sure, Kayal.

Could you give me your contact #, so that I can ask her to call you? In case you are interested.

நிச்சயமா, கயல்! But I cant commit anything now. Is she an American?

ஏன் வெள்ளைக்காரிக்குத்தான் ட்யூட்டரிங் பண்ணுவீங்களா?

இந்தியன் னாலும் பரவாயில்லை, உன்னை மாதிரி கொஞ்சம் அறிவா, அழகா இருக்கனும். How about her?

ஒரு கணம் வருண் பார்வை அவள் கழுத்துக்கு கீழே படிந்தது. கண்களை உடனே திருப்பிவிட்டான். இருந்தாலும் கயலுக்கு முகம் சிவந்தது.

தன்னை சமாளித்துக்கொண்டு, “எதுக்கு இந்த ஐஸ், வருண்?”

You have a beautiful pair of eyes, கயல்!

Thanks, வருண்.

இந்தியர்களிடம் ரொம்ப professionalism இருக்காது, கயல். I prefer Americans rather than Indians, Kayal, for tutoring.

என்ன இப்படி racist மாதிரி பேசுறீங்க, வருண்? நீங்களே இந்தியர்தானே?

ஆமாம், கயல் but I live here in US now. Ran away from India.

இப்படியெல்லாம் நினைப்பது தவறில்லையா, வருண்?

May be wrong but I don’t want to pretend, Kayal. I just say what I feel, my friend.

I don’t know what to say, Varun.

Can I ask you something?

Please, Varun. Go ahead shoot!

உங்களுக்கு arranged marriage ல் நம்பிக்கை இருக்கா?

இல்லை! எனக்கு அது சரி வராதுனு தோணுது.

சரி, அப்போ நீங்க நிச்சயமா டேட் பண்ணிக்கொண்டு இருப்பீங்க. இளம் இந்திய இளைஞர்களைப் பற்றி என்ன ஃபீல் பண்ணுறீங்க?

என்ன ஃபீல் பண்ணுறீங்கனா?

Are you impressed with their attitude in general?

Not, really.

Why?

Most of them are mismatch for my taste.

Most or all of them?

Almost all of them so far.

Is there something wrong with them or with you Kayal?

I don’t know Varun. Perhaps both!

I love the way you answer, Kayal.

Thank you, Varun. கயலுக்கு மீண்டும் முகம் சிவந்தது.

Well, I have got to be going now. It is very nice meeting you, Kayal.

Same here, Varun! Contact # for tutoring?

Yeah, I almost forgot. Here it is. Please ask her to leave a message. I don’t usually pick up the phone but I will promptly return the calls.

OK bye!

அவனுடைய நம்பரை கொடுத்தானே தவிர, கயலின் செல்பேசி எண்ணை வருண் கேட்கவில்லை, அது கயலுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கமாட்டாரா என்று தோன்றியது அவளுக்கு.

வருண் கொஞ்சம் வேகமாக வெளியில் சென்றான். கயல் வாயிலில் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகும் அவளும் புறப்பாட்டாள் அங்கிருந்து.

-தொடரும்

Tuesday, June 24, 2008

அமரிக்க எதிர்ப்பு : அரசியல்வாதிகளின் தந்திரம்?

சில வருடத்துக்கு முன் 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' என்ற ஒரு படம் வந்தது. அரசியல் காமெடியர்களாகிவிட்ட கார்த்திக்கும், ரோஜாவும் நடித்திருப்பார்கள். அதில் ஒரு சீன்(ரொம்ப சரியாக நினைவில்லை, தவறிருந்தால் மன்னிக்கவும்). கார்த்திக்கும், ரமேஷ் கன்னாவும் ரோஜா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் ரோஜாவும் சில வாண்டுக்களும் அவர்களை ரூமூக்குள் பூட்டி வைத்து விடுவார்கள். அப்போது ஒரு குழந்தை இங்க் பாட்டிலை உடைத்துவிடும்.

ரோஜா: "இங்க் பாட்டிலை யார் உடைச்சது?"

சுட்டி:"அந்த திருடன் தான் அக்கா"

ரமேஷ் கன்னா : "நான் இங்கிருக்கேனே, எப்படி அங்கே இங்க் பாட்டிலை உடைக்கமுடியும்?"

சுட்டி: "இங்க் ஊத்தி தரேனு கூப்பிட்டு, பாட்டிலை தூக்கிப்போட்டு உடைச்சுட்டான்கா"

ரோஜா : "குழந்தை எங்கேயாவது பொய் சொல்லுமா?"

ர.க: "குழந்தை பொய் சொல்லாது, ஆனால் குட்டிச்சாத்தான் பொய் சொல்லும்."

இப்படித்தான் இருக்கிறது தற்போது அரசியல்வாதிகளின் "எல்லா பழியையும் தூக்கி அமரிக்கா மீது போடு" அரசியல். முக்கியமாக இங்கே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.எல்.ஏவை குறிப்பிடவேண்டும். வாரம் தவறாது ஜூனியர் விகடனில் அமரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் எழுதி வருபவர். இந்த வார கட்டுரையை படித்ததும் மொத்தமாக பொறுமையிழந்துவிட்டேன். "ஓபாமா அமரிக்க ஜனாதிபதியாக வந்தால் ஏதாவது மாற்றம் இருக்குமா" என்பதை திறனாய்ந்து(!) எழுதி இருக்கிறார். அவரைப்பொறுத்தவரை இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு அமரிக்காவும், அமரிக்க பாலிசிகளும் தான் காரணம். பெட்ரோல் உயர்வு அமரிக்காவின் தவறு, விலைவாசி கண்டபடி உயர்வதும் அமரிக்காவின் தவறு, ஏன் இந்தியாவில் யாராவது வழுக்கி விழுந்தால் கூட அதுவும் அமரிக்காவின் தவறு தான்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா மட்டும் தான் காரணம் என்பது அபத்தம். உலகமெல்லாம் பெட்ரோல் விலை உயர்கிறது, அமரிக்காவையும் சேர்த்து. இந்த முறை அமரிக்க தேர்தலில் ரிபப்ளிக்கன் கட்சி தோல்வியடையப்போவதின் முக்கியமான காரணம் இந்த பெட்ரோல் விலை உயர்வாக இருக்கும். தேர்தலுக்காக பெட்ரோல் விலையை குறைவாகவே வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, மற்றும் அதிக லாபத்துக்காக பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போன்றவை தான் இந்தியாவில் பெட்ரோல் அநியாயமாக ஓவர்நைட்டில் உயர முக்கியமான காரணம். பாசுமதி அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தின மாதிரி ரிலையன்ஸின் பெட்ரோல் ஏற்றுமதியையும் ஏன் கட்டுப்படுத்த முடியாது? அல்லது மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் ஏன் கவனம் செலுத்தக்கூடாது? ப்ரேசில் போன்ற நாடுகளில் மாற்று எரிபொருள் புரட்சி நடக்கவில்லையா? ஆனால் அதை எல்லாம் சுட்டிக்காட்டினால் பழி அரசியல்வாதிகள் மீதே திரும்பிவிடும் இல்லையா, அதை எப்படி இவர்களால் அனுமதிக்க முடியும்?

