Friday, May 30, 2008

அமரிக்காவில் பொருளாதார பின்னடைவு?

அமரிக்காவில் சமீபகாலமாக தீவிரவாதிகள் பயத்தையும் பின் தள்ளிவிட்டு, வேறொரு பயம் முக்கியமாக மக்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறது, அது ரிசெஷன்(Recession) எனப்படும் பொருளாதார பின்னடைவு. முன்பு வெறும் ஏழை மக்களால் மட்டுமே உணரப்பட்ட இந்த பொருளாதார இழுபறி, தற்போது மத்தியதர குடும்பங்களையும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.

ரிசெஷன் என்றால் என்ன? : ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் பொருளாதார பின்னடைவு. அத்தியாவசியப்பொருட்களான பெட்ரோல், கோதுமை, அரிசி, முட்டை பால் போன்ற பொருட்கள் விலையேற்றம், கூடவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, மக்களின் வருட வருமானம் அதிகரிக்காமல் இருப்பது, ரியல் எஸ்டேட் விலை சரிவு போன்றவை பொருளாதார பின்னடைவுக்கு காரணங்களாக குறிப்பிடப்படுகிறது.

எதனால் ரிசெஷன் வந்தது?: இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நிச்சயமாக புஷ் உளறுவதை போல, இந்தியர்களும் சீனர்களும் அதிகம் சாப்பிட ஆரம்பித்தது காரணம் அல்ல. :)

முதல் மற்றும் முக்கியமான காரணம், அஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அமரிக்கபடைகளினால் ஆகும் செலவு ஒரு நாளைக்கு சராசரியாக 255 மில்லியன் டாலர்கள். இந்த அளவுக்கு செலவாகிறது என்று ஒப்புக்கொள்ள கூட புஷ் அரசு மறுக்கிறது. உலக கவனத்தை திசை திருப்ப தான் இந்த "இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள்" கதை.

இரண்டாவது காரணமாக உயர்ந்து வரும் பால், முட்டை, அரிசி, கோதுமை, பெட்ரோல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் பெட்ரோல் விலை உயர்வு உலகமெங்கும் பெரிய மிரட்டலாக இருக்கிறது, அதற்கு அமரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்த வாரம் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலருக்கு விற்றது. பெருகி வரும் பெட்ரோல் விலையேற்றத்தால் கார் சேல்ஸ் பெருமளவு குறைந்திருக்கிறது, முக்கியமாக பெரிய வாகனங்களான எஸ்யூவி போன்ற வாகனங்கள் ஷோ ரூம்களில் வாங்குவார் யாரும் இல்லாமல் அநாதையாக நிற்கிறது. சிறிய, விலை குறைந்த, அதிக மைலேஜ் தரும் வாகனங்களான கியா, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது. முட்டை பால் விலையேற்றத்துக்கு ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட திடீர் பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, க்ளொபல் வார்மிங் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய விலையேற்றம், எதிர்காலத்தில் குறையாது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. போரில் மில்லியன் மில்லியனாக கொட்டும் புஷ் அரசு, மாற்று எரிபொருள் ஆராய்ச்சிக்காகவும், மாற்று எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்காகவும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. பெட்ரோல் கம்பனிகள் கொடுக்கும் பில்லியன் கணக்கான 'லாபி' என்று நாகரீகமாக அழைக்கப்படும், அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கிடைக்கும் லஞ்சம் தான் இந்த பாராமுகத்துக்கு காரணம்.

மூன்றாவது காரணமாக, ரியல் எஸ்டேட் விலை சரிவு. "Flexible mortgage" என்ற கடனால் வந்த வினை. இதை நம்பி நிறைய பேர் வீடு வாங்கினார்கள், ஆரம்பத்தில் குறைவாக இருந்த மாத வீட்டுத்தவணை, ஐந்து வருடம் போன பிறகு தாறுமாறாக எகிறத்தொடங்கியது. சமாளிக்க முடியாத சில அமரிக்க மக்களால் மாத தவணை வங்கிக்கு செலுத்த முடியவில்லை. சில முறை எச்சரிக்கை செய்யும் வங்கி, தொடர்ந்து இதே நிலை நீடித்தால், வீட்டை அதற்கு பதிலாக வங்கி சொத்தாக அறிவித்து, வீட்டு உரிமையாளர்களை குறிப்பிட்ட காலத்துக்குள் வெளியேற்றிவிடுகிறது. பிறகு வங்கியே ஒரு விலையை நிர்ணயித்து, மீண்டும் மார்கெட்டில் குறைந்த விலைக்கே அந்த வீட்டை விற்றுவிடுகிறது. பேங்க் ஃபோர்க்ளோஸ்ட் வீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 2002 ஆம் வருடம் 1.25 மில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்ட வீடு, இந்த வருடம் 950,000 டாலர்களுக்கு விற்றது. அடுத்த வருடம் அமரிக்காவில் அனைத்து மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் மேலும் 10-30 சதம் நிச்சயம் வீழ்ச்சியடையும் என்று வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.

