Friday, August 15, 2008

மங்கை உள்ளம் பொங்கும்போது...

சுகன்யாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. காஃபி எடுத்து கொடுத்த அட்டண்டண்ட்க்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் காஃபியை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தாள். வெயில் அதிகமாக இருப்பதால் ஒரு சல்வார் காமிஸ் அணிந்து வந்திருந்தாள். இவளுடைய இந்திய ட்ரஸை வழக்கம்போல ஒரு சிலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். 46 வயதிலும் அவள் அழகு, பல ஆண்களை கவர்வதை மற்றவர்களின் பார்வையிலேயே உணர்ந்தாள். மற்ற ஆண்கள் தன்னைப்பார்ப்பதை ரசிக்கும் அவளுக்கு, அதே பார்வை இன்று தன்னை மணந்த கணவன் தன்னைப்பார்த்தால் மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை!

இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. ஆனால் இந்த விடுமுறை நாளில் அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற 4-மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் பண்ணினால் புற்றுநோய் வரும்னு தெரியாத விஞ்ஞானி? பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் தான் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிந்தது! இதில் கடவுளை தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!

மனுஷாளை மனுஷா புரிந்து கொள்ளனும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத ஜென்மம் இவர்! முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளை மட்டும் இவருக்கு புரிந்தது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்பினார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால், கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார் போலும்.

இவருக்கு மனைவி வேண்டும்! எதற்கு? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத்தேவையான நேரத்தில் இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி நான் பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது? எப்படி சாப்பிடுவது? இவர் வேலைக்குப்போய் இவரோட பகவானா வந்து கட்டுவான், இவர் கொடுக்கிற பூ வழிபாடு,புகழ்ச்சியெல்லாம் கேட்டு? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா கடவுள்? இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கூட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?

இந்த ஆளோட எப்படி வாழ்வது?. சரி உன்னைப்பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம் இவருக்கு? இதில் கேள்வி வேற! அப்போ ஏன் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லைனு. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியனும். ஒன்று மட்டும் புரிந்தது இவளுக்கு! இந்த ஆளு இவளையும் வாழ விட மாட்டான், இவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !

இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள்,சுகன்யா. அதிசயமாக இருந்தது அதை நினைத்தால் இப்போது அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது. இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே அவரை கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது சுத்தமாகப்பிடிக்கவில்லை. எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!

பசங்கள் இருவருக்குமே இவளைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ. அங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரனும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளனும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அசிங்கமான அந்தரங்கப்பகுதி. அவர்களிடம் சொல்ல முடியுமா, அவருடன் "தாம்பத்யஇன்பம்" அனுபவிப்பதைவிட ”சுய உதவி” பலமடங்கு இன்பம் தருகிறது என்று? அவர்களுக்குத்தான் இவள் இதை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமா? அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் இவர்கள் அப்பாவை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?

சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான சாடிஸ்டா இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா அவரைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறான் பாவி! ஆமாம் இவர்தான் இந்த வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா?

சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை. உன் வாழ்க்கை, நீதான் முடிவு பண்ணனும் என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸை கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப்போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் போர்ன் பார்ப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே? ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம். அப்படி நடந்தால் ஊர் உலகம் இவருக்கு சிலையும் அவளுக்கு கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் என்று நம்பினாள், சுகன்யா.

எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப்பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழனும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கனும் என்று நினைப்பது பேராசையா? அவளுக்கு புரியவில்லை! சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பது சும்மா வெறும் அர்த்தமில்லாத பாடல் வரி- சுகன்யாவைப் பொருத்தமட்டில். காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் அவள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!

diclaimer: இது கற்பனைக் கதைதான்!

குறிப்பு: என்னுடைய அபிமான விமர்சகர், இதை அவ்வளவு ரசிக்கவில்லை. இதென்ன கதையா கட்டுரையா என்று கேட்டு விழிக்கிறார். அமெரிக்காவில் நிறைய விவாகரத்துக்கு காரணம் பணப்பிரச்சினை, மற்றதெல்லாம் பிறகுதான்.

31 comments:

வெண்பூ said...