அவருடைய மற்றொரு அருமையான கருத்து, அதை நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது. அமரிக்க மக்கள் ஒபாமாவின் இமேஜைப்பற்றி கவலைப்படுவது மாதிரி ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி கவலைப்படுவது இல்லையாம்! பாவம் அமரிக்க மக்கள் முட்டாள்கள் என்ன செய்வது? நம் இந்திய மக்கள் மாதிரி கொள்கைகளை ஆராய்ந்து ஓட்டுப்போடும் அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. அரிசி, கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், சாராயம்,பிரியாணிக்கெல்லாம் ஓட்டுப்போட்டவர்கள் எத்தியோப்பியாவில் வசிக்கிறார்கள். செல்வி ஜெயலலிதாவின் cheap pre- election டெக்னிக்கான வெள்ள நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய்க்காக ஒருவரை ஒருவர் மிதித்தே கொன்ற மக்கள் அமேசான் பழங்குடியினர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் இதை பற்றி எல்லாம் ரவிக்குமார் போன்ற அரசியல்வாதிகள் எழுதமாட்டார்கள், அவர்களுடைய கவலை எல்லாம் அமரிக்க மக்களைப்பற்றி தான். மக்கள் முட்டாள்களாகவே இருந்தால் தானே இவர்களைப்போன்ற அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடும்?

அமரிக்காவின் பொருளாதாரம் சேதமடைவதைப்பற்றி ரொம்ப கவலைப்படுகிறார் திரு. ரவிக்குமார் எம்.எல்.ஏ, அமரிக்காவின் நிறவெறியைப்பற்றி கவலைப்படுகிறார். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது? சென்னை போன்ற சிட்டிகளில் நடுத்தர மக்கள் வாழ முடிகிறதா? நிலத்தில் இருந்து குடிநீர் வரையில் எல்லாவற்றிலுமே பற்றாக்குறை, பணவீக்கம் வருடத்துக்கு வருடம் உயர்கிறது ஏறக்குறைய "அறிவிக்கப்படாத, கண்டுக்கொள்ளப்படாத ரிசெஷன்" என்று தான் தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சரி பொருளாதாரத்தை விட்டு தள்ளுவோம், அது எப்போதுமே மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் போன்றவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? சொல்லிக்கொள்வது மாதிரி ஏதுமே இல்லை என்பது தான் கசப்பான உண்மை. சீட்டுக்காக கட்சி விட்டு கட்சி தாவும் கேவலமான அரசியலையும், சினிமாவில் ஹீரோவாக நடிப்பதையும் தவிர பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் இருக்கையில் கூட அமர உரிமை இல்லை- உயர் ஜாதியினர் சொல்லும் இடத்தில் வெறும் கையெழுத்து போடுவது மட்டுமே அவர்கள் வேலை. இரட்டை டம்ளர் முறை இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது -இதைப்பற்றி ஜூவி கூட விரிவான ரிப்போர்ட் எழுதி இருந்தது. பணி இடங்களில் சாதாரணமாக தலித் பணியாளர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள், ஜாதி பெயரால் திட்டப்படுகிறார்கள். இந்த அவல நிலை எல்லாம் மாறிவிட்டதா? தலித்துகளிலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள அருந்ததியினருக்கு 6% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்த பெரிய மனிதர் இந்த ரவிக்குமார்.

அமரிக்கா இந்தியாவை ஒடுக்குகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தியாவை ஒடுக்குவது இந்திய அரசியல்வியாதிகள் தான். மக்களிடம் ஜாதி, மத, இன உணர்வுகளை தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைத்து, இந்தியாவை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் பெருமை அவர்களையே சாரும். அரசியல்தலைவர்கள் பண்ணிய சேதத்தை விட வேறெந்த நாடும் இந்தியாவை சேதப்படுத்தியதில்லை-பாகிஸ்தானையும் சேர்த்து. கோக், பெப்சி போன்ற அமரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்குள் வளரவிட்டு அதன் மூலம் காளிமார்க் கூல்ட்ரிங்க்ஸ் போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை காணாமல் போக வைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள். இதை யாராவது கேள்வி கேட்டால் அதற்கு ரவிக்குமார் போன்றவர்களிடம் இருக்கும் ரெடிமேடான பதில் "அமரிக்க சதி". தங்கள் குற்றங்களை திசை திருப்பும் முயற்சி தான் இந்த அமரிக்க வெறுப்பு வேடம்.

வல்லரசு நாடுகள் இருக்கத்தான் செய்யும், அமரிக்கா இல்லாவிட்டால் சீனா, அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஐரோப்பிய ஐக்கிய நாடு. இவர்களைப்பற்றி கவலைப்படுவது வேண்டாத வேலை. கவலைப்பட நிறைய இருக்கும் போது தேவை இல்லாமல் மற்ற நாடுகளின் மீது இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை முட்டாளாக்குகிறார்கள். இந்தியாவின் எந்த அரசியல்வாதிக்கும் அமரிக்க அரசியலையோ, வேறெந்த அரசியலையோ விமர்சிக்க தகுதி இல்லை. மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

