Friday, August 15, 2008

ஒரு பகிரங்க கடிதம்

அன்புள்ள பாட்டிமாவுக்கு,

தமிழ் மணத்தில் இந்த வாரம் யாருக்காவது பகிரங்க கடிதம் எழுத வேண்டிய வாரமாம். என் ப்ளாகில் யாருக்கு கடிதம் எழுதுவது என்று தெரியாமல் குழம்பினேன். சொல்ல நினைப்பதை யாராக இருந்தாலும் இப்போதெல்லாம் நேரடியாகவே சொல்லி விடுகிறேனே? கடிதம் எழுதும் அவசியம் இல்லை. ப்ளாக் என்றால் என்னவென்று கேட்பீர்கள், ப்ளாக் என்றால் வலைப்பூ(அதென்ன மல்லிப்பூ என்றெல்லாம் குறுக்குக்கேள்வி கேட்கக்கூடாது, சொல்வதை கேட்டுக்கொள்ளவும்). ஏற்கெனவே காலம் ரொம்ப கடந்துவிட்டது, அடுத்த வாரம் உங்க நினைவு நாள் வேறு வருகிறது.

நீங்கள் மறைந்து இத்தனை வருடமாகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை, நேற்று தான் உங்கள் கை பிடித்து கவனமாக ரோட்டை க்ராஸ் பண்ணிய மாதிரி இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தீர்களா? நேற்று கூட கடையில் ஒரு அமரிக்க சிறுமியும், ஒரு பாட்டியும் ஜோடியாக ஷாப்பிங் பண்ண வந்தார்கள். அந்த சிறுமி பாட்டியை கட்டிப்பிடித்து
"I love you so much Grandma" என்றாள், எனக்கு உடனே உங்கள் நினைவு வந்துவிட்டது. கொஞ்ச காலமாகவே உங்களைப்பற்றி நிறைய நினைக்கிறேன். அந்த அமரிக்க சிறுமி மாதிரி எல்லாம் நாம் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை ஒருபோதும் உங்களுக்கு தெரிவித்ததில்லை. காரணம் எல்லாம் பெரிதாக எதுமில்லை, அன்பை வார்த்தைகளில் தெரிவிக்கும் பழக்கம் நமக்கு இல்லாததே காரணம். சொல்லாமல் விட்டதை இப்போதாவது சொல்லவே இந்த பகிரங்க கடிதம்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாப்பாடு ஊட்டியது நீங்கள் தான். அம்மாவுக்கு நேரம் இருந்தால் கூட உங்கள் உரிமையான "சாப்பாடு ஊட்டுதலை" ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இட்லி, நெய், சர்கரை கலந்த ஒரு கலவையை காலையில் 7 மணிக்கு ஊட்ட ஆரம்பித்து 10 மணி வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெருவில் போகும் வாகனங்களையும், மனிதர்களையும், விலங்குகளையும் வேடிக்கை காட்டி, கதை சொல்லி நீங்கள் ஊட்டுவது அரைகுறையாக நினைவு இருக்கிறது. மீண்டும் 12 மணிக்கு மதியம் சாப்பாடு ஊட்டும் ட்யூட்டி ஆரம்பித்துவிடும். என் மீது எத்தனை அக்கறை உங்களுக்கு? இது போல என் மேல் இத்தனை அக்கறையுள்ள ஒரு ஜீவன் என் வாழ்க்கையில் கிடைக்கப்போவதே இல்லை! ஒரு நாளும் இதற்காக நீங்கள் சலித்துக்கொண்டதில்லை. மாறாக, என் தொண்டையில் உணவை விழுங்க முடியாமல் ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கிறதோ என்று ரொம்ப கவலைப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரு நாள் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஆட்டோவில் என்னை, சைல்ட் ஸ்பெஷலில்ஸ்ட் டாக்டர். குமாரசாமியிடம் அழைத்து சென்று, "என் பேத்தி வயத்தில இருந்தப்போ மருமகள் சரியா உடம்பை பார்த்துக்கல, அவ தொண்டைக்குழாயில் ஏதோ அடைப்பு இருக்கு, உடனே படம் பிடிச்சு(எக்ஸ்ரே) பாரு" என்று வம்பு பண்ணி இருக்கிறீர்கள். டாக்டர் மேலோட்டமாக சோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்லைமா, குழந்தைக்கு பசிக்கும் போது ஊட்டுங்க போதும்" என்று சொன்னதற்கு, "படம் பிடித்து ஆப்பரேஷன் பண்ணாமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை" என்று அடம் பிடித்து கடைசியில் அப்பா வந்து உங்களை சமாதானப்படுத்தி அழைத்துப்போனாராம். அதை இன்னும் குடும்ப நிகழ்ச்சிகளில் சொல்லி சிரிக்கிறார்கள். உங்களின் வயதான காலத்தில் அத்தனை தொல்லை கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