மேலே இருக்கும் காரணங்கள் இருந்தால் போதாதா, வேலை இல்லா திண்டாட்டம் அதுவாகவே அதிகரிக்க? தற்போது அமரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 5%. போன வருடம் 4.5 சதம். எனவே .5% தான் அதிகரித்து இருக்கிறது, இது பரவாயில்லை என்பது அரசின் சமாதானம். பொருளாதார வல்லுநர்கள் அரசு தரும் இந்த கணக்கை ஒப்புக்கொள்ளவில்லை. அமரிக்க அரசு கடந்த 4 வாரங்களாக வேலை தேடுபவர்களை கணக்கெடுத்து 5% என்று அறிவித்து இருக்கிறது. ஆனால், நம்பிக்கை எல்லாம் விட்டு போய் "இனிமேல் வேலை கிடைக்காது" என்று 4.5% மக்கள் சோர்வடைந்து வேலையே தேடாமல் இருக்கிறார்கள், அவர்களையும் சேர்த்து கணக்கிட்டால் வேலை இல்லாதவர்கள் மொத்தமாக 9.5% என்ற அதிர்ச்சி தகவலை அரசு சாராத வல்லுநர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். 2009 வருடத்தில் இது மேலும் 10% வரையிலும் அதிகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி பொருளாதார பின்னடைவு அமரிக்காவுக்கு புதிதல்ல, 1970களில் வியட்நாம் போரினால் இதே போல பெரிய அளவில் பொருளாதார பின்னடைவை அமரிக்கா சந்தித்தது. பிறகு எப்படியோ சமாளித்து எழுந்தது, பழைய சம்பவங்கள் மக்களுக்கு மறந்து போய்விட்ட நிலையில். தற்போது மீண்டும் போர் என்ற புதைகுழியில் வீழ்ந்து விட்டது. ஹில்லரியோ அல்லது ஒபாமாவோ தான் மீட்க வேண்டும். அமரிக்கா இனிமேலாவது திருந்துமா???

6 comments:

அறிவன்#11802717200764379909 said...

உணமையான காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.
மேலும் சில காரணங்கள்- Futures trade.எண்ணெய் விலையும் இந்த அளவு ஏறுவதற்கு என்ன காரணங்கள் எனத் தெரியவில்லை.
4 மாதங்களில் 120 % அளவுக்கு ஏற அந்த அளவு பயன்பாடு அதிகமாயிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
என்னுடைய இரு பதிவுகளில் இதைத் தொட்டிருக்கிறேன்.

http://sangappalagai.blogspot.com/2008/05/61.html

http://sangappalagai.blogspot.com/2008/05/57.html

கயல்விழி said...

நன்றி அறிவன். கூடவே டாலரின் வீழ்ச்சியால் மற்ற நாட்டினர் தங்கள் முதலீட்டை அமரிக்காவில் இருந்து விலக்கிக்கொள்ளுவதாலும் பொருளாதார பின்னடைவு ஏற்படுகிறது என்ற காரணத்தையும் படித்திருக்கிறேன். எது எப்படியோ, கேஸலீன் விலை இப்படி திடீரென்று ஏறினது ரொம்ப அநியாயம்.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. தமிழ்நதி கூட 20000 டாலருக்கு வீடுகள் என sub-prime crisis பற்றி விரிவான பதிவு எழுதியிருக்கிறார்.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. தமிழ்நதி கூட 20000 டாலருக்கு வீடுகள் என sub-prime crisis பற்றி விரிவான பதிவு எழுதியிருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

//அஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அமரிக்கபடைகளினால் ஆகும் செலவு ஒரு நாளைக்கு சராசரியாக 255 மில்லியன் டாலர்கள்.//

ஆப்கானிஸ்தான் சரி.ஆனால் ஈராக் திசை மாறிப்போன கொள்கை.அப்படியும் ஈராக்கிலிருந்து படைகளை நகர்த்தும் முயற்சி இல்லை.ஒபாமா வந்து ஏதாவது செஞ்சாத்தான் உண்டு.

ராஜ நடராஜன் said...

//சிறிய, விலை குறைந்த, அதிக மைலேஜ் தரும் வாகனங்களான கியா, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது.//

இங்கே நேர் எதிர்.