Thursday, July 14, 2011

ஜானகிராமன் பற்றி இலக்கிய மேதை ஜெயமோவன் விமர்சனம்!

மேதாவி ஜெயமோஹந்தான் நவீன தமிழ் இலக்கிய மேதையா? எல்லாத்துக்குமே இவர்தான் அத்தாரிட்டியா!! இந்த ஆளுக்கு என்ன ஒரு அகம்பாவம்னு ஜானகிராமன் நாவல்கள் பத்தி இந்தாளு விமர்சிப்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம்!

ஜானகிராமன் மறைந்த சமயத்தில், அவரை நாம் இழந்த நேரத்தில் அஞ்சலி கட்டுரை ஒண்ணு எழுதி வெளியிட்டு இருக்கார் வெங்கட் சுவாமிநாதன்! அது இங்கே கீழே இருக்கு!

[ வெங்கட் சாமிநாதன் தி.ஜானகிராமன் மறைவின்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரை]

ஒரு சிறந்த கலைஞர் மறைந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த மனிதராகவும், ரசிகராகவும் இருந்தார். இன்றைய தமிழ் எழுத்துலகில், இது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம். பண்புகளும், மனிதாபிமானமும் சாதாரண மனிதர்களிடமே காணப்படும் நிலை இன்றைய தமிழக நிலை. தி.ஜானகிராமன் மறைவு, இந்த அர்த்தத்திலும்கூட, தமிழ் கலை இலக்கிய உலகுக்குப் பெரும் இழப்பு.

இரு பெரும் இழப்புகளைப் பற்றிப் பேசினோம். அது அச்சகத்திற்குப் போய்விட்ட பிறகு மூன்றாவது பெரும் இழப்புக்கு நாம் இரையாகி நிற்கிறோம்.

நாம் இழந்த மற்ற இருவரைப்போல தி.ஜானகிராமன் கவனிக்கப்படாமல் போகவில்லை. பத்திரிகைகளும் அவர் எழுத்தின் வசீகரமும் இனிமையும் ஓரளவு பிராபல்யத்தை அவருக்குக் கொடுத்தன. ஆனால் கலைஞராக அவரைக்கண்டு கொண்டதா என்பது சந்தேகம். Jeanne Moreauவுக்கும் பரத நாட்டிய கலைஞர்களுக்கும் ஏற்படும் விபத்து இது.

சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் ‘மோகமுள்’ எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.

இன்னமும் ஒரு ஆரோக்கியமான கலையுணர்வுள்ள சூழலில் தி.ஜானகிராமன் தந்திருக்ககூடிய அளவு, அவர் தரவும் இல்லை. அவரது திறன்கள் ஒரு பூரணத்துவத்துடன் மலர, இலக்கிய சமூகம் இடம் தந்ததில்லை. சமூகத்துடன் முரட்டுத்தனமாக முரண்படும், போரிடும் சுபாவம் அவரதல்ல. இயல்பிலேயே அடங்கிப்போகும் ‘சரிதான்’ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.

அவர் எழுத்து, அவரது ரசனை, அவரது விருப்பு வெறுப்புகள் எல்லாம் - அவரது கிண்டலும், நமட்டுச் சிரிப்பும்கூட - எல்லாமே அவர் பிறந்த தஞ்சை மண்ணின் குணங்கள். அவர் தொட்டது, செய்தது எல்லாமே தஞ்சை மண்ணின் குணம் கொண்டவை.

அவர் காலத்திய அவருக்குச் சற்று மூத்த எழுத்தாளர் பலர், தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம். ஏன், ஒரு சில பத்துக்கள் முந்திய எழுத்தாளர் பெரும்பாலோர் தஞ்சை மண்ணின் பிரபுக்கள்தாம்.

ஆனால் தஞ்சை மண்ணின் விசேஷ குணமான சங்கீதம், தி.ஜானகிராமனின் எழுத்துக்களில் மலர்ந்தது போல பரப்பிலும் ஆழத்திலும் வியாபகம் பெற்றது போல வேறு எவர் எழுத்திலும் பெற்றதில்லை.

