Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, November 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 8

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
"Did you have inter****** with him?" என்னுடைய ஒரு நடிகரைப்பற்றிய பதிவுக்கு ஒரு சகோதரர் இப்படி ஒரு "கனிவான" பின்னூட்டம் எழுதி இருந்தார். பாவம், அவர் கூட பயணம் செய்பவர்களோடு எல்லாம் இண்டர்கோர்ஸ் வைத்துக்கொள்ளும் மனநோயாளி போலிருக்கிறது. சகோதரரே, அந்த பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய மனநோய் விரைவில் குணமாகவும் பிராத்திக்கிறேன். என்ன அந்த காமெண்டை டிலிட் பண்ணிட்டு பேசாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் இல்லை, கமெண்ட் பக்கத்தில் எழுதினால் ஒருவேளை கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது இல்லையா, அதனால் தான். இப்படி எல்லாம் எழுதி உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது? ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி!

பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி கடுமையாக எழுத எனக்கும் பிடிப்பதில்லை, சிலருக்கு இந்த மொழி தான் புரிகிறது, நான் என்ன செய்ய? சரி அதை விட்டுத்தள்ளுவோம், சில ஜென்மங்கள் என்ன திட்டினாலும் திருந்தாது. போன தொடரில் ஒரு விஷயத்தை சரியாக எழுதாமல் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதாவது, இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிக்க கூடாது என்ற பொருள் வந்துவிட்டது, நான் எழுத நினைத்தது அதுவல்ல.

படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை. நன்றாக படித்து, வேலை கிடைத்து ஒரு நிலையை அடைந்தப்பிறகு 50 வயதுக்காரர் என்ன, Anna Nicole மாதிரி 80 வயது மனிதரைக்கூட காதலியுங்கள், திருமணம் செய்துக்கொள்ளுங்கள், தவறே கிடையாது. காதல் வயதெல்லாம் பார்த்து வருவதில்லை, ஆனால் காதலை செயல்முறைப்படுத்தும்போது வயது வரம்பு அவசியம்! இது தான் நிதர்சனம், நம்பினால் நம்புங்கள்.

மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? வெஸ்டர்னர்ஸ் அப்படி எல்லாம் மறைக்க மாட்டார்கள், திருமணத்தின் போதே 'வெர்ஜின் இல்லை' என்பது நன்றாக தெரிந்தே திருமணம் செய்துக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்! ஏமாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து. அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு பெண் சுதந்திரக்கருத்துக்களை உதிர்ப்பவர்களும், தனியறையில் எப்படி என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. பெண் சுதந்திரம் எல்லாம் ஓவர் நைட்டில் கிடைத்துவிடாது.ஜாதி சமத்துவமே இன்னும் கிடைக்காத போது, ஆண் -பெண் சமத்துவம் கொஞ்சம் பேராசையே! சமத்துவமே வராது என்று சொல்லவில்லை, நிச்சயம் உடனே வராது என்பது மட்டும் உண்மை. இதை எல்லாம் சமாளிக்க முடியுமென்றால், You go girl!!! Sky is the limit!. இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும். நமக்கெல்லாம் Limit is the sky!

இதெல்லாம் புரியாதவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே எழுத முயலுகிறேன், பெற்றோர் கடினமாக உழைத்து நம்மை படிக்க வைக்கும் பணத்தை வீணாக்குவது தவறில்லையா? வீணாக்க விருப்பம் என்றால் சுயமாக சம்பாதித்து உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணாக்கவும். இன்றைய இளையத்தலைமுறை ஆண்களுக்கு தன்னம்பிக்கையுள்ள, படித்த, அதிகாரத்தில் இருக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கிறது, ஒரு நிலைக்கு வந்த பிறகு தானாகவே காதலிக்கும் வாய்ப்புகள் வரும், வேண்டுமென்றால் சுயம்வரம் வைத்து கூட வேண்டியவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தோழி சரஸ்வதியை(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)குறிப்பிடலாம். தானாகவே உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் பட்டியலில் அவளுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