Sunday, June 22, 2008

காதல் கல்வெட்டு 2

கயல் வெளியில் போனவுடன், அமைதியாக கயல் அமர்ந்த இடத்தில் சோஃபாவில் அமர்ந்தான் வருண். அவள் உடலில் இருந்து வந்த மணம் இன்னும் அவன் நுகர்ந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுக்கே அதிசயமாக இருந்தன. இதுவரை எத்தனையோ பெண்கள் அவன் அப்பார்ட்மெண்ட்க்கு வந்து இருக்கிறார்கள், தனிமையில் அவர்களுடன் இருந்து இருக்கிறான். ஆனால் ஒரு போதும் இப்படியெல்லாம் அளவுக்கு மீறி நடந்ததில்லை. ஒரு சில பெண்கள் இவனிடம் இண்டெரெஸ்ட் காட்டி இருந்து இருக்கார்கள். அதை எல்லாம் இவன் ஒதுக்கி ஒதுங்கி இருந்து இருக்கிறான். ஆனால் இன்று, அவள் கழுத்தில் உதட்டைப்பதித்துவிட்டான். கயல் எதுவுமே சொல்லவில்லை! எதிர்ப்பும் காட்டவில்லை, மாறாக, போகும்போது, தேங்க்ஸ் ஃபார் எவ்வரிதிங் என்று ஜாடையாக வேறு சொல்லிவிட்டுப்போனாள்! நல்லவேளை ஃபோன் கால் வந்தது. இல்லை என்றால் என்னவெல்லாம் நடந்து இருக்குமோ? கயல் மறைமுகமாக அவனுக்கு ஆதரவு தந்து ஒத்துழைத்தது அவனுக்கு அவள் போன பிறகு தான் புரிந்தது. எப்படி அவள் மேல் மட்டும் இப்படி ஒரு அன்பு உருவாகியது? கயலும் எப்படி இவனிடம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்ள விட்டாள் என்று மனது குழம்பியது. சரி, இதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் என்று விட்டுவிட்டு, போய் ஷாப்பிங் பண்ணலாம் என்று பாத்ரூம் சென்று முகம் கழுவி புற்ப்பட்டான், வருண்.

வெளியில் சென்ற கயல் அவளின் அக்யூரா டீஎல் காரில் அமர்ந்தாள். தலையில் இருந்த மல்லிகச்சரத்தை எடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டாள். அவளுடைய தோழிகள் எப்படி மல்லிகை கிடைத்ததென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. அது மட்டுமல்ல, அவர்களுக்கு கொடுக்க மல்லிகைச்சரம் இல்லாததால் அதை எடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டாள். ஒரு நிமிடம் வருண் கொடுத்த முத்தத்தை நினைத்துப்பார்த்தாள். இனிமையாக இருந்தது. சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு காலை ப்ரேக்கில் அழுத்தி காரை ஸ்டார்ட் பண்ணும்போது, அவளால் அவள் நிலைமையை உணரமுடிந்தது. ரூம் போனவுடன் பாத் ரூம் சென்று வேறு உடை மாற்றி விட்டு தான் வெளியே போகனும் என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

காரில் போய்க்கொண்டு இருக்கும்போது வருணை முதன் முதலில் சந்தித்த காஃபி ஷாப்பை கடக்க நேரிட்டது. உடனே கயல் கடந்த காலநினைவுகளில் மூழ்கினாள். அங்கே தான் முதன் முதலில் வருணை சந்தித்தாள், சுமார் ஒரு வருடம் முன்பு. அன்று லைன் பெரியதாக இருந்தது. தனக்கு பின்னால் ஒரு வெள்ளைக்காரப்பெண்ணிடம் இன்னொரு ஆண் இந்தியன் ஆக்சண்டில் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்து அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் அவர்கள் பேசியதை கேட்க அவளுக்கு ஆர்வமாக இருந்தது, அதே சமயம் எரிச்சலாகவும் இருந்தது.

" I thought we are supposed to meet at 3 pm Jenny, it's almost 5 now!"

"Yeah, but I got stuck in the traffic Varun"

"I thought Americans are prompt, you seem to be an exception. Coming up with a lame excuse!"

She flipped her middle finger at Varun!

"What is this supposed to mean, Jenny?"

"You know what!"

"No I don't, tell me what it means"

"Ok, it means F*** you!"

கயல் திரும்பி அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.

"Why are you embarrassing yourself Varun?

"ஜென்னியின் செல்பேசி அலறியது. ஜென்னி பேசிவிட்டு, தான் உடனே போக வேண்டும் என்று தெரிவித்தாள்.

கயல் காஃபி ஆர்டெர் பண்ணினாள். அவள் பெயரை கேட்டு எழுதிக்கொண்டாள் அந்த டெல்லர். வருணுக்கு அப்போது தான் அவள் பெயர் தெரியவந்தது. வருண் ஒரு கப்பச்சீனோ ஆர்டர் பண்ணிவிட்டு கயலை பின்தொடர்ந்தான்.

Are you from India?

Yes!

Which part?

South!

South where?

Chennai.

தமிழ் தெரியுமா, உங்களுக்கு?

எப்படி கண்டு பிடிச்சீங்க?

உங்க பேர் கயல்னு சொன்னீங்க. அது தமிழ்ப்பெயர் தானே?

Are you stalking me mister? Just kidding, உங்க கேர்ள் ஃப்ரெண்ட் எங்கே?

அவள் சும்மா ஃப்ரெண்டுதான்.

அப்படியா ரொம்ப நெருக்கமான தோழி மாதிரி தெரிந்ததே? என்றாள் "நெருக்கத்துக்கு" கொஞ்சம் அழுத்தம் கொடுத்து.

அவள் அப்படித்தான் பேசுவாள். சாரி அபவ்ட் தட், கயல்.

ஏன் சாரி?

கொஞ்சம் அநாகரீகமான கான்வர்சேஷனை நீங்க கேட்க நேர்ந்ததுக்கு தான் சாரி. நீங்க என்னை வருண் என்று கூப்பிடலாம்.

பரவாயில்லை, வருண்.

கயல், அவள் காஃபியைப்பெற்றுக்கொண்டு அவள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தாள்.
வருண், காஃபியை வாங்கிக்கொண்டு வேறொரு மூலையில் போய் தனியாக அமர்ந்தான்.
கயலுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது வருண் அப்படி செய்தது. அவனோடு இன்னும் பேசனும் போல இருந்தது. அவன் பேச்சு ரொம்ப பிடித்திருந்தது அவளுக்கு.
இப்படி யோசித்துக்கொண்டு வரும்போது வீடு வந்தது.

காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைந்தாள். உடனே பாத்ரூம் சென்று 5 நிமிடத்தில் வேறு உடை மாற்றிக்கொண்டு, பிறகு டிவியை உயிர்பித்தாள். ஆனால் அவள் மனதெல்லாம் வருண் நினைவே ஓடியது.

Friday, June 20, 2008

நீங்கள் தமிழரா?

நீங்கள் தமிழரா?

ஆமாம்.

எப்படி சொல்றீங்க?

நான் தமிழ்லதான் பேறேன், எழுதுறேன், படிக்கிறேன்.

தமிழ்ல பேசினாலென்ன,படித்தாலென்ன?

நீங்கள் ஆரியராகக்கூட இருக்கலாம் இல்லையா?

அப்படினா? என்னனு எனக்குத்தெரியாது.

திராவிடர்கள் மட்டும்தான் தமிழர்கள்னு சொல்றாங்களே?

சரி, நான் அப்போ சுட்த்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்.
------------------

நீங்க சார்?

