Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Thursday, January 7, 2016

ராஜ நடராஜன் மறைவு!

ராஜ நடராஜன், கடந்த 7-8 ஆண்டுகளா எனக்கு வலையுலகில் நன்றாகத் தெரிந்தவர்.  இனிமேல் இவர் கருத்துக்களை நாம் காண இயலாது. முதலில் இவர் மறைந்துவிட்டதாக துயரச்செய்தி நம்பள்கி தளத்தில் வந்தபோது, இது நிச்சயம் புரளியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். பல மாதங்கள் முன்புகூட இக்பால் செல்வன் பற்றிய செய்திகூட பொய்யானதே. அதேபோல்தான் இதுவும் இருக்கும் என்றுதான் எல்லோரும்போல் நானும் நினைத்தேன். ஆனால்  என் மனவோட்டத்தில் ஜோதி கணேசன் (ஜோதிஜி) அவருடைய நட்பு வட்டத்தில் உள்ளவரரென்பதால் அவருக்குத்தான் உண்மை தெரியும் என்று அவருடைய பின்னூட்டத்திற்காக காத்திதிருந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று.

ஜோதி கணேசன், "வந்த செய்தி உண்மைதான் என்றும் ராஜ நடராஜன் மறைந்துவிட்டார்!" என்றும் சொல்லி இந்தப் புரளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஜனவரி மூன்று வரை சாதாரணமாக பதிவுலகில் உலவிக்கொண்டிருந்தவர். எந்தவிதமான உடல் நலக்குறைவு இருப்பதாகவும் தெரியவில்லை. தேள் கடி இதய நோயுக்கு மருந்தாம் என்றெல்லாம் பதிவு எழுதிக்கொண்டு இருந்தார். திடீர்னு "கார்டியாக் அர்ரெஸ்ட்" என்கிறார்கள். மற்றபடி வேறு விபரங்கள் தெரியவில்லை. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது? அவர் மறைந்து விட்டார்.

ஒரு முறை ஒரு கிருஸ்தவ நண்பர் இதுபோல் ஆக்சிடெண்ட்டில் இறந்துவிட்டார். அப்போது இறுதிச் சடங்கு செய்யும்போது பாதிரியார்கள் சொன்னார்கள். அதாவது இந்த இள வயதிலேயே அவர் முதிர்ச்சியடைந்து, முழுத்தகுதியும் பெற்றுவிட்டதால் ஜீசஸ் அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டார் என்று. அதேபோல் நடராஜன் வாழ்வு இந்த இளவயதில் முழுமை பெற்றுவிட்டது போலும். அதனால் அவர் உறவினர்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார்- யாரிடமும் சொல்லாமல்.

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட நான் எழுதிய ஒரு கவிதை இங்கே!


*********************************

நண்பர்களை அழைக்க முடியவில்லை!

அவர்கள் மேல் கோபமில்லை
எள்ளளவு வருத்தமும் இல்லை
அவர்களை பழிவாங்கவும் இல்லை
கடவுளை சந்திக்கப் போகும் அவசரத்தில்
ஆருயிர் நண்பர்களை அழைக்க முடியவில்லை
எனது இறுதி சடங்கிற்கு!
**********************************************

 ராஜ நடராஜன் பற்றி நான் அறிந்த சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.

என்னுடைய அனுமானத்தில் திரு நடராஜன் அரசியல் சம்மந்தமான பதிவுகளில் மட்டும்தான் மிகவும் ஆர்வம் காட்டுபவர். நான் ஆரம்பத்தில் எழுதிய ஒரு சில காதல் கதைகள் படித்துவிட்டு "வருண் எனக்கு உங்க கதை படிச்சா தூக்கம்தான் வருகிறது" என்று சொல்லியிருக்கிறார்னு கூட எனக்கு நேற்று  நடந்துபோல் ஞாபகம் இருக்கிறது. காதல்கதைகள், தத்துவக் கட்டுரைகள்  எல்லாம் இவரை  அரசியல் ஈர்ப்பதுபோல் ஈர்ப்பதில்லை.

பதிவுகள் மட்டுமன்றி, இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் மிகவும் நாகரீகமாக இருக்கும்- அமுதவன் சார் சரியாகச் சொன்னதுபோல் அது பொதுவாக வம்பு கலந்துதான் ஒவ்வொரு பின்னூட்டமும் முடியும். அதாவது முடிவதுபோல் தொடர வேண்டித் தொக்கி நிற்கும்.

