Friday, May 22, 2015

ஐ டி தம்பதி தற்கொலை! வினவு சகா கண்ணீர்!

எவன் செத்தாலும் வந்து "கண்ணீர் விட்டுக் கதறி அழ"னு ஒரு சில பேரு இருப்பானுக. இவனுகளுக்கு அழுவது ஒரு தொழில். பதிவுலகில் அந்தத் தொழில் நல்லாப் பண்ணுறவனுக யாருனு கேட்டால்.. இந்த வினவுனு ஒரு தளம் நடத்துறவனுக!

ராதா கிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினர் ரெண்டு பேரும் ஐ டி கம்பெனில வேலை பார்த்தாங்களாம்! நெறைய சம்பாரிச்சாங்களாம். திடீர்னு ரெண்டு பேருக்கும் வேலை போயிடுச்சாம். உடனே  இந்த ஐ டி கம்பெனி வேலையில்லாமல் இவர்கள் மனம் உடைந்து, சுக்கு நூறாகி  இந்த உலகில் வாழ வழிதெரியாமல் புத்தி பேதலிச்சுப் போயி தற்கொலை பண்ணிச் செத்துட்டாங்களாம். அதுவும் ஆறு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, ரெண்டு பேரும் "பொறுப்பாக"ப் போய் சேர்ந்துட்டாங்களாம்!

வினவு தளத்தில் வந்த கண்ணீர் கதை இது!

ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் தம்பதியினர் தங்களது 6 மாதக் குழந்தையுடன் சென்னை தில்லைகங்கா நகரில் வசித்து வந்தனர். மே 20, 2015 அன்று காலை ராதாகிருஷ்ணன் பழவந்தாங்கல் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் போலீசால் மீட்கப்பட்டது. முன்னதாக, ஜாக்குலின் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அவர்களது ஆறு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு இந்த இளம் தம்பதியினர் இந்த கொடூரமான முடிவை எடுத்திருக்கின்றனர்.
ஜாக்குலின், ராதாகிருஷ்ணன் இருவரும் ஒரே ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்திருக்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் பணி புரிந்த நிறுவனத்தினால் வெளிநாட்டில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக ஐ.டி துறையில் அதிகரித்து வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, அவர் வெளிநாட்டிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு, எந்த வேலையும் கொடுக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜாக்குலினும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தத் துயர சம்பவம் ஐ.டி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மார்ச் மாதம் இதே போன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 2 ஐ.டி துறை இளைஞர்கள் அப்ரைசல் மன அழுத்தம் தாங்க முடியாமல் எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவற்றைப் போன்ற பல தற்கொலைகள் செய்தியாக வெளிவராமல் மூடி மறைக்கப்படுகின்றன.
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
டி.சி.எஸ், சின்டெல் போன்ற ஐ.டி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக கொத்துக் கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதையும், அதன் விளைவாக தற்கொலைகள் அதிகரிப்பதையும் அறிந்துள்ள தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
டி.சி.எஸ். சில் 25 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது.
.
ஐ டி வேலை பண்ணுறவங்களுக்கு இன்னுமா புரியவில்லை?  வேலைனு ஒண்ணு கெடச்சதுனா அது போகவும்தான் செய்யும்! எப்ப வேணா போகலாம்! இதெல்லாம் சாதாரணமாக மேலை நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கு. அமெரிக்கர்களுக்கும் இதே நிலைதான். ஏன் அமெரிக்கா எல்லாம் போக வேணாம். இங்கேயே கொடிகட்டி பறந்த நடிகர், நடிகையர். பாடகர்  இப்போ என்ன பண்ணுறாங்கனு பாருங்க! மேலை நாடுகளில் அவன் அவன் வயதான காலத்தில் படிச்சதுக்கும், வேலை அனுபவத்துக்கும் சம்மந்தமே இல்லாத வேலை எடுத்துக் கொண்டுதான் பொழைப்பை ஓட்டுறானுக. ஏனென்றால் டெய்லி சாப்பிடப் பணம் வேணும் இல்லையா? ஒரு சிலர் பேங்க்ரப்ஸி ஃபைல் பண்ணுகிறார்கள்.  மேலை நாடுகள் வாழ்க்கைத் தரத்தில் வாழும் ஐ டி கம்யுனிட்டிலயும் இதுபோல் ஒரு சூழல் வரத்தான் செய்யும். ஐ டி வேலை போனா, அந்த பொருளாதார மாற்றத்துக்கு ஏற்ப தன்னை, தன் வாழ்க்கையை மாற்றிக்க முடியாமல் வாழமுடியாமல் தற்கொலை செய்து சாகணுமா என்ன? அதுவும் ஒரு பச்சைக்குழந்தையைப் பெத்து அதை உயிரோட விட்டுவிட்டு இவர்கள் இருவரும் பரலோகத்தில் போயி ஐ டி வேலை பார்க்க போயிட்டாங்களாம்!

