எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.விசயத்துக்கு வருவோம்.
பதிவுலகில் நாம் எல்லோருமே புதியவராக வருகிறோம். புதுப்படம் ரிலீஸ் ஆவது போலதான். புதிதாக வந்த காதலிபோலே கொஞ்ச நாள் நல்லாவே ஓடும். கொஞ்ச நாட்கள்தான் அப்படி. நாள் ஆக ஆக உங்கள் பதிவுகளை வைத்து உங்கள் மேல் ஒரு பல முத்திரைகள் குத்தப்படுகிறது. இதைத் தவிர்ப்பது கடினம். அதாவது இவர்னா இப்படித்தான் எழுதுவாரு என்றாகிவிடும். அதாவது உங்களுடைய விருப்பு, வெறுப்பு, ரசிப்புத்தன்மை எல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள், விவாதங்கள் மூலமாக வெளியில் வந்தவுடன் நீங்க ஒரு முத்திரை குத்தப் பட்ட பதிவர்!
அதுக்கப்புறம் என்ன ஆகும்?
எனக்குத் தெரிய பலருக்கு ஒரு சில பதிவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே ஆகாது. இதுதான் இயற்கை! மனித இயல்பு!
சுய அறைதல்...
வேற யாரையும் எதுக்கு இழுக்க? உதாரணத்துக்கு பலருக்கு வருண் என்கிற பதிவரின் பதிவுகளைப் பார்த்தாலே பிடிக்காது! வந்துட்டான்டா நாதாரி! என்னதான்டா இவன் சொல்றான்? னு மறக்காமல், கட்டுப்படுத்த முடியாமல் ஒரு எட்டு வந்து பதிவை வாசிச்சுப்புட்டு, வழக்கம்போல திட்டிட்டுப் போயிடுவாங்க. திட்டுவது பின்னூட்டத்தில் இல்லை! மனசுக் குள்ளேயேதான்!
ஆக ஒருவருக்கு முத்திரைகள் குத்தப்பட்ட பிறகு வருணுக்கு மட்டுமல்ல பொதுவாக உங்களுக்குக்கூட இந்நிலைதான் சாதாரணமாக பதிவுலகில் நடக்கிறது.
என்ன மாதிரி முத்திரைகள்??

* வருண் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்!
ஆத்திகர்கள் அதிகமாக உள்ள இவ்வுலகில் பலருக்கு "வருண்" ரொம்ப ரொம்ப கெட்டவன்"! ஆக, வருணைப் பிடிக்காத, வருணை வெறுக்கும் இந்த அப்பாவிகள் மேல் வருண் கோபங்கொள்ளலாமா? இங்கேதான் கவனமாக இருக்கணும். இதில் ஆத்திகர்களை குறை சொல்லவே முடியாது. அவர்கள் சிந்தனைகளை, நம்பிக்கையை வருண் மதிக்காமல் இருப்பது வருணின் தவறுனுகூட சொல்லலாம்!
* வருண் "அநாகரிகப் பின்னூட்டமிடுபவதில்" பேர் போகாதவன்!
பல தளங்களில் பலருக்கும் அவர்கள் தளங்களில் பலவிதமான தர்ம சங்கடங்களை உருவாக்கி இருக்கிறான்.
"சனியன் பிடிச்சவன் வந்துட்டான்! இவனை என்ன பண்ணுறது?" எதுக்கு இங்கே வர்ரான்னு தெரியலை!" னு துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு ஒரு சிலர் ஒதுங்கிப்போவதை வருணால் உணரமுடியாமல் இல்லை!
* வருண் பார்ப்பனர்களை இஷ்டத்துக்கு விமர்சிப்பவன்! அதுவும் இந்த நாகரீக உலகில், எந்தவிதமான ஈவு இரக்கமே இல்லாமல், வரம்பு மீறி விமர்சிப்பவன்!
