Showing posts with label சித்திரப்பாவை. Show all posts
Showing posts with label சித்திரப்பாவை. Show all posts

Wednesday, June 19, 2013

சித்திரப்பாவையை "வன்புணர்வு" செய்யும் ஜெயமோகன்!

அகிலன் எழுதிய சித்திரப்பாவை கதைக்கு பாரதீய ஞானபீட பரிசு கொடுக்கப் பட்டது உலகறியும். அகிலன், அந்தக்காலத்து எழுத்தாளர்களில் விரசமில்லாமல், நாகரிகமான தமிழ் நாவல்களைத் தந்தவர். அவர் நாவல்களில் தேசப் பற்று, காதல், நீதி போன்றவை தலைதூக்கி நிற்கும். சித்திரப்பாவையில், கதாநாயகி, ஆனந்தி, தன் கணவன், மாணிக்கம், கேவலமான்வன், அயோக்கியன் என்பதால் அவனைத் தூக்கி எறிந்துவிட்டு தன் காதலனுடன் போய் சேருவாள்! பாரதியின் புதுமைப் பெண்ணாக அகிலன் அவளை காட்டியதால்தான் அந்த நாவலுக்கு பாரதீய ஞானபீடப் பரிசு கிடைத்தது என்பது என் தாழ்மையான  கருத்து.

எவனோ ஒரு வேலை வெட்டியில்லாதவன், நம்ம மேதாவி  ஜெயமோகனிடம், " நீதான் உலகமகா மேதையாச்சே! சித்திரப் பாவை, அகிலன் பற்றி விமர்சி" னு கேட்டுப்புட்டான்.

உடனே, நம்மாளு.. இலக்கியம்னா என்னனு ஆரம்பிச்சு அந்தக்காலத்தில் சித்திரப்பாவை படிச்சு, ரசிச்ச பெண்கள் எல்லாம் எட்டாங்கிளாஸ் பாஸாகாத அறிவில்லாதவர்கள்னு ஒளறு ஒளறூனு உளறித்தள்ளுறான் மனுஷன்!

இந்தக்கதாபாத்திரங்களைக் கொண்டு அகிலன் உருவாக்கும் கதையில் அவரது தரிசனம் என ஏதேனும் இருக்கிறதா? அண்ணாமலை ஓவியன். பெரும் கலைஞனாக ஆக விரும்புகிறான்.ஆனந்திக்கு அவன் மேல் காதல்.ஆனால் அவளை மாணிக்கம் விரும்புகிறான். ஒருநாள் மாணிக்கம் ஆனந்தியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறான். ‘கறைப்பட்டு’போன தன் உடலைக் காதலனுக்கு அளிக்கவிரும்பாத ஆனந்தி முத்தமிட்ட மாணிக்கத்தையே திருமணம் செய்துகொள்கிறாள்.

அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவிய ஈடுபாடு இல்லை.சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் ஆனந்தியை கொடுமைசெய்கிறான். ஒரு சண்டையில் ஆனந்தியின் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. ஆனந்தி அண்ணாமலையைத்தேடி வருகிறாள். அங்கே அண்ணாமலை கையொடிய ஆனந்தியின் ஓவியத்தை வரைந்துகொண்டிருக்கிறான். அவள் வந்து அவனுடன் இணைகிறாள்.

இதில் என்ன தரிசனம் இருக்கிறது? இது உருவாக்கும் உலகம் எந்த தத்துவார்த்த உண்மையை நமக்கு காட்டுகிறது? இதன் நோக்கம் வாழ்க்கையைச் சொல்வது அல்ல. நம்முடைய யதார்த்தபோதத்துடன் உரையாடுவது அல்ல. இது ஒரு கற்பனையுலைச் சொல்கிறது. நம் பகற்கனவுகளுடன் உரையாடுகிறது.

இந்த ‘டெம்ப்ளேட்’டை நூற்றுக்கணக்கான கதைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். ஸ்ரீதர் சினிமாக்கள் எல்லாமே இந்தவகைதான். இன்றும்கூட ரமணிசந்திரன் இதே டெம்ப்ளேட் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். இந்த டெம்ப்ளேட் சரியாக அமைந்த புகழ்பெற்ற நாவல் என்றால் சார்ல்ஸ் டிக்கன்ஸின் டேல் ஆஃப் டூ சிட்டீஸ்தான். ஆனால் அது இலக்கிய ஆக்கம்.காரணம் அதன் பின்னணி.

இன்னொரு உதாரணம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீன். பாடகனாகிய காதலன். அழகிய காதலி.முக்கோணக்காதல். ஆனால் அந்தக்கதைக்குள் தகழி கடல் என்ற மாபெரும் இருப்பை கொண்டுவந்து நிறுத்துகிறார். சமூகமாக, விதியாக, காலமாக ,கடவுளாக மாறிக்கொண்டே இருக்கும் கடல் செம்மீனை இலக்கியமாக ஆக்கிவிடுகிறது.
அதாவது ஒரு டெம்ப்ளேட் கதையில்கூட ஆசிரியனின் தரிசனம் இலக்கியத்தை உருவாக்கிவிடமுடியும். அங்கே புறவய யதார்த்தம் இல்லை. ஆனால் ஆசிரியன் உருவாக்கும் தரிசன யதார்த்தம் உள்ளது. சித்திரப்பாவையில் இவை இரண்டுமே இல்லை.
ஆகவே அதில் புதுமையை எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. சொல்லிச்சொல்லிப் பழகிய கதை. சொல்லித்தேய்ந்த களம். வார்ப்புரு கதாபாத்திரங்கள். வழக்கமான கதைத்திருப்பங்கள். வழக்கமான வசனங்கள். வழக்கமான முடிவு.
சித்திரப்பாவையின் உரைநடையைப் பரிதாபம் என்றே சொல்லவேண்டும்.

