Wednesday, August 2, 2017

எல்லாக் காதலும் ஒருதலைக் காதலே!!

காதல் கதை எழுதி எத்தனை நாளாச்சு! இப்போ எழுத முடியுமா? ஒரு வேளை முடியாதா? இப்போ எல்லாம் எங்கே காதல் பொங்கி வழியுது? எப்படி என்னால் காதல் கதை எழுத முடியும்? ஏன் முடியாது? சும்மா எழுதித்தான் பார்ப்போமே?  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கதாசிரியர் அகில். எப்படியோ ஒரு காதல் கதை எழுதியே ஆகவேண்டும் என்று.

ஆனால் இந்த முறை பொய்க்கதைதான் எழுதணும். ஒரு வேளை சுபத்ரா நான் எழுதுற காதல் கதையை வாசித்தால்? அவள் எங்கே இங்கே வரப்போறா? ஒரு வேளை வந்து வாசித்தால்? கதாநாயகியை நாயகன் திட்டுவதுபோல் அல்லது கொஞ்சுவதுபோல் ஏதாவது எழுதினால் அவளைப் பற்றிதான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வாளே? அது உண்மைதானே? அவளுடைய தாக்கம் அல்லது கலப்பில்லாமல் என்னால் எப்படி காதல் கதை எழுத முடியும்? சுபத்ரா என்றுமே  நான் அவளை முழுமனதாக காதலித்தேன் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை. அவளே பலமுறை சொல்லியிருக்காளே?

Related image
நேற்றைய காதலர்கள்
அகில்! உங்களுக்கு நான் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். ஒண்ணு தெரியுமா அகில்? உண்மையில் நாந்தான் உங்களை உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறேன் . என் தொல்லை தாங்க முடியாமல் நீங்க சும்மா என்னைக் காதலிப்பதாக நடிக்கிறீங்க. உண்மையிலே நீங்க என்னைக் காதலித்தால் அப்பா எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை, இந்தக் கார்த்திக்கை எப்படி  அழகு, உனக்கு சரியானவர் என்றெல்லாம் உங்களால் சொல்ல முடியும்? அதேபோல் உங்கள் வீட்டில் உங்களுக்கு ஒரு ரம்யாவோ, செளம்யாவோ பார்த்து அவள் ஃபோட்டோவை எனக்கு நீங்கள் அனுப்பியிருந்தால் எனக்கு அவள் மேல் கொலைவெறி வந்துவிடும். அவள் உங்களுக்கு பொருத்தமானவள்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால் நீங்க, கார்த்திக் ஃபோட்டோவைப் பார்த்து  நல்ல அழகு, உயரம், நல்ல நிறம், உனக்குப் பொருத்தமானவர் சுபத்ரா னுசொல்றீங்க. நீங்க என்ன "கே" யா. அகில்? இல்லை எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் இன்னொரு ஆணை அதுவும் தன் காதலியை மணக்கப் போவனை எப்படி உங்களால் வர்ணிக்க முடியுது? உண்மையிலேயே என்னைக் காதலித்தால் எப்படி இதுபோல் சொல்ல முடியும்? உண்மை என்னனா நீங்க என்னை எப்போ கழட்டிவிடலாம்னு பார்க்குறீங்க! அதனால்த்தான் உங்களால் இப்படி பேசமுடியுது. இருந்தும் அகில், ஐ லவ் யு வித் ஆல் மை ஹார்ட்.. ஒண்ணு தெரியுமா அகில்? உலகில் எல்லாக் காதலுமே ஒருதலைக் காதல்தான். ஒருவர்தான் இன்னொருவர் மேல் உயிராக இருக்கிறார். இன்னொருவர் காதலியின்/காதலனின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதலிப்பதுபோல் நடிக்கிறார்..நம் காதலில் காதலிப்பது நான். நடிப்பது நீங்க அகில்.