பாதிக்கப் பட்ட, பாதிக்கப் படுகிற அப்பாவிப் பார்ப்பனர்கள் பலர், "பாவி இவன் நாசமாப் போகணும்"னு மனதாறத் திட்டலாம். பகவானிடம போயி், "இந்தச் சனியன் ஒழிய ஏதாவது செய்"னு தட்சணை வைத்து வேண்டிக்கலாம். ஏன் பூஜைகள், யாகங்கள்கூட செய்யலாம். மறுபடியும் அவர்கள் மேல் தப்பில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அப்படித்தான் தன்னை வறுத்தியவனை சபிப்பார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அப்பாவிகளை திருப்திப்படுத்த "இல்லாத ஒரு பகவானை" வருண் வணங்கவோ வழிபடவோ முடியாது!
* வருண் தனிநபர் தாக்குதல் பதிவுகள் எழுதுபவன்!
கூச்சமே இல்லாமல் பல முறை, பல பதிவர்களை பலவாறு விமர்சிச்சுப் பதிவு எழுதி இருக்கான். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நட்பு வட்டாரம், அவர்கள் நலம் விரும்பிகள் எல்லாரும் கூடி ஒப்பாரி வைத்துவிட்டு சபித்துவிட்டுத்தான் போவார்கள். இப்படி பாதிக்கப்பட்ட பலருக்கும் வருண் பேரைக் கேட்டாலே வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு உண்டாவது இயற்கை. அவர்களும் வருணை மதிக்கணும், உயர்வாக நினைக்கணும் என்று வருண் நினைத்தால் வருண், வருணாக இருக்க முடியாது!
இதுபோன்ற முத்திரைகள்!

நமது கருத்தை ஆணித்தனமாக சொல்லும்போது, பலர் வெறுப்புக்கு ஆளாவது இயல்பு என்பதை ஆறறிவு உள்ள வருண் உணர்ந்து வைத்து இருக்கணும்.
ஆக, இப்படி பல குற்றச்சாட்டு முத்திரைகள் குத்தப்பட்ட ஒரு சாதாரண பதிவன் வருண்! ஆனால் நீங்க எல்லாருக்கும் எப்போதுமே நல்லவராக இருந்தால் இந்தப் பிரிச்சினை இல்லை! அப்படி நீங்க நல்லவராக உங்க வீக்னெஸை, விருப்பு வெறுப்பை வெளியே காட்டாமல் இருந்தாலும் நீங்கள் ஒரு மாதிரியான "போர் கேரக்டர்" என்கிற முத்திரை குத்தப்படும்.
நிற்க!
* ஒரு பதிவரை விரும்புவது, வெறுப்பது, சகித்துக் கொள்வதெல்லாம் தனிப்பட்டவாசகர்/பதிவர் தரம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை இவைகளைப் பொறுத்தது.
* ஒருவரை அல்லது அவர் பதிவுகள ரசிப்பதோ வெறுப்பதோ தனிப்பட்டவர்களின் உரிமை, சுதந்திரம்!
* அவரவர் மனதுக்கு அவர் அவரே ராஜா/ராணி. அவர்கள் உங்களை வெறுப்பதை நீங்க என்ன, யாருமே கட்டுப் படுத்த முடியாது. உங்களால் எல்லாரையும் திருப்திப் படுத்தவும் முடியாது!
ஆக பதிவுலகில் எப்படி குப்பை கொட்டுவது??
பதிவுலகில் நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், பதிவர்கள் மத்தியிலே நாள் ஆக ஆக உங்கள்மேல் நிலவும் வெறுப்பையும் சகித்துக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டுத்தான் போகணும். அப்படி உதறித்தள்ளிவிட்டுப் போக நீங்க கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதிவுலகம் உங்களுக்கு நரகமாகிவிடும்!
பதிவுலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவர் நாட்கள் கடக்கக் கடக்க "புகழ்" சம்பாரிக்கிறாரோ இல்லையோ நெறையவே "இகழ்" சம்பாரிப்பதைத் தவிர்க்க முடியாது! இங்கே நான் சொன்னதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!
Now Relax please!