சுருக்கம் விழுந்த முகத்துடனும், நடுங்கும் கரத்துடனும், பொக்கை பல் சிரிப்புடனும் இருக்கும் நீங்கள் எனக்கு பேரழகியாக தெரிவீர்கள். அழகு என்ன அழகு? "இப்படி இருந்தால் தான் அழகு" என்ற பிம்பத்தை மீடியாக்கள் எங்கள் எண்ணங்களில் திணிக்கின்றன. அதையே நாங்களும் நம்புகிறோம். உண்மையான அழகு எப்படி இருக்கும்? உங்களை மாதிரியே இருக்கும்! நம்ப மாட்டீர்கள் தெரியும், இருந்தாலும் விளக்குகிறேன். தாத்தாவின் மேல் உங்களுக்கு எத்தனை அன்பு? அவர் மறைந்த பிறகு அவருக்கு பிடித்த உணவுகளை சமைப்பதையும், சாப்பிடுவதையும் அடியோடு நிறுத்திவிட்டீர்கள். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வெறும் நூல் புடவை. இதெல்லாம் வேண்டாம் என்று எத்தனை முறை போராடினாலும் நீங்கள் கேட்கவே இல்லை.

தாத்தாவை தவிர வேறு யாரையாவது நீங்கள் மனதளவிலும் நினைத்ததுண்டா? ஏதாவது சினிமா ஹீரோவை டிவில் நான் அழகு என்றால் உடனே நீங்க, "இது என்னடி அழகு? அந்த காலத்துல தலைப்பாகையும், கோட்டும், வேட்டியுமா உங்க தாத்தா வேலைக்கு கிளம்பினார்னா ஊரே திரும்பிப்பார்க்கும்" என்று புளங்காகிதப்படுவீர்கள்.தாத்தாவின் பிறந்தநாள், திவசம், உங்கள் கல்யாண நாள் - இப்படி எது வந்தாலும் தாத்தா படத்தை பார்த்து, பார்த்து அன்றெல்லாம் அழுதுக்கொண்டே இருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள், இப்படி ஒரு மனைவியை இந்த காலத்தில் யாராவது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியுமா? நீங்க தான் உண்மையான 'கனவுக்கன்னி' இல்லையா? இப்போதெல்லாம் காதல், கல்யாணம் எல்லாம் ஏறக்குறைய வியாபாரம் ஆகிவிட்டது!

உலகத்தில் யாராக இருந்தாலும் உங்கள் குழந்தையாக நினைக்கும் அன்பு யாருக்கு வரும்? பழுத்த ஆன்மீகவாதியான உங்களுக்கு எத்தனை சகிப்புத்தன்மை? நாகூர் ஹனீஃபாவின் கேசட்டுகளை வாங்கி விருப்பமாக கேட்பீர்கள், ஏதாவது கிறிஸ்தவ மிஷ்னரிகள் கொடுக்கும் துண்டு சீட்டை வாங்கி முழுக்க படிப்பீர்கள், பைபிள் கொடுத்தால் அதையும் வாங்கி படிப்பீர்கள். நீங்கள் இதற்கெல்லாம் முகம் சுளித்ததே இல்லை. கேட்டால், "ராமர், கிருஷணர் மாதிரி அல்லாவும், இயேசுவும் கூட ஒரு சாமி" என்பீர்கள். இப்போது நடப்பதை எல்லாம் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டிருப்பீர்கள். ராமஜென்ம பூமி, கோத்ரா சம்பவம், குஜராத் வன்முறை, தொடர் குண்டுவெடிப்பு, இஸ்ரேல் -பாலஸ்தீன் பிரச்சினை, அமரிக்கா - அரபு நாடுகள் பிரச்சினை, மதத்தீவிரவாதம் என்று உலகெல்லாம் இரத்த ஆறு ஓடுகிறது. "பாவம், யார் பெற்ற பிள்ளைகளோ, சாகும் போது எப்படி எல்லாம் துடித்தார்களோ" என்று கண்ணீர் விட்டு, இறந்து போனவர்களின் மன சாந்திக்காக பூஜையறையில் மணிக்கணக்காக பிராத்தனை செய்ய நீங்கள் இல்லை.

