இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் ரூ. 20 கோடி என்கிறார்கள்! தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இவர்தான் அதிக சம்பளம் வாங்குகிறதாக சொல்லப்படுகிறது. இவரை நம்பி ரூ 150 கோடிகளை செலவழித்து ஒரு பிரமாண்டமான படம் எடுக்க சன் பிக்சர்ஸ் தயாராக உள்ளது. அந்தப்படைப்புதான், ரஜினியும், ஐஸ்வர்யா பச்சனும் இணைந்து சங்கர் இயக்கத்தில் உருவாகும் “எந்திரன்”.
ஆனால், இவர் சினிமா உலகத்தில் நுழைந்து வில்லனாக நடிக்க ஆரம்பித்தபோது நடித்த படங்களில் ஒன்று பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. இதில் இவர் நடிக்கும்போது இவருக்கு “பரட்டை” என்ற வில்லன் பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 2500 மட்டுமே என்கிறார் இவரை வைத்து டைரக்ட் செய்த இயக்குனர் பாரதிராஜா! அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு போன்ற படங்களுக்கு பிறகு வந்ததுதான் 16 வயதினிலே. ஆனால், இந்தப்படத்தில் வந்த “பரட்டையன்” ரஜினி பாத்திரம், ரஜினிக்கு ஒரு மாமகுடம் சூட்டப்படவேண்டிய ஒன்று. தமிழ் சினிமா வரலாற்றில் அதுபோல் ஒரு வில்லன் பாத்திரத்தை அன்று தேதிக்கு யாரும் பார்த்ததில்லை என்கிறார்கள். எம் ஆர் ராதா, அசோகன், நம்பியார், பி எஸ் வீரப்பா போன்றவர்கள் செய்த வில்லன் பாத்திரங்களுக்கும் "பரட்டையன்" எனற பாரதிராஜா உருவாக்கிய வில்லனுக்கும் வித்தியாசங்கள் அதிகம்!
இதில் பரட்டையனாக இவர் பேசும் வசனங்கள்,
“இவ ஆத்தாளுக்கு தாவணி போட்டாக்கூட நல்லாதாண்டா இருக்கும்”
“இது எப்படி இருக்கு?”
“வத்திப்பெட்டி கேட்டீங்க இல்ல? நானே பத்த வைக்கிறேன்”
போன்றவை இவருக்கு தமிழ் சினிமாவின் படிக்கட்டுகளில் பலபடிகளுக்கு மேலே ஏற உதவியவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பாரதிராஜாவுக்கும் ரஜினிக்கும் சில மனக்கசப்புகள் வந்தது. பிறகு சமாதானம் ஆகி, கொடி பறக்குது படத்தில் மறுபடியும் இணைந்தார்கள். அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக வரவில்லை!