பொதுவாக ஒரு  சில விவாதங்களில் எனக்கு  எரிச்சல் கோபம் வரும்போது பின்னூட்டங்களில் சாதாரணமாக கெட்டவார்த்தை  சரளமாக வரும். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, கெட்டவார்த்தை எளிதில் வரும் எனக்கு . ஆனால்  இதுவரை  ராஜ நடராஜன் கெட்டவார்த்தையை மறந்துகூட பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. அந்த வகையில் எனக்கும் நடராஜனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். மேலும் ராஜ நடராஜன் ஒரு பக்கா ஒலகநாயகன் விசிறி. என்னுடைய கணிப்பில் ஜெயகாந்தன் விசிறி என்றும்கூட சேர்த்துச்  சொல்லலாம். தன்னை சிவாஜி விசிறி என்று சொல்லிக்கொள்வார் ஆனால்  இவர் சிவாஜி நடிப்பை ரசித்து சிலாகித்து எங்கேயும் எழுதியதை நான் இதுவரைப் பார்த்ததில்லை.

இவருக்குப் பிடிக்காததுனு சொல்ல வந்தால்.. கலைஞர் கருணாநிதியை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால அதையும் அப்பட்டமாகச்  சொல்லமாட்டார். பூடகமாக நாகரீகமாகத்தான் சொல்லுவார்- வம்பு கலந்து. ரஜனிகாந்தை சுத்தமாகப்  பிடிக்காது. அதையும் அப்பட்டமாக சொல்ல மாட்டார். அதைவிட வருண் ஆன என்னுடைய பதிவுலக நாகரிகம், நடத்தை  இவருக்குச் சுத்தமாக ஆகாது. பலமுறை பலவிதமாக எனக்கு அறிவுரை சொல்லி என்னை திருந்தச் சொல்லி, நாகரீகமான பதிவராக மாற்ற முயன்று கடைசிவரை தோற்றவர்னுகூட சொல்லலாம். அதனால் எனக்கும் இவருக்கும் பொதுவாக கருத்து வேற்பாடுகள் வரும். எப்போதுமே விவாதத்தில் நான் ஒரு அணியில் (தனியாக பல சமயங்களில்) இருப்பேன், இவரு என்னுடைய எதிரணியில் எனக்கு சுத்தமாக ஆகாத பதிவர்களுடந்தான் இருப்பார். பதிவுலகக் களேபகரங்களில் என்னுடைய எதிரணிதான் இவருக்கு நாகரீகமாகவும், நியாயமாகப் பேசுவதாகவும் பெரும்பாலும் அமையும். அது உண்மையாகவும் இருக்கலாம். பதிவுலகில் நானும் அவரும் சேர்ந்து ஒரே பக்கம்  இருந்து வாதிட்டதாக எனக்கு இதுவரை ஞாபகம் இல்லை!

இருவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்கிற கண்னோட்டத்தில் பார்க்காமல் இருவரையும் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்கு ஒண்ணு புரியவில்லை. பதிவுலகில் இவர் பற்றி வந்த துயரச் செய்தி பலருக்கும் சென்றடையவில்லையா? இல்லையென்றால் எல்லோரும் பதிவில் கொடுக்கப்பட்ட மின் அஞ்சல்மூலம் இவருடைய உறவினரிடம் பேசிவிட்டார்களா? துக்கம் விசாரித்துவிட்டார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனை பெரிய துயர சம்பவத்தைப் பற்றி பதிவுலகில் பலரும் கண்டுக்காமல் போவதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதால் இந்தப்பதிவை நான் எழுத வேண்டிய கட்டாயம்.

பொதுவாக நம்மில் பலர் மரணம் பற்றிப் பேசப் பிடிக்காதவர்கள்தாம். விதிவிலக்காக என்னை நானே வலியுறுத்தி மரணம் பற்றி நான் சில பதிவு எழுதி இருக்கிறேன்.  பலமுறை செய்ததுபோல் இம்முறையும் அப்பதிவை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்.

*****************************

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!

என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும், நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.

மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!

ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!

இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.

நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!

* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.

* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.

* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.

* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.

மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!

*********************************


வேகநரி/quickthefox என்கிற பின்னூட்டப் பதிவர் ஒரு ஆள் இருக்கான். அவன் ராஜ நடராஜன் பற்றி கேள்விப்பட்ட இடத்தில்  (நம்பள்கி பதிவில்) இட்ட பின்னூட்டம் ஒன்று இங்கே!


