Showing posts with label கதை விமர்சனம். Show all posts
Showing posts with label கதை விமர்சனம். Show all posts

Friday, September 3, 2010

படித்ததில் பிடிக்காதது- மரப்பசு விமர்சனம்!




11 வருடங்களுக்கு முன்னால "திண்ணை"ல அம்பைனு ஒருவர் ஜானிகிராமனின் மரப்பசு பற்றி இந்த சிந்தனைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்! கீழே இவைகளுடைய இணைப்பு களுடன் அவர் விமர்சனத்தைக் கொடுத்துள்ளேன். இதை எதுக்குத் தருகிறேன்னா, இதுபோல் நான் இந்தக்கதையை சிந்தித்ததே இல்லை!

--------------------------------------

பகுதி ஒன்று இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்



பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்

அம்பை

மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.

இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.

அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.

எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.

அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).

எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

- இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்

(தி ஜானகிராமனின் நாவலான 'மரப்பசு ' வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி)

பகுதி ரெண்டு க்கு இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.

இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.

அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.

வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.

பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.


Thinnai 1999 December 3



------------------------------------

My comments on ambai's review!

* I hated reading "her" review/criticism on this novel and about this writer.

* ஜானகிராமன், ஒரு மாதிரியான பேர்வழி, ஆண் ஆதிக்கவாதி என்கிற குருட்டுப்பார்வையிலேயே இவர் சிந்தனைகள் எல்லாம் இருக்கு.

* ஏதோ பெண்களை கேவலப்படுத்தவே இந்தக்கதையை எழுதியது போல பலவிதமான குற்றச்சாட்டுக்களை அள்ளி எறிகிறார்!

* There are so many interesting information and interesting stuff are hidden in the novel as usual. Unfortunately, this "ammbai" is not smart enough to get this as she is concentrating on misinterpreting every damn thing as she seems to have all kinds of complexes and low self-esteem!

* TJR has insulted men more than women as far as I can see. கோபாலி மாதிரி ஒரு கேவலமான ஆண் இருக்கமுடியுமா? மனைவியிடம் இருந்து "ஊர் உலகத்துக்கு மகள்" என்று சொல்லிக்கொள்ளும் இளம் பெண்ணுக்குத்தாவுகிறான். அதன் பிறகு வேலைக்காரி மரகதம் மேல். ஆண்கள் இழிபிறவிகள், வயதாக ஆக "பர்வேர்ட்" ஆகிக்கொண்டே போகிறார்கள் என்று இதைவிட சொல்லனுமா என்ன? மேலும் அம்மணி, கோபாலியை விட பலமடங்குகள் உயர்ந்தவள் எனப்தை அம்பையின் "க்ளோஸ்ட் மைண்ட்" பார்க்க முடியவில்லை.

* ஒரு ஆண் பெண்னைப்பற்றி தான் புரிந்துகொண்டதைத்தான் எழுதமுடியும். அதைத்தான் ஜானகிராமன் செய்கிறார். அவருடைய அந்தப்பார்வை சரி என்று அவர் எங்கே சொல்கிறார்? பெண்களை புரிந்துகொள்ள முடியாத புதிராகவேதான் எப்போதுமே அவர் காட்டியுள்ளார். என் பார்வையில் ஜானகிராமன் என்றுமே பெண்களைப் பார்த்து, பெண் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடியாமல், பெண்களின் பலம் பற்றி பயப்படும் ஒரு சாதாரண ஆணாக்த்தான் எனக்குத் தெரிகிறார்.

*தன்னுடைய பிற்காலம் எப்படியிருக்கும் என்று அம்மணி மரப்பசுவைப் பார்த்து தன் உடலழகு காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதைத்தான் உணருவதாக காட்டுகிறார். அதை இந்த அம்பையார் இஷ்டத்துக்கு விமர்சிப்பது பரிதாப்பத்துக்குரியது.