Tuesday, June 10, 2008
You Don't Mess with the Zohan
சீரியசான கோணத்திலேயே இதுவரை பார்க்கப்பட்ட இஸ்ரேலி- பாலஸ்தீன் பிரச்சினை, முதன் முதலில் நகைச்சுவையான கோணத்தில் காட்டப்படுகிறது என்பது மட்டுமே இந்த படம் பார்ப்பதற்கு முன் நான் கேள்விப்பட்டது. மேலும் ஆடம் சாண்ட்லர் நல்ல நடிகர், எனவே கடந்த வெள்ளியன்று நானும் என் தோழியரும் "You Don't Mess with the Zohan" படம் பார்க்க போனோம். படம் ஆரம்பித்த ஒரு பத்து நிமிடத்துக்கு எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.
முதல் 10-20 நிமிடத்துக்கு கதை இவ்வளவு தான்: ஆடம் சாண்டலர் ஒரு இஸ்ரேலி கவுண்டர் தீவிரவாதி என்று சொன்னால் அது சரி இல்லை. ஆடம் சாண்ட்லர் ஒரு இஸ்ரேலி சூப்பர் ஹீரோ என்பது தான் சரி :) விஜயகாந்தே தோற்றுப்போகும் அளவு, அத்தனை புல்லட்டுகளை ஏதோ கிரிக்கெட் பந்தைப்பிடிப்பது மாதிரி கேட்ச் பிடிக்கிறார். ஒருவேளை இந்த படம் எடுப்பதற்கு முன்னால் தமிழ் படம் ஏதாவது பார்த்து தொலைத்தார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக உபயோகிக்கப்படும் சட்னி போன்ற 'ஹம்மஸை' இதற்கு முன் இந்த அளவு யாராவது கிண்டல் பண்ணி இருப்பார்களா என்பது சந்தேகமே. சாக்லெடுக்கு ஹம்மஸ் தொட்டு சாப்பிடுகிறார்கள், காஃபிக்கு சக்கரைக்கு பதில் கலந்துக்கொள்ளுகிறார்கள் ஏன், தலைக்கு கூட கண்டிஷனராக உபயோகிக்கிறார்கள். ஆடம் சாண்ட்லரின் அந்தரங்க உறுப்பை வேறு அடிக்கடி ஷூம் பண்ணி க்ளோசப்பில் காண்பித்தது அருவருப்பாக இருந்தது(இதுக்கு பெயர் ஜோக்காம்!!). எனக்கு பக்கத்தில் வேறு ஒரு கருப்பு பெண்மணி உட்கார்ந்து கொண்டு ஆடமின் ஒவ்வொரு அசைவுக்கும் "ஹா ஹா ஹா" என்று கர்னகொடூரமான குரலில் சிரித்து திகிலூட்டினார்.பேசாமல் தியேட்டரை விட்டு எழுந்து ஓடிவிடலாமா என்று நினைத்தேன்.
சரி வந்தது வந்துவிட்டோம், ஏன் 10.50 டாலரை வேஸ்ட் பண்ணுவது என்று என் சோகத்தை பாப்கார்னில் புதைத்துக்கொண்டு படம் முடியப்போகும் நேரத்துக்காக ஆவலுடன் காத்திருந்தேன். அதற்கு பிறகு தான் கதை சூடுபிடிக்கிறது. ஆடம் சாண்ட்லருக்கு இப்படி சூப்பர் ஹீரோவாக இருப்பது வெறுத்துப்போகிறது. தன்னுடைய எதிரி ஃபாண்டம் என்ற பாலஸ்தீனியருடன் போடும் விவஸ்தை இல்லாத சண்டையில் இறந்து போவது போல நாடகமாடிவிட்டு அமரிக்காவுக்கு தப்பி ஓடுகிறார். அங்கே ஹேர் ஸ்டைலிஸ்டாக வேலை செய்வதே ஆடமின் குறிக்கோளாக இருக்கிறது. புகழ்பெற்ற சலூன்களில் இவர் பண்ணும் கலாட்டாக்களை சகிக்க முடியாமல் துரத்திவிட, கடைசியில் ஒரு சின்ன சலூனில் தான் வேலை கிடைக்கிறது, அதுவும் கீழே விழும் முடியை பெருக்கும் பணியாளராக. பிறகு நிறைய பாடுபட்டு, கோல்மால் பண்ணி அந்த சலூனிலேயே ஸ்டைலிஸ்டாக ப்ரோமோஷன் வாங்குகிறார். இதை சாக்காக வைத்து வயதான பெண்மணிகளை கணக்கு பண்ணுகிறார். இவருடைய முடி வெட்டும் அழகில்(!)மயங்கும் வயதான பெண்மணிகள் பிறகு இவருடைய வாடிக்கையாளர் ஆகிறார்கள். இவரால் சலூனுக்கு வருமானம் பெருகுகிறது. வழக்கமாக இது மாதிரியான செக்ஸிஸ்ட் ஜோக் பெண்களுக்கு பிடிக்காது என்றாலும், இதை படமாக்கிய விதத்தை பார்த்து கோபப்பட்டுக்கொண்டே என்னாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆடம், வயதான பெண்மணிகளுடன் எப்போது தனி அறைக்கு போனாலும், அந்த சலூனே அதிர்ந்து பொருட்கள் எல்லாம் கீழே விழும் காமெடியை பார்த்து சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.