இந்த செய்தி உண்மை தான் என்று எடுக்கும் போது மிகவும் மிகவும் துன்பமாக உள்ளது.
நம்பள்கி, உங்களை பதிவுலகை விட்டே தூக்கணும் என்கின்ற மென்டல் பதிவர் இருக்கும் போது, உங்கள் பதிவுலக பயணம் சிறக்க வாழ்த்து சொன்னாரே ராஜ நடராஜன், அவர் ஒரு கிரேட் மனிதன்.

 ********************

அவன் மெண்டல்னு சொல்வது என்னைத்தான்.:)

பதிவுலகில்  இரங்கல் செய்திகள் சொல்லுமிடத்தில்கூட தன் வெறுப்பைத் தவறாமல் உமிழும் (வேகநரினு சொல்லிக்கொண்டு திரியும்) இவனைப்போல் ஈனப்பிறவிகள் தொடர்ந்து இருப்பார்கள் என்கிற உண்மை மட்டும் ஒரு போதும் மாறாது.

Wednesday, February 6, 2013

பதிவர் திரு டோண்டு ராகவன்!

பதிவுலகில் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் நான் எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். பல ஆண்டுகளாக திரு. ராகவன் அவர்களின் வயதோ, அவர் வளர்ந்த காலகட்டங்களோ எனக்குத் தெரியாது. அவர் வளர்ந்த சூழலில் தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாட்டால், அவர் பலவாறு பாதிக்கப்பட்டதோ, அதனால் அவர்  அனுபவித்த வலிகளோ, அவர் மனதில் ஏற்பட்ட வடுக்களோ, அல்லது அதனால் அவரிடம் இருந்து வரும் கருத்துக்களோ  எனக்கு சரிவர புரியவில்லை. மேலும் அவரை நேரில் சந்தித்ததில்லை, அவரிடம் பேசியதில்லை - மென் மடலில்கூட- தனிப்பட்ட முறையில் அவரை சுத்தமாக எனக்குத் தெரியாது.

பொதுவாக திரு. ராகவன் அவர்கள், பார்க்கும் கோணத்திற்கும், அவர் கருத்துக்கும், நான் பார்க்கும் கோணத்திற்கும், என் கருத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்! ஏன் என்றால் சமுதாயத்தில் அவர் சூழலில் நான் வளரவில்லை. அவர் பெற்ற கசப்பான அனுபவங்களோ, அவர் ரசித்த இனிமையான அனுபவங்களோ நான் அனுபவித்ததில்லை!  அதனால் அவர் உணர்வுகளை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவரையும் அவர் பதிவுகளையும் பலவிதமாக விமர்சித்து இருப்பவன் நான். இருப்பினும் ஒரு சில தருணங்களில் "நமக்குள் இருப்பது வெறும் கருத்து வேறுபாடுதான், திரு. ராகவன்" என்பதை அவர் தளத்தில் அவரிடம் பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். பெரிய மனிதன் என்பதால் திரு ராகவன், கருத்து சம்மந்தமான என் நிலைப்பாட்டை சரி வர புரிந்து கொண்டார் என்றே சொல்ல வேணும்.

திரு ராகவன் அவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போதும் "தொடர்ந்து, பதிவுலகில் தன் அனுபவத்தை (கஷ்டங்களைக்கூட) பலருக்கும் உதவும் வகையில் ஆக்கப்பூர்வமாக எழுதி, அதை பகிர்ந்து கொண்டிருக்கிறாரே?" என்று அதிசயமாக இருக்கும் எனக்கு. மேலும் சமீபத்தில் அவர் தளத்தில் வந்த மிகவும் உற்சாகமாகப் பதிவுகளையும், பிறதளங்களில் எழுதும் அவர் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, "திரு ராகவன் அவருக்கு வந்த நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வென்றுவிட்டார், இனிமேல் தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவார்" என்றுதான் நேற்றுக்கூட நினைத்தேன் ! திடீர் என்று அவருக்கு ஏற்பட்ட Cardiac arrest ஆல் அவர் நம்மை எல்லாம் விட்டு சென்றுவிட்டார் என்கிற இன்றைய செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கண்ணீர் அஞ்சலி!
We miss you, Mr. Raghavan
I must say this, Mr Raghavan was a unique blogger! He has a special place and nobody can ever replace his place in the Tamil blog world! His sudden demise from us and the blog world is kind of looks so "incomplete" and "unacceptable" to me. I am sure, he must have had so many unfinished jobs (posts and responses to others' views to share with us) when he suddenly left from us and the blog world forever. :(  His demise is a great loss to Tamil blog world. I will miss him. I will miss his posts and responses.