சரி, ஐ டி வேலை போனா என்ன இப்போ? கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொஞ்ச நாள் சரவணபவன்ல போயி சர்வரா வேலை செய்ய வேண்டியதுதானே? இல்லைனா ஒரு ஆட்டோ ஓட்டு! அந்தம்மா யாருக்காவது நாலு பிள்ளைங்களுக்கு ட்யூஷன் எடுக்க வேண்டியதுதானே? அதெல்லாம் வேலை இல்லையா என்ன? அதெல்லாம் செய்றவன் அதற்கேத்த சம்பளம் வாங்கி சாப்பிடலையா என்ன? அவனும் வாழவில்லையா? அவனுக்கும் சுயமரியாதை இருக்கத்தான் செய்யுது. இல்லையா? அதெல்லாம் தெரியாதா? நான் ஐ டி வேலைதான் பார்ப்பேன் எனக்கு லட்ச லட்சமா பணம் வேணும். இல்லைனா என்னால வாழ முடியாதுனா,  செத்துத் தொலை! உன் பிள்ளை அனாதையா அலையட்டும்!

மறந்துட்டேனே..இருக்கவே இருக்கானுக ஊருக்காக  ஒப்பாரி வைக்கும் வினவு சகாக்கள்.  அவனுக பொழைப்பை ஓட்ட, ஆடம்பர வாழ்க்கை இல்லாததால  நீ செத்து தொலைந்ததுக்காகவும்  அமெரிக்காவை திட்டி, அரசாஙக்த்தைத் திட்டி பதிவெழுதி எழவைக் கூட்டிவிட்டு. உன் பிள்ளையையும்  வளர்த்து ஆளாக்குவானுக!

12 comments:

எழுத்தாளர் நீலன் said...

வேலை போய்விட்டது என தற்கொலை செய்பவர்கள் உண்மையில் கோழைகள் தான். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த போது, பெற்றோர்கள் எல்லோரும் குதூகலித்து போட்டி கொடுக்கிறத பார்த்த போது சிரிப்புத் தான் வந்தது. இந்த தேர்வின் வெற்றியால் வாழ்க்கையிலேயே வென்றுவிடலாம் என்ற நப்பாசை அனைவரது கண்களில் இருந்தன. அடுத்து விரும்பிய குரூப், அப்புறம் +2, அப்புறம் எஞ்சினியரிங், மெடிக்கல் என எதோ ஒரு பணம் கொழிக்கும் படிப்பு, அப்புறம் செக்கு மாடு போல சுற்றி சுற்றி அதனோடு ஒரு வேலை இதுவே வாழ்க்கை என்ற வண்டிக் குதிரைகள் போல கண்கள் கட்டப்பட்டு ஓடுவார்கள். எங்கேயாவது வாழ்வில் ஓரிடத்தில் தடுக்கி விழும் போது எழுந்து நிற்கவோ சமாளிக்கவோ இவர்களால் முடிவதில்லை. அதற்கான உரத்தை மனதில் இந்த சமூகமும், கல்வி நிலையங்களும், பெற்றோர்களும் விதைப்பதில்லை. விளைவு கனவுலக வாழ்க்கை, ஆடம்பர கார் பங்களா என ஜாலியாக வாழலாம் என போகும் போக்கில் எங்காவது சறுக்கும் போது தற்கொலை செய்வது மனம் ஒடிந்து போவதும் என்ற நிலை தான் வரும்.

உண்மையில் எவ்வித மூலதனமும் இன்றி சென்னைக்கு வந்து இன்று பெரும் வெற்றியாளர்களாக எவ்வளவோ பேர் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்க வேண்டும். எல்லா தோல்விகளையும் சந்தித்துவிட்டு கடுமையாக உழைத்து நாலு வீடு, நாலு கடை வைத்திருந்த எங்கள் பக்கத்து வீட்டு மேஷ்திரி தாத்தாவை பார்த்த போது எனக்கே வியப்பாக இருந்தது. வாழ்க்கையில் தோல்வியையும், தோல்வியை சமாளித்து மீண்டு எழுதவையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் வெற்றியை மற்றும் போதித்துக் கொண்டிருக்கின்றோம் நாம். என்ன செய்ய?