அவரது சாத்வீகம் அவரது குணத்தில் காணப்பட்ட பெண்மை, குழந்தைமை கவர்ச்சியும்தான் (’ஜிலுஜிலுப்பு’ என்று சொல்பவர்கள்தான் சொல்லக்கூடும்.) பாத்திரங்கள் எழுப்பும் ஓசை, வெங்கலத்தாம்பாளம் தரையில் வீழ்ந்தால் எழுந்து பரவி ஓயும் டங்காரம், சங்கீதத்தின் விகசிப்புதான். அன்றாடம் கேட்கும் சுற்றியுள்ள உலகத்தில் கேட்கும் ஒவ்வொரு க்ஷண சப்தமும், ஸ்வர அபஸ்வர ரூபங்களில்தான் அவர் காதில் ஒலிக்கும். அதே போல்தான் சக மனிதர்கள் அவருடன் கொள்ளும் உறவாடல் பேச்சு எல்லாம் சங்கீத ரூபமான ஸ்வர, அபஸ்வரங்களாகத்தான் அவருக்கு ஒலித்தன.

அதனால்தான் உலக வியாபகமே சங்கீதரூபம், பெண்மையும் குழந்தையும் சங்கீத ரூபங்கள் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டபொழுது, அதை உடன் உணர்ந்து சுவீகரிக்க முடிந்தது. வெகு உற்சாகத்துடன் வரவேற்க முடிந்தது அவரால்.

சங்கீத ஈடுபாடும் குழந்தைகளிடமும் பெண்மையுடனும் அவர் கொண்ட பிரேமையும், வெவ்வேறு குணங்கள் அல்ல. ஒரே குணத்தில் பல்வேறு ரூப மலர்ச்சிகள், பல்வேறு ஸ்தாயிகள், சஞ்சாரங்கள்.

————–

தமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.

தமிழின் இன்றைய உலகுக்கு இதையும்விட பன்மடங்கு அதிகம் கொச்சைப்படுத்தும் திறன் உண்டு. என்னவோ ஜானகிராமனை ஏதோ ஓரளவுக்குத்தான், தான் புரிந்து கொண்டதைக் கொச்சைப்படுத்தியது. அதன் வெறுப்பை அவர் அதிகம் சம்பாதித்துக் கொண்டதில்லை. அவரது இயல்பான சாத்வீக, அடங்கிப்போகும் குணத்தின் காரணமாக.

தஞ்சை மண்ணைவிட்டு நகர்ந்து வெகு காலமாகி விட்டது ஜானகிராமனுக்கு. ஆனால் அவர் மனமும், ஈடுபாடுகளும் தஞ்சை மண்ணைவிட்டு என்றும் அகன்றதில்லை. சென்னையில் இருந்த காலத்திலாவது தஞ்சை அவ்வளவு எட்டாத் தொலைவில் இல்லை. ஆனால் டெல்லி வந்த பிறகு டெல்லி அவரது வெறுப்புக்குத்தான் ஆளாயிற்று. என்றுமே டெல்லியில் அவர் மனம் ஒட்டியதில்லை. டெல்லியின் snobberyயும் ஓட்டாத்தன்மையும், விலகி ஒதுங்கிச் செல்லும் போக்கும் காரியார்த்த உறவாடலும் அவரில் வெறுப்பையே பிறப்பித்தது.

thija-logo4ஜப்பான், அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அவற்றில் எல்லாம் சிறந்தது ஜப்பான் அனுபவம் பற்றி அவர் எழுதிய “உதய சூரியன்.” இலக்கியத் தரத்திற்கு உயர்ந்துள்ள ஒரே பிரயாண நூல். அதற்கு முன்னும் பின்னும் இன்றுவரை அதைப்போன்ற ஒரு பிரயாண அனுபவம் தமிழில் இல்லை. ஒரு கலாபூர்வமான சமூகத்துடன் ஒரு கலைஞனின் உரையாடலாக அந்த பிரயாணம் சந்திப்பு இருந்த காரணத்தால் தான் தஞ்சை மண்ணின் குணங்கள் அனைத்தும் எவ்வாறு அவர் எழுத்திலும் வாழ்விலும் இயல்பிலும் பிரகாசித்தனவோ, அவ்வாறான ஓர் ஒன்றியைவுதான் ஜப்பானிய கலையுணர்வும் அதன் ஒவ்வொரு வாழ்வுக் கணத்திலும் பிரகாசித்திருந்தது. இல்லை, அவர்கள் இரண்டும் ஸ்ருதி சேர்ந்த நிகழ்வு, அனுபவம் அது.

