Friday, November 22, 2013

தமிழ் கலாச்சாரத்தில் நடு இரவில் இருட்டில் இருவர்!

என் நண்பன் சாமி வசிக்கும் தெருவில் வாழும் அம்மா அது.  ஒரு 46 வயது இருக்கும். எதிர்த்தாப்பிலே நடந்து வந்தது.  அது பேரெல்லாம் எதுக்கு?"

"அந்த அம்மா ரொம்ப மோசம்டா" என்று என் காதைக் கடித்தான் சாமி.

"ஆமா யாரைத்தான்  நல்ல அம்மானு நீ சொல்லியிருக்க சாமி?"

"இப்பப்பாரு என்னைப்பார்த்தால் பயந்து நடுங்கும் பாரு !" என்றான். அத்துடன் அந்தம்மா இவனை தவிர்க்க முடியாத படி நின்றான். அவன் சொன்னதுபோலவே சாமியைப் பார்த்தவுடன் ஏதோ பேயறைந்தது போல் அது பயந்து ஒதுங்கியது போலதான் எனக்கும் தோணுச்சு.

"என்னடா சாமி? ஏன் இப்படி உனைப்பார்த்து பேயைப் பார்த்ததுபோல் பயப்படுது?" என்றேன் நான்.

"அதை ஏன் கேக்கிற? அதுக்கு நம்ம வயதில் பையன் இருக்கான்டா. ஓர் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு இருக்கு. ஆனால் தரங்கெட்டதனமா நடந்துகொள்கிறது.."

"என்னடா சொல்ற? எதுவும் தெருச் சண்டையில் இஷ்டத்துக்குப் தாறுமாறாப் பேசுமா? உங்க தெருலதான் பொன்மொழியெல்லாம் அதுலதானே வரும்?  "நீ அவனை வச்சிருக்க, இவனை கூட்டி கொடுத்தது தெரியாதா?" னு இஷ்டத்துக்கு திட்டுவாங்களே? அது மாரிப்பேசுமா சண்டையிலே?" என்றேன் நான்.

"அதாவது பரவாயில்லை. இது அதைவிட மோசம்"னு மறுபடியும் புதிர் மேலே புதிர் போட்டான் சாமி.

"என்னனு சொல்லித் தொலைடா, சாமி"

"இதைக்கேளு!  ஒரு நாள் சக்கண்ட் ஷோ முடிஞ்சு வந்து இங்கே நின்னு வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு 20 வயதுப்பையன் இந்த சந்துலயிருந்து வெளியே வந்தான். அவன் யாருனு கவனிச்சுப் பார்ததேன். அவன் யாருனு தெரியும் எனக்கு. அவன் இந்தத் தெரு இல்லை. என்னடா இன்னேரத்திலே ஏண்டா லேடீஸ் பொது டாய்லெட் பக்கம் இருந்து வருகிறான்? னு நாங்க பேசிட்டு விட்டுட்டோம்.  ஆனால் நான் அதோட விடலை சரினு அவன் மேலே ஒரு கண்ணு வச்சிட்டு இருந்தேன். இன்னொரு நாள் நைட் இதே மாரி நைட் ஒரு மணி இருக்கும் அங்கேயிருந்து வெளிய போனான். அவன் போன அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதே சந்திலிருந்து இந்தம்மாவும்  வெளிய வந்து அவங்க வீட்டுக்குப் போச்சு..இதில் இன்னொரு விசயம் என்னனா இந்த அம்மா புருஷனிடம்தான் இந்தப் பையன் ஏதோ வேலை செய்றான். அடிக்கடி அவங்க வீட்டுக்கு வருவான். எனக்கு என்னடா எதோ நடக்குது போல னு சந்தேகம் வந்துச்சு"

"நாசமாப் போச்சு போ."