மருமகள் மீது எத்தனை அன்பு உங்களுக்கு? அம்மாவை ஊக்கப்படுத்தி டிகிரி முடிக்க வைத்து, படிக்கும் போது தொந்தரவு பண்ணாமல் இருக்க எங்களை நீங்களே கவனித்து,தேர்வு நேரத்தில் அம்மா கண்விழித்து படித்தால் தேநீர் போட்டுக்கொடுத்து - அதை எல்லாம் நினைத்தால் வியப்பாக இருக்கிறது. "பொம்மனாட்டிக்கு படிப்பு ரொம்ப முக்கியம்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். நீங்கள் பள்ளிக்கு போகவில்லை என்றாலும், தாத்தாவிடம் இருந்து தமிழ்-ஆங்கிலம் இரண்டையும் உங்கள் சொந்த முயற்சியில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன். வெள்ளிக்கிழமை அம்மா அலுவலகம் விட்டு வந்தால், வேறு உடை மாற்ற சொல்லி, தலை பின்னி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, ஹாலில் வம்பளத்துக்கொண்டிருக்கும் அப்பாவின் நண்பர்களை உரிமையுடன் துரத்திவிட்டு, அம்மாவையும்-அப்பாவையும் நைட் ஷோ சினிமாவுக்கு அனுப்பும் உங்கள் வெள்ளை மனதை என்ன சொல்லி பாராட்டுவது? ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் அவர்களிடையே இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.

"வீட்ல இருக்கற தயிரை எல்லாம் மோராக்கி போற வரவங்களுக்கு எல்லாம் தானம் பண்ணினால், வீட்டுக்கு என்ன மிஞ்சும்?" என்று அம்மா உங்களின் தாராளக்குணத்தை குறை கூறினால் உடனே கோபமாக, "உங்கப்பா வீட்ல இருந்தா தயிர் கொண்டுவர? தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தால் புண்ணியம்.இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப சுயநலவாதிகளா இருக்கீங்க" என்று கண்டிக்கவும் தயங்கியதில்லை(இன்னும் நீங்க எங்களைப்போன்ற மார்டன் பெண்களை எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?).எனக்கு தெரிந்தவரையில், வீட்டுக்கு வந்தவர்களுக்கு காபியோ, டிஃபனோ கொடுக்காமல் நீங்கள் அனுப்பியதில்லை. நீங்கள் இறந்த வீட்டில், அப்பாவை விட அதிகமாக அழுதது அம்மா என்பது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்த நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூளையில் கட்டி வந்து அதனால் முழு உடலும் செயலிழந்து, நினைவு திரும்புவதும், தப்புவதுமாக ஒரு 10 நாட்கள் மருத்துவமனை படுக்கையில் நீங்கள் பட்ட பாடு! அப்பாவிடம் மெல்லிய குரலில் "என்னை விட்டுருப்பா, முடியல" என்று நீங்கள் சொல்லியதை அலட்சியம் செய்து தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் பலன் ஏதுமில்லை. மரணத்திலும் வழக்கம் போல நீங்கள் தான் வென்றீர்கள். எனக்கு அடிக்கடி குற்ற உணர்ச்சி வரும், உங்களை நான் இன்னும் நன்றாக கவனித்துக்கொண்டிருக்கலாமோ? உங்களிடம் இன்னும் அன்பாக இருந்திருக்கலாமோ? Did we take you for granted?

"இறந்தவர்கள் ஆவியாக வந்து நடப்பதை எல்லாம் பார்ப்பார்கள்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள். எனக்கு அதில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை. நீங்கள் படித்தாலும்,படிக்கப்போவதில்லையென்றாலும் என்னுடைய மனதிருப்திக்காக கடிதம் எழுதுகிறேன். நெஞ்சம் நிறைய நினைவுகளோடு, உங்களின் கண்ணாடி,கைக்கடிகாரம், பழையபுடவைகள் போன்றவற்றை அப்பாவிடம் கேட்டு வாங்கி கவனமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். உங்களுடைய பேத்தியாக பிறந்ததில் ரொம்ப பெருமைப்படுகிறேன். வருங்காலத்தில், உங்களின் அன்பு, பொறுமை, இரக்கம், அறிவு, போன்ற நற்பண்புகளில் பாதியாவது கொண்ட பெண்மணியாக மாறினேன் என்றால், அதையே என் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்.


இப்படிக்கு உங்கள் அன்பு பேத்தி,

கயல்விழி

81 comments:

Ramya Ramani said...
This comment has been removed by the author.
Ramya Ramani said...

கயல்விழி அற்புதமா இருக்கு..இதுக்கு மேல சொல்ல வார்த்தை இல்லீங்க..

கயல்விழி said...

மிக்க நன்றி ரம்யா :)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

I dontk think there is any better way to thank her for her care and tell her how much you loved her! :-)

I believe she was lucky to have you as her "grand daughter" too. Kayal!

