Thursday, September 6, 2018

ரெண்டாவது முறை அவ(ள்)மானம் !

அவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு  அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை.  அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி! எத்தனை மட்டமான ஆள் இவன்! இவனைப்போயி கல்யாணம் பண்ணி இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோமே? என்று அழுகை அழுகையாக வந்தது

அபர்ணா அவளுடைய பாய்ஃப்ரெண்டுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.

"வினோத்! நான் அந்தாளோடு வாழ முடியாது. அவன் மிகவும் கேவலமான ஜென்மம்" என்று.

ஆனால் அவள் பாய்ஃப்ரெண்ட் வினோத்திடம் இருந்து உடனே பதில் வரவில்லை!

"நம்ம விசயம் தெரிந்து விட்டதா?" என்று சில மணிநேரங்கள் கழித்து வந்தது.

"ஆமா,அதனாலென்ன இப்போ? இவனோட இனிமேல் வாழ முடியாது. என்ன சொன்னான் தெரியுமா அவன்? இந்தாளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கு. அவன் சொன்னதை நினைத்தால் .."

அவள் கணவன் அப்படி என்னதான் அபர்ணாவிடம் சொன்னான்? என்று அவன் கேக்கவில்லை! அவனுக்கு ஏனோ பயம். அவளும் அதைச் சொல்லவில்லை!

அபர்ணாவைப் பொறுத்தவரையில் தவறான ஆளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். வர வர அவனைப் பார்த்தால் அவளூக்குக் காதலோ காமமோ வரவில்லை. பாய்ஃப்ரெண்ட் வினோத்தான் தெய்வீக காதலனாகத் தெரிந்தான். அவனுடன் வைத்திருக்கும் "அந்த உறவு" அவளுக்குத் தவறாகத் தோணவில்லை. அவனுக்கும் அபர்ணா இனித்தாள்.

வினோத் மனைவி, லலிதா,  வினோத்தை மனிதனாக மதிப்பதே இல்லை. படுக்கையிலும் சரி, சாதாரண உரையாடல்கள் போதும் சரி ஏதோ ஒரு உதவாக்கரைபோல் அவனைப் பார்ப்பாள்.

அபர்ணா வினோத்  இருவருக்குமே தன் கணவனை
/மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் தெய்வீக காதலன்/காதலியுடன் உலக நியதிப் படி மணந்து ஒன்று சேர இயலவில்லை. குடும்ப சூழல். பெற்றோர் மனம் நொந்துவிடுவார்கள் என்கிற பயம். மேலும் இருவரும் கோழைகள்.  இதுபோல் வைத்துள்ள தகாத உறவுதான் தெய்வீகமாகத் தோன்றியது.

அபர்ணாவிடம் அவள் கணவன் சொன்னது மறுபடியும் அவளுக்கு ஞாபகம் வந்தது. "அபர்ணா! உனக்கு என்னைப் பிடிக்கலைனா விவாகரத்து செய்து இருக்கலாம். இன்னொருத்தந்தான் இனிக்கிறான்னா அவனோட பர்மணன்ட்டா நீ போயி செட்டில் ஆக ஆயத்தம் செய்து இருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு.. சரி இருந்துட்டுப் போகட்டும். உனக்கு இப்படியே  தொடருணும்னு நீ எதிர்பார்த்தால், ஒண்ணு வேணா செய்யலாம்..னு  சொல்லி கூச்சமே இல்லாமல் "அதை" அவள் இடம் சாதாரணமாகச்  சொன்னான். அவளால் அதை இப்போவும் அதை மட்டும் ஜீரணீக்கவே முடியவில்லை. ஏனோ அவளுக்கு அவமானமாக இருந்தது.

சில நாட்களில், அவள் கணவனே, அவங்க அப்பார்ட்மென்ட்ல இருந்து மூவ் அவ்ட் பண்ணினான்.  சீக்கிரமே விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினான். "அவனுக்கு அபர்ணாவைப் பிடிக்கவில்லை. அவள் மேல் எந்தவிதமான அட்ராக்சனும் இல்லை. வாழ்க்கையில் தெரியாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் " என்று அவள் நினைத்ததையே அவன் சொன்னான், அந்த  விவாகரத்து பத்திரத்தில். ஆனால் ஏனோ அவன் இவளிடம் குறை இருப்பதுபோல் சொல்வது அபர்ணாவுக்கு அவமானமாக இருந்தது.

விவாகரத்து நோட்டிஸை பார்த்த அபர்ணாவின் பெற்றோர்கள், அவளை விட்டுவிட்டு அவள்  கணவனை கரிச்சுக் கொட்டினார்கள். "இனிமேல் நீ இவனோட வாழ வேண்டியதில்லை" என்றார்கள். ஒரு வழியாக அவர்கள் விவாகரத்து முடிந்தது. ரெண்டு வருட மண உறவில் இருவருக்கும் குழந்தை இல்லாதது வசதியாகப் போய்விட்டது.