எனக்கு ழ, ள, ல உச்சரிப்பு எல்லாம் வராதுங்க. ஆனால் அப்பா அம்மா பேசுறமொழி தமில்தான். நானும் பிறந்ததிலிருந்து தமில் லதான் பேசுறேன். நான் தமிலர் இல்லைனா யாருங்க?

தமிழ் னுகூட சொல்லத்தெரியவில்லை, நீங்களெல்லாம் என்ன சார் தமிழர்?

உண்மைதான் நான் கிராமத்தில் வயல், காட்டில் உழைப்பவன் சார். அம்மா அப்பா பேசுற உச்சரிப்புதானங்க எனக்கு வரும்? அவர்கள் உடல் வளைய வேலை செய்யும்போது,நாக்கு வளைய ஒழுங்கான தமிழ்ல எப்படி பேசமுடியுங்க? "கலோக்கியல்" தமிழலதானே பேசமுடியும்?

நான் ஒண்ணும் சொல்லவில்லைங்க, ஆனால் ஒரு சில பேர் தமிழ்லகூட ஒழுங்கா பேசத்தெரியலை இவர்லாம் தமிழர்னு மார்தட்டிக்கிறார் என்பார்கள்.

அப்போ நான் சுத்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்.
----------------------------

நீங்க சார்?

நான் தமிழர் தாங்க.ஆனால் என்னுடைய நாடு இந்தியாங்க. எனக்கு நாட்டுப்பற்று ஜாஸ்திங்க.

அப்போ ஈழ தமிழருக்காக உங்கள் சப்போர்ட் இல்லையா? நம்ம சகோதரர்கள்தானே அவர்கள்?

நிச்சய்மாக உண்டு.ஆனால் நாட்டுக்கு எதிராப்போய் எப்படீ சப்போர்ட் செய்வதுங்க? அது நம்ம நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

அப்போ தமிழர்களுக்க்கு துரோகம் செய்யலாமா? நீங்களும் நல்ல தமிழர் இல்லைங்க.

அப்போ நானும் சுத்தமான தமிழர் இல்லைனு வைத்துக்கொள்வோம்?

----------------------------------

அப்போ யார்தாங்க சுத்தமான தமிழர்?

எனக்குத்தெரியவில்லை! உங்களுக்கு?

மேலும் எங்களைப்பற்றி...

எங்களுக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. :) முக்கியமாக இங்கே லதானந்த் சாரை குறிப்பிட வேண்டும், அவர் தான் முதன் முதலில் வரவேற்பளித்து இந்த வலைப்பூவை அவருடைய வலைப்பூவில்:lathananthpakkam.blogspot.com அறிமுகப்படுத்தினார். ஆனந்த் சாரின் வலைப்பூவை படித்து தான் எங்களுக்கும் இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் எண்ணம் வந்தது. மேலும் நான் எழுதிய பல பதிவுகளுக்கு டிப்ஸ் கொடுத்ததும் லதானந்த் சார் தான். அவர் மீண்டும் எழுத ஆரம்பித்தால், அவருடைய வாசகி என்ற முறையில் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.

இங்கே காதலர்கள் எழுதுகிறோம் என்பதால் சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கிறது, அப்படி வருவது இயல்பு தான். அனைவர் சந்தேகத்தையும் உடனடியாக தீர்ப்பது கடினம், ஏனென்றால் இது வலையுலகம். வலையுலக கருத்து சுதந்திரம் தந்த தைரியத்தில் நாங்களும் எங்களைப்பற்றி எழுத வலைப்பூவை தேர்ந்தெடுத்தோம். பிறகென்ன, காதல் அனுபவங்களை வீட்டிலா சொல்ல முடியும்? நண்பர்களிடமும் முழுவதுமாக பகிர்ந்துக்கொள்வது கடினம். காதலைப்பற்றி மட்டும் அல்ல, எங்களை பாதித்த அனைத்து எண்ணங்களைப்பற்றியும் எழுதலாம் என நினைக்கிறோம்.

எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் நிச்சயம் எங்கள் இரண்டு பேரையோ அல்லது என்னை மட்டுமோ(வழக்கமா வருணை விட என்னை தான் நிறைய பேருக்கு பிடிக்கிறதாம் - ஒரு மரத்தடி ஜோசியர் சொன்னார் :)) பிடிக்கும். மேலும் எங்களுடைய தனித்துவம் புரியும். நாங்கள் இருவருமே ஒருவர் கருத்தை மற்றொருவர் மீது திணிப்பதில்லை. அவருக்கென்று தனி கருத்துக்களும் எனக்கென்று தனி கருத்துக்களும் இருக்கின்றன.

எனவே, கொஞ்சம் தயவு செய்து பொறுமை தேவை வலையுலக மகாஜனங்களே!பொறுமை எருமையை விட பெரியது. எங்களுடைய பதிவுகள் இதுவரை நீங்கள் படித்த யார் சாயலிலும் இல்லாமல் யூனிக்காக இருக்கும், அது மட்டும் உறுதி. முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு விமர்சனம் செய்யலாமே? எங்களை தொடர்ந்து கவனியுங்கள் பிடிச்சிருந்தால் பழகலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் :) என்ன சொல்றீங்க?

அப்படியா????




What the House Test Says About You



You consider yourself important, but no more important than anyone else. You love attention, but you don't feel like you deserve more of it than anyone else.



You are a fairly community oriented person. You like to get to know your neighbors, but you also like your privacy. You get attached to neighborhoods and cities.



You are a social, friendly, and giving person. You like to bring people together and make them feel happy.



You look attractive, but mostly because your rely on your natural good looks to get by.



You are moved by the most simple of things. You can find pleasure from a small, perfect moment.



இதெல்லாம் என் குணங்களாம் :) ஏறக்குறைய சரியாதான் இருக்கு.

உங்கள் குணங்களை அறிந்துக்கொள்ள மேலே இருக்கும் "House Test" லிங்கை சொடுக்கவும்.

Tuesday, June 17, 2008

Sex and the City



உங்களுக்கு கூடுதலாக ஒரு எக்ஸ் க்ரோமோசோம் இருக்குமானால் உங்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். :) முழுக்க முழுக்க பெண்கள் ரசிக்க மட்டும் எடுக்கப்பட்ட படம் என்பதால் திரையரங்கு முழுவதும் பெண்கள் கூட்டம். திருவிழாவுக்கு பலி கொடுக்கப்படும் ஆடுகள் போல ஒரு டைப்பாக முழித்துக்கொண்டே தங்கள் கேர்ள்ப்ரெண்டுகளுக்கு காவலாக மொத்தம் 4 ஆண்கள் தான் இருந்தனர். HBO-வில் சூப்பர் ஹிட் தொடராக வந்த செக்ஸ் அண்ட் த சிட்டி தான் முழு நீள(ல?) படமாக வெளி வந்து இருக்கிறது.