கயல்விழி said...

நன்றி வருண் :)

ச்சின்னப் பையன் said...

அருமை!!! அற்புதம்!!!

மொக்கை கடிதங்களுக்கு நடுவில் ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம்...

ஜி said...

cute... உங்க பாட்டியின் நினைவு நாளுக்கு என்னுடைய ப்ரார்த்தனைகள்...

கயல்விழி said...

நன்றி ச்சின்னப்பையன். :)

நன்றி ஜி, உங்கள் ப்ராத்தனைகளுக்கு மிக்க நன்றி :)

Sundar said...

கலக்கீட்டிங்க!உங்களுக்கு உணர்வுகளை பிரதிபலிக்கறது ரொம்ப இயல்பா வருது.

btw, இன்றிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன் - என்னோட விருப்பமான தலைப்பில். உங்களுக்கும் பிடிக்குதான்னு வந்து பாருங்க!

http://investinindianshares.blogspot.com/2008/08/bharati-shipyard-bhashi.html

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அழகான அன்பான கடிதம்..

ஆ.ஞானசேகரன் said...

சூப்பர்மா!!!!!
அன்பை வெளிப்படுத்தும் ஆழ்ந்த கடிதம்..

பரிசல்காரன் said...

தலைப்பை மட்டும்
ஒரு பாசமான கடிதம் என்று மாத்தியிருக்கலாம்!

நீங்களும் இந்த பகிரங்க வலையில் விழுந்திருக்கவேண்டாமே...

அருமையான, அழகான கடிதம்!

படித்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு கண்ணைமூடி அமர வைத்துவிட்டது!

க்ரேட் மா!

முரளிகண்ணன் said...

அற்புதம். பூவே பூச்சூடவா பாட்டை கேட்டுக்கொண்டே இதை வாசித்தேன்

PaattiDoss said...

ஐயோ பாட்டி... அப்பத்தா... போய் சேந்துட்டியே ..... :(

Divya said...

கடிதத்தின் ஓவ்வொரு வரியும் அத்துனை உணர்வுபூர்வமாக இருக்கிறது கயல்விழி,

மனதில் பதிந்த நினைவுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

இவன் said...

ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது கயல்விழி, உங்கள் "கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி)" தொடர்ந்து வாசித்து வருகிறேன். எனக்கு என்னவோ தெரியவில்லை சில பதிவுகளை வாசித்தபின் பின்னுட்டமெதுவும் இட முடியாமல் மனது பாரமாகி மவுனம் மட்டுமே சரியான பின்னுட்டமென பேசாமல் இருந்ததுண்டு. அவ்வாறானதொரு பதிவுதான் இதுவும் ஆனால் இம்முறை மவுனம் பின்னுட்டமாயில்லாமல் என் மனதில் உள்ளதை பின்னுட்டமாய் இடுகிறேன்.

சந்தோஷ் = Santhosh said...

கயல்,
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. தலைப்பை பாத்து நீங்களூமா அப்படின்னு நினைச்சிட்டு வந்தேன் ஆனால் மனதை நெருடும்படியா இருந்தது...

கயல்விழி said...

நன்றி சுந்தர், உங்களுடைய வலைப்பூவை மறக்காமல் வந்துப்பார்க்கிறேன் :)

மிக்க நன்றி முத்துலட்சுமி கயல்விழி மேடம். :)

நாமக்கல் சிபி said...

டச்சிங்கான போஸ்ட்!

கயல்விழி said...

ஞான சேகரன்,

ரொம்ப நன்றி :)

பரிசல்,

ரொம்ப நன்றி :) பாட்டியின் நினைவு நாளுக்கு முன்பு அவர்களைப்பற்றி ஏதாவது எழுத நினைத்திருந்தேன், இது பகிரங்க கடித வாரம் என்பதால் கடித வடிவில் எழுதினேன்(ஏன் நான் வலைப்பூ ப்ரெண்ட் பின்பற்ற கூடாதா? :))

கயல்விழி said...

நன்றி முரளிக்கண்ணன் :)

பாட்டிதாஸ்,

உங்களுக்கும் பாட்டி நினைவு வந்தாச்சா?

கயல்விழி said...

மிக்க நன்றி திவ்யா :)

இவன், அதிசயமா பெரிய கருத்து எழுதி இருக்கீங்க, நன்றி :)

கயல்விழி said...

நன்றி சந்தோஷ் :)


நன்றி நாமக்கல் சிபி :)

Rajan said...

paravayillaama eluthureenga. nalla elutha muyarchikkavum

கயல்விழி said...