மன்னிக்க வேண்டும் கயல். எனக்கு இந்த கதை உங்களிடமிருந்து வந்ததில் சில வருத்தங்கள்.

1. இது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது. உங்களின் சில‌ கடந்த கால நினைவுகள் ஆண்களையே வெறுக்க வைக்கிறதோ என்று எண்ணவைக்கிறது இந்த கதை / கட்டுரை.
2. உங்கள் கதைகளில் காமம் சிறிது அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது.

தவறாக தோன்றினால் மன்னிக்கவும்.

கயல்விழி said...

வெண்பூ
1. அந்தக்கதை நான் எழுதியதில்லை, வருணுடையது. :)

2. ஒரு முக்கியமான விஷயம்: ஆண்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை, அந்த நினைவலைகளின் ஒரு பக்கத்தை மட்டுமே எழுதி இருக்கிறேன், எனவே பெண்ணியக்கட்டுரைப்போல தோன்றும்.மற்றொரு பக்கத்தைப்பற்றி எழுதும் போது பேலன்ஸ்டாக இருக்கும்.

3. வருண் குறிப்பிட்ட அந்த விமர்சகர் நான் தான் :)

கயல்விழி said...

//என்னுடைய அபிமான விமர்சகர், இதை அவ்வளவு ரசிக்கவில்லை. இதென்ன கதையா கட்டுரையா என்று கேட்டு விழிக்கிறார். அமெரிக்காவில் நிறைய விவாகரத்துக்கு காரணம் பணப்பிரச்சினை, மற்றதெல்லாம் பிறகுதான். //

வருண்

இந்த கதையில் சுகன்யா மீது அனுதாபம் வருவதை விட, எரிச்சலே மிஞ்சுகிறது(ஒருவேளை கதையின் நோக்கம் கதாநாயகியின் மேல் கோபம் வரவழைப்பது தான் என்றால் பரவாயில்லை).

கதாநாயகி, பணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் தருகிறார். பணத்தை விட முக்கியமானது பல இருக்கையில் இது தேவையே இல்லாதது. மேலும் கதை சுகன்யாவின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிதே தவிர, ராகவனின் கருத்துக்களைக்குறித்து ஒரு குறிப்பும் இல்லை.

கதையின் நோக்கம், கதாநாயகியின் "Shallow" குணத்தை படம் பிடித்து காட்டுவதென்றால், Mission accomplished!

வெண்பூ said...

விளக்கத்திற்கு நன்றி கயல். மன்னிக்கவும் வருண். நான் இந்த ப்ளாக்கை, கயல் பெயரில் எனது ரீடரில் பதிந்திருக்கிறேன், அதனால் வந்த குழப்பம் இது.

இது ஒரு ஆண் எழுதியது என்பது எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதைவிட ஆச்சரியம் கயல் எனக்கு எழுதிய பதிலை பார்த்துவிட்டு மறுபடியும் படித்தால், கதை முற்றிலும் புதிய பரிணாமத்தில் தெரிகிறது (சுகன்யாவை தவறாக நினைக்கும் அளவிற்கு)

மொத்தத்தில் I am lost :)))

manikandan said...

நல்லா எழுதி இருக்கீங்க வருண். வார்த்தை பிரயோகம் எல்லாம் பிரமாதம்.

PHD ய விட MS க்கு வேல வாய்ப்பு அதிகமா ?

25 வருட தாம்பத்ய வாழ்க்தைல வர்ற அலுப்பு, வெறுப்பு எல்லாம் அழகா படம் பிடிச்சி காட்டி இருக்கீங்க. (சுகன்யாவ வச்சி). ஒரு வட்டத்துல சிக்கி இருக்கற போது வெளில வருகிற கஷ்டத்தையும் புரிய வச்சி இருக்கீங்க.

manikandan said...

******ஆண்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை, அந்த நினைவலைகளின் ஒரு பக்கத்தை மட்டுமே எழுதி இருக்கிறேன்*****

கயல்விழி, அதே மாதிரி சுகன்யாவோட கோணத்துல இந்த கதைய படிச்சி பாருங்க.

manikandan said...

வெண்பூ, கயல்விழி,

இந்த கதைய படிச்சுட்டு எப்படி ஒருத்தர தவறா நினைக்க முடியுது ? இதுல ஒரே ஒரு பொண்ணோட மனவெளிப்பாட மட்டும் தான் எழுதி இருக்காரு.