நாற்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத, நிறைய படித்த, தைரியம் மிக்க நாலு நியூயார்க் பெண்களைப்பற்றிய கதை இது. நவீன கால பெண் பிரம்மச்சாரிகள். எதை பற்றியும் கவலைப்படாத இதை போன்ற பெண்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அமரிக்கர்களுக்கும் ரொம்ப புதுசு.

கதையின் கதாநாயகி கேரி ப்ராட்ஷா(சாரா ஜெசிகா பார்க்கர்)ஒரு எழுத்தாளர். இவருடைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் பன்ச் வரிகளுக்காகவே இந்த தொடரை பார்த்தவள் நான். நிறைய ஆண்களை டேட் பண்ணிவிட்டு கடைசியில் தன் நீண்டகால ஆண் நண்பரான மிஸ்டர்.பிக்(ஆமாம், நீங்கள் நினைக்கும் அதே காரணப்பெயர் தான் :))-கையே திருமணம் செய்துக்கொள்கிறார். அவர்கள் திருமணம் கடைசி நேரத்தில் நின்று போகிறது. பிக் பின்வாங்கிவிடுகிறார்.

அடுத்த தோழியான சமாந்தா(கிம் கெட்ரால்) தன்னுடைய ஹாலிவுட் பாய்ப்ரெண்டுடன் செட்டில் ஆகிறார். இப்படி செட்டில் ஆவது சமாந்தாவை பொறுத்தவரை அதிசயம். சமாந்தா ஒரு ப்ளே கேர்ள், ஒரே ஆணுடன் செட்டில் ஆவது அவருக்கு பிடிக்காது.

பிறகு நம்ம ஸ்வீட் சார்லட்(க்ரிஸ்டின் டேவிஸ்)யூதரான ஹாரியை திருமணம் செய்துக்கொண்டு பிறகு குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சைனீஸ் குழந்தையை தத்தெடுக்கிறார். ஆனால் குழந்தை ஆசை மட்டும் இவரை விடவில்லை.

நான்காவதாக மிராண்டா(சிந்தியா நிக்சன்)தன் கணவர் ஸ்டீவ் மற்றும் 1 வயது குழந்தை ப்ரேடியுடன் மன்ஹாட்டனில் வாழ்ந்து வரும்போது எதிர்பாராத ஒன்று நடக்கிறது. இவருடைய அன்பு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுகிறார். ஆவேசமாகும் மிராண்டா தன் கணவரை பிரிந்துவிடுகிறார்.

கடைசியாக என்ன நடந்தது? கேரியின் கல்யாணம் நடந்ததா, சமாந்தாவால் ஒரே பாய்ப்ரெண்டுடன் வாழ முடிந்ததா, சார்லட்டுக்கு குழந்தை பிறக்குமா மற்றும் மிராண்டாவுக்கும் ஸ்டீவுக்கும் சமாதானமாகுமா போன்றவை மீதி கதை. கடைசியில் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக நினைப்பவர்கள் உண்மையான காரணமே இல்லை, நம்முடைய பிரச்சினைகளுக்கு எப்படி நாமே காரணமாக மாறுகிறோம் என்பதை அழகாக விளக்கி இருக்கிறார்கள்.

இந்த படம் கடைசியில் தேவதைக்கதைகளில் வரும் முடிவு போல முடிகிறது "And they lived happily ever after". கூடவே பெண்களைக்கவரும் எல்லா விஷயமும் உண்டு. செக்ஸ், fashion, ஸ்டைல், திருமண உடை மற்றும் ப்ளானிங். ஆனால் ஆண்களுக்கும் இந்த படம் பிடிக்கும்(நிறைய ஜில்பான்ஸ் மேட்டர் இருப்பதால்)

படத்தில் நீல நிற ட்ரெஸ் - மிராண்டா
கருப்பு - சார்லட்
மணப்பெண் - கேரி ப்ராட்ஷா
சிகப்பு - சமாந்தா

பின்குறிப்பு: இங்கே வருண், ஆண்களைக்கவரும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற லொள்ளு பட விமர்சனம் எழுதி வருவதால், பழிக்கு பழியாக "செக்ஸ் அண்ட் த சிட்டி" போன்ற chick flicks பட விமர்சனம் எழுதுகிறேன் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன். இவர் தன் போக்கை கைவிடாவிட்டால் நான் கோலங்கள் சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதவேண்டி இருக்கும் என்பதையும் தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

Saturday, June 14, 2008

விமர்சகர் ஞாநி

* எனக்கு இவர் எழுதும் ஓ பக்கங்கள் பொதுவாக எரிச்சலைத்தருகிறது.

* இன்றைய சமுதாயத்தில் பல அவலங்கள், பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், இவர் தனிப்பட்ட ஒரே ஒர் அரசியல்வாதி கருணாநிதியை மட்டும் தாக்குவதில் முழுகவனம் செலுத்துவது, இவருடைய பக்குவமின்மையை காட்டுகிறது.

* கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் இவர், மதவாதிகளையும், தன் மதத்தையும் ஓரளவுக்கு அரவணைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. சமீபத்தில் ஜெ ஜெ வும் சசிகலாவும் ஒரு கோயிலில் மாலை மாற்றி/அணிந்துக்கொண்டதை எந்த விமர்சனமும் செய்யாமல் அவர்களுக்கு வக்காலத்து வேற!

* இன்றைய சமுதாயத்தில் போர்னோகிராஃபி தலைதூக்கி, கொஞ்ச நஞ்சமிருந்த நம் கலாச்சாரமும் சீரழிந்து போயிருக்கும் நிலையில், காதலர்களுக்கு லவ் பண்ண இடம் வேண்டும் என்று இவர் படும் கவலை எரிச்ச்லைத்தான் உண்டுபண்ணுகிறது.

* சமீபத்தில் எழுதிய ஓ பக்கங்களில், இவரின் கடவுள் மத நம்பிக்கை இல்லாத இரு நண்பர்கள் தன் மனைவிகளுக்காக சில ரிலிஜியஸ் ஃபங்க்சன் எல்லாம் செய்கிறார்கள் அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று விமர்சிப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

இதிலென்ன வேடிக்கை?

உன்னுடைய கொள்கையோ, நம்பிக்கையோ உன் மனைவிக்கு/காதலிக்கு இருக்கனும் என்கிற அவசியமே இல்லை என்பது இவருக்கு தெரியாதா?

அவளுடைய நம்பிக்கையில் நீ தலையிடுவது, அல்லது உன் நம்பிக்கைதான் சரி என்று சொல்வதும் அநாகரீகம் என்பதும் இவருக்கு தெரியாதா?

