Friday, June 6, 2008

கதையா இல்லை நிஜமா?

நான் படித்துக்கொண்டிருந்த போது 2 அறை தோழிகளுடன் பல்கலைக்கழக டார்ம் ரூமில் தங்கி இருந்தேன். வகுப்புகள் முடிந்து இரவு நேரத்தில் தூங்கப்போகும் முன் ஒருவரோடு ஒருவர் பேசி, அரட்டையடித்துக்கொண்டிருப்பது வழக்கம். பக்கத்து அறைகளில் இருந்து கூட சிலர் எங்கள் அரட்டையில் கலந்து கொள்வார்கள். அமரிக்க டார்ம் வாழ்க்கைமுறையில், உண்மையாகவே நடந்ததாக கூறப்படும் சில பயங்கரமான டார்ம் ரூம் கதைகள் உண்டு. இதை எல்லாம் கேட்டு இரவெல்லாம் தூங்க முடியாமல் அவதிப்படுவோம். பிறகு அந்த கதைகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில், சரியான ஆதாரமே இல்லை என்று கண்டுபிடித்தேன். அப்படி நாங்கள் பேசிய கதைகளில் இருந்து சிலவற்றை எழுதுகிறேன்.


-------------------------------------


நடு இரவு பயங்கரம்:





லீசா, மேரி இருவரும் ஒரு புகழ்பெற்ற அமரிக்க யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவிகள். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்து ஒரே பள்ளியில் படித்ததால், நல்ல தோழிகள். லீசா நன்றாக படிக்கக்கூடிய மாணவி. மேரி சுமார் ரகம், ஆனால் எப்படியோ பாஸ் ஆகி விடுவாள். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால், ஒரே மேஜரை தேர்வு செய்திருந்தனர்; ஒரே டார்ம் ரூமில் அறைத்தோழிகளாக தங்கி இருந்தனர்.

ஒரு நாள் லீசாவும், மேரியும் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டே, அடுத்த நாள் நடக்கவிருக்கும் கடினமான கணித தேர்வுக்காக சீரியசாக படித்துக்கொண்டிருந்தனர். திடீரென்று, "ஹலோ கேர்ல்ஸ்" என்ற குரல் கேட்டு அவர்கள் கவனம் கலைந்தது. அங்கே ஜிம் நின்றிருந்தான். ஜிம் அவர்கள் வகுப்புத்தோழன், வசதியான குடும்பத்து பையன். போரடிக்கிறது என்று சிலர் காலேஜ் வருவார்களே, அவன் அந்த ரகம்.


"இன்று என் பிறந்த நாள், அதற்காக ஹோட்டல் ஹில்டனில் பெரிய பார்ட்டி கொடுக்கிறேன். குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு மட்டும் தான் அழைப்பு விடுத்திருக்கிறேன். நீங்க இரண்டு பேரும் வருவீங்க இல்லையா" என்று ஆவலோடு கேட்டான். இரு பெண்களுக்கும் ரொம்ப வியப்பு. ஜிம் வசதி படைத்தவன், அழகானவன், மேலும் காலேஜ் ஃபுட்பால் ப்ளேயர் என்பதால் இவனுக்கு நிறைய பெண் தோழிகள் இருந்தார்கள். இவன் பார்ட்டிக்கு கூப்பிடுவான் என்று நினைத்துக்க்கூட பார்க்கவில்லை அவர்கள்.


லீசாவுக்கு யோசிக்க அவகாசமே தேவை இருக்கவில்லை. " சாரி ஜிம், உன் அழைப்புக்கு ரொம்ப நன்றி. சாதாரண நாளென்றால் நிச்சயம் வந்திருப்பேன் ஆனால் நாளை முக்கியமான தேர்வு இருப்பதால், என்னால் படிப்பதை விட்டு வரமுடியாது" என்று தயக்கமில்லாமல் சொல்லிவிட்டாள். ஆனால் மேரியால் அப்படி சொல்ல முடியவில்லை. ஜிம் அவள் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாத உயரத்தில் இருந்தவன், காலேஜ் ஹாட் த்ராப். மேரிக்கு ஜிம் மேல் ஒரு கண் என்ன, இரண்டு கண்ணுமே இருந்தது. அவன் கூப்பிட்டு போக முடியாது என்பதா? "படிக்கனும் உண்மைதான்.. ஆனால் உன் பார்ட்டியை மிஸ் பண்ண மனம் வரவில்லை ஜிம். கொஞ்ச நேரம் வந்துவிட்டு சீக்கிரம் போய்விடுகிறேன்" என்று லீசாவை ஆலோசிக்காமல் பதில் சொல்லிவிட்டாள். ஜிம் போனவுடன் தன்னை எரித்துவிடுவது போல பார்த்த லீசாவின் பார்வையை சந்திக்க தைரியம் இல்லாமல் மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள்.


மெளனத்தை லீசா தான் முதலில் கலைத்தாள். "ஏற்கெனெவே கணிதத்தில் நீ வீக். இந்த பாடத்தில் தேர்வாகவில்லை என்றால் உனக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை நின்று விடும், நினைவிருக்கு இல்லையா?" என்று வெறுப்பாக கேட்டு விட்டு திரும்பிக்கொண்டாள். பிறகு மேரி குளித்து, தனக்கு மிகவும் பொருத்தமான உடை அணிந்து பார்ட்டிக்கு கிளம்பும் வரை இரு பெண்களும் பேசிக்கொள்ளவே இல்லை.