எப்போது தமிழ்நாடு திரும்பப் போகிறோம் ஏன்று ஆர்வமாகக் காத்திருந்து டெல்லியில் நாட்களைக் கடத்தியவர் அவர். தஞ்சை கிராமம் ஒன்றிற்குத் திரும்பியிருந்தால், தன் திரும்பல், அந்த எதிர்நோக்கல் சென்னைக்கு அல்ல, தஞ்சை கிராமத்திற்கு என்று புரிந்திருந்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார். டெல்லி வருமுன், சென்னையில் இருந்துகொண்டே, ஆத்மார்த்தமாக தஞ்சையில் வாழும் பிரமை பெற்றது அன்று சாத்தியமானது போல (அறுபதுகளில்), இப்போது எண்பதுக்களில் சாத்தியமாகவில்லை. காலம் மாறிவிட்டதை அவர் உணரவில்லை.

எதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி சென்னை திரும்பினாரோ, அது அவ்வாறாக நிகழவில்லை. அனுபவங்கள் கசப்பாகி விட்டன என்று எங்கள் காதில் விழுகிறது இப்போது. காலம் மாறிவிட்டது. சென்னை மாறிவிட்டது.. சென்னையில் இருந்துகொண்டே தஞ்சையில் வாழ்வதானது ஐம்பதுக்களில் சாத்தியமாகியிருக்கலாம். எண்பதுகளில் அல்ல.

சென்னை எழுத்தாளர்கள் (நட்சத்திரங்கள் பிரபலங்கள்) குழாம் அவருக்கு உவப்பாகவில்லை. அவர்கள் அவரிடம் தோழமை பாராட்டவில்லை என்று தெரிகிறது. எழுத்தாளர்கள், அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கே அவருக்குத் தெரியும். “எழுத்தாளர்களோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதை விட ஒரு கறிகாய்க் கடைக்காரியுடன் பேசுவதுதான் எனக்கு விருப்பம், பாந்தமாக இருக்கிறது” என்பார் அடிக்கடி.. வாஸ்தவம். முழுக்கமுழுக்க உண்மை. கறிகாய்க்கடைக்காரி இன்னமும் தன் மனித குணங்களை இழந்தவள் இல்லை. முற்றிலும் அவள் ஒரு மனித ஜீவன். வியாபாரம் தான் செய்கிறாள் என்றாலும் வியாபாரம் செய்ய வந்த இடத்திலும் அவளிடம் மனித தோழமையை இன்னொரு சக மனித ஜீவனைக் கண்ட இயல்பான ஆதுரம் காணக் கிடைக்கும். பகட்டு இல்லை. இதற்கு நேர் எதிரானவன் தமிழ் எழுத்தாளன். மனிதாபிமானம் என்பான் இது என்பான் அது என்பான். உண்மையில் அவன் வெறும் வெறும் வியாபாரி. தன் புகழுக்காக, வெற்றிக்காக, பணத்துக்காக எதையும் செய்வான். ஆனால் பேச்சுக்கள் வேஷங்கள் எல்லாம் பெரிதாக இருக்கும். மனித குணங்களை இழந்த தொழில்காரன், வியாபாரி அவன்.

சக எழுத்தாளர் பலரின் பொறாமைக்கும் பகைமைக்கும் ஆளாகிவிட்டார், சென்னைக்குத் திரும்பிய ஜானகிராமன். உண்மையில் தனக்குக்கிட்ட வேண்டியது கிடைக்காத ஜானகிராமன், தனக்குத் தகுதியில்லாததெல்லாம் மலையாக வாய்க்கப் பெற்ற சக எழுத்தாளரின் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் இரையானார் என்று கேள்விப்படுகிறோம். இவர்களை மன்னித்து விடு என்று ஒரு இயேசு நாதர் சொல்லக்கூடும். நாங்கள் இயேசுவல்ல. சாதாரண மனிதர்கள். “தமிழ்த்தாயே இந்த இழிதகைகளை மன்னித்துவிடு” என்று கேட்க, தமிழ்த்தாயும் இல்லை. எங்களுக்கு விருப்பமும் இல்லை. இந்த இழிதகைகளை, பிராபல்யங்களாக்கும், நட்சத்திரங்களாக்கும் தமிழ்ச்சமூகம்தான் எங்கள் கண்முன் நிதர்ஸனமாயிருக்கிறது. தமிழ்த்தாய் அல்ல.