கணவன் மனைவி கிட்ட உள்ள புரிதல் குறித்தது.

சுகன்யா சுயபச்சாதாபம்
கணவன் ஆன்மிகம்

Sundar சுந்தர் said...

செம கஷ்டமான சப்ஜக்ட் எடுத்து இருக்கீங்க - ரொம்ப சுருக்கமா முடிக்க பார்கறீங்க. காரணங்கள், பாத்திரங்கள் ரொம்ப மேலோட்டமா இருக்கு. midlife crisis மாதிரி இருக்கே தவிர, நம்ம ஊர் கல்யாணத்தை எல்லாம் உடைக்கற அளவுக்கு கனமா இல்லை.

ஜோசப் பால்ராஜ் said...

//வருண்

இந்த கதையில் சுகன்யா மீது அனுதாபம் வருவதை விட, எரிச்சலே மிஞ்சுகிறது(ஒருவேளை கதையின் நோக்கம் கதாநாயகியின் மேல் கோபம் வரவழைப்பது தான் என்றால் பரவாயில்லை). //

உங்கள் கருத்தோடு உடன்பட மறுக்கிறேன் கயல்.

அந்த பெண்ணின் பார்வையில் பார்த்தால் வெறும் பணம் மட்டும் வெறுப்புக்கு காரணமல்ல. ஒரு நாளைக்கு 4 மணிநேரம் பூஜை மட்டும் செய்துவிட்டு, தொடர்சியாய் புகைபிடித்துக்கொண்டிருந்தால் எந்த பெண்ணால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதை நீங்கள் கவனிக்கவில்லையா கயல்?

ஆண்களை புரிந்துகொள்ள மறுத்துவிட்டு அதீத அன்பு இருக்கின்றது என்று சொல்லும் பெண்களும் சரி, அதே போல் சொல்லும் ஆண்களும் சரி களையப்பட வேண்டியவர்கள் என்பதுதான் என் எண்ணம். அன்பு வைத்துள்ளேன், அதீத காதல் கொண்டுள்ளேன் என்று சொல்லிவிட்டு இப்படி தொந்தரவு செய்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

வருண் said...

***வெண்பூ said...
மன்னிக்க வேண்டும் கயல். எனக்கு இந்த கதை உங்களிடமிருந்து வந்ததில் சில வருத்தங்கள்.

1. இது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது. உங்களின் சில‌ கடந்த கால நினைவுகள் ஆண்களையே வெறுக்க வைக்கிறதோ என்று எண்ணவைக்கிறது இந்த கதை / கட்டுரை.
2. உங்கள் கதைகளில் காமம் சிறிது அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது.***

வெண்பூ!

1. கயலை கடிந்து கொள்ளாதீர்கள்! கதை எழுதியது நான்! ;-)

2. உண்மைதான். காமம் வாழக்கையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை யார் மறுக்கமுடியும்?

வருண் said...

*** கயல்விழி said...
வெண்பூ
1. அந்தக்கதை நான் எழுதியதில்லை, வருணுடையது. :) ***

வெண்பூ, கயலை கண்டிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! LOL!

manikandan said...

*****உண்மைதான். காமம் வாழக்கையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை யார் மறுக்கமுடியும்?****

நான் மறுக்கிறேன். :))-

வருண் said...

***அவனும் அவளும் said...
நல்லா எழுதி இருக்கீங்க வருண். வார்த்தை பிரயோகம் எல்லாம் பிரமாதம்.
25 வருட தாம்பத்ய வாழ்க்தைல வர்ற அலுப்பு, வெறுப்பு எல்லாம் அழகா படம் பிடிச்சி காட்டி இருக்கீங்க. (சுகன்யாவ வச்சி). ஒரு வட்டத்துல சிக்கி இருக்கற போது வெளில வருகிற கஷ்டத்தையும் புரிய வச்சி இருக்கீங்க.**

ரொமப் நன்றி அவனும் அவளும்! உங்கள் விமர்சனம் இந்தக்கதையின் கருவை மேலு உயர்த்துகிறது!