பாலஸ்தீனிய பெண் மற்றும் சலூன் ஓனருடனான(கதாநாயகி)ஆடமின் காதல் மட்டும் கதையோடு ஒட்டவே இல்லை. ஆடம் சாண்ட்லருக்கும் ஹீரோயினுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரியே இல்லை. சொல்லப்போனால் கதாநாயகியோடு மட்டும் தான் கொஞ்சம் சீரியசாக இஸ்ரேல்- பாலஸ்தீன் பிரச்சினையைப்பற்றி வாதிடுகிறார். வழக்கமாக ஆடம் சாண்ட்லர் ரொமாண்டிக் ஹீரோ என்ற இமேஜ் இந்த படத்தில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. ஏதோ கடனுக்காக காதல் காட்சிகளை நுழைத்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனிய தீவிரவாதிகளை எப்படி எல்லாம் கிண்டலடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் கிண்டலடித்திருக்கிறார்கள். உடல் காயத்துக்கு போடும் நியோஸ்போரினை "லிக்விட் நைட்ரஜன்" என்று நினைத்து பாம் தயாரிப்பது, தீவிரவாதிகளுக்கான போன் லைனில் ஒரு பெண் குரல் "ப்ளீஸ் ப்ரெஸ் 1", "ப்ரெஸ் 2" என்றெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பது, பயங்கர காமெடி. இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சமாதானத்துக்கான பேச்சு வார்த்தையில் க்ளிண்டன், புஷ், ஒபாமா, மிகெயின் போன்றவர்களின் மனைவிகளை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடிப்பது தியேட்டரை மீண்டும் மீண்டும் சிரிப்பில் குலுங்க வைக்கிறது(இப்படி எல்லாம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கிண்டலடித்தால் என்ன ஆகும் என்ற நினைப்பு உண்டாவதை தடுக்க இயலவில்லை). மரியா கேரியை பார்த்து ஏன் இரு தரப்பினரும் ஜொள் விடுகிறார்கள் என்பது புரியவில்லை, அவர் நம்ம ஊர் நமீதாவுக்கு அக்கா மாதிரி அசிங்கமாக இருக்கிறார்.
கடைசியில் அமரிக்காவில் வாழும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய மக்கள் தங்களுக்குள் எந்த வேற்றுமை இருந்தாலும் சகோதரர் போல வாழலாம் என்ற மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள். உண்மை தான். ஒரு உதாரணத்துக்கு, இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும், அமரிக்கா போன்ற வெளிநாட்டுக்காரர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று தான் "இமிக்ரெண்ட்ஸ்".இதை புரிந்துக்கொண்டு இருதரப்பினரும் நண்பர்களாக வாழுகிறார்கள். எனக்கும் சில நல்ல பாகிஸ்தானிய நண்பர்கள் உண்டு. 2 மணி நேரம் கவலை எல்லாம் மறந்து சிரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.
Labels:
சினிமா விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
படம் ஆரம்பம் சரியில்லை ஆனால் பிறகு நல்லா இருக்கிறது என்கிறாயா, கயல்?
எனக்கு ஆடம் சேண்ட்லரின் படங்கள் பிடிக்கும். ஆங்கர் மேனேஜ்மெண்ட் நல்லா இருந்தது.
டிவிடி யில்தான் பார்ப்பேன் என்று நினைக்கிறேன், கயல்.
இல்லை , பட ஆரம்பம் நம்மை மாதிரி இந்தியர்களுக்கு இந்தியப்படங்களை நினைவுப்படுத்துவதால் கொஞ்சம் போரிங்காக இருக்கும். இது வழக்கமான ஆடம் சாண்டலர் படம் இல்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன சண்டையில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால் இந்த படம் பிடிப்பது சந்தேகமே :)
இஸ்ரேல்,பாலஸ்தீன மன இறுக்கத்தை இப்படியும் கிண்டல் செய்யமுடியுமா என்ன?புராதனத்திலும் புராணமான இவர்கள் சண்டை எப்பொழுது முடிவுக்கு வருமோ:(
Post a Comment