சரிங்க ராஜன். நீங்க முதலில் தமிழில் எழுத முயற்சிக்கவும் :)

babu said...

கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.எனக்கெல்லாம் அந்த கொடுப்பினையே இல்லை

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்கு இந்தக்கடிதம். Beautiful

கயல்விழி said...

நன்றி பாபு. பாட்டி கிடைத்தது உண்மையான கொடுப்பினை தான் :)


நன்றி சின்ன அம்மணி :)

வெண்பூ said...

அற்புதம் கயல். கோர்வையாக சுவையாக மனதைத் தொடுவது போல எழுதியிருக்கிறீர்கள். சூப்பர். உங்கள் பாட்டியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அப்பத்தா said...
This comment has been removed by a blog administrator.
டாக்டர் said...

/
ஒரு நாள் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஆட்டோவில் என்னை, சைல்ட் ஸ்பெஷலில்ஸ்ட் டாக்டர். குமாரசாமியிடம் அழைத்து சென்று, "என் பேத்தி வயத்தில இருந்தப்போ மருமகள் சரியா உடம்பை பார்த்துக்கல, அவ தொண்டைக்குழாயில் ஏதோ அடைப்பு இருக்கு, உடனே படம் பிடிச்சு(எக்ஸ்ரே) பாரு" என்று வம்பு பண்ணி இருக்கிறீர்கள். டாக்டர் மேலோட்டமாக சோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்லைமா, குழந்தைக்கு பசிக்கும் போது ஊட்டுங்க போதும்" என்று சொன்னதற்கு, "படம் பிடித்து ஆப்பரேஷன் பண்ணாமல் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை" என்று அடம் பிடித்து
/

படா பேஜாரா பூடுச்சிம்மா அன்னிக்கு

பாட்டியோட ஆவி said...

உங்க பாட்டியோட கடைசி காலத்தில் ஒழுங்கா கஞ்சி ஊத்துநேங்களா ?

அப்பத்தா said...

/
தாத்தாவின் மேல் உங்களுக்கு எத்தனை அன்பு?
/

அதை ஏன் கண்ணு கேக்குற
:))))

பாட்டியின் ஆவி (ஒரிஜினல்) said...

/
தேர்வு நேரத்தில் அம்மா கண்விழித்து படித்தால் தேநீர் போட்டுக்கொடுத்து - அதை எல்லாம் நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
/

ஏன் கண்ணு எனக்கு டீ கூடவா போடத்தெரியாதுன்னு நெனச்சிட்ட

பாட்டியின் ஆவி said...

/
இன்னும் நீங்க எங்களைப்போன்ற மார்டன் பெண்களை எல்லாம் பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?).
/

ஜீன்ஸ் போட்ட கண்ணகி, மிடி போட்ட ஜான்ஸி ராணின்னுதான் வேற என்னத்த சொல்ல
:))))

கயல்விழி said...

யாருங்க நீங்க அனானி அண்ணா? தமிழனா?

கயல்விழி said...

மிக்க நன்றி வெண்பூ :)

பாட்டியின் ஆவி said...

/
"இறந்தவர்கள் ஆவியாக வந்து நடப்பதை எல்லாம் பார்ப்பார்கள்" என்று அடிக்கடி சொல்லுவீர்கள்.
/

இதோ வந்திருக்கேனே கயலு கண்ணு

மங்களூர் சிவா said...

நானுங்க அம்மிணி

மங்களூர் சிவா said...

/
வருங்காலத்தில், உங்களின் அன்பு, பொறுமை, இரக்கம், அறிவு, போன்ற நற்பண்புகளில் பாதியாவது கொண்ட பெண்மணியாக மாறினேன் என்றால், அதையே என் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்.
/

அப்ப இதுவரைக்கும் ????

வெண்பூ said...

//மங்களூர் சிவா said...
நானுங்க அம்மிணி
//

அதான பாத்தேன்.. xxx தமிழனா இருந்தா இப்படி டீஜன்டா பின்னூட்டம் வருமா என்ன?

தாத்தாவோட ஆவி said...

கடைசி காலத்துல ஒழுங்கா கஞ்சி ஊத்தாம... இங்க blogger free ஆக கிடைச்சதுக்காக கதையா வுடுற.. பாட்டி சாபம் உன்னை சும்மா விடாது

மங்களூர் சிவா said...

/
தாத்தாவோட ஆவி said...
கடைசி காலத்துல ஒழுங்கா கஞ்சி ஊத்தாம... இங்க blogger free ஆக கிடைச்சதுக்காக கதையா வுடுற.. பாட்டி சாபம் உன்னை சும்மா விடாது
/

ஆத்தா இது நான் இல்லிங்கோ


இருந்தாலும் உண்மைமாதிரி தெரியுது!
:)))

கயல்விழி said...