***PHD ய விட MS க்கு வேல வாய்ப்பு அதிகமா ?***

நிறைய சூழ்நிலையில் "டாக்டர் பட்டம்" ஓவெர்குவாலிஃபிகேஷன் ஆவது உண்மைதான்!

வருண் said...

***வெண்பூ said...

இது ஒரு ஆண் எழுதியது என்பது எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதைவிட ஆச்சரியம் கயல் எனக்கு எழுதிய பதிலை பார்த்துவிட்டு மறுபடியும் படித்தால், கதை முற்றிலும் புதிய பரிணாமத்தில் தெரிகிறது (சுகன்யாவை தவறாக நினைக்கும் அளவிற்கு)

மொத்தத்தில் I am lost :)))****

ஒரு ஆண் பெண்களைன் சிந்தனைகளை பிரதிபளிக்க முடியாதா, வெண்பூ? முயற்சியாவது செய்யலாம் இல்லையா?

சுகன்யாவை நான் "நல்லவள்" என்று நிச்சயம் சொல்லவரவில்லை! :)

வருண் said...

***கயல்விழி said...
வருண்

இந்த கதையில் சுகன்யா மீது அனுதாபம் வருவதை விட, எரிச்சலே மிஞ்சுகிறது(ஒருவேளை கதையின் நோக்கம் கதாநாயகியின் மேல் கோபம் வரவழைப்பது தான் என்றால் பரவாயில்லை).****

சுகன்யா மேல் பெண்களுக்கு எரிச்சல் வரும்படிதான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது, கயல்!

ஆமாம் மிஷன் அக்கம்ப்ளிஷெட்! :)

வருண் said...

***Sundar said...
செம கஷ்டமான சப்ஜக்ட் எடுத்து இருக்கீங்க - ரொம்ப சுருக்கமா முடிக்க பார்கறீங்க. காரணங்கள், பாத்திரங்கள் ரொம்ப மேலோட்டமா இருக்கு. midlife crisis மாதிரி இருக்கே தவிர, நம்ம ஊர் கல்யாணத்தை எல்லாம் உடைக்கற அளவுக்கு கனமா இல்லை.***

உண்மைதான் சுந்தர், எல்லோரும் தி ஜானகிராமன் ஆகிவிட முடியுமா? ;-)இது ஒரு சின்ன முயற்சிதான்! உங்கள் விமர்சனத்துக்கு நன்றி, சுந்தர்!

வருண் said...

////அவனும் அவளும் said...
*****உண்மைதான். காமம் வாழக்கையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை யார் மறுக்கமுடியும்?****

நான் மறுக்கிறேன். :))-///

அவனும் அவளும்!!!

உங்கள் காமெண்ட்ஸ் மற்றும் விமர்சனங்கள் இந்த கதையைவிட நல்லாயிருக்கு! நன்றி! :)

வருண் said...

***ஜோசப் பால்ராஜ் said...
//வருண்

இந்த கதையில் சுகன்யா மீது அனுதாபம் வருவதை விட, எரிச்சலே மிஞ்சுகிறது(ஒருவேளை கதையின் நோக்கம் கதாநாயகியின் மேல் கோபம் வரவழைப்பது தான் என்றால் பரவாயில்லை). //

உங்கள் கருத்தோடு உடன்பட மறுக்கிறேன் கயல்.

அந்த பெண்ணின் பார்வையில் பார்த்தால் வெறும் பணம் மட்டும் வெறுப்புக்கு காரணமல்ல. ஒரு நாளைக்கு 4 மணிநேரம் பூஜை மட்டும் செய்துவிட்டு, தொடர்சியாய் புகைபிடித்துக்கொண்டிருந்தால் எந்த பெண்ணால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதை நீங்கள் கவனிக்கவில்லையா கயல்?

ஆண்களை புரிந்துகொள்ள மறுத்துவிட்டு அதீத அன்பு இருக்கின்றது என்று சொல்லும் பெண்களும் சரி, அதே போல் சொல்லும் ஆண்களும் சரி களையப்பட வேண்டியவர்கள் என்பதுதான் என் எண்ணம். அன்பு வைத்துள்ளேன், அதீத காதல் கொண்டுள்ளேன் என்று சொல்லிவிட்டு இப்படி தொந்தரவு செய்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

18 August, 2008 4:15 AM ***

திரு. பால்ராஜ்!