சிங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவருக்கு தாம்பத்ய வாழ்க்கையில் அனுபவமில்லாததும்/பொதுவாக வாழ்க்கை என்பது காம்ப்ரோமைஸ் என்று சரியாக புரியாமல் தவிப்பது இவர் விமர்சனத்தில் இருந்து அழகாக புரிகிறது.

எல்லோரையம் விமர்சிக்கும் இவரை கடுமையாக விமர்சிப்பதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை!

Friday, June 13, 2008

இண்டியானா ஜோன்ஸ்-4



வெற்றிபெறுமா?

* சமீபத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹாரிஸன் ஃபோர்டின் பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்து இருந்ததால் (ஃபயர் வால், ஹாலிவுட் ஹோமிசைட், மற்றும் விடோ மேக்கர்), இந்தப்படம் வெற்றி அடையுமா என்று பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

* 65 வயதான இவரை இண்டியானா ஜோன்ஸ் ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

* $400 மில்லியனுக்கு மேல் கலக்ஷன் ஆனால் மட்டுமே இப்படம் வெற்றியடையமுடியும் நிலையில், அந்த தொகையை ப்ரொடக்ஷன் கம்பெனி பெற்றபிறகே, இவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்று ஏற்றுக்கொண்டு, இதில் நடித்து வெளிவந்தது.

வெற்றிவாகை சூடியது!

படம் இன்றுவரை $585 மில்லியன் உலகம் முழுவதும் கலக்ஷன் ஆகி வெற்றி பெற்றுள்ளது!

வாழ்த்துக்கள், ஹாரி, லுக்காஸ் மற்றும் ஸ்பீல்பெர்க் டீம்!


நான் இன்னும் இந்தப்படம் பார்க்கவில்லை! ப்ரிவியூ சுமாராக இருக்கிறது!

Tuesday, June 10, 2008

You Don't Mess with the Zohan




சீரியசான கோணத்திலேயே இதுவரை பார்க்கப்பட்ட இஸ்ரேலி- பாலஸ்தீன் பிரச்சினை, முதன் முதலில் நகைச்சுவையான கோணத்தில் காட்டப்படுகிறது என்பது மட்டுமே இந்த படம் பார்ப்பதற்கு முன் நான் கேள்விப்பட்டது. மேலும் ஆடம் சாண்ட்லர் நல்ல நடிகர், எனவே கடந்த வெள்ளியன்று நானும் என் தோழியரும் "You Don't Mess with the Zohan" படம் பார்க்க போனோம். படம் ஆரம்பித்த ஒரு பத்து நிமிடத்துக்கு எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.

முதல் 10-20 நிமிடத்துக்கு கதை இவ்வளவு தான்: ஆடம் சாண்டலர் ஒரு இஸ்ரேலி கவுண்டர் தீவிரவாதி என்று சொன்னால் அது சரி இல்லை. ஆடம் சாண்ட்லர் ஒரு இஸ்ரேலி சூப்பர் ஹீரோ என்பது தான் சரி :) விஜயகாந்தே தோற்றுப்போகும் அளவு, அத்தனை புல்லட்டுகளை ஏதோ கிரிக்கெட் பந்தைப்பிடிப்பது மாதிரி கேட்ச் பிடிக்கிறார். ஒருவேளை இந்த படம் எடுப்பதற்கு முன்னால் தமிழ் படம் ஏதாவது பார்த்து தொலைத்தார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக உபயோகிக்கப்படும் சட்னி போன்ற 'ஹம்மஸை' இதற்கு முன் இந்த அளவு யாராவது கிண்டல் பண்ணி இருப்பார்களா என்பது சந்தேகமே. சாக்லெடுக்கு ஹம்மஸ் தொட்டு சாப்பிடுகிறார்கள், காஃபிக்கு சக்கரைக்கு பதில் கலந்துக்கொள்ளுகிறார்கள் ஏன், தலைக்கு கூட கண்டிஷனராக உபயோகிக்கிறார்கள். ஆடம் சாண்ட்லரின் அந்தரங்க உறுப்பை வேறு அடிக்கடி ஷூம் பண்ணி க்ளோசப்பில் காண்பித்தது அருவருப்பாக இருந்தது(இதுக்கு பெயர் ஜோக்காம்!!). எனக்கு பக்கத்தில் வேறு ஒரு கருப்பு பெண்மணி உட்கார்ந்து கொண்டு ஆடமின் ஒவ்வொரு அசைவுக்கும் "ஹா ஹா ஹா" என்று கர்னகொடூரமான குரலில் சிரித்து திகிலூட்டினார்.பேசாமல் தியேட்டரை விட்டு எழுந்து ஓடிவிடலாமா என்று நினைத்தேன்.

சரி வந்தது வந்துவிட்டோம், ஏன் 10.50 டாலரை வேஸ்ட் பண்ணுவது என்று என் சோகத்தை பாப்கார்னில் புதைத்துக்கொண்டு படம் முடியப்போகும் நேரத்துக்காக ஆவலுடன் காத்திருந்தேன். அதற்கு பிறகு தான் கதை சூடுபிடிக்கிறது. ஆடம் சாண்ட்லருக்கு இப்படி சூப்பர் ஹீரோவாக இருப்பது வெறுத்துப்போகிறது. தன்னுடைய எதிரி ஃபாண்டம் என்ற பாலஸ்தீனியருடன் போடும் விவஸ்தை இல்லாத சண்டையில் இறந்து போவது போல நாடகமாடிவிட்டு அமரிக்காவுக்கு தப்பி ஓடுகிறார். அங்கே ஹேர் ஸ்டைலிஸ்டாக வேலை செய்வதே ஆடமின் குறிக்கோளாக இருக்கிறது. புகழ்பெற்ற சலூன்களில் இவர் பண்ணும் கலாட்டாக்களை சகிக்க முடியாமல் துரத்திவிட, கடைசியில் ஒரு சின்ன சலூனில் தான் வேலை கிடைக்கிறது, அதுவும் கீழே விழும் முடியை பெருக்கும் பணியாளராக. பிறகு நிறைய பாடுபட்டு, கோல்மால் பண்ணி அந்த சலூனிலேயே ஸ்டைலிஸ்டாக ப்ரோமோஷன் வாங்குகிறார். இதை சாக்காக வைத்து வயதான பெண்மணிகளை கணக்கு பண்ணுகிறார். இவருடைய முடி வெட்டும் அழகில்(!)மயங்கும் வயதான பெண்மணிகள் பிறகு இவருடைய வாடிக்கையாளர் ஆகிறார்கள். இவரால் சலூனுக்கு வருமானம் பெருகுகிறது. வழக்கமாக இது மாதிரியான செக்ஸிஸ்ட் ஜோக் பெண்களுக்கு பிடிக்காது என்றாலும், இதை படமாக்கிய விதத்தை பார்த்து கோபப்பட்டுக்கொண்டே என்னாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆடம், வயதான பெண்மணிகளுடன் எப்போது தனி அறைக்கு போனாலும், அந்த சலூனே அதிர்ந்து பொருட்கள் எல்லாம் கீழே விழும் காமெடியை பார்த்து சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.