மங்களூர் சிவாவா? உங்க அனானி காமெண்ட்ஸ் அருமை :)ச்ச்

மங்களூர் சிவா said...

/
கயல்விழி said...
மங்களூர் சிவாவா? உங்க அனானி காமெண்ட்ஸ் அருமை :)ச்ச்
/


ச்ச..

இப்பிடின்னு முடிக்க வந்து 'ச்ச்'னு முடிச்சிட்டீங்க போல
:((

மங்களூர் சிவா said...

அருமையான பதிவுதான் அதுக்காக எல்லாரும் துக்கவீட்டுக்கு வந்தாமாதிரியே பீலிங்ஸா கமெண்ட் போட்டா எப்பிடி அதுக்குதானுங்க அம்மிணி

மங்களூர் சிவா said...

வெண்பு வாப்பா 50 வர போகுது

மங்களூர் சிவா said...

50

கயல்விழி said...

ஐயோ சும்மா டைப்பிங் எரர். வேற ஏதும் இல்லை, இன்று நிறைய பேர் சூப்பர் சென்சிடிவா இருக்கிற மாதிரி இருக்கு?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வெண்பூ said...

இதுதான் நடக்கும். சீரியஸா பதிவு போட்டாலும் அத நாங்க மொக்கயா மாத்திடுவம்ல.. சிவா ரெடியா கும்மிக்கு...

வெண்பூ said...

கயல் போடுற சீரியஸ் பதிவுல கும்மி போட கஷ்டமா இருக்கறதால இத்தன நாளா போடுல. இப்ப போடுவோம் என்னா சொல்றீங்க..

கயல்விழி said...

//அருமையான பதிவுதான் அதுக்காக எல்லாரும் துக்கவீட்டுக்கு வந்தாமாதிரியே பீலிங்ஸா கமெண்ட் போட்டா எப்பிடி அதுக்குதானுங்க அம்மிணி

//

உண்மை தான். பாட்டி தன் கடமையை எல்லாம் தேவைக்குப்ப் அதிகமாகவே செய்து முடித்துவிட்டு தான் நிரந்தரமான ஓய்வெடுக்க ஆரம்பித்தார்கள்.

வெண்பூ said...

//கயல்விழி said...
ஐயோ சும்மா டைப்பிங் எரர். வேற ஏதும் இல்லை, இன்று நிறைய பேர் சூப்பர் சென்சிடிவா இருக்கிற மாதிரி இருக்கு?
//

கயல்விழிக்கு ஒரு பகிரங்க கடிதம் அப்படின்னு ஒரு பதிவ சிவா எழுத ஆரம்பிச்சிட்டாரு கயல்..

கயல்விழி said...

அடுத்து அழுக்காச்சி பதிவுகளை எழுதுவதின் ஆபத்தை விளக்கி மங்களுர் சிவா கலய்விழிக்கு பகிரங்க கடிதம் எழுதப்போகிறார்.

தாத்தா + பாட்டி யோட ஆவி said...

கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக

ஆஸிப் said...

பரவாயில்லை... சரியான கொத்து

ச்சின்னப் பையன் said...

எனக்கு பயமா இருக்குது... இங்கே நிறைய ஆவிகள் உலாத்துதுபோலே இருக்கே!!!!

தாமிரா said...

அருமையான நெஞ்சைத்தொடும் பதிவு. நிறைவாக தன் கடமைகளைச் செய்து வாழ்ந்து முடித்தவர்களை மகிழ்வோடும் பெருமையோடும்தான் நினைவுகூற வேண்டும். அதைத்தான் செய்துள்ளீர்கள். நன்று, வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

எல்லாருக்கும் ஒரு பாட்டி இப்படி இருக்கிறார்கள். கயல்விழி, சிலர் நாள் கடந்த பிறகாவது நினைக்கப் படுகிறார்கள்.
நம் வீட்டு முறைகள் அப்படி அமைந்து விடுகிறது.

உங்கள் கடிதம் கண்டால் பாட்டி நெகிழ்ந்திருப்பார்மா.

மஞ்சூர் ராசா said...

அன்பு கயல்விழி,

பகிரங்க கடிதம் என்றவுடன் நீங்களும் கும்மி அடித்திருப்பீர்களோ என்ற எண்ணத்தில் வந்தேன். ஆனால்
மனதை மிகவும் கனக்க செய்துவிட்டீர்கள்.

பலவருடங்களுக்கு முன்பு இறந்த பாட்டியின் ஞாபகங்களை திரும்பவும் கொண்டுவந்துவிட்டீர்கள்.