ஆண்கள், ராகவன் போன்ற ஆட்களை வெறுப்பது இயற்கைதான். அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். அதே போல் ஒரு பெண்ணாக நீங்கள் இருந்தால், சுகன்யாவைத்தான் மிகவும் வெறுப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்!

உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி!

manikandan said...

*****உங்கள் காமெண்ட்ஸ் மற்றும் விமர்சனங்கள் இந்த கதையைவிட நல்லாயிருக்கு! நன்றி! *****

விமர்சனம் மற்றும் காமெண்ட்ஸ் எழுதறது ரொம்ப எளிது வருண், அதுனால இந்த நன்றிக்கு உட்பட்டவன் நானில்லை.

ஆனாலும் நீங்க உங்க தலைப்ப மாத்தலாம்.

"மங்கை உள்ளம் பொங்கும்போது"

ஏதோ அணுகுண்ட எதிர்பார்த்து வந்தா ஒரு ஊசி பட்டாசு அளவு கூட வெடிக்கல உங்க கதாநாயகி.

வருண் said...

*** "மங்கை உள்ளம் பொங்கும்போது"

ஏதோ அணுகுண்ட எதிர்பார்த்து வந்தா ஒரு ஊசி பட்டாசு அளவு கூட வெடிக்கல உங்க கதாநாயகி.

18 August, 2008 9:07 AM ***

LOL!!!

ஆமாம், எல்லாவற்றையும் மனதிலேயே போட்டு வெடித்துக் கொள்கிறார்! :)

மங்களூர் சிவா said...

சுகன்யாமீது மற்றவர்களுக்கு எரிச்சல் வந்தாலும் சரி அவள் பக்கம் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

அமெரிக்காவுல டைவர்ஸ் அவ்வளவு கடினமா?

ராகவன் தற்கொலை செய்துகொள்வேன் என நாடகமாடினால் செய்துகொள்ளட்டும் என விடவேண்டியதுதானே.

வருண் said...

**** மங்களூர் சிவா said...

ராகவன் தற்கொலை செய்துகொள்வேன் என நாடகமாடினால் செய்துகொள்ளட்டும் என விடவேண்டியதுதானே. ***

ஒரு சிலருக்கு இதெல்லாம் அவ்வளவு எளிது இல்லைங்க. ஊரெல்லாம் போய் குறை சொல்லுவாங்க, ஆனால் ஒரு திடமான முடிவு எடுக்கமுடியாத அளவுக்கு ஒரு மாதிரியான பயம் நிறையப்பேரிடம் இருக்கும்!

மேலும் நம்மால் ஏன் ஒரு இன்னொரு உயிர் சாகனும் என்கிற உணர்வு அவர்களை பயமுறுத்தும்.

அப்படி நடந்தால், குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

அமெரிக்காவில் ஏதாவது லீகல் பிரச்சினையில் மாட்டினால் ரொம்ப கஷ்டம். இதை மாதிரி, எதை எதையோ நினைத்து பயப்படலாம் திட மனம் இல்லாதவர்கள்!

வருண் said...

////அவனும் அவளும் said...
*****உங்கள் காமெண்ட்ஸ் மற்றும் விமர்சனங்கள் இந்த கதையைவிட நல்லாயிருக்கு! நன்றி! *****

விமர்சனம் மற்றும் காமெண்ட்ஸ் எழுதறது ரொம்ப எளிது வருண், அதுனால இந்த நன்றிக்கு உட்பட்டவன் நானில்லை.///

இல்லைங்க, விமர்சனம் மற்றும் காமெண்ட்ஸ் எழுதுவது கடினமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தக்கதைக்கு நீங்கள் எழுதி இருக்கிற விமர்சனம் எல்லோரும் எழுத முடியாது, நீங்க "சுகன்யாவின் உணர்ச்சிகளை" புரிந்து எழுதியுள்ளீர்கள்!

அவள் உணர்ச்சிகள் சரியா தவறா என்பது வேறு விசயம், ஆனால் அதை முதலில் புரிந்துகொள்ளனும். எத்தனை பேரால் முடியும்?

I loved your comments and your "point of view" and of course your criticisms as well, avanum avaLum! :)

Sundar சுந்தர் said...