My heartfelt condolences to his family and his relatives and friends who know him personally well. I want them to know Tamil bloggers (who likes and dislikes his posts and responses) are going to miss him as much as they do. I want them to know, Mr. Raghavan will be there in our thoughts as long as we live! And of course his posts will live for ever in Tamil blog world.

Saturday, January 31, 2009

மறைந்த பின்னும் வாழும் நாகேஷ்!

நடிகர் நாகேஷ், நம்மைவிட்டு பிரிந்து வேறொரு உலகத்திற்கு போனதாக திரு ராஜ நடராசன் பதிவிலிருந்து அறிந்தேன் :(

http://parvaiyil.blogspot.com/2009/01/blog-post_31.html

--------------------------------------------------------

நாகேஷ் பற்றி கொஞ்சம் எழுதலாம்னு தோன்றியது. அதனால் விளைந்தது இந்தப்பதிவு!

நாகேஷ், நம்மைவிட்டு பிரியும்போது இவருக்கு வயது 77. இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.

இவர் செய்த நகைச்சுவையில் என்னை மிகவும் கவர்ந்தவை!

* திருவிளையாடல் "தருமி"

* காதலிக்க நேரமில்லை "செல்லப்பா"

* ஆயிரத்தில் ஒருவன் "அழகன்"


இவர் படங்களில், சமீபத்தில் டி வி டி இல் பார்த்த படங்களில் நான் ரசித்த சிலவற்றை சொல்கிறேன்.

* வசந்த மாளிகையில் இவர் பேசுற ஒரு வசனம், "பெரிய துரை" பாலாஜியிடம் சொல்லுவார்,

"ஒத்துக்கிறேன், ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நான் தான். ஆனா, நீ என் குடியையே கெடுக்கப் பார்க்கிறயே? "

ஊரையெல்லாம் கெடுத்தாலும் தான் மட்டும் நல்லா வாழனும்னு நெனைக்கிற "கீழ்வர்க்கம்" தான் மனிதன் என்பவன் என்ற உண்மைதான் எனக்கு ஞாபகம் வரும்!

* எதிர் நீச்சலில், "மாது" பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒண்ணு. மனிதன் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பவன் அல்ல! சிலர் உணர்வுகளை மதிக்காத முட்டாளகத்தான் வாழ்கிறான் என்பதை "மாது" என்கிற நாகேஷ் பாத்திரம் மூலம் பாலசந்தர் அழகா சொல்லி இருப்பார்.

* "தில்லானா மோகனம்பாள்" படத்திலே "வைத்தி" என்கிற மட்டமான "ப்ரோக்கரா" வந்து கிளப்புவார் நாகேஷ். வைத்தி இல்லைனா அந்த படத்தில் பல திருப்பங்களை எ பி நாகராஜன் கொண்டு வந்திருக்க முடியாது. வில்லன் இல்லாத அந்தப்படத்தில் எல்லோரும் வெறுக்கும் ஒரே பாத்திரம் இச்த "வைத்தி" தான்.

* அதே போல் கெளரவத்தில், "கண்ணன்" (சின்ன சிவாஜி) னை தூண்டிவிட்டு "பாரிஸ்டர் ரஜினிகாந்து"க்கு (பெரிய சிவாஜி)எதிராக இயங்க வைப்பதுபோல் ஒரு மட்டமான வக்கீலாக நடித்து இருப்பார், நாகேஷ்.

* தில்லுமுல்லுப் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேஷத்திற்கு உதவி செய்வதுபோல் உண்மையான நடிகர் நாகேஷாகவே கேசுவலாக வந்து நடித்து இருப்பார். ரஜினியின் இரட்டை வேட நாடகத்தையும், நாகேஷின் சினிமாவில் அவர் நடிக்கும் இரட்டை வேடத்தையும் அழகாக இணைத்து இருப்பார் இயக்குனர் கே பாலசந்தர்.

* அபூர்வ சகோதரர்களில் வில்லன்னாகவும் நடித்து ஜொளித்தவர் நாகேஷ்.

இவர் மறைந்தாலும் நம்மைவிட்டு பிரியப்போவதில்லை. நம் நினைவில் மற்றும் இவர் நடித்த படங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இருப்பார்!

இவர் குடுப்பத்தினருக்கு என்னுடைய வருத்தங்கள்! :(