முகுந்த் அம்மா said...

Well said..even those in IT field are well prepared to face recession and job loss. They predict it and act accordingly. If one loses a job, It's not the end of the world. As you said, there are plenty of jobs one can do..

bandhu said...

நான் ஐ டி வேலைதான் பார்ப்பேன்..ஏன்னா எனக்கு வேற எதுவும் தெரியாது -ன்ற மனநிலை தான் அதிகம்.. இன்பாக்ட்.. வேற வேலை பார்க்கலாம்.. அப்படின்னு கூட தோணாது.. மற்றவர்களுடன் டிஸ்கஸ் செய்திருந்தால் தெரிய வந்திருக்கலாம்.. but , நான் பலமுறை பார்த்த விஷயம்.. What is not that common among people is.. common sense!

விசுAWESOME said...

முட்டாள்தனமான கோழைத்தனமான முடிவு... அப்படி என்ன ஐ டி? பிழைக்க எவ்வளவோ வழி இறக்கும் போது.. ஒரு 6 மாத குழந்தையை தனியா தவிக்க விட்டு... என்னத்த சொல்றது...

திண்டுக்கல் தனபாலன் said...

இவர்களுக்கெல்லாம் எதற்கு குழந்தை...? படுபாவிகள்...

எழுத்தாளர் நீலன் said...

இங்கு மற்றுமொன்றையும் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். நான் கனடாவில் ஆறு ஆண்டுகள் வாழ்கின்றேன். இந்தியாவில் இருந்து வரும் போது பட்ட படிப்பு நல்ல வேலை என்ற கனவில் வந்தவன் தான். வந்து கொஞ்ச நாளில் பணியிழப்பு ஏற்பட்டது. அதனால் பண நெருக்கடி, மன அழுத்தம் எல்லாவற்றையும் சந்தித்தேன். அப்போது எனக்கு வேறு வேலையும் தெரியாது, இறங்கி வேலை செய்யவும் மனமில்லை. ஆனால் தற்கொலைக்கு போகவில்லை, ஏனெனில் வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் என்ற ஒரு பழம் பாடல் தான். ஆம் ! அதன் பின்னர் நான் பல வேலைகளை செய்திருக்கின்றேன். கார் துடைத்துவிடுவது, கழிப்பறை கழுவுவது, பெட்ரோல் பங்கில் வேலை, இரவில் செக்யூரிட்டி வேலை, ரெஸ்டாரண்டு வேலை ஒவ்வொரு வேலை செய்யும் போதும் நான் மனதில் நினைத்துக் கொள்வது நான் திருடவில்லை, பொய் சொல்லவில்லை ஒரு வேலையை செய்கின்றேன். இதனால் எனக்கு உணவும், உறக்கமும் உத்தரவாதமாகின்றது. அதே சமயம் இதுவே நிரந்தரமும் இல்லை என மனதில் இருத்திக் கொண்டேன். அதன் பின்னர் இங்கு என்ன வேலை கிடைக்கும் அதை எப்படி பெறலாம் என ஆராய்ந்தேன். அதற்கேற்ற படிப்பை படித்தேன், அதன் வழியில் முயன்று ஓரளவு நல்ல கௌரவமான வேலையில் அமர்ந்திருக்கின்றேன்.

இவ்வாறான மன உணர்வை எனக்கு அளித்த என் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். இதுவே என் கனவு வாழ்க்கை என வந்த எனக்கு வேலை பறிபோன போது தலைக்கு மேல் கடன், வேறு வழியோ, துணையோ இல்லை. விற்க சொத்து பத்தும் கிடையாது, கைகொடுக்க உறவும், நண்பர்களும் இல்லை. ஆனால் கடந்தேன் எல்லாவற்றையும் கடந்தேன். ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் பெருமைக்காக அல்ல, தற்கொலை தான் முடிவு என கருதும் சிலருக்காக.