இன்றைய தமிழ் தாய் அவளுக்கு உயிரூட்டி, அழகூட்டியவர்களை என்றுமே ரட்சித்ததில்லை. “எனக்கு” “உனக்கு” என்றுஒரு ஆபாச அலங்கோலக்குழு, சாகித்ய அகாதெமி பரிசுகளைத் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டது. இருபது வருடங்கள், இருபத்து ஐந்து வருடங்களாக தமிழ்த்தாயை அசிங்கப்படுத்தியவர்கள் அவர்கள். தமிழ்த்தாய் இதைக்கண்டு முகம் சுளித்ததாகக்கூட எங்களுக்குக் கேள்வியில்லை. தமிழத்தாய் கண்டு கொள்ளாததைக் கன்னடம் கண்டுகொண்டது, அதுவும் எந்தக் கன்னட சமூகம்?

தனது அரசியல் பலத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் விளையாட்டுத்தான், டெல்லியில் 6-8 வருடங்களுக்கு முன் நடந்த கன்னட இலக்கிய சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை விழா. அது அரசியல் காரணங்களுக்கு என்றே நடத்தப்பட்ட ஒன்று என்ற போதிலும் (கலைக்கு என்றே இலக்கியத்திற்கு என்றே சொல்லி நடத்தப்படும் கலை இலக்கிய விழா எதுவும் தமிழ்நாட்டில் ஆபாசமும் அரசியலுமாக இருக்கும்) அந்த விழாதான் இரண்டு எழுத்தாளர்களைக் கௌரவித்தது. ஒருவர் தகழி சிவசங்கரன் பிள்ளை. மற்றொருவர் தி.ஜானகிராமன். தமிழ்த்தாய் செய்யத் தவறிய ஒன்றைக் கன்னடத்துச் சித்தியம்மாள்தான் செய்தாள். எப்படி நிகழ்ந்தது இது?

இதற்குச் சில வருடங்கள் பின்தான் பங்கு போட்டுக்கொள்ள வேறு ஆள், தன் ஆள் இல்லாமல் போகவே தன் ஆபாசச் செயல்களின் நாற்றம் கூவத்தை மிஞ்சவே சாகித்ய அகாடமி தன் பரிசை ஜானகிராமனுக்கு அளித்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். பல நாறுகள் மணந்தன. தன்னை அலட்சியப்படுத்திய தமிழ்த்தாய்க்கு கௌரவம் கொடுத்தார் ஜானகிராமன்.

அவர் பணியாற்றிய டெல்லி ரேடியோ டெலிவிஷன் நிலையம் Emeritus Producer ஆக்கியது ஜானகிராமனை. தமிழ் இலக்கியம் செய்யத் தவறியதைச் சம்பளத்திற்காகப் பணியாற்றிய ஸ்தாபனம் அவரை இனங்கண்டு கொண்டது. காரணம் தன் ஆபாசத்தைப் பரப்ப அங்கு ஒரு தமிழன் இல்லை.

தி.ஜானகிராமன் தமிழுக்குக் கொடுத்தது அவர் தமிழ் இலக்கிய சமூகத்திடமிருந்து பெற்றதைவிட மிக அதிகம் என்று சொன்னோம். ஆனால் அதே சமயம் அவர் தமிழுக்குத் தந்தது அவர் தரத் தகுதி கொண்டதைவிட குறைவு. அவரது திறன்கள் அவரது செயல்பாட்டுக்களைவிட அதிகம். ஏன் கொடுக்கவில்லை என்று கேட்க (தமிழ் சமூகம் அவருக்குத் தந்ததை நினைவில் கொண்டால்) நமக்கு அருகதை இல்லை.

தஞ்சை மண்ணின் பிறப்பு என்பதற்கும் மேலாக, சங்கீதம், பண்பட்ட வாழ்வியல் நோக்குகள், சம்ஸ்கிருத புலமை, இதிகாசங்களில் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லாம் வாய்க்கப்பெற்ற குடும்பத்தில் வந்தவர். இவற்றையெல்லாம் பிதிரார்ஜிதமாகப் பெற்றவர். ஆனால் இவை அவ்வளவும் ஜானகிராமனிடம் தமிழ் இலக்கியமாகக் கால்வாய் பிரிந்தது. அவர் எழுத்தில் இவை அத்தனையின் குணங்களையும் காணலாம். இலக்கியத்தில் கால் வைக்காதிருந்தால் சங்கீதத்துறையில் கால் வைத்திருக்கக்கூடும். அதற்கான பயிற்சியைப் பெற்றவர் அவர். சங்கீதவித்வானாகத்தான் ஆகவில்லை. இன்றைய சங்கீத நிலை பற்றியாவது எழுதியிருக்கலாம். அவ்வபோது அபூர்வமாக அவர் எழுதியதும் உண்டு. இலக்கிய வட்டத்தில் க்.நா.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் எழுதியுள்ளார். யாத்ராவில் எழுதும்படி அவரைக் கேட்டோம். ஒரு சில முறைகள் எழுதுகிறேன் என்று சொன்னாரே அல்லாது ஏனோ எழுதவில்லை. இந்நாட்களில் அவர் எழுதுவதே மிகவும் குறைந்துவிட்டது. 1968லேயே “போறுமே நிறைய எழுதியாச்சு. எழுதிண்டே இருக்கணுமா?” என்பார்.