 இப்படியே எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஒருவேளை அது உண்மைதானோ? ஒருவேளை அவள் மட்டும்தான் என்னைக் காதலித்தாளா? நான் சும்மா நடிச்சேனா?  கிடையவே கிடையாது. நான் ஒரு கோழை என்று வேணா ஒத்துக்கொள்வேன். அவளைக் காதலிக்கவில்லை என்று மட்டும் ஒருப்போதும் ஒத்துக்க முடியாது. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சே, காதல் கதை எழுதணும்னு நினைத்தால், சுபத்ரா ஞாபகம் வந்துவிட்டது. இப்போ எல்லாம் அவளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சுபத்ரா இன்று இன்னொருவரின் மனைவி. மேலும் ஒரு தாய். அவள் அன்று அனுப்பிய அவள் புகைப்படத்தைப் பார்த்தால்க்கூட ஒரு கில்ட்டி உணர்வுதான் வருது. அவளை ரசித்து அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகத் தோனுது. தப்புனு தோனுது..

சுபத்ராவை என்னைச் சுத்தமாக  வெறுக்க வைத்ததே நாந்தானே? எவ்வளவு  கேவலமாக நடந்து இருக்கிறேன்? திருமணம் ஆன பிறகு என்னை வெறுக்க வைப்பதுதான் அவளுக்கு நான் செய்யும் உதவி என்பதுபோல்  நினைத்துக் கொண்டு அப்படி செய்தேனா? இல்லைனா என்னை மூன்றாமவனாக அவள் உணர்வதைப் பார்த்து வந்த என்னுடைய கோபமா? பொறாமையா? எனக்கு ஏன் பொறாமை வருது? அவளைத்தான் நான் காதலிக்கவில்லைனு சொன்னாளே? அது உண்மை இல்லையா? இல்லைனா பொழுதுபோக்குக்கு அவள் இல்லை என்கிற கோபமா? மறுபடியும் அவள் நினைவு  தொடர்கிறது..

காதல் கதை ஒரு கற்பனைக் கதை எழுதலாம்னு நினைத்தால் சுபத்ரா வந்து நிக்கிறாள். ஒருவேளை என்னால் கற்பனை காதல் கதையே எழுத முடியாதா? ஏன் என் சிந்தனைகள்  சுபத்ராவை சுத்தி சுத்தியே போகிறது?

Related image
No love for you anymore dear


சரி, இன்று கற்பனைக் கதை எழுத முடியாதுபோல. அடுத்தவாரம் எழுதுவோமா? அடுத்த வாரம் அவள் பிறந்தநாள் வருது இல்லை. அது மட்டும் ஏன் மறக்க மாட்டேன் என்கிறது? ஒரு வேளை நாந்தான் சுபத்ராவை காதலித்தேனா? அவள் நடிச்சாளா? நிச்சயம் அவளுக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்காது. எனக்கு என்றுமே அவள் பிறந்த நாள் மறக்காது..

 சரி, அடுத்தவாரம் முயல்வோம் என்று காதல் கதை எழுதும் முயற்சியை 'கிவ் அப்" பண்ணினான் அகில்..

கற்பனைக் காதல் கதை எழுத அகிலின் முயற்சி தொடரும்..


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கிருந்தாலும் வாழ்க...?(!)

தொடரட்டும்...

'பசி'பரமசிவம் said...

கற்பனையான காதல் கதை எழுத முயலும்போது உண்மையான காதல் குறித்த நினைவு குறுக்கிட்டுத் தடுக்கிறது. புதுமையான கதைக்கரு. தன் முயற்சியில் கதாசிரியன் வென்றானா என்று அறியும் ஆவலைத் தூண்டியிருக்கிறீர்கள். இது உங்களின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

தொடருங்கள்.

G.M Balasubramaniam said...

எந்தக் கதையுமே முற்றிலும் கற்பனை இல்லை உண்மை நிகழ்வுகள் கற்பனை சாயலில் வலம் வருகின்றன காதல் கதைஎழுதும் போது நிஜக்காதலி வந்து கற்பனைக்கு மெருகேற்றுவதும் நடப்பதுதான் பாராட்டுகள்

M0HAM3D said...

அருமை நண்பரே