உலகில் எங்கும் விட இந்தியாவில் வாழலாம், நிச்சயம் அங்கு எப்படியும் சமாளித்து வாழும் சூழல் உண்டு. அது மட்டுமின்றி அங்கு வாய்ப்புக்கள் மிக அதிகம். கனடா, அமெரிக்காவில் ஒரு பெட்டிக் கடை வைக்கவே பெரும் பாடும், பணமும் தேவை. இந்தியாவில் சாதாரணமாக தொடங்கி கடுமையாக உழைத்தால் முன்னேறலாம். அங்கும் பல தடைகள் உள்ளன. ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டும். எங்கும் நம்மால் வாழ இயலும், இது தான் மனித குணம். மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்சமும்.

Iniya said...

வருண் இன் நிகழ்ச்சி கண்டு வேதனையாகவே உள்ளது மேலை நாடுகளில் என் நேரமும் வேலை பறிபோகலாம் இன் நிலையை எந்த நிமிடமும் யாரும் எதிர்பார்க்கலாம்.அத்துடன் எந்த வேலையையும் செய்யவும் ஆயத்தமாக இருப்பார்கள் அநேகர் அதனால் இழுக்கும் இல்லை. ஆனால் இந்தியாவிலோ இலங்கையிலோ அப்படி எண்ணும் நிலை உண்டாகவில்லை அது பெருத்த அவமானத்தை யல்லவா அளிக்கும்.அதனால் உயிரை விட்டு மானத்தை காப்பற்றி விட்டார்கள். ஆனால் குழந்தை பிச்சை எடுப்பது பற்றி கவலை இல்லை. ம்..ம் யாரை நோவது. என்ன தான் இருந்தாலும் மன நிலைகள் வேறு வேறு அல்லவா வருண்.

பத்து ரூபாய் கடன் என்றால் பதறிடுவான் ஒருவன் பத்துலட்சம் பெற்றவனோ புன்முறுவல் புரிவான்.

கிரி said...

கொஞ்சம் ஹார்ஷா கூறி இருந்தாலும் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

வசதியாக வாழ! கடன்களை அதிகரித்திக்கொண்டே செல்வதால் எவ்வளவு சம்பாதித்தாலும் நிம்மதியில்லை. இது தான் பிரச்சனை.

அதோடு வசதியாக வாழ்ந்து எப்படி வேறு வேலைகளைச் செய்வது, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சுயகவுரவம்!! தடுப்பதே இது போன்ற நிலைக்குக் காரணம்.

இந்த நிலையை தவிர்க்க முடியாது என்றாலும் தற்கொலை என்ற கோழைத் தனமான முடிவிற்கு முன் எந்த வேலையும் இழிவான வேலை இல்லை. முயற்சி இருந்தால் தற்போது இல்லையென்றாலும் பின்னாளில் நிச்சயம் முன்னேற முடியும்.

அந்தக் குழந்தைக்காக பரிதாப்படுகிறேன்.

G.M Balasubramaniam said...

வாழ்க்கையை உயரத்தில் இருந்தே அனுபவித்தவர்களுக்கு கீழே வீழ்ந்தால் எழ சக்தி இல்லை. தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்

Mythily kasthuri rengan said...

வருண்!!! சத்தியமா சொல்றேன் இப்போ நான் கொஞ்ச நேரத்தில் எழுதப்போற topic பத்தி ப்ளான் பண்ணி ரெண்டு வாரம் ஆச்சு. எனக்கு இனிக்கு தான் டைம் கெடச்சது!!!!! ஏன் இப்டி புலம்புறேனு பாக்கிறீங்களா? நான் எழுதபோற தலைப்பு " தற்கொலை பண்ணிக்க போறீங்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ் "

எப்படி சகா இப்படி!!??

so தனியா என்ன கருத்து சொல்றது. பதிவிலே சொல்லிடுறேனே:))

S.P. Senthil Kumar said...

இன்றைய இளைஞர்களுக்கு தோல்வியை எதிர்கொள்ளும் திறனை நாம் கற்றுத்தரவில்லை என்றே தோன்றுகிறது. வசை சொற்கள் அதிகம் இருந்தாலும் மிக நல்ல பதிவு!

காரிகன் said...

வருண்,

மிக உஷ்ணமான பதிவு. ஆனால் சொல்லும் கருத்து தேவையானதுதான்.

வினவு தளம் பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. அமெரிக்காவை திட்டாமல் பொதுவுடைமை பேச முடியுமா என்ன?