பாலஸ்தீனிய பெண் மற்றும் சலூன் ஓனருடனான(கதாநாயகி)ஆடமின் காதல் மட்டும் கதையோடு ஒட்டவே இல்லை. ஆடம் சாண்ட்லருக்கும் ஹீரோயினுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரியே இல்லை. சொல்லப்போனால் கதாநாயகியோடு மட்டும் தான் கொஞ்சம் சீரியசாக இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையைப்பற்றி வாதிடுகிறார். வழக்கமாக ஆடம் சாண்ட்லர் ரொமாண்டிக் ஹீரோ என்ற இமேஜ் இந்த படத்தில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. ஏதோ கடனுக்காக காதல் காட்சிகளை நுழைத்திருக்கிறார்கள்.


பாலஸ்தீனிய தீவிரவாதிகளை எப்படி எல்லாம் கிண்டலடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் கிண்டலடித்திருக்கிறார்கள். உடல் காயத்துக்கு போடும் நியோஸ்போரினை "லிக்விட் நைட்ரஜன்" என்று நினைத்து பாம் தயாரிப்பது, தீவிரவாதிகளுக்கான போன் லைனில் ஒரு பெண் குரல் "ப்ளீஸ் ப்ரெஸ் 1", "ப்ரெஸ் 2" என்றெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பது, பயங்கர காமெடி. இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சமாதானத்துக்கான பேச்சு வார்த்தையில் க்ளிண்டன், புஷ், ஒபாமா, மிகெயின் போன்றவர்களின் மனைவிகளை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடிப்பது தியேட்டரை மீண்டும் மீண்டும் சிரிப்பில் குலுங்க வைக்கிறது(இப்படி எல்லாம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கிண்டலடித்தால் என்ன ஆகும் என்ற நினைப்பு உண்டாவதை தடுக்க இயலவில்லை). மரியா கேரியை பார்த்து ஏன் இரு தரப்பினரும் ஜொள் விடுகிறார்கள் என்பது புரியவில்லை, அவர் நம்ம ஊர் நமீதாவுக்கு அக்கா மாதிரி அசிங்கமாக இருக்கிறார்.

கடைசியில் அமரிக்காவில் வாழும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய மக்கள் தங்களுக்குள் எந்த வேற்றுமை இருந்தாலும் சகோதரர் போல வாழலாம் என்ற மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள். உண்மை தான். ஒரு உதாரணத்துக்கு, இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும், அமரிக்கா போன்ற வெளிநாட்டுக்காரர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று தான் "இமிக்ரெண்ட்ஸ்".இதை புரிந்துக்கொண்டு இருதரப்பினரும் நண்பர்களாக வாழுகிறார்கள். எனக்கும் சில நல்ல பாகிஸ்தானிய நண்பர்கள் உண்டு. 2 மணி நேரம் கவலை எல்லாம் மறந்து சிரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.

Friday, June 6, 2008

கதையா இல்லை நிஜமா?

நான் படித்துக்கொண்டிருந்த போது 2 அறை தோழிகளுடன் பல்கலைக்கழக டார்ம் ரூமில் தங்கி இருந்தேன். வகுப்புகள் முடிந்து இரவு நேரத்தில் தூங்கப்போகும் முன் ஒருவரோடு ஒருவர் பேசி, அரட்டையடித்துக்கொண்டிருப்பது வழக்கம். பக்கத்து அறைகளில் இருந்து கூட சிலர் எங்கள் அரட்டையில் கலந்து கொள்வார்கள். அமரிக்க டார்ம் வாழ்க்கைமுறையில், உண்மையாகவே நடந்ததாக கூறப்படும் சில பயங்கரமான டார்ம் ரூம் கதைகள் உண்டு. இதை எல்லாம் கேட்டு இரவெல்லாம் தூங்க முடியாமல் அவதிப்படுவோம். பிறகு அந்த கதைகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில், சரியான ஆதாரமே இல்லை என்று கண்டுபிடித்தேன். அப்படி நாங்கள் பேசிய கதைகளில் இருந்து சிலவற்றை எழுதுகிறேன்.


-------------------------------------


நடு இரவு பயங்கரம்:





லீசா, மேரி இருவரும் ஒரு புகழ்பெற்ற அமரிக்க யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவிகள். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்து ஒரே பள்ளியில் படித்ததால், நல்ல தோழிகள். லீசா நன்றாக படிக்கக்கூடிய மாணவி. மேரி சுமார் ரகம், ஆனால் எப்படியோ பாஸ் ஆகி விடுவாள். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால், ஒரே மேஜரை தேர்வு செய்திருந்தனர்; ஒரே டார்ம் ரூமில் அறைத்தோழிகளாக தங்கி இருந்தனர்.

ஒரு நாள் லீசாவும், மேரியும் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டே, அடுத்த நாள் நடக்கவிருக்கும் கடினமான கணித தேர்வுக்காக சீரியசாக படித்துக்கொண்டிருந்தனர். திடீரென்று, "ஹலோ கேர்ல்ஸ்" என்ற குரல் கேட்டு அவர்கள் கவனம் கலைந்தது. அங்கே ஜிம் நின்றிருந்தான். ஜிம் அவர்கள் வகுப்புத்தோழன், வசதியான குடும்பத்து பையன். போரடிக்கிறது என்று சிலர் காலேஜ் வருவார்களே, அவன் அந்த ரகம்.


"இன்று என் பிறந்த நாள், அதற்காக ஹோட்டல் ஹில்டனில் பெரிய பார்ட்டி கொடுக்கிறேன். குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுத்திருக்கிறேன். நீங்க இரண்டு பேரும் வருவீங்க இல்லையா" என்று ஆவலோடு கேட்டான். இரு பெண்களுக்கும் ரொம்ப வியப்பு. ஜிம் வசதி படைத்தவன், அழகானவன், மேலும் காலேஜ் ஃபுட்பால் ப்ளேயர் என்பதால் இவனுக்கு நிறைய பெண் தோழிகள் இருந்தார்கள். இவன் பார்ட்டிக்கு கூப்பிடுவான் என்று நினைத்துக்க்கூட பார்க்கவில்லை அவர்கள்.