பார்ட்டிக்கு போன மேரிக்கு எதுவுமே மனதில் ஒட்டவில்லை. "பாவம் லீசா, நமக்காக தானே கவலைப்பட்டாள்? அவளை தனியாக விட்டு விட்டு வந்திருக்ககூடாதோ" என்று குற்ற உணர்வில் வாடினாள். பார்ட்டி முடிவதற்கு முன்னாலேயே டார்முக்கு போக கிளம்பிவிட்டாள். "அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து லீசாவுடன் சேர்ந்து படிக்க வேண்டும்" என்று மனதில் நினைத்துக்கொண்டே வேகமாக காரை ஓட்டினாள். இவர்கள் டார்ம் ரூம் இருட்டாக இருந்தது. லீசா தூங்கி இருப்பாள் என்று நினைத்த மேரி, அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்தாள். ரூமுக்குள் நுழைந்த உடனே, சத்தம் போடாமல் இருக்க ஷூவை கழட்டி வைத்து பூனை மாதிரி நடந்து வந்தாள். பிறகு லைட் போடாமலே இருட்டில் கஷ்டப்பட்டு தேடி, தன் அலமாரியில் இருந்த நைட் ட்ரெஸை கண்டுபிடித்து அணிந்துக்கொண்டாள். அலாரம் லீசாவே செட் பண்ணி இருப்பாள் என்ற தைரியத்தில், பார்ட்டிக்கு போய் வந்த அலுப்பும், அங்கே குடித்த ஆல்கஹாலும் கண்களில் பாரமாக அழுத்த, லீசாவுக்கு பக்கத்தில் உள்ள தன் பெட்டில் படுத்தவுடனே தூங்கியும் விட்டாள்.


காலையில் சூரிய வெளிச்சம் முகத்தில் அறைந்ததால் திடுக்கிட்டு எழுந்த மேரி, லீசா தேர்வுக்கு கிளம்பி போய்விட்டுப்பாள் என்ற பதட்டத்தில் லீசாவை தேடினாள். லீசா இன்னமும் பக்கத்து படுக்கையில் ஒருக்களித்து சுவற்றைப்பார்த்தபடி படுத்திருந்தாள். புத்தகங்கள் அவளை சுற்றிலும் அலங்கோலமாக சிதறி இருந்தது. "இத்தனை நேரம் லீசா தூங்கமாட்டாளே!! அதுவும் பரீட்சை நேரத்தில் நிச்சயம் தூங்கவே மாட்டாள். உடம்பு சரி இல்லையோ? என்று நினைத்து படுத்தவாக்கிலேயே கையை மட்டும் நீட்டி லீசாவை தன் பக்கம் புரட்டிய மேரி, பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தாள். லீசாவின் உயிரற்ற நீல நிற கண்கள் மேரியின் முகத்தருகே முறைத்துப்பார்க்க, வயிற்று பாகம் முழுவதும் கத்தியால் கிழிக்கப்பட்டு இறந்துபோயிருந்தாள். படுக்கை முழுவதும் அவள் இரத்தம் குளம் போல பரவி இருந்தது. அவள் வயிற்றுக்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் லீசாவின் இரத்தத்தையே பயன்படுத்தி கத்தியால் இப்படி எழுதப்பட்டு இருந்தது


"நீ நேற்று இரவு லைட் போடாததுக்கு ரொம்ப மகிழ்ச்சி அடைவாய் இல்லையா மேரி?"


பின்குறிப்பு : வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாமல் எந்த நேரமும் பொறுப்பு, படிக்க வேண்டும் என்று திரியும் சில ஞானப்பழங்களை பயமுறுத்த, வேண்டுமென்றே சில குறும்பான மாணவிகளால் கிளப்பிவிடப்பட்ட கதை இது என்று நினைக்கிறேன்.

7 comments:

லதானந்த் said...

கதை நன்றாக இருக்கிறாது. என்னுடைய விமரிசனத்தை உங்கள் ரூம் சுவரில் எழுத ஆசை.

கயல்விழி said...

விமர்சனம் தாராளமா எழுதுங்க.

பரிசல்காரன் said...

நிஜமாகவே பயங்கரமான கதை..

கயல்விழி said...

நன்றி பரிசில்காரன்(ஒரு நல்ல பெயரா வைக்ககூடாதா, ஏதோ மரியாதை இல்லாமல் கூப்பிடுவது மாதிரி ஒரு ஃபீலிங் வருது :) )

வருண் said...

எனக்கு,கதை மாதிரித்தான் இருக்கு கயல்.நிஜம்போல் இல்லை :)

கயல்விழி said...

கதை தான் என்று நினைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
லதானந்த் said...

கதை நன்றாக இருக்கிறாது. என்னுடைய விமரிசனத்தை உங்கள் ரூம் சுவரில் எழுத ஆசை.
/

ரிப்பீட்டேய்ய்ய்