சங்கீதம் ப்ற்றி எழுதியிருக்கக் கூடுமானால் அது மிகுந்த பலன் அளிக்கும் குணம் கொண்டதாக இருந்திருக்கும். எந்த நல்ல எழுத்து பற்றியும் இன்றையத் தமிழ்ச் சமூகத்தில், “பலன் அளிக்கும் குணம் கொண்டது” என்றுதான் சொல்ல முடியுமே தவிர, “பலன் அளிக்கும்” என்று சொல்ல முடியாது. இன்றைய தமிழ் சமூகத்தில் சொரணை அப்படிப்பட்டது.

இந்நிலையில் எதைச் செய்துதான் என்ன? ஓர் இடத்தில் (மலர் மஞ்சம்) “இந்த இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இந்த பிரம்மாண்ட கோபுரத்தை எழுப்பினான்?” என்று ஒரு வாசகம் வருகிறது. தஞ்சை கோபுரத்தைக் குறிப்பிடும் வார்த்தைகள் அவை. நாவலிலேயே மிக முக்கியமான கட்டத்தில் சொல்லப்படும் வார்த்தைகள். வாழ்க்கையில் ஒரு தீவிர கட்டத்தில் ஒரு திருப்பத்தை நிகழ்விக்கும் வார்த்தைகள் அவை.

இதுதான் இன்றைய தமிழ் சமூக யதார்த்தம், வானுயர்ந்த பிரம்மாண்ட கோபுரங்களின் உச்சியில் காக்கைகள்தான் உட்கார்ந்து கொண்டு விடுகின்றன. சொல்லப்படும் அர்த்தத்தில் இது ஒரு அவலம். தொடர்ந்து நிகழும் அவலம்.

ஆனால் சட்டென ஒரு பலவீன சமாதானமும் மனம் கொள்கிறது. இக்காக்கைகள் ஆபாசப்படுத்தும் காக்கைகள். கோபுரத்தின் மீது உட்கார்ந்து தம்மை உயர்த்திக் கொள்ளும் காக்கைகள் அதனை உயர்த்திய அக்கோபுரத்தை ஆபாசப்படுத்தும் காக்கைகள் போலும்.

ஆனால் கோபுரம் இன்னமும் வானுயர்ந்து நிற்கும் தன் பிரம்மாண்டத்துடன், வானைத் தொட்டுக் கொண்டு பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கும். நமது பார்வைகளை லட்சியங்களை வானுக்குச் செலுத்த கட்டாயப்படுத்தும். நமது சிறுமைகளை, ஆனால் நம் பார்வைகளின், லட்சியங்களின் பெருமையை, நீட்சியை உணர்த்தும்.

மனம் சமாதானம் கொள்கிறது.

சற்று கழித்து மறுபடியும் வேறு சில காக்கைகள் அதன் உச்சியில். கோபுரம், அதன் பிரமாண்டம் நம் பார்வைகளைத் தன்னுள் அணைத்துக் கொள்ளட்டும். நம் லட்சியங்களை உயர்த்தட்டும், முடிந்தால் காக்கைகளை மறப்போம்.

யாத்ரா (38-39), 1983.

-----------------------------------------


நம்ம மேதாவி ஜெயமோஹன் அவர் தளத்தில் இந்தக்கட்டுரையை விமர்சிப்பதுபோல ஜானகிராமன் எழுத்தை விமர்சிக்கிறார்! என்ன சொல்றார்னு பார்ப்போம்!

ஜானகிராமனைப் பற்றிய அஞ்சலி கட்டுரையில் வெ.சா சற்று மிகையாகவே சொல்கிறார். தி.ஜானகிராமன் அவரது மோகமுள் சுதேசமித்திரனில் வெளி வந்த நாள் முதலே தமிழின் இலக்கியச் சூழலில் ஓரு நட்சத்திரமாகவே இருந்தார். கடைசிவரை அந்த இடம் அழியவும் இல்லை. எப்போதும் அவரைப் பற்றி விவாதிக்கப் பட்டு, போற்றப் பட்டுக் கட்டுரைகள் வந்தபடியே இருந்தன. ஐயமிருந்தால் அக்கால சிற்றிதழ்களைப் பாருங்கள்.