"அப்புறம் ஒரு நாலு நாள் இருக்கும், அன்னைக்கு தெருல ஏதோ கோயில் திருவிழா நடந்துச்சு. திருவிழா எல்லாம் முடிஞ்ச பிறகு நைட் அதே பையன் அந்த சந்துக்குள்ள சுத்திப் பார்த்துட்டு யாருக்கும் தெரியாமல்ப் போனான். கொஞ்ச நேரத்திலே அந்தம்மாவும் அதே சந்துக்குள்ள் போச்சு. நானும் என் ஃப்ரெண்டும் போய் ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சாச்சு!"

"அடப்பாவி!   ரெண்டுபேரை நிம்மதியா சந்தோஷமா இருக்க விடமாட்டியா? "

"அவனை ஒரு அறை அறைஞ்சி. "இந்தப்பக்கம் உன்னை இனிமேல் பார்த்தேன் கொன்னேபுடுவேன்!" னு  அனுப்பிட்டு. இந்த அம்மாவ, "ஏய் உனக்கு வயசு என்ன? இந்த வயசுல என்ன இதெல்லாம்?" னு கேட்டேன். என்னத்தை சொல்ல போ!  கையெடுத்து என்னை கும்பிடுதுடா! "யார்ட்டையும் சொல்லிராதே" னு கெஞ்சுது. சரி, "இனிமேல் இப்படி செய்யாதே! வயசுக்கேத்தாப்பிலே நடந்துக்கோ" னு திட்டி, அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வந்துட்டேன். என்ன பொம்பளைடா இதெல்லாம்?" என்றான் சாமி வருத்தமும் கோபமுமாக.

"ஏண்டா டே! பாவம் அவங்க சந்தோஷத்தைக் கெடுத்து, அந்தமம்மாவை சாகிறவரைக்கும் உன்னை மறக்க முடியாத அளவுக்கு ஆக்கிப்புட்ட!" என்று கேலியாக அவனிடம் நான் சொல்லி சமாளிச்சாலும் உள்மனதில் "ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? அதுவும்  இந்த வயதில்?" னு மனதில் ஒரு சோகமான பரிதாபமான உணர்வுதான் வந்தது எனக்கும்.

"விட்டுத் தொலைடா!  உன்  மிரட்டலில் "தூக்குக் கீக்கு போட்டு செத்திறப்போது பாவம்!" என்றேன் உண்மையான பயத்துடன்.

*****************

அந்த நினைவுகள், அந்த அம்மாவின் பரிதாப முகம், சாமியைப் பார்த்து அது மிரண்ட பார்வை எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அப்படியே நிற்கிறது, எனக்கு.

சினிமாக்கள் (அவள் ஒரு தொடர்கதை), கதைகள் (தி ஜா ரா வின் அம்மா வந்தாள்) போன்ற புனைவுகளில் மட்டுமல்லாமல், இதுபோல் அம்மாக்கள்  தகாத உறவுகளில் மாட்டிக்கொண்டு பிடிபட்டு முழிப்பது எல்லாம் காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் கிராமங்கிளில் கூட நடக்கத்தான் செய்யுது.

இதுபோல அம்மாக்கள் ஒரு சில விழுக்காடுகள்தான் என்றாலும் "ஒரு சிலர் காமத்திற்காக, ஏன் இப்படி தன் வயது, தன் நிலமை, தன் தரம் என்பதை எல்லாம் யோசிக்காமல் தன்னிலை மறந்து தவறாக நடந்துக்கிறாங்க? என்கிற கேள்விக்கு என்ன பதில் இருக்கிறதென்று தெரியவில்லை.

"அவள் தேவைகளை ஆம்படையான் ஒழுங்காத் தீர்த்து வைக்கவில்லை! இதிலென்ன பெரிய தப்பு?" என்று பெண்ணியவாதியாக வாதிடலாம். "அவங்க புருசன் எப்படியோ? அவன் ஒழுங்காயிருந்தால் ஏன் இப்படி அந்தம்மா அலையுது?" என்றும் வாதம் மற்றும் விதண்டாவாதம் பேசலாம்தான்.

நம்மூர்களில் வாழும் மெஜாரிட்டி "அறிவுகெட்ட ஆண்கள்" கோடிக்கணக்கான "பெண் என்னும் பேதையர்கள்" எல்லாம் இதை எல்லாம் பார்த்து, கேள்விப்பட்டு, "தேவடியாள் ஊர் மேயிறாள்" னு இதுபோல் அம்மாக்களை ஜாடையில், மற்றும் சண்டைகளில் திட்டுவதுதான் கிராம வழக்கம். ஆனால் இதில் சிந்திக்க வேண்டியதும், இதுபோல் நடப்பவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவும் நாம் கற்றுக்கொண்டால்தான் நாம் மனிதாபிமானிகளாகவும், பண்பாடு தெரிந்தவர்களாகவும் ஆகிறோம்.

மேலை நாகரீகத்தில் இதையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் நாம் எப்படி??

-முற்றும்


12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்றனர் நம் முன்னோர்.

இவ்வெண்ணம் மாறுபட்டு
சிந்திப்பார்களானால், செயல்படுவார்களானால்,
விலங்கிற்கும் நமக்கும் என்ன
வேறுபாடு

இராய செல்லப்பா said...

கடைசியில் 'முற்றும்' போட்டிருக்கிறீர்களே, இதெல்லாம் முற்றுப் பெறுகிற விஷயமா? தமிழ்ப்பண்பாட்டின் ஒரு பகுதியல்லவா இது! இல்லையென்றால் 'பிறன்மனை நோக்காமை' குறித்து ஒரு அதிகாரமே எழுதுவாரா வள்ளுவர்?

வருண் said...

****கரந்தை ஜெயக்குமார் said...

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்றனர் நம் முன்னோர்.

இவ்வெண்ணம் மாறுபட்டு
சிந்திப்பார்களானால், செயல்படுவார்களானால்,
விலங்கிற்கும் நமக்கும் என்ன
வேறுபாடு!***

தவறு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. ஆனால், மனிதன் தவறு செய்வான்னு தெரிந்துதான் சொல்லியிருக்காங்க. தவறு செய்கிறவர்களை குறைக்கலாம். ஆனால் ஒரு சிலர் வழி தவறிப் போவதை சுத்தமாக ஒழிக்க முடியாது.

அப்படித் தவறியவர்களை என்ன செய்வது? என்பதே கேள்வி!

தண்டிக்கணுமா? இல்லை அவர்களை அவமானப் படுத்தி, அவர்கள் மனம் நொந்து தற்கொலை செய்து சாகணுமா? இல்லைனா அவர்களை மன்னித்து நல்வழிப்படுத்தணுமா? னு யோசிச்சுச் சொல்லுங்க, ஜெயக்குமார் சார்.

வருண் said...

***Chellappa Yagyaswamy said...

கடைசியில் 'முற்றும்' போட்டிருக்கிறீர்களே, இதெல்லாம் முற்றுப் பெறுகிற விஷயமா? தமிழ்ப்பண்பாட்டின் ஒரு பகுதியல்லவா இது! இல்லையென்றால் 'பிறன்மனை நோக்காமை' குறித்து ஒரு அதிகாரமே எழுதுவாரா வள்ளுவர்?***

உண்மைதாங்க, இதுபோல் தவறுகள் மனிதன், மனித உணர்வுகளை கட்டுப்படுத்தி, அடக்கித்தான் வாழவேண்டும் என்று வலியுறுத்தி வாழும்வரை தொடரத்தான் செய்யும்.

கவியாழி said...

இதுவும் மனித இயல்பன்றோ ?அவரவர் விருப்புவெறுப்பை சார்ந்த விஷயமாய் பாருங்கள்

காமக்கிழத்தன் said...

//தூக்குக் கீக்குப் போட்டுச் செத்துறப் போவுது பாவம்//

இம்மாதிரி பாவப்பட்ட பெண்கள் தூக்குப் போட்டுச் சாவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால்,தங்கள் கௌரவம் பாதிக்கப்படாமலிருக்கத் தற்கொலைக்கான ‘உண்மை’க் காரணத்தைக் குடும்பத்தார் மறைத்துவிடுகிறார்கள்.

மனநிலை பாதிக்கப்படும் பெண்களில் [ஆண்களும் உண்டு] கணிசமானவர்கள் ‘அது’ விஷயத்தில் ஓரளவுக்குக்கூட ‘திருப்தி’ பெறாதவர்கள்.

திருமணத்திற்கு முன்பே,தாம்பத்தியத்தில் தனக்குரிய பங்கை ஆடவன் முழுமையாக அறிந்திருப்பது அவசியம்.

அறியச் செய்வது பெற்றவர்களின் கடமை.

கதையா உண்மைச் சம்பவமா என்று இனம் காண இயலாத வகையில் மிக எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்.

உஷா அன்பரசு said...

ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உண்டானதுதான். எங்கள் பக்கம் ஒரு கணவன், மனைவி குடியிருந்தனர். அந்த மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால் அந்த ஆள் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்று கொண்டான். அவர்களை தனி வீட்டில் குடியமர்த்தி பெரும்பாலும் இரண்டாவது மனைவி வீட்டிலேயே தங்கி கொண்டான். இந்த முதல் மனைவி தனக்கு ஆறுதல் கொடுத்த ஒரு நபரிடம் சரணடைந்தாள் போலும்... அடிக்கடி இரவு அந்த நபர் இந்த முதல் மனைவி வீட்டுக்கு வர, அக்கம், பக்கம் அந்த பெண் குடியிருந்த வீட்டின் ஹவுஸ் ஓனரிடம் சென்று ஒரே மிரட்டல். அந்த பெண்... ஒரு மாதிரி... பக்கத்தில் நாங்கல்லாம் குடியிருக்கிறதா வேணாமா...? நீங்க காலி பண்ணலைன்னா நாங்க காலி பண்ண வச்சுடுவோம் என்று...!" அந்த ஹவுஸ் ஓனர் பெரியார் சிந்தனையாளர்..அந்த பெண்ணால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை...வீட்டையும் நன்றாக தூய்மையாக வைத்திருந்தார்.. என்பதால் அனாவசியமாக இந்த பிரச்சினையில் மூக்கை நுழைக்க விரும்பாமல் மவுனம் சாதித்தார். ஆனால் அக்கம், பக்கத்தார் நெருக்கடி தந்ததால், அந்த ஹவுஸ்-ஓனர் அந்த பெண்ணை கூப்பிட்டு " உன்னை பற்றி இது போல் சொல்கிறார்கள்.. நான் இதை பற்றி எல்லாம் ஆராயவில்லை..ஆனால் இது உன் கணவன் வரை அக்கம்பக்கத்தார் சொல்லி உன் வாழ்க்கை பாழாகலாம்..எனவே நான் வேறு காரணம் சொல்லி காலி பண்ணுமாறு உன் கணவனிடம் சொல்லிவிடுகிறேன் என்றார். அந்த முதல் மனைவி கண்ணீர் விட்டழுதது. ஹவுஸ் ஓனரும் அவள் கணவனிடம் எதோ காரணம் சொல்லி காலி பண்ணி விட்டார். எனக்கு மனவருத்தமாக இருந்தது என்னவென்றால் அந்த கணவன் இன்னொரு பெண்ணை தேடி போன போது சத்தம் போடாத சமூகம்... இந்த பெண்ணை தேடி ஒருவன் வந்ததற்காக மட்டும் குய்யோ முய்யோ என்று ஏன் கத்துகிறது? அப்படியே அந்த பெண்ணை தேடி வரும் நபரால் இவர்கள் மானத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது? அந்த பெண்ணின் கணவன் இன்னொரு பெண்ணை தேடிய போது இந்த முதல் மனைவி மணவிலக்கு பெற்றிருக்கலாம்.. அவளால் அது இயலாத சூழ்னிலையில்.. தனக்கு ஆறுதலான ஒரு துணையோடு அந்த வாழ்க்கையை சகித்து கொண்டிருக்கிறாள் என்றே வைத்து கொள்ளலாம். இதில் மூக்கை நுழைக்க நாம் யார்? இது அவர்களுக்குள்ளான நிலை. இதனால் சமூகத்தின் பிற உறுப்பினர்களுக்கு இடர்ப்பாடு இல்லாத வரை எப்படியோ இருந்து விட்டு போகட்டுமே அதை நாம் ஏன் பெரிது படுத்த வேண்டும்.இதற்காக தவறுகளை நியாயபடுத்தவில்லை... ஒழுக்கத்தை இருபாலரும் கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சம் இது போன்ற தவறுகள் எங்காவது நடந்து கொண்டுதான் இருக்கும்.. ! அந்த கணவனும், முதல் மனைவியும் குடியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தது என் மாமனார்..!