லீசாவுக்கு யோசிக்க அவகாசமே தேவை இருக்கவில்லை. " சாரி ஜிம், உன் அழைப்புக்கு ரொம்ப நன்றி. சாதாரண நாளென்றால் நிச்சயம் வந்திருப்பேன் ஆனால் நாளை முக்கியமான தேர்வு இருப்பதால், என்னால் படிப்பதை விட்டு வரமுடியாது" என்று தயக்கமில்லாமல் சொல்லிவிட்டாள். ஆனால் மேரியால் அப்படி சொல்ல முடியவில்லை. ஜிம் அவள் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாத உயரத்தில் இருந்தவன், காலேஜ் ஹாட் த்ராப். மேரிக்கு ஜிம் மேல் ஒரு கண் என்ன, இரண்டு கண்ணுமே இருந்தது. அவன் கூப்பிட்டு போக முடியாது என்பதா? "படிக்கனும் உண்மைதான்.. ஆனால் உன் பார்ட்டியை மிஸ் பண்ண மனம் வரவில்லை ஜிம். கொஞ்ச நேரம் வந்துவிட்டு சீக்கிரம் போய்விடுகிறேன்" என்று லீசாவை ஆலோசிக்காமல் பதில் சொல்லிவிட்டாள். ஜிம் போனவுடன் தன்னை எரித்துவிடுவது போல பார்த்த லீசாவின் பார்வையை சந்திக்க தைரியம் இல்லாமல் மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள்.


மெளனத்தை லீசா தான் முதலில் கலைத்தாள். "ஏற்கெனெவே கணிதத்தில் நீ வீக். இந்த பாடத்தில் தேர்வாகவில்லை என்றால் உனக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை நின்று விடும், நினைவிருக்கு இல்லையா?" என்று வெறுப்பாக கேட்டு விட்டு திரும்பிக்கொண்டாள். பிறகு மேரி குளித்து, தனக்கு மிகவும் பொருத்தமான உடை அணிந்து பார்ட்டிக்கு கிளம்பும் வரை இரு பெண்களும் பேசிக்கொள்ளவே இல்லை.


பார்ட்டிக்கு போன மேரிக்கு எதுவுமே மனதில் ஒட்டவில்லை. "பாவம் லீசா, நமக்காக தானே கவலைப்பட்டாள்? அவளை தனியாக விட்டு விட்டு வந்திருக்ககூடாதோ" என்று குற்ற உணர்வில் வாடினாள். பார்ட்டி முடிவதற்கு முன்னாலேயே டார்முக்கு போக கிளம்பிவிட்டாள். "அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து லீசாவுடன் சேர்ந்து படிக்க வேண்டும்" என்று மனதில் நினைத்துக்கொண்டே வேகமாக காரை ஓட்டினாள். இவர்கள் டார்ம் ரூம் இருட்டாக இருந்தது. லீசா தூங்கி இருப்பாள் என்று நினைத்த மேரி, அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்தாள். ரூமுக்குள் நுழைந்த உடனே, சத்தம் போடாமல் இருக்க ஷூவை கழட்டி வைத்து பூனை மாதிரி நடந்து வந்தாள். பிறகு லைட் போடாமலே இருட்டில் கஷ்டப்பட்டு தேடி, தன் அலமாரியில் இருந்த நைட் ட்ரெஸை கண்டுபிடித்து அணிந்துக்கொண்டாள். அலாரம் லீசாவே செட் பண்ணி இருப்பாள் என்ற தைரியத்தில், பார்ட்டிக்கு போய் வந்த அலுப்பும், அங்கே குடித்த ஆல்கஹாலும் கண்களில் பாரமாக அழுத்த, லீசாவுக்கு பக்கத்தில் உள்ள தன் பெட்டில் படுத்தவுடனே தூங்கியும் விட்டாள்.


காலையில் சூரிய வெளிச்சம் முகத்தில் அறைந்ததால் திடுக்கிட்டு எழுந்த மேரி, லீசா தேர்வுக்கு கிளம்பி போய்விட்டுப்பாள் என்ற பதட்டத்தில் லீசாவை தேடினாள். லீசா இன்னமும் பக்கத்து படுக்கையில் ஒருக்களித்து சுவற்றைப்பார்த்தபடி படுத்திருந்தாள். புத்தகங்கள் அவளை சுற்றிலும் அலங்கோலமாக சிதறி இருந்தது. "இத்தனை நேரம் லீசா தூங்கமாட்டாளே!! அதுவும் பரீட்சை நேரத்தில் நிச்சயம் தூங்கவே மாட்டாள். உடம்பு சரி இல்லையோ? என்று நினைத்து படுத்தவாக்கிலேயே கையை மட்டும் நீட்டி லீசாவை தன் பக்கம் புரட்டிய மேரி, பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தாள். லீசாவின் உயிரற்ற நீல நிற கண்கள் மேரியின் முகத்தருகே முறைத்துப்பார்க்க, வயிற்று பாகம் முழுவதும் கத்தியால் கிழிக்கப்பட்டு இறந்துபோயிருந்தாள். படுக்கை முழுவதும் அவள் இரத்தம் குளம் போல பரவி இருந்தது. அவள் வயிற்றுக்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் லீசாவின் இரத்தத்தையே பயன்படுத்தி கத்தியால் இப்படி எழுதப்பட்டு இருந்தது


"நீ நேற்று இரவு லைட் போடாததுக்கு ரொம்ப மகிழ்ச்சி அடைவாய் இல்லையா மேரி?"


பின்குறிப்பு : வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாமல் எந்த நேரமும் பொறுப்பு, படிக்க வேண்டும் என்று திரியும் சில ஞானப்பழங்களை பயமுறுத்த, வேண்டுமென்றே சில குறும்பான மாணவிகளால் கிளப்பிவிடப்பட்ட கதை இது என்று நினைக்கிறேன்.

Monday, June 2, 2008

வணக்கம்: வருண்

வணக்கம்!

உன்னுடைய அழகான அறிமுகத்திற்கு நன்றி, கயல்!

கயல் கூறியதுபோல், இணையதளங்களின் மூலம் எங்கள் கருத்துக்களை சொல்வதற்காக இந்த ப்ளாக். கயலைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அது போல் வாசகர்களை கஷ்டத்திற்கு ஆளாக்க இஷ்டமில்லை.

எனக்கு தற்போது கொஞ்சம் வேலைப்பளு அதிகம். ஆதலால், அதிகமாக எழுத இயலவில்லை.

மற்றபடி என் என்புக்குரிய கயலுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வணக்கம்!

-வருண்