ஆனால் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் அன்றைய வாசகர்கள் இரண்டாயிரம் பேர்தான். அவர்களுக்குத்தான் அவர் ஒரு முதன்மையான படைப்பாளியாக இருந்தார். அவரது தீவிரமான பாதிப்பு வண்ணதாசன், வண்ணநிலவன் என அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. அவருக்குப்பின் வந்த பலருக்கும் அவரே ஆதர்சம்.

பிற இலக்கியவாதிகளைப் போலன்றி தி.ஜானகிராமனுக்கு வெகுஜன தளத்திலும் வாசகர்கள் இருந்தார்கள்.அவரது முக்கியத்துவத்தைக் கவனித்தே விகடன் போன்ற இதழ்கள் அவரை எழுத அழைத்தன. அவ்விதழ்களில் அவர் ஓரளவு சமரசம் செய்து கொண்டே எழுதினார். செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே போன்ற நாவல்களை அவ்வாறு எழுதப் பட்டவை என்றுதான் சொல்வேன்.

எனது இன்றைய வாசிப்பில் அவை பெரும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அவரது மேதமைக்கான தடயங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த வாரம் மனதுக்குத் தோன்றுவது போல நீட்டி, நீட்டி எழுதப் பட்டவை. நடுத்தர வர்க்க வாசகர்களை அதிகம் சீண்டாமல், ஒழுக்கவியல் சார்ந்த கலவரம் அடையச் செய்து கவனம் பெறுவதற்கான முயற்சிகள் மட்டுமே அவை.

மகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஜானகிராமனை ஒப்பிடவே முடியாது. ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை.

ஜானகிராமனின் சாதனை,அவரது சிறுகதைகளில்தான். பல கதைகள் இந்திய இலக்கியத்திலேயே சிறந்தவை என்று சொல்லத் தக்கவை.

ஒருவர் இறக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அவரை மொத்த தமிழ்ச் சூழலே புறக்கணித்து விட்டது என்று சொல்வது அக்காலத்தில் இருந்த ஒரு சிற்றிதழ் வழக்கம். அது அன்றைய சூழலுக்கு எதிரான ஒரு எதிர்ப்புக் குரல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜானகிராமன் அப்படி எப்போதுமே புறக்கணிக்கப் பட்டவரல்ல. அவர்தான் சிற்றிதழ்ச் சூழலை முழுமையாக புறக்கணித்தார். விகடனின் நட்சத்திரமாக ஆக முயன்றார். அவ்வாசகர்கள் சிலர் அவரைக் ’காதல் கதாசிரியர்’ என நினைத்திருந்தால் அவர்கள் அளவில் அது பிழையும் அல்ல.

--------------------------------------

எனக்கு உண்மையிலேயே புரியலை! நாவல் எழுதுவதில் இந்த ஜெவமோவன், ஜானகிராமன் கால் தூசிக்கு சமமாவாரா?

ஜானகிராமன் புறக்கணிக்கப்பட்டதாக
வெ சா சொன்னதுக்கு காரணம் , அவருடைய தரமான எந்த நாவலுக்குமே "பாரதீய ஞான பீடம்" பரிசு கொடுக்கப்படவில்லை! என்கிற ஆதங்கம் ஜெ மோஹனுக்கு புரியலையா?. அதாவது சிவாஜிக்கு நேஷனல் அவார்ட் கொடுக்கப்படாதது போல!

சந்தடி சாக்குல, ஜானகிராமனுக்கு "நாவல்" எழுதவே தெரியாது, நாவல்னா என்னனே தெரியுமோ என்னவோ என்பது போலவும், இவரு ஏதோ நாவல் எழுதியே பெரிய நோபல் பரிசு பெற்ற மேதை போலவும் விமர்சிக்கிறார்!!

"ஜானகிராமனை வங்க, ஹிந்தி எழுத்தாளர்களுடன் ஒப்பிடவே முடியாது" என்று இஷ்டத்துக்கு போட்டு கவுத்துறாரு இந்த மேதாவி ஜெ மோ! எல்லாம் நேரம்தான் போங்க!

No comments: