Showing posts with label தமிழ் கலாச்சாரம். Show all posts
Showing posts with label தமிழ் கலாச்சாரம். Show all posts

Tuesday, October 15, 2013

நமது தமிழ்க்கலாச்சாரப் பெருமைகள் பேசுவோமா?!!

"ஈ" படத்தில் ஜீவாவின் பிறப்பு.. ஒரு புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரியை யாரோ ஒரு "புண்ணியவான்" கெடுத்து அவளுக்கு பிறந்த செல்லப்புத்திரனாக, ஒரு அனாதையாகக் காட்டுவார்கள்.

அதேபோல் தளபதி படத்தில் சூர்யா (ரஜினி), ஒரு  கல்யாணம் ஆகாத ஒரு தாய்க்கு பிறந்த மகனாகக் காட்டுவார்கள்.

சமீபத்தில் வந்த கடல் திரைப்படத்தில் தாமஸ் ( கெளதம் கார்த்திக்) என்கிற கதாநாயகன் பாத்திரம்.. அந்த அப்பாவிப் பையன் பாத்திரத்தை  ஒரு கேவலமான அப்பனால் உருவாக்கப்பட்டவனாக காட்டி..அவனின் தந்தை, அவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ளக் கெஞ்சிக் கூத்தாடியும் (டி என் எ அனாலிஸிஸ் எல்லாம் பற்றி தெரியாத சமுதாயம்) மறுப்பதையும் காட்டிவிட்டு, கடைசியில் அந்தப் பொறுக்கி சாகும்போது அவனுக்காக எந்தத் தவறுமே செய்யாத இந்தப் பையன் ஏங்கி ஏங்கி அழுவதுபோலவும் காட்டுறாரு நம்ம மணிரத்னம்..(அதெப்படி இவன் இழிநிலைக்குக் காரணமான ஒரு பொறுக்கி மேலே இவனுக்கு பாசம் பொங்குதுனு எனக்கு இன்னும் புரியலைங்க மணி??)

நமது சமுதாயத்தில்,   "தமிழ் கலாச்சாரத்தில்" இதுபோல் உருவாக்கப்பட்ட அப்பாவிகளும், அவர்களை உருவாக்கிய "பெரிய மனிதர்களும்" இருக்காங்க. இதுபோல் பொறுக்கிகளால் உருவாக்கப்படும் அப்பாவிகள் மனநிலை பாதிக்கப்பமளவுக்கு பலவிதமான இன்னல்களையும், அவலங்களையும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நம்மைப்போன்றோர் பொதுவாக சினிமாலதான் காண்கிறோம். ஆனால் இது போல் நிகழ்வுகள், நடைமுறையில் நம்மைச் சுற்றி  நமது உயர்தரத் தமிழ் கலாச்சாரத்தில் காலங்காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோல் எந்தத்தவறும் செய்யாத "தவறானவர்களாக பிறந்தவர்கள்" நம்முடன் இவ்வுலகில், நம்மைச்சுற்றி  வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க. ஏன், புத்திசுவாதினமில்லாத பிச்சைக்காரி ஒருத்தி கற்பமாக ஆகி அலைவதை நானே எங்க ஊரில், நமது திருநாட்டில் பார்த்து இருக்கேன். தளபதி சூர்யாக்களும், கடல் தாமஸ்களும், ஈ க்களும்  தூக்கி எறியப்பட்ட அனாதைகளாக  நம் கலாச்சாரத்தில்  நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்றாங்க. அவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்க நமக்கு நேரம் எங்கே இருக்குது?

இதுபோல் ஆட்களை கற்பனைப்பாத்திரமாக சினிமாவில் நாம் பார்க்கும்போது அந்தக் கேரக்டராக நம்மை ஒரு நிமிடம் வைத்து, "நான் அந்த நிலையில் இருந்தால் என்ன ஆகியிருப்பேன்???" என்று யோசித்துப் பார்த்தால்கூட "அப்படி யோசித்த ஒரு சிந்தனையை" வெளியே சொல்லத் தயங்குபவர்கள்தான் தமிழன் தமிழன் என்று வெட்டிப் பெருமை பேசிக்கொண்டு அலையும் நாம் எல்லோருமே.

இதுபோல் பிறக்கும் குழந்தைகள் எந்தத் தவறுமே செய்யாதவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காதுனு நம்புறேன். "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த  பாவம், கர்மா னு என்ன எழவையாவது சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால் அதுபோல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு??  ஏதோ ஒரு அறியாமையில் வாழும் பொறுக்கி ஆண் செய்ததன் விளைவே இவர்கள் உருவானத்துக்குக் காரணம் என்பதைத் தவிர வேறு விளக்கம் எதுவும் இல்லை!

இதுபோல் அனாதையாக உருவாக்கப்பட்ட அப்பாவிகளை  நாம் சக மனிதனாக, சகோதரனாக, சகோதரியாக, காதலனாக, காதலியாக அல்லது மனைவியாக, கணவனாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நம்மிடம் மனப்பக்குவம் இருக்கிறதா? அல்லது தைரியம் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்த்தால்... நம்மைப் பற்றி நமக்கு என்ன புரியும்?? நாம் சினிமாப் பார்த்து அவர்களுக்காக அழுவதைத் தவிர்த்து வேறெதும் "பெரிய தியாகம்" செய்யத் தாயாராக இல்லாத சாதாரண ஒரு கோழைத்தமிழன்தான் என்று  நம்மைப் பற்றி நாம் புரிந்துகொள்வோம்!

இப்படி நம்மில் 99% விழுக்காடுகள், கோழைகளாகவும், இதுபோல் பிரச்சினைகளை எதிர்கொள்ள அல்லது கையாள வழி தெரியாதவர்களாகவும், இதுபோல் பிரச்சினைகளை சமாளிக்க சரியான மனப்பக்குவமில்லாதவர் களாகவும்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உண்மை நிலவரம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது  நமக்கு,  தமிழன், தமிழ் கலாச்சாரம், செம்மொழி மண்ணாங்கட்டினு எதுக்கெடுத்தாலும் தமிழன் பெருமை என்ன வேண்டிக்கெடக்கு?