//உண்மைதான் சுந்தர், எல்லோரும் தி ஜானகிராமன் ஆகிவிட முடியுமா? ;-)//

ஆக நினைக்கிறதுல தப்பு இல்ல. முயற்சி பண்ணுங்க - என்னதான் இருந்தாலும் தி. ஜா. ரா இன்றைய புலம் புயர்ந்த, கனவுகளை தொலைத்த நகர வாழ் நடுத்தர மக்களின் சிக்கலான மனசை ஆராய்ந்ததாக எனக்கு தோணலை. காமமா, குடும்பமா குழப்பத்தை 'அம்மா வந்தாள்' ல அழகா பிரிச்சு அலசி இருப்பார். உங்க பதில் தான் இதை ஞாபகம் படுத்தியதே தவிர நீங்கள் எழுதிய கதை அல்ல.

உங்க கதைய படிச்சப்ப தோணினதை இப்ப பார்ப்போம்.....
அதுல சுகன்யாவோட வெறுப்பு வெளிப்பட்டதே ஒழிய, 'தேடல்' எதுவும் தெரியல. உறவுகள் பிரியறதுக்கு ஒன்னு ரொம்ப 'repulsive' , ஒன்று பட முடியாத அளவு அடிப்படை வெறுப்பு இருக்கணும், இன்னொன்னு பிரிஞ்சு போய் மட்டுமே சாதிக்க கூடிய காரணங்கள் இருக்கணும். ரெண்டு பேர் வேற திசைல போறதா சித்தரிச்சி இருந்தீங்களே தவிர, எந்த சமயத்தில, எந்த காரணங்களால் பிரிய ஆரம்பிச்சாங்கன்னு சரி வர நீங்க குறிப்பிடல. அதனால தான் மேலோட்டமா இருக்குன்னு சொன்ன. மத்தபடி தி. ஜா. ரா கூட ஒப்பிட்டு .....ரொம்ப தான் ;) அப்புறம் பார்க்கலாம் என்ன.

கயல்விழி said...

வருண் மற்றும் ஜோசப்

நான் அவசரத்தில் கமெண்ட் எழுதியதால் சரிவர விளக்கம் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஆண்கள் நிச்சயமாக வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தது போன ஜெனெரேஷன். இன்றைய தன்னம்பிக்கை உள்ள பெண்கள், இப்படி ஆப்சொலூட் ஜெண்டர் ரோலை எதிர்ப்பார்ப்பது இல்லை. சம உரிமை வேண்டும் என்றால் எதிர்பார்க்கவும் கூடாது என்பது என் கருத்து. அந்த வகையில் இந்த பெண் பணத்துக்காக ரொம்ப கவலைப்படுகிறார் போன்ற தோற்றமளிக்கிறது.

அடுத்து, 4 மணி நேர பூஜை, எப்போதும் இண்டர்நெட் போர்ன் என்பதெல்லாம் மிகைப்படுத்தியதாக தோன்றுகிறது, ஒருவர் இப்படி எல்லாம் இருந்தால் அவருக்கு தேவை ஆதரவும், மனநல சிகிச்சையும். வெறுப்பை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தால் அவருடைய நடவடிக்கையும் மோசமாகிக்கொண்டே போகும்.

மூன்றாவதாக இந்த பெண்ணுக்கு இத்தனை வயதாகியும் தெளிவாக முடிவெடுக்கும் தன்மை இல்லையே என்பது என்னுடைய மிகப்பெரிய விமர்சனம். பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்யலாமே? அதிலும் குழப்பமா? நான் எப்போதுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண நினைப்பவள், மேலும் மேலும் குழப்புபவள் அல்ல. என் குணத்துக்கு முற்றிலும் நேர்மாறாக இந்த பெண்ணின் குணம் இருப்பதால் இந்த கதையும், கேரக்டரும் ரொம்ப பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்(வருண் மன்னிக்கவும்)

வருண் said...

உண்மைதான் சுந்தர், மேலோட்ட மாகத்தான் இருக்கு. உங்களைப் போல்தான் கயலும் ஃபீல் பண்ணினாள்.

ஜானகிராமன் பற்றி சொன்னதற்கு காரணம் நீங்க அவர் ஃபேன் என்பதால்.