யூனிவர்சிட்டியில் புதிதாக வந்து சேர்ந்த போது எங்கள் யாருக்குமே அவளை அவ்வளவு பிடிக்கவில்லை. ஒல்லியாக, நெடு நெடுவென்று சுடிதாருடன் வருவாள். Fashion sense என்றால் கிலோ என்ன விலை அவளுக்கு, இந்தியப்பெண்கள் குறைவு என்பதால் வேண்டா வெறுப்பாக அவளையும் சேர்த்துக்கொள்வோம். அவளுடைய குடும்ப பிண்ணனியை தெரிந்துக்கொண்ட போது பாவமாக இருந்தது. அப்பா உடற்பயிற்சி ஆசிரியர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், இவளுக்கு முன் ஒரு அக்கா, பின்னால் ஒரு தங்கை. கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாமல் ரொம்ப திணறி இருக்கிறார்கள். படிப்பு மட்டும் அவளுக்கு ரொம்ப நன்றாக வந்தது என்று சொன்னால் அது பச்சைப்பொய்! அதெல்லாம் இல்லை, அவள் ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் டிவி பார்க்கும் போது, வெட்டி அரட்டையடித்து பொழுதைப்போக்கும் போது, டான்ஸ் க்ளப்புக்கு போகும் போது- எதிலும் கலந்துக்கொள்ளாமல் படிப்பு, படிப்பு, படிப்பு!

அவள் உழைப்பெல்லாம் தேர்வுகளில் ஜொலித்தது, பேராசிரியர்கள் அவள் என்றால் மரியாதையாக பார்த்தார்கள். எங்கள் செட்டிலேயே அதிக க்ரேட் பாயிண்ட் ஆவெரேஜில் க்ராஜுவேட் பண்ணினாள். Fortune 500 கம்பனியில் உடனே இண்டர்னாக எடுத்துக்கொண்டார்கள், எங்களுக்கெல்லாம் ஒரு உப்புமா கம்பனிகளில் வேலை கிடைத்தது. 'வேலை கிடைத்துவிட்டதே' என்று எங்களை மாதிரி வெட்டியாக அவள் சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடவில்லை, தன் வேலை மட்டுமில்லாது, மற்றவர்கள் வேலைகளையும் கற்றுக்கொண்டாள். சில மாதங்களில் அவளை நிரந்தரமாகவே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சக தோழிகள் அவளை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தோம். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துக்கொண்டாள். சரஸ்வதி தற்போது 6 மாதமேயான அழகான பெண்குழந்தைக்கு அம்மா, Software quality control பிரிவில் ப்ராஜக்ட் லீட்! ஏதோ தேவதை கதை போல இருக்கிறது இல்லையா?

தேவதைக்கதை எல்லாம் இல்லை, இந்தப்பெண் பல போராட்டங்களை கடந்தே இந்த நிலையை அடைந்திருக்கிறாள். எத்தனையோ நாள் என்னிடம் தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதிருக்கிறாள்! எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்த நாள் நல்லதாக விடியும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவள் ஆண்களையே ஏறெடுத்துப்பார்க்காதை கவனித்து, ஒருவேளை லெஸ்பியனோ என்று கூட நினைத்திருக்கிறோம். இவளுடைய இந்நாள் கணவர், அந்நாள் காதலராக இருக்கும் போது ரெஸ்டாரண்டுக்கு அவரை அறிமுகப்படுத்த அழைத்து வந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறிவிட்டது. "I thought you are a lesbian!" என்று ஒரு தோழி வாய்விட்டே அலற, உடனே அனைவரும் ஆமோதித்தோம். பிறகு சூழ்நிலையை உணர்ந்து அவசரமாக அவளுடைய காதலரின் முகத்தைப்பார்த்தோம், பேயறைந்தது போல இருந்தது! இப்போதும் அதே எக்ஸ்ப்ரெஷனுடன் தான் உலா வருகிறார்(சும்மா ஜோக்):)

-நினைவுகள் தொடரும்