நல்ல எழுத்து. வாழ்த்துக்கள்.

kanchana Radhakrishnan said...

படித்து முடித்ததும் மனதில் சற்று பாரம் ஏற்பட்டது.எந்த ஒன்றும் நம் கை விட்டுப் போனதும் தான் அதன் அருமை தெரிகிறது.

SK said...

அருமையா எழுதி இருக்கீங்க கயல்.

இன்னைக்கு தான் என் பாடி பத்தி சொல்லிடு இருந்தேன் என்னோட நண்பன் கிட்டே. அவுங்க கேக்குறே கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. அரசியல், அறிவியல், கல்வி எல்லா தலைப்பும் பேசுவாங்க.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அந்த அமரிக்க சிறுமி மாதிரி எல்லாம் நாம் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
//

நம்ம ஆளுங்க உணர்விலேயே ஓருவர் உள்ளத்தோடு உள்ளம் பேசுகிரவர்கள். வெரும் வார்த்தைகளில் அல்ல...

நொந்தவன் said...

ஏன் இப்படி எல்லோருக்கும் மெயில் அனுப்பி , படிங்க படிங்கன்னு இம்சை பண்றேள். உங்ககிட்ட மெயில் ஐடி கொடுத்தது தப்பா போச்சே ... இந்த பழக்கத்தை கொஞ்சம் நிறுத்துறேலா

கயல்விழி said...

ச்சின்னப்பையன்

மங்களூர் சிவா ஆவி ரூபமா வந்திருகிகார்,கூடவே ஒரு பெயர் தெரியாத அனானி பேயும் வந்திருக்கு. உங்களுக்கு தெரிந்த மந்திரவாதி இருந்தால் பரிந்துரைக்கவும். லதானந்தா ஆசிரமத்தை மூடிவிட்டதால் அவரை கேட்க முடியாது

கயல்விழி said...

நன்றி தாமிரா. :)

நன்றி வல்லி மேடம். சரியா சொல்லி இருக்கீங்க, இந்த கடிதம் அனைத்து பாட்டிக்களுக்கும் பொருந்தும்

கயல்விழி said...

மன்சூர் ராஜா,

மிக்க நன்றி :)

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் :).

நன்றி எஸ்கே :)

கயல்விழி said...

நொந்தவன்

நான் லதானந்த் சித்தரைத்தவிர வேறு யாருக்கும் மின்ஞ்சல் அனுப்பலையே? முக்கியமா உங்களுக்கு அனுப்பவே மாட்டேன் கவலைப்படாதீங்க :)

கயல்விழி said...

நன்றி அப்துல்லா :)

நாம் ஒருவருக்கொருவர் அன்பை வார்த்தையில் சொல்லிக்கொள்வதில்லை என்பது சரிதான், அட்லீஸ்ட் செயலிலாவது காட்டினால் பரவாயில்லை

ஜோசப் பால்ராஜ் said...

கயல், எனக்கு என் பாட்டியோட நினைவை கொண்டுவந்துட்டீங்க.
எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க. எங்க பாட்டிக்கு 4 பேரன், 4 பேத்தி, பேரன் புள்ளைங்க 2 பேரு, பேத்தி மகன் 1 இப்டி எல்லாரையும் பார்த்தவங்க அவங்க.
எல்லா மாசமும் நாங்க எங்க கிராமத்துக்கு போயி அவங்களோட இருந்துட்டு வருவோம். எங்க கிராமமே அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசாம சொல்றத கேட்பாங்க. கை வைத்தியம் எல்லாம் வேற பார்ப்பாங்க.

மார்ச் 28, 1999 ஞாயிற்று கிழமை எங்க கிராமத்துக்கு நாங்க எல்லாரும் போய் அவங்களோட இருந்துட்டு நல்லா விளையாடிட்டு வந்தோம். மார்ச் 31 ராத்திரி கோயிலுக்கு போயிட்டு வர்ற வழியில ஒரு வீட்டுல நடந்த சண்டைக்கு பஞ்சாயத்து செஞ்சுட்டு, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு ஒரு பொண்ணோட கல்யாணத்துக்கு பணம் கொடுத்துட்டு, காலுல சுளுக்குன்னு வந்த ஒருத்தருக்கு வைத்தியம் பார்த்துட்டு படுத்தவங்க 12 மணி போல நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களாம். கிராமத்துல இருந்து எங்களுக்கு போன் வந்துச்சு. 12.15க்கு எல்லாம் அமைதியா உயிர் போயிடுச்சு. ஏப்ரல் 1 உண்மையிலேயே எங்கள முட்டாளாக்கிட்டு போயிட்டாங்க.