எல்லாம் முடிந்த பிறகு, வினோத்திடம், "அவன் மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய" ச் சொல்லி சொன்னாள் அபர்ணா. வினோத், இவளுக்கு விவாகரத்து ஆன உடனேயே அபர்ணாவிடம் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அவள், லலிதாவை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரித்ததும், அவனால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லி கொஞ்ச நாள் தட்டிக்கழித்துப் பார்த்தான். அபர்ணாவுக்கு அவள் கணவனிடம் இருந்து கிடைத்த விடுதலை வினோத்தை அப்படி எதுவும் சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை. கடைசியில் வேற வழியே இல்லாமல், வினோத் லலிதாவை ஒரு வழியாக விவாகரத்து செய்தான்.

அபர்ணாவும் வினோத்தும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆறு மாதத்திலேயே இருவருக்கும் இடையில்  புதுப் புதுப் பிரச்சினைகள் வர ஆரம்பித்து விட்டது. எவ்விதத் தடையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அன்புக் காதலனுடன் சேர்ந்தவுடன், அவன் என்னவோ ரொம்பச்  சாதாரணமான ஆம்பளையாகத் தெரிந்தான், அபர்ணாவுக்கு அவர்கள் உறவில் இருந்த அந்த த்ரில் எல்லாம் போயி எல்லாம் ஏனோ தானோ என்று அலையில்லாத கடலில் குளிப்பதுபோல் போனது.

ஒரு நாள் ஆவலுடன் படுக்கை அறையில் இருக்கும்போது,  வினோத்தும் தயங்கி தயங்கி "அதையே"  அவள் கணவன் சொன்ன அருவருப்பானதை  ஜாடையாக அவளிடம் சொன்னான், ஒரு மாதிரியாக! ஆமாம், அவள் கணவன் கோபமாக இவளை அவமானப்படுத்த சொன்ன "அதை"யே!! அவளுக்கு இரண்டாம் முறையாக அவ(ள்)மானம். ஆனால் இம்முறை அபர்ணா அழவில்லை. அபர்ணாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

முற்றும்

8 comments:

ஸ்ரீராம். said...

நிதர்சனம்.

அடுத்தவர் பலவீனங்கள் தன்னைப் பாதிக்காத வரை இனிக்கும். நெருங்கி வாழும்போது இடிக்கும். காதல் திருமணங்களிலேயே இது சகஜம்.

ஆனால் அந்த "அது" தான் என்ன!

'பசி'பரமசிவம் said...

அபர்ணாவின் கதை அனைத்துக் குடும்பிகளுக்குமான படிப்பினைக் கதை.

G.M Balasubramaniam said...

அந்த அது ஒரு வேளை அவளது யலாமையோ ( frigidity? )

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***'பசி'பரமசிவம் said...

அபர்ணாவின் கதை அனைத்துக் குடும்பிகளுக்குமான படிப்பினைக் கதை.***

இவர்கள எல்லாம் திருத்த முடியாது சார். நாம் சொல்ல வேண்டியதை சொல்லிடுவோம், அது நம் கடமை. அதை எடுத்துக் கொள்வது அல்லது புறக்கணீப்பது அவரவர் உரிமை.

வருண் said...

***G.M Balasubramaniam said...

அந்த அது ஒரு வேளை அவளது யலாமையோ ( frigidity? )***

"அதை" வாசகர் சிந்தனைக்கு விட்டுவிட்டேன் சார். ஒரு கதை படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஹீரோயினை எப்படி இருப்பாள் என்றூ எழுத்தாளன் எப்படியெல்லாம் வர்ணீத்தாலும், ஒவ்வொருவர் சிந்தனையிலும் பார்க்கும் பெண் அவள் வேறூ வேறூ உருவம் பெற்றவள் தான். அது போல்தான் "அதுவும்' சார். கருத்துக்கு நன்றீ சார். :)

வருண் said...

***ஸ்ரீராம். said...

நிதர்சனம்.

அடுத்தவர் பலவீனங்கள் தன்னைப் பாதிக்காத வரை இனிக்கும். நெருங்கி வாழும்போது இடிக்கும். காதல் திருமணங்களிலேயே இது சகஜம்.

ஆனால் அந்த "அது" தான் என்ன!****

வாங்க, ஶ்ரீராம்!

இதுபோல் கதைகள் எழுத நான் தயங்குவதுண்டு. ஆனால் இன்றூ தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள், "பெண் புத்தி பின் புத்தி" என்பதைக் கூட நியாயப் படுத்தும் அளவில் இருக்கிறது- நம் கொலைகார "அபிராமிகள' பார்க்கும்போது.

'அது" என்னனு எழுத முயன்றூ தோற்றேன் என்றால் நம்பமாட்டீங்க!

Avargal Unmaigal said...

@ஸ்ரீராம்
///காதல் திருமணங்களிலேயே இது சகஜம்.///

இந்த கால அரேஞ்டு திருமணங்களிலும் இது சகஜம்தான்.....


சொல்லப்போனால் திருமண வாழ்க்கையின் மதிப்பு தெரியாதவர்களுக்கு இது சகஜம்தான்