உஷா அன்பரசு said...

இது போன்ற விஷயத்திற்கான நியாயமான கருத்தை ஒரு பெண் சொன்னால் கூட சமூகம் குற்றமாக கருதும்..

BADRINATH said...

நமது நாட்டில் ஆண் பெண் சமத்துவம் கிடையாது.. இது பொதுவான மனித தவறுகள்தான்...இருபாலருக்கும் பொருந்தும்தான்.. ஆனால் இதில் ஒரு நேர்மையாக ஜனநாயக ரீதியாக யாரும் நடப்பதில்லை... கள்ளத்தனமாகத்தான் நடக்கிறார்கள் (பெரும்பாலும்).. அப்படி கள்ளத்தனமாக இருந்தால், அவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வெறி வரும்தான்.. மேலை நாடுகள் போல பிடிக்காவிட்டால் பிரிவதே நல்லது அது செக்ஸ்சாக இருந்தாலும் இல்லை வேறு காரணமாக இருந்தாலும் peacefully parting each other என்பதுதான் சாலச்சிறந்தது.. அதற்கு நம் நாட்டு மக்கள் மேலும் நாகரீகப் படவும் ஜனநாயகப்படவும் வேண்டும்..

ஜோதிஜி said...

இது போன்ற விஷயத்திற்கான நியாயமான கருத்தை ஒரு பெண் சொன்னால் கூட சமூகம் குற்றமாக கருதும்..

உஷா அன்பரசு ஒவ்வொரு பதிவில் உள்ள விமர்சனங்களைப் படிக்கும் போது கலக்குறீங்க என்று சொல்லத் தோன்றுகின்றது.

நீங்க மேலே சொன்னது தான் உண்மையும் கூட.

'பரிவை' சே.குமார் said...

இங்கு ஆண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படலாம்.. படும். ஆனால் பெண்களின் தவறுகளை பெண்களே கேவலமாகப் பேசுவார்கள்.

இருந்தாலும் அந்த அம்மாவின் செய்கை மிகவும் மோசமானதுதான்...

காரிகன் said...

பெண்களை மீது குற்றம் சுமத்தும் பண்பாடில்லாத காலத்திலேயே நாம் இன்னும் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. பெண்களைப் பற்றிய பார்வை மேலை நாடுகளில் வெகுவாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் வெத்து புராணங்களையும் கதைகளையும் மேற்கோள் காட்டி பெண்களை சித்ரவதை செய்வது நமக்கும் நாகரிக உலகத்துக்கும் இருக்கும் மிக நீண்ட தூரத்தை உணர்த்துகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி எங்குமே நடக்காததல்ல. இது ஒருவருடைய சொந்த விருப்பம் என்று பார்க்கவேண்டுமே தவிர கலாச்சாரம் என்று கூப்பாடு போடுவது சுத்த போலித்தனம். பெண்களின் தனிப்பட்ட முடிவுகளை சில ஆண்கள் எதோ பெரிய ஒழுக்கசீலர்கள் போல விமர்சிப்பது சரியல்ல.