அவங்களோட அந்த ஆளுமை இருக்கே, அவ்ளோ பெரிய பண்ணைய நிர்வாகம் பண்றதுலயும் சரி, வேலையாளுங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து உதவி செய்யிறதுலயும் சரி அவங்கள மாதிரி ஒருத்தர் வரமுடியாதுங்க.

வேலையாளுங்க‌ எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க‌ளான்னு கேட்டு, எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க‌, எல்லாருக்கும் சாப்பாடு இருக்குன்னு தெரிஞ்ச‌துக்கு அப்ற‌ம்தான் சாப்பிட‌வே உக்காருவாங்க‌. அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இன்னைய‌ வ‌ரைக்கும் எங்க‌ வீட்ல‌ எல்லாருக்கும் இருக்கு. அவ‌ங்க‌ செஞ்ச‌ புண்ணிய‌ம்தாங்க‌, இன்னைய‌ வ‌ரைக்கும் நாங்க‌ ப‌சின்னு ஒரு இட‌த்துல‌ கூட‌ சாப்பாடு கிடைக்காம‌ நின்ன‌தில்ல‌. அவ‌ங்க‌ள‌ ப‌த்தி எழுதனும்னா ஒரு தொட‌ர் ப‌திவே எழுத‌லாம். அவ‌ங்க‌ பெய‌ரும் த‌ங்க‌ம், நிற‌மும் த‌ங்க‌ நிற‌ம், குண‌மும் த‌ங்க‌ம் தான் . இன்னைக்கும் எங்க‌ள‌ த‌ங்க‌த்து பேர‌ன்னு சொன்னா சிலுத்துக்கும் எங்க‌ளுக்கு. என்னுள் அவ‌ர்க‌ள் நினைவை மீட்டி க‌ண்க‌ளில் நீருட‌ன் இதை எழுத‌ வைச்சுடுச்சு உங்க‌ க‌டித‌ம்.
வீட்டு பெரியவங்க எல்லாம் வீட்டு சாமிங்கன்னு சொல்லுவாங்க. அந்த தெய்வங்கள நாம மறக்க கூடாது.

அவனும் அவளும் said...

ரொம்ப அழகா உங்க உணர்வுகள எழுதி இருக்கீங்க கயல்விழி.

நம்ப வாழ்க்கைல பலது காலம் கடந்தவுடன தான் புரிஞ்சிக்கறோம். (நான் நிச்சயமா அப்படி தான் இருந்து இருக்கேன் ) அந்த நினைவுகள் எல்லாம் என்னோட மனசு முன்னாடி நிக்குது.

கயல்விழி said...

//வேலையாளுங்க‌ எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க‌ளான்னு கேட்டு, எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க‌, எல்லாருக்கும் சாப்பாடு இருக்குன்னு தெரிஞ்ச‌துக்கு அப்ற‌ம்தான் சாப்பிட‌வே உக்காருவாங்க‌.//

ஒருவேளை அந்தக்கால பெரியவங்க எல்லாம் அப்படி தான் இருந்தாங்களோ? நாம மட்டும்(அட்லீஸ்ட் நான்) ரொம்ப சுயநலவாதியாகவே வாழ்வது ரொம்ப குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

உங்களுடைய பாட்டி ஒரு இண்ட்ரெஸ்டிங் கேரக்டர் மாதிரி தெரிகிறார்கள். அவர்களைப்பற்றியும் நேரம் இருக்கும் போது எழுதுங்கள் ஜோசப். :) உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

கயல்விழி said...

//ரொம்ப அழகா உங்க உணர்வுகள எழுதி இருக்கீங்க கயல்விழி.
//

ஆஹா நன்றிங்க அவனும்- அவளும். எனக்கு தெரிந்து நீங்க அவ்வளவு சீக்கிரமா பாராட்டுவதில்லை :)

குடுகுடுப்பை said...

அடுத்த பிறவியில் உங்களுக்கு பேத்தியாக பிறக்க ஆசை.

ராஜ நடராஜன் said...

இயல்பான நடையுடன் அழகான பதிவு.

Anonymous said...

orey feelinga iruku..eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
i am crying now..

r.selvakkumar said...

அருமையான பதிவு

இதை படிக்கும் ஒவ்வொருக்கும்
எளிமையான வரிகளால்
மறக்க முடியாத நினைவுகளை
கிளறி விட்டிருக்கிறீர்கள்!

செல்வா

கயல்விழி said...

நன்றி குடுகுடுப்பை, ராஜ நடராஜன் மற்றும் செல்வா. :)