அவர் லெவெலுக்குலாம் எழுத நினைப்பது பகல்க்கனவு!

நீங்க சொன்ன அம்மாவந்தாளில் எனக்கு மறக்கவே முடியாத ஒரு வரி!

***பேர் வைத்திருக்கிறார்கள் பாரு "அலங்காரம்னு" தேவடியாளுக்கு பேர் வைப்பது போல!**

இப்படியெல்லாம் நம்மஎழுதினால் என்ன செய்வார்கள்?

சிலபிரச்சினைகள் இருக்கு சுந்தர், அதனால் விபரமாக எழுதமுடியவில்லை. போகப்போகப்பார்க்கலாம்!

உங்க கிரிடிசிசம் நல்லாயிருக்கு சுந்தர்!

வருண் said...

****என் குணத்துக்கு முற்றிலும் நேர்மாறாக இந்த பெண்ணின் குணம் இருப்பதால் இந்த கதையும், கேரக்டரும் ரொம்ப பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்(வருண் மன்னிக்கவும்)****

கயல்: மன்னிப்பெல்லாம் எதுக்கு? பொதுவாக இப்படி எழுதுவது ஆண்களுக்கு பிடிக்கும். கொஞ்சம் வேற மாதிரி எழுதுவோமே என்கிற முயற்சி.

உன்னுடைய "செண்சார்" மற்றும் எடிட்டிங் நிச்சயம் கதையின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.நன்றி கயல்.

உனக்கு பிடிப்பதுபோல் கல்வெட்டில் எழுதி மேக்-அப் செய்கிறேன் :-)

manikandan said...

kalvettu yeppo ?

வல்லிசிம்ஹன் said...

கயல்,வருண்
இந்த ஊரில் என்று மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் மதிகெட்ட கணவனும்,மனைவியும் இருக்கிறார்கள். பணம் ஒருவருக்கு நிம்மதி கொடுத்துவிட்டால் அதற்குப் பிறகு வாழ்க்கை ஏது. தேடல் ஏது.
அவள் விரும்புவது ஒரு திடமான மனிதனின் தெளிந்த ஆதரவு.
அவனைப் பற்றி எனக்குப் புரியவில்லை. ஷ்ரின்க் கிட்ட போக வேண்டிய ஆள் என்றே நினைக்கிறேன்.
விவாகரத்து செய்வதற்கு ரொம்பத் திடமான கன்விக்ஷன் வேணும். அது இல்லாவிட்டால் அவள் எப்போதும் போல காப்பி குடித்து விட்டு வீட்டுக்குத்தான் போவாள்:)

வருண் said...

அவனும் அவளும்!

இப்போத்தான் கல் தேடிக்கொண்டு இருக்கேன். :-)

கொஞ்ச நாள் ஆகும்! :)

வருண் said...

***வல்லிசிம்ஹன் said...
//கயல்,வருண்

* அவள் விரும்புவது ஒரு திடமான மனிதனின் தெளிந்த ஆதரவு.

* விவாகரத்து செய்வதற்கு ரொம்பத் திடமான கன்விக்ஷன் வேணும்.

* அது இல்லாவிட்டால் அவள் எப்போதும் போல காப்பி குடித்து விட்டு வீட்டுக்குத்தான் போவாள்:)//***

தெளிவான பாயிண்ட்ஸ், வல்லிசிம்ஹன்!

நம் கலாச்சாரத்தில் வளரும் பலருக்கும் தெளிவான மனது கிடையாது, சரியான முடிவும் எடுக்கத் தெரிவதில்லை. கணவன் - மனைவி பிரச்சினை என்றால் சொல்லவே வேண்டாம்! அதுவும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் இன்னும் குழப்பம் அதிகம்.

அவர், அவர் கடமையைச் செய்யவில்லை! அது மிகப்பெரிய தவறு என்பதை பல கவனிக்காமல் விடுவதற்கு சாண்ஸ் இருக்கு!

அவளுக்கு சரியான வழியில் அவரையோ அல்லது, இந்த பிர்ச்சினையோ ரிசால்வ் செய்யும் முறை தெரியவில்லை. அதனால் கடைசியில் மிஞ்சுவது புலம்பலும், குழப்பமும்தான்! :(