அக்காலத்தில் வார இதழ்களின் வாசகர்கள் அதிகமும் பெண்கள். அவர்கள் அன்றெல்லாம் சராசரியாக எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் மொழி என்பது ஒருவகை ‘சின்னப்புள்ளை நடை’ தான்.

வணிக எழுத்தில் நடை என்ற அம்சம் குடியேறியதே எழுபதுகளின் இறுதியில் சுஜாதா நுழைந்தபோதுதான்.
அகிலனுக்கு மொழிநடையில் முன்னுதாரணமாக இருந்தவர் வி.ஸ.காண்டேகர். அவரது நாவல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழியாக்கத்தில் தமிழில் வந்து பெரும் வரவேற்பைப்பெற்ற காலம் அது. காண்டேகர் முக்கியமான இலக்கியவாதி. அவர் தன் படைப்புகளினூடாக ஒரு தனித்த வாழ்க்கைப்பார்வையைத் தொகுத்துவைக்க முயன்றவர். அவரது படைப்புகளில் அவர் சிந்தனைகளை முன்வைப்பார்; கதைமாந்தர் அவற்றைப்பேசுவார்கள். அவை அன்றைய வாசகர்களுக்குப் பிடித்திருந்தன

காண்டேகரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியவர் அகிலன். ஆனால் அவரது சிந்தனைகள் அசலானவை அல்ல. சூழலில் இருந்து பொறுக்கிக்கொண்ட எளிய கருத்துக்கள்மட்டும்தான் அவை. ஆகவே அவற்றுக்கு மொழிநடைசார்ந்து எந்தத் தனித்தன்மையும் அமையவில்லை. அகிலன்நடை என்ற ஒன்று உருவாகவேயில்லை

கடைசியாக, அகிலன் வாசகர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாசிரியரே அல்ல. நல்ல நாவல் பறவைபோல நமக்குமேல் பறக்கும். நமக்கு முன் அதன் நிழல் பாய்ந்தோடும். நாம் நம் முழுமூச்சாலும் அதைப்பின்தொடர்வோம். சுமாரான நாவல்கள் குதிரைபோல நமக்கு முன்னால் ஓடும். எளியகதைகள் நம்முடன் அவையும் ஓடும். அகிலன் நாம் வெகுதூரம் ஓடி திரும்பிப்பார்க்கையில் நமக்குப்பின்னால் மூச்சிரைக்க வந்துகொண்டிருக்கிறார்.

எந்தவகையிலும் அகிலன் எழுதியவை இலக்கிய ஆக்கங்கள் அல்ல. அவை அக்கால வணிகப்படைப்புகள் மட்டுமே. அப்படியென்றால் எப்படி ஞானபீடம் கிடைத்தது? அதற்கான பதில் தமிழில் விருதுகள் படைப்புக்களை அடையாளம்காட்டக்கூடியவை அல்ல என்பதே.
அகிலன் காங்கிரஸ்காரர் என்பதே அவர் விருது பெற முக்கியமான காரணம்.அத்துடன் அகிலன் கல்வித்துறையில் ஆழமான தொடர்புகள் கொண்டிருந்தார்.அவரது படைப்புகளில் ஆய்வுசெய்து சாதாரணமான ஒரு முனைவர்பட்ட ஏடு வெளியிட்ட எழில்முதல்வன் என்பவர் அதற்காக சாகித்ய அக்காதமி விருதுபெற்றிருக்கிறார்.

சரி, அந்நாவலில் சாதகமான அம்சம் என ஏதுமில்லையா? ஒட்டுமொத்தமாகவே அகிலனின் நாவல்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தின் மனநிலைகளை எளிய கருத்துக்களாகப் பிரதிபலிக்கக்கூடியவை. அன்றைய கனவை, இலட்சியவாதத்தின் கொப்பளிப்பை அவை ஓரளவு காட்டுகின்றன.

அன்றைய வணிக எழுத்தும் வாசிப்பும் கற்பனாவாதம் சார்ந்தது. காதல் அதற்கு இன்றியமையாதது. காதலுக்கு இலட்சியவாதம் சரியான கூட்டு என்பதனாலேயே அவர் அவற்றைக் கலந்தார். ஆனாலும் நாம் மறந்துவிட்ட இலட்சியவாத உலகை அவை காட்டுகின்றன என்பது அவற்றை இன்று கவனிக்கத்தக்கவையாக ஆக்குகிறது
ஜெ


அதாவது மேதாவி என்ன சொல்றார்னா..


* அகிலன், காங்கிரஸ்காரன் என்பதால் இந்த பாரதீய ஞானபீட விருது அவருக்கு கிடைத்தது.

* அப்புறம் அந்தக்காலத்து வாசகர்களெல்லாம் படிப்பறிவில்லாத பெண்கள்!  அதனால் இந்த நாவலை ரசித்தார்கள்! (எங்க பாட்டி எல்லாம் அந்தக் காலத்துலயே எஸ் எஸ் எல் ஸி படிச்சா! அவரையும் அவமானப்படுத்துறான் இந்தாளு!! எனக்கு ரத்தம் கொதிக்கிது!)

நான் சீரியஸா சொல்றேன்.. 

இந்தாள எங்கேயாவது ஏர்வாடிக்கு கூட்டிப்போயி தர்ஹால சங்கிலியை வச்சு கட்டிப்போடுங்கப்பா! தமிழில் வந்த ஒரு நல்ல படைப்பையும், ஒரு தரமான எழுத்தாளரையும், நம்ம தமிழ்ப் பெண்களையும்  இந்த மாரி எவனும் இதுவரை கேவலப்படுத்தியது இல்லை!